கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 12,554 
 
 

நான் மிகுந்த சந்தோஷமாக இருந்த நாட்களில் இதையும் சேர்த்துக்கொள்ளலாம். மெரினா பீச் கண்ணுக்கு எட்டிய தூரம் கடல், வெள்ளை மணல், தூரத்து வானம். சற்றுத் தள்ளி அம்மா மணலில் ஏதோ எழுதிக்கொண்டு இருந்தாள். அப்பா எப்போதும் வருவதே இல்லை. அம்மா ஏன் தனியே இருக்கிறாள்? புரியவில்லை. சற்றுத் தள்ளி குணமணி சித்தி. அம்மாவுடன் பள்ளியில் ஒன்றாகப் பணிபுரிபவள். அம்மாவின் தோழி. எனக்கு அவள் உறவு அல்ல. ஆனால், அவளை நான் சித்தி என்றுதான் கூப்பிடுவேன். சௌந்தர் சித்தப்பா. நான் பார்த்த முதல் ஹீரோ. படித்த… பண்பான… அழகிய… அறிவான… முதல் மனுஷன் – மனுஷி இவர்கள் இருவரும்.

இவர்களுக்கு இருபது அடி தள்ளி நான். கையில் எனக்குப் பிடித்த ரீட்டா ஐஸ்க்ரீம். அதுவும் திராட்சைப் பழம் வைத்த சேமியா ரோஸ் கலர் ஐஸ்க்ரீம். வாய் எல்லாம் ரோஸ் கலராக இருந்தது. இதோ, இந்தச் சாயந்தர வானம் மாதிரி. எனக்கு இந்த இடம் ரொம்பவும் பிடித்திருந்தது. அதுவும் இதோ இந்தக் குடுகுடு என ஓடும் நண்டுகள். குட்டிக் குட்டி நண்டுகள். மணல் முழுக்க ஆங்காங்கே ஓடிப் பிடித்து விளையாடிக்கொண்டு இருந்தன. பிடிக்கப் போனால், டக்கென மணலுக்குள் ஓடி ஒளிந்தன. பிடிக்க முயன்று பல முறை தோற்றேன். இங்கு நுழைந்து, அங்கு எழுந்து ஓடியது. அங்கு நுழைந்து, இங்கு எழுந்து வந்தது. வழக்கமாக சிப்பி பொறுக்கும் நான், இன்று நண்டுகளுடன் விளையாடினேன். நேரம் போனதே தெரியவில்லை.

”மோகன்… வாடா போகலாம்” என்றது அம்மாவின் குரல். அப்படி என்னதான் இருக்குமோ அந்தக் குரலில்? அது எதைச் சொன்னாலும் செய்யத் தோணும். பிடித்த நண்டுகளைப் பிரிய மனம் இல்லாமல் டாட்டா சொல்லிவிட்டு வந்தேன்.

திருவேற்காடு. மார்கழி மாதப் பனி… வாசலில் கோலம்… சாணத்தில் பூசணிப் பூ… இன்றுவரை எனது அனுபவத்தில் சித்தி போடும் புள்ளிவைத்த கோலத்துக்கு இணையான ஒரு கோலத்தை யாரும் போட்டுப் பார்த்தது இல்லை. அழகு… அழகு… சித்தியைப்போல!

”டிடி டிங் டிடி டிங்… நீங்கள் கேட்டுக்கொண்டு இருப்பது விவித் பாரதியின் வர்த்தக ஒலி பரப்பு. நேரம் சரியாக 8 மணி 30 நிமிடங்கள்” என்று மர்பி ரேடியோ எச்சரித்தது. பள்ளிக்கூடத்துக்கு லேட்டாகிவிட்டது.

நாகி சித்தி (அம்மாவின் தங்கை) என்னை வளர்த்த இன்னோர் அம்மா. தூக்கு டிபன் கேரியரில் தயிர் சாதமும் தொட்டுக்கொள்ள தோசையும் வைத்துக் கட்டிக்கொண்டு இருந்தாள்.

அவள் இப்படித்தான். எல்லாவற்றிலும் ஒரு வித்தியாசமான டேஸ்ட். சிகாமணி அண்ண னைக் கல்யாணம் கட்டிக்கிட்டதைப்போல.

உர்… உர்… என நான் மூக்குறிஞ்சும் சத்தம் கேட்டு, ”வெளியே போய் நல்லாச் சிந்துடா…” எனக் கத்திக்கொண்டே வந்து தன் முந்தானைத் தலைப்பில் மூக்கைச் சிந்திவிட்டாள். நாலஞ்சு நாளாவே இப்படித்தான் உப்புக் கரிக்கிறமூக்கு.

வாசலில் சிகாமணி அண்ணன் சைக்கி ளில் டிங்டிங் என்று மணி அடித்தார். ”சீக்கிரம்… சீக்கிரம்… பையை எடுத்துக்க. கிளம்பு” என்று என்னை அவசரப்படுத்திய சித்தி, கண்ணாடியில் அவளைத் திருத்திக் கொண்டு, வாசலுக்குச் சென்றாள். சித்திக்கு அண்ணனை ரொம்பப் பிடிக்கும்.

சிகாமணி அண்ணன் என்னைப் பார்த்தவுடன், ”இன்னாடா, இன்னும் சளி போகலையா?” என்றார். சித்தி உச்சுக் கொட்டினாள்.

”இன்னைக்கும் டிபன்ல என்ன தயிர் சோறா?” நான் ”ஆமாம்” என்று தலையாட்ட, சித்தி காரணம் இல்லாமல் சிரித்தாள். ”அப்புறம் எப்படிச் சரியாவும் சளி. நாளைக்குக் கோலடிக்கு வா. வயல் நண்டுல பூண்டு தட்டிப்போட்டு, மிளகு ரசம்வெச்சுக் குடிச்சா பட்டுனு வுட்ரும்” என்று அண்ணன் சொன்னதும் சித்திக்கு முகம் மாறியது. சித்தி சுத்த சைவம். எனக்கோ பயங்கர சந்தோஷம். மீண்டும் எனக்குப் பிடிச்ச குட்டிக் குட்டி நண்டுகள்.

மறு நாள் கோலடி வரப்பு. காசியண்ண னோட கழனி. தண்ணீர் பாய்ந்துகொண்டு இருந்தது. வரப்பு முழுக்க மஞ்சள் கரிசலாங் கண்ணி. நடப்பதற்கு ஒன்றும் கஷ்டம் இல்லை. பழகியதுதான். கடற்கரையில் நண்டு இருக்கும். இங்கே எப்படி என்று குழம்பியபடி நான் செல்ல, முன்னே சிகாமணி அண்ணன் தென்னை ஓலையை உருவி நடுக் குச்சியை எடுத்துக்கொண்டு இருந்தது. திடீரெனக் குனிந்து ஏதோ ஓர் ஓட்டையில்விட, சிறிது நேரம் கழித்து வெளியே எடுத்தால் அந்தக் குச்சியில் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட குரங்கு போலக் குடுகுடு என மேலே ஏறி வந்தது நண்டு. ”ஏய்…” எனக் கை கொட்டி அருகில் ஓடினேன். அதற்குள் அதைப் பிடித்து பைக்குள் போட்டுவிட்டது அண்ணன். நிறையப் பிடித்தோம்.

அன்றைக்கு மகி அக்காதான் சமைத்தது. சட்டி முழுக்க நண்டு. குவியல் குவியலாக. ஆனால், கடல் நண்டு போல் பால் வெள்ளையாக இல்லை. கறுப்பாக இருந்தது. சின்னக் கோலடி ஊர் மக்களைப் போல.

எனக்குக் கோலடி கிராமம் ரொம்பப் பிடிக்கும். நரசம்மா அம்மா, மகி அக்கா, மகேந்திரன் அண்ணன், ரவி, நானமுத்து, ரமேஷ், ஜெகதா, சுஜாதா… ஆளுங்க கறுப்பு. ஆனால், வெள்ளை உள்ளங்கள். சட்டிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து குச்சியைவைத்து நண்டுகளோடு விளையாடிக்கொண்டு இருந்தேன். அதைப் பார்த்து ஜெகதா அத்தை, ”இதோ பாரு, தள்ளி உக்காரு. டவுசர் உள்ளகிள்ளப் போச்சுன்னா… அப்புறம் நாள மேல உன்னக் கட்டிக்கிறவுளுக்கு நான் பதில் சொல்ல முடியாது” என்றதும் வீடு முழுக்கச் சிரிப்பலைகள். எனக்குத்தான் ஏன்னு புரியலை.

நெ. 149, இ பிளாக், காந்தி நகர், நியூ ஆவடி ரோடு. வாசலில் ஏகாம்பரம் கூப்பிட்டார். ”சந்திரா வர்றியா, அயனாவரம் மார்க்கெட் போறேன்?” என்றதும், ”இரு வர்றேன்”னு சொல்லிவிட்டு, அப்பா சட்டையை மாட்டினார்.

காலையில் அப்பா குளித்துவிட்டு வெளியே கிளம்பும்போது பார்க்க வேண்டும். அப்படி ஒரு கம்பீரம். தும்பைப் பூ மாதிரி சட்டை. காக்கி பேன்ட். நெத்தியில் நாமம். மலையில் இருக்கிற திருப்பதி சாமியே தெருவில் நடப்பது மாதிரி இருக்கும். ஆனால், வரும்போது நாற்றம் சகிக்காது.

அப்பா என்னைப் பார்த்து, ”மோகன், வர்றியாடா மார்க்கெட்டுக்கு?” என்றார்.

உடனே அம்மா, ”அவன் இங்கே இருக் கட்டும். எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு” என்றாள் அப்பாவைப் பார்க்காமலே.

எனக்கும் அவருடன் செல்ல அவ்வளவு பிரியம் இல்லை. வெங்காயத்தைத் தொடர்ந்து உரித்துக்கொண்டு இருந்தேன். கண்களில் நீர். காரணம் வெங்காயமா? தம்பி நிரஞ்சன் இன்னும் எழுந்திருக்கவில்லை.

”உரிச்சிட்டியா?” என்று கேட்டு அம்மா திரும்பினாள். அப்பா அப்போதே போய் விட்டிருந்தார். அம்மா சிரித்துப் பார்த்து ரொம்ப நாள் ஆகிறது. ஆனால், அம்மா அழகாகத்தான் இருக்கிறாள். பீச் நண்டு போல் வெள்ளையாய்… அழகாய்.

அப்பா ரொம்ப நேரமாக வரவில்லை. யாரோ அவர் கொடுத்ததாக ஒரு பையைக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். அம்மா அதைத் திறந்து பார்த்ததும், ‘வீல்’ எனக் கத்திக்கொண்டு அதைப் போட்டுவிட்டு, ”இந்தச் சனியனை எல்லாம் எப்படிச் சமைக்கறது? எல்லாம் என் தலையெழுத்து” என்று சொல்லியபடி, கீழே கஸ்தூரி அக்கா வீட்டுக்கு ஓடினாள்.

எதற்காகக் கத்தினாள் என்று நான் போய்ப் பார்த்தேன். அப்பா கொடுத்து அனுப்பிய பை அசைந்து நெளிந்தது. போய் அருகில் சென்று மெதுவாகத் திறந்து பார்த்தேன். அங்கு கால் கை கட்டப்பட்ட நிலையில் மனோகரா சிவாஜிபோல ஆரஞ்சு கலரில் முள்ளு முள்ளாகப் பெரிய நண்டுகள் நாலைந்து உள்ளே கொடுக்குகளை நீட்டிக்கொண்டு இருந்தன. நான் பார்த்ததிலேயே பெரிய நண்டு அவைதான். ஒரே குஷி. மெதுவாக சோற்றுக் கரண்டியால் அதை வெளியே எடுத்துவிட்டேன். நான்கும் ஒரே நேரத்தில் கொடுக்குகளை விரித்து என்னை நோக்கி நகர்ந்து வந்தன. பார்ப்பதற்குக் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. பட்டென முதுகில் ஒரு அடி. அம்மாதான். துடித்து எழுந்தேன். ”வாடா, இந்தப் பக்கம். கடிச்சுக்கிடிச்சு வைக்கப்போவுது. இத என்னக்கா பண்றது..?” என்று அதை ஏதோ வேற்றுக் கிரகத்து மனிதர்களைக் காட்டுவதுபோல கஸ்தூரி அக்காவிடம் அம்மா காட்டினாள்.

”பழவேற்காடு நண்டு நல்ல ருசியா இருக்கும். மொத்தமும் சதைதான். வுடு நான் வறுத்துத் தர்றேன். நீ மீன் கொழம்பு மட்டும் வை” என்று சிரித்துக்கொண்டே நண்டை லாகவமாகப் பிடித்து, பைக்குள் போட்டு எதிர்பாராமல் பட்டுபட்டெனத் தரையில் ஓங்கி அடிக்க… அம்மா அடுத்த அறைக்குள் ஓடியேவிட்டாள். நான் கஸ்தூரி அக்காவை ராட்சஸிபோலப் பார்த்தேன். பை இப்போது அசைவற்று இருந்தது. ஒரே நிமிஷத்தில் கொன்றுவிட்டாளே பாவி.

அன்று அப்பாவும் ஏகாம்பரம் மாமாவும் சிவந்த கண்களுடன் நண்டைக் கடித்து, ருசித்து, மென்று துப்பிக்கொண்டு இருந் தார்கள். எனக்கு நடுப் பகுதியைச் சாப்பிடத் தந்தார்கள். ருசியாகத்தான் இருந்தது. அம்மா வுக்கு வழக்கமாகத் தயிர் சாதமும் மாவடுவும்.

அம்மா, எல்லா கவுச்சியும் சமைப்பாள். ஆனால், உப்பு சரியா இருக்கா என்று பார்க்கக் கூடத் தொட மாட்டாள். ஆனாலும், அதைச் சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும். ”ஏம்மா அசைவம் சாப்பிட மாட்டேங்கிற?” என்று கேட்டால், ”நாங்க வட தேசத்து வடமா” என்று கண்ணில் ஒரு பெருமிதத்துடன் சொல்வாள்.

என் வாழ்க்கையின் அடுத்த அம்மா, என் மனைவி சாந்தா. இப்போது நண்டு சாப்பிட வேண்டும் என்றால், ஹோட்டலுக்குத்தான் போக வேண்டும். நாங்கள் எப்போது சாப்பிட வெளியே போனாலும் சாந்தாவுக்கும் பெரிய வள் தர்ஷிணிக்கும் நண்டு பிடிப்பதே இல்லை. சின்னவள் ஸ்வேதா எடுத்துக்கொடுத்தால் சாப்பிடுவாள். எனக்கு நண்டு ரொம்பப் பிடிக்கும். கடலில் பார்க்க… வயலில் பிடிக்க… வீட்டில் அடிக்க… ஹோட்டலில் சாப்பிட… நான் ஒரு நண்டுப் பிரியன், நண்டு ரசிகன்.

இந்த நாற்பது வயதில் இந்த ஆஸ்பத்தி ரிக்கு வருகிற வரைக்கும்… இந்த டாக்டரைப் பார்க்கிற வரைக்கும்… அவர் சொன்னதைக் கேட்கிற வரைக்கும்…

அப்படி என்ன சொன்னார் என்னிடம்? பெரிசா ஒண்ணும் இல்லை. தமிழில் எனக்குப் பிடித்த நண்டை ஆங்கிலத்தில் அவர் சொன்னார்.

”ரமணா… தி லேப் ரிப்போர்ட் சேஸ் மாலிங்னன்ட் நியோபிளாஸம்… பிராபப்ளி ஸ்க்யூமஸ் செல் கார்சினோமா (The Lab Report Says MALIGNANT NEOPLASM PROBABLY SQUAMOUS CELL CARCINOMA)

”அப்படீன்னா டாக்டர்?”

”ஆமா ரமணா… உங்களுக்கு கேன்சர்…”

என்னைச் சுற்றி எனக்குப் பிடித்த நண்டுகள். இப்போது எனக்குள்ளும் நண்டு!

– நவம்பர் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *