தோற்றப்பிழை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 25, 2019
பார்வையிட்டோர்: 5,079 
 

அம்மா,ரேவதி! இன்றைக்கு ஒரு நாள் லீவு போடுடீ.

அம்மா உடம்புக்கு முடியலை, வேலை செய்கிற வீட்டிலே இன்றைக்கு அவங்க பொண்ணை பார்க்க வருகிறார்களாம், பலகாரம் எல்லாம் செய்யனும், செத்த நீ போய் செஞ்சு குடுத்திட்டு வாம்மா! உனக்குத்தான் அதெல்லாம் நல்லா தெரியுமே,

ரேவதி, அம்மாவிற்காக இன்று மட்டும் செய் என்று கெஞ்சிக்கொண்டு இருந்தாள் ரேவதியின் தாயார் கமலா.

கமலா, தன் கனவனை இளம் வயதிலேயே இனம் புரியாத நோய்க்குப் பறிகொடுத்த, அதிகம் படிக்காத ஏழைத்தாய்.

வீடு வீடாக பத்துப் பாத்திரம் தேய்த்து, துணிகள் துவைத்து, இரண்டு வீட்டில் சமையல் வேலையும் செய்து, தானும் பிழைத்து, தனது ஒரே மகளை இரண்டு வயதிலிருந்து தனியாளாக நின்று வளர்த்து அவள் ஆசைப்பட்ட மாதிரியே பொறியியல் படிக்கவைத்து, நல்ல வேலையிலும் அமர்த்தி, கை நிறைய அவள் சம்பாதித்தாலும், தனது கஷ்டத்தில் உதவி செய்தவர்களோடு, நன்கு பழகியதாலும் அடுப்பில் இன்றும் வெந்துக்கொண்டு இருக்கிறார் கமலா.

சரிம்மா!,நான் போகிறேன். என்று போனை எடுத்து அலுவலகத்திற்கு லீவு சொன்னாள்.

இந்த வருடத்திலாவது ரேவதிக்கு ஜாதகம் எடுத்து திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று தன் மனத்திற்குள் நினைத்தபடியே
மாத்திரையை எடுத்து விழுங்கினாள்.

நல்ல வரன் அமைவதுதான் முக்கியம், இந்த ஏழ்மையான தாய்க்கு ஏற்ற வரன் எங்கே இருக்கிறானோ?

கல்யாண செலவுத்தொகையை கூட வங்கியில் சிறுக சிறுக சேமித்து வருகிறாள் கமலா. வருபவனாது தன் மகளை ராணி மாதிரி வைத்து காப்பாற்ற வேண்டும், என்று எல்லா தாயையும் போல் இவளும் எதிர்பார்த்து காத்து இருக்கிறாள்.

ஆனால் ரேவதியின் கனவோ, வேறு, சொந்த வீடு ஒன்று வாங்கி அம்மாவுடன் இருக்க வேண்டும் அந்த கடனை அடைத்த பின்புதான் திருமணம், இல்லை அவளது சம்பளம் முழுவதும் அம்மாவிற்கு கொடுக்கவேண்டும் அதற்கு சம்மதம் தெரிவிப்பவனுடன்தான் திருமணம் என்ற முடிவுடன் இருக்கிறாள்.

அம்மா வேலை செய்யும் வீடு எதிர்பார்த்ததை விட பெரியதாகவும், விசாலமானதாகவும் இருக்க திரு.பா.சீனிவாசன் ஆடிட்டர், எஸ்.மாலதி சீனிவாசன் வழக்கறிஞர் உயர்நீதி மன்றம்.
என்ற பதாகையும்,உயர மதில் சுவரும் வீட்டினுள் நுழையவே பயமுறுத்தும் வகையில் இருந்தது.

இவள் போனதும் அம்மா வராததைக் கூறியதும், சற்றே கடுப்பானார்கள், பின் உனக்கு பலகாரங்கள் எல்லாம் செய்யத் தெரியுமா? நீ படித்துவிட்டு வேலைக்குச் செல்வதாக கூறுவாளே உன் அம்மா! பின் எப்படி நீ வந்தாய்? என்று கேட்டவர்க்கு,

படித்தால், வேலைக்குப் போனால், அம்மா வேலையை செய்யக் கூடாதா? என்று கேட்டவள், நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள்,மாமி, நான் செய்து தருகிறேன் என்றாள் ரேவதி.

அந்த வார்த்தையே அவளுக்கு தெம்பு கொடுத்து இருக்கும்.

இப்போ சமைத்துவிடு, மதியத்திற்குதான் பெண் பார்க்க வருகிறார்கள், அதற்கு கேசரி,மைசூர் பாகு , மைசூர் போண்டோ, வாழக்காய்,உருளைக்கிழங்கு பஜ்ஜி, மற்றும் சட்னி அரைச்சுக்கோ, பில்டரிலே காபி ரெடி பண்ணி வச்சுடு அவ்வளவுதான் என்றாள்.

எத்தனை பேர் வருவா மாமி? என்றாள் ரேவதி.

பெண் பார்க்க வருகிறார்கள் நான் என்ன கண்டேன்,சுமார் பத்து பேராவது வரமாட்டாளா?என்ன? என்றாள்.

சுசித்ரா பியூட்டி பார்லர் சென்று இருப்பது அவர்களின் பேச்சிலிருந்து தெரியவந்தது.

சுடிதார் போட்டுக் கொண்டு வந்ததும் ரேவதிக்கு செளகிரியமாக இருந்தது.

பாவம் அம்மா, நல்ல வேளையாக சொன்னாள், உடம்பு முடியாமல் இங்கு வந்து இருந்தால் ஒன்று கெடக்க ஒன்று ஆகியிருக்கும்,

இதுபோல் எத்தனை நாள் நான் படிக்கும் போது கஷ்டப்பட்டாளோ தெரியலையே! இன்றைக்குத்தான் உடம்புக்கு முடியலை என்று வாய் விட்டுச் சொல்லியிருக்கிறாள்.பாவம்.

சுறுசுறுப்பாக எல்லாவற்றையும் முடித்து வைக்கும் போது மணி நான்காகி இருந்தது. கிளம்புவதாக கூறிய போது இருந்து மற்ற வேலைகளையும் முடித்துவிட்டு போயிடும்மா என்று கூறியதும், அம்மாவின் நினைவு வந்து,

உடல் நிலை பற்றி விசாரித்ததில் பராவாயில்லை என்றாள், மேலும் இங்கே வேலை உள்ளதை தெரிவித்தபோது இருந்து முடித்து விட்டு வாம்மா என்ற அம்மாவின் பேச்சை தட்ட முடியாமல் சரி என்று ஒத்துக்கொண்டேன்.

மாப்பிள்ளை வீட்டார் வந்து அமர்ந்து இருக்க, சுசித்ரா தனது அறையில் தயாராகிக் கொண்டு இருந்தாள். சுசித்ரா நல்ல அழகு, என்னை விட இரு வயது பெரியவளாக இருக்கனும், அம்மா நான் படிக்கும் போதெல்லாம் இவளின் பழைய உடைகளை வாங்கி வந்து எனக்குத் தருவாள்.

என்னை அழைத்த மாமி, எல்லோருக்கும் தண்ணீர் கொடுக்கப் பணித்தாள்.

எடுத்துக்கொண்டு போய் கொடுத்த போது பார்த்ததில் மாப்பிள்ளையும் அழகுதான், நல்ல பொருத்தமாக இருக்கிறார் என்று நினைத்தபடியே திரும்பி வந்து அடுப்படியில் ஓரமாக நின்றுக் கொண்டாள்.

சாப்பிட்டுவிட்டு கையலம்ப வந்த மாப்பிள்ளை பையனின் அம்மாவிற்கு பயண அலுப்பிலே தலை சுற்றியிருக்கவேண்டும் வாயிலெடுக்க சிரம பட்டதையறிந்த ரேவதி ஓடிச்சென்று கையிலேந்தி அவளைத் கைத்தாங்களாக கூடத்திற்கு அழைத்து வந்து துடைத்து, உடைகளை சுத்தம் செய்து குடிக்க கொஞ்சாமாக கஷாயம் வைத்து கொடுத்து பித்தமாக இருக்கும், குடிங்க, சரியாகிடும், என்று ஆசுவாசப்படுத்தினாள்,

பேச்சுவார்த்தைகள் முடிந்து, டிபன் சாப்பிட்டுவிட்டு நன்றாக இருப்பதாக பாராட்டி விட்டு அனைவரும் கலைந்து சென்ற பிறகு,பாத்திரங்களை எல்லாம் சுத்தம் செய்து வைத்து விட்டு ரேவதியும் வீட்டிற்கு கிளம்பினாள்.

மறுநாள் ஆபீஸ் கட்டாயம் போக வேண்டும், என்று அம்மாவிடம் கூட பேசாமல் இரவு உறங்கிப் போனாள்.

மறுநாள் அலுவலகம் கிளம்பி சென்று லிப்ட்டுக்காக காத்து இருக்கும் போது ஒரு குரல் ஹலோ, மேடம், என்றழைத்தது.

திரும்பியவள் திடுக்கிட்டாள், நின்றவன் அந்த மாப்பிள்ளை பையன். M.Visva TATA Consultancies
Software Engineer என்று
அவன் கழுத்தில் ஐடிகார்டு தொங்கியது.

என் பெயர் ரேவதி என்றாள்.

ஓகே ரேவதி. நீங்க இங்கே எங்கே? ஏதாவது ஆர்டரா? என்று கேட்டான்.

ஓ.ஓ நான் கேட்டரிங் வேலை செய்பவள் என நினைத்துவிட்டான் போல, என்று எண்ணி நகைத்படியே ஆம். இன்றைக்கு இங்கதான் வேலை என்றாள்.

நேற்று நீங்க செஞ்சது பெரிய உதவிங்க, எங்கே, அவங்களுக்கு முன்னாடி உங்க கிட்டே பேசினா ஏதாவது உங்களுக்கு பிரச்சனையாகிடும்னுதான் ஒன்றும் நாங்கள் பேசலை என்று வருத்தம் தெரிவித்தான்.

அம்மா எப்படி இருக்காங்க? என்று கேட்டபோது, லிப்ட் வரவே ஏறிச் சென்றவர்கள் பத்தாவது மாடியில் அவன் இறங்க,

இவள் தொடர்ந்து பயணித்து பதிமூன்றாவது மாடியில் இறங்கியதை கவனித்துக்கொண்டான்.

இடைவேளையின் போது பதிமூன்றாம் மாடிக்குப் போய், ரேவதினு ஒருத்தவங்க கேட்டரிங் பண்றவங்க, எங்கே இருக்காங்க? நான் பார்க்கனும் என்று வரவேற்பரையில் நின்றவனைப் பார்த்து வரவேற்பு அறை பிரதிநிதி,

என்ன? ரேவதி? கேட்டரிங்கா?

ஹலோ! அவங்கதான் இங்க சீஃப் ஆப்ரேட்டிங் ஆபிஸர். என்றாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)