துலுக்கன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 7,560 
 
 

துலுக்கம்பாளையம் புளியம்பட்டியிலிருந்து அன்னூர் போகும் வழியில் இருக்கிறது. ஊரின் பெயர்தான் துலுக்கம்பாளையமே தவிர ஊருக்குள் ஒரு துலுக்கன் கிடையாது. துலுக்கன் மட்டுமில்லை வண்ணான், நாசுவன் என்ற எந்தச் சாதியும் இல்லை. கவுண்ட வீடுகள்தான் பத்து இருக்கும். மொத்தமே பத்து வீடுகள் மட்டுமே இருப்பதால் பஞ்சாயத்து போர்டு, மணியகாரர் ஆபிஸ், பள்ளிக்கூடம் என எதுவும் துலுக்கம்பாளையத்துக்கு இல்லை. எதுவானாலும் பக்கத்தில் இருக்கும் காசிகவுண்டன்புதூருக்குத்தான் கவுண்டமார்கள் போய் வருகிறார்கள்.

வாய்க்கால் ஓரமாக மிட்டாய்க்கடை நடத்தும் காசியம்மாயா கடைக்கு சிகரெட் வாங்கச் சென்ற போதெல்லாம் கணேஷ் பீடிதான் இருந்தது. சர்க்கரை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ மாதிரி சிகரெட் இல்லாதவனுக்கு பீடிக்கட்டு. அடிக்கடி கடைக்கு போனதால் அந்த ஆயாவும் ‘ஃப்ரெண்ட்’ ஆகிவிட்டது. ஊரின் பெயருக்கான காரணம் ஆயாக் கிழவிதான் சொன்னது.

சலீம் தன் குடும்பத்தோடு அந்த ஊருக்கு வந்து இன்றைய தேதிக்கு அறுபது வருடங்கள் ஆகிவிட்டது. சலீமின் மகன்கள் ஏழு பேர், பேரப்பிள்ளைகள் இருபத்தெட்டு, வாழாவெட்டியாக வாழும் மகள் அவளது இரண்டு குழந்தைகள், சலீமின் அம்மா, திருமணமாகாத மகள்கள் இரண்டு பேர் என பெருங்குடும்பம். கேரளாச்சீமையிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்தார்களாம். வீட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் தமிழ் பேசத்தெரியாது. சலீமும் இன்னும் ஓரிருவர் மட்டும் அரைகுறைத் தமிழில் பேசுவார்கள்.

இந்த ஊருக்கு வந்த புதிதில் ராமசாமிக் கவுண்டர் தோட்டத்தில் குடிசை போட்டுக் கொள்ள அனுமதி கேட்டார்கள். துலுக்கர்களுக்கு இடம் தர முடியாது என்று அவர் சொல்லிவிட்டார். இதையேதான் ஒவ்வொரு கவுண்டனும் சொல்லியிருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் சுடுகாட்டுக்கு முன்பாக இருந்த புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்ட சலீம் குடிசைக்கு முன்பாகவே கசாப்பு கடைக்கான முட்டியையும் கொண்டு வந்து போட்டிருக்கிறார். ஞாயிற்றுக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் மட்டுமே கசாப்புக் கடை உண்டு. மற்ற நாட்களில் சலீமும் அவரது மகன்கள் நான்கு பேர்களும் வெளியூர் போய்விடுவார்கள். அவர்கள் வெளியூர்ச் சந்தைகளில் தோல் வியாபாரம் செய்வதாக ஒரு பேச்சு உண்டு.

மற்ற மூன்று மகன்களில் இரண்டு பேர் ஊனம் என்பதாலும் மற்ற ஒருவன் பெண்களுக்கு பாதுகாப்பிற்காகவும் வீட்டிலேயே இருந்து கொள்வதுண்டு. ஊனம் என்றாலும் இரண்டு பேராலும் நடக்க முடியும். கொஞ்சம் சிரமப்படுவார்கள். அவ்வளவுதான்.

கசாப்புக்கடை சுற்றுவட்டார ஊர்களில் பிரபலம் அடையத்துவங்கியது. ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு ஒரு வெள்ளாட்டு குட்டியை அறுத்தவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் மூன்று குட்டிகள் வரை அறுத்தார்கள். பணம் தேவைப்படும் கவுண்டர்கள் சலீமிடம் தங்களது வெள்ளாட்டுக்குட்டிகளை விற்கத்துவங்கினார்கள்.

மூன்று மாதங்கள் ஆகியிருக்கும். ஒரு புதன்கிழமையன்று பழனிக்கவுண்டன் மனைவி அவள் கழுத்தில் போட்டிருந்த அட்டியைக் காணவில்லை என்று விடிந்தும் விடியாமலும் ஒப்பாரி வைக்கத் துவங்கினாள். ஊரே திரண்டு விட்டது. பெண்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள். கவுண்டன்கள் கூடி விவாதித்தார்கள். இறுதியாக துலுக்கவீட்டில் விசாரிக்கலாம் என்று முடிவு செய்தார்கள். மொத்தமாக சலீம் வீட்டிற்கு போனவர்கள் ஊனமான இரண்டு பேர்களையும் தூக்கி வந்து மரத்தில் கட்டி வைத்துவிட்டார்கள்.

சலீம் வீட்டு இளம்பெண்கள் வெளியே வருவதில்லை என்பதால் சலீமின் அம்மாவும் அவரது மனைவியும் மட்டும் கட்டி வைக்கப்பட்டிருந்த மரத்திற்கு அருகில் வந்தார்கள். தாங்கள் நகையை எடுக்கவில்லை என்று அழுதாலும் யாரும் கேட்பதாக இல்லை. சலீம் சனிக்கிழமைதான் ஊருக்கு வருவான் என்பதால் இவர்களை நாலு சாத்து சாத்தி விட்டுவிடலாம் என்றும் அவர்கள் வந்தவுடன் விசாரித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து இரண்டு துலுக்கப்பசங்களையும் தங்களின் கை வலிக்கும் வரை அடித்து கயிற்றை அவிழ்த்துவிட்டார்கள்.

மருவிக் கொண்டே கிடந்த சின்னப்பையன் சனிக்கிழமையன்று அதிகாலையில் பக்கத்திலிருந்த வேப்பமரத்தில் தொங்கிவிட்டான். மொத்தக் குடும்பமும் கதறியதில் ஊரே அதிர்ந்து நடுங்கியது. சலீமும் அவரது மகன்களும் சாயந்திரமாக வந்து சேர்ந்த போது நடந்த நிகழ்சிகள் அவர்களுக்கு விவரிக்கப்பட்டது. சலீம் துக்கம் தாளமாட்டாமல் ஓரமாக அமர்ந்து கொண்டார். சலீமின் மூத்த மகன் கசாப்பு கடை கத்தியைத் தூக்கிக் கொண்டு ஓடினான். இரண்டு பேர் துரத்திக் கொண்டே போனார்கள் ஆனால் அவனது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஓடியவன் பழனிக்கவுண்டன் சுதாரிப்பதற்குள் கவுண்டனின் நெஞ்சில் ஒரு வெட்டு போட்டான். வெள்ளாடு கத்துவதைப் போலவே பழனிக்கவுண்டன் கத்திக்கொண்டு விழுந்தான். அடுத்தவர்களை தேடிக் கொண்டு அவன் ஓடுவதற்கு முன்பாக மற்ற இரண்டு பேர்களும் அவனை பிடித்துவிட்டார்கள்.

வெளியூர் கவுண்டர்களுக்கும் கூட பழனிக்கவுண்டன் வெட்டப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியைத் தந்தது. ”சனி பொணம் தனியாக போகாது” என்பதால் சற்று பயந்தும் கூட போனார்கள். பழனிக்கவுண்டனை தன் மகன் கொன்றுவிட்டதை கேள்விப்பட்ட சலீம் அதிர்ச்சியடைந்தார். தன் மகனை ஓங்கி அறைந்துவிட்டு ராமசாமிக் கவுண்டர் காலில் விழ ஓடினார். கவுண்டர் எழவு வீட்டில் இருந்தார். அங்கு சென்ற சலீம் நாளை காலை ஊரைக் காலி செய்துவிடுவதாகச் சொன்னபோது யாருமே பதில் பேசவில்லை. பழனிக்கவுண்டனின் மனைவிதான் அந்த துலுக்கனை கொல்லுங்களே…அந்த துலுக்கனை வெட்டுங்களே என்று கதறிக் கொண்டிருந்தாள்.

சலீம் சென்றதற்கு பிறகாக ராமசாமிக் கவுண்டர் வீட்டில் கவுண்டர்கள் கூடினார்கள். கூட்டத்தில் சுற்றுவட்டாரக் கவுண்டர்களும் அடக்கம். பழனிக்கவுண்டனை விடிந்தபிறகு அடக்கம் செய்துவிடலாம் என்று முடிவு செய்தார்கள். அதோடு துலுக்கனை பழிவாங்கினால்தான் கவுண்டர்கள் மீது பயம் வரும் என்றும் பேசிக் கொண்டனர்.

சலீம் குடும்பத்தார் தம் குடிசைக்கு பக்கத்திலேயே இறந்தவனை அடக்கம் செய்துவிட்டு கதவை தாழிட்டுக் கொண்டனர். இரவில் யாரும் வெளியே போக வேண்டாம் என்று சலீம் தன் குடும்பத்தாரிடம் சொன்னார்.

நள்ளிரவு தாண்டிய போது வெளியே ஆள் அரவம் கேட்டது. சலீமீன் அம்மாதான் தடுக்கு ஓட்டை வழியாக பார்த்தாள். நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் நின்று கொண்டிருந்தார்கள். கதவை திறக்க முடியவில்லை. வெளியே பூட்டியிருப்பார்கள் போலிருக்கிறது. மூன்று பேர்கள் அவசர அவசரமாக குடிசையின் மீது ஏதோ ஒரு திரவத்தை ஊற்றினார்கள். ராமசாமிக் கவுண்டர் பக்கத்தில் இருந்தவனிடம் இருந்து தீப்பந்தத்தை வாங்கினார். ஒரு மணி நேரத்தில் அனைத்தும் முடிந்துவிட்டது. கதறல் சத்தம் பக்கத்து ஊர்களுக்கும் கேட்டதாம்.

அடுத்த நாள் காலையில் நாற்பதுக்கும் மேற்பட்ட கரிக்கட்டைகளை ஒரே குழியில் போட்டு மண்ணை மூடியவர்கள் அதன் பிறகாக பழனிக்கவுண்டனை அடக்கம் செய்யச் சென்றார்கள்.

‘துலுக்கர் எரிஞ்ச பாளையம்’ இப்பொழுது துலுக்கம்பாளையம் ஆகியிருக்கிறது.

– ஜூலை 11, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *