குயிலாத்தாள் (எ) மயிலாத்தாள்
பொழுது உச்சிக்கு ஏறுவதற்கு முன்பே திண்ணைக்கு வந்துவிடுவாள். ஓட்டுச்சாய்ப்புக்குக் கீழே வெயில் திண்ணையின் மேல் ஏறியும் ஏறாமலும் அலைந்துகொண்டிருக்கும். முன்னாலிருந்த இரண்டு வீடுகளும் இடிந்து குட்டிச் சுவராகிவிட்ட பின்பு ஊரின் தலைவாசல் தெளிவாகத் தெரிகிறது. அங்கே நினைவு தெரியத் தொடங்கும்போது சிறு கொம்புகளாய் இருந்த வேம்பும் பூவரசும் காலத்தின் வடுதாங்கிப் பெரிதாய்க் கிளை பரப்பி நிற்கின்றன. விநாயகனுக்குக் கோவில் கட்டியபோது வேம்பை உள்வைத்து சுற்றுத் திண்ணையும் கோவில் வாசலில் நீண்ட கல் திண்ணைகளும் அமைத்த நாட்கள் நினைவுக்கு வந்தன.
உட்கார்ந்து கால் மரத்துப் போகையில் தடியூன்றிக்கொண்டு தலைவாசலுக்குப் போய்விடுகிறாள். தெற்கே பார்த்தால் கண் மங்கும் தூரத்தில் சுடுகாடு தெரியும். சுப்பராயனும் தன் சோட்டுப் பெண்களும் அங்கே உறங்குவது கண்டு பெருமூச்சுவிடுவாள். எப்போதும் தலைவாசலில் குழந்தைகள் சிலது விளையாடிக்கொண்டிருக்கும். நீர்தொட்டிக்குக் குடத்தோடு வரும் ஊரின் மூன்றாம் நான்காம் தலைமுறைப் பெண்களைப் பார்க்கும்போது தலைவாசலின் வடகிழக்கில் தூர்ந்துகிடக்கும் சேந்துகிணற்றை வெறிப்பாள். தூரத்தில் சன்னமாய் உருளையின் ஓசை கேட்கும்.
புகையிலைச் சாற்றை வாசலில் துப்பி விட்டுத் திண்ணையில் பரவிக்கிடந்த சீலைத்துணியைச் சுருட்டிவைத்துத் தலைசாய்ந்தாள். ஓட்டுச் சாய்ப்பின் களிம்பேறிய விட்டங்கள் கருத்தும் அங்கங்கே உளுத்துமிருந்தன. இந்த வீட்டிற்கு வந்து வருடங்கள் வெகுவாகிவிட்டன. கல்யாணத்திற்கு ஒரு வருஷம் முன்னால் கட்டியது. வெளிச்சுவரில் முக்கால்வாசிக் காரை உதிர்ந்து மண் சுவராய் இருந்தாலும் வலுவாகவே இருக்கிறது. மழைக்காலங்களில் மட்டும் சமையலூட்டின் சலதாரை மூலையில் ஒழுகும். தெற்கு வளவின் ஞாபகம் வந்தபோது கண்களில் நீர் கட்டியது. பிறந்து வளர்ந்து ருதுவான அந்த வீடிருந்த இடத்தில் குத்தாரிக் குத்தாரியாக வேலிக்கிளுவை அடர்ந்துகிடக்கிறது. சிதறிக் கிடக்கும் ஆட்டுப்புழுக்கைகளும் பாம்புச் சட்டைகளும் அவள் பிரமை யில் என்றாவது நிழலாய்த் தெரியும்.
வீடு வழிக்க, வாசல் கூட்ட, பாத்திரம் கழுவ என்று நான்கு வயதிலிருந்து பாடுபட்டவள். அது மசைக்காலம். மண்ணையும் உழைப்பையும் தவிர ஒன்றுமறியாக் குடியாவனவர்கள். குழந்தைகளுக்குச் சிறு சிறு வேலைகளே விளையாட்டாய் இருந்தபோது இவளும் வேறாய் இருக்கவில்லை. மண்ணோடு தங்களைப் பிணைத்துக்கொண்டவர்களுக்கு வீடு என்பது உண்பதற்கும் உறங்குவதற்குமான இடமாக மட்டுமே இருக்கிறது. அவள் ஆத்தா எந்நேரமும் காட்டுக்குள் ஏதாவது வேலையாக இருந்துவிட்டுப் பொழுதுவிழும் நேரத்தில்தான் வீடு திரும்புவாள். இவளோ ஆறேழு வயதிலேயே வீட்டுவேலைகளைச் செய்யப் பழகிவிட்டாள். இருப்பதில் பெரிய வேலை சோளம் குத்துவது தான். நிலா நாட்களில் ஆத்தாளோடு உரலில் உலக்கையை ஒரு கை பிடித்து இவளும் குத்துவாள்.
ஆத்தாளும் அய்யனும் இருந்த பள்ள நிலத்தில் வேலை ஏதும் இல்லாதபோது கூலிக்குப் போனார்கள். இவள் ஒற்றையாய் வீட்டுவேலைகள் அத்தனையும் செய்துவிட்டு வெள்ளாடு மேய்க்கக் காட்டுக்கு ஓடும்போது தலைவாசலில் பண்டாரம் மணல் பரப்பி ஏழெட்டுச் சிறுவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொண்டிருப்பார். ஒரு கணம் நின்று பார்ப்பவளுக்கு வெள்ளாடுகளின் ஞாபகம் வந்து ஓடத் தொடங்குவாள். மிஷ்டைக் கொடிகள் அடர்ந்துகிடக்கும் இட்டேரியில் வெள்ளாடுகளுக்குத் தழை இழுத்துப் போட்டுக்கொண்டே போவாள். வேப்பம்பழம் உதிரும் காலங்களில் கையில் சிறு சாக்கோடு கிளம்புபவள் திரும்பும்போது எப்படியும் அரை மூட்டை சேர்த்திருப்பாள். கண்ணுவள்ளி கிழங்கு கிடைக்கும் காலங்களில் கிழங்கெடுப்பாள். இவளின் துடியால் ஊர்க்கண் பட்டுவிடுமென்று இவள் வயதுக்கு வந்தபின்னும் ஆத்தாள் வாராவாரம் மிளகாய் சுற்றிப் போட்டுத் திருஷ்டி கழிப்பாள். வாலிப முறுக்கோடு இருந்த சுப்பராயன் இவளைப் பார்க்கும் போதெல்லாம் நமட்டுச்சிரிப்பு சிரிப்பான். இவள் பதிலுக்கு எகத்தாளமாய்ச் சிரிப்பாள். அப்படி நமட்டுச்சிரிப்போடும் எகத்தாளச் சிரிப்போடும்தான் இருவரும் புருஷன் பொண்டாட்டி ஆனார்கள்.
தெற்கு வளவுக்கும் நடு வளவுக்கும் தூரம் ஒன்றும் அதிகமில்லை. ஒரு பழைய மனிதன் நெருக்கமான புது மனிதனானதைத் தவிர இவளுக்கு வேறு எந்த மாற்றமுமில்லை. திருமணமாகி வீட்டைப் பிரியும் துயரம் இவளுக்கு இல்லை. கால் புகுந்த வீட்டில் இருந்தாலும் தலை பிறந்த வீட்டில் இருந்தது. சுப்பராயன் சாந்தமான கடும் பாட்டாளி. அவன் கபிலை ஓட்ட இவள் மிளகாய்ச் செடிகளுக்குத் தண்ணீர் கட்டுவாள். களை வெட்டுவாள். அவன் முன்னால் ஏரோட்டிக்கொண்டு போக இவள் பின்னால் சால் போடுவாள். மக்கிரி மக்கிரியாகக் கம்மங்கருது வெட்டுவாள். ஆண்வேலை பெண் வேலை என்ற வித்தியாசம் அவளுக்கு இல்லை.
ஆறு வருஷத்தில் இரண்டுமுறை கருக்கலைந்தபோதும் சுப்பராயன் முகம் சுணங்கவில்லை. மூன்றாம்முறை கருத்தங்கியபோது அவன் இவளைக் காட்டுப்பக்கமே விட வில்லை. எந்த வேலையும் செய்யக் கூடாதென்று உறுதியாகச் சொல்லிவிட்டான். ஆனாலும் நிறைசூலியாய்க் காட்டுக்கு நடந்துபோய் அதைத் தொட இதைத் தொட என்றிருப்பாள். குழந்தை பிறந்தது ஒரு மழைநாள். குங்காருபாளையத்து ஆத்தா பிரசவம் பார்க்க அதிகச் சிரமமில்லாமல் பெற்றுப்போட்டாள். குழந்தையைப் பார்க்க வந்தவர்களுக்கு அவள் மாமியார் பொரியும் கருப்பட்டிக் காப்பியும் கொடுத்து நிலைகொள்ளாது திரிந்தாள். குழந்தை வயிறு நிறையத் தாய்ப் பாலைக் குடித்துவிட்டு எப்போதும் கக்கிக்கொண்டிருந்தது. இவள் மாரிலில்லாதபோது குழந்தை சுப்பராயன் தோளிலிருக்கும். அவன் குழந்தையிடம் தத்தக்கா பித்தக்கா என்று உளறிக்கொண்டிருப்பதைக் கேட்கையில் இவளுக்குச் சிரிப்பாக வரும்.
மறுவருடம் மேக்காற்று வீசும் கோடைக்காற்றில் காய்ச்சல் என்று படுத்த சுப்பராயன் எழுந்திருக்கவேயில்லை. இன்னும் பால்வற்றாத ஸ்தனங்களைக் கொண்டிருந்தவளுக்கு அழுதழுது கண்ணீர் வற்றிப்போனது. கிணறுகளின் நீரைக் குடித்துவிடும் மேக்காற்று வானில் மேகங்களையும் திரளவிடுவதில்லை. காலம் பஞ்சத்திற்குள் விழுந்தபோது குழந்தை வெகுசாத்வீகமாக மலர்ந்து சிரித்தாள்.
சரசு (எ) சரஸ்வதி
சரசு இட்டேரியில் வெக்வெக்கென்று மேற்கே நடந்துகொண்டிருந்தாள். வெயில் தணிய ஆரம்பித்திருந்தது. கூலிப்பணம் நானூறு மடியில் இருந்தது. கொளுத்தும் வெயிலில் வெங்காயம் அரிந்ததால் உடம்பெல்லாம் நாற்றமடித்தது. போய் மேலுக்குத் தண்ணீர் ஊற்றிவிட்டுக் கொடுவாய்ச் சந்தைக்குப் போக வேண்டும். போனவாரமும் போக முடியாமல் போய்விட்டது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு வேப்பமர நிழலில் நின்றவாறே சிறுநீர் கழித்தாள். அவளுக்கிருந்த சலிப்பில் எங்காவது இட்டேரி ஓரமாகப் படுத்துத் தூங்கிவிடலாமென்றிருந்தது. நடையை எட்டிப்போட்டாள்.
வீட்டை நெருங்கியபோது சரசுக்கு முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடித்தது. எத்தனை தடவை சொன்னாலும் கிழவி கேட்பதேயில்லை. இன்றைக்கும் வாசலோரமே மண்டுவைத்திருந்தாள். கத்த வாயெடுத்தவள் கிழவி தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு அடங்கிப் போனாள்.
பொடக்காலியில் சரசு குளித்துவிட்டு வாசலில் மைகோதியில் தலைகோதிக் கொண்டிருக்கையில் கிழவி தூக்கச்சடவோடு எழுந்து திண்ணையில் உட்கார்ந்தாள். கிழவியைப் பார்த்தபோது சரசுக்குக் கோபமெல்லாம் வடிந்து தொண்டையில் அடைத்தது. எத்தனை மாம்பாடு பட்டிருப்பாள்? மூப்பின் தள்ளாமை இருந்தாலும் பெரிய நோய் நொடி எதுவுமில்லாமல் அவளிருந்தது கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்தது. கிழவி கொட்டாவிவிட்டாள். தலையை முடிந்துகொண்டவள் இரண்டு வட்டில்களில் சோற்றைப் போட்டுக்கொண்டு சொம்போடு திண்ணைக்கு வந்தாள்.
சோற்றை உருண்டை பிடித்து விழுங்கிக்கொண்டே கிழவி கேட்டாள்.
“சந்தைக்குப் போறயா?”
“ம் . . .”
“பொகீல இல்ல . . .”
“செரி வாங்கியாறன்.”
சரசு அவசர அவசரமாக வட்டில்களைக் கழுவி வாசலில் ஊற்றிவிட்டுப் பெரிய ஒயர்க் கூடையை எடுத்துக்கொண்டு செலவுப்பெட்டிக்குள் இருந்த மணிபர்ஸை எடுத்து ஜாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டாள். நாலே கால் பண்ணெண்டை விட்டால் மறுபடியும் ஒரு மணி நேரம் பஸ்சுக்கு நிற்க வேண்டும். இந்த சர்வீஸ் வண்டிக்காரன் பிரிவில் நிறுத்துவதேயில்லை. சரசு ரப்பர் செருப்பைப் போட்டுக்கொண்ட போது வாசலில் லேசான ஈரத்தோடு சில சோற்றுப்பருக்கைகள் மின்னின.
சரசு மேற்கே ரோட்டுக்குப் போகும் குறுக்கு வழியில் தோட்டங்களின் வழியே நடக்கத் தொடங்கினாள். சந்தைக்குப் போகும் பழக்கம் இருபது வருடங்களுக்கு முன்னால் ஆரம்பித்தது. பத்தொன்பது வருசத்திற்கு முன் கிழவி அவள் சக்திக்கும் மீறியே தடபுடலாகக் கல்யாணம் பண்ணிவைத்தாள். புருஷனோடு ஊருக்குப் போனவள் மூன்றே மாதத்தில் வயிற்றில் இருமாதக் கருவோடு திரும்பிவந்தாள். வந்தவள் இனி அவனோடு பொழைக்கப் போவதில்லையென்று ஒரே வார்த்தையை மட்டும் சொன்னாள். கிழவி அன்னந்தண்ணியில்லாமல் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதாள். இவள் அதற்குப் பிறகு வாயே திறக்கவில்லை. ஒரு வாரம் கழித்துக் கருவைக் கலைக்க வேண்டுமென்று இவள் கிழவியிடம் சொன்னபோது கிழவிக்கு நெஞ்சே அடைத்துவிடும்போலிருந்தது. விட்டத்தில் சுருக்குக் கயிற்றை மாட்டி அவளை அடக்கினாள்.
சரசின் புருஷன் பல நாட்கள் வந்து கெஞ்சிப்பார்த்தான். யார் யாரையோ தூதுவிட்டான். இவள் மசியவேயில்லை. கிழவி பெரிய வீட்டய்யனிடம் போய் ஒரு பாட்டம் அழுதுவிட்டு வந்தாள். ஊர் பல காரணங்களைப் பேசி மெல்ல அடங்கியது. கிழவிதான் ஒடுங்கிப் போனாள். மகள் தன்னிடம்கூட மனந்திறக்க மறுத்தது அவளைப் பலகீனப்படுத்தியது. ஒவ்வொரு ராவிலும் சன்னமான ஒப்பாரியோடு புலம்பிக்கொண்டிருப்பதைக் கேட்டவாறே சரசு படுத்துக்கிடந்தாள். கருவைக் கலைக்காமலிருக்க அவள் ஒத்துக்கொண்டதை நினைத்துக் கிழவி கொஞ்சமாய் ஆறுதலைடைந்து, குழந்தை பிறந்தால் மனம் மாறிவிடுவாளெனத் தேற்றிக்கொண்டாள். ஆனால் குழந்தை பிறந்தபோது குழந்தையைப் பார்க்க வந்தவனை இவள் அண்டவேவிடவில்லை. சரசு கத்துவதைக் கேட்டு திரண்டவர்கள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவள் இரங்கவில்லை. அவன் முகம் தொங்கிப்போனது. கிழவி திண்ணையில் சுருண்டு உட்கார்ந்துவிட்டாள். கடைசியில் பெரிய வீட்டய்யன்தான் இவளை அதட்டிக் குழந்தையை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தார். சரசு வேண்டா வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். மறுபடியும் இரண்டு வருசம் பொறுத்துப்பார்த்தவன் இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கொண்டான்.
சந்தையிலிருந்து சரசு திரும்பியபோது பொழுது மசங்கத் தொடங்கியிருந்தது. பெரிய ஒயர்க்கூடை நிறையப் பருப்பு, சர்க்கரை, சிலுவாட்டுச் சாமான்கள் நிறைந்திருந்தன. பொரிகடலைப் பொட்டலம் கூடைக்கு மேலே துருத்திக்கொண்டிருந்தது. பஸ்ஸில் வரும்போது இன்று எப்படியும் பூலக்காடு போய் வட்டிப்பணத்தை வாங்கிவிட வேண்டுமென்று நினைத்துக்கொண்டாள். மாமன் இரண்டு மாதங்களாக வட்டிப்பணம் தராமல் தவணை சொல்லிக்கொண்டிருக்கிறார்.
சரசு பூலக்காடு போகும்போது பொழுது சுத்தமாக இருண்டிருந்தது. மாமன் சாளைத்திண்ணையில் உட்கார்ந்திருந்தார். இவள் பெரிய ஒயர்க்கூடையைத் திண்ணையில் வைத்துவிட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். ஆத்தாள் வரக்காப்பி கொண்டுவந்து குடுத்தாள்.
“மாமோவ். . . ஆவனீல எப்படியும் முழுப்பணத்தையுங் குடுத்துருங்க. . . வூட்டு வேலைய முடிச்சுரலாமுனு இருக்கறன். இப்படியே உட்டா வுழுந்துரும்போல இருக்கு . . . அப்பறம் மூணு பொட்டச்சிகளும் சட்டி பானையத் தூக்கிட்டு வளவுக்குள்ள நிக்கோணும். பாப்பாளும் இந்த வருசம் காலேச முடிச்சுருவா . . . அடுத்த வருசம் அவளுக்கு ஒரு கல்யாணத்த பண்ணிப்போடலாமுனு இருக்கறன் . . .”
“இதா . . . வெங்காயம் எடுத்துப் போட்டதியும் குடுத்துறனாத்தா . . .” சொன்ன பூலக்காட்டு மாமன் வட்டித்தவணையை நீட்டினார். வாங்கி லேசாக எண்ணிப்பார்த்தவள் பணத்தை மடியில் வைத்துக்கொண்டாள்.
“செரிங்க மாமோவ் . . . நாங் கௌம்பறன் . . . எப்படியும் பாத்துப் பணத்தைக் கொஞ்சம் ரெடி பண்ணிருங்க.”
“அதப் பாத்துக்கலாம் சரசு . . . அடுத்த வாரம் வெங்காயம் புடுங்கறதுக்கு வாரயா?” மாமன் கேட்டார்.
“பாக்கறனுங்க மாமா . . . எல்லாத் தோட்டத்திலயுங் கூப்பிட்டுக்கிட்டுத் தான் இருக்கறாங்க . . . எதுக்கும் புடுங்கறப்ப ஒரு பேச்சு சொல்லுங்க . . . மாமன் தோட்டத்துக்கு வேலைக்கு வராம நா எங்க போகப்போறேன்?” நமட்டுச்சிரிப்போடு சொன்னவள் கூடையைத் தூக்கிக்கொண்டாள்.
சரசுக்கு மனக்கணக்கு வேகமாக ஓடியது. பேங்கில் இருக்கும் பணம், வெளியே வட்டிக்கு விட்டிருக்கும் பணம் எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தாள். கிழவி வலுவாக இருக்கும்வரை ஏழெட்டு வெள்ளாடுகள் கூட இருந்தன. இப்போது இவள் ஒருத்தியின் கூலிப்பணம்தான் வருமானம். எப்படியும் ஆவணியில் வீட்டு வேலையை ஆரம்பித்துவிடலாமென அவளுக்குத் தெம்பாகவே இருந்தது.
கொஞ்சம் தூரத்தில் அவளுக்கு முன்னால் ஒரு உருவம் கையில் பையோடு போய்க்கொண்டிருந்தது. சரசு வேகமாக நடந்தாள். சாமாத்தாளைப் போலவே தெரிந்தது. அவளேதான்.
“என்னக்கா . . . இந்த வேகமாக நடக்கறே? உன்னப் புடிச்சரலாமுனு வேகமாக நடந்தா தடம் மூயவே மாட்டீங்கது . . .”
“அடடே . . . சரசு . . . சந்தக்கீ போய்ட்டு வரயா? நான் குண்டடம் வரைக்கும் ஒரு சோலியாய்ப் போய்ட்டு வந்தன்.”
“ஆமாக்கா . . . சந்தக்கீத்தான் போய்ட்டு வாரன் . . . ஆமா . . . உனக்கு சமாச்சாரம் தெரியுமா?”
“என்ன சரசு?”
“அட அதானக்கா . . . கெணத்துக் காட்டுக் கல்யாணம் நின்னுபோச்சாமா . . .”
“அடக் கெரகமே . . .”
“ஆமாக்கா . . . இந்த தெல்லவாரி நாயப்பத்திதான் ஊருக்கே தெரியுமே . . . பொம்பளையோடதன்னு தெரிஞ்சா மல்லு நாத்தத்தையுங்கூட மோந்து பாக்கறவன் அவன் . . . ஊருக்குள்ளயே இந்த ஆட்டம் போட்டா எவனாவது புள்ள ஊட்ல மூட்டி வுடாமயா இருப்பான் . . .” பேசிக்கொண்டே மினியப்பன் கோவிலடியில் வந்திருந்தார்கள்.
“ஆமாஞ் சரசு . . . நீ சொல்றதுஞ் சரிதான் . . .” நடந்தவர்கள் வடக்குவளவு முக்கில் பிரிந்தார்கள். சரசு வீட்டை நெருங்கியபோது மங்கலாக லைட் எரிந்துகொண்டிருந்தது. கிழவி திண்ணையில்தான் உட்கார்ந்திருந்தாள். வாசலில் நீர் தெளித்திருப்பாள் போல. குளிர்ச்சியாக இருந்தது. சைக்கிளைக் காணவில்லை.
“என்னம்மா . . . உன்னும் பாப்பா வரலீயா?” புகையிலைத் துண்டுகளை நீட்டிக்கொண்டே கேட்டாள். கிழவி எதுவும் சொல்லவில்லை. “பொழுது உழுந்தாச்சு . . . பொட்டப்புள்ள இன்னும் ஊட்டுக்கு வரல . . . எல்லாம் நீ குடுக்கற செல்லம் . . . ஏதாவது வாயத்தொறந்தா ரெண்டு பேரும் கட்சி கட்டிக்கிட்டு என்னய மொடக்கப் பாக்கறது” சரசு சொல்லிக்கொண்டே அடுப்பைப் பற்றவைத்தாள்.
பொரி வறுக்கும் வாசனையும் வறக்காப்பியின் வாசனையும் கலந்து வீடு வினோத மணத்தால் நிறைந்தது.
பாப்பா (எ) மைதிலி
மைதிலி சைக்கிளை வேகமாக மிதித்தாள். நேரமாகிவிட்டதால் படபடப்பாக இருந்தாள். அம்மா எப்படியும் சத்தம்போடுவாள். கோபத்தில் அவள் பேசுவதைக் கேட்டால் நெஞ்சுக்குலை பதறிவிடும். அவளுக்குக் கரிநாக்கு. சொல் நெஞ்சில் தங்கி அறுத்துவிடும். வழக்கம்போல இன்றும் நாலு மணிக்கே வர வேண்டியவள்தான். நினைத்துப் பார்க்கையில் கொஞ்சம் பயமாக இருந்தாலும் மனத்தடியில் சந்தோஷமாகவே இருந்தது.
அப்பாவை ஐந்தாறு முறைதான் மொத்தமாகவே பார்த்திருப்பாள். அது பெரும்பாலும் எங்காவது கல்யாண வீடுகளிலாக இருக்கும். அவர் ஆசை ஆசையாய்க் கேட்கும் கேள்விக்கு அம்மா எங்காவது பக்கத்தில் இருக்கிறாளா என்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லிவிட்டு ஓடிவிடுவாள். விவரம் புரிய ஆரம்பித்தபின் ஆத்தா கொஞ்சம் சொல்லியிருக்கிறாள். அதென்னவோ இவள் அம்மாவிடம் அப்பாவைப் பற்றி எதுவுமே பேசுவதில்லை. அது கூச்சமான விஷயம்போல் மாறிவிட்டது. ஆத்தா இருப்பதால் பரவாயில்லை. போனவாரம்கூடச் சண்டை. காலம் எவ்வளவு மாறிவிட்டது? அம்மா இன்னும் பட்டிக்காடாகவே இருக்கிறாள். அந்த மூணு நாள் விஷயத்திற்குக்கூடச் சண்டை. வீட்டுக்குள் வராதே . . . வெளியே படு . . . பாத்திரம் பண்டத்தைத் தொடாதே . . . அது இது என்று.
எல்லாம் சாந்தியால் வந்த வினை. வெகுநாட்களாக அவள் வரச் சொல்லிக்கொண்டிருந்தாலும் இவள் தெரிந்தே தவிர்த்துக்கொண்டிருந்தாள். அவள் விடவில்லை. “நீ எங்க வூட்டுக்குத்தாண்டி வர்றே . . . உன்ன யாரும் உங்க அப்பாவப் பாக்கச்சொல்லிக் கட்டாயப்படுத்தலியே? நியாயப்படி பாத்தா நாம ரெண்டு பேரும் ஒரு முறையில் அக்கா தங்கச்சி ஆகுது . . . நீ எங்க ஊர்க்காரி . . . நீ ஒண்ணும் மனச ஒழப்பிக்காம ஒரு நாள் எங்க வீட்டுக்கு வா . . .”
அம்மாவை நினைத்து ஒருபுறம் உதறலாக இருந்தாலும் இன்றைக்குக் கிளாஸ் முடிந்தவுடன் சாந்தியுடன் அவள் வீட்டுக்குப் போனாள். வீட்டைச் சுற்றிக் கனகாம்பரமும் செம்பருத்தியும் பூத்துக்கிடந்தன. இவள் உடலில் இன்னும் நடுக்கம் குறையவில்லை. இவர்கள் இருவரும் தெருவில் வந்துகொண்டிருக்கையில் தூரத்தில் நின்றிருந்தது அப்பாவைப் போலவேயிருந்தது. மறுபடியும் திரும்பிப் பார்த்தாள். அப்பாவே தான். சாந்தியின் வீட்டில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்போல . . . ரொம்பப் பாசமாகப் பழகினார்கள். சட்டென வாசற்பக்கம் பார்த்தவள் அப்பா உள்ளே வந்துகொண்டிருந்ததைப் பார்த்து அவஸ்தையாக உணர்ந்தாள். இவளுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அப்பா சாந்தியின் அப்பாவோடு பேசிக்கொண்டே இவளைப் பார்த்து சகஜமாகப் புன்னகைத்தார். நமட்டுச்சிரிப்பு சிரித்த சாந்தியை முறைத்தாள்.
“வூட்டுக்கு வந்துட்டுப் போ கண்ணு . . .” என்றவரிடம் தலையாட்டினாள்.
“போயிட்டு வா கண்ணு . . . ஏய் சாந்தி . . . புள்ளயக் கூட்டிட்டுப் போய்ட்டு வாடி” என்றாள் சாந்தியின் அம்மா. அப்பாவுக்குப் பின்னால் சாந்தியோடு நடக்கையில் இவளுக்குக் கால் பின்னுவதுபோலிருந்தது.
“ஏய் . . . இங்க வந்து பாரு . . . யாரு வந்துருக்கானு” அப்பா சொல்லிக்கொண்டே வீட்டுக்குள் போனார். வெகுபாந்தமாய் உள்ளேயிருந்து வந்தவள் புன்னகைத்தாள்.
“உக்காரு கண்ணு . . . ஏன் இவ்வளவு கூச்சப்படறே . . .? உங்கப்பா என்கிட்ட எல்லாத்தையுஞ் சொல்லிருக்காரு . . . இதுவும் உன்ற வூடு தான் . . . சாந்தி வா வா . . . ரெண்டு பேரும் உக்காருங்க . . . காப்பி வச்சுக்கொண்டுட்டு வாறேன் . . .”
“என்ன சித்தி . . . தம்பி எப்ப காலேஜில இருந்து லீவுக்கு வாரானாமா?” சாந்தி சகஜமாகக் கேட்டுக்கொண்டே சமையலூட்டுக்குள் போய்விட்டாள். திருட்டுத் தனக்காரி. இவள் அப்பாவை ஓரக்கண்ணில் பார்த்தாள்.
“ஆத்தா நல்லாருக்குதா கண்ணு?”
“ம் . . . நல்லாருக்குதுங்க . . .”
“ம் . . . ம் . . . நானே ஊருக்கு வரோனுமினு நெனச்சிருந்தேன் . . . ஒரு நல்ல நேரம் வரட்டும்.”
சித்தி காப்பி கொண்டுவந்து வைத்தாள். இவள் காப்பியைக் குடித்துக்கொண்டே சுவரில் மாட்டப்பட்டிருந்த போட்டோக்களைப் பார்த்தாள். அப்பாவின் இளவயதுப் படம் . . . கழுத்தில் மாலையோடு எடுக்கப்பட்டிருந்த அவர்கள் கல்யாணப் படம் . . . அப்புறம் ஒரு சின்னப்பையனின் படம். இன்னொரு பக்கத்தில் சாமி படங்கள். அவளுக்குத் திடீரென்று எங்காவது யாரும் பார்க்காத இடத்திற்குப் போய் அழ வேண்டும் போலிருந்தது. அப்பா அதற்குப் பிறகு எதுவும் கேட்கவில்லை. சித்திதான் அதையும் இதையும் கேட்டுக்கொண்டிருந்தாள். இவள் சாந்தியைப் பார்த்துக் கிளம்பலாமென்று சைகைசெய்தாள். சித்தி இவள் தலையில் பூ வைத்துக்கொண்டே அடிக்கடி வந்து போகச்சொன்னாள். ஆசாரத்துக்கு ஒட்டியிருந்த அறைக்குள் போன அப்பா சித்தியைக் கூப்பிட்டார்.
வெளியே வந்த சித்தி இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை இவள் கையில் திணித்தாள். இவள் படபடப்போடு அப்பாவைப் பார்த்துக்கொண்டே வேண்டாமென்றாள். அவர் முகம் சுண்டிப்போனது. வாங்கிக்கொண்டாள்.
எல்லாவற்றையும் நினைத்துக்கொண்டே சைக்கிள் மிதித்தவள் மினியப்பன் கோவிலடிக்கு வந்திருந்தாள். ஞாபகம் வந்தவளாய்த் தலையிலிருந்த பூவை எடுத்து மினியப்பன் கோவிலோரம் வீசினாள். பிளவுசுக்குள் சொருகி வைத்திருந்த பணம் உறுத்தியது.
எங்கேயோ நாயம் பேசப் போயிருந்த சரசு இன்னும் வரவில்லை. மைதிலி திண்ணையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தாள். மயிலாத்தாள் தலையை வரக் வரக் என்று சொறிவதைப் பார்த்த மைதிலி கேட்டாள்.
“என்னாத்தா பேனு கடிக்குதா?”
“ஆமாங்கண்ணு . . . பேனு பாத்து ரொம்ப நாளாச்சு . . . நாளக்கிக் கொஞ்சம் பாத்துவுடறியா? பேனு சீப்பு வேற எங்க கெடக்குதோ?”
“ஆத்தா . . . தலைக்கு ஷாம்பு போட்டு ரெண்டுதடவை தண்ணி வாத்தீனா பேனெல்லாம் போயிடும் . . .” மைதிலி சிரித்துக் கொண்டே சொன்னாள்.
“அட ஏங்கண்ணு . . . போன தடவையே நீ பண்ணுன . . . அந்தக் கருமத்தைப் போட்டு கண்ணெல்லா எரிஞ்சுபோச்சு . . . உங்கம்மாள அரப்பு உருவிட்டு வரச் சொல்லிருக்கறன் . . . இந்த வாரம் அரப்புத் தேச்சு தண்ணி வாக்கோணும் . . . ஆமா நீ கண்ட கருமத்தையெல்லா தலைக்குத் தேய்க்காத . . . அரப்பு மட்டுந்தான் தேய்க்கோணும் . . . கண்ணுக்கு ரொம்ப குளிர்ச்சி அது . . . படிக்கற புள்ளக்கி கண்ணு நல்லாருக்கோணு . . . நம்மூரு புள்ளகளிலேயே என் ராசாத்தி உனக்குத்தான் இவ்வளவு நீளமா கருகருனு முடி.”
“போ ஆத்தா . . . நா ஷாம்புதான் தேய்ப்பன் . . . ஆமா அம்மா எங்க போனா? எனக்குப் பசிக்குது.”
“பசிச்சா சாப்பிடு கண்ணு.”
மயிலாத்தாள் சொல்லிக்கொண்டிருக்கையில் வேகமாக வந்த சரசு செருப்புகளை வாசலில் விசிறியெறிந்துவிட்டு உள்ளே போனாள். மைதிலி புரியாமல் பார்த்தாள். உள்ளே சமையலூட்டுக்குள் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது.
“அட என்னாச்சு . . . ஏன் இந்தக் கோவம் . . . சொன்னாத்தான தெரியும் . . .” மயிலாத்தாள் வீட்டுக்குள் எட்டிப்பார்த்துக்கொண்டே கேட்டாள். வேகமாக வெளியே வந்த சரசு மைதிலியின் முடியைக் கொத்தாகப் பிடித்து இசித்தாள். கிழவி பதறியெழுந்தாள்.
“இந்த நாயி என்ன பண்ணிருக்குது தெரியுமா . . . எந்த நாயோட நெழலுகூட எம்மேல படக் கூடாதுன்னு இருந்தனோ அவனூட்டுக்குப் போயி கொஞ்சிக் கொலவிட்டு வந்துருக்கா . . . எத்தன நாளா இந்தத் திருட்டு வேலை நடக்குதடி?”
மயிலாத்தாள் கோபமாக சரஸ்வதியைத் தள்ளிவிட்டாள் . . . “புள்ளய வுடுறி கேனமுண்ட . . . உன்ன மாதிரியே அவளும் ஒண்ணுமில்லாம போகோணுமினு நெனக்கிறியா? முண்ட முண்ட குடும்பத்தைக் கெடுத்த முண்ட . . . அவனுக்குத்தான நீ இவளப் பெத்தே?”
“கெழட்டு முண்ட எல்லா உன்னால வந்தது. அந்த நாயோட எச்சையுங்கூட வேண்டானுதான் அன்னிக்கே கலைக்கறன்னன். கெழட்டு முண்ட நீ தாண்டி நாண்டுக்கறனு சொல்லித் தடுத்துப் போட்டே . . . அந்த எச்சக்கலை நாயோட புத்திதான இவளுக்கும் வரும் . . .” சொன்னவள் ஒரு மூலையில் சுருண்டு படுத்துக்கொண்டாள்.
மைதிலி கதறியழுதாள். மயிலாத்தாள் அவளைத் தூக்கி மடியில் போட்டுக்கொண்டாள். “ராசாத்தி . . . அழுவாதடி . . . இந்தக் கேணமுண்டைக்கு என்ன வாப்பாடு தெரியுது? அவ கெடக்கறா . . .” மயிலாத்தாள் மைதிலியின் தலையைக் கோதிக்கொண்டே என்னென்னவோ பிதற்றிக்கொண்டிருந்தாள். மைதிலிக்குக் கண்ணீர் அடங்கவேயில்லை. செத்துவிட வேண்டும் போலிருந்தது.
குயிலாத்தாள் (எ) மயிலாத்தாள்
மைதிலியின் பிணம் போன தடத்தைப் பார்த்துக்கொண்டே விநாயகன் கோவில் திண்ணையில் மயிலாத்தாள் நாளெல்லாம் உட் கார்ந்திருக்கிறாள். நினைப்பிலிருந்து துண்டித்துக்கொண்ட கண்கள் எங்கோ சூன்யத்தை வெறித்துக்கொண்டிருக்கின்றன. அவளிலிருந்து வழிந்துகொண்டிருக்கும் துயரத்தின் திவலை கடந்துபோகும் பாதசாரிகளின் இதயத்தின் மேல் தீக்கங்காய் விழுகிறது.