திக்கற்ற பார்வதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 12, 2022
பார்வையிட்டோர்: 5,181 
 
 

(1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘ஆய்வராத’ வண்டி

கறுப்பனை வேறே வைத்தார்கள். வேறே வைப்பது என்றால், குடியானவர்களுக்குள் ஒருவ னுக்கு விவாகம் செய்து மனைவி வீட்டுக்கு வந்ததும் அவனும் அவன் மனைவியும் வாசிக்க ஒரு தனிக் குடிசை போட்டுக் கொடுத்து விடுவார்கள். புருஷனும் மனைவி யும் பாடுபட்டு உழைத்துச் சீவனம் செய்யவேண்டும். இது ஒரு நல்ல வழக்கமாகும். உடலுழைப்பு அறியாத உயர் – வகுப்பாரில் இன்னும் இருந்து வரும் ஏகக் குடும்ப ஏற்பாடு பலவித பிணக்குக்கு இடமாயிருத் தல் யாவரும் அறிந்ததே. கறுப்பனின் பெற்றோர் முதுமை வயது அடைந்திருந்தனர். அவர்கள் ஊருக் குள் பிதிரார்ஜித வீட்டில் வசித்தனர். கறுப்பனுடைய அண்ணன் காட்டுக் கொட்டாயில் இருந்தான். இப் போது கறுப்பன் தனிக் குடித்தனம் செய்ய ஆரம்பித்த தும். குடும்ப நிலத்தை மூன்று பகுதியாகப் பிரித்தனர்.

மூத்த மகன் தன் நிலத்தையும், தகப்பன் பங்கையும் பயிரிட்டான். கறுப்பனுக்கு ஒரு பங்கு கொடுக்கப்பட் டது. எல்லோரும் சேர்ந்து வேலை செய்து அவனுக்கு ஒரு மண் குடிசை கட்டிக் கொடுத்தார்கள். ஆடு மாடுக ளும் பங்கு போடப்பட்டன. கறுப்பனுக்கு ஒரு ஜதைக் காளை மாடும். இரண்டு வெள்ளாடுகளும் கொடுத்தார் கள். கறுப்பன் வயது முப்பது. நல்ல திடகாத்திரன். அவன் பெண் சாதி பார்வதியோ அந்த கிராமத்திற் குள் எல்லாரையும் விட அழகும் சுறுசுறுப்பும் வாய்ந்தவள். ஏழைக் குடியானவப் பெண்ணானாலும், இராஜாத்தியொத்த முகக்களை. எறும்பும் தேனீ யும் சோம்பினாலும் அவள் வேலை செய்வதில் ஓயமாட்டாள் ; அவ்வளவு சுறுசுறுப்புள்ள பெண். பார்வதி, தன் புதிய குடிசையில் அங்கேயே பிறந்து வளர்ந்தவள் போல வேலை செய்துகொண்டு இடை யிடையே கறுப்பனைப் பார்த்துப் புன்னகை புரியும் போது அவனும் தனக்கு உலகத்தில் ஒரு குறையு மில்லை யென்று எண்ணி உள்ளம் பூரித்தான்.

பார்வதி தாய் வீட்டிலிருந்து கொஞ்சம் பணம் கொண்டு வந்திருந்தாள். அதைக்கொண்டு கறவை எருமை ஒன்று வாங்கினார்கள். காலாகாலத்தில் மழை பெய்தது; கறுப்பனும் கஷ்டப்பட்டு வேலை செய்து. வயற்காட்டில் நன்றாய் விளைந்தது. பார்வதி முகஞ் சுளியாமல் பகல் முழுவதும் வேலை செய்வாள். அவ ளுக்குக் கறுப்பனும், காளை மாடுகளும், வயலும். எருமையுந்தான் எல்லாப் பாக்கியமும். கொஞ்சம் அவ காசம் நேர்ந்தால், தன் தாயார் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த இராட்டினத்தில் நூல் நூற்கத் தொடங்குவாள். இரவுநேரம் நிலாக் காய்ந்தால் அவளுடைய கொழுந்தியும் வருவாள். இருவரும் பேசிக்கொண்டே நெடுநேரம் நிலாவில் நூல் நூற்பார்கள்.

பார்வதியின் எருமை நல்ல கறவை ஜாதி. அதி காலையில் தயிர் கடைவாள். பின்னர். வீடு மெழுகி. சுத்தம் செய்துவிட்டு முதலிமார்கள் தெருவில் மோர் விற்றுவரப் போவாள். சந்தையன்று நெய்யும் காய்ச்சி விற்பாள். இப்படி வாரத்திற்கு ஏறக்குறைய மூன்று ரூபாய் அவளுக்குக் கிடைத்து வந்தது.

அடுத்த வருஷம் கறுப்பன் பெரிய யோசனை செய்யலானான். அவன் பார்வதியிடம் சொன்னான்: ”நம்முடைய காடு சின்னது. நம்மிருவருக்கும் எப் போதும் வேலை இருப்பதில்லை. ஒரு வண்டி வாங்கி அதில் என் இரண்டு பணம் சேர்க்கக்கூடாது? அப் போது மாட்டுக்கு வருஷ முழுவதும் வேலை இருக்கும். பெரியப்பன் மகன் இராமனைப் பார். அவன் வண்டி ஓட்டி, வாரத்தில் இரண்டு மூன்று ரூபாய்க்குக் குறை யாமல் சம்பாதிக்கிறான். சில சமயம் நாலு ரூபாயும் கிடைக்கிறது. உன் நெய்ப் பணத்துடன் இன்னும் கொஞ்சம் போட்டு ஒரு வண்டி வாங்கிவிட்டால் என்ன? வீரன் உடுமலைப் பேட்டைக்குக் குடி போய் விடுகிறானாம். கடன் தீர்ப்பதற்காக நிலத்தை விற் கிறான். அவனுடைய வண்டியை மலிவாக வாங்கிவிடலாம்…

பார்வதி :- வேண்டாம், வேண்டாம். வீரன் வண்டி நமக்கென்னத்திற்கு? அந்த ஆய்வராத வண்டி நமக்கு வேண்டாம். அத்துடன் துரதிஷ்டம் கூடவரும்.மேலும், கடன் வாங்கியாவது வண்டி வாங்காவிட்டால் என்ன? நமக்கு இப்போது என்ன குறை?”

கறுப்பன் : -‘உளறாதே / குடிகாரன், கள்ளைக் குடித்து அவன் கெட்டுப் போனான். வண்டியில் துரதிஷ்டம் என்ன வந்தது? நல்ல கெட்டியான வண்டி இருபது ரூபாய் கடன் வாங்கினால் கெட்டா போய்விடு வோம்? நம்மால் திருப்பிக் கொடுக்க முடியாமல் போகாது.”

“என் பணத்தைப் போட்டுக் காதுப்பொன் பண் ணிக்கொள்ள வேண்டுமென்று இருந்தேன்’ என்றாள் பார்வதி.

“இந்த அசட்டுத்தனந்தானே வேண்டாமென் கிறேன் : இராஜாத்தி போலிருக்கிறாய்; நகை போட் டுக் கொண்டால் உன் அழகைக் கெடுத்துக் கொள் வாய்.

கறுப்பன் கூறியது உண்மைதான். நகைகள் – அதிலும் காதைத் தோள் வரையில் இழுக்கும் இந்த நகைகள் – போடுவதால் அழகு குறையும் என்பதில் சந்தேகமில்லை.

“பெண் பிள்ளைகள் எதற்காவது ஆசைப்பட் டால் நீங்கள் இப்படித்தான் சொல்வீர்கள். சீலை கட் டும் பெண் பிள்ளைக்கு என்ன தெரியும்? மாமாவை யோசனை கேட்டுக்கொண்டு உங்களுக்கு எது நல்ல தென்று தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள். என் னைக் கேட்பானேன்? என்றாள் பார்வதி.

கறுப்பன் வண்டி வாங்க வேண்டுமென்று பிடி வாதமாயிருந்தபடியால் அவன் தகப்பன் அதற்கு மாறு சொல்லவில்லை. ஒருவாரம் ஆவதற்குள் வண்டி வாங்கி யாயிற்று. அதற்குக் கையிலிருந்த தொகை போகப் பாக்கி நாற்பது ரூபாய், மிட்டாதார்க் கவுண்டனிட மிருந்து கறுப்பன் கடன் வாங்கினான்.

***

கள்

கறுப்பன் அடிக்கடி வாடகைக்கு வண்டி ஓட்டிக் கொண்டு போவான். தூரத்து வாடகையின் மேல் போனால் ஒரு பகல் ஓர் இரவு முழுதும். சில சமயம் அதற்கு மேலுங்கூட. ஊருக்குத் திரும்பிவரமாட் டான். அவனுடைய பெரியப்பன் மகன் இராமனும் அவனுடன் வண்டி ஓட்டிக்கொண்டு போவது வழக் கம். ஒரு வருஷம் ஆவதற்குள் இவன் கறுப்பனைக் கள் குடிக்கப் பழக்கிவிட்டான். அப்புறம், வண்டி ஓட்டிக் கொண்டு போனால் கள்ளுக்கடை நுழையாமல் வருவ தில்லையென்று ஏற்பட்டது. வண்டியில் வருமானம் நாளுக்கு நாள் குறைந்தது. மாடுகளுக்கும் நல்ல தீனி கிடைக்கவில்லை. ஒருநாள் கறுப்பன் கொஞ்சம் போதையோடு வீட்டுக்கு வந்ததைக் கண்டு பார்வதி திடுக்கிட்டுப் போனாள். அதுவரையில் அவளுக்குச் சங்கதி தெரியாது.

“ஐயோ! குடியைக் கெடுத்து விட்டாயே?” என்று அலறினாள்.

“வாயை மூடு ! உன் பணத்தை எவன் திருடிவிட்டான்?” என்றான் கறுப்பன்.

பார்வதிக்குக் கோபம் பொங்கிற்று. “நீ கள்ளு குடித்துவிட்டு வந்திருக்கிறாய்” என்றாள்.

“ஆமாம்! அப்படித்தான். உங்கப்பன் வீட்டுப் பணமில்லையே? யார் என்னைக் கேட்கிறது?” என்றான் கறுப்பன்.

“வீட்டில் நுழையாதே. பெரிய வீட்டுக்குப் போ. நான் இன்றைக்குச் சமைக்கவில்லை” என்றாள் பார்வதி. அருவருப்பினால் அவள் முகம் விகாரமடைந்தது.

“உன் முகத்தைச் சுடு. உன் நாற்றச்சோறில்லா விட்டால் செத்தா போய்விடுவேன்?” என்று சொல்லிக் கறுப்பன் அவளை அடிக்கப்போனான்.

***

இதன்பிறகு அடிக்கடி இப்படி நேரலாயிற்று. சில சமயம் கறுப்பன் பார்வதியை நன்றாய் அடித்தும் விடு வான். பார்வதி குழந்தையை எடுத்துக்கொண்டு (இதற்குள் அவளுக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தது) தன் கொழுந்தியின் வீட்டுக்குப் போவாள். அங்கே எல்லோரும் கூடி யோசனை செய்வார்கள். நிலைமை வரவர மோசமாகி வந்தது. மாடுகள் கிழமாகி பாரவண்டி இழுக்கத் தகுதியற்றவையாயின். கறுப் பன் அவற்றைச் சந்தையில் நஷ்டத்துக்கு விற்றான். புதிய ஜதை வாங்குவதற்குக் கையில் பணம் இல்லை. இனிமேல் கள்ளுக்கடைப் பக்கமே போகிறதில்லை யென்று பார்வதியிடம் சத்தியம் செய்து கொடுத்து. பால் தயிர் விற்றும். நூல் நூற்றும் அவள் சேர்த்து வைத்திருந்த பணத்தைப் பிடுங்கிக்கொண்டான். பிறகு புருஷன் இறந்த தன் அக்காளிடமிருந்தும் கொஞ்சம் கடன் வாங்கிப் போட்டுப் புதிய ஜதை மாடு வாங்கினான்.

மூன்று மாதங்கள் சென்றன. மிட்டாதார் தமக் குச் சேர வேண்டிய பணத்திற்கு ஆள் அனுப்பினார். வாய்தா கொடுக்க வேண்டுமென்று கறுப்பன் கெஞ்சி னான். ஒருமுறை, இரண்டு முறை, மூன்று முறையும் வாய்தா கொடுக்கப்பட்டது. ஆனால், நாலாவது முறை யில் மிட்டாதாரருடைய ஆள்கள் வந்து காளை மாடு களில் ஒன்றைப் பிடித்துக்கொண்டு போய்விட்டார் கள். மிட்டாதாரிடம் ஓடினான் கறுப்பன். ஒருமாதத் தவணை கொடுக்கும்படி காலில் விமுந்தான்.

“ஒரு நாள் கூடத் தரமாட்டேன்; செருப்பால் அடி, குடிகாரப் பயலே! வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கவில்லை. உன்னை யாரடா புது மாடு வாங்கச் சொன்னது?” என்றார் மிட்டாதார்.

“அப்படிச் சொல்லக்கூடாது. எஜமான் எங்களை அப்பனைப்போல் காப்பாற்றி வந்திருக்கிறீர்கள். ஒரே ஒரு வாய்தா கொடுங்கள். கட்டாயம் பணம் கொண்டு வந்து கட்டி விடுகிறேன்.”

“அதெல்லாம் வீண். இனி ஒரு நிமிஷங்கூடப் பொறுக்க முடியாது. புதன்கிழமைச் சந்தைக்கு உன் மாட்டை அனுப்பப் போகிறேன்”.

கறுப்பன்.”ஐயோ சாமி ! அப்படிச் செய்தால் என் குடி கெட்டுவிடும். வேண்டாம் அப்பா” என்று சொல்லித் தன் மாட்டண்டை போனான்.

“துரத்து வெளியே ! மாட்டை விடாதே. போய்ப் பணம் கொண்டு வா. இல்லாவிட்டால் மாட்டைக் கண்டிப்பாய்ப் புதன்கிழமைச் சந்தையில் விற்றுப் போடுவேன்” என்றார் மிட்டாதார்.

“வேண்டாம் நான் அப்படிச் சுத்தக் காவடியல்ல. கொஞ்சம் தவணை கொடுத்தால் உங்கள் பணம் போகாது” என்று மன்றாடினான் கறுப்பன்.

“முடியவே முடியாது” என்று மிட்டாதார் கண்டிப்பாய்ச் சொன்னார்.

“வட்டி கொடுத்துவிடுகிறேன். வட்டியுடன் வாங்கிக்கொள்ளுங்கள்” என்றான் கறுப்பன்.

“செருப்பாலடி, நாயே ! வட்டியாம். வட்டி இவன் எனக்கு வட்டி கொடுக்கப்போகிறானாம்! கந்துத் துலுக்கனிடம் போய்க் கடன் வாங்கி வந்து தீர்த்து விட்டு மறுவேலை பார். நாளைக்குப் பணம் வராவிட் டால் மாட்டை வந்த விலைக்குச் சந்தையில் விற்று விடச் செய்வேன்” என்று மிட்டாதார் கோபமாய்ச் சொல்லி உள்ளே போய்விட்டார் .

“வேறு வழியில்லை, கறுப்பா காதர் சாகிபினிடம் போய்த்தான் ஆகவேண்டும். அவன் தான் உனக்குப் பணங்கொடுத்து உதவக்கூடும்”. என்றார் மிட்டா குமாஸ்தா.

***

கடன்

கறுப்பன் தன் தந்தையிடம் போய், அண்ணனைக் கடன் கொடுக்கச் சொல்லும்படி மன்றாடினான். அண்ணனும் கிழவன் சொற்படி தம்பிக்கு உதவி செய்ய விரும்பினான். ஆனால், அவன் மனைவி அதற்குச் சம்மதிக்கவில்லை.

“அவனுக்குப் பணங் கொடுத்தால் திரும்பியே வராது. கந்து சாயபினிடம் போய் வாங்கிக்கொள்ளட் டுமே? நம்முடைய வயிற்றுப்பாடே கஷ்டமாயிருக்கிறது. இந்த வருஷம் மழை பெய்யுமோ பெய்யாதோ? அடுத்த வருஷம் இந்தக் காலத்தில் கஞ்சிக்குக் கம்பு இல்லாவிட்டால் யார் கொடுப்பார்கள்?..” என்று அவள் தன் புருஷனிடம் சொன்னாள்.

கடைசியாகக் கறுப்பன் காதர் கானிடமே சென் றான். அவ்வூரில் மிட்டாதார் உள்பட எல்லாருடைய வரவு செலவும் காதர்கானுக்குத் தெரியும்.

“உனக்குத் தெரியாது, அப்பனே! மிட்டாதா ருக்கு இப்போது தொல்லை அதிகம். அவர் கூட என்னைப் பணங் கேட்டிருக்கிறார்” என்றான் காதர்கான்.

கறுப்பன் : – பெரிய மனிதர்களுடைய தொல்லை கள் எப்படியாவது தீர்ந்துவிடும். என்னுடைய மாடு போய்விட்டால் நான் எப்படிப் பிழைப்பு நடத்துவது? இந்த சமயம் நீங்கள் தான் எனக்கு உதவ வேண்டும்.

காதர்கான் : – அதெப்படி முடியும்? கையிலிருக்கும் பணமெல்லாம் மிட்டாதாருக்குக் கொடுப்பதாய்ச் சொல்லிவிட்டேனே?

கறுப்பன் : – ஐயோ. அப்படிச் சொல்ல வேண் டாம் சாயபு / நான் கெட்டே போய்விடுவேன். ஏழைக்கு உதவி செய்ய வேண்டாமா? மிட்டாதாரைப் பற்றி என்னிடம் ஏன் சொல்லுகிறீர்கள்?

காதர்கான் :- உண்மைதான் : ஏழைக்கு உதவி செய்ய வேண்டியதுதான். ஆனால், அவருக்கு வாக்குக் கொடுத்தாய் விட்டதே என்று பார்க்கிறேன்.

இவ்வாறு நீண்ட நேரம் பேச்சும் வேண்டுதலும் நடந்த பிறகு. சாயபு சம்மதித்தான். கறுப்பன் 45 ரூபாய் பெற்றுக்கொண்டு, 60 ரூபாய்க்கு பத்திரம் எழுதிக் கொடுத்தான் மாதம் ஐந்து ரூபாயாகப் பன் னிரண்டு மாதத்தில் செலுத்திவிட வேண்டுமென்று ஒப்பந்தம். வட்டி கிடையாது. ஆனால், எந்த மாதமா வது பணங் கட்டத் தவறினால் ஒரு ரூபாய் அபராதம்.

‘கறுப்பா ! உன்னை நம்பிப் பணங் கொடுத்தேன். நன்றாக உழைத்து வேலை செய்கிறாய், பணம் சம்பாதிக் கிறாய். ஒழுங்காகத் தவணை தவறாமல் கொடுத்துவா . குடிப்பதை விட்டுவிடு. நீ நல்ல மனிதன். மனைவி. குழந்தை இருக்கிறார்கள். இனியும் குழந்தைகள் பிறக் கும். குடித்தாயோ. அடியோடு அழிந்து போவாய் என்று காதர்கான் இதோபதேசம் செய்தான்.

கறுப்பன் :- உண்மை . எஜமானே ! அந்தச் சனி யனை இனிமேல் தொடுவதில்லை. நான் பட்டதெல்லாம் போதும். சமயத்திற்கு நீங்கள் உதவி செய்தீர்கள். இந்த நன்றியை எப்போதும் மறக்கமாட்டேன்.

கடனைத் தீர்த்துவிட்டுக் கறுப்பன் மாட்டை ஓட் டிக்கொண்டு வந்தான். பாக்கிப் பணத்தைப் பார்வதி யின் கையில் கொடுத்தான்,

‘அடியே இங்கே பார். இனிமேல், கள், சாராயம் தொடுவதில்லை. சத்தியம் செய்திருக்கிறேன். எனக் குப் பணம் எதுவும் வேண்டாம். அதை நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள். சம்பாதிப்பது எல் லாவற்றையும் உன்னிடமே கொண்டுவந்து கொடுக்கப் போகிறேன்” என்றான்.

பார்வதி நல்ல காலம் பிறந்துவிட்டதென்று எண்ணினாள். ஆனந்தமடைந்தாள். தேகத்தில் புதிய பலம் தோன்றிற்று. முன்னைவிட உற்சாகத்துடன் வேலை செய்யத் தொடங்கினாள்.

***

கூலி வேலை

காட்டில் இப்போது வேலை கிடையாது. சும்மா இருக்கப் பார்வதிக்கு முடியவில்லை . ” ஏதாவது வேலை பார்க்க வேண்டும். புருஷன் கடனாளியாயிருக்கும் போது நான் எப்படிச் சுமமா இருக்கலாம்? என்று எண்ணி னாள். காதர்கான் தன் வீட்டிற்குச் சேர்ந்தாற்போல் இன்னொரு வீடு கட்டத் தொடங்கியிருந்தான். அங்கே கொத்து வேலை பலமாக நடந்து கொண்டிருந்தது. இன்னும் மூன்று, நாலு பெண்களுடன் சேர்ந்து பார் வதி அங்கே கூலிக்கு வேலை செய்ய ஆரம்பித்தாள்.

அவள் அதிகாலையில் எழுந்து வீடு பெருக்கிச் சுத் தம் செய்வாள். பிறகு பால் கறந்துவிட்டு மோர் கடை வாள். உடனே மோரை எடுத்துக்கொண்டு ஊருக் குள் போவாள். தன்னிடம் மோர் வாங்கும் வீட் டுக்காரர்கள் தன்னைத் தாமதப்படுத்தாமல் விரை வில் அனுப்பிவைக்குமாறு கெஞ்சிக் கேட்டுக் கொள்வாள். அவர்களும் அப்படியே செய்வார்கள். பிறகு அவள் வீடு திரும்பிக் கூழ் குடித்துவிட்டுக் குழந்தைக்குப் பால் கொடுப்பாள். அதன்பின் குழந்தை யைக் கொழுந்தி வீட்டில் விட்டுவிட்டு, வீடு கட்டும் வேலைக்குப் போவாள். மத்தியான்னம் அவசர அவசர மாய் வந்து பழங்கூழ் குடித்துவிட்டுக் குழந்தைக்குப் பால் கொடுத்துத் திரும்பி ஓடுவதற்கே சாவகாசம் இருக்கும். சூரியன் அஸ்தமித்த பிறகுதான் கொத்து மேஸ்திரி வேலையிலிருந்து விடுவான். இருட்டும் சமயத்தில் வீட்டுக்கு வந்து சமைப்பாள். இவ்வள வையும் அவள் உற்சாகமாகச் செய்து வந்தாள். வேலை கஷ்டந்தான். ஆனால், தினத்துக்கு இரண்டணா கூலி கிடைத்தது. கஷ்ட காலத்தில் நாள் ஒன்றுக்கு இரண்டணா கிடைப்பது அதிகமல்லவா?

கணவன் இனிக் கள் குடிக்கமாட்டான். புது மனிதனாகிவிட்டான். என்னும் நம்பிக்கையே பார் வதிக்கு இவ்வளவு உற்சாகம் அளித்தது. கறுப்பனும் இரண்டொரு மாதம் கள்ளுக்கடைக்குப் போகாம லிருந்தான். அதற்குப் பின் அவன் பழைய கறுப்பனே யானான். சம்பாதிக்கும் பணமெல்லாம் மறுபடியும் வந்த வழி தெரியாமல் போக ஆரம்பித்தது. பார்வதி யிடம் ஒரு தம்பிடி கூட வந்து சேருவதில்லை. இரண்டு மூன்று நாள் வெளியிலேயே காலங்கழித்துவிட்டு மாட்டுக்குக் கொஞ்சம் தீனி வாங்கிக்கொண்டு வந்து சேர்வான். கொஞ்சப் பணத்துக்கு ஏதாவது பொய் சொல்வான். சில நாளைக்குப்பின் இப்படி ஏமாற்ற முயல்வதையும் விட்டுவிட்டான். பார்வதியும் கேட் பதை யொழித்தாள். ஆனால், அவள் மட்டும் வீட்டிலும் கூலிக்கும் இராப்பகலாய் உழைத்து வந்தாள்.

ஒருநாள் காதர்கான் வந்து தவணைப் பணத்திற் காகச் சண்டையிட்டான். வார்த்தை தடித்தது. மேஸ்திரியின் கீழ் வேலை பார்த்தவளாகையால் கடுமையான மொழிகள் கேட்பது பார்வதிக்கு வழக்கமாய்த்தான் போயிருந்தது. ஆனால். அவள் இதுவரை கேட்டறி யாத ஆபாச வசைச்சொற்களை அன்று கேட்டாள். உள்ளே சென்று பானையைத் திறந்து காசுகாசாகச் சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வந்து அவன் முன் எறிந்தாள். கறுப்பன் அவ்வப்போது சுறண்டிக்கொண்டு போயும் அவ்வளவு பணம் மிச்சம் பிடித்து வைத்திருந்தாள்.

பார்வதி அன்று முழுதும் அழுதுகொண்டிருந் தாள். மறுநாள் அவளுக்கு உடம்பு சரியில்லாதிருந்தும் வழக்கம்போல் வேலைக்குப் போனாள். கடன்கார சாயபு வின் நாணமற்ற கொடுமொழிகளை அவளால் மறக்க முடியவில்லை. முன்னெல்லாம் ஆண் பெண் என்கிற நினைவே இல்லாமல் தைரியமும் உற்சாகமும் உள்ள அவள், இப்போது மாறிவிட்டாள். அவளுடன் வேலை செய்த ஆண்மக்களின் பேச்சுக்களைக் கேட்டு இப்போது அவள் நடுங்கினாள். பயம் அதிகரிக்கவே துஷ்டர்க ளுடைய காமக் கண்களின் வேட்டையும் அதிகரித்தது. காதர்கானுடைய மகன், வீடு கட்டும் வேலையை மேற் பார்வை செய்து வந்தான். அவன் கண்ணும் பேச்சும் சில சமயம் அவளுக்குத் தொந்தரவாக இருந்தன.

அவள் கூலி வேலை செய்ய ஆரம்பித்ததிலிருந்து குழந்தையைச் சரியாகக் கவனிக்க முடியவில்லை. பாவம் ! வரவர மெலிந்து வந்த அந்தக் குழந்தைக்கு ஒருநாள் சுரமும் இருமலும் வந்தது. கிராமங்களில் ஏழைகளுக்கு மருந்தேது. மாயமேது? ஒன்றிரண்டு சூடுபோட்டுப் பார்த்தார்கள். ஒருவாரம். பார்க்கச் சகியாத வேதனை அனுபவித்துவிட்டு, பிறகு அது கண்ணை மூடிற்று. கறுப்பன் பெண்பிள்ளை போல் விம்மி விம்மி அழுதான். ‘அழாதே. அப்பா ! ஆண்ட வன் கொடுத்தான். ஆண்டவன் எடுத்துக்கொண்டான். நாம் என்ன செய்யலாம்? என்று அவனுடைய தகப்பன் கிழவன், தேறுதல் கூறினான்.

“மாமா ! தெய்வம் என்னை ஏன் இப்படிப் படுத்துகிறது! நான் யாருக்கும் எவ்விதத் தீங்கும் செய்ததில்லையே?” என்று பார்வதி கதறினாள்.

கிழவன் : – அசடே. அழாதே. உனக்கு வயதாகி விட்டதா , என்ன? இன்னும் ஏழெட்டுக் குழந்தை பெறுவதற்குக் காலமிருக்கிறது. காட்டில் போடும் விதைகள் எல்லாம் முளைத்துக் கதிர்விடுவதுண்டா ? அதற்காக நாம் துக்கப்படுகிறோமா?

பார்வதி :- இனிமேல் எனக்குக் குழந்தை வேறு வேண்டுமா? பூமியில் சுகம் துக்கம் எல்லாம் அனு பவித்து விட்டேன். ஆண்டவன் என்னைக் கொண்டு போக வேண்டும். அவ்வளவுதான்.

கிழவன் சிரித்தான். ‘உன் புருஷனுக்குப் புத்தி சொல்லிக் கையிலுள்ள அரைக்காசு ஒருகாசைக் கள்ளுக்கடையில் தொலைத்துவிடாமல் பார்த்துக்கொள். இந்தத் துக்கத்தை மறந்து இன்னும் குழந்தைகள் பெற்றுச் சந்தோஷமா யிருப்பாய். மாரியாயி உன்னைக் கைவிடமாட்டாள் என்றான்.

‘அந்தப் பாழும் விஷத்தை இனி நான் தொடுவ தில்லை. தொட்டால் நாசமாய்ப் போவேன். என் தலைமேல் ஆணை’ என்று கறுப்பன் சபதம் செய்தான்.

***

மோசம்

பார்வதிக்கு இன்னும் நல்ல காலம் வரவில்லை. அவளுடைய துன்பங்கள் இன்னும் ஒழிந்தபாடில்லை. அடுத்த புதன்கிழமையன்று இராமாபுரம் சாராயக் கடை வழியாய்ச் சென்றுகொண்டிருந்தபோது கறுப் பன் தான் செய்து கொடுத்த சத்தியத்தை மறந்து விட்டான். திருப்பூருக்கு மூட்டைகள் ஏற்றிக்கொண்டு போன கறுப்பன் மற்ற வண்டிக்காரர்களுடன் திரும்பி வந்துகொண்டிருந்தபோது சாராயக்கடை வாயி லண்டை வந்ததும் வண்டியை நிறுத்தி, “அடே யாரடா தண்ணி போடப் போகிறவன்? எனக்கு வேண்டாமப்பா, அந்தச் சனியனுக்கு நான் போக வில்லை” என்றான்.

“வேண்டாவிட்டால் காசை இறுக்கி முடிந்து கொண்டு போயேன். ஏன் கத்துகிறாய்?” என்று சொல் லிக்கொண்டே வேறொரு வண்டிக்காரன் வண்டியி லிருந்து குதித்துக் கடைக்குள் நுழைந்தான். கறுப்பன் சற்றுத் தயங்கி நின்றுவிட்டுப் பிறகு தானும் சென் றான். உள்ளே நுழையும் போது. “இதுதான் கடைசித் தடவை” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு போனான்.

அடுத்த சந்தையன்றும் இதே கதைதான். “ஏதோ கையில் காசு இருக்கும் போது ஏன் கவலையற்று உற்சாகமாய் இருக்கக் கூடாது?” என்று கூட வந்தவனிடம் அவன் சொன்னான்.

“அது கெட்டது தள்ளு : பணம் என்ன கூடப் பிறந்ததா? நாம் பாடுபட்டுச் சம்பாதிக்கும் காசை நம் இஷ்டப்படி செலவழிப்பதற்கு யார் தடை செய்வது?” என்றான் அந்தத் தோழன்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த மற்றொருவன், “சரியான பேச்சு. இந்த உலகம் நிற்பதில்லை. எல்லாம் பொய். இன்றைக் கிருப்பவரை நாளைக்குக் காணோம். ஆயிரம் வருஷம் வாழப்போகிறவர் யார்? கண்ணை மூடிவிட்டால் அப்புறம் அந்தப் பணம் உன்னுடையதா என்னுடையதா?” என்று வேதாந்தம் பேசினான்.

“இல்லவே இல்லை. உன்னுடையதுமல்ல. என்னுடையது மல்ல. எல்லாம் இந்த சாராயக் கடைக் காரனதுதான்!” என்று நாலாவது வண்டிக்காரன் கத்தினான். இதைக் கேட்டதும் எல்லோரும் கொல் லென்று சிரித்தார்கள்.

“அட போடா மூடன்களா? எல்லோரும் ரொம்பப் படித்தவர்கள் மாதிரி பேசுகிறீர்கள். இந்தச் சாராயம் உள்ளே போகும்போது எப்படித் தகதக் வென்று போகிறது” என்றான் மற்றொருவன்.

“அடே இந்தச் செட்டிமார்களை உதைக்க வேண்டுமடா! இந்தத் திருட்டுப் பசங்கள் நம்மை நன்றாய் ஏமாற்றிவிடுகிறார்கள். வாடகை எல்லாம் குறைத்து விட்டார்கள்” என்றான் கறுப்பன்.

இம்மாதிரி இருட்டுகிற வரையில் பேசிக்கொண் டிருந்துவிட்டு, பிறகு வண்டியண்டை போவார்கள்.

காதர்கான் தவணைப் பணத்துக்கு வரும் நாளாகிவிட்டது. அவன் வருவதற்குள் பணத்தைப் போய்க் கொடுத்துவிட்டு வரும்படி பார்வதி கறுப்பனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

‘.. அவன் கெட்டான். அந்தப் பயல் வரட்டும், ஏதாவது மிஞ்சி அக்கிரமமாய்ப் பேசினால் மண்டையை உடைத்துவிடுவேன்’ என்றான் கறுப்பன்.

ஆனால், வேறு வேலை அதிகமாயிருந்ததோ என்னவோ , சாயபு பல நாளைக்கு வரவேயில்லை. கறுப்பனும் அதை மறந்துவிட்டான்.

ஒருநாள் காலை. காதர்கான் மகன் இஸ்மேல் வந் தான். ஆனால் பணங்கேட்பதற்குப் பதிலாக, “இராமா புரத்துக்கு மிளகாய் மூட்டை ஏற்றிச் செல்லுகி றாயா?’ என்று கேட்டான்.

“குமரக் கவுண்டனுக்கு வைக்கோல் ஏற்றிப் போக வேண்டும். ஒரு வாரத்திற்கு முன்பே சொல்லியிருக்கிறான்” என்றான் கறுப்பன்.

“அதெல்லாம் முடியாது கறுப்பா . குமரக் கவுண் டன் வைக்கோலுக்கு அவசரமில்லை. எங்கள் மூட்டை நீ கொண்டுதான் போகவேண்டும். இன்று மூட்டை அனுப்பாவிட்டால் எங்களுக்கு நல்ல கிராக்கி போய் விடும்” என்றான் இஸ்மேல்கான்.

கறுப்பன் கடைசியில் சம்மதித்தான். சாயபு தவ ணைப் பணம் கேட்கக்கூட மறந்திருக்கும் போது, எப்படி அவன் சொல்வதை மறுப்பது?

சாயங்காலம், பார்வதி தனியாக வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தபோது இஸ்மேல்கான் மறுபடியும் வந்தான். வீட்டுக்கு வெளியில் நின்று கொண்டே “கறுப்பன் வந்துவிட்டானா?” என்று கேட்டான்

“இன்னும் வரவில்லை” என்றாள் பார்வதி.

“ஆமாம், இவ்வளவு சீக்கிரம் வந்துவிடுவானா? வழியில் சாராயக்கடையல்லவா இருக்கிறது?” என்று சொல்லிக்கொண்டே இஸ்மேல் உள்ளே நுழைந்தான்.

“ஆமாம், என்னைப்போன்ற ஏழைப் பெண்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்ள வேண்டுமல்லவா? அதற்காகத்தான் சாராயக்கடை இருக்கிறது” என்றாள் பார்வதி.

அவள் சொல்லாமலே இஸ்மேல் உட்கார்ந்தான். கறுப்பன் வரும்வரையில் அவன் காத்திருப்பான் போல் இருக்கிறதென்றெண்ணிப் பார்வதி தன் வேலையைப் பார்த்தாள்.

இஸ்மேல் பேச்சு வளர்க்கத் தொடங்கினான். “இருக்கட்டும், உன் புருஷனிடம் உனக்குச் சலித்துப் போகவில்லையா?” என்று கேட்டான்.

“அதெப்படி ஐயா? கட்டிய புருஷனிடம் நன் மையோ, தீமையோ, அனுபவிக்கத்தானே வேண்டும்?” என்று பார்வதி திரும்பிப் பாராமல் கூறினாள்.

“உண்மைதான். என்ன இருந்தாலும் புருஷன். கட்டிய புருஷனை விட்டுவிட முடியுமா?” என்றான் இஸ்மேல்.

சற்றுப் பொறுத்து, “பாவம். உன்னைப்போன்ற லட்சணமான பெண் ஒரு குடிகாரனைக் கட்டிக் கொண்டு கஷ்டப்பட வேண்டியிருக்கிறதே! என்ன துர்ப்பாக்கியம்?” என்று இரக்கமாகக் கூறினான்.

பார்வதி பதில் சொல்லவில்லை. பின்னர் இஸ்மேல் அவளுடைய கஷ்டங்களைப்பற்றி விசாரித்தான். இப்படியே பேச்சு வளர்ந்துகொண்டு போயிற்று. கொஞ்ச நேரம் கழித்து, இஸ்மேல், கறுப்பன் வரவுக்குக் காத்திராமலே எழுந்து போய்விட்டான்.

மறுநாளும் இஸ்மேல் வந்து கறுப்பனுக்கு ஏதோ வேலை கொடுத்து அனுப்பினான். அன்று மாலையும் முன் போல் வந்து சேர்ந்தான். வரும்போது கொஞ்சம் பனை வெல்லம் கொண்டுவந்து பார்வதியிடம் கட்டாயப் படுத்திக் கொடுத்தான். அவ்வெல்லம் ஒரு மூப்பன் தனக்குக் கொடுத்ததென்றும், காசு கொடுத்து வாங்கியதல்லவென்றும் கூறினான்.

“உன்னைப் பார்க்கும்போது ஏனோ எனக்கு ஒரு விதச் சந்தோஷம் உண்டாகிறது” என்றான் இஸமேல்.

“இதெல்லாம் என்னத்திற்கோ தெரியவில்லையே” என்று பார்வதி தனக்குள் பயந்தாள். “நான் கிட்ட நெருங்கும் போது நீ ஏன் நடுங்குகிறாய்? கடன் பணத்திற்காக உன்னைத் தொந்தரவு செய்வேனென்று பயப்படுகிறாயா? நீ மட்டும் கொஞ்சம் சந்தோஷமாய்ப் பேசினால் எனக்குப் பணம் இலட்சியமே இல்லை. பணத்துக்கென்ன. எவ்வளவோ கிடக்கிறது”. என்றான் இஸ்மேல்.

இந்தக் கதையை வளர்த்துவானேன்? பார்வதி பலநாள் உறுதியாக இருந்தாள்; அவன் வலையில் விழாமலிருந்தாள்; கடைசியில் ஏமாந்து போனாள். இரக்கமற்ற துஷ்டனுடைய கொடிய பார்வைக்கு ஆளான ஒரு பெண்பிள்ளை, கஞ்சிக்குக் கஷ்டப்பட்டுக் கொண்டு ஆதரவற்றிருப்பவளானால், அவன் வெற்றி பெறுவதற்குக் கேட்பானேன்? பார்வதி தன் கற்பை இழந்தாள்.

***

கோபம்

கீரம்பூர் கள்ளுக்கடையிலே உள்ளே போகாத சாதிகளுக்குக்கள் ஊற்றுவதற்காக ஏற்பட்ட துவாரத் துக்கருகில் வெளியே பறையரும் சக்கிலியரும் ஏகக்கூட் டமாய் நின்று இரைச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். கடையின் உட்புறத்தை நரகக்குழி யென்று கூறலாம். எச்சிலும் ஆபாசமும் அழுக்கும் அங்கே நிறைந்திருந் தன. ஈக்கள் ஏகமாய் மொய்த்தன. பழைய கள்ளின் நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. ஜனங்கள் அங்கங்கே கூட்டங் கூட்டமாய்க் கூச்சலிட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.

“அடே பழனி! இன்னொரு முறை அப்படிச் சொன்னால் பல்லைத் தட்டி விடுவேன் ” என்றான் கறுப்பன்.

பழனி : – பல்லை உடைத்து விடுவாயா? அடே அப்பா ! இவன் சூரத்தனத்தைப் பாருங்கடா ! கட் டிய பெண்டாட்டியை நேராய் வைக்க முடியாதவனுக்கு வீறாப்பில் மட்டும் குறைவில்லை /

இது கேட்டதும் கறுப்பன் தன் மொந்தையை அவன் முகத்தின் மீது வீசி எறிந்தான். அடிபட்ட வன் மூக்கிலிருந்து இரத்தம் சொட்டிற்று.

“அடா முட்டாள்களா ! கள்ளைக் கீழே கொட்டு கிறீர்களே ! மோசக்காரப் பெண்களுக்காக நல்ல அருமையான கள்ளை. யாராவது வீணாக்குவார்களா? பெண்களை நம்பக்கூடாது. அப்பா ! நம்பக்கூடாது என்று இடையில் ஒருவன் கத்தினான்.

“ஐயோ! பழனி செத்துப்போனான்” என்று இன்னொருவன் கூவிக்கொண்டே போய், அடிபட்ட வன் முகத்தில் வழிந்த இரத்தத்தைத் துடைத்தான். பழனிக்கு அதிகக் காயம் படவில்லை. அவன் கோபத் துடன் எழுந்து ஒரு செங்கல்லை எடுத்துக் கறுப்பன் மீது வீசி எறிந்தான். கறுப்பன். தலையை வளைந்து கொடுத்து அடிபடாமல் தப்பினான்.

கடைக்குள் சண்டை போடக்கூடாதென்று கடைக்காரன் கூச்சல் போட்டான்.

கறுப்பன் வெளியே ஓடினான். அவனைப் பிடிக்கப்போன பழனி வாயிற்படி தடுக்கிக் கீழே விழுந் தான். கறுப்பன் வண்டியிலேஹி உரத்த குரலில் திட்டிக்கொண்டே வண்டியை ஓட்டினான்.

வழக்கத்தைவிடச் சீக்கிரமாகவே கறுப்பன் அன்று வீடுபோய்ச் சேர்ந்தான். வீடு உட்புறம் தாளிடப்பட்டிருந்தது.

“ஏய்! கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு உள்ளே என்ன செய்கிறாய்? எத்தனை நேரம் நான் காத்திருப்பது ? கதவைத் திற. மாட்டுக்குத் தண்ணீர் காட்டு” என்று கறுப்பன் கத்தினான்.

உள்ளே காலடிச் சத்தம் கேட்டது. கதவு திறக்கச் சிறிது தாமதம் ஆயிற்று. கறுப்பன் கத்திக் கொண்டேயிருந்தான்.

சிறிது நேரங் கழித்துப் பார்வதி கதவைத் திறந்து வெளியே வந்து கறுப்பன் முன்பு நின்றுகொண்டு. “கொஞ்சம் இங்கே வந்து எருமையைப் பார். அதற்கு என்னமோ தெரியவில்லை. உதைக்கிறது. பால் கறக்கமாட்டேனென்கிறது” என்றாள்.

“எருமை நாசமாய்ப் போகட்டும். எனக்குத் தாகமாயிருக்கிறது. கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா” என்று சொல்லிக்கொண்டே கறுப்பன் வீட்டினுள்ளே தடுமாறி நுழைந்தான்.

உள்ளே இருந்த இஸ்மேல், சுவர் ஓரமாய் வெளியே நழுவிவிட முயன்றான்.

“ஓகோ! வீட்டிற்குள்ளே துலுக்கப்பயல் என்ன செய்கிறான்? அடி, தேவடியாள் மகளே!” என்று கத்திக்கொண்டு கறுப்பன் பக்கத்தில் கிடந்த மண்வெட்டியை எடுத்துப் பார்வதிமேல் வீசி எறிந்தான்.

பிறகு ஒரு வெட்டரிவாளை எடுத்து. ஓடிக் கொண்டிருந்த இஸ்மேல்மீது பலங்கொண்ட மட்டும் ஓங்கி வெட்டினான். இஸ்மேல் அந்த அடியில் கீழே விழுந்துவிட்டான். அவன் மண்டையிலிருந்து இரத் தம் ஆறாக ஓடியது. பிறகு கறுப்பன் பார்வதி மீது பாய்ந்தான். அவள் மைத்துனன் வீட்டை நோக்கி ஓடினாள். கறுப்பன் கொஞ்ச தூரம் அவளைத் தொடர்ந்து போனான். பிறகு இந்தச் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்து ஜனங்கள் வருவது கண்டு திரும்பினான். அப்போது கீழே விழுந்த இஸ்மேல் எழுந்திருக்க முயன்று கொண்டிருந்ததைப் பார்த்து ஒரு பெரிய கூச்சல் போட்டுக்கொண்டு அவனை வெட்டிச் சின்னாபின்னமாக்குவதற்காக ஓடிவந்தான். ஆனால். இதற்குள் அங்கு வந்து கூடிவிட்ட ஜனங்கள் அவனைத் தடுத்து நிறுத்திக் கையிலிருந்த அரிவாளைப் பிடுங்கிக் கொண்டார்கள்.

***

நரகம்

இராமாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் கறுப்பனும் பார்வதியும் தனித்தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள்.

போலீஸ் சேவகர்கள் அனைவரும் அவள் இருந்த அறைக்கு வெளியே குறுக்கும் நெடுக்குமாய்ச் சென்று அவளைப் பார்த்துப் புன்னகை புரிந்தனர். அவளுடன் பேசுவதற்குச் சந்தர்ப்பம் செய்துகொண்டு எல்லோரும் பேசினார்கள். ஆனால், அவளோ அள வில்லாத் துயரக் கடலில் ஆழ்ந்திருந்தாள். அவள் மனம் குழம்பித் தத்தளித்தது. காட்டில் யதேச்சை யாகத் திரிந்துகொண்டிருந்த மிருகம் ஒன்றை. முதன் முதலாகப் பிடித்துக் கூட்டில் அடைத்ததும் அதன் மனோநிலை எத்தகையதா யிருக்குமென்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? போலீஸ் வலையில் முதல் தடவை அகப்பட்டுக்கொண்ட ஒரு குடியானவ ஸ்திரீயின் துன்பத்தை அதற்கே ஒப்பிடக்கூடும். கறுப்பனும் தன் அறையில் திகைத்துக் கிடந்தான்.

“உண்மையைச் சொல்லிவிடு. அப்போதுதான் உன்னைத் தப்புவிக்க எங்களால் ஏதேனும் செய்யக் கூடும்” என்றார் சப்இன்ஸ்பெக்டர்.

கறுப்பன் :- “ஒளிப்பதற்கு என்ன இருக்கிறது? எனக்கு ஒன்றுமே தெரியாது. வெள்ளிக்கிழமை தான் நான் கருமாண் நீரிலிருந்து திரும்பிவந்தேன்.’

இன்ஸ்பெக்டர் : – “அந்தப் புரட்டெல்லாம் பலியாது. அப்பன். உன் பெண்சாதி எல்லாம் சொல்லி விட்டாள்.”

கறுப்பன் :- “சண்டாளி சொல்லிவிட்டாளா? எல்லாம் அந்தப் பாவியால் வந்த வினைதான்.”

இன்ஸ்பெக்டர் :- “ஆமாம், உண்மை . எல்லாம் பெண்களால் தான் வருகிறது. நல்லது : இப்போது ஒன்றும் ஒளியாமல் சொல்லிவிடு . பயப்படாதே.”

கறுப்பன் : – “நான் என்ன சொல்கிறது? எல்லாந்தான் அவள் சொல்லிவிட்டாள் என்கிறீர்களே.’

இன்ஸ்பெக்டர் :- “உண்மைதான். ஆனால், உன் வாயால் சொல்ல வேண்டும். இல்லாவிடில் ஏழு வருஷம் கடுங்காவல், தெரியுமா பயலே?”

“ஏழு வருஷம் ஆனாலும் சரி. நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை” என்று உறுதியாகச் சொன்னான் கறுப்பன்.

“நயமாய்க் கேட்டால் வேளாளப் பயல் இப்படித் தான் சொல்வான். அவனை …. (இங்கு எழுதத் தகுதியற்ற சித்திரவதையைக் குறிப்பிட்டு) செய்ய வேண்டும். அப்போதுதான் உண்மையைக் கக்குவான் என்று பக்கத்திலிருந்த ஹெட்கான்ஸ்டபில் கூறினான்.

“ஆமாம். அப்புறம் அவனை நன்றாய் விசாரியுங்கள்” என்றார் சப் இன்ஸ்பெக்டர். விசாரணை என்னும் வார்த்தையை அவர் சிலேடையாய் அழுத்திச் சொன்னார்.

பார்வதியையும் விடவில்லை.

“இங்கே பார். பெண்பிள்ளை. நீ ஒன்றும் செய்யவில்லை போல் தோன்றுகிறது. உண்மை சொன்னால் தப்பித்துக் கொள்ளலாம். வியாழக்கிழமை சாயங் காலம் காதர்கானும் அவன் மகனும் உன் வீட்டுக்கு வந்தார்களா?” என்று ஹெட் கான்ஸ்டேபில் கேட்டான்.

“தகப்பனும் பிள்ளையுமா? இல்லவே இல்லை” என்றாள் பார்வதி.

“நல்லது, இஸ்மேல் மாத்திரம் தனியாக வந்தானல்லவா?” என்று ஹெட்கான்ஸ்டபில் கூறி அருகி லிருந்த சேவகர்களைப் பார்த்துக் கண் சிமிட்டினான்.

“எஜமான்களே! இப்படி யெல்லாம் பேசாதீர் கள். என் வீட்டுக்குத் துலுக்கன் ஏன் வருகிறான ? பெண் பிள்ளையைப் பார்த்து இப்படிப்பட்ட அவமானமான சங்கதிகளைக் கேட்கலாமா? என்னை வீட்டுக்கு அனுப்புங்கள். மாமன், மாமி எல்லோரும் அங்கேயிருக்கிறார்கள். அவர்களைக் கேட்டால் எல்லாம் சொல்வார்கள்…”

“வீட்டுக்கு அனுப்ப வேண்டுமா? அவ்வளவு அவசரம் வேண்டாம். அம்மே, உண்மையைச் சொல்லி விட்டால் வீட்டுக்குப் போகலாம். இல்லாவிட்டால் போக முடியாது, இங்கேதான் இருக்க வேண்டும். “

“ஐயோ கடவுளே!” என்று பார்வதி கதறினாள்.

“நயமாகக் கேட்பதெல்லாம் இவளிடம் பலியா தப்பா, இவள் பலே கைகாரி ; எத்தனையோ ஆண் பிள்ளைகளைக் கெடுத்தவளாயிற்றே” என்றான் ஹெட் கான்ஸ்ட பில்.

“எஜமான்களே! நீங்களெல்லாம் பெண்டு பிள்ளைகளைப் படைக்கவில்லையா? ஒன்றுமறியாத ஏழையின் மீது கருணை செய்யுங்கள். நானும் உங்கள் கூடப் பிறந்ததாக நினையுங்கள்’ என்றாள் பார்வதி.

“அடே. இரும்பைக் காய்ச்சி எடுத்துக்கொண்டு வா” என்று ஹெட்கான்ஸ்ட பில் கூவினான்.

“சாமி, சாமி ! என் புருஷனைக் கேட்டுக்கொள் ளுங்கள். அவர்கள் எல்லாம் சொல்வார்கள். இந்தத் திக்கற்ற பெண்பிள்ளையை ஏன் வதைக்கிறீர்கள்? என்று பார்வதி அலறினாள்.

“உன் புருஷனைக் கேளாமலா இருப்போம்? அவ னைக் கேட்டதும், எல்லாம் சொல்லிவிட்டான். நீதான் ஒளிக்கிறாய்” என்றார் சப் இன்ஸ்பெக்டர்.

பார்வதி. மிகுந்த மனவேதனையுடன், “எல்லாம் சொல்லிவிட்டதா?” என்றாள்.

“ஆம். ஆம். எல்லாம் உன்னால் வந்த வினை தான்” என்று அவன் சொல்லிவிட்டான்.

பார்வதி கையைப் பிசைந்துகொண்டு ‘ஐயோ கடவுளே!..’ என்று கதறினாள். பின்னர்த் தொப் பென்று தரையில் விழுந்தாள்.

“அழுவதிலே உபயோகமில்லை. அம்மே! இதனா லெல்லாம் எங்களை ஏய்த்துவிட முடியாது. பலே பாசாங்குக்காரியா யிருக்கிறாயே? எத்தனை ஆண் பிள்ளையை இப்படித் தலை மொட்டை அடித்திருக் கிறாய்? ..”

“நீங்கள் எல்லாம் என் கூடப் பிறந்தவர்களைப் போன்றவர்கள். அப்படிப் பேசாதீர்கள். அந்த மனிதன் வந்து தவணைப் பணம் கேட்டான்.”

“ஆகா , வழிக்கு வருகிறாயா?” என்றான் ஹெட் கான்ஸ்டபில். சப்இன்ஸ்பெக்டர் பக்கம் திரும்பி “ஏன். நான் சொல்லவில்லையா? என்றான். பிறகு பார்வதியை நோக்கிச் சொன்னான்: “ஏ. பெண்பிள்ளை ! இதோ பார், உண்மையைச் சொன் னாயோ விட்டு விடுவோம். பெண் பிள்ளையை ஜெயி லுக்கனுப்ப எங்களுக்கு ஆசையா என்ன? உன் புருஷனுக்கும் சொற்ப தண்டனையுடன் போய்விடும். அதற்கு நாங்கள் உத்தரவாதம்.”

“இன்றிரவு என்னை வீட்டுக்கனுப்புங்கள். ஐயா! நாளை எல்லாம் சொல்லி விடுகிறேன்” என்றாள் பார்வதி.

“நல்லது. அவள் போகட்டும். உண்மை சொல்லி விடுவாள் போல் காண்கிறது” என்றார் சப்இன்ஸ் பெக்டர்.

“வீட்டுக்குப் போய்விட்டால் அப்புறம் உண்மை வராது” என்றான் ஹெட்கான்ஸ்டபில்.

சப் இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபில் காதண்டை வந்து, ‘ஆனால், அவளை நாம் கைது செய்யவில்லையே இராத்திரி எப்படி ஸ்டேஷனில் வைத்திருக்க முடியம்?’ என்று இரகசியமாகச் சொன்னார்.

“நல்லது. ஐயா! அப்படியானால் அவளை இப் போது பந்தோபஸ்துடன் அனுப்பி நாளை மறுபடியும் கொண்டுவரச் சொல்ல வேண்டியதுதான்.”

‘ஏ, பெண்பிள்ளை, உள்ளது உள்ளபடி சொல்லி விடு. இல்லாவிட்டால், தெரியுமா?” என்று அதட்டினார்.

***

உலகம்

கறுப்பனுடைய தகப்பன் தன் மூத்த குமார னிடம் கெஞ்சி ஒரு வக்கீல் பேசி அமர்த்தச் செய்தான். செலவுக்காகக் கறுப்பனுடைய வண்டியை விற்றார் கள். அந்தப் பணம் செலவானதும் அடுத்த கிராமத்தி லிருந்த உறவு முறையானிடம் எருமை மாட்டை அடகுவைத்துக் கடன் வாங்கினார்கள். பார்வதியால் தான் இவ்வளவும் வந்தது என்று அவளை எல்லோரும் மனங்கொண்ட மட்டும் திட்டினார்கள்.

மாஜிஸ்ட்ரேட்டின் முன், கறுப்பனுடைய வக்கீல். அவன் குற்றம் நடந்த அன்று கருமாண்டூரில் இருந் தான் என்று நிரூபிக்கச் சாட்சியம் விட்டார். அவர் மூன்று மணி நேரத்திற்குமேல் பேசியது கண்டு, கறுப்பனுடைய உறவினர்கள் எல்லோரும் திருப்தி யடைந்தார்கள்.

காதர்கான் தெய்வ சாட்சியாகப் பிரமாணம் செய்து, தானும் தன் மகனும் கறுப்பனுடைய வீட்டுக் குப் போய்த் தனக்குச் சேரவேண்டிய கந்துப் பணம் கேட்டதாகவும். அவன் கோபங்கொண்டு திட்டிய தாகவும், தான் அவனைக் கண்டித்துப் பணங்கொடுக் கத்தான் வேண்டுமென்று சொல்ல. கறுப்பன் அரி வாளால் தன்னை ஓங்கி வெட்ட வந்ததாகவும். ஒரு மயிரிழை யளவினால் தான் தப்பியதாகவும், ஆனால். இடையில் புகுந்த தன் மகன் காயமடைந்ததாகவும், மண்டையில் அடி விழுந்திருந்தால் உயிரே போயிருக்குமென்றும், நல்ல வேளையாக அப்படி விழாமல் வலது காதைப் பிய்த்துக்கொண்டு போய்விட்டதென்றும் கூறினான்.

பார்வதி ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டாள். வக்கீல் சொல்லிக் கொடுத்திருந்தபடி அவள் ஒன்றுமே நடக்கவில்லை யென்று கூறினாள். போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலம், தன்னை இம்சை செய்து பய முறுத்தி வாங்கியது என்று சொன்னாள்.

மாஜிஸ்ட்ரேட்டு வழக்கை செஷன்ஸ் கோர்ட் விசாரணைக்கு அனுப்பினார்.

கறுப்பனுடைய வண்டிமாடுகளையும் இப்போது விற்றுவிட்டார்கள். செஷன்ஸ் கோர்ட்டுக்குப் புதிய வக்கீல் ஒருவர் அமர்த்தப்பட்டார். விசாரணை முடியும் வரையில் தங்குவதற்காகப் பார்வதி தன்னுடைய சொந்த கிராமத்திலிருந்த அண்ணன் வீட்டுக்குப் போனாள்.

பார்வதியின் அண்ணன் மிக்க ஏழை. அவன் காலட் சேபம் செய்வதே கஷ்டமாயிருந்தது. அவன் மனைவி நல்லாயி, பார்வதியின் மீது எரிந்து விழுந்தாள். பார்வதி வீட்டு வாசலில் நின்று அழுதுகொண்டே அண்ண னுடன் பேசிக்கொண்டிருக்கையில் அவன் மனைவி வெளியே வந்து, ‘கண்டவர்களை யெல்லாம் நாம் வீட்டில் சேர்த்துக்கொள்ள முடியாது. நம் வயிற்றுப் பாடே நமக்குப் போதும் ” என்றாள்.

இப்படிச் சொல்லி அவள் வீட்டுக் கதவைத் தாள் போட்டுக்கொண்டு காட்டுக்குப் போய்விட்டாள்.

“பார்வதி. மாட்டுக் கொட்டிலிலுள்ள எருவைச் சேர்த்து வயலுக்கு எடுத்துக்கொண்டு போ ” என்றான் அண்ணன்.

பார்வதி அவர்களுக்கு ஓயாமல் வேலை செய்து உதவ முயன்றாள். தான் சாப்பிடும் சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட்டு உழைத்தாள். ஆனால், அவளுடைய அண்ணிக்கு மட்டும் அவள் மீது இரக்கம் பிறக்கவே யில்லை. தன்னால் கூடிய வரையில் அவளை அவமதித்து உபத்திரவித்தாள். பார்வதியோ எல்லாவற்றையும் பொறுமையுடன் சகித்துவந்தாள்.

மீண்டும் ஒருநாள் கான்ஸ்டேபில் ஒருவன் வந்து சேர்ந்தான். கறுப்பன் வழக்கு விசாரணைக்கு வருகிற படியால் பெரிய கோர்ட்டுக்குச் சாட்சி சொல்ல வர வேண்டுமென்று பார்வதியைக் கூப்பிட்டான். அண்ணி யினால் கொடுமைப் படுத்தப்பட்ட பார்வதிக்கு இது கூட ஆறுதலாயிருந்தது. அந்தப் போலீஸ் சேவகன் முகம்மதியன் : வயதானவன் : நல்ல உயரம் ; பெரிய மீசை ; பார்க்க அச்சம் தரத்தக்கவனா யிருந்தாலும் பேசும் போது பெற்ற தகப்பனைப்போல் அன்புடன் பேசினான்.

அவர்கள் ரயிலேற நடந்து ஈரோட்டுக்குப் போய்க் கொண்டிருக்கையில் அவன் பார்வதியிடம், “நடந்தது நடந்தபடி உண்மையைச் சொல்லிவிடு அம்மா . ஜட்ஜ் ஒரு வேளை இரக்கப்பட்டு உன் புருஷனை விட்டுவிடலாம் என்றான்.

“உண்மையை எப்படிச் சொல்வது ஐயா, அது பெரிய வெட்கக்கேடாயிற்றே?’ என்றாள் பார்வதி.

“வெட்கம் என்ன? அந்தமாதிரி தப்பு எத்தனையோ பேர் செய்கிறார்கள். ஒரு தடவையாவது ஏமாந்து போகாதவர்கள் அருமை. கடவுள் நம்மை யெல்லாம் பராமரித்து வருகிறார். சில சமயம் நம்மைக் குற்றம் செய்ய விட்டு விடுகிறார். அது அவர் விருப்பம்.

“எல்லாவற்றையுமா சொல்லச் சொல்கிறீர்கள்? அப்புறம் என்னைச் சாதியைவிட்டு நீக்கிவிடுவார் களே ; என் புருஷன் என்னைச் சேர்த்துக்கொள்ளாது. பிறகு நான் என்ன செய்வேன்?’ என்றாள் பார்வதி.

“நீ நிசம் சொன்னால் உன் புருஷனை ஆறுமாதத் தோடு விட்டுவிடுவார்கள். இல்லாவிடில், ஆறு வரு ஷம் போட்டுவிடுவார்கள். இதற்கு முன் இப்படி ஒரு வழக்கு நடந்தது. நீ இப்போது உன் புருஷனுக்கு உதவி செய்தால் அவன் அதற்காக உன்னிடம் நன்றி பாராட்ட வேண்டும். உன்னைச் சாதியில் சேர்த்துக் கொள்ள ஏதாவது கோயிலில் நல்லது செய்துவிடக் கூடும். எப்படியானாலும் நிசம் சொல்வதுதான் எப் போதும் நல்லது.”

பார்வதி மௌனமாயிருந்தாள். உண்மையைச் சொல்லும்படி அவள் உள்ளத்தில் ஏதோ ஒன்று சொல்லிற்று. ஆனால், அடுத்த நிமிஷம் வேறொரு போதனை உள்ளத்தில் கிளம்பி அதை மறைத்தது. பயமும் குழப்பமும் அவளைப் பற்றிக்கொண்டன. ‘ஆண்டவனே!.. என்று அடிக்கடி சொல்லிக் கொண்டு நடந்தாள்.

போலீஸ்காரன் ஈரோட்டில் அவளை ரயில் ஏற்றி னான். பார்வதி ரயில் பிரயாணம் செய்தது அதுதான் முதல் தடவை. ஸ்டேஷனிலிருந்த ஜனக் கூட்டமும். ரயில் வண்டியின் ஓட்டமும் அவளைத் திகைப்படையச் செய்தன. தன்னுடைய வாழ்க்கையின் துயரக் குழப் பத்தில் அந்த ரயில் குழப்பமும் ஒரு பகுதி என்றே அவளுக்குத் தோன்றிற்று.

வண்டி வேகமாய் ஓடத் தொடங்கியதும், சிரித்த முகம் வாய்ந்த சிறுவன் ஒருவன் எங்கிருந்தோ தோன் றிப் பாடத் தொடங்கினான். அவன் இரண்டு கண்ணுந் தெரியாத குருடன். கந்தலுடுத்தின மற்றொரு பையனும் அவனுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு சேர்ந்து பாடினான்.

‘திருட்டுப் பசங்களா? இத்தனை நேரம் எங்கே ஒளிந்திருந்தீர்கள்?’ என்றான் போலீஸ்காரன்.

பையன்கள் பாட்டை நிறுத்தாமல் குறுநகை புரிந்தார்கள். அவர்கள் பாட்டு, தேவகானம் போ லிருந்தது. சங்கீத வித்துவான்கள் கூட அப்படிப் பாட மாட்டார்கள். இந்தப் பிச்சைக்காரச் சிறுவர்கள் எங்கே, எப்படிப் பாடக் கற்றுக்கொள்கிறார்கள் என் பது யாருமறியாத மர்மம். பாட்டு முடிந்ததும், குருட்டுச் சிறுவன் கையேந்தி நிற்க, அவனைப் பிடித்து அழைத்துக்கொண்டு மற்றவன். வண்டி முழுதும் சென்றான். வண்டியிலிருந்தவர்கள் ஒவ்வொருவரும் சர்க்கார் வரி செலுத்துவதுபோல் காசு கொடுத்தார் கள். பார்வதியும் தன் புடவைத் தலைப்பில் போட்டிருந்த முடிப்பை அவிழ்த்துக் காலணா கொடுத்தாள்.

அவள் கேட்ட பாட்டு அன்று முழுவதும் அவள் செவி யில் ஒலித்துக்கொண்டிருந்தது. அது ஏதோ உள் ளர்த்தமுள்ள பாட்டு. அவளுக்கு விளங்கவே யில்லை. ஆனால், அதில் ஓர் அடி மட்டும் குருட்டுச் சிறுவனின் பரிதாபமான குரலுடன் கலந்து அவள் மனதில் அடிக்கடி வந்துகொண்டிருந்தது.

என்ன குற்றஞ் செய்தேனோ எல்லாருங் காணாமல் அன்னை சுற்றமெல்லாம் அறியாரோ அம்புவியில் கொன்றாரைத் தின்றேனோ தின்றாரைக் கொன்றேனோ எண்ணாதெல் லாமெண்ணு மிச்சை மறந்தேனோ சாதியிற் கூட்டுவரோ சமயத்தோ ரெண்ணுவரோ பேதித்து வாழ்ந்ததெல்லாம் பேச்சுக்கிட மாச்சுதடி.

***

நியாயம்

சேலத்தில் பார்வதியை ஓர் ஏழைச் சாப்பாட்டுக் கடைக்குப் போலீஸ்காரன் அழைத்துச் சென்றான். அங்கே அவளுக்கு – அரை ச் சாப்பாடு போடச் சொன்னான். கடைக்காரி பார்வதியைப் பார்த்துச் “சேலத்திற்கு எதற்காக வந்தாய் ” என்று கேட்டாள். ”என்னைக் கோர்ட்டுக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள்” என்று பார்வதி சொன்னதும், அவளைச் சுற்றிப் பெரியா கூட்டம் சேர்ந்துவிட்டது. அவர்கள் எல்லோரும் இலங்கைத் தேயிலைத் தோட்டங்களுக்குப் போவதற் காக வந்த கூலியாட்கள்.

செஷன்ஸ் கோர்ட்டில் பழைய கொலை வழக்கு ஒன்று நடந்து கொண்டிருந்தபடியால், அன்று கறுப்பன் வழக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. மறுநாள் வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் சர்க்கார் வக்கீல் பார்வதியைச் சாட்சியாய்க் கூப்பிடவில்லை. அவள் சர்க்காருக்கு விரோதமாய் மாறிவிட்டாள் என்று பப்ளிக் பிராஸிகியூடர் சொன்னார்.

கறுப்பனுடைய வக்கீல், அப்படியானால் அவளைத் தம் பட்சத்துச் சாட்சியாக விசாரிப்பதாகவும், அவளை ஊருக்குப் போகாமல் நிறுத்தி வைக்க வேண்டுமென் றும் கோர்ட்டாரைக் கேட்டுக்கொண்டார். சாயங் காலம் கறுப்பனுடைய அண்ணன் அவளை வக்கீலிடம் அழைத்துப்போனான். முஸ்லிம் போலீஸ் சேவகன் வழியில் கூறியவாறே உண்மையைச் சொல்லென்று வக்கீலும் சொன்னார்.

கணவனைக் காப்பாற்ற அவளுக்கு விருப்பந்தான். ஆனால், தான் செய்ததை ஒப்புக்கொள்வதென்று எண்ணியபோது அவள் நடுநடுங்கினாள்.

தெய்வம் எப்படி வழி காட்டுகிறதோ அப்படிச் செய்கிறேன் ‘ என்று பார்வதி முடிவில் சொன்னாள்.

“சண்டாளி, உனக்குத் தெய்வம் வேறு உண்டா ? பழஞ் செருப்பை எடுத்து அடி” என்று கறுப்ப னுடைய அண்ணன் கத்தினான். அதற்கு அவள் நடுங்கி ” நீங்கள் சொல்லுகிறபடியே செய்கிறேன். பெண் பிள்ளையினால் என்ன ஆகும்?” என்றாள்.

வக்கீல் வேண்டியது இதுதான். உடனே எல்லாரை யும் போகக் சொல்லிவிட்டு அவர் கறுப்பன் அண்ணனுடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்தார்.

மறுநாள் பார்வதி கச்சேரிக்கு வெளியே ஒரு மரத்தடியில் மற்றும் பலருடன் வெகுநேரம் காத்திருந் தாள். கடைசியில் அவள் பெயரைச் சொல்லி யாரோ உரத்த குரலில் கூப்பிட்டான். பார்வதி திடுக்கிட்டு எழுந்தாள். ”வா’ என்று ஒரு சேவகன் அவளை அழைத்துச் சென்று சாட்சிக் கூண்டில் நிறுத்தினான். அங்கே அவள் பார்த்தனவெல்லாம் அவள் திகைப்பை அதிகமாக்கின. மண்டபத்தின் மேற்குக் கோடியில் அவள் பார்வை சென்றபோது, அங்கே தன் புருஷன் கூண்டிலடைப்பட்ட காட்டு மிருகம் போல் இரும்புக் கம்பிகளுக்குப் பின்னால் நின்று தன்னை விழித்துப் பார்ப்பதைக் கண்டாள். அவன் தலைமயிரும் தாடி மீசையும் அதிகம் வளர்ந்துவிட்டபடியால். அவனை அடையாளங் கண்டுபிடிப்பதே கஷ்டமாயிருந்தது. ஏரைப்பிடித்து ஓட்டும் ஏழைக் குடியானவன் ஒருவனை இரண்டு மாதம் சிறையில் வைத்தால் பார்வைக்கு அவன் கொலைகாரனைப்போலவே ஆகிவிடுகிறான்.

‘ஐயோ. இவ்வளவும். பாவி என்னால் வந்ததல் லவா?” என்று பார்வதி தனக்குள் சொல்லிக்கொண்டு அளவில்லாத வேதனைப்பட்டாள். தான் நின்ற இடத் தில் போட்டிருந்த கிராதியைப் பிடித்துக்கொண்டு நிற்பது கூட அவளுக்குச் சிரமமாயிருந்தது. குமாஸ்தா திடீரென்று, ” பிரமாணம் செய் என்று கூவியதும் அவள் தலை கிறுகிறுவென்று சுழன்றது.

“தெய்வம் சாட்சியாக நான் சத்தியமே சொல்லு கிறேன். அன்று சாயங்காலம் நான் சமையல் செய்து கொண்டிருந்தபோது – “

“நிறுத்து!..” என்று குமாஸ்தா கோபமாகக் கத்தினார்.

நீதிபதி சர்க்கார் வக்கீலைப் பார்த்து, “நன்றாய் மனப் பாடம் செய்திருக்கிறாள் போலிருக்கிறது” என்றார்.

“பாதகமில்லை. சீக்கிரத்தில் மறந்துபோய்விடுவாள்” என்றார் மறுபடியும். நீதிபதியின் பரிகாசச் சொல்லைக் கேட்டு, கோர்ட்டில் எல்லோரும் கொல் – என்று சிரித்தார்கள். சர்க்கார் வக்கீல் இடியிடி யென்று சிரித்தார்; மற்ற வக்கீல்கள் கொஞ்சம் சாவதானமாய்ச் சிரித்தார்கள். எதிரி வக்கீல் கூடச் சிறிது புன்னகை செய்தார்.

“நான் சொல்லுகிறமாதிரி சொல்” என்று குமாஸ்தா கடுமையாகச் சொன்னார். பார்வதிக்குத் திகைப்பு இன்னும் அதிகமாயிற்று.

“இதேது. வக்கீலும் கொழுந்தனும் சொல்லிக் கொடுத்ததெல்லாம் உபயோகமில்லையோ? குமாஸ்தா சொல்லிக்கொடுப்பதைத்தான் சொல்லவேண்டுமோ?” என்று யோசிக்கலானாள்.

கடைசியில் பிரமாணம் செய்த பிறகு அவளைக் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். சில சமயம் கேள்விகளே அவளுக்கு விளங்கவில்லை. தான் சமையல் செய்து கொண்டிருந்தபோது. இஸ்மேல் வந்து தகாத காரியம் சொன்னதாகவும், தான் அதற்கிணங்கவில்லை யென் றும். இதற்குள் தன் புருஷன் உள்ளே கோபமாக ஓடி வந்து தன்மீது மண்வெட்டியை எறிந்ததாயும், தான் பயந்து ஓடியதாயும், அப்புறம் நடந்தது தெரியாதென்றும். இஸ்மேல் தலையில் இரத்தம் பெருகியவாறு ஓடியதை மட்டும் பார்த்ததாகவும் சொல்லி முடித்தாள்.

வக்கீல் வீட்டில் அவள் இம்மாதிரி சொல்ல வேண்டுமென்றுதான் முடிவாகியிருந்தது.

‘அடி. சண்டாளி’. என்று கறுப்பன் கைதிக் கூண்டிலிருந்து கத்தினான். தான் கருமாண்டூரிலிருந்த தாகச் சாட்சி விடப்படுமென்று அவன் இன்னமும் நம்பியிருந்தான். அவனுடைய வக்கீல் அவனருகில் சென்று காதில் இரகசியமாக ஏதோ ஒன்று சொன் னார். இதனால் அவன் சமாதானம் அடைந்தான். விசா ரணை முடிவடைந்ததும் அஸெஸர்கள், கறுப்பன் கொலை செய்ய முயன்ற குற்றம் நிரூபிக்கப்படவில்லை யென்றும், ‘பெரிதும் கோபம் மூட்டப்பட்டதன்மேல் பலமாய்க் காயப்படுத்திய குற்றம் செய்தவன் என் றும் அபிப்பிராயம் தெரிவித்தார்கள்.

நீதிபதி வழக்கை மறுநாளைக்குத் தள்ளி வைத்தார். மறுநாள் கோர்ட்டு கூடியதும் தீர்ப்புக் கூறப்பட்டது. நீதிபதி அஸெஸர்களின் அபிப்பிராயத்திலிருந்து மாறுபட்டு, கறுப்பன் கொலை செய்ய முயன்ற குற்றம் நிரூபிக்கப்பட்டதாய்க் கருதினார். காதர்கானும், இஸ்மேலும் கூறிய சாட்சியத்தை அவர் ஒப்புக் கொண்டு, அவர்கள் இருவரும் கறுப்பனிடம் தவணைப் பணம் கேட்கப் போனதாயும், குடிகாரனாகிய எதிரி , கோபங்கொண்டு மரண ஏ துவான ஆயுதத்தினால் தாக் கியதாயும், காதர்கானும் அவன் மகனும் முதலில் தற் செயலாகவும், பிறகு ஜனங்கள் வந்துவிட்டதாலுமே உயிர் பிழைத்தார்கள் என்றும் அபிப்பிராயப்பட் டார். கறுப்பனுடைய மனைவி அவனுக்குச் சாதக மாகச் சாட்சி சொல்வதே இயல்பாதலாலும், அதிலும் போலீஸார் முன்பும், மாஜிஸ்ரேட் முன்பும் அவள் வெவ்வேறு விதமாய்ச் சொல்லியிருப்பதாலும், அவள் சாட்சியத்தைத் தாம் நம்பமுடியாதென்று குறிப்பிட்டுக் கடைசியில் கறுப்பனுக்கு ஆறு வருஷம் கடுங்காவல் தண்டனை விதித்தார். பார்வதியின் மேல் பொய்ச் சாட்சி சொன்ன குற்றத்திற்காக வழக்குத் தொடங்க அனுமதி பெறுவதைக் குறித்து யோசிக்கும்படியும் அவர் சர்க்கார் வக்கீலுக்குச் சிபார்சு செய்தார்.

கறுப்பன் தண்டனையைக் கேட்டதும், ‘சண்டாளி ஏமாற்றிவிட்டாள். கட்டிய பெண்சாதி துரோகம் செய்யும் போது, சாமி, நீங்கள் சொல்லுங்கள், ஆண்பிள்ளை பார்த்துக்கொண்டிருப்பதா?..’ என்று என்று கூவினான்.

“அவனைக் கொண்டு போங்கள்” என்றார் நீதிபதி.

போலீஸ் சேவகர்கள் அவனைத் தள்ளிக்கொண்டு போனார்கள். “நீ சொல்லவேண்டியதை யெல்லாம் எழுதி ஹைகோர்ட்டுக்கு அப்பீல் செய்யலாம். வா” என்று அவனுக்கு ஆறுதல் சொன்னார்கள்.

***

விடுதலை

விசாரணை முடிந்ததும், பார்வதியை அவள் பந்துக்கள் யாருமே கவனிக்கவில்லை. மிகுந்த பிரயாசையுடன் அவள் இராமாபுரம் போய்ச் சேர்ந்தாள். வயோதிகனான முஸ்லிம் கான்ஸ்ட பில் அவள் மீது இரக்கங்கொண்டு திரும்புகாலையிலும் அழைத்துச் சென்றான்.

‘முதலிலேயே நீ உண்மையைச் சொல்லியிருக்க வேண்டும். முதல் கோர்ட்டில் நீ நிசம் சொல்லாதபடி யால் தான் உன்னை ஜட்ஜ் நம்பவில்லை. இங்கேயும் நீ உண்மை முழுவதையும் சொல்லவில்லை” என்று அவன் சொன்னான்.

அவன் வார்த்தைகள் அவள் காதில் விழுந்தன வாயினும், அவளுக்கு அவை அர்த்தமாகவேயில்லை. அவள் பிரமை கொண்டவள் போலிருந்தாள். இரவில் வெகுநேரம் கழித்து அவர்கள் இராமாபுரம் வந்து சேர்ந்தார்கள். கான்ஸ்டபில் , இராத்திரி தன் வீட்டு வெளித் தாழ்வாரத்தில் படுத்திருந்துவிட்டுக் காலை எழுந்து அவள் அண்ணன் ஊருக்குப் போகலாமென்று சொன்னான்.

அவளுக்குத் தூக்கமே வரவில்லை. மறுபடியும் அண்ணியின் முகத்தில் எவ்வாறு விழிப்பது? எல்லாம் ஆகிவிட்டது. ஆண்டவனே கைவிட்டுவிட்டார். இனி இந்தத் துயர வாழ்க்கைக்கு முடிவு தேடவேண்டியது தான். உயிரை விட்டு விட்டுவதே வழி நல்ல வேளை! கஷ்டங்களிலிருந்து தப்புவதற்கு அந்த ஒரு வழியாவது இருக்கிறதோ அதை யாரும் அபகரிக்க முடியாது.

வெகுநேரம் தூங்காமலிருந்துவிட்டுக் கடைசியில் காலை நேரத்தில் அவள் சோர்ந்து தூங்கிப் போனாள். ஆறு மணிக்கு எழுந்து வெளியே வந்த சாயபு. அவள் மெய்ம்மறந்து தூங்குவதைப் பார்த்து, “புருஷனைச் சிறைக்கு அனுப்பிவிட்டு வந்த இந்தப் பெண்பிள்ளை ஆனந்தமாய்த் தூங்குகிறாள். இந்த மோசக்கார ஸ்திரீகளை நம்புவோர் மதியற்றவர்கள்” என்று எண்ணிக் கொண்டான்.

குழந்தை அழும் சத்தங் கேட்டு பார்வதி எழுந் திருந்தாள். தன்னுடைய குழந்தை ஏதோ வலியினால் அழுதுகொண்டிருப்பதாய் அவள் கனவு கண்டு கொண் டிருந்தாள். விழித்துக்கொண்டு, தன் குழந்தை செத்து வெகுகாலமாயிற்றென்றும், தான் இப்போது புருஷன் வீடு வாசல் எல்லாம் இழந்த அனாதை யென்றும் தெரிந்துகொள்ள அவளுக்குக் கொஞ்ச நேரம் பிடித்தது.

எழுந்து உட்கார்ந்தபோது அவள் எதிரில் கன் னங் கறேலென்று ஒரு சிறுவன் நின்றுகொண்டிருந் தான். அவன் தன் கையினால் வாயை மூடிக்கொண்டு குழந்தை அழுவது போல் சத்தம் செய்தான். பிறகு அதை நிறுத்திக் குழந்தையின் தாயார் பேசுவது போல் பேசினான். இப்படி மாற்றி மாற்றி வேடிக்கை செய்து கொண்டிருந்தவன், பார்வதி எழுந்து உட்கார்ந்ததைக் கண்டதும் ”ஒரு காசுகொடு அம்மா என்று பிச்சை கேட்டான்.

“அப்பா. உனக்கு வீடு எங்கே?” என்றாள் பார்வதி.

“ஒரு காசு கொடு. அம்மா” என்றான் பையன்.

“உன் தகப்பன் யார்?.. என்று மறுபடியும் பார்வதி கேட்டாள்.

“தெரியாது” என்றான் சிறுவன். “உனக்கு அம்மா இல்லையா?..”

“இருக்கிறாள் ; என்னைப் பன்றிக்காரனுடன் விட்டுப் போயிருக்கிறாள்” .

“உனக்கு யார் சோறு போடுகிறார்கள்?”

“நானே சம்பாதித்து நான் சாப்பிடுகிறேன். காசு சேர்த்துப் பன்றிக்காரனிடம் கொடுக்கிறேன். சில சமயம் அவன் எனக்குச் சோறு போடுவான். அப்புறம் பணம் சேர்த்துக் கொடுத்துவிடுவேன்.”

“குழந்தை போல் அழுவதற்கு எங்கே கற்றுக் கொண்டாய்?”

“ஓ! நானும் இன்னொருவனும் தஞ்சாவூரில் கற்றுக்கொண்டோம். ஏதாவது கொடு, அம்மா, நான் பன்றிக்காரனிடம் போக வேண்டும்” என்றான்.

இதற்குள் போலீஸ்காரன் வந்து அவனைப் பய முறுத்தி விரட்டினான். “இவர்கள் தான் திருட்டுப் பயல்கள். இப்படி வந்து உளவு பார்த்துப் போவார் கள். பிறகு இரவில் வந்து கன்னம் வைத்துத் திருடு வார்கள். நீ நன்றாய் இரவு தூக்கினாற் போலிருக்கிறது” என்றான்.

“ஆண்டவன் உங்களைக் காப்பாற்ற வேண்டும். நீங்கள் எனக்குத் தகப்பனைப்போல் இருந்தீர்கள்” என்று பார்வதி சொல்லிக் கண்ணீர் வடித்தாள்.

இப்போது அவனுடைய மனம் கொஞ்சங்கூட இளகவில்லை. அவள் பாசாங்குக்காரி என்று நினைத் தான். “நீ உன் அண்ணன் ஊருக்குக் கிளம்பலாம். இப்போதே புறப்பட்டால் வெயிலுக்கு முன்னால் போய்ச் சேர்ந்துவிடுவாய்” என்றான்.

நடுமத்தியான்னத்தில் சொல்லமுடியாத பசியுட னும் களைப்புடனும் பார்வதி அண்ணன் வீடு போய்ச் சேர்ந்தாள். அண்ணியின் மனம் கொஞ்சம் இரங்கியிராதா, என்று அவளுக்கு இன்னும் சிறிது ஆசை யிருந்தது. ஆனால், அந்தோ! அவளுக்கு முன்னதாகவே சமாசாரம் போய்விட்டது. அண்ணன் வயலுக்குப் போயிருந்தான். அண்ணி வாயிற்படியில் நின்றுகொண்டிருந்தாள்.

“சாதி கெட்டவள் வந்துவிட்டாள்! உன் நாற்ற உடம்பை இங்கே கொண்டு வராதே. புருஷனைத் தின்று துலுக்கனோடு போகிறவர்களுக்கு இங்கே சத்திரம் கட்டி வைத்திருக்கிறதா? என் வீட்டில் உட்கார்ந்து என் அசட்டுப் புருஷனின் இரத்தத்தை உறிஞ்சலாமென்றா நினைக்கிறாய்? எனக்குப் பிள்ளை குட்டிகள் உண்டு. உன் சகவாசம் அவர்களுக்கு வேண்டாம். நீ யாரை ஏமாற்றினாயோ அவனிடம் போ. இங்கே இடமில்லை” என்று அவள் சரமாரியாய்ப் பொழிந்தாள்.

“அண்ணா, அண்ணா” என்று பார்வதி கதறினாள். அண்ணன் உள்ளே இருப்பதாக அவள் நினைத்தாள்.

“பேசமாட்டாயா. நீயும் என்னைக் கைவிட்டு விட்டாயா? இனிமேல் கடவுள் தான் எனக்குக் கதி” என்று சொல்லி விம்மி விம்மி அழுதாள். பசியாயும் களைப்பாயு மிருந்தபோதிலும், அந்த இடத்தைவிட்டு அழுதுகொண்டே போய்விட்டாள் .

வெயில் தகித்துக்கொண்டிருந்தது. ஆனால் இப் போது அவளுக்கு வெப்பம், பசி ஒன்றும் தெரிய வில்லை. தாகத்தினால் வறண்ட அவள் தொண்டையும், உதடுகளும் அவளுக்குத் தெரிந்த கடவுளின் பெயர் களை உச்சரித்தன. பக்கத்துக் கிராமத்தில் ஒரு மலைக் கோயில் உண்டு. அவ்விடத்தை நோக்கிச் சென்றாள்.

மலைமேல் கொஞ்ச தூரம் ஏறியதும் அவளால் ஓரடியும் நடக்க முடியாமல் போயிற்று. மூர்ச்சை போய்விடுவாள் போல் ஆகிவிட்டது. ஒரு பாறையின் நிழலில் சற்று உட்கார்ந்தாள்.

சிறிது நேரங் கழித்து மறுபடியும் எழுந்து நடந் தாள். கோயிலை அடைந்தாள். ஆனால், உள்ளே போகவில்லை. வெளியிலேயே நமஸ்காரம் செய்து பிரார்த்தித்துக் கொண்டாள். பிறகு கோயிலையும் விட உயரமாயிருந்த ஒரு பாறையின் உச்சிக்கு ஏறி னாள். அதில் ஏறுவது கஷ்டமாயிருந்தது. ஆனால் அவள் புதிய பலம் பெற்றிருந்தாள். ஏறி உச்சியை அடைந்தாள். மேற்குப் புறத்து ஓரமாய் வந்து கீழே நோக்கினாள் – உச்சியிலிருந்து மலையடிவரை ஒரே செங்குத்தான அகாத பள்ளம். தலை சுழல் ஆரம்பித் தது. கீழே உட்கார்ந்தாள். மறுபடி எழுந்து.

“அம்மா. தாயே, காளி! என் பாவங்களை யெல்லாம் மன்னித்துக்கொள். என்னை உன்னிடம் சேர்த்துக்கொள்” என்று கதறிவிட்டு ஒரே குதியாய் மலையிலிருந்து குதித்தாள்.

ஆகா! ஒரு கணநேரத்திற்குள் என்ன ஆனந்தம்! என்ன நிம்மதி ! பூமியும் ஆகாயமும் மாறிச் சுழன்றன. ஆகா! எவ்வளவு குளிர்ச்சி, எவ்வளவு இன்பம் பின்னர் அதற்கு முன் அவள் எப்போதும் கேட்டிராத பெரிய வெடிச் சத்தம் தலையில் படாரென்று வெடித்தது. அப்புறம். முடிவில்லாத மௌனக் கடலில் மூழ்கிப் போனாள். திக்கற்ற பார்வதியின் உயிர் துயரக் கூட்டினின்றும் தப்பிப் பறந்து சென்றது.

– ராஜாஜி சிறுகதைகள், முதற் பதிப்பு: 1944, புதுமைப் பதிப்பகம், காரைக்குடி

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக 1948 முதல் 1950 வரை பொறுப்பில் இருந்தவரும், 1952 முதல் 1954 வரை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவரும், 1955-ம் ஆண்டில் பாரத ரத்னா விருதுபெற்ற முதல் இந்தியருமான மூதறிஞர் ராஜாஜியை, ஒரு சிறுகதை எழுத்தாளராக இலக்கிய உலகம் போற்றுவதில்லை. அறிஞர் அண்ணாவுக்கு நேர்ந்த கதிதான் மூதறிஞருக்கும் ஏற்பட்டது. டிசம்பர் 1921 முதல் மார்ச் 1922 வரை மூன்று மாதங்கள் சிறையில் அடைப்பட்டுக்கிடந்த ராஜாஜி, வெளியே…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *