தவறும் தண்டணையும்

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 9,027 
 
 

“”அப்பாப்பா ப்ளீஸ்பா நா வர்லப்பா. நீங்களும் அம்மாவும் மட்டும் போய்ட்டு வாங்கப்பா” என்று கெஞ்சினாள் பூஜா.

“”என்னடா பூஜாகுட்டி இப்படி சொல்லிட்ட? உனக்காகத்தானே நானும் அம்மாவும் லீவ் போட்டு திருப்பதி கோவிலுக்கு போகலாம்னு முடிவு கட்டினோம். நீ வரலேன்னா எப்படி?” என்றான் ராகவன்.

தவறும் தண்டணையும்விஷயம் இதுதான். முதலில் பூஜாவின் அம்மா சுமதி மட்டும் அடுத்த நாள் காலை சுமதியின் அக்கா குடும்பத்துடன் இரண்டு நாட்கள் லீவ் போட்டுவிட்டு திருப்பதி போவதாகப் ப்ளான். வேனில் இடமிருப்பதாக இன்று சுமதியின் அக்கா தெரிவித்ததால் ராகவனும் பூஜாவும் கூட அடுத்தநாள் திருப்பதி போவதாக முடிவு செய்யப்பட்டது. ராகவனின் ஆஃபீசில் அவனுக்கு அடுத்த இரண்டு நாட்கள் லீவ் வழங்கப்பட்டாலும் அந்த இரன்டு நாட்கள் வேலையையும் இன்றே முடிக்க வேண்டி இருந்ததால் வீட்டுக்கு வரத் தாமதம் ஆகி விட்டது. வேலை மும்மரத்தில் பூஜாவின் பள்ளியில் முன் அனுமதி வாங்கவில்லை.

“”எங்க ஸ்கூல்ல ரொம்ப ஸ்டிரிக்ட். கோவிலுக்குப் போறதுக்கெல்லாம் லீவ் தரமாட்டங்கப்பா. சொல்லாமல் லீவ் எடுத்தால் பனிஷ்மெண்ட் குடுப்பாங்க. நா வர்லப்பா” என்றாள் பூஜா.

“”சாரிடா குட்டி. நான் மறந்துவிட்டேன். இரண்டு நாட்கள் கழித்து நானே உங்க மிஸ் கிட்ட வந்து சொல்றேன். ப்ளீஸ்டா செல்லம்” என்று கெஞ்சினான் ராகவன்.

“”ஏங்க, ஐந்தாம் வகுப்பு படிக்கும் பெண்ணிடம் இவ்ளொ கெஞ்சணுமா? அவளுக்காகத்தானே கோவிலுக்கு போகிறோம்? அவ கெடக்கா” என்று ராகவனிடம் கூறிய சுமதி, பூஜாவிடம், “”ஏன்டி, ஐந்தாம் கிளாசுக்கு என்னடி இவ்ளோ அலட்டல்?” என்றாள்.

“”ஏம்மா நீங்களும் அப்பாவும் மட்டும் ஆஃபீசில் முன்னாலயே பெர்மிஷன் வாங்கினீங்கள்ள? அப்ப நா மட்டும் என்னவாம்? இந்த இரண்டு நாள் பாடத்தையும் அப்புறம் உக்காந்து எழுதணும். என்னால முடியாது. நா வர்ல. என்ன பாட்டி வீட்ல விட்டுட்டு போங்கப்பா. நா வீட்லயே சாமி கும்புட்டுக்கிறேன். நீங்க போய்ட்டு வாங்க” என்று பதிலளித்தாள் பூஜா.

“”ஏய், ஓவரா ஸீன் போட்டா ஒத வாங்குவடி பூஜா. இவ்ளோ பேசுரியே, ஒரு தடவயாவது மூணாவது ரேங்காவது வாங்கி இருக்கியா? பெரிசா பேச வந்துட்டா” என்று பூஜாவை மிரட்டிய சுமதி, ராகவனிடம், “”ஏங்க அவ எல்லாம் வருவா. வந்துதான் ஆகணும். உங்க அம்மா வீட்ல விட்டீங்கன்னா செல்லம் கொடுத்தே கெடுப்பாங்க. வேண்டாம்” என்று முடிவாகக் கூறினாள்.

பூஜாவின் போராட்டம் எடுபடாமல் அடுத்த நாள் காலை திருப்பதிக்கு வேனில் சுமதியின் அக்காவின் குடும்பத்துடன் கிளம்பினார்கள்.

வழியில் சில ஆலயங்களைத் தரிசித்துவிட்டு மேல் திருப்பதிக்கு செல்ல இரவாகி விட்டது. இரண்டாம் நாள் காலை முன்னூறு ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டில் அவர்கள் செல்லும்போது தர்ம தரிசன வரிசை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் நின்றுகொண்டிருந்தவர்கள் ஏக்கத்தோடு சிறப்பு தரிசனக்காரர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த வரிசையில் முன்னால் நின்று கொண்டிருந்தவரின் தோளின் மீது சட்டையில்லாமல் அமர்ந்து கொண்டிருந்த ஒரு குழந்தை தந்தையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு களைப்போடு பரிதாபமாகத் தொங்கிக் கொண்டிருந்தது. இதைக் கவனித்த பூஜா ராகவனிடம், “”ஏம்பா அவங்கள்ளாம் ரொம்ப நேரமா வெயிட் பண்றாங்க போலிருக்கேப்பா. நமக்கு முன்னால அவங்கதானப்பா மொதல்ல போகணும்” என்று வினவினாள். அதற்குள் சுமதி பல்லைக்கடித்துக்கொண்டு, “”இவ ஒரு இம்சை. ஏய்… அதிகப்ரசங்கி. கோவிலுக்கு வந்தால் சாமிய தரிசனம் பண்ணாம வேடிக்கை பாத்துகிட்டே என்னடி பேச்சு? போடி ஒழுங்கா” என்று மிரட்டினாள்.

ஏழுமலையானை தரிசித்தபின் வேறு சில ஆலயங்களுக்கும் சென்று தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பும்போது இரவு சற்று நேரமாகிவிட்டது.

அடுத்தநாள் காலை பூஜா பள்ளிக்குக் கிளம்பும்போது சுமதி ராகவனிடம், “”ஏங்க நீங்களே போய் அவங்க மிஸ் கிட்ட சொல்லி விட்டுட்டு வாங்க” என்றாள்.

“”பரவால்லம்மா. ஒரு பீரியட் முட்டி போட சொல்லி பனிஷ்மெண்ட் குடுப்பாங்க. தப்பு செஞ்சா பனிஷ்மெண்ட் குடுக்க தானம்மா செய்வாங்க” என்ற பூஜாவிடம் சுமதி, “”தூ… வெட்கமே இல்லடி உனக்கு. நான் ஸ்கூல்ல படிக்கும்போது ஒரு தடவை கூட பனிஷ்மெண்ட் வாங்கினதில்லை தெரியுமா? பேச வந்துட்டா பெரிய மனுஷி” என்று கூறி ராகவனிடம், “”ஏங்க நீங்களே போய் மிஸ் கிட்ட சொல்லி விட்டுட்டு வாங்க” என்றாள்.

பூஜாவின் வகுப்பாசிரியை ராதா டீச்சரைச் சந்தித்த ராகவன் விஷயத்தைக்கூறி நான் வேண்டுமானால் இப்போது ஒரு லீவ் லெட்டர் தருகிறேன் மிஸ் என்று கேட்ட போது, “”சாரி மிஸ்டர் ராகவன். எங்கள் பள்ளியின் டிஸிப்ளின் உங்களுக்கு தெரியும். தகுந்த காரணமில்லாமல் லீவ் எடுக்க அனுமதிக்க மாட்டோம். ஆனால் பூஜா நல்ல பெண். இன்று ஒருநாள் மட்டும் என்னால் அவளை அனுமதிக்கமுடியும். நாளை

மெடிக்கல் சர்டிஃபிகேட் வாங்கி அனுப்புங்கள்” என்று தான் பெருந்தன்மையோடு அனுமதி கொடுப்பது போல் கூறினாள். தண்டனையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பூஜாவிற்கு அன்று முழுவதும் பள்ளியில் திக் திக் என்று அடித்துக் கொண்டது. வகுப்பாசிரியை ராதா மிஸ் தலைமை ஆசிரியை நிர்மலா மேடத்திடம் கூறி விடுவாரோ என்ற கற்பனையில் பயந்து கொண்டே இருந்தாள். அன்று சோதனையாக எச்.எம்.நிர்மலா மேடத்தின் மாரல் சயின்ஸ் வகுப்புதான் மதியம் முதல் பீரியட். பூஜா பயந்து கொண்டே முன்னால் உட்கார்ந்திருக்கும் பெண்ணின் முதுகுக்கு ப் பின்னால் ஒளிந்து ஒளிந்து பாடத்தைக் கவனித்தாள்.

அன்று மாலை ராகவன் மெடிக்கல் சர்டிஃபிகேட்டுக்காக பூஜாவை அவன் பள்ளித் தோழன் டாக்டர்.சரவணனிடம் அழைத்துச் சென்றபோது அவன் “”ஐ நோ ராகவன். இந்த ஸ்கூல்ல இப்படித்தான் தேவையில்லாம கஷ்டப்படுத்துவாங்க. என் பெண்ணும் அங்கதான படிக்கிறாள். எனக்கு உன் கஷ்டம் புரியுது” என்று கூறி பூஜாவுக்கு இரண்டு நாட்கள் மெடிக்கல் லீவ் சர்டிஃபிகேட் கொடுத்தான். ராகவன் சரவணனுக்கு பணம் கொடுக்க முனைந்த போது சரவணன் “”நோ ராகவன். உனக்கு என்னைப்பற்றி தெரியாதா? நான் பணத்துக்காக சர்டிஃபிகேட் கொடுக்கும் டாக்டர் இல்லை” என்று சற்று பெருமை கலந்த குரலில் கூறினான்.

மறுநாள் காலை பூஜாவின் ஸ்கர்ட் பையில் லீவ் லெட்டரை வைத்த சுமதி. “”பத்திரம்டி. தொலைச்சிட்டு அப்புறம் முழிச்சிகிட்டு நிக்காத” என்று கூறி அனுப்பினாள்.

அட்டெண்டன்ஸ் எடுக்கும்போது ராதா மிஸ் பூஜாவின் பெயரை அழைக்கும்போது “”பூஜா லீவ் லெட்டர் கொண்டு வந்தியா?” என்று வினவியபோது பூஜா ஒன்றும் கூறாமல் தலையைக் குனிந்தாள். டீச்சர் சினத்துடன் “”நேற்று அவ்வளவு சொல்லியும் உனக்கு என்ன தைரியம்? இவ்ளோ ஒழுங்கீனமா இருக்கவங்கள்ளாம் ஏன்டி ஸ்கூலுக்கு வந்து எங்க உயிரை எடுக்குறீங்க? உனக்கு ஒருநாள் டைம் குடுத்ததே தப்பு. வகுப்புக்கு வெளியில் போய் முட்டி போடு, போ” என்று சினத்துடன் ஆணையிட்டாள்.

அவர்கள் பள்ளியில் அதுதான் வழக்கம். தவறு செய்த குழந்தைகள் அவரவர் வகுப்புக்கு வெளியில் முதல் பீரியட் முழுவதும் முட்டி போட வேண்டும். பிறகு தலைமை ஆசிரியையின் அறையில் விசாரிக்கப்பட்டு தக்க அறிவுரை வழங்கப்படுவார்கள். பூஜா தண்டனை அடைவது இதுதான் முதல் முறை. அவளுடைய தோழிகள் ப்ரேமாவும் சங்கீதாவும் ஏளனமாய் அவளைப்பார்ப்பது போல் தோன்றியது. அவமானத்தோடு அழுகையை அடக்கிக் கொண்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். அன்று தலைமை ஆசிரியை நிர்மலா மிஸ் அறையில் மொத்தம் ஐந்து வழக்குகள் விசாரிக்கப்பட்டன. ஒழுங்காக வீட்டுப்பாடம் எழுதாதவர்களும் வகுப்பில் அடங்காதவர்களும் தான் முதல் மூன்று பேர். அவர்கள் எச்சரிக்கப்பட்டு வகுப்புகளுக்கு அனுப்பப்பட்டார்கள் நான்காவது கேஸ் பூஜா.

“”என்னம்மா பூஜா, என்னாச்சு உனக்கு ஏன் சொல்லாம லீவ் போட்ட?” என்று வினவிய நிர்மலா மேடத்திடம் ஒன்றுமே கூறாமல் பூஜா தலைக்குனிந்து அழ ஆரம்பித்தாள்.

“”போ. எதுக்கெடுத்தாலும் அழுகைதான்” என்று சலித்துக்கொண்ட நிர்மலா மிஸ் உதவித்தலைமை ஆசிரியையிடம், “”பூஜாவின் அப்பாவின் காண்டாக்ட் நம்பர் இருந்தால் ஃபோன் பண்ணி கேளும்மா” என்றாள்.

பூஜாவிடம் “”அப்படிப் போய் நில்லு அழாமல். நான் பிறகு கூப்பிடறேன்” என்று கூறி விட்டு கடைசி வழக்கை விசாரிக்க ஆரம்பித்தாள். இறுதியாக ஒன்றாம் வகுப்பில் படிக்கும் பரத்தும் விக்ரமும். மற்றவன் சட்டையில் பென்சிலால் கிறுக்கி சண்டை போட்டுக் கொண்டதாக இருவர் மீதும் வழக்கு. இருவருமே குறும்புக்காரர்கள்.

“”ஏன் விக்ரம் சட்டையில் நீ கிறுக்குன?” என்று கேட்டதற்கு பரத்,””அவந்தான் முதலில் என்னை வெறுப்பேத்தினான்” என்று தன் பிஞ்சுக்கைகளால் விக்ரமைக்காட்டினான்.

“”அப்படி என்னதான் செய்தான்?” என்று கேட்டபோது தயங்காமல், “”பின்ன ஏன் அவன் ரஜனி ஒரு டுபாக்கூர், டூப்ளிகேட் வேஸ்ட்டுன்னு சொன்னானாம்” என்று கூறி முடிப்பதற்குள் அவசரமாக விக்ரம்,””பரத்தான் முதல்ல விஜய் ஒரு வேஸ்ட்டுன்னு சொன்னான் மிஸ்” என்று முறையிட்டான். நிர்மலா மிஸ் சிரிப்பை அடக்கிக்கொண்டு பொய் கோபத்துடன்,””ஓஹோ இதுதான் நீங்கள் வகுப்பில் பேசிக்கொள்ளும் பேச்சா? இப்பவே ஒங்க ரெண்டு பேர் அப்பாவுக்கும் ஃபோன் பண்ணி சொல்லவா?” என்று கேட்ட போது இருவருமே “”வேண்டாம்” என்று வேகமாக தலையை அசைத்தர்கள்.

“”இனிமேலும் இந்த மாதிரி பேசி சண்டை போட்டால் உதை தான் கிடைக்கும். இரண்டு பேரும் கை குடுங்க. ஓடுங்க” என்று கூறி அவர்கள் இருவரும் கை கோர்த்து ஓடும் அழகை புன்முறுவலோடு பார்த்து மகிழ்ந்தாள்.

இன்னும் பூஜா மட்டும் தனியாக நின்றுகொண்டிருந்தாள். “”பூஜாவின் அப்பா காலையில் லீவ் லெட்டர் குடுத்தனுப்பினாராம். இவள்தான் தொலைத்திருப்பாள்” என்கிறார் என்றார் உதவி தலைமை ஆசிரியை. பூஜாவின் விம்மலும் அழுகையும் அதிகமாகியது.

“”ஏம்மா பூஜா தொலைத்தால் சொல்ல வேண்டியதுதானே. அதற்கு என்னம்மா பயம்? இப்படி பயந்து கோழையா இருந்தீங்கன்னா படிச்சு என்ன பிரயோஜனம்?” என்று சலித்துக்கொண்டாள் நிர்மலா. கண்களைத் துடைத்துக்கொண்டு ஒரு தீர்மானத்தோடு நிர்மலாவை ஏறெடுத்துப்பார்த்த பூஜா, “”அதில்லை மேடம்” என்று கூறி பையிலிருந்த லீவ் லெட்டரை எடுத்து நீட்டினாள். அதைப் படித்த நிர்மலா, “”ஏம்மா இதை முதலிலேயே செஞ்சிருக்கலாமில்ல. சரியான மக்கு போ” என்றவளிடம் பூஜா, “”அதில்லை மேடம். இது பொய் சர்டிஃபிகேட்” என்றவுடன், கனவினின்றும் விழித்தது போல் திடுக்கிட்ட நிர்மலா, “”நீ என்னம்மா சொல்ற?” என்று வினவினாள். நடந்தவற்றை பூஜாவிடமிருந்து அறிந்த நிர்மலா, “”உனக்கு ஏம்மா இன்று இதச்சொல்ல வேண்டும் என்று தோன்றியது. நேற்றே சொல்லி இருக்கலாமே?” என்று கேட்டாள்.

“”நீங்கள் தானே மேடம் நேற்று மாரல் சயின்ஸ் கிளாசில் உண்மையாக இருந்தால் கடவுள் என்றும் நம் பக்கம் இருப்பார் என்று சொன்னீங்க?” என்று விம்மலுடன் எதிர்கேள்வி கேட்டாள் பூஜா. ஒரு நிமிடம் வாயடைத்துப்போன நிர்மலா இந்தப் பெண்ணையா கோழை என்று அழைத்தேன் என்று நினைத்து வெட்கப்பட்டாள். சுதாரித்துக்கொண்டு “”இங்கே வாம்மா பூஜா” என்று அவளை அருகில் அழைத்து ஆதரவாக அணைத்துக் கொண்டாள். விழிகளிலே வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு, “”நீ அழக்கூடதும்மா. உன் மீது ஒரு தவறும் இல்லை” என்று கூறி அவளைக்

கையோடு அவள் வகுப்பிற்கு அழைத்துச் சென்றாள்.

“”ராதா டீச்சர் பூஜாவை வகுப்பில் சேர்த்துக் கொள்ளுங்கள். அவள் ஒரு தவறும் செய்யவில்ல” என்று அறிவித்துவிட்டு தன் அறைக்குத் திரும்பினாள். பூஜாவின் தோழிகள் ப்ரேமாவும் சங்கீதாவும் ஒன்றும் புரியாமல் தம் கீழுதடுகளைப் பிதுக்கி தோள்களைக் குலுக்கிக் கொண்டார்கள். சிறிது நேரம் தலையைப் பிடித்துக்கொண்டு யோசித்த நிர்மலா டீச்சர் பிறகு பூஜாவின் தந்தை ராகவனுடன் ஃபோனில் தொடர்பு கொண்டாள்.

“”சாரி மேடம். பூஜா லீவ் லெட்டரைத் தொலைத்திருப்பாள்” என்று அவசரமாகக்கூற ஆரம்பித்த ராகவனிடம், “”அதெல்லாம் பூஜா ஒரு தவறும் செய்யவில்லை. பயப்படவேண்டாம் சார். இன்று மாலை பள்ளி அலுவலகத்தில் என்னைப்பார்த்துவிட்டு பூஜாவை அழைத்துச் செல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டாள். மாலையில் ராகவனும் சுமதியும் என்னமோ ஏதோ என்று பயந்துகொண்டே தலைமை ஆசிரியையின் அறைக்குள் நுழைந்தார்கள். பூஜாவும் வரவழைக்கப்பட்டாள்.

“”உட்காருங்கள் மிஸ்டர் ராகவன்” என்று வரவேற்ற எச்.எம்., “”பூஜாவப் பெற்றெடுத்த உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்” என்று நேராக ஆரம்பித்து அன்று காலை பள்ளியில் நடந்ததை விவரித்தாள்.

“”மிஸ்டர்.ராகவன் நீங்கள் நல்லெண்ணத்தொடுதான் பூஜாவைக் கோயிலுக்கு அழைத்துச்சென்றீர்கள். ஆனாலும் பள்ளியின் முன் அனுமதி பெறாமல் அழைத்துச் சென்றது தவறுதான் . வகுப்பாசிரியை உண்மையான காரணம் தெரிந்திருந்தாலும் மெடிகல் சர்டிஃபிகேட் வாங்கும்படி ஆலோசனை கூறியிருக்கிறார். அவர் நல்லெண்ணத்தோடு சுயநலமின்றி அதைச் செய்திருந்தாலும் அது தவறுதான். உங்கள் டாக்டர் நண்பர் உங்களுக்கு உதவி செய்வதற்காக நோய் இல்லாமலேயே மெடிகல் சர்டிஃபிகேட் தந்திருக்கிறார் அவரும் நல்லெண்ணத்தோடு சுயநலமில்லாமல் அதைச் செய்திருந்தாலும் அதுவும் தவறுதான். இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்த காலகட்டத்தில் வேலைக்குப் போகும் பெற்றோர்களைப் பற்றிச் சிந்திக்காமல்,ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் இந்த பள்ளி ஆரம்பிக்கப்பட்டபோது ஏற்படுத்தப்பட்ட பழைய விதிமுறைகளை, ஒழுங்கு, கட்டுப்பாடு என்ற காரணங்களைக் கூறி மாற்றாமல் வைத்திருப்பதும் இந்த பள்ளி நிர்வாகத்தின் தவறுதான். நாம் செய்யும் தவறுகளுக்கெல்லாம் நம் குழந்தைகளும், அடுத்த தலைமுறையினரும் தண்டிக்கப்படுகிறார்கள். பிரிட்டிஷ் வல்லரசிடம் இருந்து முந்தைய தலைமுறையைச்சேர்ந்த சில நல்லவர்கள் நமக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்கள். ஆனால் நாமோ இந்தியா வல்லரசாகவேண்டும் என்று காரணம் கூறி பல தவறுகள் செய்து அடுத்த தலைமுறையினர் வல்லவர்களாக வரவேண்டும் என்ற ஒரே முனைப்போடு அவர்களுக்குத் தவறான பாதையைக் காட்டுகிறோமோ? என்று அச்சமாக இருக்கிறது. அவர்கள் வல்லவர்களாக இருந்தால் மட்டும் போதும் என்று நினைக்கிறோம். நல்லவர்களாக வாழ வேண்டும் என்று சிந்திக்கத் தவறிவிட்டோம். போலியான லீவ் சர்டிஃபிகேட், போலியான ஜாதிச்சான்றிதழ்,போலியான பாஸ்போர்ட், ஏன் போலியான பள்ளி மற்றும் கல்லுரி மதிப்புச் சான்றிதழ் கூட வழங்குவதையோ வாங்குவதையோ நம்மில் பலர் தவறு என்று உணர்வதில்லை. இன்று பூஜா செய்த காரியம் என்னைச் சிந்திக்க வைத்து விட்டது. அடுத்த பெற்றோர்கள் கூட்டத்திலேயே வேலைக்குச்செல்லும் பெற்றோர்களுக்குச் சாதகமாக விதிகளை மாற்றி அமைத்து அறிவிக்கப்போகிறேன். அதற்கு பூஜாதான் காரணம். பள்ளி இறுதித்தேர்வில் அவள் மாநிலத்திலேயே முதலாவதாக வந்திருந்தால் கூட இவ்வளவு சந்தோஷப்பட்டிருக்கமாட்டேன்” என்று கூறி முடித்த நிர்மலா டீச்சர்,

பூஜாவை அருகே அழைத்து ஒரு புதிய பேனாவைப் பரிசாக அளித்தாள். தலைமை ஆசிரியை பரிசாக அளித்த புதிய பேனாவை பெருமையோடும் மகிழ்ச்சியோடும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நடந்த பூஜாவின் மற்றொரு கையைப் பற்றியிருந்த ராகவனோ ஒளிமயமான எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரத்தோடு கம்பீரமாக நடந்து சென்றான்.

– பி.சுந்தரராஜன் (நவம்பர் 2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *