பகுதி 1 | பகுதி 2
தைலா பாட்டி கண் மூடி யோசனையில் ஆழ்ந்திருந்தாள். வயது ஆனதால் மனது பழைய காலத்தையும் பின் அவள் கண்ட மாற்றங்களையும் சுற்றிச் சுற்றிச் சுழன்றது. அவளுக்கு வயது 99 ஆனாலும் தன் வேலையைத் தானே பார்த்துக் கொள்ளும் அளவுக்கு உடம்பும் மனதும் திடமாகவே இருந்தது. பாட்டிக்கு 9 வயதில் கல்யாணம். அந்தக் காலத்தில் பூப்படைவதற்கு முன் மணம் செய்து வைத்தால் கன்னிகா தான பலன் கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கை. அவள் கணவருக்கு 19 வயது.
பாட்டி பூப்படையும் வரை பிறந்தகத்தில் இருந்தாள். பூப்படைந்த பின்னர் பள்ளிப் படிப்பு நிறுத்தப்பட்டு உரிய சம்பிரதாயங்கள் செய்யப்பட்டு ஒரு நல்ல நாளில் புக்ககத்துக்கு அனுப்பப் பட்டாள். புக்ககம் பழைமையில் ஊறிய ஒரு குடும்பம். ஆகவே 9 கஜ மடிசார் புடைவை தான் கட்டிக் கொள்ள வேண்டும். பெரிய சம்சாரம். மாமியார் சொல்லுக்கு மறு பேச்சு கிடையாது. அவர் காலையில் எழுந்து குளித்து பால் காய்ச்சி காஃபி போடுவதற்குள் தைலா பாட்டி வாசலைப் பெருக்கி, சாணி தெளித்து கோலம் போட வேண்டும். குனிந்து பெருக்கி, கை காலை ஆட்டிச் செய்யும் இது அந்தக் கால விடிகாலை வொர்க் அவுட். சாணி கிருமிநாசினி – அக்காலத்து ஸானிடைஸர். ஆகையால் வீட்டுக்கு யார் வந்தாலும் அவர் மூலம் தொற்று ஏற்படுவது வாசலிலேயே தடுக்கப் படும் என்று நினைத்தார்களோ என்னவோ! மார்கழி மாதம் என்றால் வீதியை அடைக்கிற மாதிரி பெரிய கோலம் போட வேண்டும். வெறும் புள்ளிகள் கோடுகளை வைத்து வெவ்வேறு டிஸைன்களில் கையால் போடவேண்டும். இந்தக் கால கூழாங்கல் மாவு இல்லை, அரிசி மாவு. ஈரமாயிருந்தால் கையில் ஒட்டும். எறும்புக்கு உணவு – ஜீவ காருண்யம். அதில் எல்லா வீட்டு மருமகள்களின் தேர்ச்சி அலசப்படும். பரிசு கிடையாது. பெருமை அல்லது க்ரிடிஸிஸம் மட்டும். இந்தக் காலத்தில் ரங்கோலியாம், பரிசுன்னு என்னவோ தரான்னாம்! தற்காலத் தலைமுறையில், வேலைக்குப் போகும் பெண்களுக்காக வந்த சௌகரியங்களில் ஸ்டிக்கர் கோலமும் ஒன்று. அதற்கு முன்பு கோலக்குழலும் தகர ஷீட்டில் ஓட்டை போட்ட டிஸைன்களும்! சும்மா மாவைப் பரப்பி நிமிஷமாய்க் கோலமும் பார்டரும் போட்டு விடலாம்.
தைலா பாட்டியின் எண்ண வலை தொடர்ந்தது. கோலம் போட்ட பிறகு வீட்டைப் பெருக்க வேண்டும். வீடும் இந்தக் காலத்து ரெண்டு மூணு மொடக்கு ரூம் ஃப்ளாட் போல் இல்லாமல் கூடம், ரேழி, திண்ணை என்று நீண்டு விரிந்து இருக்கும். அதைக் கூட்டிப் பெருக்கறதுக்குள்ளே முதுகு வலி கண்டு விடும். வெள்ளிக்கிழமைகளில் முழு வீட்டையும் தண்ணீர் விட்டுக் கழுவ வேண்டும். பிறகு பருத்திக்கொட்டை ஆட்டுக்கல்லில் அரைத்து மாட்டுக்குத் தீவனம் வெக்கணும். மாடு தீவனம் தின்னப்புறம் அதைக் குளிப்பாட்டி வேறு இடத்தில் கட்டி விட்டு மாட்டுக் கொட்டகையில் சாணியை அப்புறப் படுத்திச் சுத்தமாகக் கழுவ வேண்டும். சாணியைக் கூட வேஸ்ட் பண்ணாம, வென்னீர் பாய்லருக்கு வரட்டி தட்டுவா. கன்னுக்குட்டியை மாடு கிட்ட கொஞ்ச நேரம் விட்டு அப்புறம் அதைப் பிரித்துத் தனியாகக் கட்டி, மாடு உதைக்காம இருக்க ஸைடுல உட்கார்ந்து, காம்புல எண்ணெய் தடவி, ரெண்டு முட்டி நடுல சொம்பை வச்சு சர் சர்ருன்னு பால் கறக்கணும். இப்ப இதெல்லாம் கிடையாது. வீட்டு வாசல்ல பாக்கெட் பால் வரது. இந்தக் காலத்தில் வீட்டுக்கு வீடு குழாய் இருந்தாலும் தண்ணீர் கஷ்டம். அந்தக் காலத்தில் தண்ணீர் அமோகமா இருந்த்து. ஆனால் வசதி படைச்சவர்களைத் தவிற மற்றவர்கள் வீட்டில் குழாய் கிடையாது. கிணற்றில் இருந்து தண்ணீரை இறைத்துத் தொட்டியை நிரப்புவது, மரம், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது தைலா வேலை. குளிக்க ஒரு குளம், குடிக்க வேறொரு குளம். மொதல்ல குளித்து முடித்து, வேற குளத்துக்குப் போய்க் காவிக் கலர் தண்ணீரைக் கையால தள்ளிக் குடத்துல சேந்தி வீட்டுக்குக் கொண்டு வரணும். அப்புறம் தண்ணீர் தெளிய அதுல தேத்தாங்கொட்டையைப் போட்டு வைக்கணும். ரொம்ப நாளைக்கப்புறம் முனிசிபாலிட்டில பப்ளிக் குழாய் வெச்சான்.
குளிச்சுட்டு வீட்டுக்கு வந்தா அக்கடான்னு உட்கார முடியாது. தயிர் கடஞ்சு, மோர் பெருக்கி வெண்ணையைத் தனியாக ஒருபாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கணும். இது முடிஞ்சா, பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகப் பணி புரியும் அவள் கணவனும், மற்றும் பள்ளிச் சிறுமிகளான நாத்தனார்களும் மதியம் சாப்பாட்டிற்கு வந்து விடுவார்கள். அவர்களுக்குச் சாப்பாடு பரிமாறுவது கடைசி மருமகளான தைலா தான். ஏனெனில் அவளுடைய ஓரகத்திகள் இருவரும் தங்கள் குழந்தைகளுக்குச் சாப்பாடு ஊட்டித் தூங்க வைப்பதில் பிஸியாக இருப்பார்கள். கணவனும் நாத்தனார்களும் பள்ளிக்குச் சென்ற பின் வீட்டில் மற்ற எல்லோரும் சாப்பிட்டுப் பாத்திரங்கள் துலக்கிச் சிறிது தலையை சாய்க்கலாம்னு பலகையை எடுத்தால் தண்ணீர் லாரி வருவதை அதன் ஹார்ன் கட்டியங் கூறும். வீட்டில் இருக்கும் பெரிய பாத்திரங்கள் அணி வகுத்து நிற்கும். அவற்றை நிரப்பி உள்ளே வைப்பதற்குள் தைலாவுக்கும் அவள் ஓரகத்திகளுக்கும் சாப்பிட்ட சாப்பாடு செரிமானம் ஆகி விடும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்தப் பாடு. கிணற்றுத் தண்ணீர் உப்பாக இருக்கின்றபடியால் சமையலுக்கு லாரித் தண்ணீர் தான் ஆதாரம். இப்பொழுது கிராமங்களும் முன்னேறி இருக்கிறதாலே வீட்டிற்குக் குழாய் இணைப்பு வந்திருக்கிறது. அதனால் தன் பின் சந்ததியாவது கஷ்டப் படாமல் இருக்கிறார்களேன்னு தைலா சந்தோஷப் பட்டாள். தண்ணீர் லாரி வராத அன்றும் தைலாவுக்கும் அவளது ஓரகத்திகளுக்கும் ரெஸ்ட் கிடையாது. அரிசி புடைப்பது, பூப்பறித்துத் தொடுப்பது, கடுகு நேம்புவது (அதாவது ஒரு பலகையில் கடுகைக் கொட்டிச் சாய்வாக வைத்துக்கொண்டு இரு கைகளாலும் தள்ளி விட்டுக் கொண்டிருந்தால் கடுகில் உள்ள கல் பலகையில் தங்கி விடும் நல்ல கடுகு கீழே உருண்டு விழும்) ஆகிய வேலைகள் பங்கு பிரித்துக் கொடுக்கப்படும். எல்லாவற்றுக்கும் மாமியார் தான் லீடர்.
காலையில் சமைப்பது தான் மாமியார் வேலை. அதிலும் மூத்த மருமகள்கள் இருவரும் காய்கறி நறுக்கிக் கொடுப்பது, தேங்காய் துருவுவது, அரிசி பொறுக்கித் தருவது எல்லாம் செய்து விடுவார்கள். மாமனார் செய்யும் பூஜைக்குப் பூப் பறித்து வருவது, துளசியைத் தனித் தனியாகவும், அருகம் பில்லை மூன்று மூன்றாகவும் பிரிப்பது, சந்தனம் அரைப்பதும் ஓரகத்திகள் வேலை. மடித் துணி கட்டிக் கொண்டு தான் மாமியார் சமைப்பார். குளித்துத் தோய்த்துக் கொடியில் காயப் போட்ட புடைவையைக் கொடிக் கம்பால் எடுத்துச் செல்வார்கள். கையால் எடுக்க கூடாது. அது தான் மடித் துணி. சாப்பிட்ட பிறகு மடி பார்க்கத் தேவை இல்லை. இந்தப் பழக்கத்தை இன்றும் பெரியவர்கள் பல பேர் வீட்டில் பூஜையன்றாவது கடைப் பிடிப்பார்கள். அதிலும் சமைத்த உணவைத் தொட்ட கையைக் கழுவாமல் ஊறுகாய், தயிர், நெய் ஆகியவற்றைத் தொடக்கூடாது. அந்தக் காலத்தில் கிருமியைத் தடுக்கும் வழியோ என்னவோ அவர்களுக்கு அதை விளக்கமாகச் சொல்லத் தெரியவில்லை. அவர்கள் சயன்ஸில் அதுக்கு ‘பத்து’ன்னு பேர் வைத்து, ’பத்து பறக்கடிக்கும்’னு ஒரு பழமொழியும் சொல்லி விட்டார்கள். பறக்கடிக்கும்னா சோற்றுக்கு பறப்பார்கள் என்று அர்த்தம் பயமுறுத்தினால் தான் கடைப் பிடிப்பார்கள் என்று எண்ணம்.
தைலாவுக்கு வயிற்றை வலிப்பது போல் இருந்தது. அதுவாக இருக்குமோ என்று நாட்களை எண்ணிப் பார்த்தாள். புழக்கடைக்குப் போய் பார்த்தாள். ஆம், அதுவே தான். ஆஹா, மூணு நாளுக்கு நல்ல ரெஸ்ட் என்று சந்தோஷப் பட்டாள். அந்தக் காலத்துல பெண்களுக்கு இருந்த வரப் பிரசாதத்துல இது மிகப் பெரிசு. சாயங்காலம் காஃபி போடக் குமுட்டி மூட்டுவது தைலா. அவளைக் காணாது பெரிய ஓரகத்தி ’தைலா’ என்று கூப்பிட்ட வண்ணம் புழக்கடைக்கு வந்தாள். ’அடடா, இங்கே வந்து உட்கார்ந்துட்டியா? உன் வேலையையும் சேர்த்து இப்ப நான் பண்ணணுமே’ன்னு அங்கலாய்த்தவாறே நகர்ந்தாள். அந்த அறையிலேயே ஒரு பாய், தலைக்கு மரப்பலகை, தட்டு, டம்ளர் நிரந்தரமாக இருக்கும். கூட்டுக் குடும்பமாதலால், மாற்றி மாற்றி அந்த அறைக்கு விருந்தாளிகள் வருவார்கள். சில சமயம் தேள் பூரான் கூட வருவதுண்டு. எப்போதாவது ரெண்டு, மூணு பேர் ஒண்ணா உட்கார்ந்து விட்டால் மாமியார் பாடு திண்டாட்டம்! அறையில் இருப்பவர்களுக்குக் கொண்டாட்டம்! தைலாவுக்கு முதல் நாள் போனது தெரியவில்லை. அடுத்த இரு நாட்கள் மிகவும் மெதுவாக நகர்வதாகத் தோன்றியது. குளிக்க முடியாது. கிணற்றை அவள் தொடக்கூடாது ஆகையால் யாராவது அங்கு வரும் பொழுது வாளியை நிரப்பித் தரச் சொல்ல வேண்டும். சிக்கனமாகத் தண்ணீரை செலவழிக்க வேண்டும், இல்லையென்றால் ஒரு அவசரத்திற்கு திண்டாட்டம் தான். வீட்டில் பெரியவர்கள் சாப்பிட்ட பின் தான் இவளுக்கு சாப்பாடு கிடைக்கும். இன்னும் சொல்ல முடியாத பல கஷ்டங்கள் எப்பொழுது குளித்து வீட்டிற்குள் செல்வோம் என்று தைலாவை எதிர்பார்க்க வைக்கும். இந்தக் காலத்தில் வேலைக்குப் போகிறவர்கள் அப்படியெல்லாம் பார்க்க முடியுமா? அந்தக் காலத்தில் இந்த மாதிரி நேரங்களில் அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கோ அல்லது மற்றவர்கள் மூலமாக அந்தப் பெண்ணுக்கோ எந்த தொற்றும் கூடாதுன்னு தனியா உட்கார்த்தி வைத்தார்கள். இந்தக் காலத்தில அது என்னமோ பேட்னு சொல்றா. அதெல்லாம் யூஸ் பண்ணி, தினம் குளிச்சு சுத்தமா இருக்கா. பயம் இல்ல. ஆனா பாவம், அந்தக் காலத்திலயாவது பொண்களுக்கு மூணு நாள் ரெஸ்ட். பாவம், இந்தக் காலத்து பொண்களுக்கு அதுவும் கிடையாது, தவிற, கூட்டுக் குடும்பம் இல்ல. அதனால தனியா உட்கார முடியாது. அவ தான் எல்லாம் செய்யணும்.
(தொடரும்)