தகப்பனைத் தேடி…

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,763 
 
 

“”என்னம்மா முடிவெடுத்த?” அப்பா ஆரம்பித்து விட்டார். இனிமேல், விட மாட்டார்; அம்மாவும் சேர்ந்து கொள்வாள். ஏன், ஊர் உலகமே, ஏதோ இதை விட்டால், அவர்களுக்கு வேறு பிரச்னையே இல்லை என்பது போல், “உன் பொண்ணுக்கு என்ன வழி செய்யப் போறே?’ என்று தொணதொணக்க ஆரம்பித்து விடும். இவர்களுக்கெல்லாம், பெண் என்பவளை, சுதந்திரமாக விட்டு விடக் கூடாது; யாராவது, ஆண் என்று ஆணவம் பிடித்து திரிபவன் கையில், ஒப்படைத்தே தீர வேண்டும். பாதுகாப்பு, சமூக அந்தஸ்து தருகிறேன் பேர்வழி என்று, பெண்மையை அடக்கி, அடிமையாக்கியே தீர வேண்டுமென்று, அப்படி ஒரு அவசரம்.
தகப்பனைத் தேடி...இந்த அவசரத்திற்கு, நான் துளியும் அசைய போவதில்லை. ஏனென்றால், இதனால் பாதிக்கப்பட்ட, சூடு கண்ட பூனையாய், முதல் திருமணத்தின் தண்டனையாக, சென்ற நான்காண்டு காலமாக, பெங்களூருக்கும், சென்னைக்குமாக பெற்ற குழந்தையுடன் அலைந்து, ஒரு வழியாக அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் உள்ளவள் நான்.
“”இன்னும், ரெண்டு ஹியரிங்கிலே ஜட்ஜ்மென்ட் கிடைச்சிடும்ன்னு வக்கீல் சொல்லிட்டார். இப்பவே பார்க்க ஆரம்பிச்சா நல்லது. மறு திருமணத்திற்கென்றே, தனியா, மேட்ரிமோனியல் எல்லாம் இருக்கு. நீ சரின்னு சொல்லு. உனக்கும் வயது ஏறிட்டே போறது,” என்று தொடர்ந்தார் அப்பா.
“”கொஞ்சம் என்னை ப்ரியா விடுப்பா… வக்கீல்கிட்டே சொல்லி, முதல்லே இந்த கேசிலிருந்து விடுபட்டு தொலையறேன்; அப்புறம்தான் அடுத்து கவலைப்பட முடியும்,” என்று, அவர் வாயை அடைத்தேன்.
வயதை வைத்து மிரட்ட துவங்கினார் அப்பா. இதே எச்சரிக்கையால்தான், ஐந்து வருடத்திற்கு முன், என்னை கலங்கடித்தனர். அப்போது, 24 வயசே, இவர்களுக்கு பெரிய வயதாக உறுத்தியது. இப்போது, இரண்டாம் கல்யாணம் என்பதற்கும், அந்த வயதையே காரணம் காட்டி, அச்சுறுத்துகின்றனர்.
செக்ஸ் என்பதையும் மீறி, ஒரு திருமணத்தில், எத்தனை ஆனந்த அம்சங்கள் உள்ளன? பரஸ்பரம் அன்பு, அணுசரணை, ஒருவருக்கொருவர், பிறர் உணர்வுகளை மதிப்பது, விட்டுக் கொடுப்பது என்று, எத்தனையோ… இதில் ஒன்றுமே தெரியாதவனாய், தெரிந்திருந்தாலும் வேண்டுமென்றே காட்ட மறுப்பவனாய், ஒரு மிருகத்திடம் மாட்டிக் கொண்டு, நாலாண்டு அவஸ்தைப்பட்ட அனுபவம், எனக்கு ஒரு பாடமாகி இருந்தது. முதல் திருமணத் தின் பயன், இந்த பாடம் மட்டுமே என்பதாக, என் வாழ்க்கை விதிக்கப்பட்டு விட்டது.
நயமாக கேட்டும், கெஞ்சியும் பார்த்தாயிற்று. மாசம், 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் வேலையை, கல்யாணமான ஒரு வாரத்தில் விடச் சொன்னான். காரணம் சொல்லவில்லை; ஆனால், புரிந்தது. சுதந்திரமான சம்பாத்யம், என்னை, அவனால் அடக்கப்படுவதற்கு தடையாய் இருக்கும் என்று எண்ணுவது புரிந்தது. சரி, விட்டுக் கொடுக்கலாம் என்று வேலையை விட்ட போதும், பரிவு தெரியவில்லை. இவனிடம் அத்யாவசியத்துக்கெல்லாம் கையேந்தி, “இந்த மாச, காஸ்மெடிக் வாங்கணும்; பணமிருந்தா கொடுங்க…’ என்று, நான் யாசகம் செய்ய வேண்டும். அதில், ஒரு கொடூர திருப்தி. அதோடு நில்லாமல், அந்த கோரிக்கையை காதில் வாங்காதது போல் நிராகரித்து, என்னை, அவன் பின்னால் அலைய வைப்பான். கடைசியில், பிச்சைக்காரியாக, அவன் தூக்கி எறிவதை பெற்றுக் கொள்ள வேண்டும். மனைவியாக ஒப்பந்தமாகியவளை இப்படி ஒரு அடிமைத்தனத்திற்கு ஆளாக்குபவனே, “ஆண்’ என்பது அவனுடைய ஆணவ நினைப்பாய் இருந்தது. அந்த நினைப்பு, பெற்றவர்களால் அவனுக்கு ஊட்டப்பட்டு, அடிக்கடி உணர்த்தப்பட்டுக் கொண்டேயிருந்ததில், அடக்கி வைத்திருந்த என் தன்மானம் வெடித்தது.
“உங்க அப்பாக்கிட்டே கேட்டுத்தான் இதை வாங்கித் தரணுமா? ஏன் உங்க பொண்டாட்டிக்கு, ஆசையா நீங்களே வாங்கிக் கொடுக்கக் கூடாதா?’ என்று உரிமையாய் கேட்டதில், எனக்கு, “எதிர்த்து பேசாதே…’ என்று எச்சரிக்கை விடப்பட்டது.
“உங்க அம்மா, அப்பா சொல்றதை கேட்டு ஆடறே…’ என்று, அவன் செய்து கொண்டிருப்பதை என் மேல் பழியாக போட்டு, நான் என் வீட்டு சொந்தங்களிடம் பேசவே கூடாதென்ற தடையை விதிக்க ஆரம்பித்த போது, என்னால் சும்மா இருக்க முடியவில்லை; நானும், எதிர்க்க ஆரம்பித்தேன். நாளொரு சண்டையும், பொழுதொரு வாக்குவாதமாக வாழ்க்கைப்பட்டுக் கொண்டிருந்தேன்.
“கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கோ…’ என்று, இளிச்சவாயர்களான, பெண்ணுக்கு மட்டுமே கொடுக்கப்படும், “அட்வைஸ்’ எனக்கும் கிடைத்தது. என்னால், எனக்கு நியாயமாகப்பட்டதை கேட்காமல், “அட்ஜெஸ்ட்’ செய்து கொள்ள முடியவில்லை. இதனால், ஆணின் அகராதியின்படி அடங்காதவள், எடுத்தெறிந்து பேசுபவள், சொன்னதை கேட்காதவள் என்ற வகையில் அர்த்தம் கற்பிக்கப்பட்டேன்.
இதற்கும் மீறி, அவனுடைய செக்ஸ் உரிமையை, அவன் என்னிடம் நிலைநாட்டாமல் இல்லை; குழந்தை உண்டானது.
“குழந்தை பிறந்து விட்டால், எல்லாம் சரியாகி விடும்…’ என்று, என் பெண்மை நினைக்க, “இத்தனை நாள் திமிராய் திரிஞ்சியே… இப்போ, குழந்தையை பெத்துட்டா, அடிபணிந்துதானே ஆகணும்…’ என்று, அதையும் அவனுடைய அடக்குமுறைக்கான உபாயமாக்க, கீழ்த்தரமான ஆண்மை எகத்தாளமிட்டது.
“நான் ஆம்பளை, ஈசியா இன்னொரு கல்யாணம் செய்துக்குவேன். நீ, ஒரு குழந்தையோடு, அதை நினைச்சுக் கூட பார்க்க முடியாது…’ என்று பயம் காட்டி, பணிய வைக்க முயற்சித்தான். அவனுடைய முக்கிய நோக்கமே, என்னை, எப்படியாவது அடிமைப்படுத்தி விட வேண்டும் என்பதாகவே தெரிந்தது.
ஒரே ஒரு முறை வந்ததோடு சரி… தன் குழந்தையைக் கூட இன்னொரு முறை பார்க்க வராமல், அதன் மூலம் என்னை நோகடித்து பார்த்தான். “உன் குழந்தையை பார்க்கக் கூட ஆசையில்லையா?’ என்று கேட்டதற்கு, “என் குழந்தையான்னு சந்தேகமா இருக்கு…’ என்றான். அது, வேண்டுமென்றே, என்னை உரசி பார்க்க விடுத்த அம்பு என்று எனக்கு தெரியாமல் இல்லை. குழந்தைக்கு பெயர் வைக்க வந்த போது, “அசல் உன்னை மாதிரியே உரிச்சு வச்சிருக்கான் உன் பிள்ளை…’ என்று, அவன் அம்மாவே, என் கற்பிற்கு உறுதி கூறியாகி விட்டது. இருந்தாலும், இப்படி ஒரு அமில வார்த்தைகள் என்னை அவன் காலடியில் கிடந்து, அடிமைப்படுவதற்கு வீசப்படுவதென்று புரியாமலில்லை.
குழந்தை பிறந்து, ஆறு மாதங்களில், அவனுடைய கடைசி அஸ்திரம் பிரயோகப்படுத்தப்பட்டது. தான் பெற்ற குழந்தையோடு, தன் மனைவியை ஆசையாக எதிர்பார்க்கும், ஒரு சராசரி கணவனாக இல்லாமல், என்னைப் பற்றி இல்லாத அவதூறுகளை சுமத்தி, எட்டு – ஒன்பது பக்கங்களில், இதனால், ஏன் உன்னை விவாகரத்து செய்யக் கூடாது என்ற ரீதியில் வக்கீல் நோட்டீஸ் வந்து விழுந்தது. இது போன்றவைகளெல்லாம் பழக்கப்படாத, என் குடும்பம் பதறி போனது.
இப்படி பதறி அடித்து, ஓடி வர வேண்டும் என்பதுதான், இந்த அஸ்திரப் பிரயோகத்தின் நோக்கம் என்பதில், நான் தெளிவாக இருந்ததால், அதற்கு இடம் கொடுக்காமல், அவன் புகார்கள் அத்தனைக்கும் வக்கீலை தேடி, கவுன்டர் கொடுத்து, குழந்தையும், கையுமாக பெங்களூருக்கு, சென்னையிலிருந்து, மூன்று வருடங்களாக அலைந்தாயிற்று.
ஒவ்வொரு முறையும் அலைச்சல், ஆபீஸ் லீவ், ரிசர்வேஷன், அப்பாவுடன் பெங்களூரில் லாட்ஜ், வக்கீல், கோர்ட் செலவு என்று, பெண்மையை அடிமையாக்கி காட்டக் கூடாது என்பதற்காக, முயன்றதில் சோர்வும், விரக்தியுமே மிஞ்சியது. சமுதாயத்தில், பெண்கள் போராட சாதகமான சூழல்கள் இன்னும் ஏற்படவில்லை. பெண்மை போராடுவதை சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை. அவளை முடமாக்கி விட்டால், ஆண்மைக்கு எதிர்ப்பில்லை. எதிர்ப்பில்லை என்றால், பிரச்னை என்று ஒன்று எழப் போவதில்லை. இதுவே, வாழ்க்கைப்பட்டுக் கொண்டிருக்கும் அனேகமான பெண்கள் கடைப்பிடித்து, மற்றவர்களுக்கும் காட்டும் சாத்வீக வழி.
ஆகவே, நானும் எதிர்த்து போராட முடியாதவளாய், தோற்க ஆயத்தமானேன். இவன் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லி, வாக்குவாதம் செய்து, என்னவாகி விடப் போகிறது… சாக்கடையை விட்டு, வெளியேறி விடலாமென்று, பரஸ்பரம் விவாகரத்திற்கு நானும் ஒப்புதல் கொடுத்து, சிரமங்களிலிருந்து விடுபட்டு விடலாமென்று முடிவு செய்து விட்டேன்.
இந்த முறை ஹியரிங்குக்காக, பெங்களூரு கோர்ட் செல்வது, பரஸ்பர விவாகரத்திற்கு ஒப்புக் கொண்டு, ஒப்பந்தம் போட்டு, அவனிடமிருந்து விடுபடவே!
எப்போதும் பார்ப்பது போல அன்றும், அந்த கோர்ட்டின் வராண்டாவில், சட்டத்தால் பிரிக்கப்பட்டிருந்த தங்கள் குழந்தைகளை, கணவன்மார்கள் ஆசையாக கொஞ்சிக் கொண்டிருக்க, கேஸ் ஹியரிங் முடிந்தவுடன், அதை பிடுங்கிக் கொண்டு போகும் தாய்க் குலங்களை பார்க்க முடிந்தது. தான் பெற்ற பிள்ளை என்ற ஏக்கம் நிறைந்த ஆண்களுக்கும், ராட்சச குணமுடைய மனைவிகளிடமிருந்து இந்த விவாகரத்து என்ற விடுதலை அவசியமாகிறது என்பது எனக்கு புரியாமலில்லை.
வராண்டாவில் ஓடிய குழந்தையை, யாரோ ஒரு வாலிபன் தூக்கிக் கொண்டான்.
“”குழந்தை என்கிட்டே கொஞ்சம் இருக்கட்டுமே,” என்று கெஞ்சினான்.
“”இட்ஸ் ஓ.கே.,” என்று அனுமதித்தேன். தன் சொந்த அப்பாவின் மடியில் கொஞ்ச வேண்டிய குழந்தை, இப்படி வேறொருவன் மடியில்!
அந்த யாரோ ஒரு வாலிபன் அணைப்பில் இருந்த என் குழந்தை, “அப்பான்னா யாரும்மா?’ என்று கேட்டு விடும் காலம், நெருங்கிக் கொண்டு தான் இருந்தது. இப்படி ஒரு ஏக்கமான கேள்விக்கு, ஆறுதலாக ஒரு ஆளை காட்டியாக வேண்டும் என்ற நிர்பந்தம்தான், என் போன்ற தனிமை தாய்மார்களை, ரீ-மேரேஜ் எனும் மறுமணத்திற்கு உடன்பட வைப்பதாக அமைகிறது.
என் கூட துணைக்கு வந்திருந்த, அப்பாவின் மன ஓட்டம் என்னவென்று தெரியாவிட்டாலும், அவர், தன் பேரனை, அந்த வாலிபனின் மடியில் பார்ப்பதில், ஒரு ஏக்கம் வெளிப்பட்டது.
“”ஓ.கே., நான் அந்த வக்கீல் கிட்ட பேசிட்டேன். வர்ற, 25ம் தேதி, 13பி-ல் விவாகரத்து ஏற்பாடு செய்யலாம்,” என்றபடி, கோர்ட்டிலிருந்து வெளியே வந்த என் வக்கீல், என்னிடம் கூறியபடி அருகே வந்தார்.
என்னிடம் கூறிக் கொண்டிருந்தவரின் பார்வை, குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்த, அந்த வாலிபனிடம் திரும்பியது.
“”ஹலோ பிரபு… உங்க கேஸ் பார்மாலிட்டி எல்லாம் ஓவர். பெட்டிஷனர் உள்ளேதான் இருந்தா. எல்லாமே அக்ரீட். அடுத்தது ஜட்ஜ்மென்ட்தான்,” என்றபடி, அவனிடமும், அவர் பேசியதை, நான் வியப்புடன் பார்த்தேன்.
“”இவரும் என் கிளையன்ட்தான். அப்போ பிரபு, நான் இவங்களை அழைச்சிட்டு, ஆபீசுக்கு என் காரிலே போறேன். நீங்களும் சில பேப்பர்ஸ்ல சைன் பண்ண வேண்டியிருக்கு; வர முடியுமா?” என்று அந்த வாலிபனை கேட்டார்.
“”மடிவாலா வரை போகணும். அந்த வேலையை முடிச்சுட்டு வந்துடறேன்,” என்றவன், அவனிடம் ஒட்டிக் கொண்ட குழந்தையை பிரிய மனமில்லாதவனாக, என் அப்பாவிடம் தந்துவிட்டு கிளம்பினான்.
அட்வகேட் தன் காரை செலுத்தியபடி பேச துவங்கினார்…
“”அதென்னவோ தெரியலம்மா… எங்கிட்டே வர்ற கிளையன்ட் எல்லாமே ரொம்ப சாப்ட்டா போறவங்களா அமைஞ்சுடுது. நீ என்னடான்னா, “உன் புருஷன்னு சொல்றவன்கிட்டேயிருந்து ஒரு பைசா கூட வேண்டாம். விவாகரத்து கொடுத்துட்டு விலகிடுறேன். என் குழந்தைங்கிற சொத்து ஒண்ணே போதும்…’ன்னு சொல்றே.
“”இப்போ கோர்ட்டிலே பேசினேனே பிரபு, அவனும், “நான் பெட்டிஷனர். என்ன கேட்டாலும் கொடுத்துடறேன்னு சொல்லி, 30 லட்ச ரூபாயும், அதைத் தவிர ஜீவனாம்சம், மாசா மாசம் எத்தனை கிளைம் பண்ணினாலும் கொடுத்துடறேன்…’ன்னு சொல்றான். என்னை பிடிக்காதவளை நான், “கம்பெல்’ பண்ணி வாழ சொல்ல மாட்டேன். கேட்டதை கொடுத்துட்டு, விலகிக்கிறேன்…’ன்னு ரொம்ப சாதுவா பேசறான்… அத்தனை அடிபட்டுட்டான். இவன் ஒய்ப் ஒரு பஜாரி. நிஜமாகவே யாரும் அவளோட வாழ முடியாது. கண்கூடா எனக்கே, அந்த பொண்ணுக்கிட்ட பேசற போது தெரிஞ்சது.”
அந்த வாலிபனைப் பற்றி விவரித்தபடி, காரை தன் ஆபீசுக்கு ஓட்டிச் சென்றார் அட்வகேட்.
அட்வகேட் ஆபீசில் நுழைந்தோம்.
எனக்காக அபிடவிட்டை தன் உதவியாளரிடம் தயார் செய்யும்படி கூறிவிட்டு, எங்களிடம் திரும்பவும் பேச்சுக் கொடுத்தார்…
“”அப்போ உங்களோட பியூச்சர் பிளான்?” என்று, என் தந்தையிடம் கேட்க ஆரம்பித்தார்.
“”ஒரு நல்ல பையன் கிடைச்சா, ரீ-மேரேஜ் பண்ணி வச்சுடலாம்ன்னுதான். வாழற வயது இல்லையா?” என்று அப்பா ஆதங்கப்பட்டு பேசினார். நாங்கள் இருவரும் அறையிலிருந்து வெளியே ஹாலில் வந்து உட்கார்ந்தோம்.
விவாகரத்து பெறப் போகும் எனக்கு, பிற்கால வாழ்க்கை என்பது குழந்தையின் நலனை கருதியே அமைத்துக் கொள்வதாய் இருக்க வேண்டும். விவாகரத்து பெற்ற சில ஆண்கள், இந்த குழந்தையை என்னுடைய வீக் பாயின்ட்டாக கருதும் பேர்வழிகளாக அமைந்து விட்டாலும் ஆபத்து. மேலும், அதில் சில ஆண்கள் அடிபட்ட பாம்பு போல், மறுமணம் புரியும் பெண்ணை, மோசமாக எதிர்கொள்ளும் சுபாவம் கொண்டிருந்தால், திரும்பவும் பிரச்னைதான்.
குழம்பியபடி உட்கார்ந்திருந்தேன். குழந்தை யாரை பார்த்தோ, கதவை நோக்கி ஓடினான். அங்கே பிரபு, தன் ஷூவை அவசரமாக கழற்றி, குழந்தையை வாரி அணைத்துக் கொண்டான்.
“”ஒரு மணி நேரமா குழந்தை ஞாபகம்தான் சார்… இதோ அட்வகேட்கிட்டே பேசிட்டு வந்துடறேன்டா செல்லம்,” என்று குழந்தையை, அப்பாவிடம் கொடுத்துவிட்டு, உள்ளே சென்றான்.
“”அப்பா… இவரோட அட்ரசை கேட்டு வாங்கிக்கங்க,” என்றேன் என் தந்தையிடம் தடாலடியாக.
கொஞ்சம் ஸ்தம்பித்து பின், புரிந்தவர் போல் பேசலானார்…
“உனக்கென்ன பைத்தியமா? அவன், “இம்ப்பொடெண்ட்’ன்னு அட்வகேட் சொன்னது, காதிலே விழலையா? விவாகரத்து ஆன வேற பையன்கள் கிடைக்காமலா போகும்!”
“”கிடைக்கலாம்பா… ஆனா, அதிலேயும் அடிபட்ட பாம்பாய், சில ஆண்கள் மறுமணம் செய்துக்கிற பொண்ணை, ஆட்டி வைக்கணும்ன்னு வன்மமா இருந்தா என்ன ஆகும். ஆனா, பிரபு அப்படி தெரியலே… சூடு கண்ட பூனையாட்டம் அவனுடைய அனுபவம். அதனாலே, அவன்கிட்டே ஆறுதலான ஆண்மையை நிச்சயம் எதிர்பார்க்கலாம்,” சலனமின்றி கூறினேன்.
“”அது சரி… அவனை புருஷனா எப்படி ஏத்துப்பேன்னு சொல்றே?”
“”எனக்கு வேண்டியது புருஷன் இல்லை; என் குழந்தைக்கு ஒரு தகப்பன். அதுக்கான முழுத்தகுதி, அவன்கிட்டே இருக்கிறதா, என் மனசுக்கு படுது,” என்றேன் தீர்க்கமாக.
அட்வகேட் அறையிலிருந்து வெளியே வந்த பிரபுவிடம், மறுபடியும் போய் குழந்தை ஒட்டிக் கொண்டது. நான் தடுக்கவில்லை; அப்பாவும்தான்.
பிரபுவை எனக்கு முயற்சிக்க, அவரும் தீர்மானித்திருக்கலாம்!

– பாதம்பிரியா (ஜனவரி 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *