கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 23, 2023
பார்வையிட்டோர்: 2,512 
 
 

(2005ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-14 | அத்தியாயம் 15-17

அத்தியாயம்-13

அம்மான்கள் அம்மான்கள். 
அஞ்சாறு அம்மான்கள் 
அம்மான்கள் வாசலுக்கு – நீ
பொட்டி பறித்து உங்களத்தை
அரிசி எடுக்கப் போனாயிண்ணு
புறங்கையில் விட்டெறிஞ்சா- நீ 
அங்கழுத கண்ணீரு
தாயார் தலை நனைஞ்சு
ஆறு குளம் பெருகி 
ஆனை குளிப்பாட்டி 
குண்டு குளம் பெருகிக் 
குதிரை குளிப்பாட்டி 
கொண்ட சனம் சமைத்துத்தின்னும் 
நீயழுத கண்ணீரு 
மறுகா(ல்) பாயுதம்மா. 
-நாட்டுப்புறப் பாடல்

மேலுக்கு முடியாமல் சுருண்டிருந்தாள் முனியம்மா. கஞ்சி காய்ச்சக்கூட ஏலாமல் கிறுகிறுப்பு. 

ஒத்தைக்கொத்தை ராணியால் ஒரு பிரயோஜனம் இல்லாமல் போகிறது வரவர.. இன்றைக்கும் கூடக் காலையிலேயே எழுந்து கண்ணாடியும் கண்மையுமாய் சிங்காரித்துச் சிலுப்பிக் கிளம்பியவள் தான்.. இன்னமும் ஆளைக் காணோம். மணி ரெண்டாயிருக்கும். 

“ஏதாச்சும் ஆக்கி எறக்கிப் பொங்கிப் போட்டு நவ்வாலும் செஞ்சு பாத்தாத்தான ஒடம்பு வணங்கும் பொட்டச்சிக்கு? இது என்னடான்னா மூங்கில் கட்டையாட்டாமா கிண்ணுன்னு திரியுது. எங்கனப் போயி முட்டி மோதப் போவுதோ சிறுக்கி..” 

முசுமுசுவென்று முனுமுணுக்கக் கூட ஆலியில்லாமல் பலதும் நினைத்து உழன்று கிறங்கிக் கிடந்தாள். 

“எவடி நாயி? பொளுது உச்சிக்குப் போயி எறங்கினாவுட்டுக் கூட கஞ்சியக் கண்ணுல காட்டாம? களி மண்ணாட்டம் புள்ளை கெடக்குதுல்ல? அதுக்காச்சும் ஒருவா தரமாட்ட? பசிக்குன்னு கேக்கத்தெரியாத  சென்மமாயிடிச்சு. அப்படி என்னட்டி உள்ள கிளிக்கற?”

“ஆமா.பட்டும் சரிகையுமா மூச்சடைக்குது. அதாங் கிளிக்கேன்”

“என்னட்டி நலி பண்ணுத? வயசானவுட்டு புத்தி வரும்னாக்க.. நாளுக்கு நாளு மளுங்குது உனக்கு.. அப்பாரு காலைல கொஞ்சம் ஊத்திக்கினாரு… எந்திரிக்கப் பொளுதாவும். நா குந்திருக்கேன்ல? வாயத் தொறந்து கேக்கத் தெரியாம சுரேசுபுள்ள கெடக்கான்ல?” 

திண்ணையிலிருந்து இருசப்பன் கோபமாய்க் கத்தினான் 

“த்தா.. சும்மாக் கெட..என்னால ஆக்கிப் போட ஏலாது. பொட்டக் குட்டிய வடிக்கச் சொல்லு..சுடுசுடுன்னு சொல்லு சொல்ற சரியான ஆம்பளை இல்லாத பவுசுல ஆட்டம் போடுது பொசக்கெட்டவ..” 

“ஓம் பொண்ணைத் தட்டி வைக்க உனக்குத் துப்பில்ல அங்கன இங்கன நகர முடியாமக் கெடக்கறவனை விரட்டுதியே மூதேவி ஒரு  லோட்டால தண்ணி கொண்டா…”

“கட்டைல போற வரைக்கும் காரியஞ் செஞ்சே பொட்டச்சி சீரழியனும்னு எளுதிருக்கு. யாரைக் குத்தம் சொல்ல? நாலு பெத்தேன். நாலுமே பிரயோசனமில்லாத சென்மமாயிடிச்சு. ஒத்தைப் பைசாக்குத் துப்பில்லாத ஆம்பளப் பசங்க. ஒத்தக் கைக்கு ஒதவாத பொட்டக்குட்டி… த்தூ… வருது வாயில்.. நல்லதா..”

மெதுவாய்க் குறுக்கைத் தாங்கலாய்ப் பிடித்து எழுந்தாள். க்கரிக்.. முர்ரிக்கென்று எலும்பு உராயும் சப்தம் கேட்டது. அவளால் சுத்தமாக நடமாட முடியவில்லை. பாதிக்குப் பாதி நாள் பசியும் பட்டினியுமாய் நாளும் பொழுதும் ஓடுகிறது. உடம்பில் என்ன பலம் இருக்கப் போகிறது.? உயிர் மட்டும் தான் ஒட்டிக் கொண்டிருக்கிறது. 

“இந்தா…” 

“ம்…ம்….ஒம் மவனுக்கும் குடு.. “

“அம்மாக்காரிக்கு யாரும் சொல்ல வேணாம்.”

சுவரில் சாய்ந்திருந்த சுரேசின் தாவாங்கட்டையைப் பிடித்து வாயை வலுக்காட்டாயமாகத் திறக்கவைத்துத் தண்ணீரை ஊற்றினாள். பாதி உள்ளேயும் பாதி வெளியேயுமாய் வழிந்து போனது. 

“ஐயோ.எம்புள்ளக்கிப் பேச்சில்ல..சிரிப்பில்ல. அம்மா ஆத்தான்னு குரல் இல்ல 

அள்ளி வச்ச மண்ணாட்டம் 
அப்படியே கெடக்கானே
தள்ளி வச்ச கல்லாட்டம்
தடுமாறிக் கெடக்கானே… 

மாரிலடித்து அழுதாள். சுரேசை இறுக்கிப் பிடித்து கன்னத்தில் முத்தி அழுதாள். கண்ணணீரும் மூக்குச்சளியுமாய் முகத்திலிருந்து வழிய – ஏழ்மைத் தாயின் பாசத்துக்கு.வறுமை வரையறை போடமுடியுமா? இவளின் வருத்தமோ… அழுகையோ சுரேசுக்குப் புரியவேயில்லை. 

“த்தே.என்னடி ஆயிப் போச்சு? பிலாக்கணம் பாடுதியே.ஒரு வாய்க் கஞ்சி மிச்சம்னு நெனைச்சுக்க..” 

“த்தூ..நீயும்…ஒன்னோட பன்னாடை நெனப்பும்..மவனுக்கு மருந்து மாத்திரை வாங்கித் தரத் துப்பில்ல.. ஆசுபத்திரிக்கு இட்டுப் போவ ஆளுபடை இல்ல. அக்கறையா கவனிக்க ஆருக்கும் பொளுதில்ல. ரத்தக் கண்ணீரு வடிக்கேன். கஞ்சி மிச்சம்கறியே தூத்தேறி.. எங்கஞ்சிக் கடோசி சொட்டு வரைக்கி எம்புள்ளக்கித் தருவம்யா.. நீயெல்லாம் ஒரு அப்பனாங்காட்டியும் . பன்னாடை”

“என்னாடி பயாஸ்கோப்பு காட்டுத?ம்? பைசா செலவு பண்ணா சரியாயிடுமா? பிரம்மனே வந்தாங்காட்டியும் ஒண்ணும் பண்ண முடியாது. நாம பண்ற நாறத்தொளிலோட தலையெழுத்து. ஒங்கண்ணங்காரன் பித்துப் பிடிச்சி ஓடல்லியா? எங்கப்பன் கண்ணு அவிஞ்சு போவல்லியா? நடமாட்டமே இல்லாம நா முடங்கிப் போவலியா? நமக்குன்னு பாடு பேச யாரு இருக்கா? பரிஞ்சு பேசத்தான் யாரு இருக்கா? நாமல்லாம் நரகல் சென்மம். விடிவு காலம் இல்லாத பொறப்பு. யாரு நல்லது பண்ணுவா நமக்கு? எவனாச்சும் மண்டயப் போட மாட்டானா? கஞ்சிக்கு நாலு காசு கெடைக்காதா? காக்கா பலவாரம் திங்கமாட்டாமான்னு அல்லாடற தெரு நாயுங்க. அரிச்சந்திரன் காலத்துலேர்ந்தே நாமன்னா எளக்காரம்தே. இத்தினி பேரை நல்லபடியா எரிச்சு சாம்பல் சேத்துக் குடுக்கறமே. நாளைக்கே நானு மண்டையப் போட்டாக்கூட..என்னை எரிக்கவும் காசு கேக்கும் கவன்மெண்டு” 

எத்தனை வருஷக் கோபமோ? ஆதங்கமோ? திருதிருவெனக் கொட்டினான் இருசப்பன், அக்கம் பக்கத்துக் குடிசைகளிலிருந்து தலைகள் ஒரு நிமிடம் எட்டிப் பார்த்து “ப்ச.எப்பவும் போல ஏச்சும் பேச்சுதான்…” சுவாரஸ்யமில்லாமல் நகர்ந்தன.

குடிபோதை தெளிய ஆரம்பித்தது தாத்தாவுக்கு. 

”ம் அழான் அழான்ல ஏய்..” 

எந்த மொழியிலும் சேராத சாராய மொழி பேசிப் பினாத்தினார். புரண்டு படுத்தார். 

“கண்ணு அவிஞ்சு போனாக் கூடக் கனாக் காணுது கிழம். எழுந்துச்சுன்னா- கஞ்சி எங்கன்னு தான் கேக்கும்.” 

முனியம்மாவுக்கு வயித்துப் பாட்டுக் கவலை 

“ஆமா…. ராணி எங்கன? ஆளக் காணோம்?” 

“க்கும். பாதகத்தி எங்க ஒளிச்சாளோ? ஒரு நிமிசம் கூட வீடு தங்கறதில்ல. அக்கம் பக்கத்தூட்டுப் பொண்ணுகளோட ஆட்டம்தேன்.. தாழாங்குப்பத்துல இவ காலு படாத எடமே இல்ல. அவ்ளோ சுத்து. எவங்கைலயாச்சும் புடிச்சுக் குடுக்கறதுக்குள்ள இவளைக் காபந்து பண்றது – தாவுதீந்துடுது. நாலுபேரு பல்லுப் போட்டுப் பேசற மாதிரி அலைஞ்சா- கொண்டாங்குடுத்தான் வீட்டுல என்னாடின்னு கேப்பானுவளே..” 

வறண்ட அரையடித் தலைமுடியை வறட்வறட்டென்று தட்டி கோடாலி முடிச்சுப் போட்டாள். முந்தானையால் முகத்தை அழுத்தித் துடைத்தாள். குளிக்காமல், துவைத்த புடவை கட்டாமல் ஒரே நாற்றம். அழுக்கும், வீச்சமும் இல்லாமலிருந்தால் தான் கஷ்டம் என்பது மாதிரியான வாழ்க்கை. 

”உக்காந்து பாடு பேசிட்டே கெடக்கலாம். மாரியம்மா வூட்டுல ஆளாக்கு நொய்யி வாங்கியாறேன்.” 

கிளம்பி..அந்தப் பக்கம் நகர்ந்தாள். 

இந்த வழியாக டுர்ரென்று மொபெட்டில் இறங்கினான் சின்னராசு.


“ம்… நல்லாத் தின்னுப்பா முட்டைப் பொரியல் புடிக்குமில்ல? போட்டுக்க. எத்தினி நாலு களிச்சுச் சோத்தைக் கண்ணுல பாக்கீக? மட்டன் பிரியாணி சுரேசுக்கு ரொம்ப இஸ்டம் பாரேன். அலங்க மலங்க முளிச்சிட்டுக் களிமண்ணு கணக்கா உக்காந்திருக்கான். இவந் தலைஎளுத்து அம்புட்டுத்தேன். அதான் இந்த சோலியே வேணாம்னுட்டு ஓடியே போயிட்டன்…” 

தம்பியை ஆசையாய்த் தடவிக் கொடுத்தான் சின்னராசு. பதினெட்டு வயசுப் பையனாகவா இருக்கிறான் தம்பி? உணர்வில்லை உணர்ச்சியில்லை பசியில்லை தாகமில்லை மூச்சு மட்டும் மேலும் கீழுமாய் வெட்டிப் போட மரக்கட்டை மாதிரி ஒரே இடத்தில் கிடப்பு. உடம்பொறந்த பாசம் சின்னராசுவுக்குக் கண்ணீர்.. 

“பேராண்டி போடற பிரியாணி. எம்பேராண்டி.. எவடி சொன்னது சின்ராசு தண்டச்சோறுன்னு… ராசாடி எம்பேராண்டி…” 

தாத்தா பாதி கிறக்கமும் பாதி முழிப்புமாய் அவுக்அவுக் அவுக்கென்று தின்றார். கண் தெரியாமல் அலுமினியத் தட்டில் தடவிப் பார்த்து பிஞ்சு எலும்பாய் எடுத்துக் கடித்தார்.

இருசப்பனுக்கும் கண்ணிலும் மூக்கிலுமாய் நீர் வழிந்தது. ஆனாலும் வாய்கொள்ளாத அளவுக்குப் பெரிய பெரிய கவளமாய்த் திணித்துக் கொண்டான். 

“ஆமா.இம்புட்டு நாளா எங்கன காணாடைஞ் சுட்ட அப்பன், ஆமி உசிரோட இருக்கமான்னு எட்டிப் பாத்தியா?” 

ஒவ்வொரு விரலாய்ச் சப்பினான் இருசப்பன். 

“அட..என்னப்பா…நீ? கவுன்ஸிலரு ஐயாவுக்கு இப்பல்லாம் நாந்தேன் நிழலு. அல்லா நேரமும் நா இல்லாம ஒண்ணுமே ஓடாது. அம்புட்டுக்கு ஆயிப் போச்சு. எலக்சன் வேற வருதா? மூச்சு விட நேரமில்ல..க்கும்..வரல்ல போவலேன்னு பொலம்பாத. இப்பத்தேன் ஒரு பிடிமானம் கெடைச்சிருக்கு. புடிச்சு மேல வர வேணாமா? குச்சுக்குள்ளாறவே அடைஞ்சு கிடந்தா உன்ன மாதிரி பொணந்தேன் சுடணும் சுரேசு மாதிரி பித்துப் புடிச்சுத்தேன் உக்காரணும்…வேணாம்னுதான் வேற லைன்ல போறேன்..

கண்முழுசும் பெரிசாய்க் கனவுகள் சின்னராசுவுக்கு. 

பிரியாணி வாசனையை மோப்பம் பிடித்து வாசலில் ஐந்தாறு நாய்கள் குலைத்துக் கொண்டும். வாலைத் தழைத்துக் கொண்டும் சுற்றி வந்தன.

வாஸ்தவம்தான். சின்னராசு.. கவுன்ஸிலருக்குக் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிவிட்டான். இருபத்துநாலு மணி நேரமும் கூடவே இருந்து அங்கே இங்கே நகராமல் கைக்காரியத்தில் உதவி செய்தான். அரசியலில் மேலே வர எடுபிடியாய்த் துவக்கத்தில் இருப்பது அவசியம் தானே.? 

தாழாங்குப்பத்துக்குத் தார்ச் சாலைபோட வேண்டுமென்று ஒப்புதலும் பினாமி பெயரில் காண்டராக்ட்டும் வாங்கி விட்டார் கவுன்ஸிலர். சாலைய அது? ரெண்டு மூணு திசையில் பத்துப் பத்துக் கிலோ மீட்டருக்குக் கல்உப்பு மாதிரி உதிரிஉதிரியாகக் கல்லும் செம்மண்ணும் ரப்பிஸுமாய்க் கலந்தடித்துத் தார் தெளித்துப் போடப்பட்ட ரோடு அது. 

‘கூடமாட இருந்து கவனிச்சுக்க சின்ராசு. அங்க இங்க கருங்கல்லுல தாரு தெளிச்சுவுடு. ஒருத்தனும் பல்லுப் போட்டு கேள்வி கேக்கப்படாது. புரியுதா என்ன சொல்லுதேன்னு..?’ 

‘ஐயா…நீங்க கோடு போடுங்க.நா ரோடு போடறேன். விலாவாரியாச் சொல்ல வேணாங்கய்யா.’ 

சொன்ன மாதிரியே செய்து காட்டினான். கோவணத் துணி மாதிரி குறுகலான சாலை முளைத்தது. ஒருத்தனும் கேள்வி கேட்காத மாதிரி தாழாங்குப்பத்து ஆட்களைச் சரிக்கட்டினதில் சின்னராசு மேல் அவருக்கு நம்பிக்கை ஜாஸ்தியானது.. 

“இந்தா கைச் செலவுக்கு வச்சுக்க.. ஏம்ப்பா.. உன் வண்டியைக் குடுத்துவுடு… சின்ராசு பெத்தவங்களைப் பாத்துட்டு வரட்டும்.” 

ரெண்டாயிரம் ரூபாயை கொடுத்தார். 

இதோ..குடிசையெல்லாம் பிரியாணி. 

“ஆமா..சம்பத்து காங்கல்லியே எங்கன? வந்த நேரந்தொட்டு ராணியவும் காணம்..?” 

“வயசுப்பய. எளவட்டம். சம்பத்து இந்தா அந்தான்னு போயிடுவான். இந்தப் பொட்டக்குட்டி ராணி தான் காலு தங்காம காத்தா சுத்துது. காலா காலத்துல எவங் கையிலயாச்சும் புடிச்சுக் குடுக்கணும் சின்ராசு. ஒத்தக்கொத்த பொண்ணு ஆம்பளைக் கண்காணிப்பு இல்லாம கட்டுக்குள்ள வாராம சுத்துது.. இம்புட்டு நேரமும் உங்கம்மாக்காரி புலம்பித் தீர்த்தா… தலையெடுத்து அவளுக்கொரு வழிகாட்டுலே.” 

இலையைத் தூர எறிந்து கை கழுவினான் இருசப்பன். 

முனியம்மா அந்தக் கோடியில் வரும்போதே வண்டியும் நாய்கள் கூட்டமுமாய்க் குடிசை வாசல் தெரிந்தது. சின்னராசு குரல் கேட்டது. “அந்த சின்ராசு வந்துட்டாம் போல.பசிக்குதும்பான். நொய்யரிசி கூட இல்லாம வெத்துக்கையிலே கஞ்சி காச்சவா? மாரியம்மா சினிமாக்குப் போயிருக்கு, வூடு பூட்டிருக்கே..என்னா பண்ணட்டும்..?”

வருத்தமும் அவளோடு துணைக்கு நடந்தது. 

அத்தியாயம்-14

எல்லோரும் தின்னுங்கறி
ஆட்டுக்கறி கோழிக்கறி
தம்பிப்பய தின்னுங்கறி
சரியான அடுப்புக்கரி.. 
-மேற்குத்தமிழகநாட்டுப்புறவியல் 

திடீரென்று பெரிய பெரிய துளியாய் மழை பிளந்து கொட்டியது. இந்த மழை நேரமில்லாத காலமில்லாத மழை. ரெண்டு மூணு மாசத்துக்கு முன்னால் வெள்ளமாய்ப் பெய்து குடிசையெல்லாம் நாஸ்தி பண்ணின மழைக்கு இன்னமும் பசி தீராமல் சாயங்காலம் வானம் கிழித்துப் பெய்தது. 

கோயிந்தம்மாவுக்கு ஏற்கனவே பூஞ்சை உடம்பு லேசாய்க் காற்றடித்தாலே பறந்து விடுவது மாதிரி இருப்பாள். சாலைகளைப் பெருக்கித் தூசியையும் குப்பையையும் ஜோடியாகச் சுவாசிப்பதால், ஆஸ்துமாவுக்குக் கொண்டாட்டம்தான். 

திருவல்லிக்கேணி சாலையைப் பெருக்கி விட்டுக் கிளம்பலாம் என்றதும்… சடாரென்று மழை பிடித்துக் கொண்டது. கடற்கரை பக்கத்திலென்பதால்-நிமிஷமாய் வானம் இருண்டது. காற்றும் மழையுமாய்ச்
சுழன்றடித்தது. 

“மழை எப்ப நிக்க? நா எப்ப வீடு போவ? ராவுக்குத் தூங்கினாப்பலதான். இளுப்புக்கும் மளைக்கும் கொண்டாட்டந்தேன்.” 

முணுமுணுத்தாள். பிளாட்பாரத்திலிருந்த ஒரு டீக்கடைக் கூரையில் தலைநனையாமல் ஒதுங்கினாள். மழைக்குப் பயந்து சடசடவென ஒதுங்கினவர்கள் வரவர, இவள் பின்னால் தள்ளப்பட்டாள். 

“இங்கனயாச்சும் தலைநனையல்ல. வூட்டுல எல்லா எடமும் பொத்தல் தான். வெறகுக் கட்டையக் காய வச்சிருந்தேன். செல்லிப் பொண்ணு எடுத்துச்சோ இல்லியோ..சின்னப்பொண்ணு வேலைக்குப் போயிருக்குமா? இந்தப் பேய் மழைல பொணம் எரிக்கவா முடியும்? பாவம் அவ. அப்பங்காரன் புத்திப் பேதலிச்சுப் போனதுக்கு, இவளாக் கண்டு தோள்ல தாங்குதா…”

புகையிலையைக் கிள்ளி வாயில் அதக்கினாள். காரமாய்ச் சாறு உள்ளே இறங்கியது. மழைக்குச் சுகமாயிருந்தது. பசித்த வயிறின் முணுமுணுப்புக்கு இதமாயிருந்தது. மழை இப்போதைக்கு நிற்காது  போலிருந்தது. 

காந்தி பிறந்த நாளாம் சிலைக்கு மாலை போடப் பெரியவர்களெல்லாம் நாளைக்கு வருகிறார்களாம். ஆபிஸில் சொல்லி அனுப்பினதால்- காலையிலிருந்து பெருக்கிச் சுத்தம் செய்து கை விண்டு போனது மாதிரி வலிக்கிறது. 

ஆனாலும் ஒரு திருப்தி. 

இடுப்புச் சுருக்குப் பைக்குள்… கூலிப்பணம் காண்ட்ராக்ட்காரருக்குப் போனது போக பாதிக்குப் பாதியாவது கிடைக்கிறதே சந்தோஷந்தான். 

“கஞ்சி கூட ஆக்க வேணாம். போயி அக்கடான்னு கட்டைய சாய்ச்சா போறும்….” 

எக்கிப் பார்த்தாள் பஸ் வருகிறதா என்று. 

மழையில் நனைகிறோமே என்கிற பதட்டமேயில்லாமல் தாவணியைத் தலையில் ரெண்டு பேருக்குமாய்ப் போட்டு ராணியும் கருப்பனும் வருவது தெரிந்தது. 

சினிமா மாதிரி சிரித்துப் பேசிப் பூரிப்போடு நெருக்கமாக வந்து டீக்கடையில் ஒண்டினார்கள். தெரிந்தவர்கள் யாரும் கவனிக்க மாட்டார்கள் என்கிற நம்பிக்கையோ என்னவோ… 

“ப்ச.புடிக்கவேயில்ல ராணி…” 

“என்னது புடிக்கல்ல?” 

“இப்பவே வூட்டுக்குப் போறது தான் புடிக்கல. சினிமா விட்டு ஹோட்டலு. இன்னம் கொஞ்சம் பீச்சுல உக்காந்திருக்கலாம்.”

“அய்ய..ஆச தோச அப்பள வடை – இம்மா நேரம் படகு அடில சிலுமிஷம் பண்ணது பத்தலியா? காலைல கெளம்பினது. மழை கொட்டுது. இருட்டிக்கினு வருது. இப்பவும் வூடு திரும்பலேன்னா அம்மா நாரசாரமாப் பேசும்..”

“எனக்காகத் திட்டு வாங்கமாட்டியா?”

“ம்…திட்டு வாங்கலாம்..பயப்படறது அதுக்கில்ல. நாளைக்கு வெளில வுட மாட்டா. அப்புறம்.பாக்கலேன்னா உசிரு போற மாதிரி இருக்கும்…”

பதிலைக் கேட்டு உருகியே போனான். 

“என்னா கரிசனம் ராணி…இப்பவே உன்னைக் கண்ணாலம் கடடிப் பொத்திக் காபந்து பண்ணணும்னு இருக்கு..” 

கோயிந்தம்மாவுக்குக் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றின மாதிரி எரிந்தது. 

‘இந்த ராணி என்னா..கவுரதைய நாறடிக்கறா..? வூட்டுக்கு இது தெரியுமா? நாத்தனார்க்காரிக்குத் தெரிஞ்சா குடலைப் பொளந்து பொலி போட்டுருவாளே.. நானே வாய் தவறி ஏதோ தப்பா தரங்கெட்டுப் பேசிட்டேன்னுதான… இதுநா வரைக்கும் முகம் குடுத்துப் பேசாம இருக்கா இவ அம்மாக்காரி. இந்தச் சிறுக்கி இப்படி ஊரு மேஞ்சா..அருவாதான பேசும்.’ .

ஒட்டியிருந்த கொஞ்ச நஞ்ச பாசத்தில் கோயிந்தம்மா நாலையும் யோசித்துப் பார்த்தாள். 

சர்ரென்று மழை நீரை வீசியடித்து வந்து நின்ற பஸ்ஸில் தாவி ஏறினார்கள் ராணியும் கருப்பனும். ஒருவர் மடியில் ஒருவர் உட்காருவது மாதிரி ஆண்கள் இருக்கையில் உட்கார்ந்தார்கள். 

“மூணு தாளாங்குப்பம்…” டிக்கெட் வாங்கி அவர்களிடம் நீட்டி விட்டு ஒன்றுமே பேசாமல் பெண்கள் இருக்கையில் உட்கார்ந்தாள் கோயிந்தம்மா அதிர்ச்சியில் உறைந்தே போனார்கள் இரண்டு பேரும். மழை ஜாஸ்தியாய் வீசியடித்தது. 


“சீமெண்ண ஒரு சொட்டு இல்ல வூட்டுல.. இருந்தா ஒரேயடி அபிசேகம் செஞ்சு…தீக்குச்சி கிளிச்சுடுவேன். ஒரே முட்டாப் போயிடு. மூதேவி… மொளைச்சு மூணு எல வுடல. பயாஸ் கோப்பு காட்டுதியா? தட்டுவாணிச் சிறுக்கி. த்தூ. உப்புப் போட்டுத்தான திங்கற? கொளுப்பெடுத்து அலையறியே நாயி. பொட்ட நாயி. மாரியம்மா சொல்லுது. சினிமாக் கொட்டையிலே எல்லாரும் ஒங்களைத்தான. வேடிக்கை பாத்தாளுகளாம்? – தட்டிக் கேக்க ஆம்பளை இல்லன்னு தறிகெட்டு ஆடுதியா? ம்? வௌக்குமாறு பிஞ்சிடும்..தேவடியா முண்ட”. 

துடைப்பத்தால் அடிஅடியென்று பின்னினாள் முனியம்மா… வெளியே பெய்த மழையின் சத்தத்தையும் மீறிக் குரல் கேட்டது. 

“பட்டினி கெடந்தாலும் நம்ம பேரு வெளில் நாறாதுடி… பெரிய மனுஷி ஆன நாள்லேலிருந்து உன் காலு வூட்டுல தங்குதா? கண்ணு மையி..வளையலு..ரிப்பனு. பொட்டுன்னு மினுக்கற..சரி சின்னப்பொண்ணு தானேன்னு விட்டா..இப்பவே புருஷன் தேடுதியா? காலை முறிச்சிடுவேன் ஜாக்கிரதை.” 

முதுகில் மொத்தினாள். அத்தனை அடிக்கும் அழுத்தமாய் கல்லுளி மங்கனாய் நின்றாள் ராணி. ஒரு சொட்டுக் கண்ணீரில்லை. ஒரு துளி வலியில்லை. ஒவ்வொரு அடிக்கும் கருப்பனை நினைத்துக் கொள்ள, வேதனை தெரியவில்லை. அவள் பார்த்த சினிமாவில் கூட இப்படித்தானே? காதலை எதிர்த்த பெற்றோரைக் கதாநாயகி எத்தனை தைரியமாய் எதிர்த்தாள்? எந்த அம்மாவும் எடுத்த உடனே காதலை ஒத்துக்கொள்ள மாட்டாள் என்று தானே காட்டினார்கள்? உதட்டைக் கடித்துக் கண்ணீரைக் கட்டுப்படுத்தினாள் ராணி. 

சின்னராசு தந்த பிரியாணியை வயிறு முட்டத் தின்று ஓர் உறையும் கிழித்து ஊற்றிக் கொண்டு கோணிப்படுதாவால் மூடிக் குடிசையின் மூலையில் சுருண்டு சுகமாய்த் தூங்கினதில் தாத்தாவுக்கும் இருசப்பனுக்கும் உலகமே மறந்து போயிருந்தது. சம்பத்து போய் விட்டான் சுடுகாட்டில் சோலிஎன்று. சுரேசு வழக்கம் போல எதுவுமே மனசில் பதியாமல்-மழையா வெயிலா தங்கச்சியா அம்மாவா எதுவுமே அடையாளம் காணாமல். 

“சின்னராசுகிட்டச் சொல்லி சட்டுப்புட்டுன்னு மாப்பிள்ளை தேடச் சொல்லுதேன். கருப்பன்லாம் ஆம்பளைலே சேத்தியாடி? ஒரு வாய் கஞ்சி ஊத்த வக்கில்லாத பிச்சைக்கார நாயி. அனாதைப்பய அதான் ஊர் மேயறான்..” 

ராணியின் குடுமியைப் பிடித்து உலுக்கினாள் முனியம்மா. கோபத்திலும் ஆத்திரத்திலும் அவள் உடம்பு வெடவெடவென்று ஆடியது.

மாரியம்மாவை நினைக்க நினைக்க ஆத்திரமாய் வந்தது ராணிக்கு. கோள்மூட்டி போட்டுக் கொடுக்கும் பன்னாடை சினிமாவுக்கு வந்தாளா? யார் கண்டது? சினிமாவையோ வந்தவர்களையோ யார் கண்டது? பஸ்ஸில் கோயிந்தம்மாவும் பார்த்தாளே?. அது பரவாவில்லை. பேச்சு வார்த்தை இல்லாமல் அவள் வந்து கோள் சொல்ல மாட்டாள். அடியெல்லாம் வாங்கிக் கொண்டு மனசில் பலதும் நினைத்தாள் ராணி.

“அடப்பாவி மவனே.. நடக்கறது எதுவுமே தெரியாம பொணமாட்டம் கெடக்கியே… அண்ணங்காரனுவ தலையெடுத்து நாட்டாமை பண்ணா இந்தத் தறுதலைச் சிறுக்கி இப்படி ஆட்டங்காட்டுமா.? இந்தக் குச்சுக்குள்ள முடங்கியிருக்கியே போ… செத்துத் தொலைங்கடா எல்லாருமா… தாத்தா.. அப்பன்… மவன் எல்லாருமாப் போய்ச் சேருங்க.எங்கவலையக் கேக்க நாதியில்ல. கண்ணீரு தொடைக்க நாதியில்ல. ஏன்லா கெடக்கீங்க அல்லாரும்? இந்தப் பொட்டச்சி ஊர்மேய ஆரம்பிச்சிட்டா..இந்தக் கண்றாவியெல்லாம் கண் – கொண்டு காங்கணுமா நானு.? எஞ்சாமி என்னைக் கொண்டு போயிடு..”

ஆற்றாமையால் சுரேசுவையும் மொத்தினாள் முனியம்மா, மாரடித்து அழுதாள். அடியும், ஆத்தாவின் கண்ணீரும் புரியாமல் பரப்பிரும்மாய் இருந்தான் சுரேசு. ஒவ்வொரு திட்டும் ராணியைப் பாறையாய் இறுக்கின. முனியம்மாவுக்குத் துணையாய் மழையும் குடிசைக்குள் ஒழுகியது. 


சுடுகாட்டு ஆபிஸ் படியில் கன்னத்தை முட்டியில் முட்டுக் கொடுத்து உட்கார்ந்திருந்தாள் சின்னப் பொண்ணு. 

கண்ணெல்லாம் கவலை. 

“மழை எப்ப நிக்க? சோலிய எப்ப ஆரம்பிக்க? முடித்தாலாவது கையில் ஏதாவது கூலி கிடைக்குமே என்கிற நம்பிக்கை. 

கிழக்கு மூலையில் முணுக்முணுக்கென்று விளக்கு எரிந்தது. அலுவலகத்திலும் வேறுயாருமில்லை. அதிகாரி மணிமாறன் சேதியைச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். மனைவியோடு சினிமாவுக்குப் போகிறாராம். 

மழை நிற்கவில்லை என்றால் நாளைக்குத்தான் வந்து எரிக்க முடியும். நல்லவேளை அனாதைப் பொணம்தான். பால் ஊற்று. சடங்கு, சாம்பல் சேர்த்துத் தருவது என்ற அவசரமில்லை. எரித்து முடித்தால் போதும். வேலையை முடித்தால், கஞ்சிக்குக் கூலி கிடைக்கும். 

ஒரு வாரமாய்ச் சடலம் ஏதும் வராததால் கூலி கைக்குக் கிடைக்கவில்லை. எரிக்க ஏதும் வரா விட்டால் என்ன? வயிற்றில் பசிநெருப்பு சுட்டெரிக்கிறதே.. 

மத்தியானம் ரெண்டு சொம்புத் தண்ணீரைக் குடித்துக் கிளம்பி வந்தாள். மூணு மணி போல ரயில்வே பாடி ரெண்டும் ஆஸ்பத்திரி சடலமும் வந்து சேர்ந்தன. செத்து எத்தனை நாளாயிற்றோ? நாற்றம் குடலைப் புரட்டியது. மூக்கில் கைக்குட்டை கட்டின போலீஸ்காரர்களுக்கும் ரயில்வே ஆட்களுக்குமே தலைசுற்றி மயக்கமாய் வந்தது. கிறங்கிப் போனார்கள். 

“நீ எப்படிம்மா இந்தக் கண்றாவிய எரிக்கப் போற? ஆம்பளையாளுக யாருமில்லையா?” 

“ம்ஹீம். நா முடிச்சுடுவேங்க. பழக்கந்தான்.”

“பொம்பளைப் புள்ளைக்கி ஏன் இந்த நாறத் தொழிலு? சரி கெளம்பறோம். இன்னுங் கொஞ்சம் நின்னா எங்களைத்தான் எரிக்க வேண்டியிருக்கம்”

விழுந்தடித்து ஓடி விட்டார்கள். 

அப்போது ஆரம்பித்த மழை தான். இன்னமும் கொட்டுகிறது. ஒரு நாளும் இல்லாமல் இன்றைக்கு வேதனை ஜாஸ்தியாயிருந்தது. வெறுப்பாயிருந்தது.. “ச்சீ. இதென்ன பொழப்பு” என்று வேதனையாயிருந்தது. 

“யாரும் மண்டையப் போடலேன்னா குடும்பத்தோட பட்டினிதான் கெடக்கணும்னா கேவலம். இந்தச் சுடுகாட்டுலேயே மாசச் சம்பளம் போட்டுக் குடுத்தா ராவாப்பகலாக் கூட வேலை பண்ணலாம். வேலைக்குக் கூலின்னாத் தான் கஷ்டம். சோலி இல்லாத நாள்ல வவுத்துல ஈரத்துணியவா போட்டுக்க முடியும்? எத்தனையோ தரம் ஆபீஸருங்களுக்கும் மனு எளுதிக் குடுத்தாச்சு. யாருமே நல்லது பண்ண மாட்டேங்கறாங்க. இந்தச் சுடுகாட்டுலேயே நானும் எரிஞ்சு சாம்பலாக வேண்டியது தான்” 

துணைக்கு யாருமில்லாமல் – மழையைப் பார்த்துத் தனக்குத் தானே பேசினாள் சின்னப்பொண்ணு. 

இரும்புக் கிராதிக் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. கண்னை சுருக்கிப் பார்த்தாள். சம்பத்து சொட்டச் சொட்ட நனைந்து கொண்டு வருவது தெரிந்தது. 

“அடடா.. சம்பத்து வராம இருந்திருக்கலாமே. மழை நிக்கலே. நாளைக்குப் பார்த்துக்கலாமில்ல.?”

“என்ன இடிமழைன்னாலும் நீங்க டூட்டிக்கு வந்திடுவீங்க. எனக்காவக் காத்திருப்பீங்களே..அதான்…”

குச்சிக் குச்சியான கையும் காலுமாய் இருந்தான் சம்பதது. குளிரில வெடவெடத்தான். பல் கிட்டித்து ஆடியது. முளைத்தும் முளைக்காமல் மீசை. சின்னராசுவின் சாடை இவனுக்கு. 

“ஆஸ்பத்திரி, போலீஸ் பாடி வந்துருக்கு..” 

“ப்ச… வெறும் பொணத்தக் கூட நிமிசமா எரிக்கலாம். இதை எரிக்கறதுக்குள்ளே உசிரே போயிடும்…” 

சின்னப்பொண்ணு மாதிரியே அவனும் புலம்பினான். 

“அம்மாக்காரி கஸ்டப்படறா. வூட்டுல மணி அரிசி இல்ல சீமெண்ண இல்ல. எம்மா நேரந்தான் பச்சத் தண்ணி குடிக்க? நாய் மாதிரி நக்கித் திங்கற பொழைப்பா இருக்கு நம்மளுது. ரெண்டெளுத்துப் படிச்சிருந்தாவுட்டு கவுரதையாப் பொளைக்கலாம். எரி கூலி-பத்து ரூவா ஜாஸ்தியாப் போட்டு தர மாட்டேங்கறானுவ ஆபீஸ்ல. மாச சம்பளமும் இல்ல. குப்பம் குப்பமா ரோடு போடுது. திங்க சோறு இல்ல. தாரு போடறானுவ கவன்மெண்டுல…” 

“அப்பத்தான அவனுக திங்கமுடியும்..” 

“அதான் சின்ராசுண்ணே இது வேணாமுன்னு ஒரேமுட்டா ஓடுது. நானும் அண்ணங் கூடவே ஒட்டிக்கலாமான்னு பாக்கேன். சுரேசு மாதிரி திண்ணைல சமாதியாயிடக் கூடாது.” 

நாலும் யோசித்துப் பேசினான். இந்த வயசுக்குள் எத்தனை இழப்புகளைப் பார்த்திருக்கிறான். தாத்தா அப்பா அண்ணன் என்று எல்லோருமே சுடுகாட்டு வேலையால் நடைப்பிணமானவர்கள் தானே. 

“முன்ன பின்னன்னாலும் மொடமொடன்னு நாலு காசு பாக்கலாம்… கவன்மெண்டு வேலையெல்லாம் அரசியல்ல இருக்கவனுகதான பினாமில வாங்கிடறானுவ…அதான் அங்க எவங்கூடவாச்சும் ஒட்டிக்கலாமான்னு பாக்கேன். பொணம் எரிச்சு நாலு வெஞ்சனம் வச்ச சோறும் துன்ன முடியாது. நல்ல துணி மணி போட முடியாது. நாளு கௌமைல நாலு எடத்துக்குப் போய் வர முடியாது. எப்பவுமே காலியான பைதான் சட்டைல..” 

“உங்கண்ணன் சௌக்கியமா? நாளாச்சு பாத்து..”

“ம்…மத்தியானம் வந்துச்சு..மொபெட்டுல வந்துச்சு. பிரியாணி வாங்கியாந்துச்சு. ரொம்ப அக்கறையா ஒங்கள விசாரிச்சுது. இது கூட அண்ணன் குடுத்ததுதான்.” 

ரெண்டு நூறு ரூபாயைச் சட்டைப் பையிலிருந்து எடுத்துக் காட்டினான் சம்பத்து. 

விசாரிப்புக்கே மழைத் தண்ணீர் மாதிரி குளிர்ந்து போனாள் சின்னப்பொண்ணு. ஆனாலும் சின்னராசு வந்து பார்க்கவில்லையே என்கிற வருத்தம். மொபெட்டில் வந்ததும் ஆள் மாறிவிட்டானோ என்கிற வருத்தம். ஆனாலும் சுதாரித்துக் கொண்டாள். 

“ஒங்கண்ணனாச்சும் நல்ல படியா வரட்டும்” 

மனசு முழுவதும் சின்னராசுவை நினைத்துச் சொன்னாள். 

“மளை நிக்கற பாடில்ல. நின்னாக்கூட ராவுக்குள் எரிக்க முடியாது. குளிர்க்காத்துல நெருப்புப் பத்திக்காது. வறட்டிதான் அனாவசியமா ஜாஸ்தியாவும்…கெளம்பலாம் வா சம்பத்து”. 

இருட்டை – வாழ்க்கையிலும் பழக்கப்படுத்தி நடந்தார்கள் ரெண்டு பேரும். 

– தொடரும்…

– தகனம் (நாவல்), முதற் பதிப்பு: 2005, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *