கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 19, 2023
பார்வையிட்டோர்: 2,698 
 
 

(2005ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12

அத்தியாயம்-9

பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்
பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கும் மறந்தன உணரும்
புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்.. 
-பட்டினத்தார். 

“யக்கோவ்.”

“ம்…” 

“யக்கோவ் ” 

குரலைத் தணித்துக் கிசகிசுப்பாய்க் கூப்பிட்டாள் செல்லி. 

“சொல்லித் தொலைடி எத்தினி ம் கொட்டறது?” 

வயிற்றை எக்கி ஊது குழலால் அடுப்பை ஊதின சின்னப் பொண்ணு சுள்ளென்று விழுந்தாள். 

மனசுக்குள் கவலை – மூட்டம் போட்டிருக்கும்போது வார்த்தையும் நெருப்பிலும் எரிச்சலும் கோபத்திலும் குளித்துத் தானே வருகிறது. 

மூனு நாளாய் இதே குடைச்சல். 

வேலை தேடி டவுனுபக்கம் போன சின்னராசுவை ஆளையே காணோம். 

“தலைய அடகு வச்சாலும் வப்பேனே தவிர.. நெருப்பள்ளிப் போடற தொளிலு எனக்கு வேணாம் தாயி.. செத்தப்புறம் தான் எனக்குச் சுடுகாடு.” 

…இப்படிச் சிலுப்பிக் கொண்டு போனான்.. ஏன்தான் இந்த அடாவடிப் பிடிவாதம் தெரியவில்லை… 

இந்த வருத்தத்தோடு, மழையின் ரவுசு வேறு. மனசெல்லாம் போல வாரக் கதையை அசை போட்டது சின்ன பொண்ணுக்கு 

சுழன்றடித்த மழையில் குடிசையின் ஒரு பக்கம் சுவர் அப்படியே உட்கார்ந்து விட்டது. கூரையும் பறந்து விட்டது. எடுத்துக் கட்ட வேண்டும். கூரை பிய்ந்ததில் இப்போதும் கூட ஒரு பக்கம் முழுசும் பொத்தல்தான். 

நல்ல நாளிலேயே பைசாவுக்கு உன்னைப்பிடி என்னைப்புடி கதைதான். மழையில் வருமானமில்லை. எந்தக் காலத்தில் காசு சேர்த்து எந்தக் காலத்தில் கூரை போட ஆம்பளைத் துணையில்லாமல்… நாலு பெண்கள் மானமாய் இருக்கக் கூரை வேண்டாமா? குடிசைவாசிகள் என்றால் மான அவமானம்  கிடையாதா? 

இந்தத் தரம் மழை ஜாஸ்திதான். 

நாள் முழுசும் வெறி பிடித்த மாதிரி கொட்டித் தீர்த்து விட்டது.

ஒரு நிமிஷம் ஓய்வெடுத்தால் கூடப் பிரச்சனையாகிவிடும் என்பது மாதிரி செமமழை. 

தாழாங்குப்பம் தாழ்வான பள்ளத்திலிருந்தது போதாதா? குப்பமே மூழ்கிப் போனது. கொஞ்சம் கொஞ்சமாய்த் தேங்க ஆரம்பித்து முழங்கால், இடுப்பு, மார்பு என்று தண்ணீரின் அளவு கூடிக் கொண்டே போனது. ஒவ்வொரு ஜனமாய் டிரங்குப் பெட்டி, மண்சட்டி, கயிற்றுக்கட்டில் துணிமணிமுட்டை என்று வாரிக் கொண்டு ஏத்தத்திலிருந்த சத்துணவுக் கூடத்தில் நுழைந்து கொண்டார்கள். 

குப்பம் முழுசும் மழைவெள்ளம். 

பக்கத்திலிருந்த ஏரியைத் திறந்து விட்டதில் குப்பம் அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து போனது. குப்பத்தில் ஈ, காக்கா இல்லை. நல்ல நாளிலேயே அடுப்பெரிக்க வக்கில்லாதவர்கள்- இப்போது என்ன பண்ண? 

வெள்ளமாய்த் தண்ணீர் பாய்ந்த வேகத்தில் அலுமினியச் சட்டிகள். ஆடுமாடுகள். கோழிகள் எல்லாம் அடித்துப் புரண்டன. மண்சாலைகளும், குடிசைகளும், மனிதர்களும் தலையோடு காலாய் நனைந்து சொதசொதவென்று சேற்றுக் குழம்பாய் நின்றார்கள். மொத்தத்தில் நனையாத ஆளுமில்லை. பொருளுமில்லை. 

முதல் ரெண்டு நாள்..லாரியில் சூடாய்ச் சோறு வந்து இறங்கியது. ரொட்டியும் டீயும் கூட வந்தது. 

ஒரு புறம் துணி காயப் போட்டுக் கவலையோடு பெண்கள் குத்த வைத்திருக்க..மழைக்குச் சுகமாய் பீடியைத் தம் கட்டி உறிஞ்சின ஆண்கள் சாயங்காலம் உறையை உறிஞ்சிக் கதகதப்பாய் ஆக்கிக் கொண்டார்கள். 

என்ன மழை? என்ன வெள்ளமானால் என்ன? நாலு பொடிக் குழந்தைகளும், சின்னஞ்சிறுசுகளும் ஒன்றாய்ச் சேர்ந்தால். கும்மாளத்துக்கும் விளையாட்டுக்கும் கேட்கவா வேண்டும்? சின்னராசுவுக்குச் சின்னப்பொண்ணு மேலேதான் கண். அம்மாக்காரிக்குப் பயந்து அதிகம் பேசவில்லை. வாயால் வார்த்தையாய்ப் பேசினால் தானா? மனசும் மனசும் ஆயிரம் பேசியதே..ராணி, தனம், செல்லி என்று கும்பல் கூட்டிக் கூழாங்கல் பாண்டி என்று ஜோடி சேர்த்து ஆடினார்கள். மணி, கருப்பனோடு சுரேசும். சம்பத்தும் – மற்ற பெண்களை வேடிக்கை பார்ப்பதும் பெரிசுகளுக்குத் தெரியாமல் கும்பலாய்ப் போய் திருட்டு தம் அடிப்பதும் உறையிலிருக்கும் மிச்ச சொச்ச சாராயத்தை நொட்டை விட்டு ருசி பார்ப்பதுமாய்- ஒரு வாரம் சுகமாய்த்தான் ஓடியது. 

முதலில் குழம்பும் சோறும் வந்தது.
ரெண்டு நாள் கழித்து ரசமும் சோறும்
அப்பறம் வெறும் மொக்கைச் சோறு 
ஐந்தாம் நாளே அதுவும் நின்று போனது. 

இளசுகள் எல்லாம்.சின்னப் பொண்ணு.சின்னராசு தலைமையில் போய் அதிகாரிகளிடம் ஆர்ப்பாட்டம் செய்ய ஆளுக்கு எழுபத்தஞ்சு ரூபாயும் அரைக்கிலோ அரிசியும் தந்து வாயடைத்து விட்டார்கள். 

“குடிசையெல்லாம் விழுந்து கிடக்கு… அடுப்பெரிக்க வழிஇல்ல.. இக்கினியூண்டு தாரீக.” 

கும்பலாய்க் கேள்வி பிறந்தது. 

“அதெல்லாம் தெரியாது. கவுன்சிலர்கிட்டக் கேளுங்க அவரு சொன்னதை நாங்க பண்றோம்.” 

பட்டும்படாமலும் அதிகார வர்க்கப் பதில்.. 

“சரி சும்மா இரு சின்னு..இப்பத்தி அவசரத்துக்கு செலவுக்காச்சு. ரவுசு பண்ணா உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணான்னுடுவாக இவங்க”

சின்னராசு சமாதானப்படுத்தி அழைத்து வந்தான் 

இந்தப் பணத்தைப் பட்டுவாடா பண்ணும் போதும்..ஆரம்பத்தில் வந்திறங்கிய சோற்றையும் வாங்கத் துடித்துச் சண்டை போட்டுக் குழப்பமாய் ரகளை பண்ணியவர்களை ஒழுங்குபடுத்திப் பொறுமையாய் நிற்க வைத்து சரிசெய்தது சின்னப் பொண்ணுதான். 

“உன் மருமல பதவிசு யாருக்கு வரும் முனிம்மா” 

“பறக்கா வெட்டி ஜனத்த இத்தினி அளகா குறட்டுல குத்தாம் நிக்க வக்குதா பாரு.யாராச்சும் மொணங்கிட்ட இருக்கமா..?” 

“இந்த மழை பெய்ஞ்சுதா? சின்னஞ்சிறுசுவ. ஒறவு வெட்டினதுங்கல்லாம் நேராச்சு.இதைக் காப்பாத்திக்க முனிம்மா.” 

இப்படியெல்லாம் ராவுக்கு உட்கார்ந்து பாடு பேசினார்கள் குப்பத்துப் பெண்டுகள். 

“ஆமாமா..பெரீய அதிசயப் பொறப்பு இவ..புள்ளயக்கட்டி வைப்பேனாங்காட்டியும்னு பயாஸ்கோப்பு காட்டுறா.. வேணாம்டி இவ சங்காத்தம்… நாத்தம் புடிச்ச ஜென்மம். நானா கிறங்குவன்.?” 

முனியம்மாவுக்கு வழிந்தெடுத்த ஆத்திரம்..உலகமே மூழ்கினாலும் தவிர ராணி, தளம், செல்லி, சின்னப்பொண்ணு ஒட்டுதலைப் பார்த்தும் மனிதர்களை விட்டு விலகாத பொறாமை, பொச்சரிப்பு உணர்வுகள் முணுமுணுத்த முனியம்மாவை அமுக்கிவிட்டது அத்தனை பெண்டுகளின் கூப்பாடும். 

“இன்னொஞ்ச மழை பேஞ்சா..நம்பளையே அடிச்சிட்டும் போயிடும்.. நாளைக்கு உசிரோட இருப்பமான்னு தெரியலை இன்னியும் ஒட்டாத. ஒறவாடாத. தள்ளிப் போ. இப்பிடி ரவுசு பண்ணுதியே.. மூளைகீளை பிசகிடுச்சா உனக்கு.?” 

-மாரியம்மாவிலிருந்து சகலரும் கேட்டு வாயை அடைத்து விட்டதில் முனியம்மா அப்போதைக்கு வாயை மூடிக் கொண்டாள். 

“யக்கோவ்..'”: 

செல்லி மறுபடியும் கூவினாள். 

“இந்தா.. சொல்லு..இல்லேன்னாஓடு. எக்கோவ்..எக்கோ வுன்னுட்டு. ராவிருட்டுத் தவளைக்குஞ்சாட்டம் கூவாத..பெய்யற மழைக்குச் சிதை நெருப்பைப் பத்தவக்கறேன். அடுப்பைத் தான் எரியவக்க முடியல்ல. நீ வேற கொஞ்சுத மூதி…” 

அடுப்பை ஊதி ஊதி வயிறு வலித்தது. கன்னத்திலும் நோவு. 

பொடி மீனை ஆயந்தபடி குரலைத் தாழ்த்திக் கொண்டாள் செல்லி. அம்மா வந்துவிடவில்லையே என்று வாசல்புறம் பார்த்துக்கொண்டாள், அப்புறம் அவள் சொன்ன சேதிக்கேற்ற மாதிரி சின்னப் பொண்ணுவின் முகமும் மாறியது. 

“ஆங்.அடி ஆத்தி..”

-என்றாள். 

“நெசமாவாத்தானா?” 

என்றாள். 

“சமைஞ்சு ஆறுமாசம் கூட முழுசாக் கழியல்ல..இந்தக் குட்டி போடற ஆட்டத்தைப் பாரேன்.”

என்றாள் 

“அப்பங்காரன்..உடம்பு ஏலாம இருக்கான்.. நடமாட்டம் கம்மி.. அண்ணங்காரனக்கு அவன் கவலையே பெரிய கவலை. அதான் இந்தக் குட்டி ஆட்டம் போடுது..” 

-என்றாள். 

“அந்தப் பொறுக்கி..அதான் இவபின்னாடியே அலைஞ்சானா? நாசப்படுத்திருவானே? இந்தப் பொட்டச்சிக்குப் புத்தி எங்க போச்சு? பதிமூணு வயசு கூட முடியல்ல..அதுக்குள்ளாற அலையறாளே. அத்தைக்காரிக்கு இதெல்லாம் தெரியாதா? கண்டந்துண்டமா வெட்டிப் பொலி போட்ருவாளே…” 

-ன்றாள். 

கஞ்சியைக் கிளறிக் கொண்டே கவலைப்பட்டாள். 

சர்ரென்று விசிறியடித்த காற்று.–குடிசைக்குள் நுழைந்து வீசியடித்து அடுப்பை அணைத்தது. வெளியே வானம் மூட்டம் போட்டு.. இடியும். மின்னலுமாய்த் தடதடத்தது. 

“அடப் பாழாப் போற காத்து ஆத்தா வாரதுக்குள்ள ஆக்கிடலாம்னு பாத்தா விடமாட்டேங்குதே. அரைகுறையாக் கஞ்சி நிக்குது இனிம எப்படி அடுப்புப் பத்தவக்க? சீமெண்ணெய் இல்லியே.இந்தத் தனம் எங்கிட்டுப் போனா? ரேசனுக்கு அனுப்பிச்சா, நாலெட்டுல போனமா வந்தமான்னு இல்லாதவ…சினிமாப் போஸ்டரை வேடிக்கை பாத்துக்கினு நிக்கும்… 

நாலாவிதமான கவலை வேதனை எரிச்சல். மழையால் எரிச்சல், மனிதர்களால் எரிச்சல்.

“இந்த மளையத்தாம் பாரேன்.. ஒருவாரம் பேஞ்சு ஊர உண்டு இல்லேன்னு நாறடிச்சுது.. இனியும் நிக்காமப் பேயுது.. நல்லதுக்கும் தான் ஆத்தா பெருக்கப்போச்சு இல்லன்னா..இந்தக் கெவுறுக் கஞ்சி கூட கோவிந்தாத்தான்…”

வறுமைக் கணக்குப் போட்டாள் சின்னப்பொண்ணு.. 

சாலைகளையெல்லாம் பெருக்கும் வேலை கோவிந்தம்மாவுக்கு வாரியலை எடுத்துக் கொண்டு வாயில் புகையிலையை அதக்கிக் கொண்டு அப்படியும் இப்படியுமாய்ச் சிலுப்பினால் பெருக்கினதாய் ஆயிற்று… 

எத்தனை தரம் பெருக்கினாலும்- சாலையில் குப்பையும் மண்ணு குவியத்தானே செய்கிறது.? 

சரியாக வேலை செய்யவில்லை என்று யாருமே குறை சொல்லி கூலி குறைக்க முடியாத வேலை. மேற்பார்வை இல்லாத வேலை. மான வேலை உடம்பு வலிக்காத, உடம்பு வளையத் தேவையில்லா வேலை. அதனால் காலையில் போய் மதியம் வரை சாலையில் மரத்தடியில் டீக்கடை வாசலில் நின்று பொழுது போக்கிப் பாடுபேசி மதியம் போய் கைநாட்டு வைத்துக் கொடுப்பதைக் கும்பிடுபோட்டு வாங்கி வந்து விடுவான். துடைப்பமும் தேயாது.சாலைக் குப்பையும் குறையாது. 

நிமிஷத்தில் மழை-பேயாய்ப் பிய்த்து உதற ஆரம்பித்தது. பிய்ந்திருந்த கூரை வழியே மழை கொட்டியது. தரையில் வழிந்து ஓடியது. சேறும் மண்ணுமாய்க் கலந்து ஓடியது. 

குடிசைக்கு வெளியேயும் வெள்ளம்தான். முழுசுமாய் வடியவில்லை.. ஆனாலும் அவரவர் குடிசைக்கு எல்லோரும் வந்து விட்டார்கள். 

மழையை -உள்ளங்கையால் தடுத்து நிறுத்த முடியுமா? குடிசையில் ஓட்டையை அடைக்க முடியுமா? என்ன பண்ண? தலையில் கை வைத்து வேடிக்கை பார்த்தாள் சின்னப்பொண்ணு. 

செல்லி வாசலை எட்டிப் பார்த்துச் சொன்னாள். 

“தனம் வருதுக்கோ..” 

தொப்பலாய் நனைந்து ஓடி வந்தாள் தனம். பாவாடையை இழுத்து சொருகி மறுகையில் மண்ணெண்ணெய் பாட்டிலோடு. முகத்தில் கொஞ்சம் பூரிப்பு. 

“என்ன தனம்? காணாததைக் கண்ட மாதிரி இளிக்கிற? இந்தா இருக்கற ரேசனுக்குப் போயி வராவளா நீ? சிமிட்டாப்பழம் போடறதுக்குள்ள வரமாட்ட?” 

“யக்கோவ்..இந்தா..” 

சிக்கென்று மூடியிருந்த கையை நீட்டினாள். 

“என்னடீ?” 

“ப்ச..வாங்கிப் பாரேன்.” 

என்னது? எட்டாய் மடித்த ரூபாய் நோட்டு-நூறு ரூபாயா? ம்ஹீம் இருநூறு ரூபாய் 

“ஏதுடீ.கீழேயிருந்து எடுத்தியா?’ 

“க்கும்.சேறு தான் அள்ள முடியும் கீழேயிருந்து”

“அப்ப.?” 

“சின் ராசு மாமா குடுத்துச்சு.” 

“சி…சின்ராசுவா? எ..என்னத்துக்காம்? எப்ப வந்துச்சாம்.?”

“கூரையைப் போட்டுக்கவாம்.எப்ப வந்துச்சுன்னு தெரியல்ல.”

“உன்மேல எனக்கில்லாத அக்கறையா?” என்று கேட்பது மாதிரி சின்னப்பொண்ணுவின் மனசுக்குள் சிரித்தான் சின்னராசு.

அத்தியாயம்-10

மறந்திரு மறந்திருன்னு
மனுசரெல்லாம் சொல்லுதாக
உங்களை நான் மறக்க
உலகத்தில மருந்தே இல்லை… 
-நாட்டுப்புறப் பாட்டு 

அவரைப் பார்க்கவே மூணு நாள் தவமிருக்க வேண்டியிருந்தது. வாசல் கூர்க்கா, ராஜபாளையல் நாய்கள், உதவியாளர்கள் எல்லோரையும் தாஜா செய்த கால்கடுக்க வாசல் மரத்தடியில் காத்து நின்று வாசல் குழாயிலிருந்து தண்ணீர் பிடித்துக் குடித்து அங்கே இங்கே நகராமல் வண்டி போகும் போதும், வரும் போதும் உருவமே தெரியாத கறுப்புக் கண்ணாடிக்கு உள்ளே காரில் அவர் உட்கார்ந்திருப்பார் என்ற நினைப்பில் நம்பிக்கையில் பெரிதாய்க் கும்பிடு போட்டு மூணு நாள் முழுசாய்த் தவமிருந்தான் சின்னராசு. 

அவனின் நச்சரிப்பும் கெஞ்சலும் பொறுக்காமல் தான் உதவியாளர் நேரம் வாங்கித் தந்தான். 

‘மூணே நிமிஷந்தான் பேசணும்…அப்புறம் ஒட்டிக்கினு நின்னா..இன்னொரு தரம் உள்ளார வுடமாட்டேன்…’ 

‘ஐயோ மூணு நிமிஷம் கூட ஜாஸ்திய்….இந்த மனுவக் குடுக்கனும் அம்புட்டுத்தான்..’ 

அப்புறமும் ஒரு நாள் நிற்க வைத்துத்தான் பார்க்க முடிந்தது. 

வெளுத்த வேட்டியும், ஸெல் போனும், ஸெண்ட் மணமும், உதவியாளர் படையும், உர்உர்ரென்று உறுமும் நாய்களுமாய் ஏஸி ஜில்லிப்போடு இருந்தார். 

தலையோடு காலாய்த் தரையில் பதியக் கீழே விழுந்தான் சின்னராசு. 

“கும்பிடறேன்யா..” 

“ம்…எழுந்திருப்பா.. நமக்கு இதெல்லாம் புடிக்காது தம்பி. நா வித்தியாசமானவன்…:”

“ஐயா பெரியவங்க..நான் வெறும் பூச்சி”

“இருக்கட்டும்…எழுந்திரு…” 

“தாழாங்கும்பம்யா எனக்கு. போனதரம் கூட எல்லா ஓட்டும்மொத்தமா உங்களுக்குத் தான் போட்டம் ” 

”ம்…ம்…”- அமர்த்தலான குரல். 

“இந்தத் தரம் மழைல குடிசைங்கள்லாம் பிச்சுக்கிச்சு.. கொஞ்சம் நிவாரணம்…” 

“என்ன நிர்வாணமா? அதெல்லாம் உனக்கில்ல தம்பி..” 

பெருங்குரலில் அவர் சிரிக்க. உதவியாளர்கள் சிரிக்க. நாய்களும் வள்வள்வள்ளென்று உறுமின. 

“இல்…இல்லய்யா..பண உதவி ஏதாச்சும்…”

“ஏம்ப்பா-குடுத்தாச்சுல்ல…?” 

“அப்பவே குடுத்தாச்சுய்யா..எழுவத்தஞ்சு ரூவா….” பக்கத்தில் வந்து அவரின் காதைக் கடித்தான். 

“அந்த வகையில் நமக்குச் சுளையாப் பத்து லட்சம் லாபம்யா”

அடுத்த காதுக்குக் கூட கேட்காத வகையில் ரகசியம்.

“அட..பெரீய அமௌண்ட்டு தான்..ஏம்ப்பா குடுத்தப்பறம் என்ன? வீடா கட்டித்தர முடியும்?” 

“இல்லேய்யா..பாத்துச் செய்யுங்கய்யா.. நம்ப குப்பத்துலேயே ஒரு ஆயிரம் வோட்டு இருக்கு. ஐயா வந்து பாக்கலேன்னு கோவமா இருக்கானுவ… அந்தப் பார்ட்டி ஆளுங்க வந்து பாத்து அம்பது அம்பது ரூபா… ரெண்டாந் தவணை குடுத்தானுவ… அதான் ஐயா காதுல போட்டேன்.” 

“ஓ ரூட்டு அப்படிப் போவுதா…? ஏம்ப்பா..இதைக் கோட்டை விட்டீங்களே? கவுத்துட்டாங்கன்னா.அப்புறம் எவங்காலை நக்குவீங்க? ம்? குழிபறிச்சுடாதீங்கலே..” 

“ஐயா பிஸியா இருந்தீங்க. நேரமில்லாம்…” 

“நேரமில்லேள்ளா..திங்காம இருக்கமா? தூங்காம இருக்கமா? அங்கிட்டுப் போகலேன்னா ஆயிரம் வோட்டு அவுட்டு என்னய்யா பண்றீக..எனக்கே வேட்டு வச்சுருவீக போலிருக்கே.” 

கடிந்தார். 

சின்னராசுவின் தோளில் கைபோட்டு ஓரமாய்க் கூட்டிப் போனார். குழைந்தார். 

“தம்பி. வெவரமான ஆளா இருக்க… நா வாரேன்.. ரெண்டு மூணு நாளு கழிச்சு வாரேன்.. தாவாங்குப்பம்.. இன்னம் ரெண்டு குப்பத்துக்கு ரோடு போடற காண்ட்ராக்டுக்குத்தான் நாயா அலையறேன். கொஞ்சம் கட்டுப்பாடா வையி.. சமாதானப்படுத்து. நம்ம ஆட்கள் சிதறிடாமப் பார்த்துக்க.. துடிப்பா இருக்கே.. அப்பப்ப வந்து போயி..டச் வச்சுக்க. பெரிய அளவுல கொண்டு வாரேன் உன்னை.. சரியா?” 

பையில் கைவிட்டுக் கொத்தாய் எடுத்தார். திணித்தார். கைகுலுக்கினார். 

“இது உனக்கு. இனிம நீ நம்ம ஆளு.வந்து போ..வளமாக்கிடறேன். ஆனா உண்மையா இருக்கணும்.. நேர்மையா இருக்கணும்..நாக்கை அறுத்துக்கோன்னா அறுத்துக்கணும்.. இருப்பியா.?” 

“ம்…ஐயா அப்படியே எனக்கொரு வேலை..” 

மனுவை நீட்டினான். 

“அட ஆயிரத்துக்கு வழி காட்டறேன். நூத்துக்கு ஏங்கறியே.போ.. போ.. குப்பம் இனிம நம்மளுது… சரியா..?” 

மனுவைச் சுருட்டிக் குப்பைக் கூடையில் போட்டார். 

“யப்பாடி…பெரிய ஆளுத்தேன் நீ சின்ராசு…” 

கவுன்ஸிலரைப் பார்ப்பதே தெய்வத்தைப் பார்ப்பது மாதிரி அரிதான விஷயம் அவர் கையாலேயே ஐநூறு ரூபாய் வாங்கி வந்த சின்னராசுவைப் பெருமையாய்ப் பார்த்தாள் சின்னப்பொண்ணு. 

“இந்தா பொறை தின்னு..” 

கடக்முடக்கென்று பொறையை வாயில் போட்டு நொறுக்கின சின்னராசு 

ரெண்டு நீட்டினான் அவளிடம். 

“ஆமா ரூபா முழுசும் அத்தைட்ட குடுத்தாச் செலவுக்காவுமே? மாமா மருந்துக்காவும்…சுரேசு சம்பத்துக்கு உப்பு உறைப்பா ஆக்கிப் போடலாம்.எங் கூரையப் போட்டுக்கன்னு குடுத்திட்ட?” 

“நா கட்டிக்கப் போறவ பத்திரமா இருக்க வேணாமா? நாலுபேரு.. ஓட்டை வளியா எட்டிப் பார்க்கவா..?” 

கண்களில் காதல் வழிந்தது. 

ஏழைக்கும் பணக்காரனுக்கும் யாருக்குமே காதலைச் சொல்லும் முதல் வழி கண்கள் தானே? 

சின்னப்பொண்ணுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. நல்லவேளை மாமா இப்போதெல்லாம் வேலைக்கு வரக்காணோம். அவர் இருந்தால் சின்னராக… இப்படியெல்லாம் வாய் திறந்து சொல்வானா? அப்பன் பக்கத்தில் இல்லாத தைரியம்..சினிமா டயலாக் பேசுகிறான். 

“ஆமாமா.. சொல்லிட்ட அத்தைக்காரி என்னை அடிக்கற அடில மும்பாம்பல்லு பேந்துரும். மாமாவுக்கும் என்னை ஆகாதே.” 

கண்ணாடித் தம்ளரிலிருந்த டீயைச் சுழற்றி ஆற்றி உறிஞ்சினாள்.

“அந்த வெசனம் இப்ப என்னத்துக்கு? கைல நாலு காசு சேந்தாவுட்டு நாந்தேன் ராச…ஆத்தாக்காரில்லாம் மூலைல குந்த வேண்டியது தான? ம்?” 

“என்னவோ சின்ராசு. பொம்பள செம்மம். புருஷங்காரன்னு உன்ன மனசுல வச்சுட்டன். நீ சொல்றதுதேன் வேதவாக்கா இருக்கு.. இந்த செம்மத்துல ஒன்னோட சேருவேனா பாக்கேன்.” 

பழம்புடவையால் வாயைத் துடைத்தாள். 

பந்தாவாய் நூறு ரூபாய் நோட்டை நீட்டினான் சின்னராசு. 

“கைல இருக்கற ஒத்த நூறு ரூபா நோட்டுக்கே இம்புட்டுத் தைரியம் வருது சின்னு.. கவுன்சிலரு கூட இருந்தா… செழிப்புத்தேன்… குப்பத்து ராசாவாயிடலாம்..” 

“ம்…மசானத் தொளில் விட அதான் நாரத் தொளிலு தெரிஞ்சுக்க..”

“ப்ச..அழும்பு பேசாத சின்னு..எம்போக்குல விடு..கவுன்சிலரு ஐயா வருவாரு. ரோடு கீடெல்லாம் சுத்தப்படுத்தணும். தோரணம் கட்டனும் வாரேன்…”

சட்டென்று வெட்டிக் கொண்டு போனான் சின்னராசு. கண்ணிலிருந்து மறையும் வரை அவனையே பார்த்த சின்னப்பொண்ணு மெதுவாய்ச் சாலையைக் கடந்து சுடுகாட்டு வாசலுக்கு வந்தாள்..அது பாட்டுக்கு எந்த மாற்றமுமில்லாமல் அப்படியேதான் இருந்தது. அடித்த மழைக்கும் காற்றுக்கும் ஏற்பட்ட சேதத்துக்கும் அசைந்து கொடுக்காமல் மரங்கள் அதே கம்பீரத்தோடு…சுடுகாடு அதே அமைதியோடு 

எதற்கும் வளைந்து கொடுக்காத மரணத்தை மாதிரியே சுடுகாடு.

ஒரு வாரமாய் அவளைப் பார்க்காத அந்த நாய் .சட்டென ஓடி வந்தது. ஊஊஊஊ என்று ஊளையிட்டு வாலைக் குழைத்துச் சுற்றி சுற்றி வந்தது. அவளின் சீலையை முட்டி மோந்தது. அவளின் கையை நக்கியது. 

“எப்பட்றா இருக்கே? மழைல தீனிக்கு என்ன பண்ணே? இந்தா துன்னு…” 

பொறையைப் போட்டாள். 

“வாயுள்ள சென்மங்களே ஒருவாய்க் கஞ்சிக்கு வக்கில்லாம தவிச்சுதுங்க..வாயில்லாசெம்மம்.. நீ இன்னாத்த துன்ருப்ப..? யார்ட்ட கேட்டுருப்ப.துன்னு…” 

நாயின் கழுத்தைத் தடவினாள். 

கழுத்தை வாகாய்ச் சாய்த்து வைத்துப் பொறையைக் கடித்து நொறுக்க ஆரம்பித்தது நாய். 


“பொதைச்சதைத் தோண்டி எடுக்கணும் சின்னப் பொண்ணு. போலீஸ் கேஸாயிருச்சாம்.. அப்பங்காரன் புகார் குடுத்திருக்கானாம். வரதட்சணை சாவு. வக்கீலு போலீஸுன்னு இப்ப வந்துருவாங்க…”

அலுவலர் மணிமாறன் சொன்னதும் விசனப்பட்டாள் சின்னப்பொண்ணு. 

பிணத்தை எரிப்பது கூடச் சுலபம் தான். புதைகுழி தோண்டுவதும் சுலபம் தான். புதைத்ததை தோண்டுவதுதான் நரக வேதனை. நரக தண்டனை. 

“வேற வெட்டியான் இல்லியா டியூட்டில?” 

“எங்க? வேற யாரு இருக்கா? இருசப்பன். உடம்பு இன்னந் தேறல்ல. தனவந்தன் மாமியா செத்துடுச்சாம். ரெண்டு நாளாகும் ஊர் திரும்ப, நைட் டியூட்டி ஆளுக்குப் பேதியாவுதாம். ராத்திரியே வரல்ல..நல்ல வேளை நைட்டு எந்தப் பொணமும் இல்ல. வந்துருந்தா..கதை கந்தலாயிருக்கும். இப்ப நீ தான் பண்ணனும்.”

“ப்ச.என்னா சார்? எப்பவுமே கஷ்டமான வேலைய எந்தலைலத்தான் கட்டுவீங்க…” 

முணுமுணுத்தாள். 

“பண்ணு…கூடக் கொஞ்சம் போட்டுத் தர சொல்றேன். பார்ட்டி கொஞ்சம் வெயிட்டானதுதான்…அதான் பொதைச்சதையே தோண்ட வைக்கறாங்க ரெண்டு மணி நேரத்துல முடிச்சுடு ..என்ன?” 

”க்கும்…எந்த வெயிட்டான பார்ட்டியும் வெட்டியானுக்குக் கூட நூறு ரூபா போட்டுத் தரமாட்டான். சட்டம் பேசிட்டுப் போயிடுவானுக..சரி வுடுங்க சார்…கூடமாட யாருமில்லேயே.. தங்கச்சிங்க கூரை வேயுதுங்க வீட்டாண்ட நாமட்டும் எப்படிப் பண்ண.?” 

“சம்பத்து சுரேசுக்குச் சொல்லி விட்டிருக்கேன். மசமசன்னு நிக்காத போ. நேரமாவுது..போலீஸு வந்துட்டா..கால்ல வென்னி ஊத்திக்கிட்டுப் பறப்பாங்க…இரு இரு.எந்தக் குழின்னு சொல்றேன்”. 

லெட்ஜரைப் புரட்டினார் மணிமாறன். 

“போய்ச் சேந்து மண்ணுக்குள்ளாற பொதைஞ்சப்பறமும் நிம்மதியா இருக்கவுடாதுங்க நம்ம சனம். இப்பப்பாரு பொணம் பொணமாவா இருக்கும்? கண் கொண்டு காங்க முடியாது. தொட்டா சென்மத்துக்கும் சோற எறங்காது…” 

புடவை முந்தானையைப் பிய்த்துப் பிய்த்து எரிச்சல் பட்டாள் சின்னப்பொண்ணு. 

“வலது கோடில பத்தாவது குழி நினைப்பிருக்கட்டும்”

அடையாளம் சொன்னார் லெட்ஜரில் விவரம் சேகரித்து.

“இதோ வந்துட்டானுங்களே. தம்பிகளா..இவங்க கூடப் போங்க.. பொதைச்சதைத் தோண்டனும்.. சோலிய வெரசா முடிங்க… கூலி போட்டுதரச் சொல்றேன்…” 

வெட்டி நின்ற உறவு சனம், வேலைக்காக ஒன்றானது. தவிர மழை நேரத்தில் சத்துணவுக் கூடத்தில் ஒன்றாயிருந்தால் சின்னதாய்ச் சிரிப்பு. செல்லிக்கும் தனத்துக்கும் கூட இந்தப் பசங்கள் தானே முறை மாப்பிள்ளை. எல்லாம் சரியாகி வந்தால்- இந்த உறவும் ஒட்டிக் கொள்ளும் தானே? 

“சம்பத்து.. ரெண்டு பாண்டு தூக்கினு வா.. சுரேசு..மண்வெட்டி எடுத்தா… டூல்ரூம்புல இருக்கும் பாரு… நா போறேன்.. கிழக்கால பத்தாங் குழி…” 

கடப்பாரையைத் தூக்கிக் கொண்டு போனாள். 

பாதையெல்லாம் கூட சேறும் சகதியுமாயிருந்தது. இன்றைக்கு வேலை சுலபமாய் இருக்கப் போவதில்லை என்று மட்டும் புரிந்தது. 

குழியை அடையாளம் பார்த்துக் கடப்பாரையை ‘நக்’ கென்று மண்ணில் கொத்தினாள் சின்னப்பொண்ணு. துர் நாற்றமும் ஒருவித வாயுவும் அப்போதே கிளம்பிப் பீறிட்டது. ‘இந்தக் கண்றாவி தான் வேணாங்கறேன்’  சின்னராசு சொல்வது மாதிரி கேட்டது. 

– தொடரும்…

– தகனம் (நாவல்), முதற் பதிப்பு: 2005, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *