“”இன்னும் பத்து நிமிடம் இருக்கு சார்” பரிமாறுபவர் சற்றே இளக்காரமாகச் சொன்னாரோ?
எங்கள் கம்பெனியின் ஆண்டு விழா இந்தூரில் ஐந்து நட்சத்திர ஓட்டலொன்றில் ஏற்பாடு செய்திருந்தனர். எனது பிரிவின் கூட்டம் முடிந்ததும் பந்திக்கு முந்தும் பறக்காவெட்டியாய் முதல் ஆளாய் டின்னருக்கு வந்து நிற்கிறேன். நமது பிரிவின் ஆள் எவனாவது வரமாட்டானா?
“”ஹலோ சார்”
“”இது சோமசுந்தர் இல்லையோ… ஹைதராபாத் கிளை?”
“”யெஸ் சார். நல்லா நினைவு வச்சிருக்கீங்க சார். எப்படி இருக்கீங்க சார்?”
சோமசுந்தருக்கு வார்த்தைக்கு ஒரு சார் சேர்க்காமல் பேச வராது.
சமீபத்தில் விற்பனைப் பிரிவில் சேர்ந்திருந்தான். ஹைதராபாத் வாசி. நேரம் பார்க்காத சேவையாலும், கடின உழைப்பாலும், கஸ்டமர்களிடம் மிக நல்ல பெயர் எடுத்திருக்கிறவன். பி.டெக் இன்ஸ்ட்ரூமெண்டேஷன். எங்கள் கம்பெனி கருவிகளைக் குறித்து நல்ல அறிவு உண்டு. அவனைப்பற்றி நான் இருக்கும் தலைமையகம் நன்றாகவே பேசிக் கொண்டிருந்தது.
கை கட்டி, இயல்பாகச் சிரித்தவனிடம் ஓர் உண்மை இருந்தது. இவன் முகஸ்துதி செய்பவனல்ல. மரியாதை போலியில்லை என்பதே ஒரு ஆறுதலளிக்கிறது.
பார் ரெடியாகிக்கொண்டிருந்தது. பீர் கேன்கள், ப்ளேக் டாக், பக்கார்டி என மதுக்கடை மெல்ல ஒரு பெரும் மலராக விரிய, அதன் மணத்திற்கு மொய்க்கும் வண்டுகளாய் கூட்டம் அங்கு கூடியது.
“”ஆங்… வாழ்த்துக்கள். மகன் பிறந்திருக்கிறானாமே? உனது இமெயில் பார்த்தேன். ஒரு மாசமாச்சா லெட்ஸ் ùஸலப்ரேட். டூ யூ ட்ரிங்க் சோம் விஸ்கி சோடாவுடனா? அல்லது பனிக்கட்டிகள் மட்டுமா?” பதிலை எதிர்பாராது ஒரு ஸ்மால் விஸ்கிக்கு அவனுக்கென ஆர்டர் செய்துவிட்டு எனக்கு ஒரு டயட் கோக் எடுத்தவாறு அவனைப் பார்த்தபோது அவன் முகத்தில் சிரிப்பு உறைந்திருந்தது. அவன் முகம் சற்றே மாறியிருந்தது போல் தோன்றியது.
“”எனக்கு ட்ரிங்க்ஸ் வேணாம் சார்”
“”ஏன்ப்பா போன தடவை மங்களூர்ல அந்த அடி அடிச்சே நாலு லார்ஜ், அதுக்கு மேல வோட்கா…”
“”இல்ல சார். நீங்க.. நீங்க கோக் குடிங்க. நான் ஜஸ்ட் சோடா எடுத்துக்கறேன்”
“”ஏன்?” நான் விடவில்லை. கோக் கேனை உயர்த்தி அவனது சோடா புட்டியில் சீயர்ஸ் என தட்டப்போனேன்.
“”என் மகன்.. செத்துட்டான் சார். போன வாரம்”
அதிர்ந்து போனேன். கையை எப்படி கீழே இழுத்தேன் என்பது நினைவில்லை. துயரில் அமிழ்ந்து கொண்டிருப்பவனை, கொண்டாட அழைத்திருக்கிறேன்.
“”வெரி சாரி.. சோம். என்ன ஆச்சு?”
அவன் என் வலது தோளை அழுத்திப் பிடித்தான்.
“”வாங்க, வெளிய போலாம் சார்”
அவனுடன் நடந்து சென்று வெளியே புல்தரையில் ஒரு பெஞ்சில் அமர்ந்தபோதும் என் திகைப்பு விடவில்லை.
“”சார், உங்ககிட்டதான் முழுசும் சொல்லறேன். ஆபீஸ்ல குழந்தை காய்ச்சல்ல போயிட்டுன்னு மட்டும்தான் சொல்லியிருக்கேன். ஏன் காய்ச்சல் வந்ததுன்னு சொல்லலை?”
நான் மவுனமாய் கேட்டிருந்தேன்.
“”எங்க குடும்பத்துல நான் ரெண்டாவது தலைமுறையாய்ப் படித்து வந்திருக்கிறேன் சார். அப்பா போலீஸ் இன்ஸ்பெக்டர். எங்க தாத்தாவெல்லாம் காட்டு வாசி, கிராமம்கூட இல்லை. அப்பா, சித்தப்பா, மாமா எல்லாரும் படிச்சு நல்ல பதவியில இருக்காங்க. என்னதான் நாங்க படிச்சு வெளிய வந்தாலும், ஜாதி முறைன்னு வந்துட்டா பெரியவங்க சொல்றதுதான்” – அவன் சற்று நிறுத்தினான்.
கொசு எக்கச்சக்கமாக கன்னத்திலும் காதிலும் கடித்துக் கொண்டிருந்தது.
“”எங்க ஜாதியில, குழந்தை பிறந்தவுடனே அதுக்கு மந்திரிச்சு, தாயத்து கட்டி, காத்து கருப்பு அண்டக்கூடாதுன்னு பிறந்த குழந்தை கையில ஒரு கம்பியால சூடு போடுவாங்க”
“”என்னது?” – அதிர்ந்து போனேன். பிறந்த குழந்தைக்கு சூடா? காட்டுமிராண்டித்தனமா இருக்கு?
“”பெரியவங்கதான் செய்யணும். பாட்டியம்மா, கண்ணு தெரியலை, கொஞ்சம் அழுத்தமாவே கம்பிய என் பிள்ளை கையில வைச்சிருச்சு”
“”என்னடா முட்டாள்தனம்? நீ சும்மாவா இருந்தே?”
“”எவ்வளவோ சொல்லிப் பாத்தேன் சார். அப்பா தயங்கிட்டாரு. டேய் எனக்கும் வைச்சிருக்காங்க. உனக்கும் சூடு வச்சிருக்காங்க. நாம நல்லாயில்லயா? எல்லாம் சரியாயிருக்கும்னுட்டாரு”
கொதித்துப் போனேன். ஜிவ்-வென காது மடல்கள் சூடேறின. என்ன பேய்த்தனம் இது?
“”குழந்தைக்கு பயங்கரமாப் பொத்துப் போனதோட, அதுல உடனேயே சீழ் கட்டி, காய்ச்சல் வந்துருச்சு. ரெண்டாம் நாளே, இன்ஃபெக்ஷன் கூடிப்போய் பாக்டீரியா மூளையத் தாக்கியிருச்சுன்னாங்க. ஐசியு வுல நாலு நாள் இருந்தான்”
காது மடலில் ஒரு கொசு “ஙொய்’ என்றதாக உணர்ந்து “பச்’ என காதில் ஓங்கியே அறைந்து கொண்டேன்.
“”என் பொண்டாட்டி பையனை முத நாள் பாத்ததுதான் சார். அவ கேக்கறப்போவெல்லாம், என்னமோ காய்ச்சல், சரியாயிருவான்ன்னு சொல்லிட்டிருந்தேன். அவன் என் கையிலிருந்து மெல்ல மெல்ல நழுவிக்கிட்டிருந்ததை ரெண்டாம் நாளே உணர ஆரம்பிச்சுட்டேன். கார்லயே தூங்கினேன் சார். வீட்டுக்குப் போக மனசில்ல. பையனுக்கு புதுசா டவல், ஜான்ஸன் பேபி பவுடர். கரடி பொம்மை எல்லாம் வாங்கி கட்டில்ல போட்டிருந்ததை என்னால பாக்க முடியல”
கையிலிருந்த கோக் கேன் கீழே விழுந்து “க்ளக்’ “க்ளக்’ என்று புல்தரையில் கொட்டிச் சிதறியது.
“”அஞ்சாம் நாள் காலேல போயிட்டான். தூங்கற மாதிரிதான் இருந்தான் சார். தலைல முடி எவ்வளவுங்கறீங்க சீப்புல வாரலாம்”.
“”வேணாம். ப்ளீஸ் சொல்லாதே” என் குரல் தழதழத்தது.
சோமசுந்தர் ஒரு உணர்ச்சி வேகத்தில் தொடர்ந்தான்.
“” எனக்கு ஜோசியம் தெரியும் சார். அவன் கையில ரேகை பார்த்தேன். தீர்க்கமா ஆயுசு ரேகை. சூரிய மேட்டுல ஓர் ஆழமான ரேகை. அழகாப் பொண்டாட்டி வாய்ச்சிருக்கணும். ஏன் சார் அவன் என்னை விட்டுப் போகணும்? இது நான் செய்த பாவமா? என் மனைவி செஞ்சதா? யார் சார்?” சோமசுந்தர் கைகளில் முகத்தை மூடினான். அவனது பருமனான உடல் மெல்ல குலுங்கியது.
அவனை உதறி நிமிர்த்தினேன்.
“” நீயோ உன் பொண்டாட்டியோ மட்டுமில்ல, எல்லாரும்தான்… இது கொடூரமானதுன்னு உங்க அப்பாவும் சொல்லலை. அம்மாவும் சொல்லலை. பாட்டிக்கு புத்தியில்லன்னு சொல்லுவ. விடு. உனக்கு எங்க போச்சு?
பி.டெக்.. மை ஃபூட். இடியட். இத்தனை படிச்சு, இத்தனை அறிவியல் ஆய்வு சாலைகளுக்குப் போய் வந்து என்னடா ப்ரயோசனம்? பிறந்த குழந்தை தாங்குமாடா இந்த சூடெல்லாம்?”
அவன் தலைகுனிந்து நின்றிருந்தான். “”இல்லை” என தலையாட்டினான்.
“”நீ அடிச்சு சொல்லியிருக்கவேணாம் எது பாரம்பரியமா நல்ல பழக்க வழக்கம், எது மூடப் பழக்கம்னு தெரிய வேணாம்? படிச்சவன் செய்யற வேலையா இது? கோழைத்தனம் மட்டுமில்ல, முட்டாள்தனம்” வெடித்தேன்.
“”ப்ளீஸ் சார். ஏற்கெனவே நொந்து போயிருக்கேன்”
“”யோசி, சோம். இது உனது இழப்பு மட்டுமில்லை. படிப்பிற்கே தோல்வி. நமது சமூகத்திற்கே தோல்வி. படிச்சவன் நீ இப்படி செஞ்சா படிக்காதவனைப் பத்தி பேசவே வேணாம். இத்தனை பேருக்கு நடுவுல போராடி படிச்சு முன்னுக்கு வந்து நீயும் உன் சமுதாயத்தை தோல்வியடைய வைச்சிருக்கே”
“”என்னால அப்பாவை எதிர்த்துச் சொல்ல முடியலை சார்”
“”உங்க அப்பாவுக்கு அவங்க அம்மாவை எதிர்த்து சொல்ல முடியலை. படிச்சதோட அழகு , தைரியத்துல இருக்கு. எதுக்கு பயப்படணும், எதை எதிர்க்கணும்னு ஆராயத் தெரியாதவன் எவ்வளவு படிச்சிருந்தாலும் முட்டாள்தான்”.
“”இனிமே என்ன செய்யமுடியும் சார். போயிட்டான்”
“”இதுதான் இப்படி நடக்கற கடைசி இறப்புன்னு நினைச்சுக்க. நீ நினைச்சா முடியும்”
திரும்பி நடந்தேன். கேட் அருகே வந்தபோது பக்கவாட்டில் பார்த்தேன். அவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் நான் தங்கியிருந்த ஓட்டலின் நியான் விளக்கு மின்ன, அதனை நோக்கி வெறி கொண்டவனைப்போல நடக்க ஆரம்பித்தேன். சாலை சரியானதா? என்று தெரியவில்லை. தவறலாம். தவறினால் வழி கேட்டுக்கொண்டு போகலாம்.. ஆனால் முன்னே நடப்பது முக்கியம்.
– சுதாகர் கஸ்தூரி (ஜனவரி 2015)