சுவரில் வீசிய பந்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2021
பார்வையிட்டோர்: 5,392 
 
 

கதிரவன். அது பெற்றோர் அவருக்குச் சூட்டிய பெயரில்லை. ஆனால், எழுத்துத்துறையில் கம்பீரமாக இருக்கவேண்டாமா என்று யோசித்து, அவர் தானே தன்னை நாமகரணம் செய்துகொண்டார்.

முதலில் வருந்திய பெற்றோரும், அவர் ஒரு தினசரியின் ஞாயிறு பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றபின், `எல்லாம் அந்தப் பெயரோட ராசி! சும்மாவா? சூரியனில்ல!’ என்று பெருமைபேச ஆரம்பித்தார்கள்.

அண்ணனுக்கு அந்தப் பெயரால்தான் வாழ்க்கையில் முன்னேற முடிந்தது என்று நம்பிய கதிரவனுடைய தம்பி பகலவனாக மாறினார்

“எதுக்கு அவசரமா வரச்சொன்னே?” என்று கேட்ட அண்ணனிடம் அழமாட்டாக்குறையாகச் சொல்ல ஆரம்பித்தார் பகலவன். “நான் பத்திரிகை ஆரம்பிச்சப்போ நீங்கதானே சொன்னீங்க, `நம்ப மக்களுக்கு நிறைய சினிமா செய்தி குடுடா. படம் பாத்துக்கிட்டிருந்தா, அவங்களுக்குச் சோறு தண்ணிகூட வேணாம்’னு?”

“அதுக்கென்ன இப்போ? பத்திரிகை நல்லாத்தானே ஓடுது?”

“இப்போ, ஆறு மாசமா, ரொம்ப நஷ்டம். எல்லாம் அந்த தாமரை பத்திரிகையால வந்த வினை!” பொருமினார் தம்பி.

“காலேஜில படிச்சுக்குடுத்தவன் எவனோ ஆரம்பிச்சிருக்கானாம்!” அவர் குரலில் ஏளனம். “வேலையத்த வேலை! அவன் போடற குப்பையையெல்லாம் யார் படிப்பாங்க!”

அண்ணன்-தம்பி இருவரும் மலேசிய ரப்பர் தோட்டப்புறங்களில் வளர்ந்தவர்கள். தமிழில் ஆரம்பக்கல்வி கற்றதோடு சரி. மெத்தப் படித்தவர்களைக் கண்டால் உள்ளுர பயம், வெளியில் அலட்சியம்.

“நானும் அப்படித்தான் நினைச்சு சும்மா இருந்துட்டேன். இப்போ, அவன் போடற கதைங்க, விஷயங்களெல்லாம் சுவாரசியமா இருக்கு, நாலு விஷயம் தெரிஞ்சுக்கலாம்னு எல்லாரும் அதைத்தான் வாங்கிப் படிக்கறாங்க. நம்ப பத்திரிகை கடைங்கள்லே அப்படியே தொங்கிட்டுக்கிடக்கு!”

கதிரவன் யோசனையில் ஆழ்ந்தார். சிறிது பொறுத்து, “அந்த ரோசாவோ, என்ன எழவோ, விக்காம செய்துட்டா?”

“தாமரை!” என்று மெல்லிய குரலில் திருத்திய பகலவன், “வாங்கறவங்க கையைப் பிடிச்சு தடுக்கவா முடியும்?” என்றார் நிராசையுடன்.

“எதை எப்படிச் செய்யணும்கிறதை எங்கிட்ட விடு!”

அடுத்த வாரமே கதிரவனுடைய தினசரியில் வெளியாகியிருந்தது அச்செய்தி: “நமது சகோதரரான ஞாயிறு பத்திரிகை ஆசிரியர் சாலை விபத்தில் உயிரிழந்தார். அன்னாரது குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதை ஒட்டி, இன்று மாலை நாம் ஏற்பாடு செய்திருக்கும் இரங்கல் கூட்டத்திற்கு இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் திரண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்”.

ஞானி (உண்மைப்பெயரில்லை) அதிர்ந்தேபோனான். பதினாறு வயதில், நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் ஆசையுடன் தலைநகருக்கு வந்திருந்தவன் அவன்.

திசை தெரியாது விழித்துக்கொண்டிருந்தவனை, “தமிழில எழுதப் படிக்கத் தெரியும்தானே? எங்கிட்ட வேலைக்கு சேர்ந்துக்க,” என்றவாறு அடைக்கலம் கொடுத்தார் கதிரவன். அவரைத் தன் தெய்வமாகவே அவன் மதித்து நடந்துகொண்டதில் வியப்பேதுமில்லை.

இப்போதோ, சுயநலத்திற்காக வன்முறையைப் பயன்படுத்தியிருந்த அவருடைய போக்கு அவனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

“என்னங்க ஐயா, இப்படிச் செய்துட்டீங்களே!” என்று குழம்பியவனிடம், “நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா, எதுவும் தப்பில்ல,” சினிமா வசனத்தை எடுத்துக்கூறினார் கதிரவன். “அந்த நாலு பேத்தில நாம்பளும் ஒத்தங்க!”

அதன்பின் `தாமரை’ முடங்கிப்போக, வாசகர்கள் மீண்டும் திரைப்படச் செய்திகளுக்கும், அரைகுறை ஆடை அணிந்த நடிகைகளின் படங்களுக்கும் தாவினர்.

“நீங்க மந்திரியா இருக்கவேண்டியவங்கண்ணா!” என்று நன்றிப்பெருக்குடன் பகலவன் கூறியபோது, ஞானியும் அதை ஆமோதித்துத் தலையாட்டினான்.

தம்பியின் மகிழ்ச்சி நிலைக்கவில்லை.

“வியாபாரம் படுத்துப்போச்சுண்ணே. எல்லாப் பயலுவளும் ஹேண்ட்போன் வெச்சிருக்கானுங்க!” தான் வெளியிட்ட செய்திகள் கையிலேயே கிடைத்துவிட்டதால் யாரும் தன் பத்திரிகையை வாங்கப் பிரியப்படவில்லை என்ற கோபம் பகலவனது குரலில் வெளிப்பட்டது.

“பேசாம, அதை மூடிட்டு, எங்கிட்ட சேர்ந்துக்க,” என்று ஆறுதல் கூறினார் கதிரவன். “அந்தப் பய ஞானிக்கு ஒழுங்கா தமிழ் எழுதத் தெரியல. நான் திரும்ப எல்லாத்தையும் திருத்தி எழுத வேண்டியிருக்கு! ஆனா, நாய்மாதிரி என் பின்னாலேயே வரான், பாவம்!”

அதைக் கேட்டுவிட்ட ஞானியின் மனம் கொதித்தது.

நாயா?! இருபது வருடங்கள்! எத்தனை முறை வயிற்றைக் காயப்போட்டு, மாடாக உழைத்தோம்!

“தம்பி! இப்பல்லாம் என் ஒடம்பு முந்திமாதிரி இல்லடா. வயிறு என்னமோ பலூன்கணக்கா உப்பிக்கிட்டே போகுது,” என்று முனகினார் கதிரவன்.

“டாக்டர் என்ன சொல்றாருண்ணே?”

“குடியைக் குறைச்சுங்கங்கிறாரு. நான் என்னிக்குடா அந்தக் கருமத்தைத் தொட்டிருக்கேன்?”

நடந்தால் வயிறு குறையுமோ என்ற நப்பாசையுடன் ஒருநாள் சாயங்காலம் உலவப்போனார் கதிரவன்.

திரும்பும் வழியில் ஓரடிகூட எடுத்துவைக்க முடியாமல் போக, டாக்ஸி ஒன்றை நிறுத்தி, அதில் ஏறிக்கொண்டார்.

அந்த வாகன ஓட்டியான மலாய்க்காரர் தன் பயணியின் முகத்தில் தெரிந்த வேதனையையும் அவருடைய பருத்த வயிற்றையும் பார்த்து ஒரு முடிவுக்கு வந்திருந்தார்.

“இஞ்சே (INCHE — ஐயா)! ஒங்களுக்கு எதிரி யாராவது இருக்காங்களா?”

“நான் பெரிய சம்பளக்காரனில்ல. எனக்கு எதிரிங்க யாரு இருக்கப்போறாங்க?” என்று அசிரத்தையாகச் சொன்னாலும், சொல்லத்தெரியாத பயம் எழுந்தது.

“ஒங்களுக்கு யாரோ செய்வினை செஞ்சிருக்காங்க — போமோகிட்ட போய்!” அழுத்தந்திருத்தமாக வந்தது குரல்.

போமோ (BOMOH)!

அவரைப்பற்றித் தான் அறிந்ததையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டார் கதிரவன்.

கிராமப்புற மருத்துவர் என்று அறியப்பட்ட மலாய் மாந்திரீகர். மருத்துவர் என்ற பெயருக்கு ஏற்றபடி, வருகிறவர்களின் நோய்களைக் குணப்படுத்துவார்.

அத்துடன் நில்லாது, அவர்களுக்கு வேண்டாதவர்களுக்கு நோய்களையோ, ஏன், மரணத்தையோகூட உண்டாக்கும் வலிமை படைத்தவர்.

ஒருவரது தலைமுடியை வைத்துக்கொண்டே அவருக்குத் தீமை விளைவிக்க முடியும் என்பதால்தானே, அழகுநிலையத்திற்குப் போகும் மலாய்ப்பெண்கள் வெட்டப்பட்ட தங்கள் தலைமுடியில் ஓரிழைகூட விடாது சேகரித்துக்கொண்டு வந்து, பூமிக்கு அடியில் புதைத்துவிடுகிறார்கள்!

ஒருமுறை, போமோ ஒருவரைப் பேட்டி கண்டபோது, “ஒருத்தர் மூளை கலங்கச்செய்ய அவர் வீட்டு வெளியில இருக்கிற கதவிலே நூத்துக்கணக்கான பாம்புங்க நெளியறமாதிரி பிரமை உண்டாக்க எங்களுக்குப் படிச்சுக்குடுத்திருக்காங்க!” என்று கதிரவனிடம் ரகசியக்குரலில் கூறினார். ”செவத்திலே எறியற பந்து திரும்பி நம்பமேலேயே வந்து விழறமாதிரி, கெட்டது பண்ணினாலும் அப்படித்தான், இல்லீங்களா? அதனால, நான் அந்த பக்கமே போறதில்லே”.

பக்கத்திலிருந்தவரின் உணர்ச்சிகளைக் கவனிக்காது, தன் அறிவைப் பறைசாற்றிக்கொள்வதுபோல், காரோட்டி தன்பாட்டில் பேசிக்கொண்டேபோனார்: “நமக்குப் பிடிக்காத ஒருத்தர் சாக, அவர் வயிறு பெருத்துக்கிட்டே போகச் செய்வாங்க. அதுக்குப் பேரு..”.

“எப்படி மாத்தறது?” ஈனஸ்வரத்தில் கேட்டார் கதிரவன்.

“கஷ்டம். சூனியம் போட்டவரால மட்டும்தான் அது முடியும். யாருன்னு எங்கே போய் தேடமுடியும்!”

தான் மரணத்தின் வாயிலில் இருக்கிறோம் என்று சந்தேகமறப் புரிந்தவுடன், எதிலும் பற்று இல்லாது போயிற்று கதிரவனுக்கு.

அவர் படுத்த படுக்கையாக இருந்தபோது, தான் சுவரில் பந்து எறிவதுபோலவும், அது திரும்பி வந்து தன்னையே தாக்குவதுபோலும் தோன்றிக்கொண்டே இருக்க, தம்பி, தாமரை என்று பிதற்ற ஆரம்பித்தார்.

கூடை நிறைய பழங்களுடன் அவரைப் பார்க்க வந்த ஞானியின் உடலில் புதிய மெருகு ஏறியிருப்பது அவ்வளவு கலங்கிய நிலையிலும் அவர் கண்களுக்குத் தப்பவில்லை.

“நீங்க இருந்த எடத்திலே என்னைப் போட்டிருக்காங்க. எல்லாம் ஒங்க ஆசிதான்! சீக்கிரமே ஒடம்பு நல்லாகி, வந்துடுங்க ஐயா!” என்ற அவனுடைய போலிப்பணிவும் கரிசனமும் நன்றாகவே புரிந்தது.

விரைவிலேயே, `எனது ஆசான்’ என்ற தலைப்பின்கீழ் அவரது மரணச்செய்தியை ஒரு பக்கத்தில் வெளியிட்டிருந்தான் ஞானி. கூடவே, ஒரு கண்ணீர்க்கவிதை வேறு!

அவரது அகால மரணத்திற்கு, `மாரடைப்பு, குடிப்பழக்கம், மன இறுக்கம்’ என்று ஏதேதோ காரணங்கள் கற்பிக்கப்பட்டன.

ஆனால், கதிரவனுக்கு மட்டும் தெரிந்திருந்தது குருத்துரோகம் செய்தது யாரென்று. `நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா, எதுவும் தப்பில்ல. அந்த நாலு பேத்தில நாம்பளும் ஒத்தங்க!’ என்று அவனுக்குப் போதித்ததே அவர்தானே!

அதனால்தான், இறக்கும் தறுவாயில் அவர் இதழில் ஒரு சிறு புன்னகை நெளிந்திருந்ததோ?

நிர்மலா ராகவன் (பிறப்பு: அக்டோபர் 17 1942) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ஓய்வு பெற்ற இடைநிலைப் பள்ளி ஆசிரியையான இவர் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சரளமாக எழுதக்கூடியவர். மின் அஞ்சல் முகவரி: nirurag@ashleydamico78 எழுத்துத் துறை ஈடுபாடு 1967 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதை, கட்டுரை, தொடர்கதை, வானொலி நாடகம், விமர்சனங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியாவின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *