கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 24, 2024
பார்வையிட்டோர்: 5,306 
 

காலையில் எழும்போதே கால்களை ஊனமுடியாமல் வலதுகுதிங்காலில் மட்டும் வலி விண் விண்ணென்று தெறித்தது. கால்களை ஊனமுடியாமல் எழுந்த பூர்ணாவுக்கு எதற்குத்தான் இந்தக் குதிங்கால் இப்படி வலிக்கிறதோ தெரியலையே? என நினைத்துக் கொண்டே கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஆறாகி ஐந்து நிமிடம் ஆகியிருந்தது. வேகவேகமாக துடைப்பத்தை எடுத்துக் கொண்டு முன்வாசல் பெருக்கித் தண்ணீர் தெளித்தாள். பக்கத்துத் தெருவில் பால்பண்ணைக்குப் போய் பால் வாங்க வேண்டும். தலைமுடியைச் சரிசெய்து கொண்டு பால் வாங்கி வந்தாள். சிங்கில் நிறைந்திருக்கும் பாத்திரங்களைத் துலக்கிவிட்டு, பல்தேய்த்து, முகம் கழுவி, பாத்ரூமை விட்டு வெளியே வந்து மணியைப் பார்த்தாள் மணி ஆறு நாற்பது. அடுப்பில் பால் காய்ச்சினாள். நினைவுகள் தன்னையும் அறியாமல் பின்னோக்கி நகர்ந்தன. மாமனார் உயிரோடு இருந்தால் ஐந்து நிமிடம் எழுந்திரிக்கத் தாமதம் ஆனாலும் மகனும் மருமகளும் படுத்திருக்கும் அறையின் கதவைத் தட்டி,

“எந்திரிம்மா. மணி ஆறாச்சு”

என்று கத்துவார். அவர் கத்திய கத்தலில் திடுக்கிட்டு விழிக்கும் பூர்ணாவுக்கு, ஒரு நாளைக்காவது தனது மனைவியை எழுப்பி, வாசல் தெளிக்கச் சொல்லக்கூடாதா? என்ற எண்ணம் மேலிட்டாலும் அதை வெளியில் சொல்லாது மனதிற்குள்ளேயே புதைத்துக் கொள்வாள். சொன்னாலும் தனது கணவனைப் போன்ற கல்நெஞ்சக்காரர்களுக்குத் தனது வலி புரியாது. பிரச்சினைதான் பெரிதாகும்.

திருமணமாகி வந்த புதிதில் வீட்டிலிருந்த நாத்தனார் பிள்ளைகளுக்கெல்லாம் மாங்கு மாங்கென்று வேலை பார்த்துச் செய்தவளுக்கு, தனக்கென்று குழந்தை பிறந்தவுடன் வீட்டுவேலை பார்த்து, எல்லோருக்கும் பார்ப்பது சிரமமாக இருந்ததுடன் தனது குழந்தைகளைக் கவனிக்க முடியாமல் போனது. தனது கணவனிடம் எவ்வளவு சொன்னாலும் அவன் அதைக் காதிலேயே வாங்கவில்லை. நாத்தனார் பிள்ளைகள் இருவரில் ஒருவன் கல்லூரியிலும் இன்னொரு பெண் பத்தாம் வகுப்பும் படித்து வந்தாள். போதாக்குறைக்கு நாத்தனார் மூன்றாவது பையனையும் இங்கே தங்கவைக்க பிளான் செய்தாள். இவள் எவ்வளவோ தனது கணவனிடம் மன்றாடிப் பார்த்தாள். என்னால் மூன்று பேரையும் பார்க்கமுடியாது உங்க அக்காவிடம் சொல்லுங்கள் என்று. ஆனால் அவன்,

“உன்னால் பார்க்கமுடியாவிட்டால் நீ சொல்லு. என்னால் சொல்ல முடியாது” என்றான்.

அவன் இப்படிச் சொல்வதைக் கேட்டபிறகு அவளால் மனஉளைச்சலில் இரவு முழுவதும் தூங்கமுடியவில்லை. ஏன் உயிர் வாழ்கிறோம்? பேசாமல் தற்கொலை செய்து கொள்வோமா? உள்ளுக்குள் பல்வேறு எண்ணக்குமுறல்கள் எழுந்து உடலையும் மனதையும் சோர்வடையச் செய்தன. நான் நாத்தனாரிடம் பேசினால் அவள் எத்தனை ஜாடைப்பேச்சு பேசுவாள் என்று தெரியாது. சண்டை பெரிதாகிவிடும். மாமியார் அதைவிட மோசம். என் குழந்தையைப் பார்ப்பேனா? அல்லது வருசம்பூரா இவர்கள் பிள்ளைகளையே பார்த்துக்கொண்டிருப்பேனா? திருமணமாகி இரண்டாண்டுகள் இவர்களுக்குப் பார்த்தாகிவிட்டது? என்ன செய்வது? எனக்கான வாழ்க்கையை நான் எப்போதுதான் வாழ்வேன்? இந்தக் கேள்வி அவள் மனதுக்குள் எழுந்து கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய்க் கொட்டியது.

திருமணமாகி வந்த நாளிலிருந்து தனது கணவனிடம் கூட தனியே பேசமுடியாத வீட்டின் சூழல் ஒரு பக்கம் என்றால், மனைவியைப் பேசவே விடாமல் வாயை அடக்கும் கணவனின் கொடூர குணங்கள் அவள் மனதை வெகுவாகப் பாதித்தன. மலர் போன்ற மென்மையான அவளின் மனது காயம்பட்டுப் போனது. என்றைக்காவது தனது அம்மா வீட்டிற்குப் போகலாம் என்றால் மூஞ்சியைத் தூக்கும் மாமியார், மாமனாரின் செயல்களும் கணவனின் குணமும் அவள் ஆறுதல் தேடக்கூட வழியில்லாமல் செய்தன. அப்போதெல்லாம் அவள் குழந்தைகளைப் பார்த்து மட்டுமே ஆறுதல் அடைவாள். அவளுக்கு அடிக்கடி தற்கொலை எண்ணம் வரும் போதெல்லாம் தனது குழந்தைகளைப் பார்த்து அமைதி பெறுவாள்.

இப்படித்தான் பூர்ணாவின் வாழ்வு நகர்ந்தது. வழக்கமாக ஒரு நாள் மாலையில் தெருவில் வரும் நல்ல தண்ணியை வயதான மூதாட்டி ஒருவர் பிடித்து வைக்க மாமியார் தூக்கி வந்தாள். அதைப் பார்த்த நாத்தனார் மகன்,

“எதற்கு ஆச்சியைத் தண்ணீர் பிடிக்கச் சொல்கிறீர்கள்? நீங்கள் சென்று பிடிக்கவேண்டியதுதானே?”

என்றான். அதைக் கேட்ட பூர்ணாவுக்கு வந்த ஆத்திரத்தில்,

“அதைக் கேட்க நீ யார்? உன் வேலை எதுவோ, அதை மட்டும் பார்”

என்றாள் கோபத்தில்,

“இது என் ஆச்சி வீடு. நான் கேட்கத்தான் செய்வேன்”

என்று ஆணித்தரமாய்க்கூற,

“உன் அதிகாரத்த உன் வீட்டில் போய் வைத்துக்கொள்”

என்று சொல்ல, பூர்ணாவுக்கும் அவனுக்கும் சண்டை முத்திப்போனது. வேடிக்கை பார்த்த மாமனாரும், மாமியாரும் ஒன்றுமே சொல்லாமல் நகர்ந்தனர். தன் கணவர் வந்த பிறகு நடந்த விசயங்களைக் கூற, அவர் எதுவும் பேசாமல் நகர, பூர்ணாவுக்கு ஆத்திரம் பொங்கியது.

“அவனைத் தட்டிக் கேட்கக்கூடாதா?”

கோபத்தில் வார்த்தையும் துக்கமும் தொண்டையை அடைக்க,

“கேட்போம். பேசாமல் இரு தாயே”

என்று நகர்ந்த கணவனின் மலுப்பல் அவளுக்கு வெறுப்பைத்தான் கொடுத்தது. தன் முன்னாடியே கூப்பிட்டுத் தட்டிக் கேட்காத கணவரின் குணமும் தூண்டி விட்ட நாத்தானாரின் சாமார்த்தியமும் தெரிந்திருந்தாலும் அதைக் கேள்வி கேட்காத கணவரின் கண்மூடித்தனமான பற்றும் குடும்ப வாழ்க்கையின் மேல் அளவுகடந்த வெறுப்பைக் கொடுத்தன.

வருடக்கணக்காய் உட்கார்ந்து இவர் அக்கா பிள்ளைகளுக்குச் சமைத்துப் போடவேண்டும், அதைத் துளிக்கூட எண்ணாத, என்னை யார் பேசினாலும் வேடிக்கை பார்க்கக்கூடிய இவருடன் வாழவேண்டுமா? எல்லாம் என் தலையெழுத்து. நான் எதற்காக வாழவேண்டும்? என் குழந்தைகளுக்காக மட்டுமே இந்தத் துன்பத்தையெல்லாம் பொறுத்துக் கொள்கிறேன்.

காலையில் எழுந்ததில் ஆரம்பித்து, இரவு வரை வேலைதான். மாமியார் மாலையில் ஒரு நேரம் தண்ணீர் பிடிப்பது தவிர எந்த வேலையும் செய்வதில்லை. கதைப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு காலையில் காப்பி குடித்தவுடன் வாசிக்க ஆரம்பிக்கிறவள். காலை டிபன் முடித்து பூர்ணா கிச்சனை விட்டு வெளியில் வரும்போதுதான், கணவனுக்குப் பரிமாற எழுந்து வருவாள். வீட்டிற்கு வரும் பலரும்,

“ஏன் உன் மாமியார் காலையிலேயே கதைப் புத்தகம் படிக்கிறார்கள். வீட்டில் வேறு வேலையில்லையா? உனக்கு சமையலில் உதவலாம் அல்லவா?”

என்று உறவினர்கள் பூர்ணாவிடம் கேட்டதுண்டு.

“அவர்கள் டீச்சர் வேலை பார்த்தவர்கள் என்பதால் இப்படிப் பழகியிருக்கிறார்கள். நான் வருவதற்கு முன்பு மாமானாரின் அத்தை எல்லா வேலையும் பார்த்திருக்கிறார்கள். இப்பொழுது நான் பார்க்கிறேன். அதனால் அப்படியே பழகிவிட்டார்கள்.”

என்று சொல்லி சமாளிப்பாள். இன்னுமொரு கொடுமை மாமியாருக்குப் பென்சன் வருவதால் அவருக்கு மட்டுமே டூத்பேஸ்ட். மற்றவர்கள் எல்லோருக்கும் வீட்டில் பல்பொடிதான். வந்த புதிதில் இது விந்தையாகப்படவே,

“ஏன் எல்லோருக்கும் பேஸ்ட் வாங்கக்கூடாதா? உங்க அம்மாவுக்கு மட்டும் என்ன ஸ்பெசல்?”

என்று கேட்டபிறகே அவளுக்கு டூத்பேஸ்ட் கிடைத்தது. தனது அப்பா வீட்டில் கஷ்டம் தெரியாமல் வளர்ந்தவளுக்கு புகுந்த வீட்டினரின் பாகுபாடு வேதனையைத் தந்தது.

பூர்ணாவின் மனது இப்படித்தான் இன்னும் அசைபோடுகிறது. “இன்று மாமானார் இறந்து போனாலும் மாமியாரைக் கண்ணும் கருத்துமாய் நான்தான் பார்த்துக் கொள்கிறேன். என்னுடன் சண்டை போட்ட பேரனோ, வளர்த்த பேத்தியோ வந்து பார்க்கவில்லை. என்றாவது உடல்நிலை சரியில்லாமல் போகும் சமயம் வந்து எட்டிப் பார்ப்பார்கள். அவ்வளவுதான். மகள்களே அப்பா போனவுடன் தாயைப் புறக்கணித்தனர். ஆனால் இன்னும் மாமியார் மகள்களின் மேலும் தான் வளர்த்த மகளின் பிள்ளைகளின் மேலும் அளவுகடந்த பிரியத்தைக் காட்டுவார். ஆனால் நான் மட்டும் இன்னும் அந்நியப் பெண்ணாகவே எனது கணவனாலும் மாமியாராலும் உணரப்படுகிறேன். உணர்த்தப்படுகிறேன். இந்த நிலை எப்போது மாறும்? புகுந்தவீடென்பது வலி மிகுந்த சுமையாகவே எனக்கு இன்னும் இருக்கிறது”.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *