கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 8, 2021
பார்வையிட்டோர்: 3,351 
 
 

(1967ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த நாற்பது காம்பிரா லயத்தில் நாலாவது காம்பிரா மட்டும் மஞ்சள் குளித்த பெண்போல் தனியாகத் தெரிகிறது. எல்லாச் சுவர்களுமே புகைமண்டிப்போயும், சாணிப் பூச்சில் வெடிப்பு கண்டும் இருக்கையில், நாலாவது காம்பிராவின் அரைச் சுவர் மட்டும் புது மெருகுடன் வெள்ளை மண் பூசப் பட்டு சுண்ணாம்படித்த சுவர் போல் காட்சியளிக்கிறது.

கிளாக்கரய்யா பங்களாவுக்கு வெள்ளையடிக்கத் தள்ளப் பட்டபோதே நைசாகக் கண்டக்டரய்யாவிடம் சிலுவை கேட் டான், ‘ஏவுட்டு காம்பிராவுக்கும் ஒரு ஓட்டு ஓட்டிக்கிடங்களா’ என்று .

‘மூச்! காட்டப்படாது’ என்றுட்டார் கண்டக்டரய்யா. ஆடிப் பூசை நேரத்துல லயக்காட்டுக்கு வெள்ளை அடிக்கயில தான் அடிக்கணும்.. இப்ப ஒண்ணும் சரிப்படாது’ என்று கூறிய அய்யாவுக்கு ‘கிளாக்கரய்யா வேதந்தானுங்களே நானும். அவரு போற கோயிலுக்குத் தானுங்களே நானும் போறேன்’ என்று கொஞ்சம் வாதாடிப் பார்த்தான்.

‘சரிதான் போடா! அய்யாதான் நீயா? அய்யா பங்களா தான் உன் காம்பிராவா? அய்யா கும்பிடுற சாமிதான் நீ கும்பிடுற சாமியா…?” என்று அவர் அடுக்கிய கேள்விகளுக்கு ‘ஆம்’ என்றும் சொல்ல முடியாமல் ‘இல்லை’ என்றும் சொல்ல முடியாமல், சுண்ணாம்படிக்கும் மிஷினை தோளில் மாட்டிக் கொண்டு நடந்து விட்டானென்றாலும் கிளாக்கரய்யாவின் பங்களா சுவற்றில் தனது வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்டான். ‘மிஷின்ல அடிச்சா பளீரெனத் தெரியாதே சிலுவை. கொஞ்சம் புருசாலையே அடிச்சுவிடு’ என்று அய்யா கூறியதற்கு ‘சரிங்க’ என்றவன் ‘புருசிலயா அடிக்கனும். இரு ஒன் பொடரியில அடிக்கிறேன்’ என்று கறுவிய படி ‘பூஸ் பூஸ்’சென்று சுவற்றில் சுண்ணாம்பு நீரால் மருந்தடித்துவிட்டு நடந்துவிட்டான்.

சிமிந்தித் தரை மாத்திரம் வெள்ளை வெளேரென்று கிடந்தது.

அவனுடைய காம்பிராவும் வெள்ளை வெளேரென்று கிடந்தது.

வெள்ளை மண் வாங்கிலிருந்து யாருக்கும் தெரியாமல் இரண்டு வாளி மண் கொணர்ந்து கரைத்துப் பூசி வெளுக்க வைத்திருக்கின்றாள் அவன் மனைவி.

‘வீடு தீத்துறேன் வீடு தீத்துறேன்’ என்று தோட்டத்து ஆட்கள் அத்தனை பேரும் தோண்டித் தோண்டி வெள்ளை மண் வாங்கி பொந்து பொந்தாய்க் கிடக்கிறது. வாங்கி ஓரத்தில் வரிசையாக நிற்கும் ஒரு பத்துப் பதினைந்து தேயிலைகள் ‘இப்ப விழுவேனோ, இன்னும் சற்றுப் பொறுத்து விழுவேனோ’ என்று ஆட்டம் கண்டு போய் நிற்பதால் யாரும் மண் தோண்டக் கூடாது என்பது துரையின் உத்தரவு.

மண் பூசியிருக்கும் சுவரைப் பார்த்தால் பரவாயில்லை. தோண்டும்போதுதான் பார்த்து விடக்கூடாது!

முழங்காலை மடித்துப் பலகைக் கட்டையில் உட்கார்ந்து, மடித்துக் கட்டிய வேட்டியை இழுத்துவிட்டுக்கொண்டான். கோப்பையை முழங்காலில் நிறுத்தி இடக்கையால் சாப்பிடத் தொடங்கினான்.

‘லபக் லபக்’கென்று அவன் அள்ளி வீசிக் கொள்ளுவதைப் பார்த்தால் சாப்பிடுவதில் ஒரு சந்தோஷமோ அமைதியோ இருப்பதாகப் படவில்லை.

‘கோப்பை எப்போ காலியாகும்’ என்ற நோக்கத்துடன் சாப்பிடுபவன் போல் தெரிகிறது.

அவன் சாப்பிடுவதை அதிசயத்துடனும், ஆத்திரத்துடனும் பார்த்துக்கொண்டு நிற்கின்றாள் அவன் மனைவி.

‘ஈருகோலியாலே, பேனுலுக்கேனெ ஏன் இப்படி உலுப்பிக் கிறே. ஒரு பொட்டாச்சும் ஒடல்லே ஒட்டுமா? ஆற அமர சாப்புட்டாக்க என்ன கொறையுதாம்…?’

‘ஹ்க்கும், சாப்பாடு ஒண்ணுதான் இப்ப கொறைச்சலு… தேதி பதினெட்டாச்சு. சம்பளம் போட்டு எத்தினி நாளாவது… அந்தப் பயிலைக் காணலியே .. டோக்கரு குடுத்துருவானா…?’

‘அதெல்லாம் ஒண்ணும் குடுக்கமாட்டான். நீயி சாப்பிடு. அம்ம சீட்டெக் குடுத்துட்டியா….?’

‘நல்லா குடுப்பனே …. சீட்டு தொங்கினப்பவேருந்து சொல்லிக்கினு வந்தேன், கிறிஸ்மாஸுக்கு எனக்கு வேணும்னு… சரின்னுதானே சொன்னான். முந்தநாத்துக் கேட்டேன். இன்னம் பிரிக்கலேப்பான்னான்’ ஏவுட்டு சீட்டைக் கிழிச்சிக்கிட்டு குடுன்னுட்டேன்…’

‘முந்தாநா கொட கேட்டிருக்கீங்கல… அப்புறம் என்னா …..’

‘அப்புறம் என்னாவா… ஏண்டி சொறணை கெட்ட இதே, இன்னைக்கு தேதி எத்தினி….. பதினெட்டல்ல. நாளைக்கும் நாளான்னிக்கும் போனா அப்பறம் எத்தனை நாலு இருக்கு. சொவுத்துக்குத்தான் சுண்ணாம்பு இல்லேன்னதும் மண்ணெப் பூசிப்புட்டே…! ஒம் பொறுப்புகளுக்கு பெத்து வச்சிருக்கியே நாலெ.. ஒன்னு பாவாடைங்கும் மற்றது ரவுக்கைங்கும் மற்றது சட்டேங்கும் பட்டாசுங்கும் பலூனுங்கும் ரொட்டிங்கும்…. எங்கே போறது… பொட்டில் வச்சிறிக்கியா.. எடேன்..’

சோற்றை உருட்டிப் போட்டுக் கொண்டவன் அவளை ஏளனமாகப் பார்க்கின்றான்.

‘இந்தா சும்மா போட்டு ஒளப்பிக்கிறாதே… ஆடிப்பூசை பொங்கல் தீவாளின்னா எல்லாப் புள்ளைங்களும் புதுச் சட்டை போட்டிருக்கும். இதுகளுக்கும் வாங்கிக் குடுக்காட்டி ஏமாந்து போயிறுங்கன்னு சொல்லலாம். இப்ப என்ன… நாம் மட்டும் தானே ரெண்டு பாவாடை சட்டையை தொவச்சிப் போட்டுக் கிட்டாக்க போவுது’ என்றவளை முறைத்துப் பார்த்தபடி எழுந்து கையைக் கழுவிக்கொண்டு வெளியேறினான்.

‘லயத்தில் போயி அவனைப் பார்த்து சீட்டுக் காசை தாரியா இல்லியான்னு ரெண்டுல ஒன்னு கேட்டுக்கினு வந்துடுறேன்’ என்று அவளிடம் கூறியவன் ‘ரெண்டு போட்டுக்கிட்டாத்தான் ரெண்டுல ஒன்னுன்னு கட் அன் ரைட்டாப் பேசலாம்’ என்ற வாறு நடையை மாற்றிவிட்டான்.

‘இன்னம் ஒரு எளவுகூட வாங்கலே.. பெருநாளு வருது.. என்னா சொல்றே…’ என்றபடி அறைச் சுவரைப் பிடித்துக் கொண்டு படியேறிய சிலுவை தள்ளாடினான். ‘பொன்னுக்கு வீங்கியதுபோல் முகம் மினுமினுத்தது. கண்கள் சிவப்பாக துருத்திக்கொண்டு நின்றன.

‘அடடே சிலுவையா, ஓட்டு சிலுவையை நீயே தூக்கினு தானே வர்ரே வா, வா, நானே வந்து ஒன்னைப் பாக்கணும்னு இருந்தேன்…’

‘நீயா வரணுமின்னு இருந்தே…..! சீட்டுக் காசு வாங்கயில மட்டும்தானே வருவே. குடுக்கயில எங்க வரப்போற…’

‘ஏம்பா என்னையும் உன்னை மாதிரி நெனச்சுக்கிட்டியா? நீ மட்டுந்தான் சீட்டுக்காசு தரல்லே…. மற்ற ஒன்பது பேரும் குடுத்துட்டாங்க…’

‘எனக்குத்தானே இந்த சீட்டு வேணுமின் னேன். மற்றதை எல்லாம் குடுத்திடுறேன்…’

‘குடுத்திடலாம் ஆனா.. நம்ம ‘நயிட்டிஸ்கூல்’ பேத்தி எட்டு மாசத்து வயித்துப் பிள்ளையோட மலையிலேருந்து விழுந் திருச்சே தெரியுமா… அதை நம்ம ஆஸ்பத்திரியிலே வைக்க முடியாதுன்னு பதுளைக்கு அனுப்பிட்டாங்க. கையில் மடியில் ஒன்னும் இல்லாட்டி கோர்மேந்து ஆஸ்பத்திரிக்குப் போயி திரும்பி வர முடியுமா… ஒனக்கு இந்த மாசமும் ‘நயிட்டி ஸ்கூலுக்கு’ அடுத்த மாசமுனு தான் பேச்சு. அவனுக்கு ஆபத்து ஒனக்கு பெருநாளு, என்ன செய்யலாம்… ஒரு சீட்டைக் கொரச்சே அவனுக்குக் குடுத்திட்டேன். நீ பெருநாள் காரன் கிறதுனாளே இந்த வாட்டி நீ சீட்டுக் காசை குடுக்கவானாம்.’

‘ஆயிரத்தைச் சொல்லுங்க எவ்வளவு நம்பி இருந்தேன்..’

‘அது சரிடாப்பா.. இப்ப என்ன செய்யிறது. சத்தியமா ஒனக்குத்தான் குடுத்திருக்கனும்…. ஓம் பேரைச் சொல்லியேதான் சீட்டு பிரிச்சேன்… அங்கே உசிரு போவுதுல்ல, எது பெருசு….? அட ஒனக்கேதான் குடுத்திட்டேன்னு வைச்சுக்கோ, நீ என்ன செஞ்சுடப்போறே. நாலு புதுத்துணி எடுப்பே, ஒரு போத்தலைக் கொண்டாருவே…’

‘அந்தக் கதை எல்லாம் எதுக்கு… நானு ஒரு போத்தலைக் கொண்டாறேன், ஒம்பது போத்தலைக் கொண்டாறேன்.. காசைக் குடுத்திட வேண்டியதுதானே.. நானும் இப்ப காசு வாங்காமப் போகப் போறது இல்லே …’

வாசற்படியில் உட்கார்ந்துகொள்கின்றான்.

‘பாத்தியா புத்தி எங்கே போவுதுன்னு , ஒம்பது போத்தல் கொண்டறுவீகளோ வெளக்கெண்ணை …’ என்றவர் கேலியாகச் சிரித்தபடியே ‘காசு வாங்காமப் போக மாட்டேல்ல.. சரி பாப் போமே.. ஏலெய் தம்பி, அந்த நாயை அவுத்து விடு… காசு வாங்கிட்டுப் போறானா கடி வாங்கிட்டுப் போறானான்னு பாப்போம்’ என்கின்றார்.

மனிதனிடம்தான் பேசலாம், வாதிடலாம், சண்டை போடலாம்!

நாயிடம்?

தோட்டத்திலிருப்பவர்கள் சாமப் பூஜைக்குப் போவது சிரமம். குழந்தை ஏசு பிறக்கும் அந்த நடு இரவுப் பூஜைக்குப் போகாவிட்டாலும் கிறிஸ்துமஸ் நாளின் பயன்…!

கொட்டும் மழையிலும், குளிரிலும், அந்தப் பன்னிரண்டு மணி இருளில் பத்து மைலுக்கப்பாலுள்ள கோவிலுக்குப் போய், சாம பூஜை காணுவதென்பது மிகவும் சிரமமான ஒரு காரியம்.

பெரிய கிளார்க், சின்ன டீமேக்கர், ஒரு சூப்பர்வைசர் குடும்பத்துடன் சிலுவையின் குடும்பத்தையும் சேர்த்தால் ஒரு பதினைந்துபேர் கிறிஸ்தவர்கள் இருப்பார்கள்.

பெரியவர், தானும் கிறிஸ்தவராக இருப்பதாலோ என்னவோ துரையிடம் பேசி லொறியைக் கொண்டு போக உத்தரவு வாங்கி விடுவார். இரவு பத்து மணி போல் எல்லோரும் பெரியய்யா பங்களாவுக்கு வந்துவிட வேண்டியது லொறி தயாராய் நிற்கும். உள்ளே நாற்காலி போட்டு வைத்திருப்பார்கள்உட்காருவதற்கும் விழுவதற்கும்.

இந்த முறையும் லொறிக்கு உத்தரவு வாங்கியாகி விட்டது. அய்யா எல்லாருக்கும் சொல்லி அனுப்பிவிட்டார். ‘ராத்திரிப் பூஜைக்குப் போகிறவர்கள் இரவு பத்து மணிக்கு பங்களாவுக்கு வரவேண்டும்’ செய்தி கேட்ட சிலுவை சீறினான். வேறெ வேலை மயிரு கிடையாது.. காசிருக்கவேனுக சுண்ணாம்பு அடிச்சிக் கிறானுக… வெள்ளையும் சுள்ளையுமா மாட்டிக்கிட்டு கோயிலுக் குப் போவானுக… நானு என்ன செய்ய …’

அவன் மனைவி எவ்வளவோ வாதாடிப் பார்த்தாள். பிள்ளைகள் அழுது அடம் பிடித்தன. லொறியில் ஏறிப்போகக் கிடைக்கும் வாய்ப்பை இழப்பது சிறுசுகளுக்குத் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று.

கொழுந்தேற்றிக் கொண்டு போகும்போது ஆசைக்குக் கொஞ்சம் தொத்தினாலும் விடமாட்டார்களே! இப்போது அதே லொறியில் ஏறி உட்கார்ந்து போவதென்றால் சாமான்யமா?

நாட்டுக்குப் போய்த் திரும்பிய சிலுவை மரமாகக் கிடந்தான். வழக்கத்தைவிட இரண்டு, மூன்று பங்கு கூடுதலாகக் குடித்திருந்தான்.

அவனை எழுப்பித் தட்டிப் புரட்டிப் பார்த்தவள் சோர்ந்து போனாள்.

அவனைத் திருப்பிப் போடக்கூட அவளால் முடியவில்லை. அவன் மிகவும் பாரமாய் இருப்பதுபோல் அவளுக்குத் தோற்றுகிறது.

‘சரி சரி… அது கெடக்கட்டும். நாம போயிட்டு வருவோம்’ என்று பிள்ளைகளை உடுத்தச் சொன்னாள்.

– செய்தி, 27-12-67

– மீன்கள் (சிறுகதைத் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: ஜெயமோகன், முதற் பதிப்பு: டிசம்பர் 2013, நற்றிணை பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *