பொய் – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 8, 2021
பார்வையிட்டோர்: 8,407 
 

பக்கத்துக்கு வீட்டு குடிசைக்குள் நுழைந்த என் மனைவி மரகதம் கையில் மூடிய கிண்ணத்துடன் திரும்பி வந்தாள்.

வழியில் அமர்ந்திருந்த எனக்கு….

கருவாட்டுக் குழம்பு வாசனை கம கமவென்று என் மூக்கில் ஏறியது.

புரிந்து விட்டது!

அந்த வீட்டிலிருந்து இதை வாங்க வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் பிழைப்புக்காக வெளியூரிலிருந்து வந்தவர்கள். கணவர் வாய் பேச முடியாத மனிதர் கூலித் தொழிலாளி. மனைவி, இரண்டு பிள்ளைகளோடு பிழைப்புத் தேடி வந்தவர்களுக்கு ஊர் பெரிய மனிதர் என்கிற முறையில் என் தந்தை தன் வீட்டிக்குப் பக்கத்தில் இடம் கொடுத்து, பிழைப்பும் கொடுத்திருக்கிறார்.

பிள்ளைகள் இருவரும் அருகிலுள்ள அரசாங்க பள்ளியில் படிக்கிறார்கள்.

ஒட்டு வீட்டுக்காரி குடிசைக்குள் போய் குழம்பு வாங்கி வருகிறாளென்றால்…?

எனக்குள் எரிச்சல் சுறுசுறுவென்று ஏறியது.

“என்னடி…?” அதட்டினேன்.

“ச்ச்சூ..! கம்முன்னு இருங்க…” என்று அதட்டி என்னை அடக்கிவிட்டு அவள் அடுப்படிக்குச் சென்றாள்.

“ஏன் இப்படிப் பண்றே…” நான் விடாமல் அவள் பின் சென்று கேட்டேன்.

“பாவம் அவுங்க. ஆட்டுக்கறி விற்கிற விலையில் வாங்கி சாப்பிட முடியுமா..? நம்ம வீட்டுல இன்னைக்கு கறிக்குழம்பு. சும்மா கொடுத்தால் என்ன நினைப்பார்களோ..!? ஏழையாய் இருந்தாலும் வாங்கத் தயங்குவாங்க. அதான்.. ‘பசங்களுக்குக் கொடுங்க’ ன்னு நம்ம குழம்பைக் கொடுத்துட்டு ‘எனக்குக் கருவாட்டுக் குழம்பு பிடிக்கும்!’ ன்னு பொய் சொல்லி அவுங்க குழம்பை வாங்கி வர்றேன்.” என்ற மனைவி எனக்குள் மடமடவென்று உயர்ந்தாள்.

கருவாட்டுக் குழம்பு எனக்கும் மணத்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *