சினிமாவுக்கு..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 18, 2012
பார்வையிட்டோர்: 8,272 
 
 

அந்த மூன்றாவது அடுக்கில் 20 சேலைகளுக்கு மத்தியில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் நிறப்புடவையின் பார்டர் நிறம் பச்சையாக இருந்ததால் 7வது முறையாக நிராகரிக்கப்பட்டது. அது மட்டும் அடர் நீலநிறமாக இருந்திருந்தால் கடவுள் கருணையின் பெயரில் என் மனைவி ஒரு முடிவுக்கு வந்திருப்பாள். ஆனால் துரதிஷ்டம் துரத்தி அடிக்கும் பொழுது என்ன செய்ய முடியும்? 3 முறை குட்டித் தூக்கம் போட்டாகிவிட்டது. வழக்கமாக அலுவலகத்தில் நடைபெறும் விஷயம்தான் என்றாலும் விடுமுறை நாளான இன்றும் அலுவலக நினைவை ஏற்படுத்தும் இந்த குட்டித் தூக்கம் வெறுப்பாக இருந்தது.

அணு விஞ்ஞானிக்கு இணையாக தனது சிந்தனையாற்றலை கடந்த ஒன்றரை மணி நேரமாக செலவழித்து, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்திருந்தாள் அவள். எனக்கு மிக நன்றாக நியாபகம் இருக்கிறது. சென்ற தீபாவளிக்கு 3 தினங்களுக்கு முன்பாக சுமார் 8 மணி நேரங்களை செலவழித்து, ஒரு ஜீவனை வதைத்து (ஜவுளி கடைக்காரன்), அந்த ஜீவனை மயக்கமடையச் செய்து தேர்ந்தெடுத்த இளம் பச்சை நிற விலையுயர்ந்த புடவைதான் அவள் இன்று தேர்ந்தெடுத்த புடவை. என் மனைவிக்கு இன்றுவரை தெரியாது, அன்று அருகில் உள்ள தியேட்டரில் நான் திரைப்படம் ஒன்றை கண்டு ரசித்து விட்டு வந்த செய்தி. அன்று என்னுடன் வந்திருந்த பொறுப்பு மிகுந்த கணவர் ஒருவரை (நான் படம் பார்க்க அழைத்தபோது நேர்மைத்திலகம் போன்று பேசினார்) முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்பவில்லை என்றால், மயக்கத்திலேயே மண்டையை போட்டிருப்பார். பாவம் பி.பி. எகிறிவிட்டது.

அவ்வளவு உழைப்பையும், பொறுமையையும் செலவழித்து எடுக்கப்பட்ட அந்த புடவையை தேர்ந்தெடுத்து (கடவுளுக்கு நன்றி) அணிய முற்பட்டிருக்கும் உன் அம்மா இன்னும் அரைமணிநேரத்தில் தயாராகி விடுவாள் என என் 5 வயது பெண் குழந்தையின் உள்ளங்கையில் அடித்து சத்தியம் செய்தேன். அவள் என்ன நினைத்துக் கொண்டு என்னை பார்த்தாளோ புரியவில்லை. ஆனால் என்னை முறைத்துப் பார்த்தாள் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். ஒருவேளை மனதிற்குள் என்னை திட்டியிருப்பாளோ என்ற சந்தேகமும் எனக்கு உண்டு.

இன்று மட்டும் என் மகளுக்கு சத்தியம் செய்து கொடுத்தபடி சினிமாவுக்கு அழைத்துச் செல்லாவிட்டால் முகத்தில் காரிதுப்பினாலும் துப்பிவிடுவாள். என் மகளிடம் என் மானத்தை காத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஒரு காரணத்துக்காகவாவது, எந்தவித உணர்ச்சி வேகத்துக்கும், கோபதாபங்களுக்கும் இடம் கொடுக்காமல், அமைதியை கடைபிடித்து சினிமாவுக்கு சென்றுவிட வேண்டும் என்கிற வைராக்கியத்தை அடிமனதில் விதைத்துக் கொண்டிருக்கிற வேளையில் அவள் வெளிப்பட்டாள். அரைத்தூக்கத்தில் இருந்ததால் கண்கள் மங்கலாகத் தெரிந்தன. ஒருவித கனவு நிலையில் என் மனைவியை பார்த்ததும் அவ்வளவு அழகாகத் தெரிந்தாள். எனக்கு இப்படியொரு சந்தேகம் அப்பொழுது தோன்றியது. ஒருவேளை இங்கிருந்து மூன்றாவது தெருவாகிய கம்பன் தெருவில், ரோஜாபூ நிறத்தில் வர்ணமடிக்கப்பட்ட 2 மாடிவீட்டின் மேல் வீட்டில் வசிக்கும் பெண்ணாகிய வசந்தப்பிரியா டீச்சராக இருக்குமோ? என்கிற மயக்கம் எனக்கு அப்பொழுது ஏற்பட்டது. ஆனால் அடுத்த வினாடியே எனக்கு அந்த மயக்கம் மறைந்துவிட்டது. ஏனெனில் என் மனைவி மூன்றடி தூரத்தில் நெருங்கி வந்து என்னை முறைத்துப் பார்த்தாள்.

கடந்த 3 மணி நேரத்தில் 3 விஷயங்களை நான் சிறப்பாக செய்து முடித்திருந்தேன். ஒரு சிவப்பு வர்ண கவுனை என் மகளுக்கு அழகாக அணிவித்திருந்தேன். அதற்காக 5 சொட்டு வியர்வைத் துளிகளை நான் சிந்த வேண்டியிருந்தது. அவள் ஜெட்டிக்ஸ் சேனல் பார்த்துக்கொண்டிருக்கும் போது, ஆடை அணிவிக்க முயற்சி செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று பின்னர்தான் யோசித்து புரிந்து கொண்டேன். பின் அவளுக்கு தலைவாரி விடும் கடுமையான பணியொன்றினையும் செய்து முடித்திருந்தேன். கண்கள் கலங்கிவிட்டன என்று சொன்னால் அது மிகையில்லை. அந்த ஹேர்பின்னை வாயில் கவ்விக் கொண்டு லாவகமாக தலையை வாரிவிடும் கலையை நான் சரியாக கற்றுக் கொள்ளவில்லை. அதில் நான் கற்றுக் குட்டிதான். தவறுதலாக பல் ஈறில் குத்திக் கொண்டு ரத்தம் வந்த போது கூட நான் அழவில்லையே! அப்படியொரு வைராக்கியம் அடிமனதில், இன்று எப்படியாவது சினிமாவை பார்த்துவிடவேண்டும் என்பதில். பின் அவளுக்கு உப்புமா ஊட்டி விடும்போது நடைபெற்ற துயரச் சம்பவத்தை நான் எப்படி சொல்வது? 6 வயது குழந்தை கடித்தால் வலிக்காது என்று இயல்பாக நடந்து கொள்ள வேண்டாம் என்கிற என் அறிவுரையை மறுபேச்சில்லாமல் ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன்.

உச்சிவெயில் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தால், செய்து கொண்ட மேக்கப்பும், பூசிக்கொண்ட ஃபேர் அண்ட் லவ்லியும் வீணாகிவிடும் என்ற காரணத்தாலா? அல்லது பெட்ரோல் விலை உயர்ந்து விட்டது என்ற காரணத்தாலா? என்று தெரியவில்லை. என் மனைவி ஆட்டோவில் செல்லலாம் என்கிற முடிவை போர்க்காலங்களில் ஒரு சர்வாதிகாரி முடிவெடுப்பது போல் பட்டென்று எடுத்தாள்.

ஆமை, முயல் கதையில் முயல் தோற்றதுபோல், கிளம்புவதற்கு 3 மணி நேரம் எடுத்துக் கொண்ட என் மனைவியிடம் நான் தோற்றுப் போனேன். சாவகாசமாக அரைத்தூக்கத்தில் ஆழந்திருந்த நான் எண்ணி 90 விநாடிகளுக்குள் தயாராகி ஓடிவந்தது என் மனைவியின் முகத்தில் எரிச்சலை கொண்டு வந்துவிட்டது. இப்படித்தான் ஒவ்வொரு முறையும் ஆண்களை பெண்கள் வெற்றி கண்டு விடுகிறார்கள். பொறுமை கடலினும் பெரிது என்பதை பெண்களிடமிருந்து ஆண்கள் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால் சும்மா சொல்லக் கூடாது நேரத்தைக் கணக்கிடுவதில் பெண்களுக்கு நிகர் பெண்கள்தான். மதியம் செல்ல வேண்டிய திரைப்படத்திற்கு அதிகாலையிலிருந்தே தயாராக முற்பட்டது பாராட்டுக்குரியது.

எங்கே வெளியே கிளம்பினாலும் என் குழந்தை தயங்காமல் ஒரு விஷயத்தை கூறுவாள். எங்கே இன்னும் கூறவில்லையே, ஒருவேளை மறந்துவிட்டாளோ என்று யோசித்துக் கொண்டிருக்கையில், எங்கோ பறந்து கொண்டிருந்த காகத்தை பார்த்துக் கொண்டே டக்கென்று கேட்டாள்,

“அப்பா எனக்கு ஒன் பாத்ரூம் போகணும்”

வெரிகுட், இப்பத்தான் நீ என் பிரியாகுட்டி, என்று பாராட்டியவாறே அழைத்துச் சென்றுவிட்டு கூட்டி வந்தேன். அதற்குள் ஆட்‍டோக்காரர் வெயிட்டிங் சார்ஜ் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இல்லை அதைப்பார்த்தால் வேண்டுகோள் போன்று தெரியவில்லை. ஒருவித உத்தரவு போல் தெரிந்தது. சென்னையில் ஆட்‍டோவில் மட்டும் செல்லக் கூடாது என்கிற என் கடுமையான விரதத்தை உடைத்தபோதே, இதுபோன்ற வேண்டுகோள், உத்தரவுகளுக்கெல்லாம் தயாராகிவிட்டேன் நான்.

அந்த ஆட்‍டோக்காரர் மிகுந்த கோபக்காரர் போல, லஸ்கார்னர் அருகில் சென்று கொண்டிருந்த போது, எதிர்த்தாற்போல் வந்து கொண்டிருந்த பேருந்து ஓட்டுனரை மிக மோசமாக திட்டினார்.

“பேமானி, கய்த, டேய் கஸ்மாலம்”

எதற்காக திட்டனார் என்று தெரியவில்லை, அந்த பேருந்து ஓட்டுனரும் அதை பெரிதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. நான் ப்ரியாகுட்டியின் காதுகளை பொத்திக் கொண்டேன். அப்படி மட்டும் அவள் காதுகளை அடைக்கவில்லை என்றால் அவள் குறைந்த பட்சம் 25 கேள்விகளாவது என்னைப்பார்த்த இடைவிடாது, மூச்சுவிடாமல் கேட்பாள்.

“அப்பா பேமானின்னா என்ன?”

“அப்பா கஸ்மாலம்னா என்ன?”

“அப்பா அவரு எதுக்காக திட்டுறாரு”

……………………..
…………………….

ஆனால் அவள் சாலையில் செல்வோரை மிகமுக்கியமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் நான் தப்பித்தேன்.

பின் ராதாகிருஷ்ணன் சாலை வளைவில் திரும்புகையில் ஒரு மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. அந்த ஆட்டோ ஓட்டுனர் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என் அலுவலக கொலீக் ஒருவர் கூறினார். ஐ.ஏ.எஸ். கூட பாஸ் செய்துவிடலாம், பைலட் ஆவது அவ்வளவு எளிதல்ல என்று. ஆனால் ஒரு பைலட் அநியாயமாக ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால் யார்தான் நம்பப் போகிறார்கள். வில்லிலிருந்து புறப்பட்ட அம்‌பைப் போல ஆலந்தூரில் தொடங்கிய எங்கள் பயணம் கடவுள் புண்ணியத்தில் எந்தவித ஆபத்தும் இல்லாமல் சிட்டி சென்டரில் வந்து முடிவடைந்தது. அதற்காக சிறப்பு நன்றி ஒன்றை கடவுளுக்கு கூறினேன்.

சிட்டி சென்டருக்குள் நுழைந்ததும் குடுகுடுவென ஓட்டமாக ஓடி ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு பின் என் கையை வந்துபிடித்துக் கொண்டாள் பிரியா. பின் அந்த எஸ்கலேட்டரில் இன்னொரு முறை போய்வர ‍வேண்டும் என அடம்பிடித்தாள். முடியாது என மறுத்ததுதான் தாமதம், அதே இடத்தில் உட்கார்ந்து கால்களை உதைத்துக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள். இ‌தையெல்லாம் என் மனைவி கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அவளுக்குதான் அணிந்திருந்த நகை, உடை, மேக்கப் மீதுதான் அவ்வளவு கவனமும். என்னை எப்படி வேலை வாங்குவது என என் குழந்தைக்குக் கூட நன்றாகத் தெரிந்திருக்கிறது. பின் அவளுக்கு திருப்தி ஏற்படும் வரை எஸ்கலேட்டரில் ஏறி இறங்கி விளையாடினோம். நல்லவேளை யாரும் கவனிக்கவில்லை. உனக்கு ப்ரியா என்று பெயர் வைப்பதற்கு பதிலாக, பிடிவாதம் என்று பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என்று கூறினேன், அவளை பார்த்து. அது அவளுக்கு புரியாத காரணத்தால் சிரித்துக் கொண்டே ஏற்றுக்கொண்டாள்.

இன்டர்நெட்டிலேயே டிக்கெட் புக் செய்துவிட்டதால், வரிசையில் நின்று டிக்கெட் வாங்கும் வன்கொடுமைக்கு நான் ஆளாகவில்லை. ஸ்கிரீன் 3ல் எங்களுக்கான திரைப்படம் போடப்பட்டிருந்தது. இருட்டிற்குள் இல்லாத படியை இருப்பதாக நினைத்துக் கொண்டு கால்களை எட்டு வைத்து நடந்து ஏமாந்தேன். பின் எங்களுக்கான இருக்கையில் அமர்ந்தோம். எப்பொழுதுமே என் மகளுக்கான இருக்கை என் மடிதான். நன்கு வசதியாக மடியில் உட்கார்ந்து கொண்டாள்,படம் துவங்கி 10 நிமிடங்கள்தான் இருக்கும் என் கன்னத்தை சொறிந்தாள்.

“அப்பா எனக்கு பாப்கார்ன் வேணும்”

இன்னும் ஹீரோயினைக் கூட பார்க்கவில்லையே, அதற்குள்ளாக ஆரம்பித்துவிட்டாளே என நொந்தபடி எழுந்து சென்று வாங்கி வந்தேன். பின் ஒவ்வொரு பாப்கார்னாக எடுத்து ஊட்டி விட வேண்டும் அவளுக்கு. அடுத்த 15 நிமிடங்களுக்குள் அந்த பாப்கார்ன் காலியாகிப் போனது. மீண்டும் கன்னத்தை சொறிந்தாள்.

“அப்பா ஐஸ்கிரீம் வேணும்”

ஒருவேளை போன ஜென்மத்தில் பேரராக வேலை பார்த்திருப்பேனோ என்கிற சந்தேகம் அப்பொழுது தோன்றியது.

பின் 60தாவது நிமிடத்தில் ஒரு ரோல்கேக், 90வது நிமிடத்தில் ஒரு பெப்சி, 110வது நிமிடத்தில் 2 சமோசா (சாஸ் ஊற்றவில்லை என மீண்டும் ஒருமுறை) பின் தூங்கிப் போனாள். எந்த டால்ஃபி டிஜிட்டல் சத்தமும் அவள் தூக்கத்தைக் கலைக்க முடியவில்லை.

ஐநாக்ஸ் சென்றுவிட்டு அருகில் இருக்கும் மெரினாவிற்கு செல்லவில்லை என்றால் சாமிக்குத்தமாகிவிடும் என்கிற காரணத்துக்காகவும், என் மனைவியின் உருட்டலான மிரட்டும் பார்வைக்காகவும் மதிப்பு கொடுத்து நான் இவ்வாறு கூறினேன்.

“ஷாலு பீச்சுக்கு போயிட்டு வீட்டுக்கு போகலாமே”

பீச்சுக்கு கூட்டிச் செல்லாமல், வீட்டுக்கு செல்லும் மனதைரியமும், உறுதியும் உனக்கு உண்டா என்பது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு பின் மென்மையாக சிரித்தாள்.

“உங்களுக்கு ஓ.கே. ன்னா, எனக்கும் ஓ.கே. தான்”

இவ்வளவு பெருந்தன்மையான பதிலுக்குப் பிறகும் கடற்கரைக்கு அழைத்துச் செல்லவில்லை என்றால் பெண்பாவம் சும்மாவிடாது என உள்ளுக்குள் ஒரு அசரீரி என்னையும் மீறி ஒலித்தது.

பிரியாகுட்டி இனிமேல் நடக்கமாட்டேன் என மகாத்மா காந்தி ஒரு முடிவெடுப்பது போல் எடுத்துவிட்டாள். அதனால் அவளை தூக்கிக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. மீண்டும் ஆட்டோ பிடித்து பீச்சில் இறங்கிய போது மணி 5.

கடற்கரையில் ப்ரியாவின் பார்வை வெகு நேரமாக எதையோ உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தது. அவள் பார்த்த திசையில் உற்றுப் பார்த்தபோது, மீனை முழுதாக எண்ணெய் சட்டியில் போட்டு வருத்துக் கொண்டிருந்தார்கள். அதை நோக்கி தன் ஆட்காட்டி விரலை நீட்டினாள். அது அவளுக்கு வேண்டுமாம். அவளுடன் நீண்ட விவாதத்தில் ஈடுபட வேண்டியிருந்தது.

“பிரியாகுட்டி அதெல்லாம் சாப்பிடக் கூடாது வயித்துக்கு ஒத்துக்காது”

“அதெல்லாம் ஒத்துக்கும்”

“மீன்முள் தொண்டையில குத்திடும்”

“அதெல்லாம் குத்தாது”

“ஐயோ அது சுத்தமே இல்லம்மா”

“அதெல்லாம் சுத்தம்மாதான் இருக்கு”

“அதை சாப்பிட்டா உடம்பு சரியில்லாம போயிடும் அப்புறம் டாக்டர்கிட்ட போய் ஊசி போட வேண்டி வரும், ஜாக்ரதை”

சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தாள்…………….. இந்த பழைய மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படுபவளா நான் என்கிற ரீதியில் என்னைப் பார்த்தாள்.

“ஊசி போட்டாலும் பரவாயில்லை அது எனக்கு வேணும்”

வேறு என்ன செய்வது தோல்வியை ஒப்புக் கொள்வதைத் தவிர, அவள் அம்மாவைப் போலவே வந்து பிறந்திருக்கிறாள்.

இரவ 7 மணிக்கு வீடு திரும்பிய போது ஒரே ஒரு எண்ணம் தான் மனதை குடைந்து கொண்டிருந்தது. அடுத்த நாள் அலுவலகம் செல்ல வேண்டும், மீண்டும் 6 நாட்களுக்கு இயந்திரமாக மாற வேண்டும். ஒருவேளை ப்ரியாவின் மனதிலும் இந்த அழுத்தம் இருக்கலாம். அவளும் இப்பொழுதே எல்.கே.ஜியில் சேர்ந்துவிட்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *