சாப விமோசனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 28, 2017
பார்வையிட்டோர்: 10,216 
 
 

கௌதமன்:

அவனுக்குக் கோபமான கோபம்.

செய்வதையும் செய்து விட்டு எப்படி கல் போல் நின்று கொண்டு இருக்கிறாள் கிராதகி! இத்தனை வருஷ தபஸ் சக்தியை பயன்படுத்தி அவளை சாம்பலாக்கி விட அவன் மனஸ் துடித்தது. ஆனால் அது அவள் செய்த தவறைப் பொறுத்த வரையில் குறைந்தபட்ச தண்டனையாக அல்லவா இருக்கும்? அதனால் வேறு ஏதாவது தண்டனை பற்றி யோசிக்க வேண்டும்.

‘ நான் அப்படி என்ன அவளுக்கு குறை வைத்து விட்டேன்?’ என்று யோசித்தான் கௌதமன். அப்போது அவன் உள்மனது ‘கௌதமா!’ என்று எச்சரித்தது. ‘உன் தலையில் நீயே மண்ணை வாரி போட்டுக் கொள்ளாதே; உனக்கு தெரியாதா அவள் ஏக்கம் என்னவென்று? பெரிய ரிஷியாய் இருந்தால் என்ன, பெண் மனஸை புரிந்து கொண்டு விடமுடியுமா என்ன? மேலும் தவறு அவள் செய்து இருந்தாலும், அவளை செய்யத் தூண்டியது யார் குற்றம்? நீ தானே? மனைவியை கண் போல் பார்த்து கொள்ள வேண்டியது கணவன் கடமை தானே? நீ உன் கடமையை பிழையில்லாது செய்தாயா?’ என்று அவன் மனஸ் சொன்னது.

கௌதமன் அமைதியானான்.

யோசித்துப் பார்கையில் அது அவள் தவறாக மட்டும் தோன்றவில்லை அவனுக்கு. முதலில் இத்தனை வயது வித்யாசத்தில் அவளை மணம் புரிந்ததே தவறு என்று தோன்றியது. பூஜை புனஸ்காரங்கள் யாகம் தபஸ் என்றே வாழ்கையை ஓட்ட நினைத்தது இரண்டாவது தவறு. அந்த காமுகன் இந்திரனின் உள்நோக்கம் புரியாமல் போனது மூன்றாவது தவறு.
அஹல்யாவைப் பார்த்தான் . ஒரு எலிக்குஞ்சு போல நடுங்கிக் கொண்டு இருந்தாள். ‘ராக்ஷசி எவ்வளவு அழகாக இருக்கிறாள்’ என்று அவன் மனஸ் ஒரு க்ஷணம் அவள் அழகில் லயித்தது. ‘ ஏனடி இப்படி செய்து விட்டாய்? குறை இருந்ததென்றால் என்னிடம் கூறி இருக்கலாம் அல்லவா?’ என்று வாய் விட்டே கேட்டு விட்டான் . அதற்கு பதிலாக அஹல்யா பார்த்த பார்வையின் வேகம் தாளாது அவன் கண்கள் நிலம் நோக்கி தாழ்ந்தன.

அஹல்யா:

“சே! என்ன அறிவீனம்? இப்படியா ஒரு தவறு செய்வேன்? அதுவும் ஆர்யபுருஷர் அதைக் கண்டுபிடித்து விடுவார் என்று தெரிந்தும்? காமம் இப்படியா ஒரு ஆளைக கவிழ்க்கும்?” என்று மனசுக்குள் யோசித்த அஹல்யாவின் எண்ணங்கள் பின்னோக்கி ஓடின.

திருமணமான புதிதில் அவள் தங்களுக்கு இடையே இருந்த வயது வித்தியாசத்தை பற்றி அதிகம் நினைக்கவில்லை. கௌதமனின் தேஜஸ், தவ வலிமை புகழ் இதெல்லாவற்றையும் அருகில் இருந்து பார்த்தவளுக்கு மற்ற விஷயங்களில் மனஸ் செல்லவில்லை. ஆனால் தன்னுடைய கார்யங்களிலேயே கௌதமன் அதிகமாக லயிப்பதைக் கண்டு சிறிது நாட்களில் அவள் மனம் தவிக்க ஆரம்பித்தது. தான் ஏமாந்து விட்டோமோ என்று மனம் கலங்கியது என்னோவோ உண்மை. தந்தை வயதுள்ள ஒருவரை கணவனாக வரிததும், அவள் வயதின் தேவைகளை அவன் சரியானபடி கவனிக்காததும் அவளை ரொம்பவுமே பாதித்தது. பெண் மனஸை புரிந்து கொள்ளாதவர் பெரிய ரிஷியாய் இருந்தென்ன புண்யம்? தற்காலத்தில் திருமணமான ஒரு பத்து வருஷத்தில் பெண் மனம் அடையும் நிலையை அவள் சில நாட்களிலேயே அடைந்துவிட்டாள்.

அப்போது தான் ஒரு நாள் பூப்பறிக்கும் போது அவனைக் கண்டாள்.

இந்திரன்:

அழகு சுந்தரன். தேவர் தலைவன். அவனும் அவளைப் பார்த்தான். நொடிப் பொழுதில் அவள் மனதைப் புரிந்து கொண்டான். தனக்கு வாய்த்த சந்தர்ப்பத்தை உணர்ந்து கொண்டான். இந்த விஷயத்தில் வல்லவன் ஆயிற்றே அவன்? ஆனால் கௌதமனை நினைத்து பின் வாங்கினான்.

ஆனால் விதி யாரை விட்டது? காமம் பிடித்து ஆட்டும் போது நாம் எம்மாத்திரம்? அதுவும் ஒருதலை காமம் இல்லை – இரு பக்கத்திலும் சமமான இச்சைக் கனல் கொழுந்து விட்டு எரிகிறது. தவறு என்று தெரிந்தும் அந்தக் கனலின் இதத்தில் மனஸ் லயிக்கிறது. பிடிபட்டுக் கொண்டால் சபிப்பானே என்ற எண்ணம் பயம் தந்தது. ஆனால் தேவேந்திரனான தான் எப்படியும் தப்பித்து விடுவோம் என்று அவன் உள் மனம் சொன்னது. ஆனால் அஹல்யா? ஒரு முறை அடைந்த பின் அவள் எப்படிப் போனால் என்ன என்று ஆண்மனம் கொக்கரித்தது. சந்தர்பம் வர காத்திருக்கலானான்.

அந்த நாள்:

அந்த நாளும் வந்தது. கௌதமனுக்கு ஒரு பெரிய யாகத்தில் பங்கேற்க அழைப்பு வந்தது. அஹல்யாவிடம் சொல்லிவிட்டு நதிக்கரைக்கு புறப்பட்டான். ஸ்நானாதிகளை முடித்துக் கொண்டு அப்படியே யாகம் நடக்கும் இடத்துக்குச் செல்வதாக ஏற்பாடு. யாகம் முடிந்து திரும்ப எப்படியும் இரவாகிவிடும். அவன் புறப்பட்டு சென்றவுடன் அஹல்யா புஷ்பம் பறிக்க நந்தவனத்துக்கு சென்றாள். பூக்களைப் பறித்துக் கொண்டு பர்ணசாலைக்குத் திரும்பினாள். அங்கே அவளுக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது.

பர்ணசாலை உள்ளே நுழைந்த அவள் கண்கள் உள்ளே அமர்ந்திருந்த கௌதமனைப் பார்த்து வியப்பில் விரிந்தன. கௌதமன் உடல் நலம் குன்றியவனைப் போல ஒரு விவரிக்க முடியாத முக பாவத்துடன் அமர்ந்திருந்தான். “ஆர்யபுத்ர” என்றவாறே கையில் இருந்தப் பூக்கூடையைக் கீழே வைத்துவிட்டு அவன் அருகில் விரைந்தாள். அவன் நெற்றியில் தன் கையை வைத்துப் பார்த்தாள். நெற்றி கொதித்தது. பின்னர் கன்னம் கழுத்து என்று கிரமமாக தொட்டுப் பார்த்ததில் கௌதமன் உடல் ஜ்வரத்தில் கொதித்துக்கொண்டிருந்ததை உணர்ந்தாள்.

“சற்று ஓய்வெடுங்கள், நான் இதோ சென்று மூலிகை பறித்து வருகிறேன்” என்று வெளியே செல்ல யத்தனித்தவளை கௌதமன் கரங்கள் பிடித்து நிறுத்தின.

“ஹே ப்ரியே! இந்த ஜ்வரம் மூலிகையினால் தீர்வதல்ல; காரிகையினால் தீர்வது. உன் உடலில் என்னையேத் தூரிகையாக்கி ஒரு காமச் சித்திரம் வரைந்திட விழைகிறேன். என் அருகில் வா அல்லி மலரே” என்று அவன் வாயிலிருந்து பிதற்றலாக சொற்கள் வெளியே வந்தன.

அஹல்யாவின் காலின் கீழிருந்த பூமி நழுவியது. இது கனவா அல்லது நனவா என்று அவள் மனம் அவளைக் கேட்டது. நனவுதான் என்று புரிந்த மாத்திரத்தில் அவள் மனதில் இரண்டு வெவ்வேறுவிதமான உணர்வுகள் எழுந்தன.

“ஹே பிரபோ! என்ன சோதனை? யாகத்தில் பங்கேற்க செல்ல வேண்டியவர் போகத்தில் பங்கேற்க திரும்பி வந்திருக்கிறாரே? என்ன அபசாரம்!” என்று அவள் ஒரு மனம் சொன்னாலும், அவள் மனதில் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்த காமக்கனல் கௌதமனை தழுவிக்கொள்ள தூண்டியது.

காமம் வென்றது.

“ஆர்யபுத்ர!” என்று முனகியவாறே கௌதமனின் தோள் அணைந்தாள். அவன் உடம்பிற்குள் செல்ல முயல்பவள் போல் அவனை இறுகத் தழுவினாள்.

கௌதமனின் கரங்கள் அஹல்யாவின் மேனியில் சித்திரம் வரையத் துவங்கின. தடுப்பார் எவருமில்லாத ஒரு மன்னனின் படைகளைப் போல அவள் மேனியில் அவன் கரங்கள் முன்னேறின. இச்சைத் தீ கொழுந்து விட்டு வளர்ந்ததும் கச்சை தளர்ந்தது. முனகுவது அல்லால் வேறு மொழியறியாதவளானாள் அஹல்யா.

தன்னை மெல்ல மெல்ல இழந்துக் கொண்டிருந்த அவள் இதழ்களை கௌதமன் தன் இதழ்களை கொண்டு மூடினான். ஒருவர் நாவு இன்னொருவர் வாயினுள் சென்று நலம் விசாரித்தது. மூச்சு சர்ப்பத்தின் அரவம் போல் வெளிவந்து கொண்டிருந்தது. அந்த சரசக் காற்றை உள்வாங்கி காமக்கடலினுள் முழுவதுமாக மூழ்கிப் போகவிருந்த வேளையில் அஹல்யாவின் மனதில் பளீரென்று ஒரு மின்னல்.

கௌதமனின் நாசியினின்று வெளி வந்து கொண்டிருந்த மூச்சுக் காற்றில் ஒரு பரிமளம். இதுவரையில் அவள் அவனிடம் சுவாசித்து அறியாத ஒரு சுகந்தம். இந்த வாசனையை வேறு எங்கோ உணர்ந்திருக்கிறாள். அதை மீண்டும் உள்வாங்கி எங்கே இதை உணர்ந்திருக்கிறோம் என்று யோசித்த அஹல்யா திடீரென்று உறைந்தாள்.

இந்திரன்! வந்திருப்பது கௌதமன் அல்ல இந்திரன் என்று அஹல்யாவிற்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கிவிட்டது, அவள் உடல் சிலிர்த்தது. கற்பு பறிபோக இருந்ததே என்று விதிர்விதித்தது. ஆண்மகனின் தோள்களைத் தழுவியிருந்த கரங்கள் மெல்லவே விலகின. கலைந்து உலைந்திருந்த ஆடைகளைத் திருத்தினாள்.

“ப்ரியே! ஏன் விலகுகிறாய்? ஏன் ஆசை அடங்கவில்லை!” என்றான் போலி கௌதமன். அவனைச் சுட்டெரிப்பது போலப் பார்த்தாள் அஹல்யா. மீண்டும் அவளைத் தழுவிட நெருங்கினான் இந்திரன். “ தேவேந்திரரே நில்லுங்கள்!” என்றாள் அஹல்யா.

போலி கௌதமனின் முகம் ஒரு கணம் வெளிறி பின் தன்னிலைக்கு திரும்பியது. கௌதமன் வேஷம் களைந்தான். இந்திரனாக நின்றான். இனிமேல் வேஷம் தேவையில்லை என்று நினைத்தான் போலும்!
இந்த அதிசயத்தைக் கண்ட அஹல்யாவின் கண்கள் விரிந்தன. இந்திரனின் சௌந்தர்யம் அவளை ஸ்தம்பிக்க வைத்தது. அவன் திவ்ய மேனியின் சுகந்தம் அந்த பர்ணசாலை முழுவதும் பரவியது. அவள் உடல் சிலிர்த்தது. வேண்டாம் என்று அவள் புத்தி சொன்னாலும் நாசி அந்தப் பரிமளத்தை ஆழமாக உள்வாங்கியது. அந்தப் பரிமளமும் அந்த சௌந்தர்யமும் அவள் இந்திரியங்களை தம் வசப்படுத்தின. அவள் உடலில் மெதுவே அணைந்து கொண்டிருந்த காமாக்னி மீண்டும் கொழுந்துவிட்டு எரிந்தது.

அவளுள் நிகழ்ந்த இந்த மாற்றத்தை உணர்ந்தான் இந்திரன். மான் மீது பாயும் தருணம் இதுதான் என்றுணர்ந்த புலி போல அவளை வேகமாக நெருங்கினான்.

அவன் விரிந்த கரங்களுக்குள் சரணடைந்தாள் அஹல்யா. ஈருடல் ஒன்றானாது. காமமே உண்மை என்றானது. அந்த சரஸப் போரில் இருவரும் வென்றார்கள். இருவரும் தோற்றார்கள்.

ஸரஸத்தில் காலம் கடந்தது தெரியவில்லை. திடீரென்று பர்ணசாலை வாயிலில் நிழலாடியது. தன்னிலைக்கு திரும்பிய இருவரும் யாரெனப் பார்த்தார்கள். கௌதமன்!

“அஹல்யா” என்று கர்ஜித்தான்.

அதன் பிறகு அங்கு நடந்ததை விவரிப்பது மிகவும் கடினம். ஆடைகளை திருத்திக்கொண்ட குற்றவாளிகள் இருவரும் கௌதமன் முன் கைகட்டி நின்றனர்.

“இந்திரா! தேவர் தலைவனுக்கு இது அழகா? அடுத்தவர் மனைவியை பெண்டாள எப்படி மனம் துணிந்தது உனக்கு? ஏன் தபஸ் சக்தியின் மீதிருந்த பயம் விலகி விட்டதா? சொல்” என்றான் கௌதமன் உரத்த குரலில்.

“ கௌதமரே! தவறு ஏன் மீது மட்டுமல்ல, இவளுடையதும் தான். நான் இந்திரன் என்று தெரிந்த பிறகு தான் தவறே நடந்தது ” என்றான் இந்திரன் செருக்குடன்.

“செய்வதை செய்துவிட்டு வாதாடுகிறாயா காமுகா? பெண் யோனியின் மயக்கத்திலே செய்யகூடாத தவறிழைத்தாய். எந்த யோனியின் மீது உன் மனம் லயித்ததோ, அதுவே உன் உடல் முழுவதும் தோன்றக்கடவது. ஏன் தபஸ் சக்தியின் மீது ஆணை” என்று கௌதமன் சபித்தான்.

ஸ்மசான அமைதி நிலவியது. இந்திரன் உடலில் சாபம் உடனே நிறைவேறியது. அதைக்கண்டு வெட்கி அஹல்யா கண்களை மூடிக்கொண்டாள். ஒரு கணம் ஸ்தம்பித்த இந்திரன் பின்னர் கடகடவென்று நகைத்தான். அவன் புத்தி பிசகி விட்டதோ என கௌதமன் நினைத்தான். “இந்தக் கோலத்தில் நான் வெளியே சென்றால் என்னைக் கண்டு அனைவரும் நகைப்பர் என்பது உண்மையே. ஆனால் அதன் காரணம் தெரிந்து கொண்ட பின்னர் உன் மீது நகைப்பரே! இதை நினைத்தாயா கௌதமா? இந்த தண்டனை உனக்கும் சேர்த்து தான். இனிமேல் நீ யாகங்களுக்கு செல்லத்தான் முடியுமா? இல்லை கூப்பிடத் தான் கூப்பிடுவார்களா? யோசிக்காமல் சாபம் தந்தாயே கௌதமா!” என்று இந்திரன் எள்ளி நகையாடினான்.

என்ன செய்வது என்றறியாத கௌதமன் கண்மூடி த்யானித்தான். அருள் வாக்கு கிடைத்தது. “ இந்த சாபம் உன் கண்களுக்கு மட்டுமே தெரியும்; பிறர் கண்களுக்கு அவை கண்களாகவே தெரியும். இங்கிருந்து அகன்று விடு” என்றான். தான் விரும்பியது நடந்த களிப்பில் அந்தக் காமுகன் அங்கிருந்து மாயமானான்.

இப்போது கௌதமன் பார்வை தன் மனையாளின் பக்கம் திரும்பியது.
‘ நான் அப்படி என்ன அவளுக்கு குறை வைத்து விட்டேன்?’ என்று யோசித்தான் கௌதமன். அப்போது அவன் உள்மனது ‘கௌதமா!’ என்று எச்சரித்தது. ‘உன் தலையில் நீயே மண்ணை வாரி போட்டுக் கொள்ளாதே; உனக்கு தெரியாதா அவள் ஏக்கம் என்னவென்று? பெரிய ரிஷியாய் இருந்தால் என்ன, பெண் மனஸை புரிந்து கொண்டு விடமுடியுமா என்ன? மேலும் தவறு அவள் செய்து இருந்தாலும், அவளை செய்யத் தூண்டியது யார் குற்றம்? நீ தானே? மனைவியை கண் போல் பார்த்து கொள்ள வேண்டியது கணவன் கடமை தானே? நீ உன் கடமையை பிழையில்லாது செய்தாயா?’ என்று அவன் மனஸ் சொன்னது.

கௌதமன் அமைதியானான்.

யோசித்துப் பார்கையில் அது அவள் தவறாக மட்டும் தோன்றவில்லை அவனுக்கு. அஹல்யாவைப் பார்த்தான். ஒரு எலிக்குஞ்சு போல நடுங்கிக் கொண்டு இருந்தாள். ‘ராக்ஷசி எவ்வளவு அழகாக இருக்கிறாள்’ என்று அவன் மனஸ் ஒரு க்ஷணம் அவள் அழகில் லயித்தது. இருந்தாலும் தவறுக்கு தண்டனை உண்டல்லவா?

“ ஹே அஹல்யே ! உன் தவறுக்கு ஒரு வகையில் நானும் காரணம். என்றாலும் நீ தண்டைனுக்கு பாத்திரமானவள். ஆசையை அடக்க முடியாமல் அறிந்தே தவறிழைத்த நீ, சஞ்சல மனசிற்கு சொந்தக்காரியான நீ, எந்தவித சலனமுமில்லாத கல் ஆவாய். திரேதா யுகத்தில் ஸ்ரீ ராமச்சந்திரன் பாததூளி பட்டு மீண்டும் பெண்ணாவாய்!” என்று சபித்தான்.
அஹல்யா கல் ஆனாள். அந்தக் காட்சியைக் கண்டு கௌதமன் மனம் வேதனையில் குமுறியது. அவளுடைய அழகு, அவளுடைய பண்பு, அடக்கம் என்று அவள் குணங்கள் எல்லாம் அவன் கண் முன்னே வந்து போயின. திடீரென்று அவன் காதுகளில் ஒரு குரல். “ கௌதமா! இருவருக்கு தண்டனை கிடைத்து விட்டது. சம்பந்தப்பட்ட மூன்றாவது ஆளான உனக்கு என்ன தண்டனை? யார் அளிப்பார்?”

கௌதமன் ஒரு முறை கல் அஹல்யாவைப் பார்த்தான். அவள் அருகே சென்று அவளை ஆலிங்கனம் செய்தான். அவன் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக அஹல்யாவின் மீது விழுந்தது. கல்லான அவள் அவன் கண்ணீரைத் துடைக்க முடியாது உள்ளுக்குள்ளே அழுதாள்.
தண்டமும் கமண்டலமும் எடுத்துக் கொண்டு கௌதமன் காட்டினுள் சென்றான். திரேதா யுகத்துக்காகவும், அஹல்யாவிற்காகவும் காத்திருக்க வேண்டி தவத்தில் ஆழ்ந்தான். கல்லானான்.

முற்றும்
—————————————
“ஆஹா! கதை மிகவும் அருமையாக வந்திருக்கிறது. எப்படியும் இந்த முறை ஆபீஸில் நடக்கப் போகும் சிறுகதைப் போட்டியில் எனக்கு தான் பரிசு. நான் தான் ஜெயிப்பேன்!” என்று சந்தோஷமாக பேனாவை மூடி வைத்து விட்டு ராஜசேகரன் நிமிர்ந்தான். பின்னால் படுக்கையைப் பார்த்தான். கல்யாணியை காணவில்லை. ‘எங்கே போயிருப்பாள் இந்த வேளையில்?’ என்று யோசித்தவாறே கடிகாரத்தைப் பார்த்தான். மணி இரவு 1.45. குழப்பத்துடன் பெட்ரூமிலிருந்து வெளியே வந்து ஹால் கம்ப்யூட்டர் ரூம் கிச்சன் என்று ஒவ்வொரு இடமாக தேடியும் கல்யாணியைக் காணவில்லை. அப்பொழுதுதான் அவன் கண்கள் பின்னால் புழக்கடை கிணற்றுக்கு போகும் கதவு திறந்து இருப்பதை கண்டன.

“இந்த நேரத்தில் கிணற்றடியில் என்ன செய்கிறாள்? பைத்தியம் பிடித்து விட்டதா என்ன?” என்று தனக்குள் கேள்வி கேட்டபடியே கதவைத் திறந்து வெளியே வந்தவனின் கண்கள் அந்தக் காட்சியை கண்டு நிலைகுலைந்தன.

கிணற்றடியில் இருந்த கல்லில் கல்யாணி உட்கார்ந்து இருந்தாள். அவள் அருகில் குடம். அவள் தலையிலிருந்து கால் வரையில் நனைந்திருந்தாள். அவள் கண்கள் எங்கோ நிலைகுத்தியிருந்தன. அவள் உதடுகள் மட்டும் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தன.

அவளருகில் சென்றதும் ராஜசேகரனுக்கு அவள் என்ன முணுமுணுத்துக் கொண்டிருந்தாள் என்று காதில் நன்றாக விழுந்தது.

“எனக்கு எப்போது சாப விமோசனம்?”

– ஜனவரி 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *