(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நகப் பாலிஷை மெல்லிய ஸில்க் கைக்குட்டையினால் மேலோடு துடைத்துப் பள பளவென்று மெருகேற்றிக்கொண்டாள் சாந்தி. பத்து மடங்குக்குக் கர்வம் அவள் தலைக்கேறியது. இந்த விரல் நுனிகளைப் பிடித்துக்கொண்டு விட்டாரானால், பிரியும் நேரம் வருகிற வரையில், சங்கர் விடுவதே கிடையாது.
“உங்களுக்கு என் மீது காதலா, என் விரல்கள் மீதா?” என்று சாந்தியே கேட்பதுண்டு.
“விரல்களின் மீது தான்,” என்று தயங்காமல் சொல்வான் சங்கர். பிஸினஸ் நண்பர்களில் யார் ஐரோப்பியச் சுற்றுப் பயணம் போனாலும் சரி, பாஷன் தலைநகரங்களில், எது சிறப்பான நகப் பூச்செனக் கருதப்படுகிறதோ அதைத் தவறாமல் வாங்கி வரும்படி சொல்லி யனுப்புவான். அப்படி, உலகத்தின் பல மூலை களிலிருந்து வந்திருந்த தட்டையும் வட்டமும், குட்டையும் நெட்டையும், வளைவும் நெளிவும், பச்சையும் சிவப்புமான பற் பல பூச்சுக் குப்பிகளை வைப்பதற்கென்றே தனி ஸ்டீல் செட் வாங் கும்படி நேர்ந்தது சாந்திக்கு.
சாந்திக்கு அப்பா கிடையாது, பெரியப்பாதான் அவ்வளவு பெரிய எஸ்டேட்டை நிர்வகித்து வந்தார். அவர் விளையாட்டாகச் சாந்தியைக் கேட்டார்.
“இவ்வளவு பழகுகிறானே சங்கர், ஏன் உன்னைக் கல்யாணம் செய்துகொள்ளுவதைமட்டும் தள்ளிப் போட்டுக் கொண்டே யிருக்கிறான் தெரியுமோ?” என்று.
“மேட்டூரில் இன்னொரு புதுத் தொழிற்சாலைக்கு ஏற்பாடு பண்ணிக் கொண்டிருக்கிறார். அது முடியட்டும் என்று பார்க்கிறார்,” என்பாள் சாந்தி.
“அதெல்லாம் இல்லை. கல்யாணமாகிவிட்டால், உன் நகப் பாலிஷக்காகத் தன் ஆஸ்தியில் பாதி கரைந்து விடுமோ என்று அவனுக்குப் பயம்,” என்பார் பெரியப்பா.
சாந்தி, மகிழம் பூ கொட்டின மாதிரி சிரித்து மழுப்புவாளே தவிர, அத்தனை அலங்காரப் பிரியையாக இருப்பது குறித்து வெட்கப்படமாட்டாள். தோழியர் வட்டாரத்தில் அதுவும் காந்தி நகர் ‘யங் லேடீஸ் ரிக்ரியேஷன் கிளப் எல்லைக்குள் – நாகரிகம் பற்றித் தன் காலடியில் அமர்ந்து பாடம் கேட்கும் தகுதிகூட யாருக்குமில்லை என்பதில் அவளுக்கு அலாதிப் பெருமைதான்.
ஐந்து விரல்களையும் கண்ணெதிரே தூக்கி நிறுத்திக்கொண்டு அழகு பார்த்தாள் சாந்தி. சொர்ண விக்கிரகம் போன்ற தலைச் சன் பிள்ளையைத் தூக்கிப் பார்த்து ஆனந்தப்படும் தாயின் பெருமிதம் அவள் நெஞ்சில் விம்மிதம் தந்தது…டிரெஸ்ஸிங் டேபிளின் கீழிருந்த காஷ்மீர ஸ்லிப்பர்களை வலது கால் பெரு விரலினால் நாசுக்காக வெளியே இழுத்து, மாட்டிக்கொண்டாள்.
வேலைக்காரி அவற்றைச் சரியாகத் துடைத்து வைக்கவில்லை என்ற கோபம் சிறிது முகத்தில் வெளிப்பட, படிப் படியாக எண் ணிக் கீழே இறங்கியபோது, கோபத்துக்குக் காரணமான மீனாம் பாள், தன் செருகுக் கொண்டையைச் சொறிந்த வண்ணம், “நாளைக்கு… நானும் என் புருசனும் வெளியூருக்குப் போறோம் அம்மா,” என்று ஆரம்பித்தாள்.
“ஏன்? மெட்றாஸ் ஸிடியிலே இல்லாத புதுமை வெளியூரிலே என்னடியம்மா வந்திருக்கிறது?” என்று சாந்தி வெடித்தாள்.
“அவரு… என் புருசன்… கிராமத்திலே ஏதோ சங்கம் ஆரம் பிச்சு நடத்திட்டிருந்தவருங்க, அம்மா, நாளைக்கு அங்கே என்னவோ விழாவாம்.”
“சரிதான்! பெரிய சோஷல் ஒர்க்கர் நீங்களெல்லாம்! விழாவு மாச்சு, கிழாவுமாச்சு! வீட்டிலேயே கிட!” என்று கட்டளை போட்டுவிட்டு வெளியே வந்தாள்,
என்ன இது? பிளிமத்தைக் காணோமே! சங்கர் இன்னும் வர வில்லையா?
மணிக்கட்டைத் திருப்பி, தங்கச் செயினில் கோத்த மோதிர அளவு கடியாரத்தை நோக்கினாள் சாந்தி. மணி ஆறே கால்.
வார்த்தை தவறிவிட்டார்! ஹூம்! கேட்டால், அகமதா பாத்திலிருந்து ஒரு ஆசாமி வந்து அமுக்கிவிட்டான் என்று அளக்கப் போகிறார்!
வெறுப்புடன் சாந்தி உள்ளே திரும்பி வந்த சமயம், தோட் டத்தில் நீந்திக் கொண்டு வந்த கார், ஜம்மென்ற குலுக்கலுடன் அவளெதிரில் நின்றது.
“ஸாரி சாந்தி ! ஏறிக்கொள்,” என்றபடி காரின் கதவைத் திறந்துவிட்டான் சங்கர்.
உதட்டை ஒரு சுழிப்புச் சுழித்துத் தனது சினத்தை வெளிப் படுத்திய பின்னர் சாந்தி ஏறியமர்ந்து கொண்டு, சற்று அதிகப்படி ஓசையுடனேயே கதவைப் படக்கென்று சாத்திக் கொண்டாள்.
சங்கரின் சுறுசுறுப்பான முகத்தில் அலைச்சலின் களைப்புத் தெரிந்ததை அவள் கவனித்தாள். சிறிது கோபம் தணிந்த வளாக, “எங்கெல்லாமோ சுற்றிவிட்டு வருகிறீர்கள்!” என்று குற்றம் சாட்டுகிற சாக்கில் விஷயத்தைத் தெரிந்து கொள்ள முயன்றாள்.
“ஆமாம்…நாளைக்குச் சர்வோதயா தினமில்லையா?”
“அதாவது…ஓ! காந்திஜி இறந்த தினத்தைச் சொல்கிறீர்களா?”
“ஆமாம். எங்கள் அசோசியேஷனில் பிரார்த்தனை. பொதுக்கூட்டம், அது இது என்று ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள். முக்கியமான சில பொறுப்புக்கள் எனக்கு…”
“அடி சக்கை!” ஆச்சரியத்துடன் முழுதாக அவன் பக்கம் திரும்பினாள் சாந்தி. “எத்தனை நாளாக இந்தக் கூத்தெல்லாம்!”
காரின் வேகத்தோடு தன் குரலையும் நிதானப்படுத்திக் கொண்டான் சங்கர். “இருக்க வேண்டியது தானே சாந்தி, இதுவும் கொஞ்சம் கொஞ்சம்? வருஷம் முன்னூற்றறுபத்தைந்து நாளும் பணம், சம்பாத்தியம், பிஸினஸ். ஆட்டைத் தூக்கி மாட்டில் போடுவது, ஆளைக் கவிழ்ப்பது – இதிலேயே தான் போகிறது, அதை முழுக்க முழுக்க விடுவதற்கில்லை. பிழைப்பு வாழ்க்கையை அப்படி அமைத்துக்கொண்டாகிவிட்டது. ஆனால் நடுவே இரண்டொருநாள் இப்படித்தான் வாழ்க்கையைத் திருப்மணிக்கட்டைத் திருப்பி, தங்கச் செயினில் கோத்த மோதிர அளவு கடியாரத்தை நோக்கினாள் சாந்தி. மணி ஆறே கால்.
“ஓகோ! வேதாந்தம் பலமாயிருக்கிறதே!” என்று சாந்தி சிரித்தாள்:
“வேதாந்தமாவது, தத்துவமாவது! இதோ பார், என்று தன் பக்கத்திலிருந்த சிறிய பார்சலைக் காட்டினான் சங்கர். “கதர் டிரஸ் எதுவுமே கிடையாது என்று நினைவு வந்தது. ரெடி மேடில் வாங்கி வந்தேன். உன் உடம்புக்கு ஏற்றதாக எவ்வளவு அருமையான புடவை…”
“போதுமே கண்ணராவி!” என்று சாந்தி முகத்தைச் சுளிக்கவே சங்கர் மேலே தன் பேச்சைத் தொடரவில்லை.
அவன் பேச்சை மாற்றினான். “உனக்காக ஒரு ஸ்பெஷல் டூடெக்ஸ் ஒரு சினேகிதர் மூலம் வரவழைத்திருக்கிறேன் பார், பாரிஸிலிருந்து ! அசந்து போய்விடுவாய்! என்ன கலர் ! அத் தோடு என்ன இனிமையான மணமும் சேர்த்திருக்கிறான் தெரியுமா?”
ஆவலின் பெயர் சாந்தியாயிற்று. “நிஜமாகவா?…எங்கே, எடுங்கள்!”
மெரினாவின் கார் பாதையில் வாகனத்தைத் திருப்பும் வரை மௌனமாயிருந்த சங்கர், ” ஒரு அவுன்ஸ்கூட இருக்காது. அத் தனை சின்னஞ்சிறு புட்டி! விலை எவ்வளவு இருக்கும் சொல், பார்க்கலாம்!”
“பாரிஸிலிருந்து வாங்கி வந்ததா?” அரை விழியை மூடி யோசனை செய்தாள் சாந்தி. “என்ன…எக்ஸ்சேஞ்ஜ் விகிதப்படி பார்த்தால், அதிகபட்சம் நூறு ரூபாயாவது இருக்கும்!”
“இருநூற்று எழுபத்தைந்து!” என்று எழுத்து எழுத்தாகப் பிரித்து உச்சரித்த சங்கர், கார்களுக்கு நடுவில் வண்டியை நிறுத்திவிட்டு, தன் காதலியைக் கர்வத்துடன் நோக்கினான்.
“எடுங்களேன் சீக்கிரம்!” என்று சாந்தி துடித்தாள்.
“ஆபீஸில் மறந்து வைத்துவிட்டேன். அதுதான் வருத்தமா யிருக்கிறது.” என்றான் சங்கர். “பரவாயில்லை நாளை சாயங் காலம் கொண்டு வருகிறேன்?”
“மறந்து விடாதீர்கள். கூட்டம் பேச்சு என்று என்னென் னவோ வேறே வைத்துக்கொண்டிருக்கிறீர்களே?” என்றாள் சாந்தி கவலையுடன்.
“பூகம்பமேயானாலும் என் சாந்தியை மறந்துவிடுவேனா?” என்றவன், சந்தண சோப்புக்கட்டி போன்ற சாந்தியின் மோவா யைத் தொட்டு நிமிர்த்தினான். ஒரு பந்தயம் வைத்து, பிறகு அதைக் கொடுக்கலாமா என்று இப்போது தோன்றுகிறது!” என்றான்.
“பந்தயமா? என்ன பந்தயம்!” சாந்தி திகைத்தாள்:
“டேய் பையா! ஐஸ் கிரீம்!” என்று காருக்குள்ளிருந்த வாறே கையைத் தட்டி அழைத்தான் சங்கர், பிறகு சாந்தியிடம் திரும்பி, சொல்லப் பயமாயிருக்கிறது…ஒன்றுமில்லை…நாளை சாயந்தரத்துக்குள் மூன்று சிட்டம் நூல், ராட்டையில் நூற்றுக் காட்டு பார்க்கலாம்!” என்றான்.
“ஓகோன்னானாம்!” என்று கழுத்தை வெட்டினாள் சாந்தி அலட்சியமாக. உங்களுக்கு நடுநடுவே வருகிறதே ஒரு பைத் தியம், அதிலே என்னையும் மாட்ட இப்படி ஒரு சூழ்ச்சியா?”
“சாந்தி…பந்தயம் சும்மாதான்: உனக்கும் தான் ஒரு பயிற்சி வரட்டுமே!”
“வேண்டாம், வேண்டாம்! அதைவிடப் புத்திசாலித்தன மான வேறு ஆயிரம் பயிற்சி இருக்கிறது. அதையெல்லாம் கற் றுக் கொண்ட பிறகு உங்களிடம் வருகிறேன்.” என்று சாந்தி கடுகடுப்பாகப் பதில் சொல்கையில், ஐஸ்கிரீம் வண்டி வந்து விடவே, ‘ சாக்லேட் கிரீம் தானே, சாந்தி? இரண்டு எடப்பா”, என்றான் சங்கர்.
காரின் இந்தண்டைப் பக்கத்தில் ஒரு பிச்சைக்காரப் பெண் வந்து நின்று, “அம்மா…மகாலக்ஷ்மி…தாயே…” என்று பல்லவி பாடினாள்;
வெறுப்புடன் தன் வெல்வெட் கைப் பையைத் திறந்தாள் சாந்தி. “சே! வரவர மெரினாகூடச் சுத்த நியூசென்ஸாகி விட்டது. ஹிண்டு லட்டர்ஸ் டு தி எடிட்டருக்கு ஒரு கார்டு எழு திப் போடப்போகிறேன்!” ஒரு பத்துப் பைசா நாணயத்தைத் தூக்கி எறிவதற்காகத் திரும்பிய சாந்தி, சரேலெனப் பின்னடைந்தாள்.
ஒரு வினாடி பிரமித்து, பேச்சற்று, அசைவற்றிருந்தாள். பின் னர், வீசி எறியவிருந்த நாணயத்தைப் பயபக்தியுடன் மெல்ல அந்த ஏழைப் பெண்ணிடம் கொடுத்தாள்.
“பாதி ஐஸ்கிரீம் கரைந்து விட்டது. பிடி” என்று நீட்டிய சங்கர், அவள் முகத்தோற்றத்தில் காணப்பட்ட மாறுதலினால் அதிர்ச்சி அடைந்தவனாக, “என்ன சாந்தி? நான் என்ன அப்படித் தப்பாகப் பேசிவிட்டேன்? சும்மா ஒரு விளையாட்டுப் பந்தயம்தானே?” என்று சமாதானம் செய்ய முயன்றான்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை…வேறே.” என்று கூறிய சாந்தி, ஐஸ்கிரீமை வாங்கிக்கொண்டு சுவைக்கலானாள்!
ஆனால், நீளப் பரந்து கிடக்கும் நீலக் கடலைச் சுவைக்க வில்லை : மனத்தின் மணவாளனின் அண்மையிலுள்ள தனிமையின் இன்பத்தைச் சுவைக்கவில்லை; குழந்தையின் ஸ்பரிசம் போல உடலைப் புளகம் கொள்ளச் செய்யும் காற்றைச் சுவைக்க வில்லை. அவள் கண்கள் எங்கோ யோசனையில் சொக்கியிருந்தன.
அவளுடைய அமைதியைக் குலைத்துவிட்ட குற்றம் சங்கரின் உள்ளத்தில் குறுகுறுத்தது.
“சிலுசிலுவென்று காற்று வீசுகிறதே? போகலாமா?” என்றான் ஏமாற்றத்துடன்.
“ஆமாம்”, என்று பதிலளித்த சாந்தி, தலை குனிந்து தன் கைகளையும் விரல்களின் செக்கச் சேவேலென்ற நகப் பூச்சையும் பார்த்தவாறேயிருந்தாள்.
கார் மவுண்ட்ரோடு வழியே நீந்திக் கொண்டிருந்தபோது, திடீரென, “சர்க்கா எங்கே கிடைக்கும் ? அங்கே நிறுத்துங்கள் கொஞ்சம்,” என்றாள்.
“சாந்தி. என் மீதுள்ள கோபத்துக்காக எதுவும் செய்ய வேண்டாம்,” என்று சங்கர் மன்றாடினான்.
“நீங்கள் ஒன்று! எனக்கே ஆசையாயிருக்கிறது.” என்று சிரித்தவாறு சாந்தி சொன்னபோதிலும் அவன் சற்றுத் தயங்கிய வாறேதான் கடையின் வாசலில் நிறுத்தினான் காரை.
விற்பனைப் பகுதியிலிருந்த பெண், சாந்தி புதிதாக நூற்கக் கற்பவள் என்று அறிந்ததும், சுலபமாக வேலை செய்யும் பல வித சர்க்காக்களை எடுத்துக் காட்டி, விளக்கினாள். ஆனால், சாந்தி, பழைய மாடல் ராட்டினமொன்றையே தேர்ந்தெடுத் தாள். பஞ்சு வாங்கிக்கொண்டு, பட்டை போடுவது போன்ற சில்லறை வேலைகளைச் சுருக்கமாகத் தெரிந்துகொண்டதும், ‘போகலாம்,” என்றாள் சங்கரிடம்.
“என்ன இதெல்லாம்?” என்று பங்களாவில் அவள் படி யேறியபோது பெரியப்பா கேட்டார், ராட்டையையும் மற்றக் கருவிகளையும் பார்த்து.
“ரொம்ப வருத்திக் கொள்ளாதே, சாந்தி. உனக்காகவே இஷ்டமானால், முடிந்தவரையில் மட்டும் செய், போதும், பந்தயம் கிந்தயமெல்லாம் கடற்கரையிலேயே காற்றில் விட்டுவிட்டேன்,” என்றான் சங்கர்.
இருவருக்கும் புன்னகையின் மூலமே பதிலளித்துவிட்டு உள்ளே சென்று விட்டாள் சாந்தி.
மறு நாள் மாலை சங்கர் வழக்கம் போல் பங்களாவுக்குள் நுழைந்த போது, ஓடிவந்து வரவேற்புக் கொடுக்கும் சாந்தியைக் காணவில்லை.
குறுக்கும் நெடுக்குமாக உலாவிக் கொண்டிருந்த பெரியப்பா, அவனைக் கொஞ்சம் கோபமாகவே பார்த்தார், ஏதோ கண்டிக்கிற பாவனையில். விழாவில் கலந்துகொண்டு, அதற்கேற்ற ஜிப்பா வேட்டி கோலத்தில் வந்ததைக் கண்டதால் வேறே அவருக்குக் கோபம் வந்தது போலும்.
“நேற்று நீங்கள் சாந்திக்கு என்ன உபதேசம் செய்தீர்களோ போங்கள்! நல்ல கூத்தடிக்கிறாள் இன்று முழுதும்!” என்றார்.
சங்கர் பதறியவனாக, “ஏன்? ஏன்? என்ன பண்ணினான்?” என்று கேட்டான்,
“அதை நீங்களே போய்ப் பாருங்கள். அறைக்குள் கதவைத் தாளிட்டுக் கொண்டு ராட்டையும் கையுமாய் உட்கார்ந்து கொண்டவள் தான். எழுந்திருக்கவேயில்லை ! தண்ணீர், ஆகாரம் கூடக் கிடையாது!”
“அடடா!” என்று கூவிய சங்கர், தாவியேறி மாடியை அடைந்து,”சாந்தி கதவைத் திற! திற!” என்று படபடவெனத் தட்டினான்.
“இதோ ஆயிற்று! கொஞ்சம் பொறுங்கள்!” என்று சாந்தி பதில் கொடுத்தாள்.
ஐந்து நிமிடம் பொறுத்துக் கதவைத் தட்ட அவன் மீண்டும் கையை உயர்த்திய சமயம், கதவு திறந்து கொண்டது.
சாந்தி, ஒவ்வோர் அங்கமும் தளர்ந்து தொய்ய, களைப்பும் தள்ளாமையுமாக வெளிப்பட்டாள். ஆனால், வதனத்தில் அபூர்வ மான, தெய்வீகமான களைதென்பட்டது.
“இதோ மூன்று சிட்டம்!” என்று உற்சாகம் கொப்புளிக்கும் குரலில் நீட்டினாள். “கொஞ்சம் கரடு முரடாக இருக்கும்! ஒரே இரவில் கற்றுக்கொண்டு முடித்தேனே, அதுதான்…”
“சாந்தி! கங்கிராஜுலேஷன்ஸ்! மகா பெரிய சாதனை! ஆனால் இப்படி உடம்பைக் கெடுத்துக் கொள்ளலாமா? இருந்தாலும், கையைக் குலுக்கிப் பாராட்டுகிறேன்!” என்று அவள் கையை அழுத்திக் குலுக்கினான் சங்கர்.
‘ஆ! உஸ்!’ என்று வீரிட்டாள் சாந்தி, “தொட்டாலே வலிக்கிறது இரண்டு உள்ளங்கையும்!”
“சாந்தி! ஐயோ!” என்று கன்றிச் சிவந்து ரத்தம் கட்டி விட்ட அந்த விரல்களைப் பார்த்து, பொருமிவிட்டான் சங்கர். “இந்தா, உன் சாதனைக்குப்பரிசு!” ஜிப்பா பையிலிருந்து, அந்த விலையுயர்ந்த நகப்பூச்சுக் குப்பியை எடுத்தான்.
இளநகை விளையாடியது சாந்தியின் இதழில்.
“ரொம்ப நன்றி…ஆனால்…மன்னிக்க வேண்டும்…இனி மேல், சங்கர், இதெல்லாம் எனக்குத் தேவைப்படாது. ஏற்கனவே இருப்பதைக்கூட என் சிநேகிதிகள் யாருக்கேனும் கொடுத்து விடலாமென்றிருக்கிறேன்!”
சங்கர் திணறினான் : “என்ன சாந்தி? இதற்காகப் பந்தயம் கட்டி, இருபத்து நாலு மணி நேரம் போராடி…”
“இதற்காகவா? அப்படியா நினைக்கிறீர்கள்?”
சாந்தியின் பிறை நெற்றியில் சிந்தனை வளையங்கள் நெளிந்தன.
“இல்லை சங்கர்! விதவிதமான நகப்பூச்சுக்காக ஆண்டவன் விரல்களைக் கொடுக்க வில்லை என்ற உண்மை திடீரென நேற்று எனக்குத் தெரிய வந்தது. உழைக்கவும், பிறருக்கு உதவவும் விரலைப் பயன்படுத்த லாம் இல்லையா? எத்தனை பேருக்கு இனிமேல் நான் நூற்கச் சொல்லித் தரலாம்? சொல்லித் தந்து, ஒரு பிழைக்கும் வழியை எத்தனை அபலைப் பெண்களுக்குக் காட்டலாம்? இல்லையா சங்கர்?”
“உண்மைதான் சாந்தி. அவ்வளவும் உண்மை. ஆனால் திடீரென நீ எப்படி மாறினாயென்றுதான் ஆச்சரியமாயிருக்கிறது!” என்றான் சங்கர் உணர்ச்சியால் கரகரத்த குரலில்.
“நீங்கள் ஐஸ்கிரீம் வாங்கியபோது, நான் பிச்சை போட்டேனே ஒரு பெண்ணுக்கு? அவளுக்கு…அவளுக்கு…”
“அவளுக்கு?”
“கை இருந்தது. விரல் இல்லை! ஐந்து விரலும் அற்று விழுந்துவிட்டன? அவள் நகப்பூச்சுக்கு அழவில்லை! விரலினால் பிழைக்கக்கூடிய வாழ்க்கையை இழந்துவிட்டதற்கு அழுதாள்! தெய்வம் என் கண்ணைத் திறந்தது அந்த வினாடியில் தான்!”
“சாந்தி! என் சாந்தி!” என்று அவளை எல்லையற்ற ஆர்வத்துடன் அணைத்துக் கொண்டான் சங்கர். “இன்று காந்தி இறந்த தினம் என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் இது வேறு தினம். என் சாந்தி- என் உண்மையான சாந்தி பிறந்த தினம் இன்று!”
– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.
Appa yevlo Nalla story. Achariyam ana kathai romba super. Manathai thottu vittathu. Avvalavum nijam story point purinthal.