கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 15, 2022
பார்வையிட்டோர்: 3,709 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘லுஹர்’ நேரம் ஆரம்பித்ததும் குஞ்சாலி மரக்காயர் சந்திலிருந்து மசூதியின் முஅத்தினார் மினாராவின் படிக ளில் ஏறத் தொடங்கினார். உச்சியை அடைந்து இரு கலிமா’ விரல்களைச் செவிகளின் பால் வைத்துக்கொண்டு மேற்குத் திசையை நோக்கி நின்று கொண்டு, ‘அல்லாஹு அக்பர் …. அல்லாஹு அக்பர்” என்று உரத்த குரலில் பாங்கொலியை எழுப்பி அன்றைய வெள்ளிக்கிழமை நமாஸை அறிவித்ததுதான் தாமதம், ஊரிலே ஓர் சலசலப்பு உண்டாயிற்று. பளபளப்பான குல்லாக் களையும் பஞ்சவர்ணக் கயிலிகளையும் தரித்த சாயபு மார்கள் பல்வேறு சந்துக்களிலிருந்து புற்றீசல்கள் போல் கிளம்பிப் பள்ளிவாசலை நோக்கிப் புறப்பட் டார்கள். ஆலயத்தில் கூட்டம் நிரம்பியவுடன் மண்ட பத்திலே அருளொளி வீசும் அமைதி தவழ்ந்தது. கத்தீப்’ என்று அழைக்கப்படும் இமாம் சாஹேப் குத்பா’ உபந் நியாசத்தை முடித்த பின் தொழுகை செய்வதற்குக் கூட்டத்தினர் ஒருமுகமாக எழுந்து, வரிசை வரிசையாக ஒழுங்குடன் நின்றனர். இஸ்லாமிய சமூகத்தின் கட்டுப் பாட்டையும் ஒழுக்கத்தையும் சம அந்தஸ்துக் கொள்கை யையும் அங்கு நிலவிய சூழ்நிலை பறை சாற்றியது.

ஜும்மா – வெள்ளிக்கிழமை – நமாஸ் நிறைவேறியது. சாதாரணமாக வெள்ளிக்கிழமை தோறும் இந்தத் தொழுகை முடிந்த பின் இமாம் தலைமையில் ஒரு ‘ஜமாத்’ கூடுவது அந்த ஊரில் வழக்கமாக இருந்தது. ஊரிலே நடந்த ‘லடாய்களையும், இஸ்லாம் மார்க்கச் சட்டமான ‘ஷரிஅத்துக்குப் புறம்பாக நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் விவாக சம்பந்தமான தலாக், மஹர் போன்ற விவாக ரத்து, கட்டணப் பணம்’ ஆகிய சிக்கலான விஷயங்களை யும் விசாரித்துப் பைஸல் காண்பது அந்த ஜமாத்தின் வேலையாக இருந்தது. ‘சோட்டா’ நியாயஸ்தலமாகவும் குட்டிப் பஞ்சாயத்தாகவும் அது பணியாற்றி வந்தது என்று சொல்லிவிடலாம்.

இந்த நல்ல முறையை ஏற்படுத்தியவர் மசூதியின் இமாம் சாஹேபாக இருந்த ஹுசேன் பாவா. அவர் வாழ்க்கையே ஒரு விநோதம், அவருடைய பூர்விகப் மர்ம மாகவே இருந்தது. தம்மைப்பற்றி ஒரு தகவலையும் அவர் யாரிடமும் வெளியிட்டதில்லை. வாழ்விலே உண் டான ஏதோ அதிர்ச்சி காரணமாக யாவற்றையும் துறந்து மஸ்தானாக மாறி அவர் அங்கே வந்தாரென்று பேசிக் கொள்வார்கள். ஹூசேன் பாவா என்ற பெயர் அவர் சுயப் பெயரோ அன்றி அவருக்கு ஊரார் அளித்த நாம கரணமோ என்று கூடப் பலருக்குத் தெரியாது. இருபது வருஷங்களுக்கு முன்பு அந்த ஊரிலே காலடி வைத்த அவர் , கேட்பாரற்றுப் பாழடைந்து கிடந்த வாலாஜாபாத் நவாப் காலத்து மசூதியை யாருடைய தயவுமின்றிச் சுய முயற்சியால் செப்பனிட்டு மக்கள் பயன்படுத்தும்படி செய்த மகத்தான பணியை ஊரிலுள்ள ஒவ்வோர் ஓட்டு வீடும் புகழ்பாடும். தாம் உண்டு, தம் பள்ளி வாசல் உண்டு என்று திருப்தியுடன் எளிய வாழ்க்கை நடத்தி வந்தார் ஹுசேன் பாவா. அத்தகைய சீலரை மசூதியின் நிரந்தர இமாமாக ஊரார் ஏற்றுக்கொண்டதில் வியப் பொன்றும் இல்லை.

ஜும்மா தொழுகை முடிந்தபின் கூட்டம் கலைந்து கொண்டிருந்த வேளையில், “பாய்மார்களே! ஒரு விண்ணப்பம” என்று ஒரு குரல் எழுந்தது. அது வந்த திக்கை நோக்கி எல்லாருடைய கழுத்துக்களும் திரும்பின. இன்று விடியற்காலை ஹைதர் அலி சந்தில் வசித்து வந்த நயினா முகம்மது திடீரென்று மாரடைப்பால் மௌத் தாகி விட் டார். அவருடைய சவப் பெட்டியை வெளியே வைத்திருக் கிறார்கள். மய்யத் துடைய (சவத்தின்) ஆத்மா விசிராந்தி அடைய ‘ஜனாஸா’ தொழுகையை நடத்திச் சவத்தை நாம் அடக்கம் செய்துவிடுவோம்” என்று சொல்லி முடித்தார் வேண்டுகோள் விடுத்தவர்.

மண்டபத்திலே நிலவி நின்ற கலகலப்புக் கரைந்தது. ஒரு பயங்கர நிச்சப்தம் அங்கே குடியேறியது. அதை ஊடுருவிக் கொண்டு பாய்ந்தது ஒரு வயோதிகக் குரல்.

“வந்திருக்கும் சவத்தை எங்கே அடக்கம் செய்வதாக உத்தேசிக்கிறீர்கள்?” என்று பஞ்சாயத்துப் போர்டுத் தலைவரும், ஊராரின் அபிமானத்தைப் பெற்றவருமான மௌலிசாஹேப் சாவதானமாக வினவியதும் அங்கிருந் தோர் திடுக்கிட்டனர். ஒவ்வொருவருடைய இருதயத்தை யும் திக் திக்கென்று கௌளி அடிக்கச் செய்துவிட்டது அந்த அசம்பாவிதக் கேள்வி.

“என்ன இப்படிக் கேட்கிறீர்கள்? எல்லாரும் அடைக்கலம் புகும் நம் மசூதிக்குப் பின்புற மிருக்கும் கபரஸ்தானில் தான் அடக்கம் செய்ய வேண்டும்” என்றார் ஹுசேன் பாவா கலவரமடைந்தவராய்.

“இஸ்லாம் மதத்திற்கு இழிவு தேடித்தரும் ஆத்மாக் களுக்கு மசூதி மயானம் ஒதுக்கி வைக்கப்படவில்லையே, ஹூசேன் பாவா!” என்று மௌலி சாஹேப் திருப்பிக் கூறியதும், கூட்டத்தினரிடம் உண்டான திகில் கட்டுக் கடங்காமல் போய்விட்டது.

“இந்த நயினா முகம்மது நடத்தி வந்த வாழ்க்கையை நான் நன்கு அறிவேன். நம் சமூகத்திற்குக் கேடு விளை வித்த துரோகி இவர். படுபாவி’ என்று மண்டபமே அதிரும்படி கர்ஜித்தார் மௌலி சாஹேப். மேலும் தொடர்ந்தார். “பாய்மார்களே! நம் இஸ்லாம் வகுத்த கோட்பாடுகளை நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள். முக்கியமாக நிக்காஹ்’ விஷயத்தில் நம் ‘ஷரிஅத் ‘ எவ் வளவோ சலுகைகளும் உரிமைகளும் அளித்திருக்கிறது. ஒருவன் தன் மாமன் மகளையோ அத்தை மகளையோ தன் தந்தையின் சகோதரன் மகளையோ அதைப்போலவே தன் தாயின் சகோதரியின் மகளையோ கல்யாணம் செய்து கொள்ளலாம் என்ற விதிகள் நமக்கு இருக்கின்றன அல்லவா?”

அவர் சொன்னதை ஆமோதிப்பது போல், நின்றிருந் தோர் சிரங்களை மேலும் கீழும் ஆட்டினார்கள்.

“இந்த மர்ஹூம்’ (உயிர் நீத்தவர்) நயினா முகம்மது இந்த உரிமைகளை யெல்லாம் உதறித் தள்ளிவிட்டு ஒரு பைத்தியக்காரக் காரியத்தைச் செய்துவிட்டார். அவர் செய்த பாவச்செயலைச் சொல்ல என் நாக்குப் புரளக்கூட மறுக்கிறது தம் ரத்தமே நரம்புகளில் பாய்ந்தோடும் உடன் பிறந்த அண்ணன் மகளையே இவர் மணம் செய்து கொண்டார். என்ன கேவலம்! என்ன மானக்கேடு!”

தோபா தோபா ” என்று சொல்லிக் கன்னங்களில் அடித்துக்கொண்டு தங்கள் வெறுப்பைக் காட்டினர் குழுமி நின்றோர்.

“பதற்றம் வேண்டாம், மௌலி சாஹேப். விஷயம் சாதாரணமானதல்ல. தீர விசாரிக்க வேண்டும். நடந்ததை விளங்கச் சொல்லுங்கள்” என்று ஹுசேன் பாவா வேண்டினார்.

“நயினா முகம்மதும் அவருடைய சகோதரர் மஸ்தான் ஷெரீபும் என் ஊர்க்காரர்கள் தாம். மஸ்தான் ஷெரீப் கல்யாணப் பந்தலில் புலவு’ச் சோறு சாப்பிட்டவன் நான். நல்ல செல்வாக்குள்ள பிரமுகரின் மகள் தான் அவருக்குப் பீவியாகக் கிடைத்தாள். தம்பதிகள் சந்தோஷமாக வாழ்ந்து வந்ததும் எனக்குத் தெரியும். நிக்காஹ் ஆன அதே வருஷக் கடைசியில் மஸ்தான் ஷெரீப் அக்கரைக்குச் சென்று விட்டார். அப்போது அவர் பீவிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆறு வருஷங்கள் கழிந்த பின் மஸ் தான் ஷெரீப் ஊர் திரும்பினார். பலசரக்குக் கடையை உள்ளூரிலே ஆரம்பித்து, பத்தாவது வருஷத்தைத் தள்ளிக் கொண்டிருந்த சமயத்திலே, நயினா முகம்மது ஊரிலே தலையைக் காட்டினார். தம்பியைத் தம் வீட்டிலே இருக்கச் செய்தார் மஸ்தான் ஷெரீப். கேட்டதெல்லாம் கொடுத்து அன்போடு நடத்தினார். அப்படிப்பட்ட உத்தமரான அண்ணன் முகத்திலே கொதிக்கிற தாரைப் பூசிவிட்டார் நயினா முகம்மது. தம் அண்ண னின் மகளையே கடத்திச் சென்றுவிட்டார். முதலில் விஷயம் விளங்கவில்லை. ஆனால் அதன் பின் அவர் அவளையே நிக்காஹ் செய்துகொண்டு மஞ்சத்திற்குத் தம் துணைவியாக மாற்றியதைக் கேட்டு ஊர் திடுக்கிட்டது. தம்பி பாய்ச்சிய கோடாலி அண்ணன் நெஞ்சைப் பிளந்து விட்டது . அவமானத்தையும் ஏளனத் தையும் தாள முடியாமல் மஸ்தான் ஷெரீப் மனமொடிந்து மௌத்தாகிவிட்டார். இது நிகழ்ந்து பல வருஷங்களுக்குப் பிறகு இரண்டு வாரத்திற்கு முன்னால் தான் அதே நயினா முகம்மதை இந்த ஊரிலே பார்த்தேன். ஹைதர் அலி சந்திலே தையற்கடை வைத்திருந்ததைக் கண்டேன். அவர் மாரடைப்பால் மாண்டதற்கு அல்லாஹுத் தாலாவின் தண்டனையே காரணம்” என்று முடித்தார் மௌலி சாஹேப்.

“மௌலி சாஹேப்! ரம்ஜான் பிறையை ஒருவர் கண் ணாரக் கண்டும், அதைப் பார்த்ததாகக் கூறும் மற்ற இரு சாட்சியங்கள் வேண்டும் என்று நம் ஷரிஅத்’ வற்புறுத்து கின்றதல்லவா? தங்களைத் தவிர வேறு சாட்சி ஏதாவது உண்டா ?” என்றார் ஹுசேன் பாவா.

“தற்சமயம் இல்லை. ஆனால் நான் சொல்வது உண்மை யென்று ஆண்டவனின் இந்த இருப்பிடத்திலே , ஜமாத் எதிரிலே, திருக்குரானைக் கையிலே எடுத்துச் சொல்லத் தயார்” என்று குமுறினார் மௌலி சாஹேப்.

மௌனமாக ஸ்தம்பித்து நின்று கொண் டிருந்த கூட் டத்தின் மீது பார்வையைத் திருப்பினார் ஹுசேன் பாவா.

“நானோ மசூதி இமாம். கடமையைச் சரிவர நிறை வேற்றுவது என் பொறுப்பாகும். நயினா முகம்மதின் வீட்டிற்குச் சென்று விசாரித்து வருகிறேன். யாரும் என் னைப் பின்தொடர வேண்டாம்” என்று இதமாக நவின்று நகர்ந்தார்.

சோகக் கடலிலே மூழ்கிக் கிடந்த நயினா முகம்மதின் வீட்டின் வாசற் கதவை மெதுவாகத் தட்டினார் ஹுசேன் பாவா. நெஞ்சை உலுக்கிவிடும் வேதனைக்குரல் உள்ளி ருந்து வெளிக் கிளம்பியது. அதைத் தொடர்ந்து, தாழ்ப் பாளின் ஒலி எழுந்தது. கதவைப் பாதியாகத் திறந்து கொண்டு சோகமே உருவெடுத்தாற்போல் அலங்கோல மாகக் காட்சி அளித்த பெண்ணின் துயர ரேகைகள் படர்ந்த முகத்தை ஹுசேன் பாவா தற்செயலாகக் கண் டதும், ஏதோ ஒரு பளுவான வஸ்து தம் உடலை ஊடுருவிக் கொண்டு உள்ளத்தைத் தாக்கியது போல் பிரமைகொண்டு செயலற்று நின்று விட்டார்.

“அம்மா, நான் உள்ளூர் இமாம். தங்களுக்கு நேர்ந்த துக்கத்தை அறிந்தேன். என் அநுதாபம். ஒரு முக்கியமான விஷயத்தைப்பற்றிப் பேச வந்தேன்” என்றார் ஹுசேன் பாவா.

“ஹஸரத்! என் கருவமணி அறுந்து போச்சு. ஏதா வது கேட்க வேண்டுமானால் என் தாயிடம் பேசிக்கொள ளுங்கள்” என்று சொல்லிக் குலுங்கக் குலுங்க அழுதாள் அந்தப் பெண். இளநெஞ்சிலுள்ள துயரப் பிழம்பை உருவாக்கிக் காட்டிய அந்தச் சொற்கள் ஹுசேன் பாவா வின் இருதயத்தில் சுரீலென்று தைத்தன.

“தங்கள் தாயார்….இங்கேதான்….?” என்று தயங்கித் தயங்கிக் கேட்டார் அவர்.

“உள்ளே படுத்த படுக்கையாக இருக்கிறார்கள். போய்ப் பேசுங்கள்” என்று சொல்லி இரு கதவுகளையும் நன்றாகத் திறந்து உள்ளே மறைந்தாள் அந்த விதவை.

திரைச்சீலையாகத் தொங்கிக்கொண் டிருந்த கோணிப் படுதாவை விலக்கிக்கொண்டு பிரவேசித்தார் ஹுசேன் பாவா. கறையான் மண் படிந்த பனை மரத்தூணை ஒட்டி னாற்போல் கிடந்த கயிற்றுக் கட்டிலில் எலும்பும் தோலு மாகக் காட்சி அளித்தாள் ஒரு கிழவி.

“அம்மா. நான் உள்ளூர் மசூதி இமாம். தங்கள் மாப் பிள்ளையின் மய்யத்’ மயானத்திற்குச் சற்று முன் தான் வந்தது. அங்கே அதை அடக்கம் செய்யச் சிலர் தடையாக நிற்கிறார்கள். தன் அண்ணன் மகளையே நயினா முகம்மது நிக்காஹ்’ செய்ததாக உங்கள் ஊர்வாசியே பலமாகச் சாதிக்கிறார். உண்மையை அறிந்து போக வந்தேன்” என்றார் ஹுசேன் பாவா.

ஆடாதோடைக் குச்சி போன்ற திராணியற்ற கரங் களினால் கட்டிலின் ஓரச் சட்டங்களைப் பிடித்துக் கொண்டு முதுகை நிமிர்த்து உட்கார்ந்தாள் கிழவி. அவள் குறு நுதலில் ஆழ்ந்து பதிந்திருந்த சுருக்கங்கள் நெளிந்தன.

“ஹஸரத் நடந்ததைக் கேளுங்கள். ஊருக்கு நாட் டாண்மைக்காரராக இருந்தார் என் வாப்பா. அவர் செய்த மணிலாக்கொட்டை வியாபாரத்திலே ஏஜண்டாக வேலை செய்து வந்தார் மஸ்தான் ஷெரீப். அவரை எனக்கு நிக்காஹ் செய்து வைத்தார்கள். கல்யாணமாகி அதே வருஷக் கடைசியில் வியாபார சம்பந்தமாக அவரை அக்க ரைக்கு என் வாப்பா அனுப்பும்படி யாகிவிட்டது. அப் போது நான் கர்ப்பவதி. அவர் மலாய் நாட்டிலே இருந்த போது எனக்கு ஒரு பெண் பிறந்தாள். ஆறு வருஷத்திற் கப்புறம் அவர் இந்தச் சீமைக்குத் திரும்பினார். ஊரிலே பலசரக்குக் கடையைத் திறந்தார். பத்தாவது வருஷம் ஓடுகிற சமயத்திலே எங்கேங்கேயோ போய் அலைந்து வந்த தம் தம்பி நயினா முகம்மதைத் தம் கடைக்கு ஒத்தாசை யாக இருப்பாரென்று எண்ணி வீட்டிலே வைத்துக்கொண் டார். நயினா முகம்மதுடன் நேரில் பழகிய பிறகுதான் அவர் தங்கமானவர் என்று நான் தெரிந்து கொண்டேன். ஒரு பொய் சொல்லமாட்டார். யார் மனசையும் நோக வைக்கமாட்டார். அப்படிப்பட்டவர் ஆயிரத்தில் ஒருவர் தாம் இருப்பார். ஹஸரத் அவருடன் இன்னும் நெருங்கிய பிணைப்பு உண்டாக்கிவிட நான் நினைத்தபோது, தம்பிக்கு நல்ல இடத்தில் முடிச்சுப்போட்டுத் தனிக் குடித்தனம் அவர் நடத்துவதற்கு அண்ணன் ஏற்பாடுகள் செய்தார். அதைக் கண்டு என் மனம் சஞ்சலித்தது. அந்த நேரத் திலேதான் நான் ஒரு காரியம் துணிவாகச் செய்துவிட்டேன். பதினாறு வருஷங்களாக என் நெஞ்சிலே தீப் பொறிகளைத் தெறித்துக்கொண் டிருந்த விஷயத்தை நயினா முகம்மது காதிலே போட்டேன். என் அந்தரங்க விருப் பத்தையும் சொன்னேன். அந்த உத்தமர் சம்மதித்துவிட் டார். என் பெண்ணை அழைத்துச் செல்வதற்கும் அவளை அவர் நிக்காஹ் செய்துகொள்வதற்கும் நான் உடந்தையாக இருந்தேன். இது நிசந்தான். ஹஸாத்’ என்று சொல்லிக் கழுத்தை வெடுக் வெடுக்கென்று நெரித்து ஆழ்ந்த யோச னையில் மூழ்கிவிட்டாள் கிழவி.

“அம்மா ! இதுதான் நான் வேண்டியது. நான் வருகிறேன்” என்று விடை பெற்றுக்கொண்டு. குல்லாவை எடுத்து வழுக்கைத் தலையை மேல் துண்டினால் துடைத்தார் ஹூசேன் பாவா.

“பாதிக் கதையைத்தான் நீங்கள் கேட்டீர்கள். ஹஸரத்” என்று கிழவி சொன்னதும் ஹூசேன் பாவா திடுக்கிட்டார்.

“நயினா முகம்மது செய்த காரியத்துக்கு நான் ஏன் ஊதுவத்தி கொளுத்தி வைத்தேன் என்று நீங்கள் கேட் பதில் நியாயமுண்டு” என்று சொல்லித் தொடர்ந்தாள் கிழவி : ”என் புருஷர் மலேயாவில் தங்கியிருந்த சமயத்தில் நான் கர்ப்பவதியாக இருந்தேன் என்று உங்களுக்கு முன்பே சொன்னேன் அல்லவா? அந்தச் சந்தோஷச் செய்தியைக் கேட்ட அவர் வாரந்தோறும் கடிதம் எழுதத் தவறமாட் டார். என் உடம்பைப்பற்றிக் கவலையையும். பிறக்கப் போகும் குழந்தையைக் குறித்து மகிழ்ச்சியையும் ஒவ் வொரு கடிதமும் சொல்லிற்று. குழந்தை பிறப்பதற்கு முன்பே ஜப்பான் விளையாட்டுச் சாமான்களையும், சீனா சில்க் துணிமணிகளையும் வாரி வாரி அனுப்பிக்கொண்டிருந்தார். எவ்வளவு ஆசை இருந்தது, பாருங்கள்!

என் முதல் பிரசவமாதலால், அதை நல்ல முறையில் நடத்த என்னை வேலூருக்கு அழைத்துச் சென்று ஆஸ் பத்திரியில் சேர்த்தார் என் வாப்பா. கடையைக் கவனிக்க ஆள் இல்லாததால் அம்மாவை என்னிடம் விட்டு அவர் உடனே ஊருக்குத் திரும்பினார். அப்புறம் நடந்த விபரீ தத்தைக் கேளுங்கள். ஹஸரத்!

பிரசவம் என் உயிருக்கே உலை வைக்க இருந்தது வயிற்றைக் கீறிக் குழந்தையை எடுக்கும்படி நேர்ந்தது பெண் குழந்தையும் செத்துப் பிறந்தது.

“நீ உயிர் தப்பினது ஆச்சரியம். ஆபரேஷன் செய் திருக்காவிட்டால் நிலைமை மோசமாகப் போயிருக்கும். அது செய்தபோது துரதிருஷ்டவசமாக ஏதோ கோளாறு நடந்துவிட்டது. இனிமேல் நீ கர்ப்பம் தரிக்கமாட்டாய்’ என்று டாக்டர் சொன்னதும் என் தலையில் ஆஸ்பத்திரியே இடிந்து விழுந்துவிட்டது. பிறந்த குழந்தையும் மாண்டது. இப்போது என் தாய்மையும் நசுங்கியது. இந்தச் சமாசாரம் அவர் காதுக்கு எட்டினால், மூர்க்கராகிய அவர் என்னைக் கைவிடத் தயங்கமாட்டார். அப்படித் ‘தலாக் ‘(விவாக ரத்து) கொடுக்காவிட்டாலும், சக்களத்தி ஒருத்தியை என் வீட்டில் கும்மாளம் போட வைத்து விடுவார். இந்த மாதிரி எண்ணமெல்லாம் என் குலையை நடுங்கச் செய்தன. என் அம்மாவைக் கட்டிக்கொண்டு ஓவென்று கதறி அழு தேன். அந்தச் சமயத்திலே ஓர் அதிசயம் நடந்தது, ஹஸ் ரத்! “குழந்தை போனதை எண்ணி நீ அழுகிறாய். என் குழந்தை ஏன் உயிரோடிருக்கிறது என்று நான் கண்ணீர் சிந்துகிறேன். என் கதையைக் கேள்’ என்று என் பக்கத் துக் கட்டிலில் கிடந்தவள் சொன்னதும் என் நெஞ்சு திக்கென்றது.

அந்த அபலையின் கதை இதுதான். பாலக்’ (புஷ்பவதி யாகி) ஆகிப் பூப் போட்டவுடன் கௌரவமான குடும்பத் துப் பையனை தேடி அலைந்தார் அவள் வாப்பா . நல்ல இடங் கள் சில வந்தும் அவர் சிரத்தை காட்டவில்லை. இப்படியே இரண்டு வருஷங்கள் வீணாயின. அந்தச் சமயத்தில் ஒரு வாலிபன் மூட்டை முடிச்சுடன் அவள் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். ‘இந்தப் பையன் பெரிய இடத்துப் பிள்ளை. நம் உறவுகூட. என் மானம் கப்பலேறும் போதெல்லாம் இவன் அப்பன் எனக்கு உதவி செய்திருக்கிறான். வந்த வனை நன்றாக நடத்தி அனுப்பவேண்டும்’ என்றார் வாப்பா .

ஒரு மாதத்திற்குள்ளே அந்த வாலிபன் அவள் பெற்றோ ரின் அன்பைப் பெற்றுவிட்டான். வீட்டில் இருந்த வயது வந்த பெண்ணுடன் நெருங்கிப் பழகுவதைக் கூட அவர் கள் கண்டிக்காதபடி நாஸக்காகப் பழகிவிட்டான். அவன் குஷிப் பேர்வழி. சதாகாலமும் கலகலப்பாக இருப் பான். கண்டம் வந்தது ஓர் நாள்! அவள் தாய் அடுத்த தெருவிற்குப் போயிருந்தாள். தந்தை கடையில் இருந்தார். தடதடவென்று யாரோ கதவை இடித்தார்கள். அன்னை திரும்பி வந்து விட்டாள் என்று எண்ணி அந்தப் பேதை கதவைத் திறந்தாள். அங்கே அந்த வாலிபன் நிற்பதைக் கண்டதும் அவளுக்கு என்னவோ போல் இருந்தது. அவனி டமிருந்து ‘பக்’ கென்று வந்த அத்தரின் சுகந்தம் அவளை மயக்கமடையச் செய்தது. புழைக்கடைப் பக்கம் நழுவி விட முயன்றாள்.

“உனக்கு ஒரு ஜோரான பரிசு கொண்டு வந்திருக் கிறேன். வாங்கிக்கொள்” என்று சிரித்துக்கொண்டே அவள் தளிர்க் கரங்களை வெடுக்கென்று பிடித்தான் அவன். வளையல்களை மாட்டினான். வனிதையின் உடல் பதறியது. திணறினாள். பெரியவர்கள் இல்லத்தில் இல்லாத வேளையில் அந்நிய புருஷனுடன் பேசுவதே தப்பு. அதிலும், அந்த ஆண்மகன் தாறுமாறாக நடந்து கொண்ட விதம் அவள் இருதயத்தைப் படபடக்கச் செய்தது. தலை கிறுகிறுத்தது. யாவும் சுழல்வதுபோல் பிரமை உண்டா யிற்று. தடுமாறிச் சாய்ந்த அவளை மார்போடு தாங்கிக் கொண்டான் அந்தப் பொல்லாத போக்கிரி ! ‘நாம் இரண்டு பேரும் இப்படி ஆனந்தமாகக் கழிக்க இந்த நேரம் நமக்காக ஒதுங்கி நின்றதைப் பார்த்தாயா? நீ அதிருஷ்டக்காரி’ என்று கூறிக்கொண்டே அணைப்பை இறுக்கினான். அவள் செவிகளைத் திருகித் திருகி வேடிக்கை பார்த்தன அவன் விரல்கள். கூந்தல் சரிவிலே கன்னங்கள் ஈரமாயின. உதடுகள் உறவாடின. பிறந்த நாள் முதல் அநுபவித்தறியாத ஓர் போதை தரும் உணர்ச்சி அந்தப் பேதையிடம் குபீரென்று எழுந்தது. குருதி ஓட்டத்தின் பீரிட்டெழுச்சியினால் ஒவ்வொரு நரம்பும் வெடித்துவிடும் போல் இருந்தது. கால்கள் மரத்து விட்டன. கண்களில் அந்த காரம் சூழ்ந்தது. காலம் சென்றது. கனவுபோல் ஆகியது. மங்கிய அவள் பார்வைக்கு , சுற்றி நின்ற பொருள்கள் கலங்கித் தென்பட்டன. பிடியை உதறித்கொண்டு துள்ளிக் குதித்தாள். தன்முன் நிற்பவனின் கழுத்தை நெரித்து விட அவள் கரங்கள் துடித்தன. “அட மானங் கெட்டவனே! நயவஞ்சக பத்மாஷ்! சீ. போ வெளியே” என்று ஆவேசத்துடன் கதறி, அவன் முகத்திலே காறி உமிழ்ந்தாள். “அட பைத்தியக்காரப் பெண்ணே ! இந்த மாதிரி ஏசினதும் துப்பினதும் நீ ஏழாவது குட்டி’ என்று சொல்லி, நச்சுச் சிரிப்பை எழுப்பி மறைந்தான் அவன். அறைக்குள் ஓடினாள் அந்தப் பேதை. வறு நிலத்தில் வீழ்ந்த இடி போல் தொப்பென்று கட்டிலில் சாய்ந்தாள். ஓவென்று நெஞ்சு உடைந்துவிடும்படி விக்கி விக்கி அழுதாள். ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆறடித் தாம்புக் கயிற்றையும் ஆணித்தரமான உத்தரத்தையும் தேடி அலைந்தாள். ஒரு பாவமும் புரியாததும், இந்த உலகத்திலே தலைகாட்டாததுமான ஜீவனையும் தன்னோடு சேர்த்துப் பலியாக்க அவள் மனச்சாட்சி தடையாக நின்றது. இர வோடு இரவாக வீட்டையும் ஊரையும் விட்டு ஓடினாள். ஒளிந்து ஒளிந்து வாழ்ந்தாள். ஒண்ணுபுரத்தில் ஓலைப் பாய்களை முடைந்தாள் ஒரு மாதம். போளூரில் பீடிகளைச் சுருட்டிப் பிழைத்தாள் பல நாட்கள்.

“கடைசியிலே நான் இங்கே தஞ்சமடைந்தேன். மூன்று நாட்களுக்கு முன் இந்தப் பாவி பெற்ற பெண் குழந்தையின் குவா குவா சிரிப்பை நீங்கள் கேட்டிருப் பீர்கள். தத்தி விளையாடும் இந்தக் கிளிக் குஞ்சு என் பொருள் தான். ஆனால் உலகத்துக்கும் சமூகத்துக்கும் இது கருடன் தானே, அக்கா. உங்களுக்கு வேண்டுமானால் இந்தக் கொழுந்தை என்னிடமிருந்து பறித்துக்கொள் ளுங்கள்” என்று சொல்லி என் காலடிகளைப் பிடித்துக் கெஞ்சினாள். வெகு நேரம் யோசித்தபின் என் தாய் சம்மதித்துவிட்டாள்” என்று கூறிக் கிழவி நெடுமூச் செறிந்தாள்.

நெறிகெட்டு வாழ்ந்தவளின் துயரக் கதை ஹுசேன் பாவாவின் நெஞ்சின் கனத்தை அதிகப்படுத்தியது.

“குழந்தையை எடுத்துக்கொண்டு ஊருக்குத் திரும்பி னோம். நடந்ததை யாருக்கும் தெரியாமல் மறைத்து விட் டோம். ஆறு வருஷங்களுக்குப் பிறகு திரும்பிய அவரை யும் சந்தேகிக்காத வண்ணம் பசப்புப் பேச்சால் மயக்கி விட்டேன். பத்து வருஷங்களுக்குப் பிறகு நயினா முகம் மதுடன் அந்தப் பெண் சென்ற பிறகும், உண்மையை அவரிடமிருந்து மறைத்துத்தான் வைத்தேன். கடைசி நாட்களிலே சுழலைக் கிளப்பி . எனக்கும் அவருக்கும் மனஸ்தாபம் உண்டாக்கி, ஊரார் பழிக்கவும் ஏளனம் செய்யவும் குடும்பத்தைச் சீரழிக்கவும் நான் துணியவில்லை. ஹஸரத்” என்று சொல்லி முடித்தாள் கிழவி.

ஹுசேன் பாவாவின் சிந்தனையில் எண்ணிறந்த நிகழ்ச்சிகள் மின்னித் தெறித்தன.

“அம்மா, தாங்கள் எல்லாவற்றையும் சொன்னீர்கள். அந்தப் பெண் தங்கள் கணவரின் மகள் தான் என்று மக்க ளின் மன்றம் வாதாடினால் என்ன செய்வது?” என்றார் ஹுசேன் பாவா, கைகளைப் பிசைந்து கொண்டு.

கிழவி சிறிது நேரம் மௌனம் சாதித்தாள். “ஹஸீனா , ஹஸீனா!” என்று கூப்பிட்டாள்.

அந்தப் பெயரைச் செவிமடுத்த ஹுசேன் பாவா கருந்தேள் கொட்டினவர் போல் திணறிப்போனார். “ஹஸீனா நீங்கள் யாரைக் கூப்பிடுகிறீர்கள்?” என்று தம்மையும் அறியாது சொற்களைக் கொட்டிவிட்டார் !

“ஹஸரத்! அந்தப் பெண்ணுக்கு அவள் தாயின் பெயரைத்தான் வைத்தோம்” என்று சொல்லிவிட்டு. “பரண்மேல் இருக்கும் அந்தப் பெட்டியை எடுத்துக் கொடு, ஹஸீனா” என்றாள் கிழவி.

பெட்டியைத் திறந்து அதில் இருந்த தாவணிகளை அகற்றி அடியில் கசங்கிக் கிடந்த அட்டை யொன்றை வெளியே எடுத்தாள் கிழவி.

‘ஹஸரத்! ஆஸ்பத்திரியிலே குழந்தையை எனக்குக் கொடுத்துவிட்டு அந்த அபாக்கியவதி மறைந்தவுடனே.

அவள் கட்டிலுக்கு மேலே சுவரில் தொங்கிக்கொண்டிருந்தது இந்த அட்டை. இதிலேதான் டாக்டரும் மருத்து வச்சிகளும் தினமும் வந்து ஏதோ எழுதுவார்கள். எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது. என்ன காரணத்திற்கோ எனக்குத் தெரியாது. யாரும் இல்லாத நேரத்திலே இந்த அட்டையை எடுத்து ஒளித்துவைத்தாள் என் தாய். ‘பிற்காலத்திலே இது உனக்கு உதவினாலும் உதவலாம். எதற்கும் பத்திரமாக வைத்துக்கொள்’ என்றாள், படிப்பு வாசனை இல்லாத அவள். ஆனால் கெட்டிக்காரி. உலக மறிந்தவள். ஹஸரத்’ என்று கூறி அந்த அட்டையை ஹுசேன் பாவாவிடம் கொடுத்தாள் அந்தக் கிழவி.

அதை வாங்கிக்கொள்ளும் போதே ஹுசேன் பாவா வின் கைகள் நடுங்கின. களம்பூர் என்ற ஊரின் பெயரை அதில் கண்டதும் அவர் நெஞ்சு படபடத்தது. அதற்குக் கீழே ஹஸீனாபீ – பதினாறு வயசு – முதல் பிரசவ கேஸ்’ என்று குறிப்பிட்டிருந்ததைப் பார்த்ததும் அவர் முக பாவம் அடியோடு மாறிவிட்டது. நினைவு நாகங்கள் பட மெடுத்து ஆடின. இருதயப் படப்படப்பு ஓங்கார மிட்டது. இமைகளை இறுக மூடிக்கொண்டார். இறுதி விடைபெற்று உடனே நகர்ந்தார்.

“பாய்மார்களே! போய் வந்தேன். இங்கே வந்துள்ள சவத்தை நம் கபரஸ்தானிலே அடக்கம் செய்வதுதான் என் முடிவாகும். நயினா முகம்மது நிக்காஹ் செய்து கொண்டது அவர் அண்ணன் மகளையும் அல்ல. அண்ணி யின் மகளையும் அல்ல” என்று ஹுசேன் பாவா சொன்ன தும் கூட்டத்தினர் வாயடைத்து நின்றனர்.

“பின் எவன் மகளாம்?” என்று சீறினார் மௌலி சாஹேப்.

“அந்தக் கதையைச் சொல்லமுடியாத நிலைமையில் இருக்கிறேன்.”

“இமாம் சாஹேப்! இஸ்லாமிய ஷரி அத்துகளைத் தூஷித்துத் தங்கள் இஷ்டம் போல் நடக்கப் பார்க்கிறீர் கள். தாங்கள் ஜமாத் முன் நின்று ஜவாப் சொல்லு கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் !”

மருட்சி தோய்ந்த கண்களைச் சுற்றுமுற்றும் திருப்பி னார் ஹுசேன் பாவா. “பாய்மார்களே! கடந்த இருபது வருஷகாலமாக என் தீர்ப்பைக் கேட்டு நடந்து வந்த நீங்கள் இந்த ஒரு விஷயத்திலும் என் முடிவை ஏற்றுக் கொள்ளுங்கள். இதுவே என் கடைசி வேண்டுகோள்” என்று கெஞ்சினார் மனமொடிந்தவராய். அவர் தோற்றம் பார்ப்பதற்குப் பரிதாபமாக இருந்தது.

“இது நடக்காத காரியம். இவ்வளவு நாங்கள் சொல் லியும் ஹராம்’ செய்தவனை இந்தப் புனித இடத்தில் புதைப்பீர்களானால் நாங்கள் எல்லாரும் இப்போதே வெளியேறி விடுகிறோம். இனி நீங்கள் எங்கள் தலைவரும் அல்ல , இமாமும் அல்ல, முஸல்மானும் அல்ல” என்று ரௌத்திராகாரமாய்க் கர்ஜித்தார் மௌல்வி சாஹேப். அவர் அவ்விடத்தை விட்டு அகன்றவுடன், சவப் பெட்டி யைத் தூக்கி வந்த நால்வரைத் தவிர, மற்ற எல்லாரும் அவரைத் தொடர்ந்து சென்றுவிட்டார்கள்.

மிக்க சோர்வடைந்தவர் போல் காணப்பட்டார் ஹுசேன் பாவா. கவலையின் கோர நிழல் அவர் வதனத் தில் தாண்டவமாடியது. நெற்றியின் வேர்வை கண் இமை களில் சொட்டியது. மசூதிக்குள் நுழைந்தார். மண்டி யிட்டு உட்கார்ந்து, கைகளை மேலே தூக்கி, ”யா அல்லாஹ் / யா அல்லாஹ்! நான் புரிந்த சாகச லீலைகளுக்கு ஆண்மையை இழக்கும்படி முன்பே தண்டித்துவிட்டாய். இப்போது, பெற்ற மகளை இந்தப் பாவக் கண்களாலே பார்க்கச் செய்துவிட்டாய். எந்தக் கரங்களினால் பாவை யர்களைத் தீண்டிப் பாதகங்கள் புரிந்தேனோ, அதே கைக ளால் என் மருமகன் மீது மண்ணைப்போடச் செய்து விட்டாய். நன்றி. இருபது வருஷங்களாக உன்னிடம் அடைக்கலம் புகுந்த இந்தப் பாவியை இனியாவது மன் னித்துவிடு” என்றார் உணர்ச்சியோடு. நாத் தழுதழுத்தது. பீரிட்டெழுந்த கண்ணீர் பொலபொலவென்று கன்னங் களில் சிதறி ஓடியது. கண்கள் இருண்டன. கால்கள் தள்ளாடின. தலை தொங்கித் தொங்கி வீழ்ந்தது.

சவப்பெட்டியைத் தூக்கிக்கொண்டார்கள். எஞ்சி நின்ற நால்வர்.

“பாய்மார்களே! பெரும்பாலோர் விரும்பாததை எதிர்த்துச் செய்வது உசிதமல்ல. இந்தக் கபரஸ்தான் (மயானம்) வேண்டாம். பாலாற்றங்கரை இருக்கவே இருக்கிறது; புறப்படுங்கள்” என்றார் அவர். ஜீவனற்ற குரலில்.

சவப்பெட்டி முன் செல்ல, கவிழ்ந்த தலையுடன் அதன் பின்னால் தள்ளாடிய வண்ணம் சென்று கொண்டிருந்தார் ஹுசேன் பாவா.

– பெருநாள் பரிசு, முதற் பதிப்பு: டிசம்பர் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை.

கலைமகள்’ கிழமைப் போட்டியில் முதல் பரிசு ஒன்றைப் பெற்று ‘நகாரா’ முழக்கியது. 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *