சரவணன் மாமா எனக்குத் தெரிந்து இரண்டு முட்டாள்தனங்களைச் செய்திருந்தார். ஒன்று, அவர் சுப்பக்காவைக் கல்யாணம் கட்டியது. இரண்டாவது… நேற்று ராத்திரி அவர் செய்த காரியம்!
எங்க ஊரிலேயே பெரிய வீடு சரவணன் மாமாவுடையது. காரவீட்டு சரவணன்னுதான் எல்லாரும் அவரைச் சொல்வாங்க. அவரோட சின்ன வயசுலயே அவங்கப்பா தவறிப் போயிட்டாரு. ஆனாலும், கம்பீரமா நிமிர்ந்து நின்ன மோட்டு ஓடு போட்ட வீட்டில் இருந்துக்கிட்டு கஞ்சியும் களியுமா ஊத்தி, காரவீட்டு ஆச்சி சரவணன் மாமாவை வளர்த்துச்சு.
நான் ஆறாங் கிளாஸ் படிக்கும்போது சரவணன் மாமா பத்தாவது. ஒரே பிள்ளை. ரொம்பச் செல்லங்கறதால எட்டாவதுல ரெண்டு வருஷம், ஒன்பதாவதுல ரெண்டு வருஷம் உட்கார்ந்து உட்கார்ந்து வந்ததால கொஞ்சம் லேட்! மாமா படிப்புலதான் கொஞ்சம் மந்தமே தவிர, வீட்டுல எதையாவது செஞ்சுக்கிட்டேதான் இருப்பாரு. சொல்லப்போனா, எங்க ஊரு ஜி.டி.நாயுடு அவரு!
நாங்கல்லாம் குண்டு பல்பை உடைச்சு அதிலே தண்ணி ஊத்தி லென்ஸ் மாதிரி ஆக்கிப் படம் காட் டிக்கிட்டு இருந்த நேரத்தில், சரவணன் மாமா அழகா களிமண்ணு, மரக்கட்டைகளை வெச்சு ஃபிலிம் ரோல் மாட்டி படம் காட்டுற சினிமா மெஷினே செஞ்சு வெச்சிருந்தார். அதிலேதான் முதன்முதல்ல, எம்.ஜி.ஆரும் நம்பியாரும் சண்டை போடுற சினிமாவைப் பார்த்தேன். மாமா ரீலைச் சுத்துற வேகத்துக்கு ஏத்த மாதிரி சண்டையும் வேகமாவோ மெதுவாவோ ஓடும்.
பத்து பைசா குடுத்தா வீட்டுக்குள் விடுவாரு மாமா. உள்ளே ஆச்சியோட அழுக்கு வெள்ளைச் சேலைதான் திரை. பத்துப் பதினஞ்சு புள்ளைக சேர்ந்ததும் மாமா கதவைப் பூட்டிட்டு வந்து படம் ஓட்டுவாரு.
ஒரு தடவை என் கூட்டாளிகள் எல்லாம் காசைக் குடுத்துட்டுப் படம் பார்க்கப் போயிட்டாங்க. ரஜினியும் கமலும் நடிச்ச படத்து ஃபிலிம் துண்டு அன்னிக்கு சரவணா டாக்கீஸில் ஓடுச்சு. (மாமா தன் தியேட்டருக்கு வெச்சிருந்த பேரு அது.) என்கிட்டே காசு இல்லை. அடுத்து பார்க்க வரும்போது சேர்த்துத் தர்றேன்னு சொன்னாலும் மாமா கேட்கலை. பிறகு, எங்க ஆச்சி வெத்தலைச் செல்லத்தில் இருந்து நாலு களிப் பாக்கு களவாண்டுக் கொண்டுபோய்க் குடுத்து படத்தைப் பார்த்தேன்.
காசு விஷயத்தில் அவ்வளவு கறாரா இருப்பாரு. ஏன்னா, அரிசிச் சோறுங்கறது அவருக்குக் கனவு மாதிரி. ஆச்சி களையெடுக்க, புல்லறுக்கப் போயிக் கொண்டுவரும் காசுதான் ரெண்டு பேருக்கும். பள்ளிக்கூடத்துக்குப் பெரிய தூக்குவாளியில சோறு கொண்டாருவாரு. பெரும்பாலும் பாதித் தூக்குக்கு சோறு இருக்கும்… மீதிக்கு நீச்சத்தண்ணிதான் இருக்கும். அரிச்சு அரிச்சு சோத்தைத் தின்னுட்டு தண்ணியைக் குடிச்சுட்டுப் போயிடுவாரு.
சினிமாப் படம் காட்டாத நேரங்கள்ல பட்டம் விடக் கூட்டிட்டுப் போவாரு. பட்டம்னா அவரு விடுறதுதான்… சும்மா ஹிண்டு பேப்பரை விரிச்சுவெச்ச சைசுல அம்மாம் பெருசா இருக்கும். அதுக்கு வால் மட்டும் அவரு காரவீட்டுத் திண்ணையில் ஆரம்பிச்சு அடுக் களையைத் தாண்டிப் பின்வாசல் வரைக்கும் நீளும். பட்டத்தைத் தன் கையில் வெச்சுக்கிட்டு, வாலைச் சுருட்டி ஒருத்தன் கையிலும் நூல்கண்டை இன்னொருத்தன் கையிலும் குடுத்துக் கூட்டிக்கிட்டுப் போவாரு. குளம் வத்திக்கிடக்கும் கோடைக் காலம்தான் பட்டம் விடுவாரு. அதைப் பார்க்கவே அத்தனை அழகா இருக்கும். குளத்துக்குள்ள போனதும் நூல்கண்டு வெச்சிருக்கிறவன்கிட்டே பட்டத்தைக் குடுத்துட்டு, நூல்கண்டை வாங்கிக்குவாரு. அவன் மெதுவா ஓடி பட்டத்தைக் காத் துல பறக்கவிடும் நொடியில், மாமா நூலைச் சுண்டிஇழுத்து விடுவாரு… மந்திரத்துக்குக் கட்டுப்பட்ட மாதிரி பட்டம் கிடுகிடுனு வானத்துல பறக்கும். மறுபடி நூலைச் சுருட்டி பட்டத்தைக் கட்டணும்னா, ஒரு மணி நேரம் ஆகும். ஆனா, அதையும் ரசனையோடு செய்வாரு மாமா.
பத்தாங் கிளாஸ் முடிச்சதும், ஐ.டி.ஐ-யில போய்ச் சேர்ந்தாரு. பத்தாவது வரைக்கும் படிப்புல சுமாரா இருந்ததுக்கு நம்ம கல்வித் திட்டம்தான் காரணமோனு சந்தேகப்படுற அளவுக்கு ஐ.டி.ஐ. படிப்புல கில்லாடியா இருந்தாரு மாமா. எல்லாப் பாடத்திலேயும் நல்ல மார்க்கு. படிப்பு முடியும்போதே அந்தமான்ல ஒரு கம்பெனில மாமாவுக்கு வேலை கிடைச்சுடுச்சு.
எங்க ஊருக்குள்ள யாருக்கும் அந்தமானைப் பத்தி அவ்வளவா தெரியலை. காலையில் இருந்து மத்தியானம் வரைக்கும் டீக்கடை தினத்தந்தியை எழுத்துவிடாம படிக்கும் முக்கு வீட்டு மாரியப்பன் தாத்தா மட்டும், ‘அந்தமானுல ஜெயிலுதாமுடே ஃபேமஸ்… அங்க கொண்டுபோய் அடைச்சுடப் போறாங்கடே… என்ன வேலைன்னு தெரிஞ்சுதான் போறியா?’ன்னு கிண்டலாக் கேட்டார்.
அடுத்த மூணு வருஷத்துக்கு சரவணன் மாமா பத்திப் பேச்சே இல்லை. ஆச்சி கழுத்துல ஒரு சங்கிலி ஏறுச்சு. காரவீட்டுக்குப் பின்னால மூணு பத்தியில ஒரு வீடு எழும்புச்சு. அம்மன் கோயிலுக்குக் கிழக்கே ரெண்டு கோட்டை விதைப்பாடு வயல் பத்திரம் முடிஞ்சது. ஊரே ஆச்சியைப் பெருமையாப் பாத்துக்கிட்டிருந்த ஒரு சாயங்கால நேரம், மாமா காருல வந்து இறங்குனாரு.
எல்லாரும் போய்ப் பார்த்துட்டு வந்த பிறகு சாயங்காலமா மெதுவா கார வீட்டுப் பக்கம் போனா, ஆச்சி மேலே கையைக் காட்டினா. படியேறி மேல போனதும் கண்ணுல பட்டது சரவணன் மாமாவுக்கு முன்னால் இருந்த பெஞ்ச்ல இருந்த பாட்டில்! பளபளன்னு பச்சக் கலர்ல முழங்கை அளவுக்கு நின்னுக்கிட்டிருந்த பாட்டில். மாமா நிதானமா அந்தமான் கதைகள் பேசிக்கிட்டே மொத்த பாட்டிலையும் காலி செஞ்சார்.
சங்கிலி வாங்கின மாதிரி சாராயம் குடிக்கிற பழக்கத்தையும் வாங்கிட்டு வந்திருந்தார் மாமா. இனி அந்தமானுக்குப் போகப்போறதில்லன்னுட்டு, இங்கயே லேத் பட்டறை ஆரம்பிக்கப் போறதாச் சொன்னார். மூணே மாசத்துல பெரிய அளவுல பணம் போட்டு லேத் பட்டறையை ஆரம் பிச்சார். முதல் இரும்பு கிரில் கேட் இசக்கியம்மன் கோயிலுக்கு இலவசமாகச் செஞ்சு குடுத்தார். ஆனா, அந்த கேட்டை நிறுத்தி பூஜை செய்தப்போ, நிதானமில்லாத அளவுக்குக் குடிச்சுட்டுப் பட்டறையிலேயே படுத்துக் கிடந்தார்.
“என்ன, சரவணன் இப்படி இருக்கானே… ஒரு கால்கட்டைப் போடக் கூடாதா..?”ன்னு எல்லோரும் ஆச்சியைக் கேட்க ஆரம்பிக்க, ஆச்சியும் பெண் தேடும் படலத்தை ஆரம்பிச்சா. “முதலியார்பட்டியில ஒரு பொண்ணு இருக்கு; போய்ப் பார்த்துட்டு வரலாம்னு இருக்கேன். உன் சங்கிலியைக் கொஞ்சம் குடேன்…”ன்னு அம்மாவிடம் இரவல் வாங்கிட்டுப் போனப்பதான் ஆச்சி சங்கிலி அடமானத்துல இருக்குன்னு தெரியவந்துச்சு.
அந்த இடமே முடிவாச்சு. “பொண்ணு கொஞ்சம் நிறம் கம்மி. ஆனா, அதுக்கு ஈடா நகை போடுறாங்க. கலரை வெச்சு கஞ்சி குடிக்க முடியாது. இந்த இடத்தையே முடிச்சிடுன்னு சரவணன் சொல்லிட்டான்”னு ஆச்சி சொல்லிப் பரிசம் போட்டுட்டு வந்தா. கல்யாணச் செலவுகளுக்கு வயல் ஒத்திக்குப் போச்சு.
கல்யாணம் முடிந்து மறுவீட்டுக்குப் போய்ட்டு வந்தப்போதான் சரவணன் மாமாவைக் கட்டிக்கிட்ட சுப்பக்கா கண்ணுல பட்டா. ஆச்சி மரியாதைக்காக நிறம் கம்மின்னு சொல்லியிருக்கு. சுப்பக்கா இருட்டுக் கறுப்பா இருந்துச்சு. அமுங்கியிருக்க வேண்டிய பல்லெல்லாம் எடுப்பா இருந்துச்சு. எடுப்பா இருக்க வேண்டிய மூக்கு அமுங்கி இருந்துச்சு.
“மாப்ளே… 27 பேர் அவளை வேண்டாம்னு சொல்லியிருக்காங்க… இந்தப் பொறப்புக்கு அவ என்னடா பண்ணுவா..? இறைவன் அவளுக்குக் குடுத்தது அவ்வளவுதான். அவளை வேண்டாம்னு சொல்ற 28-வது ஆளா இருக்க நான் விரும்பலை. சரின்னு சொன்ன முதல் ஆளா இருந்தேன்”னு மாமா யார்கிட்டேயோ பேசிக்கிட்டிருந்ததைக் கேட்டப்போ பெருமையா இருந்துச்சு.
ஆனா, மூணாவது நாள் ராத்திரியே மாமா வீட்ல ஒரே ரசாபாசம். எட்டிப் பார்த்தா, சுப்பக்கா தலைமுடியைக் கையில சுருட்டிப் பிடிச்சு அடிச்சுக்கிட்டு இருந்தாரு மாமா. அக்கா நிமிர முடியாம அழுதுட்டு இருந்துச்சு. நடுவுல ஆச்சி, ‘அந்தப் புள்ளையை விட்டுருடா… பொண் பாவம் பொல்லாததுடா… ஏன்டா இப்படிக் குடிச்சிட்டு வந்து குடியை நாசம் பண்ணுதே’ன்னு கண்ணீர் விட்டுக்கிருந்தா. “இந்த மூஞ்சியைப் பார்க்கணும்னா நிதானத்துல வர முடியுமா இந்த வீட்டுக்கு? 27 பேர் எஸ்கேப் ஆகிட் டானுங்க. என் தலையெழுத்து, நான் மாட்டிக்கிட்டேன்”னு மாமா குளறின தைக் கேட்டப்போ அதிர்ச்சியா இருந்துச்சு.
பத்தே நாள்ல சுப்பக்காவை அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டாரு மாமா. ஆச்சி இந்த அவமானத்துக்குப் பயந்து வெளியில் தலை காட்டுறதில்லை. அப்புறம்தான் ஒவ்வொரு விஷயமா வெளியே வந்தது. சரவணன் மாமா, சுப்பக்காவைக் கட்டிக்க சம்மதிச்சது மனிதாபிமானத்தாலோ பரிதாபத்தாலோ இல்ல; சுளையா மாப்பிள்ளைக்கு ரெண்டு லட்ச ரூபா ரொக்கம் குடுத்திருக்காங்க. இப்பவும் மேற்கொண்டு கடையை விருத்தி செய்ய 50 ஆயிரம் ரூபா வாங்கிட்டு வரச் சொல்லித்தான் அனுப்பியிருந்தாரு.
“அப்போ அந்த ரெண்டு லட்சம்?”
“அதான்… லேத்துப் பட்டறை மேல கடன் வாங்கி பாட்டில் பாட்டிலா முழுங்கியிருந்தானேடே. கஞ்சிக்கு வழியில்லைன்னாலும் ஐயா லோக்கல் சரக்கு சாப்பிட மாட்டாருல்லா… அப் படி பெரும்போக்குப் போகணும்னா கையில பச்சையப்பன் வேணும்லாடே… அதான், பொண்டாட்டிய அனுப்பி இருக்கான்.” எல்லோரும் பேசி ஓய்ஞ்ச பிறகு, ஒரு நாளு கருக்கல்ல வீட்டுக்கு கையில பையோடு வந்துச்சு சுப்பக்கா.
இனிமே முதலியார்பட்டிக்குப் போக மாட்டேன்னு சொல்லிருச்சு. ஒருநாளு சண்டையில் மாமா ரோட்டில் போட்டு அடிச்சப்போகூட சுப்பக்கா, தீர்மானமாச் சொல்லிட்டா. மாமா பட்டறையில் ஒரு நாளைக்கு ஒரு பூட்டு தாழ்ப்பாள்கூட வெல்டிங் வைக்க வராம சும்மா கெடக்கிற மாதிரி ஆகிருச்சு நிலைமை. மாமாவும் சும்மா இருக்கும் நேரத்தில் சுகமா இருக்கலாமேன்னு பகல் வேளையிலயே சரக்கு கடைப் பக்கம் ஒதுங்க ஆரம்பிச்சார். ஆனா, முன்னைப்போல வசதி இல்லாததால, இப்பல்லாம் சப்பை பாட்டிலைத் தேடிப் போறதில்லை. சாராயத்துக்கு இறங்கி, அதிலேயும் சறுக்கி கசாயத்துக்கு வந்துட்டார்.
அஞ்சு ரூபா குடுத்தா ஒரு கிளாஸ் கசாயம் கிடைக்கும். அதைக் குடிச்சா, அரை மணி நேரத்துல ஜிவ்வுனு ஏறி, ஒரு ஃபுல் அடிச்ச மப்பைக் குடுக்கும். அப்படியே ரோட்டை அளந்தபடி வீட்டுக்கு வந்து திண்ணையிலயே சுருண்டு படுத்துக்குவார் மாமா. சில நேரம் சுப்பக்கா உள்ளே இழுத்துக்கொண்டுபோய்ப் போடும்.
மாமாவின் பொழுது இப்படியே போனாலும் சுப்பக்கா நம்பிக்கையா இருந்துச்சு. தினமும் காலையில தலை குளிச்சு, மஞ்சள் பூசி, பளிச்சுனு புடவையில கடைக்கோ, கோயிலுக்கோ போகும். அவளைப் பாத்து ஊருக்கே பரிதாபம். ‘இந்தப் புள்ளையை இப்படிப் படுத்துறானே’ங்கிற அங்கலாய்ப்பு அதுல தெரியும்.
அம்மாவோடுதான் அக்கா கொஞ்சம் மனசுவிட்டுப் பேசும். அம்மாவும் சரவணன் மாமா இளம்பிராயத்துல எத்தனை துறுதுறுப்பா இருந்தாரு, அவர் சினிமா காட்டுன கதை, பட்டம் விட்ட கதையெல்லாம் சொல் லும். ‘அவனுக்குப் போறாதவேளை வந்துதான் அந்தமானுக்குப் போனான். அங்க போயி சம்பாதிச்சது எல்லாத்தையும் குடியாலயே அழிச்சுட்டான். அந்தப் பழக்கம் மட்டும் இல்லைன்னா, இன்னிக்கு உன்னை ராணி மாதிரி வெச்சிருப்பான்” என்று அம்மா ஒரு தடவை சொன்னதுக்கு, “அந்தப் பழக்கம் இல்லைன்னா என்னைக் கட்டிக்கிட சம்மதிச்சிருக்க மாட்டாரே மதினி” என்று சிரித்தாள் சுப்பக்கா.
“அவன் குடியால ஒரு நல்லது நடந்ததுன்னா, உன்னைக் கட்டுனதுதான். இதைவிட்டு வெளியில வந்து டணும்னு சித்தாவி அம்பாளுக்கு வெள்ளிக்கிழமையில் வெறும் வயித்தில் விளக்குப் போடு. அம்பாள் எல்லாத் தையும் கேட்டுக் குடுப்பா”ன்னு அம்மா ஆறுதல் சொன்னா.
சுப்பக்கா விளக்குப் போட்டாளோ என்னவோ, அம்மாவும் அவளும் பேசிக்கிட்ட பத்தே நாள்ல, சரவணன் மாமா போதையில நிதானம் தடுமாறி சாக்கடைக்குள்ள விழுந்துட்டார். வெளியே இழுத்துப் போடக்கூட எல்லாரும் அசிங்கப்பட்டு நிக்கிற அளவுக்கு உடம்பெல்லாம் சாக்கடை அப்பிப் போயிருந்துச்சு. தகவல் கேள்விப்பட்டு ஒரு குடம் தண்ணியைத் தூக்கிக்கிட்டு ஓடுச்சு சுப்பக்கா. கூசாம உள்ளே இறங்கித் தூக்கி அங்கேயே குளிப்பாட்டி ரெண்டு பேரைக்கொண்டு தூக்கிட்டு வந்துச்சு.
இது நடந்து ஒருவாரமாகிருச்சு. மாமாவுக்குத் தலையில மூணு தையல். இடது கை ஒடிஞ்சு தொட்டில் போட்டிருந்தாங்க. தொடைப்பக்கம் சிமென்ட் சிலாப் கீறி பெரிய காயம். படுக்கையில கிடந்தார். தினமும் சுப்பக்கா வெந்நீர் வெச்சு உடம்பைத் துடைச்சு வேட்டி சட்டை மாத்திவிடுது. சின்னதா ஒரு ரேடியோவைக் கொண்டாந்துவெச்சு பாட்டு வெச்சிருக்கு. கொஞ்சம் ஆயாசமா இருந்தாக்கூட குளுக்கோஸ் போட்டு சாத்துக்குடி ஜூஸ் குடுக்குது. மாமாவை மடியில் வெச்சுப் பார்த்துக்குது.
“மதினி, தென்காசி வரைக்கும் போக வேண்டியிருக்கு. கொஞ்சம் உங்க தம்பியைப் பார்த்துக்கோங்க”ன்னு அக்கா அம்மாவிடம் சொல்லிட்டுப் போக, நான் மாமாவுக்குத் துணைக்கிருக்கப் போனேன்.
கொஞ்சம் எழுந்து நடமாடுற நிலைமையில இருந்தார் மாமா. வெளித் திண்ணையில கிடந்த ஈஸிசேரில் சாய்ஞ் சிருந்தார். “என்ன மாப்ளே… காலேஜ் லீவா இப்போ? உனக்கு காபி குடுக்கணும்னா, உங்கக்கா வரணும்டே… தென்காசி போயிருக்கா”ன்னார்.
கொஞ்ச நேரம் கண்ணை மூடிப் படுத்திருந்தவர், “உங்கக்கா ரசம் வெச்சாக்கூட உப்பும் உறைப்புமா நல்லா இருக்குடே! என்னத்துக்கு தினம் வெந்நீரைப் போட்டு என்னை இப்படித் துடைக்கறனு கேட்டா, ‘இல்லன்னா படுக்கைப் புண் வந்துடும்னு சொல்றா. அப்படி ஒண்ணை நான் கேள்விப்பட்டதே இல்லை. சரக்கு தொட்டுப் பதினஞ்சு நாளாச்சு. சாக்கடையில் கிடந்தவனைக் குளிப்பாட்டிக் கூட்டியாந்திருக்கா” என்று பேசிக்கிட்டே போனார். நாலு வார்த்தை சேர்ந்த மாதிரி பேச முடியாம மூச்சு வாங்குச்சு. மருந்து மாத்திரைகளின் வீரியம் ஒருபக்கம்னா, சரக்கு உடம்பைப் புண்ணாக்கி இருந்தது இன்னொரு பக்கம். ஆள் தேற ஆறு மாச மாச்சும் ஆகும் போலத் தெரிஞ்சது. தூங்கவெச்சுட்டு, அக்கா வர்ற வரைக்கும் புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்துட்டு, வீட்டுக்கு வந்தேன்.
அன்னிக்கு ராத்திரி, அம்மா உறங்கிக்கிட்டு இருந்த என்னை உலுப்பி எழுப்பினவள்…
“டேய்! இந்த நாசமாப் போனவன் அந்தப் புள்ளையை நிம்மதியா இருக்க விட மாட்டான் போலிருக்கு. பூச்சி மருந்தை எடுத்துக் குடிச்சுட்டானாம்டா!” என்றாள்.
– ஜூலை 2009