சலங்கை அதிரும் ஒன்பதாம் திசை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 30, 2012
பார்வையிட்டோர்: 11,782 
 
 

காலையில் எழுந்தவுடன் எவர்முகத்திலும் விழிக்கும் முன் கடிகாரத்தை பார்ப்பது என் வழக்கம். சிலர் கைய சுடச்சுட தேய்த்து ரேகை பார்ப்பார்கள். சிலர் எழுந்ததும் கேடு கெட்ட முகத்தில் விழித்தால் அன்றைக்கு பூராவும் நல்லதே நடக்காது என்று நம்பிக்கொண்டிருப்பார்கள். அது மூட நம்பிக்கை என்பது எனக்கும் தெரியும். ஆனால் நான் கடிகாரத்தை பார்ப்பது இன்னும் எத்தனை நேரம் நாம் தூங்கலாம் என்பதை பார்த்துவிட்டு ஒரு அரை மணி நேரம் நிம்மதியாக தூங்கலாமே அதற்காகத்தான். காலையில் எழுந்ததும் கடிகாரத்தை பார்ப்பேன்.

ஏழு மணிக்கே மீனா வர சொல்லியிருப்பது நினைவுக்கு வந்து. ஏழு மணிக்கு போகவேண்டும் என்று நினைப்பு தூங்கவிடாமல் செய்கிறது. மணி ஆறாகிவிட்டது. இன்னும் அரைமணி நேரம் தூங்க முடியாது. தூங்கினால் நன்றாக இருக்கும். நன்றாக இருக்கிறதே என்று தூங்கினால் குளிக்காமல் கூட ஓட வேண்டி இருக்கும். குளிக்க வேண்டாம் பல்லாவது பிரஸ் பண்ணிட்டு வா அப்பதான் காப்பி என்று சொல்லும் அம்மாவுக்கு மகனாக பிறப்பது முன் ஜென்மத்து பாவமோ என்னவோ? பல் துலக்கினால்தான் காப்பியே என்றால் சாப்பாட்டுக்கு நிச்சயம் குளித்திருக்க வேண்டும். இந்த தண்ணி கஷ்டத்தில் தினத்திற்கும் குளிப்பதை தடைசெய்து யாராவது சட்டம் போட்டால் நான் நிச்சயமாக கள்ள ஓட்டாவது போடுவேன். பதினேழு வயது பையனுக்கு ஓட்டு இல்லை என்ற ஜனநாயகம் குறித்து பின்னொரு நாள் சொல்கிறேன். மீனா வர சொல்லியிருப்பது நினைவிருக்கிறது.

இத்தனை காலையில் எங்க கிளம்பிட்ட என்று அம்மா கேட்பதை தவிர்க்க வேண்டு மென்றால் நிச்சயம் சாப்பிடாமல் கிளம்பியாக வேண்டும். அம்மாவிற்கு விளக்கம் சொல்லிவிட்டு ஊர் சுற்றப் போக நான் ஒன்றும் திருமணம் ஆனவன் இல்லை.

வண்டியிலும் பெட்ரோல் இல்லை. அப்பா பாக்கெட்டிலும் காசு இல்லை. பீரோவில் காசை வைத்தால் குட்டியா போடப் போகிறது. பாக்கெட்டிலேயே காசை வைக்கலாம்தான். அப்பாவிற்கு என் மேல் அப்படி ஒரு நம்பிக்கை. அப்பாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவே நான் நடந்து கொள்வேன். வைத்தால் வைத்த காசை சுத்தமாக துடைத்து விடுவேன். பீரோவிற்கு எப்படியாவது ஒரு திருட்டு சாவி செய்ய வேண்டும்.

டவுன் பஸ்சில் போவது அநியாயத்திற்கு கஷ்டமாக இருக்கிறது. அப்பா படுத்தும் பாட்டில் டவுன் பஸ்சிலெல்லாம் போக வேண்டிய காலக் கொடுமை. ‘ஏன் வாத்யாரே. வண்டியை வூட்டுல வுட்டுட்டு எந்த பேமானியாவது டவுன் பஸ்சுல போவானா?’ என்று ஒரு நாளைக்கு ஆள் வைத்து அப்பாவை நன்றாக ஒரு கேள்வி கேட்க வேண்டும்.

ஏழு மணிக்கு அப்படி என்ன வேலையோ அந்த மீனாவுக்கு. முக்கியமான ஒருத்தரை பாக்க போகணும் சீக்கிரம் வான்னு சொன்ன பின்னாடி போகாம இருக்க முடியாது. போயித்தான் ஆகணும். கோபம் வந்துட்டா வெயிலுக்கு குடிக்கிற குளிர்பானத்தில விளக்கெண்ணைய கலந்து தந்திடும். தந்திருக்கு ஒரு முறை. வான்னு சொன்னா வராம இருக்க மாட்டாங்க யாரும். போகாம போனா குளிர்பானத்தில விளக்கெண்ணைய குடிச்சித்தான் ஆகணும்.

மீனாவுக்கு நிறைய கோபம் வருது, ஆனா சரியா காட்டத் தெரியாது. சரியான நேரத்திலேயும் கோபம் வராது. கொஞ்சம் லேட்டா வரும். வந்த சுவடே யாருக்கும் தெரியாது. போன சுவடும் யாருக்கும் தெரியாது.

ஒரு நாள் மீனாவோட புது நைட்டி ஒரு ஜான் கிழிஞ்சிருக்கு, கிழிஞ்ச இடம் தைச்சிருக்கு. ஆணியில மாட்டி கிழிஞ்சிடுச்சான்னு கேட்டேன். இல்லே நான்தான் கிழிச்சேன் அப்படின்னு ஒரு பதில். எதுக்கு கிழிக்கணும்,,? எதுக்குன்னா நான் என்னோட பர்த்டே அன்னைக்கு வீட்டுக்கே வரலையாம். ஆசையா செய்து வச்சிருந்த இனிப்பெல்லாம். பாழாப் போச்சாம். கோபத்தில நைட்டிய கிழிச்சிக்கிறதே புத்திசாலித்தனம் கிடையாது. இதுல ஒரு வாரம் கழிச்சி நைட்டிய கிழிச்சிக்கிடறது அதை விட புத்திசாலித்தனம் கிடையாது. ஆனா அப்படித்தான் பொறுமையா யோசிச்சி யோசிச்சி கோபம் வரும். அந்த கோபம் யாருக்குமே தெரியாது.

ஒரே ஒரு முறை வினாடி தாமதிக்காம சட்டுனு மீனா கோபப் பட்டிருக்கு. மீனாவோட புருசனை நான் ஒரு *முக்காடவுசர் கோமாளி*ன்னு சொன்னதும் கல்லுமேல தொவைச்சிட்டு இருந்த வேட்டிய திருப்பி என் மேல ரண்டு தொவை தொவைச்சிடுச்சி. புருசனை கோமாளின்னு சொன்னா பொண்ணுங்களுக்கு கோவம் வரது நியாயம் தான். அதுக்காக புருசனோட வேட்டியால சோப்பு நொரை பறக்க அடிக்கிறது கொஞ்சம் அதிகமில்லையா?

பொரமடாஸ்ங்கர பேர்ல முழங்காலுக்கு கீழ் வரையிலும் தொலதொலன்னு ஆடிகிட்டு ஒரு டவுசரை போட்டுகிட்டு, காலையும் கையையும் தினுசு தினுசா நூடுல்ஸ் ஷேப்லையெல்லாம் வளைச்சி தலைகீழாவும் படுத்துகிட்டும் என்னென்னவோ மாதிரி மூக்குல தெனத்துக்கும் காத்து விட்டுட்டு இருக்கிற மனுசனை என்னன்னு சொல்லட்டும், முக்கா டவுசர் கோமாளின்னு சொல்லாம. காலை நேரத்தை ஏன் பாழ் செய்யறிங்கன்னு கேட்டா, யோகா செய்யறாராம்.

உச்சந் தலையில கொட்டினா கூட கூலா இருக்கிற மீனா புருசன்காரன் பேரை யாரும் தப்பா சொன்னா போயே போச்சி அப்படி ஒரு இது புருசன் மேல. பட்டதாரி பொண்ணு கொஞ்சம் ஓவராத்தான் புருஉக்ஷ பக்தியில இருக்கு. ‘சொல்லுங்கள் நாதா. சொல்லுங்கல் சுவாமின்’னு ஒரு முப்பது நாப்பது வருசத்துக்கு முந்தின கறுப்பு வெள்ளை படத்தை பாத்த உணர்வு வரும் சமயத்துக்கு. அவங்க புருசனோட தெய்வீக புராணம் அப்படி.

மீனா மொத மொதல்ல அவங்களோட கண்கண்ட கணவனை பார்பர்ஷாப்லதான் பாத்திருக்கு. ‘கோயிலாண்ட வா உன் கிட்டே ஒரு முக்கியமான விசயம் பேசணும்’ அப்படின்னு சொன்ன அந்த கண்கண்ட கணவண் சவரம் பண்ண “hயித்துக் கிழமை பார்பர்ஷாப் க்யூல மாட்டிகிட்டு இருக்காரு. இது அரக்க பரக்க குளிச்சிட்டு கற்பூரம் ஊது வத்தியோட சாமிகும்பிட போறேன்னு வீட்டுல சொல்லிட்டு வர்ற வழியில பாத்தா நம்ம கண்கண்ட கணவன் பார்பர்ஷாப் முன்னாடி சவரம் முடிச்சிகிட்டு சவர்க்காரம் கன்னத்தில தடவிகிட்டு பவுடர் போட்டுகிட்டு வெளிய வராரு. மீனா பாத்தாங்களாம். அவரு சொன்னாராம். ‘கூட்டமா இருந்திச்சி. லேட்டாயிடுச்சி இதோ இப்ப வந்திடறேன் நீ கோயிலாண்ட இரூன்னு.

இவங்க, இந்த மீனாங்கரவங்க ஒண்ணுமே சொல்லாம நேரா கோயிலுக்கு போயி, சாமிய கும்பிட்டிட்டு, தீர்த்தத்த வாங்கி குடிச்சிட்டு, நவக்கிரகத்தை சுத்திட்டு, பசு மாட்டுக்கு பழத்தை தந்துட்டு, ஒண்ணு ரெண்டு தெரிஞ்சவங்கிட்டையும் பேசிட்டு கோயில் படிகட்டுல உட்கர்ந்து காத்தோ காத்துனு காந்து கிடந்தா அப்புறமா வர்றாரு மீனாவோட கண்கண்ட புருசன்.

அப்போ அவங்க ரெண்டு பேருக்கும் இன்னம் கல்யாணம் ஆயிருக்கலையாம். இதை சொல்லும் போது ஏன் தான் இந்த மீனாவுக்கு சின்ன பொண்ணு மாதிரி கன்னம் சிவக்குதோ தெரியல. இப்ப முப்பது வயசு ஆகிறது. கல்யாணம் ஆயும் அஞ்சி வருசம் ஆச்சி இன்னும் எதுக்கு அந்த வெக்கம் தெரியலை.

காத்திட்டு இருந்த மீனாவ பாக்க வந்த அவரு பார்பர் ஷாப் முன்னாடி சிரிச்ச அதே சிரிப்போட வராரு. அதாவது கால தாமததுக்கு மன்னிச்சிக்கோன்னு சொல்லற ஒரு சிரிப்பு. ரெண்டுபேரும் கொஞ்ச நேரம் பேசிக்கிடலையாம். அப்புறமா அவர்தான் பேச்ச ஆரம்பிச்சாராம். மொத மொத தணியா பேசிக்கிட போறதினால நல்லா பளபளன்னு வந்தா நல்லாயிருக்குமேன்னு தான் ஷேவ் பண்ணிக்க போனேன் அங்க லேட்டாயிடுச்சின்னு அவர் சொன்னாராம். எதோ சொல்லணும்னு சொன்னிங்களே என்னாதுன்னு கேட்டாங்களாம்.

கோயில் தெப்பக்குளத்து படிக்கட்டுல உட்காந்துகிட்டு ‘உனக்கு மட்டன் பிரியாணி செய்யத் தெரியுமா?’ன்னு கேட்டாராம் ஒரு கேள்வி. எது? மட்டன் பிரியாணி செய்யத் தெரியுமான்னு கேக்கறத நாலு பேர் முன்னாடி கேட்கக்கூடாதாம். கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டுட்டு தெப்பக்குளப் படிக்கட்டுல உட்கார்ந்து தான் மட்டன் பிரியாணி செய்யத் தெரியுமான்னு கேக்கணுமாம்.

மீனா தெப்பக் குளபடியில உட்காந்துட்டு வயித்த புடிச்சிகிட்டு சிரிச்சதாம். இதை என்கிட்டே சொல்லும்போதும் அப்டியேதான் சிரிச்சது.

என்ன மீனா உன் ஆம்பளைய நான் முக்காடவுசர் கோமாளின்னு சொன்னா மட்டும் கோபம் வருது. மட்டன் பிரியாணி செய்யத் தெரியுமானு கேக்க வேற எடமே கெடைக்கிலையா உன் ஆம்பளைக்கு. மீனாவை கேட்டால் மீனா முறைக்கும். கோபப்படும் அந்த கண்ணில் ஒரு அடர்ந்த பளபளப்பு இருக்கிறது. கோபத்தில் கூட சிரிப்பை மறக்காத கண்கள். வெள்ளை விழியின் ஓரத்தில் மிகச் சின்னதாய் ஒரு மச்சம் இருக்கிறது. அந்த மச்சம் அந்த கண் அழகாய் இருப்பதற்காக எதையோ செய்கிறது.

‘இல்லடா. அவர் அதை சொல்ல என்ன கூப்பிடலே வேற ஒன்ன சொல்ல கூப்பிட்டார்.’

‘வேற எதையோன்னா. நான் உன்னை காதலிக்கிறேன்னு இங்லீஸ்ல சொல்ல கூப்பிட்டாரா?’

‘போடா இவனே. நிச்சயம் பண்ண பொண்ணுகிட்ட யாருடா ஐ லவ் யூ சொல்லுவாங்க?’

‘வேற.?’

‘கட்டிக்க போற ரெண்டு பேரு எதெதையோ பேசிப்பாங்க அதையெல்லாம் உன் கிட்டே சொல்லிகிட்டு இருக்க முடியுமா? என்னென்னமோ பேசிகிட்டோம். டேய் நீயும் ஒரு பொண்னோட அந்த தெப்பக் குளத்துக்கு போயி அவகிட்டே பேசிகிட்டே அந்த குளத்தில இருக்கிற மீன்களுக்கு பொரி போட்டு பாரேன். டேய் பேச்சில்லடா முக்கியம். என்ன பேசறேhம்னு தெரிஞ்சி பேசினா அது பேரு மயக்கமில்லடா. அது. அது. போடா. கட்டிக போறவகிட்டே என்ன பேசரதுன்னு தெரியாம ஒருத்தன் நேரங்கட்ட வேளையில நேரங்கெட்ட கேள்வி கேக்கறான்னா என்ன ஆயிருக்கும் பாரு அவனுக்குள்ளே. அத்தனை காதல் என்மேல அவருக்கு . எவ்ளோ நேரம் பேசிகிட்டு இருந்தோம் தோpயுமா?. அதெல்லாம். உன்கிட்டே சொல்ல முடியுமா?’

திருமண நிச்சயம் செய்து விட்டு பின் காதலிக்கும் கோஷ்டி போல இருக்கிறது. ‘உங்கள் திருட்டுக் காதல் வீட்டிற்கு தெரிந்தபின் வீட்டில் பேசி முடித்தார்களா?’ இந்த கேள்விக்கு மீனா இடுப்பில் இரண்டு கையையும் வைத்துக் கொண்டு மார்பை நிமிர்த்தி மகாராணியின் கம்பீரத்துடன் முறைக்கும். முறைக்கும் போதே அந்த உதட்டின் ஓரத்தில் கோபம் பூசிய புன்னகையும் சந்தோசமும் அரும்பும்.

‘சும்மா சொல்லு மீனா. லவ் பண்ணிங்களா இல்லையா?’

‘என்ன பொண்ணு பாக்க வர்ற வரையிலும் அவரை நான் ஒரு முறைகூட பாத்ததேயில்லை. என்னை அவர் பாத்து தலை சுத்தி வீட்டுல வந்து விழுந்து பெண்கேட்டதா சொன்னார். கொஞ்சம் என்னை விட சிவப்புதான் இல்லே அவரு?’ வெட்கம் இன்னும் மிச்சமிருக்கிறது. கல்யாணமாகி ஐந்து வருடங்களுக்கு பின்னும்.

‘ஆனா உன் அப்பாகிட்டே கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு அடம்பிடிச்சியாமே. உன் அப்பா சொன்னாரே.’

‘ஆமாம் சொன்னேன். எனக்கு என் அப்பாவ கடைசி வரையிலும் பாத்துக்கிடணும்னு ஒரு ஆசை அதான் அப்படி சொன்னேன். இவரை பாத்து, இவர் என் வீட்டில வந்து என்ன பெண் கேட்ட பின்னாடி என்னால அப்படி சொல்ல முடியலை. சும்மா வேண்டான்னு பிகு பண்ணிக்கதான் முடிஞ்சது. அவர் நடக்கும் போது பாத்தியா அந்த வீசி நடக்கிற நடை எனக்கு பிடிச்சி போச்சே. எப்படி வேண்டான்னு சொல்ல.’

‘உன் அப்பாவை யாரு பாத்துக்குவாங்க.?’

‘என் அம்மாவுக்கு என்ன வேலை.?’

‘நியாயம் தான். ஆமா வேறு ஜாதியா உன் ஆம்பிளை? நீ மாமிசம் சாப்பிடாதவ. உன் ஆம்பிளை நல்லி எழும்பா கடிக்கிறாரே. கருமம்னு சொல்லிகிட்டு சமச்சி வேற தர்றே.’

‘இன்னொரு தடவை ஆம்பிளைன்னு சொன்னா கன்னத்தில போடுவேன். என்ன பேச்சு இது,,? ஆம்பிளை அப்டி இப்டினு..’

இப்படித்தான் மீனாவுக்கு புருசனை தப்பாக பேசினால் கோபம் வந்துவிடுகிறது. உயரமான, சிவப்பான, கறுத்த அடர்ந்த மீசையுள்ள, சிரித்து பேசுகிற, கொஞ்சுகிற, கெஞ்சுகிற, உச்சந்தலையில் மனைவியை வைத்துக்கொள்கிற கணவன்களை எல்லா பெண்களுக்கும் பிடித்திருப்பது போலவே மீனாவுக்கும் தன் புருசனை பிடித்திருக்கிறது.

பட்டதாரி படிப்புவரை அடுப்படி பக்கம் போகாமலே இருந்துவிட்டு, திருமணம் வேண்டாம் வேண்டாம் என்று நான்கைந்து வருடமும் ஓட்டி, சுடுதண்ணி வைக்கத் தெரியாதவளாக மீனா இருந்த தோதில் வேறெhருவன் திருமணம் செய்து கொண்டு போயிருந்தால் தலையணை பிய்ந்து போகிற அளவுக்கு சண்டை வந்திருக்கும்.

சும்மா சொல்லக் கூடாது மீனாவின் புருசனை. இவளுக்கு சமைக்கத் தெரியாது என்பதால் கல்யாணம் ஆனவுடனே அதாவது பத்தாம் நாளே தனிக்குடித்தனம் வந்து, வேலைக்கு போவதற்கு முன்பாக இவளுக்கும் சேர்த்து சமைத்து வைத்து விட்டு வேலைக்கு சென்று வந்து, பின் இவளுக்கும் சேர்த்து இரவு சமைத்து, “hயிற்றுக் கிழமைகளில் சமயல் ஒவ்வொன்றாக சொல்லித்தந்து இன்றைக்கு நிஜமாகவே மட்டன் பிரியாணியை நாக்கு ருசிக்க சமைக்கும் மீனாவாக மாற்றியிருக்கும் அவரை மீனா தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவதில் தவறில்லைதான்.

‘காப்பி கூட போட தெரியாம தான் நான் வந்தேன். அவர் என்னை இம்சை பண்ணவேயில்லை. என்னையே காலம்பூரா சமைக்க விட்டுடாதே கொஞ்சமா கத்துக்கோன்னு தான் சொல்லித்தந்தாரு.’

மீனா தன் கணவபுராணத்தை சொல்ல ஆரம்பித்துவிட்டாள்.

‘அவர் என்னமா சமைப்பார் தெரியுமா? சும்மா சொல்லறேன்னு நெனைக்காத. எந்த ஊரு ராஜாவும் இவர் செய்யற சாப்பாட்டுக்கு தன் ராஜ்யத்தை எழுதிவச்சிடுவான். பிறகு அவர் போடற திக்கான காப்பிக்கு எழுதித்தர எந்த ராஜாகிட்டயும் எதுவுமே இருக்காது.’ இப்படி பெருமையான பெருமை மீனாவுக்கு.

அந்த மீனாவுக்கு புருசன் பெருமை இந்த டவுன் பஸ் ஓட்டுனருக்கு டவுன் பஸ் பெருமை. எதோ புது பொண்டாட்டிய மெல்லமா கடைவீதி பக்கம் வாக்கிங் கூட்டிட்டு போகிற மாதிரி அத்தனை மெதுவாக ஓட்டிக்கொண்டு வருகிறார். ஒரு வழியாக கொண்டுவந்து விட்டானே என்று இறங்கி போக வேண்டியதாக இருக்கிறது. டிக்கட் பரிசோதகர் வராததற்காக இன்றைக்கும் ஆண்டவனுக்கு நன்றி சொல்கிறேன்.

மீனா அவசரமாய் குளித்து வீட்டில் தயாராயிருப்பது தெரிந்தது. ‘எதுக்கு மீனா ஏழு மணிக்கே வரச்சொன்ன.? தூக்கம் கெட்டு வரவேண்டியிருக்கு. இத்தனை காலையில எங்க போகப்போறேhம். எனக்கு இப்ப கல்யாணமெல்லாம் வேண்டாம். நான் பொண்ணுபாக்க இத்தனை காலையில வரமாட்டேன். மோதல்ல ஒரு டீ போட்டு குடு’

மீனா எதுவும் பேசவில்லை. பையை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு கண்ணாடி முன் நின்று பொட்டை சரிசெய்து கொண்டு, முகப்பரு ஒன்றை அழுத்திவிட்டு, ஆணியில் இருந்த சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பியது.

‘நான் டீ கேட்டேனே,,?’

‘வந்து சாப்டுக்கோ. நேரமாச்சி போகலாம் வா’

‘நான் வர மாட்டேன். உசிர் போனாலும் டீ குடிசிட்டு போகட்டும். அப்டி என்ன டீ குடிக்காம போயி பாக்க வேண்டிய வேலை. டீ போட்டு குடு.’

‘ஏழு மணிக்கு போகலைன்னா அவரு கோர்ட்டுக்கு போயிடுவாரு.’

‘எவரு,,? டீ கேட்டா கோர்ட்டுக்கு போறவரு.’

‘வக்கில்.’

‘வக்கிலா. எதுக்கு? அவருக்கு டீ புடிக்காதா?’

‘வெளையாடாத.’

‘நான் வெளையாடல. வக்கில்கிட்ட எதுக்கு சொல்லு?’

‘விவாகரத்து கேட்டு என் புருசன் கோர்ட்டுக்கு போயிருக்காரு. அதுக்கு வக்கிலதானே பாக்க போகணும்? டாக்டரையா?.’

‘விவாகரத்தா? ‘

மீனா அழுதிருக்கிறாள். ராத்திரிபூராவுமாக இருக்க வேண்டும். முகம் வீங்கி கண் சிவந்து. மீனா அழுதிருக்கிறாள்.

எதைக் கேட்டாலும் வாயை மூடிக் கொண்டு சும்மா வாவென்று சொல்லிவிட்டு வேக வேகமா பயணப்பட்டாள். வக்கில் வீட்டில் இல்லை. அலுவலகத்தில் வந்துபார் என்று சீட்டு தந்துவிட்டு போயிருக்கிறார். அலுவலகத்தில் போய் பார்த்தோம். என்னை வெளியே இருக்க சொல்லிவிட்டு இருவரும் பேசினார்கள். மீனா வெளியே வந்து ‘வா போகலாம்.’ என்று சொல்லி கிளம்பிற்று. முகத்தை பார்த்தேன் கண்கள் ஈரமாய் இருந்தது. திரும்பவும் அழுதிருக்க வேண்டும்.

வீட்டிற்கு வந்ததும் டீ போட்டு கையில் கொடுத்தது. இப்பொழுது இந்த டீயை வாங்கவா வேண்டாமா?

‘என் ஆம்பள வீட்டுக்கு வந்து மூணு நாள் ஆச்சி தெரியுமா? சினேகிதங்க வீட்டுல இருக்கார். என்ன தப்பு செஞ்சிட்டேன் நான்?’ டீ குடித்தபடி என்னை கேட்ட மீனா என் பதிலை எதிர்பார்க்காமல் எதையோ யோசிப்பது தெரிந்தது.

‘என்ன பிரச்னை மீனா.? திடீர்னு. என்ன தப்பு செஞ்சிட்டே நீ விவாகரத்து போகற அளவுக்கு?’

‘தெரியல.. வக்கில்கிட்ட குழந்தை இல்ல அதனால விவாகரத்து வேணுன்னு கேட்டிருக்கிறார்.’

ரெண்டு பேரும் சேர்ந்து தான் குழந்தையை தள்ளி போட்டிருப்பதாக சொன்னார்கள். உனக்கு சின்ன வயசு இப்ப வேணாம் கொஞ்சம் வருசம் ஆகட்டுமென்று அவர்தான் சொன்னாராம். அதனால்தான் இத்தனை வருசமாக அவர்கள் குழந்தைபெற்றுக் கொள்ள வில்லை என்று எனக்கு தெரியும். மீனா சொல்லியிருக்கிறது. ஆனால் இப்பொழுது என்ன வந்தது. ஐந்து வருடம் குழந்தை இல்லாமல் இருப்பது கொஞ்சம் அதிக வருடங்கள் தான். ஆனால் இவர்களாக எடுத்த முடிவுதானே. இருவரும் சேர்ந்து எடுத்த முடிவுதானே?

‘கொழந்த வேணுன்னா பெத்துக்கோயேன். அதுக்கு ஏன் விவாகரத்தெல்லாம்.’

‘இன்னும் ரெண்டு வருசம் பொறுன்னு சொல்லறேன். அது பொறுக்கல அவருக்கு. அதுக்குள்ள. விவாகரத்து அது இதுன்னு.’

‘ரெண்டு வருசம் ஏன்? உங்க ரெண்டு பேருக்குள்ள ஏதும் குறை இருக்கா? கொழந்த பொறக்காதா? டாக்டர்கிட்டே காண்பிக்கலாமே.?’

‘கொறை ஒண்ணும் இல்ல. ஐந்து வருசத்தில நாலு அபார்சன் பண்ணியாச்சி. ரெண்டு பேருமே நார்மல்தான். மனசுலதான் கொறை.’

‘மனசுல என்ன?’

‘நாலு பேரு முன்னாடி கூச்சமில்லாம ஆடற பொம்பள கூட குடித்தனம் பண்ண முடியாதுனு வக்கில்கிட்ட சொல்லியிருக்காரு.’

‘சேச்சே. இது ஒரு காரணமா? இல்ல மீனா. வேற பிரச்சினை ஏதாவது இருக்கும். உனக்கு நெஜமாவே ஒண்ணும் தெரியலையா?’

காலேஜ் படிக்கும் காலங்களில் காலேஜில் நடக்கும் அத்தனை விழாக்களிலும் மீனாவின் டான்ஸ் நிச்சயம் இருக்கும். பரதம் கற்றவள். சின்ன வயதில் மீனாவின் அப்பாவிற்கு ஒரு விபத்தில் கால் போயிற்று. கால் அற்ற தன் அப்பா கஷ்டத்திலும் நடனப் பள்ளியில் சேர்த்து கற்றுத் தந்த பரதம் அவளுக்கு வாழ்க்கையும் உயிருமாக இருக்கிறது. காலேஜில் மீனாவிற்கு ஏராள ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள் அவள் நாட்டியத்திற்காக. மீனாவின் நண்பி ஒருத்தர் இதை சொல்லி அப்படி சிலாகித்திருக்கிறார்கள்.

மீனா பள்ளியிலும் கல்லு}ரியிலும் வெறும் மாணவி மட்டும் அல்ல. ஒரு நாட்டியக்காரியாக வாழ்ந்திருக்கிறாள். ரத்தம் பூராவும் ஆட்டமும் வாய் பூராவும் அதைப்பற்றிய பேச்சுமாக இருக்கும் மீனாவை ஆடாமல் இருக்கச் சொல்ல முடியுமா? ஆடாமல் மீனா இருக்குமா? அவள் கால்கள் அதை விடுமா? வெங்காயம் வெட்டும் போதும் மனதில் ஓடும் ஏதாவது ஒரு பாடலுக்கு காலை ஆட்டியபடி இருக்கும் மீனா ஆடவேண்டாம் என்றால் இருப்பது சாத்தியமா? மழைக் காய்ச்சலில் வாடி வதங்கியிருந்த போதும், காலேஜ் பேர்வெல் டே அன்று ஆடி மயக்கம் போட்ட மீனா சும்மா காரணமில்லாமல் ஆடாதே என்றால் ஆடாமலிருப்பது சாத்தியமா?

மீனாவின் புருசன் மீனாவின் நாட்டியத்தை காலேஜ் பேர் வெல் டே அன்றைக்கு பார்த்துத்தான் மீனாவை பிடித்திருப்பதாக வீடேறி பெண் கேட்டிருக்கிறார். மீனாவிடம் அப்படி புகழ்ந்து தள்ளினாராமே அபாரம் அபாரம் உன் நாட்டியம் அபாரம் என்று. இன்றைக்கு கூச்சமில்லாமல் நாலு பேர் முன்னாடி ஆடுவதாக எப்படி சொல்ல முடிகிறது. இதுவாக இருக்காது. வேறு என்னவாக இருக்கும் விவாகரத்திற்கு போகும் அளவிற்கு.

‘மீனா தப்பா எடுத்துக்காதே. அவருக்கு ஆடப் பிடிக்கலன்னா விட்டுடேன்.’

‘ஏன். செத்து போயிடறனே.’

‘எதுக்கு கோபப்படற. டான்ஸ்ன்றது வாழ்க்கையிலே ஒரு பொழுதுபோக்கு தானே. வாழ்க்கையே வீணாயிடும் போல இருக்கே. அதை விட்டுடேன். புருசனைவிட ஆட்டமும் பாட்டமும் பெரிசா என்ன?’

‘எனக்கு புருசனைவிட அதான் பெரிசு. பொண்ணு பாக்க வந்த அன்னைக்கே அவர்கிட்ட சொன்னேனே. எனக்கு டான்ஸ் ஆடரத நிறுத்த முடியாதுன்னு. சரின்னு சொன்னாரே அன்னைக்கு. இப்பத்தான் தெரியுமா ஊர்ப்பட்ட ஆம்பளைங்க ஆடறத பாப்பாங்கன்னு. தெருவுல போற எல்லாத்துகிட்டயும் உன் உடம்ப காட்டிட்டு இருப்பியான்னு கேக்கறார். அடுத்தவன் கைய புடிச்சி நீ ஆடறத பாத்துட்டு இருக்க முடியாதுன்னு சொல்லறார்.’

‘சந்தேகப் படறாரா?’

‘சந்தேகமா? நீ அவர் இல்லாத போதும் ராத்திரி பதினொன்னு வரையிலே இங்க இருந்திருக்கியே ஏதாவது தப்பா பேசியிருக்காரா? சந்தேக புத்தி அவர்கிட்ட இல்ல.’

‘வேற என்னவாம்.’

‘ஆடறது புடிக்கல்

‘விட்டுடேன்.’

‘என்ன மயித்துககு விடணும். கல்யாணம் வேணான்னு இதுக்கு தானேடா வருசக் கணக்கா காலம் கடத்தினேன். ஆம்பளைங்க புத்தி எனக்கு தெரியாதா? என்ன ஆட விடமாட்டாங்கன்னு தெரியுமே. அதனாலதானே கல்யாணம் கருமாதி வேணான்னு இருந்தேன். எதோ பிடிச்சிருக்கு நான் ஆடறத தடுக்கமாட்டாருன்னு தானே இந்த மனுசனை கட்டிகிட்டேன். இப்ப மாத்தி பேசினா என்ன அர்த்தம்.’ மீனாவிற்கு மூச்சிறைக்கிறது. கண்கள் கலங்குகின்றன. உதடு துடித்துக் கொண்டிருக்கிறது. மீண்டும் அழப்போகிறாளா?

‘எத்தனை கஷ்டப்பட்டிருப்பார் என் அப்பா. சிறு வயசில ஒத்தைக் காலை இழந்து நொண்டியா போயிட்ட என் அப்பாவ கூட இருந்தவங்க எத்தனை கேவலப் படுத்தி பேசியிருக்காங்க தெரியுமா? நொண்டிக்கு பிள்ளை நொண்டியா பொறக்கும்னு அப்பாவ நோகடிச்சாங்களாமே கேட்டிருக்கியா? அப்பாவுக்கு கால் மட்டுமில்லே மனசும் ஊனமாயிடுச்சி அவங்களால.

‘அந்த ஊனத்தை சரிசெய்யத்தானே என்ன நாட்டிய பள்ளிக்கு அனுப்பினாரு. நான் நொண்டியா இருக்கலாம் என் புள்ளை நல்லா நடப்பா, ஓடுவா, ஆடுவான்னு தான் என்னை நாட்டியம் கத்துக்க அனுப்பி வச்சார். அவருக்கும் சேத்துதான் நான் நடக்கிறேன். அவருக்கும் சேத்துதான் நான் ஆடறேன். எனக்காக இல்லே எனக்கு டான்சுன்னா உசிரும் இல்ல. எல்லாம் என் அப்பாவுக்காகத்தான் இதை விட மாட்டேன் சாகறவரையில விட மாட்டேன்னு சொல்லறேன்.’

‘இத்தனை நாள் இல்லாம இப்ப ஏன் இந்த பிரச்சினை?’

‘ஒரு வருசமாவே இருக்கு இது. கொழந்தை வேணுன்னு அவர் கேட்டப்ப இருந்து இருக்கு. போன வருசம் மூணுமாச கரு கலைஞ்சி போச்சி. நான் என்ன செய்யட்டும். டாக்டரம்மா வயித்தில கருவ வச்சிகிட்டு இப்படி ஆடினா கலைஞ்சிதான் போகும் படிச்ச உனக்கு அறிவில்லையானு கேட்டுட்டா. அதை புடிச்சிகிட்டார். நான் டான்ஸ் ஆடினா கொழந்தையே பொறக்காதுன்னு நம்ப ஆரம்பிச்சிட்டார்.

‘ரெண்டே வருசம் என்ன விட்டுட்டா போதும். என்கிட்ட நாட்டியம் கத்ததுக்கற புள்ளைங்களுக்கு அரங்கேற்றம் பண்ணி முடிச்சிடுவேன். எல்லாம் எட்டு பத்து வயசு புள்ளைங்க.என்ன நம்பி வந்த புள்ளைங்கள நட்டாத்துல விட முடியுமா? அதான் ரெண்டு வருசம் கேக்கறேன். அதுங்களுக்கு நல்லா சொல்லித்தந்து அரங்கேற்றம் முடிஞ்சர் இவர் சொல்லற மாதிரி நான் நடுத்தெருவில ஆடமாட்டேன். வீட்டோட ஆடிக்கறேன். ரெண்டு வருசம் பொறுக்கக்கூடாதா,’

‘கத்துக்க வர்ற புள்ளைங்களுக்காக உன் புருசனை நீ விட்டுடப் போறியா? ‘

‘போகட்டுமே. யார் வேணான்னா. நான் பொண்ணா பொறந்ததால இந்த கேவலமா எனக்கு. இவர் வேலை முடிஞ்சி வந்து மணிக்கணக்கா யோகா செய்யறாரே அதை விடச் சொல்லேன் பாப்போம் விட்டுடறாரான்னு. அது ஆன்மா சம்மந்தமானதாம். இவர் செய்யற மெடிடேசன் ஆன்மா சம்மந்தமானது என்னோடது அப்டியில்லையா?

‘தேவிடியா மாதிரி ஆடிட்டு இருக்கியேன்னு திட்டறார். செத்துடலான்னு தோணிச்சி எனக்கு. தேவடியான்னு புருசன் ஒருத்திய திட்டலாமாடா? ஒரு வாரம் பேசாம இருந்தேன். ரெண்டு நாள் சாப்பிடாம இருந்தேன். பிறகு சமாதானம் செய்யறார்.

‘அந்தக்காலத்தில தேவதாசிங்கதான் கோயில்ல பரதம் ஆடுவாங்களாம். அவங்கள தேவர்அடியாள்னு அப்ப சொல்லுவாங்களாம். இப்ப அது சுருங்கி தேவடியான்னு ஆயிடுச்சாம். என்ன பரதம் ஆடறதுனால தேவரடியாள்னு தான் சொன்னேன்னு மழுப்பறாரே இது அடுக்குமா?

‘நான் ஆடறதில அவருக்கு என்ன பிரச்சினை இருக்கு. என்ன கொறை வெச்சேன் இவருக்கு.? காலையில சுடுதண்ணி வெச்சி எழுப்பி விட்டு, குளிக்கும் போது பனியன் ஜட்டி எடுத்து கொடுத்து, டிபன் செஞ்சி காபி போட்டுக்கொடுத்து எல்லாம் தானே செய்யறேன். ஒரு வேளை சாப்பாடு கொறைஞ்சிருக்கா. ஒரு நாள் லேட்டா சமச்சி தந்திருக்கேனா. துணிய சரியா தொவைக்காம அழுக்கா தந்திருக்கேனா? நல்லா சலவை செஞ்சி மடிப்பு கலையாம தந்திருக்கேனே.

‘டெலிபோன், கரண்ட்பில் கட்டறது நான்தானே. உக்ஷுவுக்கு பாலிஸ் போட்டு குடுத்தது நான்தானே. கேக்கற நேரமெல்லாம் சாப்பிட பச்சைக்காய்கறிய துருவித் தந்திருக்கேனா இல்லையா? என்ன கொறை வெச்சேன் அவருக்கு நான். என் ஆட்டத்தால அவருக்கு என்ன நின்னு போயிருக்கு.

‘பொண்ணுகள ஆம்பளைங்களுக்கு அடிமைத் தொழில் செய்யவே ஆண்டவன் அனுப்பிட்டானா? அப்படி இல்லதானே. ஆனாலும் நான் செய்யறேனே. ஒரு நாளைக்கு இருபது மணிநேரம் அவருக்காக வேலை செய்யறேன். அவருக்காக சமைச்சி, அவருக்காக தொவைச்சி, அவருக்காக வீடு வாசல் பெருக்கி, மெழுகி கோலம் போட்டு, டிவி தொடைச்சி, டேபிள் சுத்தம் செஞ்சி, பூச்செடிக்கு தண்ணிவிட்டு மீன் தொட்டியில் தண்ணி மாத்தி எல்லாம் அவருக்காகத்தானே., எனக்காக நான் எதையுமே செஞ்சிக்ககூடாதா?

‘எனக்குன்னு ஒரு மணிநேரம் கூட ஆண்டவன் படைக்கலையா? எனக்குன்னு என் ஆசைக்குன்னு ஒரு மணி நேரத்தைக்கூட நான் எடுத்துக்க கூடாதா? மணிக்கணக்கா நான் தூங்கறேனா? வெட்டியா கதை பேசறேனா, அவர் மாதிரி வாpவிடாம பேப்பர் படிக்கறேனா? ஓய்வில்லாம அவருக்கு மனைவியாதானே நான் இருக்கேன். என்னை மனுசியா ஒரு மணிநேரம் விடக்கூடாதா?

‘பிள்ளைங்களுக்கு ஒரு மணிநேரம் டான்ஸ் கிளாஸ் எடுத்தா நான் தேவரடியாள் ஆயிடுவேனா? இருபத்தி மூணுமணிநேரம் புருசனுக்கும் ஒரு மணிநேரம் மனைவிக்கும் இருக்கிற நேரக்கணக்கில என்ன தப்பிருக்கு? எனக்குன்னு ஒரு கடிகாரமே இல்லையா இந்த உலகத்தில? எனக்குன்னு ஒரு நேரமே இல்லையா?

‘இன்னும் ஆறு மாசத்தில ரெண்டு பொண்ணுங்களுக்கு ஸ்கூல் ஆண்டுவிழாவுலஅரங்கேற்றம் இருக்கு. அதுங்ககிட்ட எடம் பாத்துக்கோ நான் சொல்லிதரமாட்டேன்னு சொன்னா வேதனைபடாதுங்களா. இப்ப என் வயித்தில மூணுமாச கருவ சுமந்திட்டு நின்னா அதை செய்ய முடியுமா என்னால. அறு மாசம் கழிச்சி என் வயிறு எத்தனை பெரிசு இருக்கும். சொல்லித்தர முடியுமா என்னால? அதனாலதான் வேண்டாம் டாக்டர்கிட்டே போலாம்னு சொன்னேன். அவர் வக்கில்கிட்ட போயிட்டார்.

‘போகட்டுமே. வேணான்டா. டைவர்சே ஆகட்டும். இனிமே பார் இருபத்திநாலு மணிநேரமும் என்னோடது. நானே எப்படி வேணுன்னா இருப்பேன். எனக்காக தூங்குவேன் எனக்காக எழுவேன். என் விருபத்துக்கு சமைப்பேன் என் விருப்பத்துக்கு இருபத்தி நாலு மணிநேரமும் ஆடுவேன். யார் கேப்பாங்க என்ன. அது எல்லாம் என் சொந்த நேரம்.

‘அபார்சன் பண்ணபோறியா? தப்பில்லையா? அதும் உசிர்தானே.’

‘இதுக்க முன்னாடி செஞ்ச நாலு அபார்சன் உயிர் இல்லையா? நீயும் பாதி ஆம்பளதான்டா? ஆம்பளைக்கு சாதகமா பேசுவே? போதுண்டா. இனி நான் யாருக்காகவும் வாழ மாட்டேன். என் கை இனிமேல் என் காலுக்கு சலங்கை மட்டும் தாண்டா கட்டும், எவனோட ஈர ஜட்டியையும் தொவைக்காது. எவனுக்காகவும் இந்த கை காய் நறுக்கிட்டு இருக்காது. என் கை சலங்கைதான் கட்டும். பித்தவெடிப்பு வர காலங்காத்தால எழுந்து வீதியில சாணிபோட்டு, கோலம் போட மாட்டேன். எந்த நாதேறிக்காகவும் நான் காப்பி போட மாட்டேன். எவனோ ராத்திரி பூரா படிச்சி லைட் எரியவிட்டு பாட்டு கேட்டதுக்கு என் கால் கரண்ட்பில் கட்ட கியூல நிக்காது. அது இனி ஆடிட்டுதான் இருக்கும். எவனாவது பிரியாணி கேக்கட்டும். அவன் யோகா செய்ய காய் நறுக்கி தந்தேனே. என்னைக்காவது நான் ஆட அவன் சப்ளா கட்டை தட்டியிருக்கானா? நான் ஆடறதுக்கு வீணை வாசிக்க சொல்லியிருக்கேனா அவனை. இனி நான் ஏன் காய் துருவித் தரணும். துரோகி துரோகி.,, ராஸ்கல். நான் பெத்து தர வக்கில்லாத மலடியாவே இருக்கேன். சோறு வடிக்கிற பாத்திரமா என் வயிறு. வேணுன்னும் போது சுடச்சுட சோறு செஞ்சிப்பிங்களா அதில. மனுசிடா நான் மனுசி. செத்தாலும் சாவேன். சலங்கைய மொத்தமா முழுங்கி வயிறு வீங்கி சாவனே; அவனுக்காக ஒரு நிமிசத்தை செலவு செய்ய மாட்டேன் இனி.

‘அப்படி பேசாத மீனா. பயமா இருக்கு. வேணுன்னா டீ போட்டு தரட்டுமா? குடிச்சிட்டு கொஞ்சம் தூங்கேன்.’

‘கோபத்தில பேசலடா. கோபத்தில பேசல.. நான் பேசல.. பேசவேயில்லடா மயிரானே. வேதனை தாங்கலடா அதனால பேசறேன்.’ தலையில் கைவைத்து நெற்றியை இறுக்கி அவள் தரையில் உட்கார்ந்தாள். ‘அப்பாவும் சொல்றாரு எல்லாம் சொல்லறாங்க. பொண்ணுக்கு புருசன் முக்கியமாம். வாழ்க்கைய தொலைச்சிட்டு அப்படி என்ன ஆட்டத்தில ஒரு சந்தோசம் வந்துட போதுன்னு கேக்கறாங்க. ஆட்டத்திலே இல்லாத சந்தோசம் அப்படி என்ன வாழ்க்கையில இருக்குனு நான் கேக்கறேன்.’

தண்ணீர் கேட்டு முழு செம்பையும் குடித்து வாய் துடைத்துக்கொண்ட மீனா தீர்மானித்தவள் மாதிரி தலையாட்டியது. ‘நான் வேற மாதிறியே வாழ்ந்துக்கறேன். எல்லாரையும் போல நான் வாழ மாட்டேன். இப்படித்தான் பொண்ணுங்க இருக்கணுன்னு எல்லாரும் சொல்லறாங்க. எல்லா பொண்ணுங்களும் அப்டித்தான் இருக்காங்க. கஷ்டத்த ஜிரணம் பண்ணிகிட்டு. நான் அப்படி இருக்க மாட்டேன். அவங்க சொல்லற திசையில நான் போக மாட்டேன். எல்லாருக்கும் எட்டு திசைதான் கிழக்கு மேற்குன்னு எனக்கு என்னோட வாழ்க்கை ஒன்பதாவது திசையா இருக்கட்டுமே. யாருக்குமே இல்லாத யாருக்குமே தெரியாத. புரியாத ஒரு திசை ஒன்பதாவதா ஒரு திசை அந்த திசையில நான் போறேன். அப்படி ஒரு வாழ்க்கை நான் வாழ்ந்துக்கிறேன்.’

வக்கிலுக்கும் வீட்டிற்குமாக பலநாள் நடந்தாயிற்று. மீனா புருசனோ விவாகரத்தில் மிக கவனமாக இருந்தான். மீனாவிற்கு அதில் உடன்பாடில்லை. ஒன்பதாம் திசை பற்றி சொன்னதே ஒழிய ஒத்தையில் தினத்திற்கும் அழுதபடிதான் இருந்தது. மீனாவின் அப்பா வந்து உடன் இருந்தார். ஊனமுற்ற மனிதன் அழுவதை பார்க்கப் பாவமாக இருக்கிறது.

மீனாவிற்கு புருசன் மேல் ஏகத்திற்கும் பாசம் வேர் விட்டிருக்கிறது. அவனை பிரிவதில் மீனாவிற்கு உடன்பாடில்லை. அதற்காக ஆடாமல் இருப்பதையும் தாங்க முடியவில்லை. வக்கில் தீர்மானமாக சொல்லிவிட்டார்.

‘உன் புருசன் குழந்தை பெத்துக்க தகுதியத்தவனு சொல்லிதான் டைவர்ஸ் கேக்கறாரு. அதை உடைக்கனுன்னா உன் வயித்திலே இருக்கிற கருவ நீ தக்க வச்சிக்கறது நல்லதா தெரியுது.’

புருசன் இல்லை என்றாலும் பரவாயில்லை நான் அபார்சன் செய்வேன் என்று கொஞ்சம் காலம் சொல்லிக் கொண்டிருந்த மீனா, இந்த பிள்ளையாவது பெத்துக்கறேன் என்று அபார்சனை சற்று தள்ளிப்போட்டது. பிள்ளை பெண்ணாக பிறக்க வேண்டும் அதற்கு உலகத்தில் உள்ள அத்தனை விதமான ஆட்டத்தையும் நான் சொல்லித் தந்து அவ அப்பனை தலை குனிய வைப்பேன். உலகத்திலேயே பெரிய நாட்டியக்காரியா அவ வருவா. என்று கொஞ்ச காலம் ஓட்டியது. வயிறு பருத்து ஆடத் தடையாய் இருந்து மயக்கம் வந்ததால் பெண் டாக்டாpடம் கருக்கலைக்கச் சொல்லப் போய் கெட்ட வார்த்தையில் திட்டு வாங்கிக்கொண்டு வந்தது. இனி அதை கலைச்சா நீ செத்து போயிடுவே என்று பெண் மருத்துவர் சொல்லி மிரட்டியதும் அபார்சன் நின்று போனது.

ஆறுமாதமாக புருசன் வருவதில்லை. மீனா பிள்ளைகளுக்கு டான்ஸ் சொல்லித் தருவதைத் தவிர வேறெhன்றும் செய்வதில்லை. அவளுக்காக ஒதுக்கப்பட்ட இருபத்தி நாலு மணி நேரத்தையும் நாட்டியம் சொல்லித் தர செலவிட்டாள்.

ஆறாம் மாதம் பிள்ளைகளுக்கு அரங்கேற்றம். நிறைமாத வயிற்றை வைத்துக்கொண்டு என்ன எசகுபிசகாய் ஆடியதோ. கீழே விழுந்து பிரசவ வலியில் வேதனை கொண்டு கதறியிருக்கிறது. எனக்கு மீனா அப்பா தகவல் சொல்ல நான் வண்டி வைத்து மருத்துவமனைக்கு தூக்கி ஓடினேன்.

மருத்துவ மனையில் உள்ள பெண் டாக்டர் உதட்டை பிதுக்கினார். ‘கொஞ்சம் சிக்கலாயிடுச்சி. உயிர் பிழைத்தால் ஆண்டவன் செயல்’ என்கிறார்.

எனக்கு பயமானது. எப்படியாவது குழந்தைய காப்பாத்துங்க டாக்டர் என்றேன். டாக்டர் ‘அம்மா பொழைக்கிறதே கஷ்டம்னு சொல்லறேன் நீ புள்ளைய காப்பாத்துன்னு சொல்லறியே.’ என்று எகிறினாள்.

மீனாவுக்கே ஆபத்தா? வேண்டாம் மீனா. சாகாதே.. டாக்டரை பார்த்தேன். நொண்டி அப்பா வெளியே பென்ச்சில் உட்கர்ந்து அழுது கொண்டிருக்கிறார். புருசன் வரவேயில்லை. தகவல் நிச்சயம் தெரிந்திருக்கும். டாக்டர் நம்பிக்கையாக ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.

‘என்ன பொண்ணுங்க இது. இத்தனை பெரிய வயித்தை வச்சிகிட்டு தொம் தொம்னு குதிச்சா, கொழந்தை தாங்குமா? வயித்துக்கு குறுக்கே சிக்கியிருக்கு ஆப்ரேசன் பண்ணனும் உடம்பு வேற வீக்கா இருக்கு. சரியா சாப்பிடலையா. ஊட்டமே இல்லாம இருக்காங்களே.’

மீனா நன்றாக சாப்பிட்டு நாள் பல ஆகிறது. அவள் புருசன் தாடி வைத்திருக்கிறான். இவளுக்கு தாடி வரவில்லை. பார்க்கிறவர்கள் அவனைத்தான் பரிதாபமாக பார்த்தார்கள். தண்ணி அடித்துவிட்டு தடுமாறி நடக்கிறானாம்.

‘நான் கேரண்டி தரமாட்டேன். கேஸ் கொஞ்சம் காம்ளிகேட்டானது.’ டாக்டரம்மா செருமியபடி பேச நான் ‘சொல்லுங்க.’ என்றேன்.

‘நீங்க என்ன வேணும்’ என்றாள் டாக்டர்.

‘ஒண்ணும் வேணாம்.’

‘ஒண்ணும் வேணாமா? நீங்க அவங்களோட புருசனா.?’

‘இல்லே’

‘அதானே பாத்தேன். சிறு வயசா இருக்கிங்களே வயசு வித்தியாசமா தெரியுதேன்னு பாத்தேன். அவங்களோட புருசன் எங்கே. நீங்க அவங்க தம்பியா?

‘இல்லே.’

‘அதானே பாத்தேன். முக சாயல் ஒத்து போகலையே. பின்ன என்ன ஒண்ணுவிட்ட தம்பியா?’

‘இல்லே.’

‘பின்ன தம்பி மாதிரியா.?’

‘இல்லே.’

‘அதுவுமில்லையா? சரி எதுவானா இருந்துட்டு போ. இப்ப ஒரு பத்தாயிரம் அவசரமா வேணும். பனிக்கொடம் ஒடைஞ்சிருக்கு. அவசரமா ஆப்ரேசன் செஞ்சா பெரிய உயிரையாவது காப்பத்தலாம்.

மீனா படுக்கையில் துவண்டு மயங்கிக் கிடந்தது. வேணாம் மீனா எழுந்துக்கோ. செத்துப்போகாத. எதுத்து வாழணுன்னு ஆசைப்பட்டியே செத்தா தோத்துப் போயிடுவே. நீ ஜெயிக்கணும் எழுந்துக்கோ.

வண்டியை வந்த விலைக்கு விற்று பத்தாயிரம் பணம் புரட்டி வந்து கொடுத்தேன். அப்பாவிற்கு சொல்ல ஒரு பொய் தயார் செய்யவேண்டும். மீனா அப்பா கண்ணீரைத் தவிர மீனாவிற்கு தர எதுவும் இல்லாமல் இருந்தார்.

நர்ஸ்கள் உள்ளே பலமுறை போய் வந்தார்கள். டாக்டர் இருமுறை போய் வந்தார். இரண்டாம் முறை சிரித்தபடி வந்தார். அப்பாடி. மீனா பொழைச்சிட்டாங்க.. நன்றி கடவுளே. நன்றி டாக்டர். பத்தாயிரம் புடுங்கினாலும் நீங்க இனி எனக்கு மீனா காத்த மாரியம்மா.

உள்ளே சென்று பார்த்தேன். மூக்கில் ஆக்சிசன் ஏறிக்கொண்டிருக்க பக்கத்தில் பீப் ஒலியுடன் ஏற்ற இறக்கமாய் இருதய ஓட்டத்தை அளந்தபடி பச்சைமானிட்டர் பெட்டி இருந்தது. புரிகிறது மீனா இந்த பீப் உன்னை தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து கிளம்பும் ஒலி உன்னை தட்டி எழுப்பும். உனக்குள் இருக்கும் ஒவ்வொரு அணுவையும் ஆட்டி ஆட வைக்கும் இந்த பச்சை பெட்டியின் ஓசை. அது உன்னை பிழைக்க வைக்கும். ஓசையிலிருந்து நாட்டியம் கிளம்புகிறது. நாட்டியத்திலிருந்து நீ கிழம்பி வருவாய். நீ சொன்ன அந்த ஒன்பதாம் திசையில் நீ பயணப்பட்டு ஜெயிப்பாய். மனுசிகளாய் மனைவியை மதிக்காத புருசன்களுக்கான பாடம் உன் சலங்கையில் இருக்கிறது எழு மீனா எழு.

மீனாவின் இமைகளுக்குள் கண்மணிகள் மெல்ல உருள ஆரம்பிக்கிறது. அவள் சுண்டுவிரல் கால் கட்டைவிரல் அசைகிறது. அந்த அறையில் கிளம்பிய ஒவ்வொரு பீப் ஒலிக்கும் அவள் உடல் அசையத் தொடங்கியது. ஆடப் பிறந்தவள். இனி சாக மாட்டாள்.

நர்ஸ் கத்தக் கத்த மீனாவின் கட்டிலுக்கு பக்கமாக இருந்த தொட்டிலில் ஒரு குழந்தையை கொண்டு வந்து போட்டு விட்டு போனாள். ‘மூணு கிலோ இருக்கு’ என்று என்னை பார்த்து சிரித்தபடி சொன்னாள். இது மீனாவின் பிள்ளையா? சாகவில்லையா இது. சொர்கம் எத்தனை கிலோ இருந்தால் என்ன. சொர்கம் சொர்கம்தானே. எதற்கு சிரிக்கிறாய் நர்ஸ் காசு கேட்கவா? நூறு ரூபாயை அவளிடம் தந்தேன். அவள் கை சில்லென்று இருக்கிறது. அழகாய் இருக்கிறாள். மரத்தடியில் வைத்து சிலநிமிடம் பேசினால் எத்தனை சந்தோசமாக இருக்கும். அழகான நர்ஸ். இவளை பார்ப்பதற்காகவே நோயாளியாகலாம்.

‘உங்க சாயலாதான் இருக்கு குழந்தை’ என்று நூறு ரூபாய்க்கு கைமாறாக சொல்லிவிட்டு போனாள். ஏய் கூறு கெட்ட நர்சே. காசுக்கு உளராதே. குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லையா? பனிக்குடம் உடைந்தும் பிழைத்துக் கொண்டதா? காலை உதைத்துக் கொண்டு ஊர் கேட்க அழுதது. அப்பொழுதுதான் கவனித்தேன். அதன் ஒரு கால்பாதம் திரும்பி இருக்கிறது.

‘டாக்டர் என்ன இது. கால் ஏன் இப்படி இருக்கு.?’

‘கரு வளர்ச்சியில எதோ தப்பு நடந்திருக்கு. வயித்திலயே ஏதோ நடந்திருக்கு. தப்பா மாத்திரை சாப்பிட்டிருக்கலாம். முன்னமே நாலு அபார்சன் பண்ணாங்கன்னு சொன்னயே அதனால இருக்கலாம். கருவை கலைக்க முயற்சி பண்ணியிருக்கலாம். எதோ ஒரு காரணத்தால அந்த கரு பாதிப்படைஞ்சிருக்கு. அதனால கால் திரும்பியிருக்கு’

பாரேன் மீனா. நீ கருவை கலைக்க மூன்று மாதத்தில் சாப்பிட்ட மாத்திரைகள் செய்ததை பாரேன். கரு அதையும் தாண்டி இருக்கிறதே என்று சந்தோசப்பட்டாய். எப்படி பிறந்திருக்கிறது பார். நொண்டிக்கு மகளாக பிறந்து நீ ஊர் அதிசயிக்க ஆடினாய். உன் மகள் பார் ஊனமாய் பிறந்திருக்கிறாள். என்ன செய்யப் போகிறாய்.

மீனா புருசன் வந்தான். மானங்கெட்டவன். ஆனால் கூச்சப்படாமல் மனைவியின் தலைமாட்டில் அமர்ந்து தலை கோதுகிறானே. இத்தனை நாள் எங்கே போனது இந்த பாசம்.

கூச்சப்படாமல் குழந்தை எடுத்து கொஞ்சுகிறானே. எத்தனை சந்தோசம் அவன் முகத்தில். நிஜமாகவே குழந்தைக்காக ஏங்கிக் கிடந்திருக்கிறான். கால் பார்த்து பதறிப் போனான். பதற்றத்தில் தாடியோடு அவன் முகம் விகாரமாய் இருந்தது. டாக்டாpடம் கேட்டான். சொன்னதைக்கேட்டு கன்னத்தில் கைவைத்து உட்டார்ந்திருந்தான். மீண்டும் குழந்தை எடுத்து கொஞ்ச ஆரம்பித்தான். அத்தைனை உசிரா குழந்தை என்றால் அவனுக்கு. மனைவியின் தலைதடவினான். இனி விவாகரத்திற்கு போகமாட்டான் போல் இருக்கிறது.

காலம் வேகமாக உருண்டோடி அந்த குழந்தை முகம் பார்த்து சிரித்து ஆள்பார்த்து தவழ்ந்து வந்து மேலே மூத்திரம் உட்காரத் தெரியும் வயது வளர்ந்தபின் மீனாவிடம் கேட்டேன். ‘மீனா நீ ஆட்டக்காரி.. உன் பிள்ளை நொண்டிக்காரியா? இந்த காலை வச்சிகிட்டு என்ன ஆட்டத்தை சொல்லித் தரப்போறே அதுக்கு. உலகத்திலயே பெரிய ஆட்டம் ஆடறமாதிரி.’

மீனா இடுப்பில் இரு கை வைத்து மார் நிமிர்த்தி முறைத்து பின் சிரித்தாள். ‘போடா நாயே. அவ ஆடலனா என்னடா பாடுவாடா பாடுவா. அவ பாடுவா நான் ஆடுவேன்டா.’

‘அப்படியா? அப்ப உன் பொரமடாஸ் கோமாளி என்ன செய்வார். கழுத்திலே கயிறு கட்டி மேளம் அடிப்பாரா.?’

‘ஆமாண்டா. ஆமாம்.’ மீனா சொல்லும் போது பிள்ளையை கையில் வைத்தபடி அந்த பொரமடாஸ் கோமாளி சிரிக்கிறான். தாடியோடு சேர்த்து இப்பொழுது மீசையும் எடுத்துவிட்ட வெக்கங்கெட்டவன். தினத்திற்கும் சாயிந்திரத்தில் யோகா மட்டுமல்லாமல் அந்த பொரமடாஸ் கோமாளியின் மனைவி ஆட்டம் வேறு அந்த வீட்டில் நடக்கிறது. ஒரு டம்ளர் காப்பிப்பொடி கடன் கேட்டு வருகிறவர்கள் இதை பார்க்கலாம்.

வருங்காலத்தில் அந்த பிள்ளை பாடும், மீனா ஆடும் கோமாளி மேளம் அடிப்பான் நல்ல கலைக்குடும்பம். மீனாவின் ஒன்பதாம் திசையைப்பற்றி நான் கேட்கவேயில்லை. குழந்தை பிறந்து வயிறு பருத்துவிட்டதால் அடுத்தவர் முன் ஆட சங்கடமாக இருப்பதாக மீனா சொன்னாலும் காரணம் எனக்கு தெரியாதா?

‘பெண்கள் பருவமடையும் முன்வரை ஆடுவதைத்தான்; வீட்டில் ரசிக்கிறார்கள் சமைந்த பெண் ஆடினால் சந்தி சிரிக்கிறதே. அந்த சந்தியில் உள்ள ஒவ்வொருவரும் குடும்பத்தில் உள்ளவர்கள் தானே. குடும்பத்தில் உங்கள் பெண் ஆடுவதை பார்த்து நீங்கள் ஏன் சிரிக்க வேண்டும். கேள்வி யாரிடம் கேட்டாலும் அது நானில்லை என்று போய்விடுவார்கள். நீயும் அப்படித்தானேடா.?’ என்று மீனா ஒரு நாள் கேட்டு ‘எப்படித்தான்.?’ என்றதற்கு ஒன்றுமில்லை என்று நிறுத்திக்கொண்டதே. நான் அப்படியில்லை என்று மீனாவிடம் எப்படி சொல்ல.

மீனா குடும்ப ஆட்டத்தில் நான் போனால் கண்டுகொள்ள மாட்டேனென்கிறார்கள். டீ போட்டு தரமாட்டேன் என்கிறார்கள் இவர்கள் ஆட்ட மும்முரத்தில். பேச்சலர் டீ போட்டு நானே குடிக்கிறேன். மீனாவிற்கும் கொடுக்கிறேன். பேச்சலர் டீ இன்னும் கொஞ்சம் நாளைக்குத்தான். அம்மாவிடம் சொல்லிவிட்டேன். அப்பா காதல் கத்திரிக்காய் வேண்டாம் என்று சொன்னார். அப்பா பிள்ளை உறவு எதற்கு என்று நான் கேட்டதும் கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறார். வேலையை நானே தானே தேடிக்கொண்டேன். பெண்ணைமட்டும் இவர் தேடித்தருவாரா? இந்த மீனாவிடம் ஆட்டம் கற்று ஆடிய ஆட்டக்காரியைத்தான் நான்.. ஆமாங்க. எனக்கு வெக்கமா இருக்குங்க.. ஆமாங்க ஆமா எனக்கு கல்யாணம். ஆமாம் ஒரு ஆட்டக்காரியோடதான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *