தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 7,075 
 

ஒரு அரைநாள் லீவு போட்டுட்டுதான் வாங்களேன். நம்ப பையன் பைனல் ரவுண்ட் டாப் போர்ட்ல ஆடறான். ஜெயிச்சா டைட்டில் வாங்கிடுவான். டூ தௌஸண்ட்க்கு மேல ரேட்டிங் வைச்சிருக்கிற உங்க வயசுள்ள ஒரு பிளேயர்தான் அவனுக்கு ஆப்போனண்டாம். குழந்தை கொஞ்சம் பதட்டமா இருக்கான். நீங்க வந்தீங்கன்னா நல்லா இருக்கும்”.

செல்பேசியில் என் மனைவி சின்ன குழந்தையைப் போல அளவில்லா குதூகலத்துடனும் ஒரு தாய்க்கு அடையாளமாய் இருக்க வேண்டிய நியாயமான கவலையோடும் அழைப்பு விடுத்தாள்.

சதுரங்கம்எங்கள் பிள்ளைக்கு பத்து வயசுதான் ஆகிறது. முதல்முறையாக சதுரங்கப் போட்டியில் ஆடுகிறான். அவனுக்கு பயம் போகட்டும் என்றெண்ணி பதினேழு வயதுக்கு மேற்பட்டவர்கள் விளையாடும் ஓப்பன் கேட்டகிரி பிரிவில் விளையாடச் சொன்னேன். முதலில் பயந்த அவன், இதோ எட்டு சுற்றுகளில் வெற்றிபெற்று கடைசிச் சுற்றில் நிற்கிறான். பதட்டமும் ஆர்வமும் மனைவியைப் போலவே என்னையும் தொற்றிக்கொண்டது.

இரண்டு நாட்களுக்கு முன்புவரை சதுரங்க விளையாட்டைப் பற்றி ஆத்திச்சூடியும் தெரிந்து கொள்ள விரும்பாத அப்பாவியாக வீட்டு வேலைகளும் சீரியல்களுமாக வாழ்ந்து கொண்டிருந்தவள் என் மனைவி. இன்று டாப்போர்டு, டைட்டில், ரேட்டிங் என்றெல்லாம் சரளமாக சதுரங்க வீராங்கனை போல பேசுமளவுக்கு மாறியிருப்பது ஆச்சரியமாக இருந்தது. கடந்த இரண்டு நாட்களில் ஏதோ ஒரு விட்டமின் ஏதோ ஒரு கணத்தில் சதுரங்கத்தின் மீதான உந்துதலைப் பெற அவளுக்கு உதவியிருக்கிறது. பத்தாம் வகுப்பு வரை படித்த அவளுக்குள் இந்த மறுமலர்ச்சி திடீரென நிகழ்ந்திருந்தாலும் அது எனக்குச் சந்தோஷத்தை தருவதாகத்தான் இருந்தது. மனைவியின் இம்மாற்றம் என் மகனுடைய சதுரங்க வாழ்விற்கு பெரிதும் உதவிகரமாக இருந்து வழிநடத்துமென்பதில் எனக்கு ஓர் அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது.

இரண்டு நாட்களாக அவள்தான் போட்டி நடக்கும் கல்லூரிக்கு மகனை அழைத்துக்கொண்டு வருவதும் போவதுமாக இருக்கிறாள். நாங்கள் வசிக்கும் வீடு இருக்கும் தெருவைக் கடந்து பொடி நடையாய் மெயின்ரோடுக்கு வந்தால் அடுத்த மூன்றாவது நிறுத்தத்தில் போட்டி நடக்கும் கல்லூரி இருக்கிறது. அருகில் உள்ள இடங்களுக்குப் பயணம்போக பேருந்து ஏறி இறங்குவதை அவள் எப்போதும் பெரிய சிரமமாக எடுத்துக் கொள்வதில்லை. இந்த அருகாமைதான் எனக்குச் சற்று விடுதலையையும் மனைவிக்கு சதுரங்கத்தின் மீதான ஈடுபாடு அரும்புவதற்கும் வழி வகுத்திருக்கலாம் என நினைக்கிறேன்.

சென்ற ஆண்டின் பிறந்த நாள் பரிசுப் பொருளாகத்தான் செஸ் போர்டு என் மகனுக்கு அறிமுகமாகியிருந்தது. கல்லூரி காலங்களில் நான் ஒரு சதுரங்க ஆட்டக்காரன்தான் என்றாலும் ஆர்வமுடன் அவனாகக் கேட்கும்வரை சதுரங்க விளையாட்டுப் பற்றிய பேச்சையே எடுக்கக் கூடாது என்பதில் நான் பிடிவாதமாகவே இருந்தேன்.

“”இதை எப்படி ஆடுவது?” என்று யதார்த்தமாக ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அவன் என்னிடம் கேட்டபிறகுதான் நான் என்னுடைய சொல்லா விரதத்தைக் கலைத்தேன். அன்றிலிருந்து ஏணி மேல் ஏறுவது போல படிப்படியாக சதுரங்க விளையாட்டின் விதிமுறைகளையும் எனக்குத்தெரிந்த ஆட்ட நுணுக்கங்களையும் சொல்லத் தொடங்கினேன். அவ்வப்போது அவனுக்கே தெரியாமல் மறைமுகமாகச் சொல்லிக் கொடுக்கவும் ஆரம்பித்தேன். வலுக்கட்டாயமாக எதையும் அவன்மீது திணிக்க முற்படவில்லை. ஆனால் சதுரங்க தாகத்தை உண்டாக்கும் சில புத்தகங்களை வாங்கி அவன் கண்களில் படும்படி நான் படிக்க ஆரம்பித்து தாகம் தணிந்தேன்.

ஆட்டத்தை அவன் வேகமாக கற்றுக்கொண்ட முறை, சதுரங்க காய்களை நகர்த்துவதில் அவனுக்கிருந்த வித்தியாசமான சிந்தனை என்னை ஆச்சரியமூட்டியது. ஓர் எதிராளியாக விளையாடும் நேரங்களில் பலமுறை திகைத்திருக்கிறேன். சதுரங்க ரேகையில் அவனுடைய எதிர்காலம் நீண்டு பயணிக்க இருக்கிறது என்பதை சந்தேகமின்றி உணர்ந்தேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனை என்னோடு சதுரங்கம் விளையாட வரச்சொல்லி அன்போடு அழைத்தேன்.

வெற்றியை அவனுக்கு விட்டுக்கொடுத்து ஆர்வமூட்ட வேண்டுமென்ற அபிப்பிராயம் எனக்கு என்றுமே வந்ததில்லை. ஒன்றன் பின் ஒன்றான ஒவ்வொரு தோல்விக்குப் பின்னரும் அவனது ஆட்டத்திறன் மேம்பட்டு வளர்ந்த வண்ணமிருந்ததை என்னால் உணரமுடிந்தது.

இப்படியான சூழ்நிலையில்தான் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி பற்றிய அறிவிப்பு நாளிதழ்களில் வெளியாகி நகரத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளின் தகவல் பலகைகளில் இடம் பிடித்தது. போட்டி உள்ளூரில் நடைபெறுவதால் பள்ளிக்கூடங்களும் தங்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தி விடுமுறை அளித்தன. இந்த மழைத்தூறல்தான் நான் புதைத்து வைத்திருந்த சதுரங்க விதையை கொஞ்சமாக முளைக்கச் செய்தது.

“”டாடி நான் கலந்துக்கவா?” மகன் ஆர்வமுடன் கேட்டபொழுது, புறக்கணிப்புகளால் துவண்டு போயிருந்த என் கலைத்திட்டத்தில் ஒரு புதிய பாதை தென்பட்டது. கரும்பலகையில் கற்பித்தலை விட செயல்வழிக் கற்றல் அதிகப் பலன் தரவல்லது என்ற நிருபிக்கப்பட்ட உண்மை மின்னலாக அப்பாதையை ஒளியூட்டியது.

“”என்னால மூன்று நாளெல்லாம் லீவு போடமுடியாது. உங்கம்மா கூட்டிட்டுப் போனாங்கனா போய் விளையாடுப்பா” என்று சொல்லி மனைவியின் முகம்பார்த்து விண்ணப்பித்தேன்.

“”ப்ளீஸ் அம்மா” ஒரு கோரிக்கையைப்போல கெஞ்சிய என் மகனின் அழைப்பை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு மகனை உச்சி முகர்ந்தாள் மனைவி. நான் அங்கு ஓர் அன்னியனாக நின்று வேடிக்கை பார்த்தேன்.

அதன் விளைவுதான் “”லீவு போட்டுட்டு வாங்களேன்” என்ற மனைவியின் சற்று முன்னதான அழைப்பு. செவியில் விழுந்த அவளுடைய வார்த்தைகள் நெஞ்சினடியில் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருந்தன. அந்த நெகிழ்ச்சியான குரல் எனக்குள் அரும்பாகி, மொட்டாகி, மலர முற்பட்டது. மகரந்தக் கனவுகளை மனதில் சுமந்தபடி அவசியமான அலுவலக வேலைகளை அரை மணி நேரத்தில் பரபரப்பும் சுறுசுறுப்புமாய் செய்து முடித்தேன். அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு விளையாடுமிடம் வந்து சேர்ந்தேன்.

போட்டி நடைபெறும் கல்லூரியின் விளையாட்டு மைதானம் கொத்துக் கொத்தாக பெற்றவர்களால் நிரம்பியிருந்தது. அங்கிருந்த ஆலமரத்தைச் சுற்றிலும் பூத்துக் குலுங்கிய பிள்ளைகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். விரிந்து பரவியிருந்த ஆலமர நிழலில் வாகனத்தை நிறுத்திய போது அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சின் மேல் உட்கார்ந்திருந்த அவன் பிரத்தியேகமான முன்னுரை ஏதுமில்லாமல், “”நீங்க மனோ தானே?” என்றான் என்னைப் பார்த்து. என்முகத்தில் அவன் எதையோ அலசி பெயரைக் கண்டுபிடித்திருக்க வேண்டும். அவன் குரலைக் கேட்டதும் என் கண்களிலும் ஒரு கணம் வெளிச்சம் பரவி அடங்கியது.

“”ஏய்.. சங்கர்” என்றேன் உற்சாகமாய். என்னோடு பல போட்டிகளில் சதுரங்கம் ஆடி வெற்றிவாகை சூடியவன் சங்கர். நாங்கள் இருவரும் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் சதுரங்கக் கடலின் அலைகளாக ஓயாமல் அடித்துக் கொண்டிருந்தோம்.

செலவழிக்கும் வாய்ப்பும் வசதியும் இல்லாததால் சுய திருப்திக்காக விளையாடி, படிப்பு முடிந்ததும் விளையாடுவதை நிறுத்தி நான் திருப்திப் பட்டுக்கொண்டேன். சங்கர் வகுப்புகளைக் கூட கட் அடித்துவிட்டு சதுரங்கம் ஆட போய்விடுவான். புகழுக்காக விளையாடியவன் என்பதால் அவன் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். சமீபத்தில் கூட அவனைப் பற்றி விதம்விதமான தலைப்புகளில் விதம்விதமான் பாராட்டு மழைகளை நான் செய்தித்தாள்களில் படித்தது என் நினைவிற்கு வந்தது.

சங்கரிடம் மேற்கொண்டு என்ன பேசுவது எப்படி பேச்சைத் தொடங்குவது என்ற யோசனையில் “”எங்கடா… இங்கே?” என்று குரலை இழுத்தேன்.

“”நானும் இந்த டோர்னமெண்ட்ல ஆடுகிறேன்டா தெரியாதா?” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்.

“”நீயா இந்தச் சின்ன டோர்னமெண்டிலா” ஏற்றமும் இறக்கமுமான குரலில் நான் அவனைப் பார்த்து வியந்தேன். இல்லை இல்லை பயந்தேன்.

“”ஆமாம் கடைசி வரைக்கும் நீ என்னை ஜெயிக்கவே முடியல இல்ல” என்று கடந்தகாலத்தை நினைவூட்டினான் இகழ்ச்சியான குரலில்.

நான் மௌனமாக நின்றேன். தோற்ற பொழுதிலெல்லாம் தோன்றாத கோபமும் அவமானமும் தோன்றி என்னை சங்கடப்படுத்தியது.

“”ஆமாம், நீ ஏன் தொடர்ந்து விளையாடல?” சிறிது இடைவெளிக்குப் பின் மீண்டுமொருமுறை கேட்டு என்னை இடிந்துபோக வைத்தான். நெருப்பில் விறகாக எரிந்து கொண்டிருக்கும் என்னை பளபளக்கும் கண்களோடு பார்த்தான். சாயம் போன ஜீன்ûஸ கைகளால் தேய்த்துக் கொண்டே கலைந்த முடியுடன் கர்வமாகவும் சிரித்தான்.

“”இல்லை நான் விளையாடல. என் பிள்ளைதான் இங்கு விளையாடுகிறான். இது அவனுக்கு முதல் டோர்னமெண்ட்”

உள்ளம் பரபரக்க கூச்சத்துடன் அவன் கேட்காத கேள்விக்கெல்லாம் உளறிக் கொட்டி என் உதடுகளை கடித்துக் கொண்டேன். அவன் சிரித்துக் கொண்டே உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து குதித்து எழுந்து புறப்படுவது போல நின்றான்.

“”ஓகே அடுத்த ரவுண்டுக்கு டைம் ஆச்சு. கிளம்புறேன். யாரோ ஒரு சின்னப் பையன்தானாம், ரொம்ப நாளைக்கப்புறம் டைட்டில் அடிக்கப் போறேன். வரட்டுமா?” என்று அலட்சியமாக சொல்லிவிட்டு நடந்துபோனான்.

கடைசிச்சுற்றில் என் மகனுடன் ஆடப்போவது இவனாக இருக்குமோ என்ற ஐயம் எனக்குள் மின்னலாகப் பளிச்சிட்டு பின்னர் இடியாக உறுதியானது. ஆயிரம் கிளைகளை விரித்து ஆலமரம் வெய்யிலை எதிர்த்துக் கொண்டிருந்தாலும் மனசு தடுமாறியதால் சற்று அதிகமாகவே எனக்கு வியர்த்தது.

முகத்தில் அரும்பியிருந்த வியர்வை முத்துக்களை கைக்குட்டையால் ஒத்திக்கொண்டு அவன் போவதையே பெருமூச்சுடன் சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்றேன்.

“”என்னங்க வந்து இங்கயே நின்னுட்டீங்க, உள்ளார கொஞ்சம் நீங்க வரக்கூடாதா? நம்ப பையன் முதல் போர்டுல உட்கார்ந்திருக்கான் தெரியுமா?” என அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டுக்கொண்டே வந்த மனைவியின் குரல் என்னை மீண்டும் ஆலமரத்தடிக்கு விரல் பிடித்து இழுத்து வந்தது.

“”அதோ போகிராறே அவர்தான் நம்ப பையனோடு ஆடப்போகிறவர் தெரியுமா?” அவன் முதுகைக்காட்டி இவளுக்கு அறிமுகப்படுத்தினேன்.

“”அவரா? அவரை உங்களுக்குத் தெரியுமா? அவர் நல்லா விளையாடுவாரா? அவரையா நம்பபையன் ஜெயிக்கப்போறான்?” மீண்டும் மீண்டும் அவன் முதுகையும் என் முகத்தையும் பார்த்துப் பார்த்து கேள்விகளை அடுக்கினாள் என் மனைவி.

அவள் நம்பிக்கையை கண்டு வியந்த நான் அவளுக்கு என்ன சொல்வது எனத் தெரியாமல் மரமாக நின்றேன்.

“”கேக்கறேன் இல்ல சொல்லுங்க” கண்களில் கெஞ்சல் தெரிந்து, ஒரு கணம் செடியாகவும் மறுகணம் பூவாகவும் தோற்றமளித்தது அவளுடைய முகம்.

“”அவன் ஒரு புரொபஷனல் செஸ் பிளேயர். சொல், செயல், எண்ணம் எல்லாமே அவனுக்கு செஸ்தான். நானே பலமுறை அவங்கிட்ட தோற்றிருக்கிறேன்” என்றேன் அமைதியாக.

ஏறத்தாழ அரை மணி நேரம் முக்கால் மணி நேரமாக என் மனைவி சின்னச் சின்ன கேள்விகளைத் தூண்டிலாக்கி எனக்குள்ளிருந்து சதுரங்கம் பற்றிய விவரங்களைத் தேடித் துருவி சேகரித்துக் கொண்டாள். படிப்படியாகத் தினமும் தன் மகனுக்கு சதுரங்கம் சொல்லிக்கொடுக்க யாரையாவது நியமிக்கலாமா? என்று கேட்டாள். “”இந்தப்பையன் இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணி கத்துக்கிட்டிருந்தா நல்லா இருந்திருக்குமில்ல” என்று ஆதங்கப்பட்டு உருகினாள். முடிவு எப்படி இருந்தாலும் அவனைப் பாராட்டணும் என்று யோசனை சொன்னாள்.

“”கவலைப்படாதேடி. இவ்ளோ நாள் விதைச்சதுக்கு தேவையான அறுவடை நமக்கு எட்டு ரவுண்டுல கிடைச்சுருக்கு. இதுவே பெரிய விஷயம்.. போகப் போக பிக்கப் பண்ணிக்குவான் பாரு” என்று மனைவியை மனதளவில் ஆறுதல் படுத்தினேன்.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே ஆலமரத்தினடியில் சிறுவர்களின் சந்தடி அதிகரிக்கத் தொடங்கியது. விரைவாக ஆட்டம் முடிந்த அவர்கள் கிரிக்கெட் மட்டையோடும் ஸ்டம்புகளோடும் குழுக்களாக ஓடி வந்து கொண்டிருந்தனர்.

“” ஆன்டி உங்க பையன் ரூக் அப்புல இருக்கான். கண்டிப்பா அவந்தான் ஜெயிக்கப்போறான்” என்று அறிவித்தபடி தன் ஓட்டத்தைத் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தான் வந்த சிறுவர்களில் ஒருவன்.

சிறுவனின் குரல் சொன்ன செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. எப்படி இது நடந்தது? என் மகன் ஜெயிக்கப் போகிறானா? தான் டைட்டில் அடிக்கப்போவதாக சங்கர் சொல்லிட்டுப் போய் முக்கால் மணி நேரத்துல இப்படி ஒரு மகத்தான திருப்பமா? சங்கர் விட்டுப்பிடிப்பதில் மன்னனாச்சே? நிச்சயமா வெற்றி வாசல் தேடி வருமா? சந்தேகம் தீராமல் நான் மனைவியின் கைகளைப் பிடித்துக் கொண்டு செய்வது புரியாமல் நின்றுகொண்டிருந்தேன்.

“”என்னங்க ஒண்ணுமே சொல்லாம நிக்கறீங்க? ரூக் அப்புன்னா என்னங்க? சொல்லுங்க ப்ளீஸ்” என்று ஆர்வத்தோடும் குழப்பத்தோடும் கேட்டுக்கொண்டிருந்தாள் மனைவி.

மனைவியின் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், “” டாடீ..ஈ….வின் பண்ணிட்டேன். டைட்டில் எனக்குத்தான்” என்மகன் உரத்தக் குரலுடன் வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தபடி குரோட்டன்ஸ் செடிகளைத் தாண்டி ஓடிவந்து கொண்டிருந்தான். முடிவற்ற ஒரு பெருங்கனவு முடிவுக்கு வந்ததைப் போல் ஓர் ஆனந்தம் பெருகி என் முகத்திற்கும் பிரகாசம் கிடைத்து ஜொலித்தது. என் கனவுகளை வென்று ஓடி வந்த மகனைத் தூக்கி நெஞ்சில் அணைத்துக்கொண்டேன். நன்றியில் என் கண்கள் கலங்கின.

“”அவ்வளவு தான்டா செல்லம்… இது போதும்டா. நீ ஜெயிச்சதுக்கு சங்கர் அங்கிள் என்னடா சொன்னாங்க?” என்றேன் மகனிடம்.

“”கை குலுக்கி வாழ்த்துச் சொன்னார். உங்க அப்பா பேரு என்ன?ன்னு கேட்டார். அவ்ளோதான் டாடி” சொல்லிவிட்டு ஓடிப்போய் அவன் அம்மாவிடம் ஒட்டிக் கொண்டான்.

நாகரிகம் கருதியாவது மகனைப் பாராட்ட சங்கர் வரமாட்டானா? என்று என் கண்கள் சங்கரைத் தேடின. பரிசளிப்பு விழா தொடங்கும் வரை அவனை எங்குமே காணமுடியவில்லை.

மற்றபிள்ளைகளின் பெற்றோர் கூடிக்கூடி என் மகனைப் பாராட்டினார்கள்.

“”எப்படி சார் அவனால முடிஞ்சது?” என வியந்தார்கள். மனமும் உடலும் இந்தத் தரை மீதே இல்லை என்பதுபோல வண்ணத்துப் பூச்சியாய் மேலே மேலே பறந்துசென்றன என் கனவுகள்.

அங்கு இலவசமாகக் கிடைத்த அறிவுரைகளும் ஆலோசனைகளும் எனக்குத் திருப்தி அளிப்பதாக இல்லை. இவனை அவனிடம் அறிமுகப்படுத்தி ,””டேய் சங்கர், இப்போ நான் உன்னை ஜெயிச்சுட்டேன்டா” என்று சொல்ல வேண்டும்போல மனசு துடித்துக் கொண்டிருந்தது.

பரிசளிப்பு விழா தொடங்கி சிறப்பு விருந்தினர் பேசி முடிக்கும்வரை சங்கர் அவ்விடத்திற்கு வரவேயில்லை. இரண்டாம் பரிசு வாங்குவதற்காக மேடைக்கு ஓடோடி வந்தபோதுதான் அவனைப் பார்க்க முடிந்தது.

வெற்றிக் கோப்பையை என் மகன் வாங்கித் தூக்கிய பொழுது கைத்தட்டலால் அரங்கமே அதிர்ந்தது. சந்தோஷத்தில் நாங்கள் இருவரும் உதடுகளைக் குவித்து முத்தங்களை வானத்தை நோக்கி பறக்கவிட்டோம். அக்காட்சியைக் காணச் சகிக்காமல் சங்கர் வாசல் வழியாக வெளியேறிக் கொண்டிருந்தான்.

– கி. மூர்த்தி (மார்ச் 2012)

47 வயதான கி.மூர்த்தி, தமிழில் முதுகலை பட்டம் பெற்றவர். தமிழக அரசில், கருவூலக் கணக்குத் துறையில் கண்காணிப்பாளராகப் பணிபுரிகிறார். வேலூர்க்காரர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *