கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 12,301 
 
 

அரவிந்தனுடைய கல்யாண வைபோகம் களைகட்ட ஆரம்பிச்சது.. மணமகள்—ஐஸ்வர்யா. முகூர்த்தப் பத்திரிகையும் அடிச்சாச்சி. அடுத்த கட்டமாக ஒரு சுபயோக நாளில் `பொன்னுருக்கல்’ விசேஷத்தை நிச்சயித்தார்கள்.. பிள்ளையின் அப்பா மாதவனுக்கு தன் அப்பன் மேல எரிச்சலான எரிச்சல். அந்த காலத்தில தனக்கு நடந்த மாதிரியே மூணு நாள், நாலுநாள் கல்யாணத்தை தன் பேரனுக்கும் நடத்தியே ஆகணும்னு ஒரே பிடிவாதம் பிடிக்கிறாரே. .அவர் ஒரு காலத்திய தமிழாசிரியர். தமிழ் பற்று ஜாஸ்தி. அதுக்காக? இப்ப ஆவுமா?. நம்ம சொந்தக்காரங்க நிறைய பேர் சிட்டியில தான் இறைஞ்சி கிடக்கிறாங்க பரபரப்பான வாழ்க்கை. எவன் நாட்ல சொம்மா இருக்கான்?. எவனும் வரமாட்டான். இந்த கிழவன் கூட சேர்ந்துக்கிட்டு அரவிந்தனுந்தான ஆட்றான்? .ஜுவல்லரிக்குப் போனமா தாலியை செலக்ட் பண்ணமான்னு இல்லாம அதுக்கொரு விழாவும்,விருந்துமா?. இப்பல்லாம் வசதியானவன் கூட கோயில்ல தாலி கட்டி,ஓட்டல்ல ஒருவேளை விருந்து போட்டு முடிச்சிக்கிறான்.சே! .

சங்கமம்பொன்னுருக்கல் விசேஷத்துக்கு முந்நாள் சாயரட்சைக்கெல்லாம் தன் அண்ணன்கள் ரெண்டுபேரும் தன் குடும்பத்தோட வந்திறங்கிட்டாங்க. அக்காள்கள்,ஒண்ணுவிட்ட பங்காளிகள், தாய்மாமன்கள், கொண்டான் கொடுத்தான்கள், ஒருத்தர் தப்பாம குடும்ப சமேதராக வந்தாச்சி. எல்லாம் இந்த கிழவனின் ஏற்பாடு.. ஒரே கூச்சல். வீடு கொள்ளாத உறவுங்க கூட்டம்.

.போன மாசமே ஊர் ஒப்பு வாங்க, ஊரைக் கூட்டியாச்சி. ஊர் ஒப்பு வாங்கறப்ப பொண்ணு வீட்டுக்காரங்களும் புள்ளை வீட்டுக்காரங்களும் சேர்ந்து நின்னு ஒப்பு கேட்கணும். கேட்டாங்க. புள்ள உள்ளூருன்னா பொண்ணு வீட்டுக்காரங்க வரலாற்றை ஊரு கேட்கும்.. எத்தனை புள்ளைங்க, கொள்வினை குடுப்பினையெல்லாம் எங்கெங்கே, அப்புறம் பொண்ணுக்கு என்னா போடப் போறீங்க?. எல்லா தகவலையும் கேட்டு முடிச்சிட்டு, ரெண்டு வீட்டார் சம்மதத்தையும் கேட்டாங்க., ரெண்டு தரத்தாரும் சம்மதம்னு சொன்னப்புறம் ஊர் ஒப்பு சொல்லி எல்லாருக்கும் தாம்பூலம் கொடுத்தாங்க…பொண்ணுவீட்டு சார்பா அவங்க பக்கத்துக்கு ஊர் ஆளுன்னு ரெண்டு பேர் வந்திருந்தாங்க.. அவங்களுக்கும் தாம்பூலம் கொடுத்து கல்யாணத்தை ஊர்ஜிதம் பண்ணிட்டாங்க.. அப்பவே கல்யாணத்தை இருந்து நடத்திக் கொடுக்கவும், அப்புறம் `முட்டுத்தளிக்கு’ (சமையல் வேலை) ஆளுங்களையும் ஊர் நியமிச்சிட்டுது. ஊரில் இருக்கிறவங்களே சமையல் வேலையை பாக்கிறது வழக்கம். அதுதான் ஊரு முறை.

.தோட்டத்தில அடுப்பு மூட்டி ஜரூரா சமையல் வேலை நடந்துக்கிட்டிருக்கு. காலையில ஏழு மணிக்கெல்லாம் முறைப்படி பொண்ணு வீட்டார் தன் கும்பலோட.அந்த கால முறைப்படி ,ஒரு மூங்கில் கூடை நிறைய உள்ளே பூரணம் வெச்ச கொழுக்கட்டையோட வந்திறங்கியாச்சி. பொண்ணு வீட்டார் இனிப்போடுதான் வரணுமாம்.. வாசலில் ஒரு குடத்தில் தண்ணீர், தட்டில் பன்னீர் சொம்பு, குங்குமம், மஞ்சள், சந்தனம் வெச்சி, வர்றவங்களை பன்னீர் தெளிச்சி வரவேற்றாங்க. தெருவிலுள்ள மத்த இள வயசு பொண்ணுங்களும், வந்திருக்கும் சொந்தங்களின் பிள்ளைகளும்,ஓடியாடி, வந்தவங்களுக்கு கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு கொஞ்சம் மாங்காஇஞ்சி தட்டிப் போட்டு, கொஞ்சமா வெல்லம் போட்டு கலக்கி, இதமாக புளிப்பில்லாமல் மோரு சப்ளை பண்றாங்க.. ஒரு ஓரத்தில் குமிட்டியுடன் தயாராக ஆசாரி உட்கார்ந்திருக்கிறார். ஹால் முழுக்க இருக்கிறவங்களும், வந்தவங்களும், ஊரு சார்பா வந்தவங்களும் உட்கார, சடங்கு ஆரம்பிச்சிது.. மாதவனும் அவன் மனைவியும் ஒரு தட்டில வெத்தல பாக்கு, குங்குமம் பழம், புஷ்பம் வெச்சி நடுவில் பொன் சவரன் காயின்களை வெச்சி நடுவீட்டில வெச்சி கற்பூரம் காட்டி தேங்காய் உடைச்சி சாஷ்டாங்கமாய் விழுந்து கும்பிட்டுட்டு அதை கொண்டுவந்து கிழவனிடம் கொடுக்க, கிழவன் கும்பிட்டு அதை எடுத்து மாப்பிள்ளை, பேரன் அரவிந்திடம் கொடுத்தார். அவன் அதை ஆசாரியிடம் கொடுக்க, ஆசாரியும் தன் பங்கிற்கு மஞ்சளால் பிடிச்ச பிள்ளையாரிடம் வெச்சி கற்பூரம் ஏற்றி கும்பிட்டுவிட்டு குமிட்டியைப் பத்த வெச்சாரு..

ஆச்சி அரை மணி நேரத்தில் அத்த உருக்கித் தட்டி மொத்தையாக்கி குளிர வெக்க, பிள்ளையின் தாய் மாமன் வந்து, தேங்காய் உடைச்சி பூசை போட்டு, அந்த தேங்காய் தண்ணியை தணலில் வுட்டு தீயை அணைச்சாரு.. ஆசாரி தங்க மொத்தையை சபையோரிடம் விவரம் சொல்லி காட்ட, மாப்பிள்ளை அதை தாலி செய்யுமாறு சொன்னாரு… அத்துடன் பொன்னுருக்கல் சடங்கு முடிய, உள்ளே இலை போட முஸ்தீபுகள் நடந்துக் கொண்டிருந்தன. .

பந்தி விட்டாச்சி.. இளசுகளும்,ஊரு ஆட்களும்,அரவிந்தனும் கூட ஓடிஓடி பரிமாற, நாலு பந்தி போயி அஞ்சாவதுக்கு ஒரு அஞ்சாறு பேரு பாக்கி. சாப்பிட்டு முடிச்சிட்ட உறவுக்கார ஜனங்க வெத்திலையை மென்னுக்கிட்டு ஹால் முழுக்க உட்கார்ந்து மலரும் நெனைப்புகளை அசைபோட்டுக்கிட்டிருந்திச்சிங்க..சளசள வென்று பேச்சு குரல். அந்நேரத்துக்கு பாயாச குண்டானை உள்ளே குடுத்துவிட்டு கையை துடைத்தபடி வந்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு ராஜகோபாலனை கிழவர் கூப்பிட்டார்.

“ஒண்ணுமில்லப்பா நம்ம ரேவதிக்கு நல்ல இடம் தகையலன்னு வருத்தப்பட்டியே, இப்ப கல்யாண பிராப்தம் வந்திடுச்சிப்பா. என்ன சொல்ற?. என் அண்ணன் பேரன் ரவி. பி.ஈ. எம்.பி.ஏ, ஏர்-டெல் ல டிஜிஎம் ஆ இருக்கான். லகரத்துக்கு மேல சம்பளம் வாங்கறான். பையனும் வந்திருக்கான். அப்பன் ஆடிட்டர். காலையிலயிருந்து இங்க ஓடியாடி வேலை செய்ற நம்ம ரேவதியைப் பார்த்திருக்காங்க.. எல்லாருக்கும் புடிச்சிப் போச்சி. குலம் கோத்திரம் பார்க்கத் தேவல பாரு. வசதியான இடம்.”

“நான் அவ்வளவு வசதி இல்லய்யா “. “ஆமாமா நான் சொல்லிட்டேன். அதுக்கு பையன் அப்பன் சொல்றான். இப்பல்லாம் யாரும் அப்படி பார்க்கிறதில்லையாம் .வர்ற மருமவ கடைசி காலத்தில நம்மள பார்த்துக்குவாளான்னுதான் பாக்கிறாங்களாம். அதான் அவங்க அபிப்பிராயமும். என்ன சொல்ற?.” “நான் கொஞ்சம் யோசிச்சிச்சிட்டு, வீட்லயும் கலந்துட்டு சொல்றேன்ய்யா.”

“அடேய்! அவளும் எனக்கு பேத்தி மாதிரிதாண்டா. தப்பான எடத்துக்கு கைய காட்டுவனா?.. சரி..சரி.. நீ யோசிக்கிறதுக்குள்ள அதோ அவங்களே யோசிச்சிட்டாங்க பாரு.”—–கிழவர் சொல்லிவிட்டு கெக்கெக்கே என்று சிரித்தார்.. அங்கே ரேவதியும் சம்பந்தப் பட்ட கிழவரின் பேரனும் சிரிச்சி சிரிச்சி பேசிக்கிட்டிருந்தாங்க..

“டேய் ராஜாமணி! இங்க வா. இவருதான் நீ கேட்டியே ரேவதி அவளுடைய அப்பன்.. உன் அளவுக்கு வசதி இல்லேன்னு யோசிக்கிறான்.”—வந்தவர் ராஜகோபாலனுக்கு வணக்கம் சொல்லிவிட்டு, சிநேகிதமாய் அவர் கையை பிடித்துக் கொண்டு சிரிச்சார். ராஜாமணியின் மனைவியும் வந்து நின்று வணக்கம் சொன்னாள். “வசதி என்னங்க வசதி.. பிடெக் படிச்ச பொண்ணு மாதிரியே தெரியலியே. மனுஷாள் கிட்ட என்னமா ஒட்டிக்கிறா, எல்லாத்துக்கும் ஓட்டந்தான். என்னா.சுறுசுறுப்பு?:.. எங்களுக்கு ரொம்ப திருப்தி. வசதி அது இதுன்னு நாங்க யோசிக்கல. நீங்களும் யோசிக்காதீங்க எங்க சித்தப்பா கிட்ட வளர்ந்தவங்க நாங்க. ,மனுஷாள்தான் முக்கியம் உங்களால முடிஞ்சதை செய்யுங்க போதும்..” “ டேய்!சும்மா பேசிக்கிட்டிருக்காத. ராஜகோபாலன் கூட பேசிக்கிட்டே ரெண்டு பேரும் அவங்க வீட்டுக்குப் போங்க.. போயி அவர் கையால மொத மொதலா ஒரு கிளாஸ் தண்ணி வாங்கி குடிச்சிட்டு வாங்க. ” —-ராஜகோபாலன் சிரிச்சிக்கிட்டே “ ஏய்யா! நாங்க காபி கொடுக்க மாட்டமா? “பேஷா குடு. அதான என் ஆசையும்?. சரி சரி நான் மூத்தவன்..ரெண்டு குடும்பத்துக்கும் சொல்றேன் சும்மா மோந்து மோந்து ஜாதகத்த பார்த்துக்கிட்டு இருக்காதீங்க.மனப் பொருத்தம் தான் பிரதானம். முப்பது வயசை தாண்டினா எந்த தோஷமும் வேலை சேய்றதில்லைன்ற ஒரு பொது விதி இருக்கு. பிருஹத் சோதிடத்தில சொல்லியிருக்கு. காதல் கல்யாணம், உறவுக்குள்ள கல்யாணம், குரு மூலம் வர்ற வரன், இதுக்கெல்லாம் பொருத்தம் பார்க்க தேவையில்லேன்னு சோதிடத்தில சொல்லியிருக்கு. நாமதான் எல்லாத்தையும் அனுசரிச்சிப் பார்த்து நடந்துக்கணும்..”— அவர்கள் தலையாட்டிவிட்டு நகர்ந்தார்கள். “டேய்! ரெண்டு வீட்லயும் இன்னிக்கு கன்னிக்கால் நட்டுடணும்பா,அப்புறம் இன்னிக்கே முளைப்பாலிகை போட்ருங்க. மாதவா! இன்னும் கல்யாண பலகாரம் போடல. மேலத்தெரு பூபதி இனிப்பு சரக்கு போட்றதில கெட்டிக்காரன். அவனை கூட்டிவா..”

கல்யாணம் இன்னும் நாலு நாள் இருக்குது. மதியத்துக்கு மேலே வாசல்ல தெருவை அடைச்சி பந்தல் போட்டாச்சி. முகூர்த்தக்கால் ஊன்றியதுக்கப்புறம் ரெண்டு வீட்டாரும் கல்யாணம் முடியும் வரைக்கும் யாரும் துக்க நிகழ்ச்சியில கலந்துக்கக் கூடாது.ஊர்முழுக்க பத்திரிகை தாம்பூலம் வெச்சாச்சி. உள்ளூர், வெளியூர்ல இருக்கிற எல்லா உறவுக்காரங்க வீடுகளுக்கெல்லாம் அரவிந்தனையே போய் பத்திரிகை வைக்கச் சொல்லி கிழவர் உத்திரவு போட்டுட்டார். கல்யாண வேலைதான் பாக்கி. உள்ளூரிலேயே பூங்காவனம்மாள் சத்திரத்தில் கல்யாணம். இருக்கிற ஒரே சத்திரம் அதான்.. பக்கத்தில டவுனுக்குப் போனா பெரிய பெரிய சத்திரங்கள்லாம் இருக்கு. ஆனா கிழவருக்கு உள்ளூரில நடத்தணும், ஊர் முழுக்க எல்லாரும்வந்து வயிறார சாப்பிட்டு விட்டு வாழ்த்தணும்..டவுன்ல வெச்சா மொய் பாக்கி வெச்சிக்கிட்டிருக்கிறவன் தான் வருவான். அவன்கூட வருவானா? இல்லே வீட்டில இன்னும் ஒரு பேத்தி கல்யாணத்துக்கு நிக்கிறால்ல, அதில நேர் பண்ணிடலாம்னு நின்னுக்குவானான்னு தெரியாது.

நாளைக்குக் கல்யாணம். காலையிலிருந்தே வீட்டிலும்,மண்டபத்திலும் சளசளவென்று உறவுகளின் கூட்டம் மொய்க்க ஆரம்பிச்சாச்சி.. ஒண்ணுத்துக்கு ஒண்ணு மாமன், மச்சான்னு கையை பிடிச்சிக்கிட்டு சந்தோஷமாய் பழைய கதைகளை பேசிக்கிட்டு, ஹால், நிறைஞ்சி இருந்துச்சி. ஒரே சத்தம். மாதவனும், அவன் பொண்டாட்டியும் காலையிலேயே வீடு வீடா போயி பொண்ணழைப்பு அன்னைக்கு ராத்திரி விருந்துக்கும், மறுநாள் கல்யாண விருந்துக்கும் வரச் சொல்லி விட்டு வந்தாச்சி…

தன் உறவுக் கூட்டங்கள் சூழ அரவிந்தன் கல்யாண மண்டபத்துக்குக் கிளம்பினான். முன் வாசலில் மூன்று சுமங்கலிகள் ஆரத்தியெடுக்க அவன் அக்காள் பையன் மாப்பிள்ளைத் தோழனாக வர ஒரு தட்டில் பச்சரிசி பரப்பி அதன் மேலே கூறைச் சேலை,வேஷ்டி சட்டை, வெற்றில–5, முழுப்பாக்கு–3, கஸ்தூரி மஞ்சள்–1, குங்குமம், தேங்காய்–1, வாழைப்பழம் ஒரு சீப்பு, அலங்காரப் பொருள்கள், சீப்பு,கண்ணாடி, பவுடர், வசனைதிரவியம், சோப்பு, தாலிக்கொடி, மெட்டி ஒரு ஜோடி, இத்தனையும் வெச்ச கூறைத்தட்டு, அப்புறம் தேங்காய், பழங்கள், என்று தட்டுகளில் சீர்வரிசையோடு மேளதாளத்தோடு மாப்பிள்ளை கிளம்பினான். இதேபோல பொண்ணு வீட்டிலியும் சாயரட்சைக்கு கிளம்பணும்.

சாயரட்சை மண்டபத்துக்கு வந்த பொண்ணு வீட்டாரை மேளதாளத்துடன் மாப்பிள்ளை வீட்டார் வரவேற்றார்கள் இருட்டினப்புறம் ரெண்டு ஊர்காரங்களும்,ரெண்டு வீட்டு உறவுக்காரங்களும் உட்கார்ந்து பேசி உறவு கலந்து,பானகம்,மோரு சாப்பிட்டு எழுந்திருக்க அப்புறமா அலங்கார வண்டியில பொண்ணை உட்கார்த்திவெச்சி மேள தாளத்துடன் சுற்றங்கள் உடன் வர ஊர்வலம் நடக்க ஆரம்பிச்சது.. அந்நேரத்துக்கு தான் மண்டபத்தில சண்டை மூண்டுக்கிட்டது… சண்டை இல்லாத கல்யாணமா?. ஆனால் இது வேற மாதிரி. மாதவனுடைய ரெண்டாவது சித்தப்பாவுக்கு ரெண்டு பிள்ளைங்க. எல்லாம் மாதவன் வயசுதான். அவங்களுக்குள்ள சொத்து தகறாரு பத்து வருஷ பகை.. பேச்சு வார்த்தையில்லை. ரெண்டு பேருக்கும் தலைக்கு மேலவளர்ந்த பிள்ளைங்க. அப்பப்ப அடிதடி நடக்கும். எந்த விசேஷத்துக்கும் இவனைக் கூப்பிட்டா அவன் வரமாட்டான், அவனைக் கூப்பிட்டா இவன் வரமாட்டான். எல்லாம் தெரிஞ்சும் கிழவர் ரெண்டுபேருக்கும் பத்திரிகை வைக்கச் சொல்லிட்டார். பொண்ணழைப்புக்கு ரெண்டுபேரும் வந்துட்டாங்க. அண்ணனைப் பார்த்ததுதான் தாமதம் தன் குடும்பத்தோட வந்து கிழவர் கிட்டேயும், மாதவன் கிட்டேயும் ஒரே கூச்சல் போட்டுட்டு கிளம்பச் சொல்லி பொண்டாட்டியை அவசரப் படுத்தினான்.

“அவன் வோணும்ன்றவங்க என்னை ஏன்யா கூப்ட்ட? கூப்புட்டு அவமானப் படுத்தறிங்களா?.—ஒரே கூச்சல். கிழவர் நிதானமாக அவனை அதட்டி பேச ஆரம்பித்தார். “ த்தூ! நில்றா. என்னா புள்ளைடா நீ?. அவன் யாரு. உன் அண்ணன்தானே?.எனுக்கு நீங்க ரெண்டு பேரும்தாண்டா வோணும்..நேத்து கேட்டா. பேரன் பேத்தி எடுக்கிற வயசுல இருக்கிறவன் பொட்டச்சியாட்டம் அழுவுறான்டா. அவனுக்குப் போயி சொத்து தரமாட்டேன்னு சொல்வனாப்பா.என்னை கேக்காமலேயே அவனா கற்பனையா நெனைச்சிக்கிணு வார்த்தைய வுட்டுட்டான். பொஞ்சாதி, புள்ளைங்க வேற அவனை உசுப்பி வுட்டுதுங்க., எம்புள்ளைங்க சொம்மா இருக்குமா?. இதுங்களும் குதிச்சிதுங்க. இப்படித்தான்பா விசயம் என் கைமீறி போயிடுச்சி.. பொறந்ததிலயிருந்து நான் ஒரு சட்டையை புதுசா போட்டதில்ல. எனக்கு எடுக்கிறதையெல்லாம் அவன் போஈட்டு பழசாக்கினதுக்கப்புறந்தான் எனக்கு.கிடைக்கும்.ஒரு தின்பண்டத்த முழுசா தின்னதில்ல. பங்குக்கு வந்திடுவான். ஒரே கத்து. தம்பிக்கு குட்றான்னுதான் வீட்ல திட்டுவாங்க. வூட்ல அவந்தான் செல்லப்புள்ள அப்படி விட்டுக் கொடுத்தே வளர்ந்துட்டேன்பா. இந்த சொத்தைதானா அவனுக்கு குடுக்க மாட்டேன்? அவன் கேட்ட அந்த நாத்தங்காலு முப்பது செண்ட்டை நாளைக்கே எழுதி குடுத்திட்றேன் நீயே இருந்து ரெக்கார்டை அவன் கிட்ட ஒப்படைச்சிடு.. ஹும்!.பழசையெல்லாம் தம்பி மறந்துட்டான். அப்படீன்னு அழுதுட்டு போறான் நீயானா சர்த்து பேசற.”—தம்பிகாரன் கொஞ்சநேரம் பிரமை பிடிச்சவனாட்டம் நின்னான் .தலையை அப்படியும் இப்படியும் ஆட்டினான். அப்படியே கீழே உட்கார்ந்து தூரப் பார்வை பார்க்க ஆரம்பித்தான்.. “என்னடா கம்னு இருக்கே?”—அவன் தலை கவிழ்ந்தபடியே “ ஒண்ணுமில்ல. ஏம்பா! எங்கண்ணன் அப்படியாப்பா சொன்னாரு?.”. —-அவன் கண்கள் கலங்கியிருந்தன. “பின்னே நீ அவனுதை புடுங்கித் தின்னதெல்லாம் எனக்கெப்படி தெரியும்?.”——-அவன் துண்டால் முகத்தைப் பொத்திக் கொண்டான்.

“ஆமாப்பா அவன் ஒண்ணுத்தையும் அனுபவிக்கலப்பா எல்லாத்தையும் இந்தப் பாவி நாந்தாம்பா அனுபவிச்சேன். வாணாம்பா அந்த சொத்து எனக்கு வாணாம்பா..”—அவ்வளவுதான் சடக்கென்று உடைந்துபோய் கிழவர் கையைப் பிடிச்சிக்கிட்டு அழ ஆரம்பிச்சிட்டான். பத்து வருஷ இறுக்கம்.கொஞ்ச நேரம் அவனை அழ விட்டுட்டார்.

“சரி..சரி…அழாத. இதெல்லாம் ஒரு நசைவேகத்தில ஏற்பட்டுப் போற விசயம். ரெண்டுபேரும் உள்ளுக்குள்ள இம்மாம் நெனைப்ப வெச்சிக்கிணு ஏண்டா இப்படி வேஷம் கட்றீங்க?. . நீங்க ஒண்ணா இருந்தாத்தாண்டா நம்ம குடும்பத்துக்குப் பெருமை.. போவட்டும் ராத்திரிக்கு பந்தி விசாரிப்பு பொறுப்பு உன்னுதுதான். பார்த்துக்கோடா.”

இரவு பொண்ணழைப்பு முடிஞ்சி, பலமான விருந்து. ஊரே திரண்டுவந்துச்சி. சுற்றங்களுக்கும் குறைச்சல் இல்லை. . ஏழாவது பந்திக்கப்புறமும் சாப்பிட ஆளு மிச்சமிருந்தது. பொண்ணும் புள்ளையுங்கூட வந்து ஓடிஓடி பார்த்துப் பார்த்து பந்தி விசாரிச்சாங்க.எதிராளியா இருந்த அண்ணனும் தம்பியும் ஓடி ஓடி பரிமாறிக்கிட்டு இருந்ததை ஊரே ஆச்சரியமாக பார்த்துக்கிட்டு இருந்துச்சி. ஜோடி சேராத மாடுங்களை இப்படித்தான் நுகத்தடியில ஒண்ணா புனைச்சி வுட்டுட்றது வழக்கம்.. .எப்படியாப்பட்டதும் படிஞ்சி வந்துடுமில்ல?.. அதான் கிழவருடைய பிளான்.. எங்க?,எப்படின்னு தெரியல..அண்ணா! அந்த இலைக்கு சாம்பார் போடுன்னு இவன் சொன்னானோ, இல்லே டேய் தம்பீ! அங்க ரசம் போடுன்னு அவன் சொன்னானோ?.எப்படியோ ரெண்டுபேர் முகத்திலியும் இப்ப சிரிப்பு. ஒடி ஒட்டி பரிமாறினாங்க.

காலையில முகூர்த்தம் 6-00—–7.30. விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் அரவிந்தனை எழுப்பி குளிக்க வெச்சி, கிழக்கு நோக்கி உட்கார வெச்சி ஏழு பெண்கள் வந்து ஒவ்வொருத்தராக நலங்கிட்டு முடிச்சாங்க.. மணமேடையின் முன்பு சுவாமி அம்பாள் கும்பங்கள், சந்திர கும்பம், பஞ்சகவ்விய பூஜைக்கென்று ஒரு கும்பம், முளைப்பாலிகை சட்டி, அரசாணிக்கால், அம்மி. எல்லாம் வைக்கப்பட்டிருக்க இந்த கல்யாணம் எந்த வில்லங்கமும் இல்லாமல் முடியணும்னு தேங்காய் உடைச்சி, குருக்கள் மந்திர உச்சாடணம் செய்ய மாப்பிள்ளைக்கு காப்பு கட்டினார்கள். .அடுத்ததாக அங்கிருந்த அரசாணிக்காலை ஐந்து சுமங்கலிகள் கழுவி பொட்டிட்டு தீபாராதனை செய்தார்கள். அதை பார்த்தபடி வந்த அரவிந்தன்

”தாத்தா! மாமா, சித்தப்பா, அத்தை, எல்லாரையுங் கேட்டுட்டேன். ஒருத்தருக்கும் தெரியல. ஆமா அந்த கோலு கூடவா சாமி. அத்த என்னாத்துக்கு கழுவி பொட்டு இட்டு, தீவார்த்தனை காட்டி….., தமாஷா இருக்கு. எதுக்குன்னு தெரியாமலேயே காலங்காலமா எல்லாரும் செஞ்சிக்கிட்டு வர்றாங்க..” —கிழவர் அவனை பார்த்துவிட்டு சிரித்தார். “அது அரசாணிக்கால் இல்லை அரசாணைக்கோலு. பழையகாலத்தில ஜனங்க தன் வூட்டு கல்யாணத்துக்கு அரண்மனைக்கும் போயி ஒரு பத்திரிகை வெக்கிறது வழக்கம். அரசர் எல்லாருடைய வீட்டுக்கும் போவமுடியாதுன்றதால தன் சார்பா அரசாணைக்கோலை அனுப்பிவைப்பார். அதுக்கு நாம குடுக்கிற மரியாதைதான் இந்த பூஜை, புனஸ்காரமெல்லாம்.. இப்ப ரிஜிஸ்டர் கல்யாணம் மாதிரி அன்னைக்கு இந்த அரசாணைக்கோல் வந்துட்டா அரசால அங்கீகரிக்கப்பட்ட கல்யாணம்னு அர்த்தம்..”— அரவிந்தன் ஆசையாக தாத்தா கன்னத்தை தட்டி தேங்க்யூ சொல்லிவிட்டு நகர்ந்தான்.

முகூர்த்த நேரம் நெருங்கிடுச்சி. பொண்ணும் புள்ளையும் கூறைப் புடவை, வேஷ்டி சட்டை அணிந்து வந்து மணமேடையில் கிழக்கு பார்த்து உட்கார்ந்தார்கள். மாப்பிள்ளைக்கு வலப்புறம் பொண்ணு உட்கார, குருக்களின் மந்திர உச்சாடணம் ஆரம்பித்தது. அக்கினி வளர்த்து குருக்கள் மந்திரம் சொல்ல மாதவனும் வரப்போற சம்பந்தியும் தாம்பூலம்,தேங்காய் மாற்றிக் கொள்ள, அதற்குள் தேங்காய் மேல் சுற்றி வைத்த நிலையில் தாலி தட்டும், அட்சதைத் தட்டும் வந்திருந்த ஜனங்களின் ஆசிக்கு போய்வந்தது. குறித்த சுப முகூர்த்தத்தில் அரவிந்தன் கடவுளை தியானித்து, குருக்கள் ஆசீர்வதித்துக் கொடுத்த மாங்கல்யத்தை தன் கைகளில் பிடிச்சி, பெற்றோர்கள் பக்கத்திலிருக்க, பொண்ணு கழுத்தில் கட்டும்போது கெட்டிமேளம்…..!கெட்டிமேளம்…..! முழங்கியது, காமாட்சியம்மன் விளக்கின் தீபம் சாட்சியாய் எரிந்துக் கொண்டிருந்தது.

”மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவனஹேதுநா கண்டே பத்தாமி ஸுபகே ஸ்ஞ்ஜிவசரதசதம்.”—-.மந்திரம் ஓதினார்கள். தாலி கட்டியதும் அரவிந்தன் தன் கையால் பொண்ணுக்கு பொட்டிட்டான்.

அப்புறம் மாலை மாத்திக்கிட்டாங்க, பால்பழம் ஊட்டிக்கிட்டாங்க, பசுவை நிறுத்தி கோதரிசனம் பண்ணாங்க.. அப்புறம் அரவிந்தன் தன் வலக்கையால் ஐஸ்வர்யாவின் வலக்கையைப் பற்றி, பின்னர் ஏழடி நடந்து,அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து ,அதுக்குள்ள ரெண்டு பந்தி முடிஞ்சி, மூணாவதுக்கு ஜனங்க உள்ள ஓடுதுங்க. பெரியவங்க வந்து வாழ்த்தி பொரியிட, அப்புறம் மணமக்கள் இறங்கி வந்து ஒவ்வொரு பெரியவர்கள் கால்களிலும் சாஷ்டாங்கமாக விழுந்து ஆசி வாங்கி…, இப்படியாக அரவிந்தன் கல்யாண வைபோகம் நல்லபடியாக முடிஞ்சது. சாப்பாட்டு பகுதி நிரம்பி வழிகிறது.. காலை சிற்றுண்டி பந்தி . .மொய் எழுதும் இடத்தில் கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கிறது.. இன்னைக்கு நாம மொய் எழுதி வெச்சாத்தான் நாளைக்கு நமக்கு கூட்டம் வரும். பக்கத்திலேயே ரெண்டு பேர் நின்று தேங்காய் பை விநியோகம்.

மதியம் விருந்துக்கப்புறம் ஊரு இருந்து கூடி மாப்பிள்ளை பொண்ணை பொண்ணு வீட்டிற்கு `மறுவீடு’ க்கு வழியனுப்பி வெச்சாங்க. சண்டை சகோதரர்கள் கிழவர் கிட்ட சொல்லிக்கிட்டு கிளம்ப, குடும்பத்தோட சேர்ந்து வந்து நின்றார்கள். கண் கலங்க எதுவும் பேசாமல் கிழவரின் கையைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டு கிளம்பினார்கள். ஒரு வழியாக எல்லாம் நல்லபடி முடிந்து வீட்டிற்கு வந்ததும் எல்லாரும் அலுப்பு தீர குளிச்சிட்டு தூங்க போயிட்டாங்க. மறுவீடுன்னு பொண்ணு வீட்டிற்கு போன பொண்ணும், புள்ளையும் அன்றிரவே திரும்பிட்டாங்க. அரவிந்தன், ஐஸ்வர்யாவுடன் வந்து தாத்தாவை கட்டிப்பிடிச்சிக்கிட்டான். இருவரும் மீண்டும் ஒருமுறை அவர் காலில் விழுந்து வணங்கினாங்க.

“ரொம்ப தேங்ஸ் தாத்தா. ஒண்டர்ஃபுல் எக்ஸ்பீரியன்ஸ்.ஒவ்வொரு விஷயமா எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கீங்க. நமக்கு இவ்வளவு சொந்தக்காரங்களா? மலைப்பா இருக்கு.எவ்வளவு பேர்?. பல பேரை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை. வெளியூர் சொந்தக்காரங்க வீடுகளுக்கெல்லாம் நானே போய் பத்திரிகை வெக்கணும்னு லிஸ்ட்டை குடுத்தியே, ரொம்ப எரிச்சல் பட்டேன். அது ஏன்னு அப்புறந்தான் தெரிஞ்சது. எல்லாரையும் எனக்கு தெரிய வைக்கிற உத்தி.. எவ்வளவு சடங்குகள்?. நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் எங்க மனசில நிக்கிது. பிரமிப்பா இருக்கு. இன்னைக்கு இங்க எத்தனை நல்ல விஷயங்கள் நடந்திருக்கு?.. எல்லாத்தையும் வீடியோ கவர் பண்ணி வெச்சிருக்கேன்…”— தாத்தா நிறைவாய் சிரித்தார்.

”கல்யாணத்தில நடக்கிற ஒவ்வொரு சடங்குகளும், நிகழ்ச்சிகளும் வெறும் பெருமைக்கு இல்லடா. உறவுகளை புதுப்பிச்சிக்கிறது, புது உறவு ஏற்படுத்திக்கிறது, கோபதாபத்த வுட்டுட்டுட்றது, இப்படி எல்லாத்துக்குந்தான். அத்தோட நமக்காக மெனக்கெட்டு இவ்வளவு ஒறவுக்காரங்களும் ஊரும், வந்திருந்து நடத்தி வெச்ச கல்யாணம்ன்றதிலதான் அதன் பெருமை நிக்கிது. செய்யற சடங்குங்க கல்யாணத்தின் புனிதத்தை உங்களுக்கு சொல்லிக் குடுக்குது.. இந்தஅனுபவங்கள் இல்லாததினாலதான் ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கையெழுத்துப் போட்டு மாலை மாத்திக்கிறவங்க யாரைப் பத்தியும் டோண்ட் கேர்னு டப் டப்னு டைவர்ஸ் லெவலுக்கு போயிட்றாங்க அதில அவங்களேதான் ராஜா ராணி. அவங்க விஷயத்தில அவங்களை .பெத்தவங்க கூட தலையிட்றதில்லை. இங்க அப்படியில்லை. இதுக்கு மேல ஊரு, உறவு அத்தனையும் நிக்கிது, விடாது ,அனுசரிச்சி வாழறதுதான் வாழ்க்கைன்னு சொல்லிக் குடுக்கும்.”——- அப்போது மாதவன் செல் போனுடன் வந்தார்.

“அப்பா! நம்ம வேலூரு சரஸு அக்கா உங்க கிட்ட பேசணுமாம்.”—- செல்லை வாங்கிக் கொண்டார்.

“ஹலோ!சித்தப்பா! நம்ம அரவிந்தன் கல்யாணத்துக்கு வந்தப்ப செங்கம் சாமிநாதஅண்ணன் பையனை பார்த்தோம். பெங்களூர்ல என்ஜினியரா இருக்கானாம், அம்சமா இருக்கான். நம்ம ஸ்வேதாவுக்கு பார்க்க..லா..ம்..னு. இவ பல்டாக்டர். நீங்கதான் அவர்கிட்ட பேசணும்.”

– தினமணி கதிர் (12-10-2014)

நான் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு என்ற ஊரைச் சேர்ந்தவன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். எழுபத்தைந்துக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், இரண்டு அறிவியல் நாவல்களையும் செய்யாறு தி.தா நாராயணன் என்ற பெயரில் எழுதியுள்ளேன்,எழுதிகொண்டுமிருக்கிறேன். சிறுகதைகள் என் கதைகள் குமுதம், தினமணி கதிர், தினமலர், இலக்கியப்பீடம், கலைமகள்,கணையாழி, செம்மலர் ,தாமரை, கிழக்கு வாசல் உதயம், தாராமதி, போன்ற இதழ்களிலும், அவைகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளிலும், திண்ணை டாட்காம் போன்ற இணையதள இதழ்களிலும், இலக்கிய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *