கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 30, 2021
பார்வையிட்டோர்: 6,496 
 
 

கோவிந்தசாமிஅற்புதம் வீடு, நூறு பேர் படுத்து உருளலாம் போன்ற பெரிய திண்ணை. அதற்கடுத்து மரவேலைப்பாடுகளுடன் கனமான ஒற்றை தேக்குக் கதவு.

உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் சாமியறை. அடுத்து உக்கிராண அறை. பிறகு தட்டு முட்டு சாமான்கள் வைக்கிற அறை. வலப்புறம் படுக்கை அறை. படுக்கையறையை அடுத்து சுவரில்லாமல் மேடை போல் மேலேறிய காற்றும் வெளிச்சமுமாய் இருக்கும் சமையலறை.

காற்று விறகடுப்பை அணைத்து விடாதபடி இடுப்புயரம் கட்டப்பட்ட ஒற்றைச் சுவர். கீழே தரையில் அடுப்பு.திண்ணைக்கு கம்பிக் கிராதி போட பணமில்லை. அற்புதத்தின் கணவன் அதற்குள் இறந்து விட்டான். வெறும் பொம்பளையாகப் புழங்க வேண்டி இருக்கிறதே என்று ஒரு பாதுகாப்பிற்காக தட்டி கட்டியிருந்தாள்.அந்தத் தட்டியின் இடுக்கு வழியாகத்தான் கோவிந்தசாமி எதிர்த்த வீட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரது கை வேட்டிக்குள் இருந்தது. எதிர்த்த வீட்டு வாசலில் சிவகாமி ஆச்சி கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

சிவகாமி ஆச்சி உருண்டு திரண்டு அழகாக வளப்பமாக இருந்தாள். நிறம் கொஞ்சம் மட்டுதான். ஆனால், வடிவம் அதை நேர்த்தியாக ஈடு செய்திருந்தது.வீட்டுக்குள்ளிருந்து அவருடைய மகள் அற்புதம் வாசல் தெளிக்க வர, ‘‘வெட்டிப் போட்டா நாலு சிங்கம் தின்னும்; என்னமா ஒடம்ப வளத்து வச்சிருக்கா பாரு…’’ என்றார்.அவள் எதுவும் சொல்லவில்லை. பிறந்ததிலிருந்து அவளுக்கு அவரது குணம் தெரியும். தன் அம்மா, அவரிடம் பட்ட பாடு எல்லாம் தெரியும்.

அவளுடைய கல்யாண நிச்சயதார்த்தத்தின்போது, தன் இலைக்கு அப்பளம் வரவில்லை என்று திருமண மண்டபமே அதிரும்படி கூச்சல் போட்டவர்தான் அவர்.மறுநாள் திருமணத்தின் போது, சொன்னபடி அவர் நகை போடவில்லையென மாப்பிள்ளை வீட்டார் கோபித்துக் கொண்ட போது, ‘‘தாலி கட்டுனா கட்டு; இல்லே, போயிட்டே இரு; என் மக தாலியறுத்துட்டதா நெனச்சுக்கிறேன்…’’ என்று அச்சாணியமாகப் பேசினார்.

அப்புறம் பெரியவர்கள் எல்லாம் சமாதானப்படுத்த, அற்புதத்தின் கழுத்தில் தாலி ஏறியது.

கோவிந்தசாமியின் வாய் முகூர்த்தமோ என்னவோ, ஏறிய ஓரிரு வருடங்களில் தாலி இறங்கியது. மருமகன் இறந்து, மகள் துக்கப்பட்டு வந்து நின்றபோது கூட மனிதர் கலங்கவில்லை. பதினாறாம் நாள் காரியத்திற்கு இலையில் சம்பந்தி மரியாதையாக இனிப்பு வைக்கவில்லை என்று சண்டை பிடித்தார்.

அற்புதம் தனது கணவரின் நிலபுலன்களைப் பார்த்துக் கொண்டு, வீடுகளை வாடகைக்கு விட்டு வரும் பணத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாள்.

இவர் மகளைப் பார்த்துக் கொள்வதான பாசாங்கில் மாதத்தில் பதினைந்து நாள் வந்து விடுவார். வந்தால், ஏன்தான் வந்தாரோ என்றிருக்கும். இது சொட்டை, இது சொள்ளை, அது நொள்ளை என்று ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார்.

கோவிந்தசாமி மகள் அற்புதமும், எதிர்த்த வீட்டு சிவகாமி ஆச்சியும் கிட்டத்தட்ட ஒரே வயது. அடுத்தடுத்து ஒரே வருடத்தில் கணவனை இழந்தவர்கள் என்கிற வகையில், அவர்களுக்குள் பச்சாத்தாபமான ஒரு நட்பு இருந்தது. எதிரெதிர் வீடு என்பதால், குழம்புப் பரிமாற்றம், ரசப் பரிமாற்றம் நடந்து வந்தது.அற்புதம் கோலம் போட்டுக் கொண்டிருக்கையில் நிழலாடியது. நிமிர்ந்தாள். சிவகாமி ஆச்சிதான்.

‘‘வெள்ளாளப் பட்டி வீட்டை வித்துட்டோம். பாஸ்கரன் சாருக்குத் தெரிஞ்சவங்கதான் வாங்கியிருக்காங்க. வாங்கினவங்க பாதிப் பணம் பேங்குல போட்டுட்டாங்க. மீதிய ரெண்டு தரமா தர்றேனிருக்காங்க. இன்னிக்கு போகணும். பாஸ்கரன் சாருக்கு உடம்பு முடியலையாம். ஆம்பளத் துணை இல்லாம, தனியா போவ முடியாது. உங்கப்பாரு வருவாரா? கேட்டுச் சொல்லுவே…’’

‘‘அதெல்லாம் ஊருக்கெல்லாம் நல்லாவே உழைப்பாரு எங்கப்பா. வீட்டுக்கு செய்யுறதுதான் வலிக்கும்…’’ என்று சிரித்தாள் அற்புதம்.அற்புதத்திற்குத் தெரியும். பாஸ்கரன் சார் ரொம்ப நல்ல மாதிரி. சிவகாமி ஆச்சியுடைய வீட்டுக்காரர் மெய்யப்பர் நடத்திய ஸ்கூலில் ஹெட்மாஸ்டர் அவர்.

மெய்யப்பர் இருந்தவரைக்கும் பண்டிகை, பலகாரம் என்றால், அது பாஸ்கரன் சாரோடுதான். அவர் இறந்த பின்னும் அது அப்படியே தொடர்ந்தது. பாஸ்கரன் சார் மனைவியும் ரொம்ப நல்ல மாதிரிதான். எதையும் விகல்பமா எடுத்துக்கத் தெரியாத நல்ல மனசு. சிவகாமி ஆச்சி மகள் சுகுணாவுக்கு வீட்டு ட்யூசன் சொல்லித்தர, பாஸ்கரன் சார் வருவார். வந்தால் நைட் சாப்பாட்டுக்குத்தான் கிளம்புவார்.

அற்புதம் வந்து சொன்னதும், கோவிந்தசாமி பிகு பண்ணாமல் சரி என்றார். எதிர்த்த வீட்டுக்குப் போய் விவரம் கேட்டு வருகிறேன் என்று போனார்.சிவகாமி ஆச்சி, ஷர்பத்தும் சிரிப்புமாய் வரவேற்றாள். அவள் மகள் சுகுணாவும் இருந்தாள்.‘‘வாடி சுகுணா என்னைக் கட்டிக்கிறியா… தாத்தாகிட்ட ஏன்டி வெக்கப்பட்றே…’’ அவளை மடியில் இழுத்து வைத்து இறுக்கிக் கொண்டார். அவள் நெளிந்தாள். அப்படியே அம்மா மாதிரி என்று சொல்லி அவள் கன்னத்தைக் கடித்தார்.

மதியம் கோவிந்தசாமியும் சிவகாமி ஆச்சியும் பஸ்ஸில் வெள்ளாளப்பட்டி போனார்கள். பஸ் ஏற அவளுக்கு உதவுவது போல மார்பை அழுத்தினார். அவள் ஏதும் சொல்லவில்லை.பிறகு பஸ்ஸில் உட்கார இடம் கிடைக்காமல் நின்று கொண்டே செல்லும்படி ஆனபோது, அவளோடு கூடவே நின்றுகொண்டிருந்தார். பஸ்ஸின் சிறிய ஆட்டத்திற்கும் உடம்பு முழுவதும் பட்டார்.

அவளேதும் வித்தியாசமாய்ப் பார்க்கவில்லை. புருசன் இல்லாதவதானே. சின்ன வயசு. அவளுக்கும் வேண்டியிருக்கும் என்று நினைத்துக் கொண்டார்.அவர், தருணம் பார்த்துக் கொண்டே இருந்தார்.வேலைகள் எல்லாம் முடிந்து திரும்ப இரவாகி விட்டது. பஸ்ஸில் அவ்வளவு கூட்டமில்லை.அவர் தருணம் பார்த்துக் கொண்டே இருந்தார்.

பஸ் ஸ்டாண்டிலிருந்து இவர்கள் தெருவுக்குப் போக அரை மணி நேரம் நடக்க வேண்டும். மந்தக் கோயில் மைதானம் அருகே திருட்டுப் பயம் அதிகம். சொல்லப் போனால், இந்த அரைமணி தூரம் தனியே வரப் பயந்துதான் அவள், அவரைத் துணைக்குக் கூப்பிட்டிருக்க வேண்டும்.அவர் தருணம் பார்த்துக்….இருள் சூழ்ந்த அந்தத் தெரு முக்கில், ஒரு வேட்டை மிருகம் போலப் பாய்ந்தார்.

‘‘போனாப் போவுது அப்பன் வயசு ஆளுன்னு பார்த்தால், மார் முடி நரச்சும் இன்னும் அடங்கலயாடா நாயே…’’ என்று அவர் கால்களுக்கிடையில் ஓங்கி ஓர் உதை விட்டாள்.‘‘அம்மாஆஆஆ…’’ பத்தடி தொலைவில் புதரில் விழுந்தார். அவள் விடுவிடுவென்று போய்விட்டாள்.

மறுநாள் ஊரே கிசுகிசுத்தது, ‘கோவிந்தசாமி வேட்டியில மண்ணாம்’ என்று.‘போனாப் போவுதுன்னு உன்னைய விட்டது தப்புடி. தாலியறுத்த முண்ட இப்டி ஊரே சிரிக்கப் பண்ணிட்டியேடி’ மனதுள் கருவிக்கொண்டார்.

எது என்னவானாலும், அவர் தட்டி வழியாக எதிர்த்த வீட்டைக் கண்காணிப்பதும், வேட்டிக்குள் கை போவதும் தொடர்ந்தன.கூடுதலாக இப்போது காறிக் காறித் துப்பத் தொடங்கியிருந்தார். கண்ணில், அடிபட்ட நாயின் வெறி. உறுமல். அவர் முகமே ஒரு மிருகம் போல மாறத் தொடங்கியிருந்தது.

எப்போதும் அவர் திண்ணையில் கயிற்றுக் கட்டிலில் படுப்பதுதான் வழக்கம். அன்றும் அப்படித்தான். விடிகாலையில் விழிப்பு தட்டியது. யாரோ கிசுகிசுப்பது போலிருந்தது. மனப்பிரமையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டார். இல்லை, யாரோ மெல்லிய குரலில் விசும்பினார்கள். யாரோ சமாதானப்படுத்தினார்கள்.

உள்ளே வீட்டிற்குள்ளேயா? இல்லை, இவரைத் தாண்டி எவன் இந்த வீட்டிற்கு உள்ளே போக முடியும்?எழுந்து தட்டி வழியாக எதிர்த்த வீட்டைப் பார்த்தார். சிவகாமி ஆச்சிதான். மெல்லிய நிழலாகத் தெரிந்தாள். அவளைத்தான் கடும் இருட்டிலும் அவருக்கு அடையாளம் தெரியுமே. கூட நிற்பது யார்? ஓர் ஆணுருவம். அதுவும் அவருக்குத் தெரிந்த உருவம்தான். பாஸ்கரன் சார்.

சிவகாமி ஆச்சி வீட்டின் வெளித்திண்ணையில் ஒரு சிறிய அறை உண்டு. இருவரும் அதற்குள் நுழைந்தார்கள்.அடப் பாதகத்தி! கோவிந்தசாமிக்கு எல்லாம் விளங்கியது. நொடிகூடத் தாமதிக்கவில்லை அவர். கத்தி வீச்சு போல, சரேலென எதிர்த்த வீட்டிற்குப் போனார். கண்ணிமைக்கும் நேரம், உள்ளிருப்பவர்களுக்கும் ஏழு தெருவுக்கும் கேட்கும்படி, தடாலென சப்தம் எழ அந்தச் சிறிய அறையின் கதவைத் தாழிட்டார். திரும்ப எப்பவும் போல், போய் தட்டிக்குப் பின்னால் நின்று கொண்டார்.

– ஏப்ரல் 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *