அப்பாவின் கணிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 21, 2021
பார்வையிட்டோர்: 3,756 
 

உங்க அப்பா வந்திருக்காரு ! முகத்தை கடு கடுவென வைத்தவாறு ராமனாதனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் பார்கவி, அப்பொழுதுதான் குளித்து முடித்து துண்டை கட்டிக்கொண்டு வெளியே வந்திருந்தார்.

ராமனாதனுக்கும் எரிச்சலாய் வந்தது, என்ன மனுசன், அப்படி என்ன பணத்தேவை இவருக்கு வந்து விடுகிறது. அம்மாவும், இவரும்தான், வீடு சிறியதாய் இருந்தாலும் அவர்கள் இருவருக்கும் போதும். சுற்று வட்டாரத்தில் பெயர் பெற்ற வைதீகர், மாதம் இரண்டு மூன்று இடங்களுக்கு ஹோமம் செய்ய பூஜை புனஸ்காரம் செய்ய யாராவது கூப்பிடுவார்கள். அவர்கள் கொடுக்கும் தட்சணையே இவர்கள் இருவருக்கும் போதும். இப்படி இருக்கும்போதும் விடாமல் மாதம் பிறந்தால் கண்டிப்பாய் ஐந்தாயிரம் கொடுத்தேயாகவேண்டும் என்று வந்து நின்று விடுகிறார்.

முன்னறைக்கு வந்த ராமனாதன் அப்பா அங்கிருந்த ஸ்டூலில் உட்கார்ந்து இருப்பதை பார்த்தார். இதுல கூட கிழவனுக்கு குசும்பு, நடு அறையில் சுற்றி விலை உயர்ந்த சோபா செட்டுகளை போட்டிருக்கிறார். அதில் எதுவும் உட்காரமாட்டாராம், அருகில் சுவற்றை ஒட்டி மறைவாக வைத்திருக்கும் ஸ்டூலை எடுத்து போட்டு உட்கார்ந்திருக்கிறார்.

க்கும்..க்கும் கணைத்தார்..அப்பா அலட்டிக்கொள்ளவே இல்லை. தலையை மட்டும் திருப்பி பார்த்தார். கிழவனின் அலட்சியம் இவருக்கு மேலும் எரிச்சலை வரவழைத்தது. கடு கடுவென மீண்டும் உள்ளே வந்தவர், பீரோவை திறந்து தன் சம்பள கவரில் இருந்து ஐந்தாயிரம் ரூபாயை எண்ணிக்கொண்டு வந்து அப்பா கையில் திணித்தார்.

அப்பா அதை கையில் வாங்கியவர் தன் வேட்டியில் கட்டி வைத்திருந்த சுருக்கு பையில் திணித்து உள்ளே செருகிக்கொண்டவர் அவன் முகத்தை பார்த்தார்.

அதன் பொருள் இராமனாதனுக்கு புரிந்தது. சம்பளப்பணத்துல தான் கொடுத்து இருக்கேன், குரலில் காட்டம்.

சரி நான் வர்றேன், பெரியவர் மெல்ல எழுந்து தடுமாறிக்கொண்டு நடந்தார்.

அப்பா தடுமாறி நடந்த்தை பார்த்த்தும், மனது பதறியது, “பார்த்து..பார்த்து.”. இவர் சொல்ல அவர் மெளனமாய் படி இறங்கி சற்று தள்ளி இருந்த காம்பவுண்ட் கேட்டை நோக்கி நடந்தார்.

அவர் போவதை மெளனமாய் பார்த்துக்கொண்டிருந்தவருக்கு மனசாட்சி இடித்தது. நாலு தெரு தள்ளித்தான் இருக்கிறார். கார் வெளியில்தான் நிற்கிறது, டிரைவரை கொண்டு போய் விட்டு வர சொல்லலாம், ஆனால் அப்பா கேட்க மாட்டார்.பிடிவாதம், இந்த வயதில் இவருக்கு இது தேவையா? ரமேஷ் கொண்டு போய் விடுவதாக் சொன்னால் ஏறிக்கொள்வார். அவன் வெளியூர் போயிருக்கிறான்.

ஒரு டம்ளர் காப்பியாவது கொடுத்திருக்கலாம், இந்த பார்கவி எங்கு போய்

தொலைந்தாள்? என் அப்பா வந்தால் முகத்தை தூக்கிக்கொண்டு போய் விடுகிறாள்.

அப்பாவுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பதால் என்ன நட்டம்? அதுதான் கட்டு கட்டாக

கொண்டு வந்து கொடுக்கிறேனே? நகையும், நட்டுமாக செய்து கொண்டு இருக்கிறாள். இவருக்கு ஐந்தாயிரம் பணம் கொடுப்பது பெரிய செலவாய் முகத்தை தூக்கி வைத்து கொள்கிறாள்.

திடீரென்று மனைவி மேல் கரிசனமும் வந்தது.அவள் பணம் கொடுப்பதற்காக கவலைப்பட்டிருக்க மாட்டாள், மாதம் பிறந்தவுடன் வந்து வசூல் செய்வதால் கோபமாய் இருக்கலாம், கேட்டால் அப்பா ஒரே வார்த்தையில் பதில் சொல்வார். உன்னுடைய சம்பளத்தில இருந்துதான் அந்த பணம் எனக்கு கொடுக்கணும்.

சரியான குசும்பு இந்த கிழவனுக்கு, நான் லஞ்சம் வாங்குகிறேனாம், அதுல இருந்து நயா பைசா வாங்க மாட்டாராம்.

இவர் பெரிய நியாயஸ்தன், இதுவரைக்கும் என்ன சம்பாரிச்சாரு? அந்த பாழடைஞ்ச சின்ன வீடு, அதுக்குள்ள கிழவனும்,கிழவியும்.அப்பப்பா, எப்படித்தான் நான் அந்த வீட்டுக்குள்ள இருந்தேனோ, நினைத்தாலே பயமாயிருக்கு.எப்படியோ படிச்சு பரிட்சை எழுதி கவர்ண்மெண்ட் வேலை வாங்கின பின்னாடிதான் மூச்சு விட முடிஞ்சது.

பார்கவிய கல்யாணம் பண்ணி குடித்தனம் பண்ணரதுக்கே நல்ல வீடாத்தானே வாடகைக்கு பிடிச்சேன். இந்த குட்டி வீட்டுக்குள்ள எப்படி இருக்கறது?அப்ப கூட இந்த பெரிசுக இரண்டு பேரும் வந்து பால் காய்ச்சிட்டு உடனே திரும்பி போயிடுச்சுகளே..

அப்ப இருந்து சம்பளம் வாங்குன உடனே பணம் வேணுமுன்னு கேட்க ஆரம்பிச்சாங்க, ஆச்சு இருபது வருசமா மாசமானா டாண்ணு வந்து நின்னுடறாரு.

எனக்கு மேல் வரும்படி வரவும், இந்த வீட்டை முப்பது லட்சம் ரூபாய் செலவு பண்ணி கட்ட முடிஞ்சது. நேர்மையா சம்பளம் வாங்கி குடும்பம் நடத்தியிருந்தா

இத்தனை வசதியோட இருக்க முடியுமா?இல்லே அப்பாவுக்கு சம்பளத்துல இருந்து மாசமானா அஞ்சாயிரம் ரூபாய் டக்குன்னு எடுத்து கொடுக்க முடியுமா?

வயசான இவங்களுக்கே மாசமானா அஞ்சாயிரம் செலவாகறப்ப எனக்கு ஆகாதா?

யாரோ தோளை பிடித்து உலுக்கவும் சட்டென நினைவுகள் கலைந்து திரும்பி பார்த்தார்.பார்கவிதான் நின்று கொண்டிருந்தாள். என்ன அப்படியே உங்கப்பா போறதையே பார்த்து நின்னுட்டீங்க? ஆபிசுக்கு நேரமாகலையா? டிபன் டேபிளில எடுத்து வச்சிருக்கேன்.

ஆமா..இதா கிளம்பிட்டேன்.டிரைவரை ரெடியா இருக்க சொல்,டைனிங்க் ஹாலுக்கு சாப்பிட விரைந்தார்..

“ரமேஷ்” ராமனாதனின் முகத்தை பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான். ராமனாதன் யோசனையுடன் நின்று கொண்டிருந்தார்.“டாட் யோசிக்காதீங்க, இது எனக்கு கிடைச்சிருக்கற நல்ல ஆப்பர்சியூனிட்டு” ஜெர்மன்ல இப்ப படிக்கபோனேன்னா, மூணு வருசத்துல படிப்பு முடிச்சுட்டு அங்கேயே வேலை தேடிக்கலாம்.

அது சரிப்பா, திடீருன்னு முப்பது லட்சம் ரூபாய் வேணுமின்னா என்ன பண்னறதுனுதான் யோசிக்கிறேன். “பளீஸ் டாட், எப்படியாவது முயற்சி பண்ணுங்க”

அவனின் வேண்டுதல் அவருக்கு கொஞ்சம் இம்சையாகத்தான் இருந்தது. கணக்கில் இருக்கும் பணம் என்றால் ஐந்திலிருந்து பத்துக்குள் இருக்கும், அப்புறம் இவள் வச்சிருக்கற நகை, நட்டு எல்லாத்தையும் வித்தா இருபது லட்சம் புரட்டிடலாம். இவ ஒத்துக்கணுமே, யோசித்தவர் ஒத்துக்க வைக்கணும், இன்னும் ஏழு வருசம் சர்வீஸ் இருக்கு, அதுக்குள்ள சம்பாரிச்சு நகை நட்டு செஞ்சு கொடுத்துட முடியாதா?

கணக்கு போட்டு பார்த்தவர், சரிப்பா ஏற்பாடு பண்ணிடலாம்.

ரமேஷின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிவது போனற பிரகாசம்.

“தேங்க்ஸ் டாட்” மகிழ்ச்சியாய் செல்பவனை கவலையுடன் பார்த்தார் ராமநாதன், பார்கவியிடம் எப்படி நகைகளை கேட்பது?

முரண்டு பிடித்த பார்கவியை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போது மென்றாகி விட்டது. எப்படியோ அவளை சமாதானப்படுத்தி, எல்லா நகைகளையும், கையிருப்பையும் புரட்டி ரமேசுக்கு பணத்தை கட்டி விட்டார். அடுத்த மாதம் கிளம்ப போகிறான்.

அடுத்து வந்த இரண்டு வருடங்கள், ராமனாதன் விட்ட பணத்தை சம்பாதிக்க வேண்டி மற்றவர்களின் வயிற்றெரிச்சலை கிளப்பி விட்டுக்கொண்டிருந்தார்.

அலுவலக்த்தில் திடீரென்று இவருக்கு போன் வர எடுத்து கேட்டவர் அதிர்ந்து விட்டார். “அப்பா இறந்து விட்டார்” மாதம் ஆனால் வீட்டில் வந்து நிற்கும் அப்பா

இந்த பணத்தை வாங்கி செல்வதோடு சரி, வேறு எதற்கும் அவன் வீட்டு வாசலை மிதிக்காத அப்பா.. கண்ணீர் சொல்லாமல் வந்தது.

எல்லா காரியங்களும் முடிந்து அலுவலகத்துக்கு வர பதினைந்து நாட்கள் ஓடி விட்டது. அம்மா, அந்த வீட்டை விட்டு வரமாட்டேன் என்று சொல்லி விட்டாள். அடிக்கடி போய் பார்க்கவேண்டும், நினைத்துக்கொண்டார். ஆனால்..விதி..

அன்று பகல் பதினோரு மணி இருக்கும்,தட தட வென அலுவலகத்துக்குள் பத்து பேர் உள்ளே நுழைந்தனர். ”விஜிலென்ஸுல இருந்து வர்றோம். அப்படியே எல்லாரும் உடகாருங்க.. சொல்லிவிட்டு யாரையும் அங்கும் இங்கும் அசைய விடவில்லை. விறு விறுவென சோதனைகளை ஆரம்பித்து விட்டனர்.

நேற்றுத்தான் பார்ட்டியிடமிருந்து பணத்தை வாங்கி டிராயரில் போட்டிருந்தார். இன்று எடுத்து செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தார். அதற்குள்..

இந்த பணம் எப்ப வந்தது? அவரால் சொல்ல முடியவில்லை…. “தற்காலிக வேலை நீக்கம்” என்னும் கடிதம் கொடுக்கப்பட்டது” வழக்கும் பதிவு செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஓடி விட்டது. வழக்கு செலவுகளுக்கு வீடு, கார் எல்லாவற்றையும் தொலைத்து விட்டார். இடையில் அம்மாவும் இறந்து விட்டிருந்தார். அப்பாவும்,அம்மாவும் இருந்த வீட்டிற்கு குடி போக கூச்சமாக இருந்தது.

இவருக்கு வரவேண்டிய பணி நிலுவை தொகைகைள் எல்லாம் நிறுத்தப்பட்டிருந்தன.எப்படி இழுத்து பிடித்து செலவு செய்தாலும், மாதம் ஐந்தாயிரமாவது செலவுக்கு தேவைப்பட்டது. ரமேஷ் ஜெர்மனியிலேயே ஏதோ ஒரு வேலையில் சேர்ந்துள்ளதாகவும் வருமானம் போதிய அளவுக்கு வரவில்லை, கிடைக்கும் வருமானம் செலவுக்கே சரியாக இருக்கிறது என்று சொல்லி விட்டான்.

அப்பா பெயருக்கு வந்த கடிதம் ஒன்று அங்கும் இங்கும் சுற்றி ராமனாதன் கைக்கு வந்திருந்தது. “உங்கள் மகனின் பெயரில் போட்டிருந்த பென்சன் திட்ட இன்சூரன்சில்” இருபத்தி ஐந்து வருடங்கள் கடந்து விட்டதால், பாலிசிதாரருக்கு மாதம் ஐயாயிரம் வழங்கப்பட அவரது வங்கி எண், மற்றும், அனைத்து விவரங்களையும் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது”

அப்பா மாதம் முதல் வாரத்தில் “மகன், மருமகள்,” இவர்களின் அலட்சியத்தையும்,அவமானப்படுத்தலையும் பொறுத்துக்கொண்டு இவரிடம் வந்து பணம் பெற்று சென்றது எதற்காக என்று இப்பொழுது இவருக்கு புரிந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *