புதிய நட்சத்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 30, 2021
பார்வையிட்டோர்: 3,414 
 

“என்னை நல்லாப்பாருங்கோ …. பார்க்கச் சொல்லுறன். கவனமாய்ப் பாருங்கோ …. என்னைப் பார்க்க ஆர் மாதிரியிருக்குது? ஏன் யோசிக்கிறிங்கள்? நீங்க சி. ஐ. டி. 686 என்ற படம் பார்க்கவில்லையோ? பார்த்தனீங்கள். எனக்குத் தெரியும். எனக்கு வயது கொஞ்சங்குறைவு தான் – அதாலை தான் மீசை இன்னும் கறுத்து வளரேல்லை. ஒருக்கால் மீசை வழிச்சனான் …. ஏன் இப்ப சிரிக்கிறீங்கள் …. ஓ ஓ …. எனக்கு உயரங்காணா தெண்டா நினைக்கிறீங்கள்….? எனக்கு இப்ப பதினெட்டு வயது முடிஞ்சிருக்குது. இருபத்தி ஐந்து வயதுக்குள்ளை நானும் ஜெயச்சந்திரன் பாதிரி வந்திடுவன் – அடடே, சொல்லவந்த விஷயத்தை மறந்திட்டன். என்னைப் பார்க்கிற எல்லாரும் அச்சுரிச்சு ஜெயச்சந்திரன் மாதிரியே இருக்கிறாய் எண்டுதான் சொல்லுகினை … என்ரை பேரும் சந்திரலிங்கம் – நான் படத்திலை நடிக்கப்போன உடனை பேரையும் சுருக்கி சந்திரன் எண்டு மாத்திப்போடுவன்”

PudiyaNatch-pic2அவன் – சந்திரலிங்கம் என்னைக் கவனிக்காமலே வளவளவென்று கதை த்துக்கொண்டு நிற்கின்றான். என்னையும் அவனையும் போவோர் வருவோ ரெல்லாம் ஒரு மாதிரிப்பார்த்துக் கொண்டு செல்வதை அவதானித்த நான், எப்போதடா இவனிடமிருந்து கழரலாம் என என்னுள்ளாக நினைத்து அவதிப்பட்டுக்கொண்டிருக் கின்றேன்.

நான், கிராமத்திற்கும் பட்டினத்திற்கும் இடை நிலையிலுள்ள இவ்வூரில் ஆசிரியனாக நியமனம் பெற்று மூன்று மாதங்களே ஆகின்றன. பள்ளிக்கூடத் திலிருந்து ஐந்து மைல்கள் தள்ளி யுள்ள சிறுபட்டினத்திலிருந்தே நான் தினசரி பஸ் மூலம் பள்ளிக்கூடத்திற் குச் சென்று வருகின்றேன்.

பள்ளிக்கூடத்திலிருந்து சிறிது தள்ளி பஸ் நிற்குமிடமிருக்கின்றது. ஆனந்தபவான் என்ற சிறிய தேனீர்க் கடைக்கு முன்னதாகவே, இங்கே பஸ் நிறுத்தப்படும் என விளக்கும் ஆச்சரி யக் குறியிடப்பட்ட பஸ்பட முள்ள கட்டை நிற்கிறது. தேனீர்க் கடை யின் முன்புறம் சிறிய தாழ்வாரம். ஒரு மருங்கில தனி வாங்கு. அந்த வாங் கிலே உடலிற்களைப்போடும், கையில் புத்தகங்ளோடும் குருநாதன் போல நான் இருக்கிறேன். என்னெதிரே அவன் நிற்கிறான்; கதையாக, சொற்களாக நிற்கின்றான்.

நேற்று இதே நேரம், இதே வாங்கில் நான் இருந்தபோது இவன் அவ்வழியே வந்தான். என்னைப் பார்த்து மரியாதையான பல் தெரியும் சிரிப்புச் சிரித்தான். அந்தச் சிரிப்பு நிரந்தரமாக முகத்திலே ஒட்டி வைத்தாற்போல இருந்தது. பிறகு தான் தெரிந்தது. அவனுக்கு இயல்பிலேயே சிரிக்கும் பற்கள், அதாவது மிதப்பான பற்கள்.

நான் இப்பகுதிக்குப் புதிய ஆசிரியன், என் பள்ளிக்கூடத்திலே பல நூறு மாணவர்கள் அவர்களிலே பலரை எனக்குத் தெரியாமலிருக்கலாம். அத்தகையவர்களில் இவனும் ஒருவனாக இருக்கலாம் என்று நினைத்தேன்.

அவனது சிரிப்பினை ஏற்று நானும் புன்னகைத்தேன்.

பதிலாக அவன் கேட்டான் –

“என்னைத் தெரியுமா?”

எனக்கு ஏனடா சிரித்தோமென்றாகிவிட்டது. சமாளித்துக் கொண்டேன்.

“கண்ட ஞாபகம்”

“ஆ… அப்படித்தான் இருக்கும்…. என்னைப்போலை வேறை யாரவேனை நீங்க கண்டிருக்கிறீங்களா? என்னை நல்லாப்பாருங்க …. நீங்க படம் பார்க் கிறதில்லையோ?”

உணர்ந்து கொண்டேன் நான் இப் போது ஒரு சங்கடத்தினுள் சிக்குப் பட்டுவிட்டதாக. அவனோ என் முகத் தினை, ஆவலோடு , வெகு ஆவேசமான ஆவலோடு துருவிக்கொண்டிருக்கின் றான். என் வார்த்தைகளுக்காக அவன் காத்திருந்தான். எனக்கோ பதிலே சொல்லத்தோன்றவில்லை.

அவ்வேளையில், என் இக்கட்டான நிலையிலிருந்து என்னை மீட்க வருகிறாற் போல பஸ்வந்து என்னை ஏற்றிச்சென்றது.

இன்றோ மீண்டும் என் முன் அவன்.

ஆனால் நேற்றைய விட இன்று எனக்கு அவனது கதைகள் திகைப் பைத் தரவில்லை. அவனைப்பற்றி அறி யவேண்டுமென்ற எண்ணம் நெஞ் சினுள்ளே முனைப்பெடுத்திருந்தது.

“ஏன் நீர் தொடர்ந்து படிக்க யில்லை”

நானே கேட்டேன். அவன், தன் னுடைய நெற்றியிலே கும் பியாக விழும் தலைமயிரை இடதுகை ஆட் காட்டிவிரலால் லேசாகத் தட்டிக் கொண்டான்.

“எனக்குப் படிச்சு உத்தியோகம் பார்க்க விருப்பமில்லை. படிச்சும் என்ன பிரயோசனம்? என்ரை அக்காவும் படிச்சா. எஸ். எஸ். ஸி. கூடத்திற மாத்தான் பாஸ் பண்ணினா. ஆனால் இப்ப வீட்டிலை சும்மா இருக்கிறா…”

அவன் பேச்சிலே திடீரென்று தொய்வு ஏற்பட்டது.

“நான் அக்கா போலை இல்லை. அக்கா நல்ல கெட்டிக்காரி. எனக்கு எதிலையும் மறதி வந்திடுது. ஆறாம் வகுப்புக்கு மேலை படிப்பு ஓட வே யில்லை. நிண்டிட்டன்”

நான் உட்கார்ந்திருந்த வாங்கோ ரமாக உள்ள தடியிலே பூசிக் காய்ந்த சுண்ணாம்பைச் சுரண்டிக்கொண்டே அவன் மௌனமாகி நிற்கின்றான். யோசனைகள். பழையகால நினைவு களை அகழ்ந்து தோண்டும் மனதை அச்சிட்ட முகம்.

நான் அவனது முகத்தினைக் கூர்ந்து பார்த்தேன். வட்டமான முகம். குவிந்து முன் நெற்றியிலே புரளும் கேசம் மிதப்பான பற்கள். நாடியின் இடது புறத்தில் சிறிய கறுப்பு மச்சம். பத்தொன்பது வயது இளைஞனுக்கேயுரிய பொலிந்த, களையான தோற்றம். மெல்லிய பச்சைச் சேர்ட்டும், சறமும் அணிந்திருந்தான்.

“நல்லாப் படிச்சால் தான் படம் நடிக்கிறதுக்குச் சேர்ப்பாங்களா? நீங்க எனக்காகச் சொல்லவேணாம்…. உண்மையைக் சொல்லுங்க. ஆறு மட்டும் படிச்சால் போதாதோ? உங்களுக்கு ஜெயச்சந்திரன் எத்தினையாம் வகுப்பு வரை படிச்சவர் எண்டு தெரியுமோ?”

சிரிப்பும், ஏக்கமுமான குரலோடு அவன் என்னைக் கேள்வியாகப் பார்த்தான்.

நான் படம் பார்க்கின்ற வழக்க முள்ளவன். ஜெயச்சந்திரனின் படங்களும் பார்த்திருக்கின்றன். “உழைப் பால் உயர்ந்தேன்” என்ற தலையங்கத்தில் ஜெயச்சந்திரன் எழுதிய கட்டுரையொன்றையும் தற்செயலாக நான் படித்திருக்கின்றேன். தனக்குப் படிப்பதற்கு நிறைய விருப்பமிருந்தும், தன் வறுமை காரணமாக அது நிறைவேறவில்லையென்றும் ஆனால் பிற்காலத்திலே தான் நிறையப் படிப்பதற்கு உள்ளதாயும் ஜெயச்சந்திரன் எழுதியிருந்தது எனது நினைவிலே வந்தது. அவனும், அக்கட்டுரையைக் கத்தரித்து வைத்திருப்பான் என்பதில் இரண்டாம் பேச்சிற்கே இடமில்லை.

அலட்சியத்தோடு சொன்னேன் நான் –

“ஜெயச்சந்திரனும் பள்ளிக்கூடப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை என்று நான் படிச்சிருக்கிறன்”

அவ்வேளை , என் வார்த்தைகள் அவன் முகந்தனிலே நிறைந்த சிரிப்பாய்ப் பூரிப்பளித்தன. அவன் முகமே சிரிப்பாய், ஏன் அழகாகவுமிருந்தது.

நிறைவோடு பெருமூச்சு விட் டான் அவன்.

“நீங்க தேத்தண்ணீர் குடிச்சிட் டீங்களோ? குடிச்சிருக்கமாட்டீங்கள். தம்பிரெண்டு ரீ போடும், பசும்பால்ரீ!”

அவன் மிகத்தயவோடு அழைத் தான் . சமாளிப்புடன் அவனை நான் புன்னகையோடு பார்த்து. ‘இப்ப தேத்தண்ணி குடிச்சால் வேர்க்கும்” என்றேன். அவன் சிறிது பேசாதிருந்தான். கணங்களே கழிய சிகரெட்?” என்றான் தாழ்ந்த மெல்லிய ரலில், கேட்கக் கூசுகிறாற்போல .

சிறிது காரமாக ஒன்றுமே வேண்டாமென்றேன்.

தேனீர் போடப்போன பையனுக்கு இவன் கையசைத்து மறுத்தான்.

***

பொழுது போகவில்லை. நண்பன் ஒருவன் சினிமாப் பார்க்க அழைத்தான். ஒவ்வொரு முறை படம் பார்த்தபின்னரும், அதைத் திட்டுவதும், இனிப்படம் பார்ப்பதில்லை என்ற நீர் மேல் எழுதிய சபதமும் எடுக்கும் கூட் படத்தில் நாம் இருவரும் அடங்கியி ருந்தோம். ஆனால் அன்றைக் கோவெனில் எனக்கு விருப்பமில்லாதிருந்தும் நண்பனின் வற்புறுத்தலுக்கு இணங்கிச் சம்மதித்தேன். ஜெயச்சந்திரன் நடித்த படம். இங்கே முதன் முறை யாகத் திரையிட்டிருக்கிறார்கள்.

தியேட்டர் வாசலிலே ஒரு வெள்ளைச் சீலையை இழுத்துக் கட்டியிருந்தார்கள். சிவப்பு எழுத்துக்கள் நம்மை பாசிக்கும்படி கண்களிற்குள் வந்து நின்றன.

“ஜெயச்சந்திரனின் புதிய பாணி நடிப்பைக் காணவரும் எல்லா அன்பர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள். உங்கள் ஆதரவுக்கு எங்கள் நன்றி – ஜெயச்சந்திரனின் ரசிகரசிகைகள் ”

சீலை ஆடிற்று. குவிந்திருப்போரின் கண்களிலே மகிழ்ச்சி மின்னியிருந்தது.

திடீரென்று, நான் பழகிக் கேட்ட குரல் :

“அண்ணை நீங்க ஒண்டுக்கும் யோசியாதையுங்க. அது நல்ல கிறவுட் வரும். நாங்க எங்கடை சிலவிலை றோட் டெல்லாம் மையாலை எழுதித் தள்ளி யிருக்கிறம். அங்கை பாருங்க முன் னாலை கட்டுறதுக்கு வாழையும் தோறணமும் வந்திட்டுது ….. நில்லுங்க, நான் அதை ஒருக்கால் ஒழுங்குபடுத்திக் கொண்டுவா றன் ….. கந்தவனம் அந்த வாழையை இஞ்சை கொண்டுவாரும்”

சந்திரலிங்கம் புது மாப்பிள்ளைக் கோலத்தில் நின்றான். அவனது சுறுசுறுப்பைப் பார்த்து மனம் பூரித்த நிலையிலே நின்ற பருத்த உருவம் நிச்சயம் தியேட்டர் நிர்வாகியாகவே இருக்கவேண்டும்.

நடிகர் ஜெயச்சந்திரனின் சிறிய கட் அவுட்’ படம் ஒன்றையும் சந்திரலிங்கமே முன் நின்று செய்ததாய் அங்கே கதைத்துக்கொண்டிருந்தார்கள்.

நண்பனோடு நின்ற என்னை எதேச்சையாகக் கண்டு விட்ட சந்திரலிங்கம் முன்னோக்கி என்னிடம் வந்தான். களி துலங்கும் முகத்தினில் மிதப்பான பற்கள் சிரித்திருந்தன.

“நீங்க இப்பத்தான் வந்தனங்களோ ?”

நான் தலையசைத்தபடியே, என் நண்பன் ஓரக்கண்ணால் சந்திரலிங்கனை நோக்கியதை அவதானித்தேன்.

“காலமைதான் படப் பெட்டி வராட்டில் என்ன செய்யிறதெண்டு நாங்களெல்லாம் பயந் கொண்டிருந்தனாங்கள். நல்ல வேளை. படப்பெட்டி வந்திட்டுது.”

நான் மௌனமாய். மௌனமே யுருவாகி நின்றேன்.

“இந்தப் படத்திலை ஜெயச்சந் திரன் புதுவிதமாய் நடிச்சிருக்கிறாராம். இந்தியாவிலை ரெண்டு தியேட்டரில் இது வெள்ளிவிழாக் கொண்டாடியிருக்குது. சேலத்திலை ரசிகர்கள் எல்லாரும் சேர்ந்து ஜெயச்சந் திரனுக்கு வெள்ளித் துவக்கொண்டு அன்பளிச்சிருக்கனை”

“முன்னாலை கட் அவுட் பார்த்த னீங்களோ? அந்த ஜெயச்சந்திரன் படத்துக்கு மாலை போட்டது ஆர் தெரியுமோ ? நான் …. நான் தான்! நீங்க இப்ப நில்லுங்கோ. நான். பிறகு நேரமிருந்தால் உங்களைச் சந்திக்கிறன், வந்ததுக்கு மிச்சஞ் சந்தோஷம்”

அரை மணித்தியாலங் கழிந்து படந் தொடங்கியது. என் நண்பனிடம் நான் சந்திரலிங்கனின் கதையை ஒன்றும் விடாமற் சொல்லி முடித்துவிட்டேன் – சந்தையில் காய்கறி விற்கும் தாய், குமராகிய பின் எட்டு வருஷமாய் பெருமூச்சு உதிர்க்கும் தமக்கை. ஈட்டிலுள்ள காணி. அடிக்கும் காற் றுக்கு முறிய முனகிக் கொண்டிருக்கும் கொட்டில் வீடு. படத்தைப் பார்க்கப் பார்க்க எனக்கு ஆத்திரம் மேலிட்டுக் கொண்டுவந்தது. தியேட்டரோ கை தட்டலாலும், சீக்காய் விசிலடிப்புக் களாலும், சிகரெட் புகையாலும் நிறைந்து கொண்டிருந்தது. கதாநாயக முதல் கதாநாயகனின் சிறியதாய் வரை எவ்வளவிற்கு உடலைக் காட்ட முடியுமோ அவ்வளவிற்குக் காட்டினார்கள். இரவுக் கிளப், கனவு நடனம். பூந்தோட்டத்தில் புரள்தல் ஆகியசகல கட்டங்களிலும் ஜெயச்சந்திரன் புகுந்து விளையாடினார். நீதி மொழி களைச் சொல்கின்ற போதிலே அவரது முகம் குளோசப்பிலே வந்து நின்றது. விசிலும், கைதட்டலும் தியேட்டரையே அதைக்க வைத்தன…

எனக்குத் தலைக்குள் தணல் கொதித்தது.

அளவுமீறி யதொந்தரவுகள் நிறைந்த பின்னர், மனிதனுக்கு அந்த உணர்ச்சியின் அத்திவாரத்திலேயே நகைச்சுவையுணர்வு கிளர்ந்து விடுகிறது. என் நண்பன் பாமர ரசிகர்களை பார்த்து ரசித்துக் ண்டல்களாய்ச் சொரிந்து கொண்டிருந்தான்.

இடைவேளையின் போது சந்திரலிங்கம் எங்களிருவருக்கும் சோடா, கடலை ஆகியன வாங்கிக்கொண்டுவந்த போது எனக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது. அவனோ விடாதவன் போல நின்றதால் வேறுவழியின்றி அவனது உபசாரத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். அவனுக்கு அது மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.

படம் முடிந்து வெளியே போன பொழுது சந்திரலிங்கம் உள்ளூர் எம்.பி.யோடு கதைத்துக்கொண்டு நின்றதைக் கண்டேன். அவரும் ஜெயச்சந்திரன் ரசிகமன்றத்தின் ஆதரவாளராக இருக்கலாம்.

***

“இந்தப் படங்கள் எவளவு லூசன்களையும், சமூகத்துக்கு கெடுதல் களையும் உண்டாக்குது ….”

என் நண்பன் ஆத்திரமாய்ப் பொழிந்தான். சந்திரலிங்கத்தை மனதில் வைத்துத் தான் அவன் அப்படிச் சொல்லியிருக்க வேண்டும்.

சினிமாவில் குற்றம் சொல் லாதை. விஞ்ஞானம் அளித்த அரிய கொடை இந்தச் சினிமா. இந்த நவீன சாதனத்தைப் பணம் ஒன்றையே குறி யாகக் கொண்ட அமைப்பில், நிச்சயமாக மனிதனின் முற்போக்குச் சிந்தனையை மழுங்கடிக்கவும். கீழான உணர்ச்சியினை எல்லா விதத்திலும் தட்டியெழுப்பிப்பணம் சம்பாதிக்கவுந்தான் பாவிப்பார்கள்” நண்பன் சிறிது தாமதித்துச் சொன்னான்.

‘ஆனால் தமிழ் சினிமா சுத்த மோசம். படத்துவங்கின நிலையிருந்து நான் கண்ட அந்தச் சினிமாவிசரன் …..’

“தமிழிலை மட்டுந்தான் இப்பிடி யெண்டு நினைக்கப்படாது. மக்களுக் குச் சேவை செய்வதைப் புறக்கணித்த பணம் ஒன்றையே குறியாகக் கொண்ட கலாச்சாரம் நிலவும் எங்கேயுந்தான் இந்தக் கோளாறு உள்ளது. மேற்கு நாடுகளில் இதை விட மோசமான நிலைமையிருக்கிறது. நடிகர் பெயரிலை சங்கம், நடிக நடிகையரின் உடை நடை பாவனைகளைப் பின்பற்றல், நடிகைகளின் நினைவாலேயே பைத்தியம் பிடிக்கும் பலவீனங்கள், மனமுறிவுகள் ஆகியன மேற்கு நாடுகளிலே சர்வசாதாரணமாகி விட்டன. மக்களிடையே பல விதத்திலும் சிந்தனை மழுங்கடிப் பினைச் செய்வதற்கு சினிமா சிறந்த சாதனமாயிருப்பதாலேயே இக்கெடுதல். இக்கெடுதலை புதிய கலாச்சாரம் ஒன்றை நிறுவுவதன் மூலமே தகர்த்தெறிய முடியும் ….”

என் மனதின் எண்ணங்கள் வார்த்தை வடிவத்திலே ஒழுங்கு பெற்றன.

என்னை அவதானித்த நண்பன் கேட்டான்:

“அது நடக்குமென்று நீ நம்புகிறாயா?”

“நான் அதை மனமார நம்புகின்றேன். ஆனால் இந்த அமைப்பில் அல்ல”

அவன் சிறிது யோசித்து விட்டுச் சொன்னான்.

“நீ நம்புவது எப்ப நடக்குமோ ?”

“சும்மா சொல்லி நம்பிக்கொண்டிருக்கவில்லை நான். முதலாளித்துவ அமைப்பில், முதலாளித்துவக் கலை இலக்கியப் படைப்பில், முதலாளித்துவ அம்சங்களேயிருக்கும். இதனால் இந்த முறையை நொருக்கியெறிந்து. எல்லா மக்களுக்கும், கோடிக் கணக்கான உழைக்கும் மக்களுக்கும் சேவை செய்யும் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டுமென்ற போராட்டத்தைப் போற்றி, அதனோடு கலந்து, அதன் வெற்றியை எதிர்பார்க்கும் கோடிக் கணக்கானோரில் நானும் ஒருவன்!”

நண்பன் கண்களைக் கீழே தாழ்த் திவிட்டு நிமிர்ந்தான்.

“அப்படியானால் உன்னோடை கதைச்சவன் போன்ற ஆட்கள் இந்த நாடுகளிலை நெடுக இருப்பார்கள் என்றா நீ சொல்கிறாய்?”

“நிச்சயம். இவையெல்லாம் முதலாளித்துவத்தின் வியாதிகள்”

அந்த வேளை எனது மனக்கண் களிலே சந்திரலிங்கம் தோன்றினான். ஒரு பரிதாபகரமான ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன் அவன். பொழுதுபோகவில்லையே என்று ஒரு நாள் அவன் படம் பார்த்திருப்பான் ஆனால் அந்தப் பொழுதுபோக்கிற் கூடாகவே அவனது மனம் நஞ்சூட்டப்பட்டு விட்டது. தன்னிலையெல்லாம் மறந்து ஏளனத்திற்கிடமான பித்தனைப் போல அவன் மாறிவிட்டான். அவனை இந்த நிலைக்குள்ளாக்கிய கலாச்சாரத்தை எண்ணுகையில் என் மனம் மிக வெறுப்பும் எரிச்சலும் கொண்டு குமுறியது.

***

PudiyaNatch-picஇந்தச் சம்பவம் நடந்து ஒரு வாரங் கழிந்த பின்னர் சந்திரலிங்கத்தை நான் ஆனந்த பவான் அருகே கண்டேன். வாங்கு ஓரமாக உள்ள தடியிலே பூசிக் காய்ந்த சுண்ணாம்பைச் சுரண்டிக் கொண்டே வாங்கில் உட்கார்ந்திருந்த யாரோ புதியவனோடு சந்திரலிங்கம் கதைத்த வண்ணம் நின்றான். தொலைவில் நின்ற சந்திரலிங்கனை அவதானித்த போது ஜெயச்சந்திரன் (கடைசியாக நான் பார்த்த படத்தில்) போலவே சேர்ட் அணிந்திருந்தது தெரிந்தது. அந்தச் சேர்ட்டை வாங்குவதற்காக அவன் தன்னுடைய முதிர்ந்த, வறு மையினால் சோர்ந்த தாயோடு பெரிய சண்டையே பிடித்திருப்பான் என்பதில் ஐயமேயில்லை.

நான் ஆனந்த பவானை அண்மிய போது தான் அவன் என்னைக் கண்டு கொண்டான். முகத்திலே உதட்டோ ரமாகப் பிளாஸ்டர் போட்டிருந்தது.

“என்ன போன கிழமை கடைப் பக்கம் ஆளையே காணயில்லை. எங்கை போயிருந்தீர்?”

“ஓரிடமுமில்லை” அவன் இழுத்தான்.

அவனது முகத்தைப் பார்த்தபடி கேட்டேன்.

“என்ன இது சொண்டிலை பிளா ஸ்டர்? யாரோடையாவது சண்டை பிடித்தனீரோ?”

“இல்லை. அது வேறைகாயம்” அவன் கன்னத்தைத் தடவிக்கொண்டு என்னைப் பார்த்தான்.

‘வேறைகாயமெண்டால்? சும்மா சொல்லும்?’

சிறிது நேரத் தயக்கத்தின் குறுக் கிடலின் பின் சொன்னான் அவன்.

“சில நாட்களுக்கு முந்தி நான் சலூனுக்குத் தலைமயிர் வெட்டுறதுக்குப் போயிருந்தன். நான் படத்திலை நடிக்கப்போற விஷயமும் அவனுக்கு நல்லாகவே தெரியும். அடிக்கடி என்னைக் கேட்டிருக்கிறான். இந்தமுறை அவன் என்னை நல்லாகக் கவனிச்சுப் பார்த்தான். வாய்க்குள்ளை அந்த நேரம் அவன் சிரிச்சபோது எனக்கு அவன் மனதுக்குள்ளை ஏதோ கள்ளம் வைச்சிருக்கிறான் எண்டு தெரிஞ்சுது. ஏன் ஐசே சிரிச்சனீர் என்று கேட்டன் …… சும்மா சொல்லும். நான் கோவிக்கமாட்டேன் … நான் இப்பிடிக் கேட்டதும் அவன் சொன்னான் …”

நான் சந்திரலிங்கத்தைத் துரிதப் படுத்தினேன்.

“என்ன சொன்னவன் ….?”

“உம்மிலை எல்லாம் வடிவுதான் ஐசே . ஆனால் இந்தப் பல்லுகள் மிதந் திருக்கிறது பெரிய அரியண்டமாயிருக்குது. இந்தப் பல்லைப் பார்த்திட்டு உம்மைப் படம் நடிக்கவும் சேர்க்க மாட்டாங்கள்.”

அவன் சொல்லிக் கொண்டு போகையில் முகம் வாடிற்று. சந்திரலிங்கனை நன்றாக உருவேற்றி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் என நினைத் தபோது அவன் மீது பச்சாதாபமேற்பட்டது.

“நான் வீட்டை போயிருந்து கண்ணாடியிலை என்னுடைய முகத்தை ஓயாது பார்த்துக்கொண்டிருந்தன். இரவு சாப்பிடக்கூட இல்லை. எப்பிடிச் சாப்பிட மனம் வரும்? அவன் சொன்னது உண்மைதான். என்ரை பல்லு மிதந்து போய்ப் பார்க்க வலு அரியண்டமாகத்தான் இருந்தது.”

“எப்பிடி ஜெயச்சந்திரன் இப்ப உன்ரை புதுச் சோடி ஆர்?”

சைக்கிளில் போய்க்கொண்டிருந்த ஒருவன் சந்திரலிங்கத்தைப் பார்த்துக் கண்களை வெட்டிச் சிரித்தபடியே கேலி மொழியை அவன் முன்னே வீசிச் சென்றான். சந்திரலிங்கனின் முகம் அந்த நிமிஷத்திலே கறுத்துச் சினந்தது.

“இஞ்சை சில குரங்குகள் இருக்குது. என்ரை முன்னேற்றத்தைப் பார்த்து வயிறு எரியுறாங்கள், எனக்கு எத்தினை கரைச்சல்? மூளை வெடிச்சிடும் போலையிருக்குது. சுறுக்காய் இந்தியாவுக்குப் போய் ஜெயச்சந்திரனைச் சந்தித்தேன் என்றால் எல்லாக் கஷ்டமும் போயிடும். நான் எதிலையோ கதையைத் தொடங்கி எங்கையோ போறன் என்ன? உங்களுக்கு இது அலுப்பாக இருக்குதா?”

நான் தலையசைத்தேன் , அர்த் தப்பட அல்ல. ஆயினும் என் மனதிலே அவன் மீது நான் கொண்டிருந்த அனுதாபம் குறைவதாக உணர்ந்ததோடு, அவனுக்குப் புத்தி சொல்லிப் புதியவனாக வார்த்தெடுக்க வேண்டுமென்ற விருப்பமும் தீவிரப் பட்டது.

“வீட்டிலை போயிருந்து நல்லா யோசிச்சன். சாமக்கோழியும் காவியிட்டுது. இந்தப் பல்லுத்தான் என்ரை முன்னேற்றத்தைக் கெடுக்குது எண்டு நினைக்க நினைக்க ஆத்திரமும், மனவேதனையுமாயிருந்தது. என்னையறியாத மன ஆவேசம வந்திட்டுது. திடீரெண்டு எழும்பிப் போய் மேசையிலை போட்டு என்ரை முகத்தைப் பல்லை இடி இடியெண்டு இடிச்சன்……….”

அவன் அந்தச் சம்பவத்தை யுணர்ந்த வேதனையோடும், பாவனை யோடும் சொன்னபோதில், எனக்குப் பற்களும், உடம்புமே கூசின. பேசா மல் அவனது மேற் சொண்டையே பார்த்தபடி இருந்தேன்.

“கொஞ்ச நேரத்துக்குப் பிறகு எனக்கு என்ன நடந்ததெண்டு தெரியாது. ஆச்சியும் அக்காவும் என்னை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோனவையாம். நான் வாயாலை இரத்தம் வழிய வழிய அறிவே கெட்டுப் போனன். மேற் சொண்டு கிழிஞ்சு இரண்டு இழைப் போட்டிருக்கு. ஒரே வலி. மூண்டு நாளாகப் படுத்த படுக்கை. எனக்கு இப்பொழுது பெரிய கவலை – நீங்க சொல்லுங்க. இந்தப் பல்லை வடிவாக்க என்ன செய்யலாம்?”

அவன் சுற்று முற்றும் பார்த்தான்.

“உங்கடை காலிலே விழுந்து கும்பிடுவன். நீங்க இதுக்கு ஒரு வழி சொன்னியளெண்டால் நான் உங்களைக் கடவுளாய்க் கும்பிடுவன்.”

அவன் குரலின் தள தளப்பைக் கேட்க எனக்குத் தர்மசங்கடமாகப் போய்விட்டது. அவனை, வழிதவறிய பாதையிலிருந்து மீட்டெடுத்து வல்லமையுள்ள இளைஞனாக மாற்றுவதற்கு நான் முயற்சிக்கின்றேன். ஆனால் அவனோ ?

“நான் ஆரவேனை விசாரிச்சுச் சொல்லுறன்”

“முழுப் பல்லையும் பிடிங்கிப் போட்டு, பொய்ப் பல்லுக்கட்டலாம் எண்டு சொல்லுறாங்கள். ஆனால் அதுவும் பின்னுக்குக் கூடாது”

நான் அவனது வீட்டினை நினைவு கூர்ந்தேன். ஒரு நேரச் சோற்றுக்கே அவதிப்படும் வயிறுகள், சந்தையில் காய்கறி விற்கும் தாய். குமராகிய பின் எட்டு வருஷங்களாய்ப் பெரு மூச்சு உதிர்க்கும் தமக்கை. ஈட்டிலுள்ள காணி, அடிக்கும் காற்றுக்கு முறிய முனகிக் கொண்டிருக்கும் கொட்டில் வீடு ……….

“அது என்ன கஷ்டம் வந்தாலும் நான் படம் நடிக்கிறது நடிக்கிறது தான்.”

“அதெல்லாம் சரி உம்முடைய வீட்டைப் பற்றி நீர் யோசிக்கிறதில்லையா? வயது போன உம்முடைய தாயார். கலியாணம் முடியாத அக்கா, இவையளுக்கு உதவி செய்து விட்டு உம்முடைய எண்ணப்படி போனால் என்ன?”

அவன். மேற் சொண்டில் ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்டர் சுருங்கச் சிரித்தான்.

“என்னாலை படம் நடிக்கிறதைத் தவிர வேறை தொழில் செய்ய முடியுமெண்டு நீங்க நினைக்கிறீங்களா? என்ரை சீவன் அழிஞ்சாலும் அது முடியாத விஷயம். அதுவும் இனிப் படிச்சு வேலைக்குப் போகமுடியுமோ? அல்லாவிடில் என்னாலை கூலி வேலைக்குத்தான் போக முடியுமா? நீங்களே நல்லா யோசித்துப் பாருங்க …”

என்னை மீறிக்கொண்டு எனக்கு ஆத்திரம் வந்தது.

“சும்மா பேயன், விசரன் மாதிரிக் கதைக்காதையும். படம் நடிக் ப் போறாராம் படம்! வீட்டிலை ஒரு நேரச் சோத்துக்கே வழியில்லை. எங்கையாவது போய் வேலை செய்து உழைப்பம், நல்ல நோக்கத்துக்காகப் பாடுபடுவம் என்ற யோசினையில்லை …. தறுதலைப்படமும் நடிப்புந்தான் ……..”

அவை என்னை மீறி வெடித்த வார்த்தைகள். என்னை எவ்வளவு கட்டுப்படுத்திவைத்து. அவனது அலம்பலையெல்லாம் பொறுத்து. அவனை அவனது மனநோயிலிருந்து மீட்டெடுக்கலாமென நான் நினைத்தேனோ, அந்த நினைப்பு வீணானது என்ற ஆத்திரத்தில் என்னை மீறி என் வார்த்தைகள் நெருப்பின் வெம்மையோடு சீறின.

நிமிஷங் கழிய அவனைப் பார்த்தேன் . யாவுமிழந்து அழுவார்போல என் முன் ஏக்கமாகி நின்றான்.

***

தவணை விடுமுறை வந்ததும் நான் வீடு போய்விட்டேன். ஒரு மாதங் கழிய மீண்டும் பள்ளிக்கூடத் திற்கு வந்த முதல் நாளன்று பஸ் ஸிற்காகக் காத்திருந்த போதிலும் சந்திரலிங்கனைக் காணவில்லை. மறு நாள், மறுநாள், ஒரு வாரமாகியும் அவனைக் காணவில்லை. ஏதோ, அவ்விடத்திலே வெறிச்சோடியது போல எனது மனம் பிரமையுற்றது.

அவனது வீட்டிற்குப் போய் விசாரிக்கலாமோ என்றுகூட நினைத்தேன். தாயின் பரிதாப முகத்தை நினைத்த தும் அங்கு போகவும் மனம் வர வில்லை .

இரு வாரங்கள் கழிந்தன. நான் பஸ்ஸிற்காகக் காத்துக்கொண்டு நின்றபோது இரு இளைஞர்கள் கதைத்தது காதிலே விழுந்தது,

“இவன் சந்திரலிங்கம் இந்த இடத்திலை இல்லாதது பெரிய அந்தரமாயிருக்குது. அவன் நிண்டால் என்ன முஸ்பாத்தியாகப் பொழுது போகும்”

‘முஸ்பாத்தி யென்ன. முஸ்பாத்தி? பொறுப்பில்லாமல் அலட்டிக்கொண்டு திரிஞ்ச விசரன். வீட்டிலை அதுகளுக்கு ஒருநேரக் கஞ்சியில்லை. இப்ப அவன் எங்கெங்கை ஓடிப்போய் நிக்கிறானோ?”

பிறகும் அவர்கள். அவனைப்பற்றிச் சிரித்துக் கதைத்துக்கொண்டே போனார்கள்.

அவர்கள் தொடர்ந்து கதைத்ததை என்னால் அவதானித்தும் கேட்க முடியவில்லை.

“எங்கை ஓடிப்போயிருப்பான் படம் நடிக்க இந்தியாவுக்கோ?”

– அஞ்சலி மாத சஞ்சிகை – ஜூன் 1971

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *