கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 12, 2024
பார்வையிட்டோர்: 2,982 
 
 

(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 13-16 | அத்தியாயம் 17-20 | அத்தியாயம் 21-24

அத்தியாயம்-17 

உடல் சிலிர்க்க நிற்கும் அமிர்தாவின் இடையை லேசாகப் பற்றினான் கோபி கிருஷ்ணன். இதுவரையில் எந்த ஆண் மகனின் விரலையும் உணர்ந்தறியாத அவளுடைய மேனி ஒரு இன்ப நடுக்கத்தில் திளைத்தது. மெய் மறந்த நிலையில் அவள் மனம் எதையும் நினைத்துப் பார்க்க இயலவில்லை. சிந்தித்துத் தெளிவுபெற முடியவில்லை. அமிர்தா அப்படியே நின்றாள்.

இப்போது இறுகப் பற்றியது கோபியின் கரங்கள். அவளை அப்படியே வாரி இழுத்தான். அவளுடைய புடவைத் தலைப்பு நழுவுவதையும் அவள் உணரவில்லை. அவளை அவன் தன் மார்போடு அணைத்துக் கொண்டான். தன்னுடைய அதரங்களை நோக்கி அவனுடைய அதரங்கள் அவசரமாக ஒரு வெறியுடன் வருவதை அவள் லேசாக உணர்ந்த போதிலும், தன்னை மீட்டுக் கொள்ள அவள் நினைக்கவில்லை. அவனுடைய ஆண்மையில் அவள் அடங்கிப் போனாள்.

அவளுக்கு இப்போது உதடுகள் வலித்தன. கீழுதட்டில் சிறிதே ரத்தம் கசிவதை அவள் மெதுவாக உணரலானாள். அவள் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். 

“ஐ.ஆம் ஸாரி, அமிர்தா! நான் என்னையே மீறிப்போய் விட்டேன்”. 

அவள் பதில் சொல்லவில்லை. 

“என்னை மன்னித்துவிடு, அமிர்தா.”

அவள் இப்போதுதான் புடவைத் தலைப்பு கலைந்து கிடப்பதை உணர்ந்தாள். இத்தனை நேரமாக அவளுடைய மார்பகம், அவனுடைய பார்வைக்கு ஒரு விருந்தாக அமைந்து விட்ட மார்பகம் ஆதரவு இன்றி அனாதையாக இருந்திருக்கிறது. 

அவள் அவசரப்படாமல் புடவைத் தலைப்பால் மறைத்துக் கொண்டாள். 

“அமிர்தா!”

“உம்..” 

“என்னை மன்னித்துவிடு”. 

“உம்..” 

“என்ன உம் கொட்டுகிறாய். நான் செய்தது தப்புதான்.” 

“உம்..” 

அமிர்தா மெதுவாக எழுந்தாள். மேஜை மீது கிடக்கும் தன்னுடைய கைப்பையை எடுத்துக் கொண்டாள். கோபியை ஏறிட்டும் பார்க்காமல் கதவை நோக்கி நகரலானாள்.

“அமிர்தா” 

அவனுடைய குரல் ஒரு அலறலாகக் கேட்டது. அவள் நின்று திரும்பிப் பார்ந்தாள். 

”நாம் ரெண்டு பேரும் டாஜ் ஓட்டலில் சாப்பிட இருக்கிறோம்!” 

“எனக்கு என் பசி அடங்கிவிட்டது.”

“நான் உன்னை உன் வீட்டில் கொண்டுபோய் விடுகிறேன்.”

“தாங்க்ஸ்… ” அவள் இப்போது பழைய அமிர்தாவாக மாறிவிட்டாள். நடந்ததெல்லாம் ஒரு கனவாகத் தோன்றியது. 

ஆனால் அந்தக் கனவு எவ்விதமான வெறுப்பையும் அள்ளிக் கொட்டவில்லை. இன்னும் ஒருமுறை இதே கனவு பிறக்கக் கூடாதா என்ற ஆசைகூட உண்டாயிற்று. 

“இல்லை அமிர்தா… நான் உன்னை வீட்டில் கொண்டு வந்து விடறதாக உன் அப்பாவுக்கு பிராமிஸ் பண்ணியிருக்கேன்… “

“உங்களிடமிருந்து தள்ளி நிற்பது தான் எனக்கு நல்லது என்று தோன்றுகிறது மிஸ்டர் கோபி!”

“ஏன் அப்படிச் சொல்லுகிறாய், அமிர்தா?”

“நான் இதுவரையில் எந்த ஆணுக்கும் மயங்கியதில்லை. எவனுடைய உடலும் என்னை ஈர்த்ததில்லை… ஆனால் இன்னிக்கு… இன்னிக்கு நான் என்னையே அடக்கிக் கொள்ள முடியாமல் மீறிப் போய் விட்டேன்… இன்னிக்கு நடந்தது எனக்கு ஒரு பாடம். இதை நாம் இருவரும் இனிமேல் ஒரு சாட்சியாக வைத்துக்கொண்டு பழக வேண்டும் மிஸ்டர் கோபி!” 

“எனக்குப் புரியவில்லை”. 

“நம்ம மனசு ஒண்ணை ஒண்ணு பார்த்துப் பழகி புரிந்து கொள்வதற்கு முன்னாடியே நம்ம ரெண்டு பேருடைய உடம்புகளும் ஒண்ணை ஒண்ணு பார்த்துப் பழகிக் கொண்டு விட்டது. இனிமேல் நான் என் உடம்புக்கு இந்தச் சந்தர்ப்பத்தை மீண்டும் கொடுக்க மாட்டேன்”. 

“அமிர்தா”. 

“யெஸ்”

‘ஐ லைக் யு” 

“புரியவில்லை!” 

“ஐ லவ் யு!”

திடீரென்று அமிர்தாவுக்குக் கோபம் வந்தது.

“காதலைக் கேவலப்படுத்தாதீர்கள், கோபி!”

“என்ன உளறுகிறாய்?”

“உண்மையான காதல் இருந்தால் அது வாய் வார்த்தையாய் வெடித்து வெளியே வராது… நெஞ்சு வெடித்துப் பீறிட்டு வரும்… காதல் மின்சார விளக்கு மாதிரி அல்ல, ஸ்விட்சைப் போட்டதும் எரிவதற்கு… அது மனசிலிருந்து தெறிக்கிற ஒரு மின்னல். என் உடம்பு மேல் உங்க உடம்புதான் இதுவரை பட்டிருக்கு…உங்க மனசு இன்னும் என் மனசைத் தொடக்கூட இல்லை”

“அது என் தப்பு இல்லை. அமிர்தா.”

“தெரியும்… ஆனா உங்க மனசு என்னைத் தொட்டு, என் மனசும் உங்க மனசைத் தொடறபோதுதான் என் நிலை என்னன்னு எனக்குப் புரியும்.” 

“ஒரு சாதாரண காதல் என்கிற உணர்ச்சியை நீ ஒரு வேதாந்த சித்தாந்தமாக மாற்றுகிறாயே அமிர்தா!”

“காதலில் சாதாரணம், முக்கியம், அபூர்வம்னு எதுவும் கிடையாது. காதல். அவ்வளவுதான். அது என்னைப் பொறுத்த வரையில் தாயின் பாசத்தைப் போன்ற, பக்தனின் பக்தியைப் போன்ற ஒரு உணர்ச்சி இயல்பாக, இயற்கையாக வர வேண்டிய ஒரு நீர் வீழ்ச்சி… நான் வருகிறேன்… நான் வருகிறேன் மிஸ்டர் கோபி கிருஷ்ணன்”. 

அமிர்தா உன்மத்தம் பிடித்தவளைப் போல கத்துவதாகத் தோன்றியது கோபிக்கு. இனியும் அவளைத் தடுத்து நிறுத்துவது விவேகமாகப்படவில்லை. 

அமிர்தா மெல்ல மெல்ல நடந்து பஸ் ஸ்டாண்டை அடைந்தாள். கோபி அவளுடைய வீட்டுக்கு வந்தது; அவனுடன் காரில் சென்றது; குளியல் அறையில் முகத்தைக் கழுவி, பவுடர் பூசி, குங்குமம் இட்டுக் கொண்டு, மலர்ந்த முகத்துடன் அவன் முன் நின்றது; ‘நீ மகாலட்சுமி போல இருக்கிறாய்’ என்று அவன் சொன்னது எல்லாம் ஏதோ எங்கேயோ பார்த்த, கேட்ட நிகழ்ச்சிகளாகத் தோன்றின. அவள் எப்படி அவனுடைய அணைப்புக்கு ஆளானாள்? ஏன் தன்னைத் தானே தடுத்துக்கொள்ள அவள் முயலவில்லை? உண்மையிலேயே அவன் கவர்ந்து விட்டானா? அந்தக் கவர்ச்சி அவளுள் ஒரு தாகத்தை ஏற்படுத்தி விட்டதா? அந்த தாகத்தைத் தீர்க்கத்தான் கோபி அப்படிப் பாய்ந்து வந்தானா? 

ஆனால் அவளுடைய தாகம் இன்னும் அடங்க வில்லையே? இது அவளுடைய குறையா? அல்லது அவளுடைய பெண்மையின் இயற்கையான போதாமையா? 

நடந்ததற்காக அவள் சிறிதும் கவலைப்படவில்லை. வருந்தவில்லை. எதிர்காலத்தில் அவளுடைய உடலின் ரகசியங்களையெல்லாம் கோபிதான் அறிந்து ரசித்து அனுபவிக்கப்போகிறான் என்று அவளுடைய உள் மனம் ஆரம்பத்திலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை இதுதான், தன்னை அப்படி அர்ப்பணித்துக் கொள்ளுவதற்கும் மூலகாரணமாக இருந்திருக்க வேண்டும். 

ஆனாலும் அவள் ஒன்றைத் தீர்மானமான உறுதியுடன் நிர்ணயித்துக் கொண்டாள். 

அவளுக்குத் தெரியும், கோபிக்குக் கலியாணமாக வில்லை என்று. அவன் ஒரு கோடீஸ்வரன் வீட்டுப்பிள்ளை. அவள் என்னதான் இன்றைக்கு ரகு என்கிற ஒரு மூன்றாம் மனிதன் எறிந்து விட்டுப் போன பணத்துக்கும், சொத்துக்கும் அதிபதியாகப் போனாலும் ஒரு சாதாரண அன்றாடம் காய்ச்சியின் பெண். சமூகத்தில் உருவமும் வடிவமும் இல்லாத ஒரு உயிரோட்டம். அவன் அவனைக் கலியாணம் செய்து கொள்ளவேண்டும். அவள் அவனுக்கு மனைவியான பிறகுதான், அவனுடைய விரல் கூட அவள் மீது படலாம். இதுவரையில் நடந்ததெல்லாம். இனி வரப்போவதற்கு ஒரு அத்தாட்சியாக இருக்க வேண்டும். 

இந்த எண்ணத்தை அமிர்தா ஒரு சத்தியமாக ஏற்றுக் கொண்டாள். கேவலம் அவளுடைய உடல் மட்டும் கோபிக்கு அர்ப்பணமாகக்கூடாது. அவளுடைய நெஞ்சமே அவனுக்குள் அடங்கிப் போகவேண்டும். 

இதற்குத் தேவையானது என்ன ? அவனுடன் பழக வேண்டும். தினம் தினம் பேச வேண்டும். அவனுடைய குணத்தை, மனசை, அவனுடைய இறந்து போன நாட்களைத் தெரிந்து கொள்ளவேண்டும். 

இவற்றையெல்லாம் அவன் மேலதிகாரியாய் இருக்கும் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டே நடத்தமுடியாது. அவள் உடனடியாக வேலையை உதறவேண்டும். ரகுவின் சொத்து இருக்கிறது. வீட்டில் உட்கார்ந்து சாப்பிட அவன் எதற்காக அவ்வளவு சொத்தையும் அவளுக்கு எழுதி வைத்திருக்கிறான்? அவள் தனக்குப் பிடித்த ஒருவளைக் கலியாணம் செய்து கொண்டு அமோகமாக வாழ்வதற்கு! அவள் ரகுவின் மனோபீஷ்டத்தை நிறைவேற்றினால்தான் அவனுடைய ஆத்மா சாந்திஅடையும்! 

அவள் தன்னை மறந்த நிலையில் வந்து நின்று போன ஓரிரு பஸ்களைத் தவற விட்டு விட்டாள் 

மீண்டும் இந்த உலக நினைவுக்குக் காத்திருந்தாள். வெகு நேரத்துக்குப்பிறகு ஒரு பஸ் வந்தது. ஏறினாள். அப்போது தான் அவளுக்குத்தள் வயிற்றுப் பசி நினைவுக்கே வந்தது. 

அத்தியாயம்-18

கௌரியின் பிடிவாதம் எல்லையைக் கடந்து போகிறது என்பதை அறிந்தும் பொறுமை இழக்காமல் மோகன் சமாதானப் படுத்தப் பார்த்தான். அவளுடைய தந்தை பசுபதியும் என்னென்னவோ சொல்லிப் பார்த்தார். 

ஆனால் கௌரி மசியவில்லை. 

“என்னால் ஒரு நிமிஷம் கூட அந்த வீட்டில் இருக்க முடியாது!” என்றாள் அவள். 

மோகனுக்கு இப்போதும் கோபம் வரவில்லை.. இப்படி மாப்பிள்ளை ஒரு கோழையாக இருக்கிறானே என்று பசுபதிக்குத் தோன்றியிருக்க வேண்டும். அவர் சொன்னார். 

“எனக்கு ஒண்ணு நன்னா வெட்ட வெளிச்சமாப் புரியறது… உன் மாமியார், கோத்ரெஜ் பிரோவும், கட்டிலும் கேட்கிறாள் என்ற காரணத்துக்காக அந்த வீட்டை விட்டு வரவில்லை. அந்த மாமியாருடன் வாழ்க்கை நடத்தறதே முடியாத காரியம் என்கிறாயே, நீ” என்றார். 

“அப்பாடி! என்அப்பாவுக்கு இப்பத்தான் புரிஞ்சிருக்கு. ஆனா என் தலை எழுத்து, யாருக்கு முக்கியமாப் புரியணுமோ அவருக்கு இன்னும் புரியவில்லை.” மோகன் சிரித்தான். 

”கௌரி/ என்னை ரொம்பத் தப்பா எடை போட்டிருக்கே… உன்னைக் கலியாணம் பண்ணிண்ட மறுவாரமே நீ வலது காலை வைத்து என் வீட்டுக்குள் பிரவேசித்த அன்னிக்கே எனக்குப் புரிஞ்சுடுத்து…. உன் மனசை எப்படியாவது மாத்தலாம், மாத்தலாம்னு இத்தனை நாளா பேசாம இருந்தேன்!” என்றான் மோகன். 

பசுபதி அவனை ஆச்சரியத்துடன் பார்த்தார். 

“நீங்க சொல்றது உண்மையாக இருந்தாலும், உங்களால் என்னை மாத்த முடியவில்லையே!” 

“மாத்த முடியும், கௌரி.” 

“சரி, ரொம்ப சரி. மாத்திப் பாருங்கள்!”

பசுபதிக்கு இப்போது ஆத்திரம் வந்தது. 

”கௌரி, மாமியார் மாமனார் என்கிற மரியாதை இல்லாமல் அவர்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் இங்கே ஓடிவந்து வயிறு புடைக்கத் திங்கறே. இப்போ உன் புருஷனையும் எதிர்த்துப் பேசி அவமானப்படுத்தறே!” 

“அப்பா, ரொம்ப விரட்டாதீங்க… வக்கு இல்லாத அப்பன் இருக்கிறதனால்தான், நான் வக்கு இல்லாத இடத்துக்குப் போனேன்!” 

“இப்போ என்னையும் அவமானப்படுத்திட்டே இல்லை…? மாப்பிள்ளை… நீங்கள் உங்க வீட்டுக்குப் போங்கள்… இவள் வாழ்ந்தால், உங்க வீட்லே வாழ்வாள்… இல்லாமல் போனால்… இல்லாமல் போனால்…”

பசுபதிக்கு மேலே தொடர முடியவில்லை. மூச்சு வாங்கியது. 

“நான் முடிச்சுக் கொடுக்கிறேன் அப்பா! இல்லாமல் போனால் எழும்பூர் லேடீஸ் ஹாஸ்டல்லே வாழ்வேன்!”

“என்ன கௌரி, நீ விவேகமே இல்லாமல் பேசுகிறாய்… கலியாணமான பெண் ஒரு ஹாஸ்டல்லே போய் இருக்கிறது அவமானம் இல்லையோ?” என்றான் மோகன். 

“ஊரும் உலகமும் என்னைப் பார்த்துச் சிரிக்காது. கையாலாகாத புருஷன்னு உங்களைப் பார்த்துத்தான் கை கொட்டிச்சிரிக்கும்”. 

“மாமா, நீங்கள் நல்ல வார்த்தையாச் சொல்லி கௌரியை அழைத்து வாருங்கள்… இன்னும் ரெண்டு மூணு நாளிலே நானே கடன் வாங்கி பீரோவையும், கட்டிலையும் அனுப்பி வைக்கிறேன். அதுக்கு அப்புறம் என் அம்மா மனசு மாறி விடுவாள்… இவள் பேரிலே அவளுக்கு, இவள் நினைக்கிற மாதிரி எந்தவிதமான வெறுப்பும் கிடையாது”.

“அவசரப்பட்டு கட்டில் பீரோன்னு ஏதும் வாங்காதீர்கள், மாப்பிள்ளை” என்றார் பசுபதி. 

“என் அம்மாவுக்கு ஏதோ ஒரு ஆசை, ஏன்? தன் பிள்ளைக்கு என்று நாலு பேர் பார்த்து ஆச்சர்யப்படும்படி ஒரு சீரும் வரலையேங்கற தாபத்திலே பிறந்த ஆசை. அதை யார் தீர்த்து வைத்தால் என்ன? கெளரி எங்க வீட்டுப் பெண், அவள் மனசும் சரி. என் அம்மா மனசும் சரி, வேதனைப்படக் கூடாது”. 

“கேட்டாயா, கெளரி, கேட்டாயா! இந்த மாதிரி ஒரு பிள்ளை உனக்குப் புருஷனா வாய்ச்சிருக்கான். அதை அனுபவிக்க உனக்கு புத்தி இல்லையே?”

“நான் வரேன் மாமா”

மோகன் இரண்டடி வைக்கவும், படியேறி அமிர்தா உள்ளே வரவும் சரியாக இருந்தது. 

“ஹலோ மிஸ்டர் மோகன், சவுக்கியமா?”

“இருக்கிறேன்.”

“நல்ல சமயத்துக்கு வந்திருக்கிறாய், அமிர்தா… கௌரி ரொம்ப அடம் பிடிக்கிறா!”

“ஏன்? என்ன கௌரி?”

“உனக்கு ஒண்ணுமில்லை!” என்றாள் கௌரி. 

பசுபதி விஷயத்தை விளக்கினார். 

“அப்போ கட்டிலும் பீரோவும் முக்கியமில்லைன்னு சொல்லுங்கள்” என்றாள் அமிர்தா. 

“கரெக்ட்… தனிக்குடித்தனம்தான் கௌரிக்கு முக்கியமாகப் படறது”. 

“மாப்பிள்ளை சார், நீங்க என்ன சொல்லுகிறீர்கள்?”

“நான் என் அம்மா, அப்பாவுக்கு ஒரே பிள்ளை. நான் அவர்களை அனாதைகளாக விட்டு விட்டு வர முடியாது. அதே சமயம், கௌரி என் மனைவி. அவள் எழும்பூர் வேடீஸ் ஹாஸ்டலில் தனியா வாழறதுக்காக, அவளை நான் கலியாணமும் செய்து கொள்ளவில்லை.” 

“குட், வெரி குட்…” என்றாள் அமிர்தா. 

“பிரச்சினையைத் தீர்க்க முதலில் வழி சொல்லு அமிர்தா… உன் குட்டும் வெரிகுட்டும் யார் கேட்டார்கள்?” என்றார் பசுபதி. 

“அப்பா, உங்களுக்குத் தான் கௌரியின் குணம் தெரியுமே! நீங்கள் அவளை ரொம்பவும் செல்வமாக வளர்த்து, குட்டிச் சுவராக ஆக்கிவிட்டீர்கள். தரித்திர வீட்டிலே பிறந்திருந்தாலும், அவள் கஷ்டத்தைப் பார்த்ததில்லை. அவள் இனி மேலாவது கொஞ்சம் கஷ்டத்தை அனுபவிக்கட்டுமே!”

“இதுக்குத்தான் நான் உன்னை யோசளை கேட்டேனா?”

திடீரென்று கௌரி குறுக்கே வந்தாள். 

“அமிர்தா, இதைப் பாரு. நீ ஒண்ணும் என் பிரச்சினையைத் தீர்க்கவேண்டாம். என் விஷயத்தில் தலையிட உனக்கு எந்த யோக்யதையும் இல்லை…”

“ரொம்ப கரெக்ட், கௌரி, நீ புருஷன் கூட வாழ்ந்தால் என்ன, எழும்பூர் ஹாஸ்டல்லே நாசமாய்ப் போனா என்ன… எப்படியோ போ… மிஸ்டர் மோகன்… தயை செய்து ஒரு நிமிஷம் இருங்கள்…. உங்களால் எனக்கு ஒரு உதவி தேவைப்படறது”. 

“சொல்லு, அமிர்தா”

“கல்கத்தாவில் ஒரு அவசர வேலை இருக்கு. எனக்கு தனியாப்போகத் தைரியம் இல்லை. ஒரு நாலு நாள் வேலை. ஒரு வாரம் லீவ் எடுத்துக் கொண்டு அழைத்துப் போகிறீர்களா?”

“கல்கத்தாவிலே என்ன வேலை அமிர்தா?” என்று கேட்டார் பசுபதி 

“ரகுவின் விஷயமாக அப்பா!… அப்புறம் எல்லாம். விவரமா சொல்றேன். மிஸ்டர் மோகன், நாளைக்குக் கார்த்தாலே நானே இரண்டு டிக்கெட் வாங்கி விடுகிறேன். பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்தான்… கவலைப்படாதீர்கள்.”

சொல்லிவிட்டு அமிர்தா கெளரியைக் கவனித்தாள்.

“எதுக்கு அனாவசியமா ஃபர்ஸ்ட் கிளாஸ்?” என்றான் மோகன். 

“அப்போ நீங்க இவளை அழைச்சுண்டு கல்கத்தா போகப் போகிறீர்களா?”

“ஆமாம் கௌரி, என் ஹெல்ப் வேணும்னு கேட்கறப்போ முடியாதுன்னு சொல்ல முடியுமா?”

கௌரிக்கு ஆத்திரம் பீறிட்டுக் கொண்டு வந்தது. 

“ஏண்டி அமிர்தா… நான் தெரியாமத்தான் கேட்கிறேன்… நேற்று வரையிலும் அந்த ரகு உன்னைச் சுத்திச் சுத்தி வந்தான். இன்னிக்குப் பட்டப் பகல்லே எவனோ ஒருத்தன் கூட வெட்கம் மானம் இல்லாம காரிலே அவன் பக்கத்திலே உட்கார்ந்து போனே… இப்போ என் புருஷனை அழைச்சுண்டு தனியா கல்கத்தாவுக்கு, அதுவும் ஒரு முதல் வகுப்பிலே போக நினைக்கிறாயே … நீ என்ன ஒரு பெண்ணா? இல்லே, ஒரு மிருகமா?” 

“நீ எப்படி வேணும்னாலும் என்னை மதிச்சுக்கோ அக்கா, எனக்குக் கவலை இல்லை… அப்பா, உங்களுக்கு என் மேலே நம்பிக்கை இருக்கு. இல்லையா, அப்பா”

“நிச்சயமா, அமிர்தா!” 

“மிஸ்டர் மோகன் மேலே எனக்கும் நம்பிக்கை இருக்கு… அவர் ஒரு ஜென்டில்மேன். மிஸ்டர் மோகன், ஃபர்ஸ்ட் கிளாஸ் கிடைக்கலைன்னா ரெண்டு பேரும் பிளேன்லே போகிறோம்!” 

எரிகிற அடுப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இருந்தது கௌரிக்கு. அவள் தன் கணவன் பக்கம் திரும்பி, “இதோ பாருங்கள், நீங்கள் என் தங்கையை அழைத்துக் கொண்டு போகக் கூடாது… அவள் ஒரு ராட்சசி! உங்களைக் கடித்துக் கடித்துத் தின்பாள்!” என்றாள். 

மோகன் சிரித்தான். 

“கௌரி, உனக்குப் பைத்தியம்தான் பிடிச்சிருக்கு. நீ என்னையே உதறி எறிஞ்சு விட்டு எழும்பூர் ஹாஸ்டலுக்கு குடியேறப் போற… அதுக்கு அப்புறம் நான் எங்கே யாருடன் போனால் உனக்கு என்ன? சன்னியாசம் வாங்கிக் கொண்டு போறவனுக்கு, வாசற் கதவு தாழ்ப்பாள் போட்டால் என்ன? போடாவிட்டால் என்ன?”

“கேட்டாலும் கேட்டீர்கள், நன்னா ஒரு வார்த்தை கேட்டீர்கள்!” என்றாள் அமிர்தா. 

அத்தியாயம்-19

அமிர்தாவின் எகத்தாளத்தில் கௌரி துவண்டு போனாள். 

“என்னடி என் ஹஸ்பண்ட் பெரிசா கேட்டுட்டார்னு நீ குதிக்கிறே?”. 

“நீதான் எக்மோர் ஹாஸ்டலுக்குப் போறதுன்னு முடிவு பண்ணிட்டே… அப்புறம் உன் புருஷன் எங்கே இருந்தால் என்ன, எப்படி இருந்தால் என்ன? மிஸ்டர் மோகன், கல்கத்தாவுக்கு இரண்டு டிக்கெட் வாங்கிக் கொண்டு வாருங்கள்… என் காரியங்களைப் பார்த்துக்கொண்டு அப்படியே கல்கத்தா பூராவையும் சுத்திப் பார்க்கலாம்” என்றாள் அமிர்தா. 

இப்போது கௌரிக்கு ஆத்திரத்தைக் கடந்து அழுகை பீறிட்டது. 

“நீங்க கல்கத்தாவுக்கு இந்தச் சிறுக்கியையும் கூட்டிக் கொண்டு போகக் கூடாது…” 

“ஏண்டி கௌரி, நீயே கழுத்திலே ஒரு தாலியை ஏந்திண்டு வேலியைத் தாண்டிக் குதிச்சு ஒடறே. உன் புருஷனை மட்டும் ஒரு வேலிக்குள்ளே சிறைப்படுத்தறே!” 

“இது என் சொந்த விஷயம்… “என்றாள் கௌரி.

பசுபதிக்குப் பொறுக்கவில்லை. 

“அமிர்தா, கொஞ்சம் பேசாம இரு… அவளே நொந்து போய்க் கிடக்கிறாள். மாப்பிள்ளை, கௌரியை அழைத்துக் கொண்டு உங்கள் வீட்டுக்குப் போங்கள். நான்.எப்படியாவது என் தலையை அடகு வைத்தாவது உங்க அம்மா கேட்கிற பீரோவையும், கட்டிலையும் வாங்கிப் போடறேன்”. 

“உங்க தலையை அடகு வைச்சா இந்த மெட்ராஸ்லே ஒரு நயாபைசா கூடப் பெயராது அப்பா… இப்ப நான் நினைச்சா நாளைக்கே போன் மூலமா ஆர்டர் கொடுத்து, டெம்போவிலே ஏற்றி கெளரி வீட்டுவாசல்லே இறக்கச் சொல்லுவேன். ஆனா பாவம், கெளரி வீட்லே எது இடம்… ஆனா அந்தப் பிராப்ளத்தையும் கூட என்னால் தீர்த்து வைக்க முடியும்… வேறே பெரிய வீடா பார்த்து குடியேத்தலாம்.” 

“அதுக்கு வாடகையை உன்னைக் கட்டிக்கப் போற ராஜகுமாரன் கொடுப்பானாக்கும்?” என்றாள் கௌரி, 

“இந்த அற்பச் செலவுக்கெல்லாம் நான் அவரைத் தொந்தரவு செய்யமாட்டேன். நானே அதிகப்படி செலவாகிற வாடகைப் பணத்தைத் தரேன்…” 

மோகனுக்குச் சுருக்கென்றது. 

“அமிர்தா, நீ இத்தனை நேரம் உன் அக்காவைப்பத்தித் தான் பேசினே. இப்போ என்னையே ஏளனப்படுத்தறே. அதிக வாடகைகொடுக்க கையாலாகாதவன்னு…” 

“நீங்க அப்படி நினைச்சா அது கரெக்டு தான். நீங்க ஏன் ஒரு ஆம்பிள்ளையா மாறி பெண்டாட்டியை அடக்கி, அம்மாவிடமும் ஒரு உறுதியோடு நடந்து கொள்ளக் கூடாது? எதிலும் ஒரு குழைச்சல், ஒரு கோழைத்தனம்… நான் சொல்ற போது மட்டும் உங்களுக்கு ரோஷம் பொத்துண்டு வர்றது.” 

”டீ அமிர்தா, என் புருஷன் குழையட்டும். கோழையாக இருக்கட்டும். அதை நீ சொல்ல வேண்டாம். இப்படிப் பட்ட கோழையைத்தானே கல்கத்தாவுக்குத் துணையாகக் கூப்பிடறே?”. 

“போடீ முட்டாள்… நான் உன்னைச் சுண்டிப் பார்த்தேண்டீ, மெட்ராஸ் ரோடிலேயே சரியா நடக்கத் தெரியாத உன் ஹஸ்பண்டையா அவ்வளவு பணம் செலவு செய்து கல்கத்தாவுக்குக் கூட்டிண்டு போவேன்? நான் சொல்றதை யெல்லாம் நம்பி நீங்க ரெண்டுபேரும் விழுந்தீர்கள்”. 

பசுபதிக்குக் கோபம் தலைக்கேறியது. 

“அமிர்தா, வாயை மூடு. நானும் பார்த்துண்டே இருக்கேன். பிரேக் இல்லாத வண்டி மாதிரி ஓடிட்டே போறே… வீட்டு மாப்பிள்ளையை அவர் முன்னாலேயே ஏளனப்படுத்தறியே, உனக்குப் புத்தி இல்லை”. 

அமிர்தா,அடங்கினவளைப் போலக்காணப் பட்டாலும் அவளுடைய உதடுகளில் அரும்பி நின்ற குறும்புப் புன்னகை கௌரியின் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. 

“அப்பா, இனிமேல் தான் இந்த வீட்டு வாசல் படியை மிதிக்க மாட்டேன்” 

“வெரிகுட் டிஸிஷன்… அப்பா, நாமே அடுத்த மாசம் இந்த வீட்டில் இருக்க மாட்டோம்.” 

“பேசாம இரு அமிர்தா” என்றார் பசுபதி. 

“கௌரி, வா போகலாம்” என்றான் மோகன். 

“நீங்க உங்க பாட்டிலே போங்கள்… என்னைப் பத்திக் கவலைப்படாதீர்கள்” என்றாள் கௌரி. 

“இதென்னப்பா வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்திலே ஏறிட்டுது…”

“கெளரி, புறப்படு” என்றார் பசுபதி. 

“ஏம்பா என்னைத் துரந்தறீங்க…?”

“பெத்து வளர்த்துக் கலியாணம் பண்ணிக் கொடுத்த பெண்கிட்டே, உன் புருஷன் வீட்டுக்குப் போன்னு சொல்றது உனக்கு துரத்தற மாதிரிப்பட்டா எனக்குக் கவலை இல்லை… இப்போ புருஷன் வீட்டுக்குப் போ” 

“அப்பா! என்னாலே இவருடைய அம்மா கிட்டே இருக்கமுடியாது… பீரோவும் கட்டிலும் வரல்லேன்னா ரொட்டியைப் பிய்ச்சு பிய்ச்சுப் போடறா மாதிரி என்னைப் பிய்ச்சுப் போட்டு விடுவாள்… இவ்வளவெல்லாம் நான் பேசினதற்கு இவரும் என்னைப் பழி வாங்குவார்!” 

“நான் எல்லாவற்றையும் மறந்தாச்சு கௌரி!” என்றான் மோகன். 

“டீ கெளரி, சரித்தாண்டீ, வீடு போய்ச் சேரு.. நாளைக்கு நாங்க பணத்தோட வர்றோம். என் கலியாணத்துக்குன்னு வைச்சிருக்கிற பணத்தை உனக்குத் தரேன்… போ… நல்ல பெண்ணா போய்ச் சேரு.. நானும் அப்பாவும் நாளைக்கு உங்க வீட்டுக்கு வந்து சரி செய்கிறோம்… அப்பா, நீங்களும் நானும் நாளன்னிக்கு கல்கத்தா போறோம்….” 

ஒரு வழியாகக் கௌரி மோகன் பின் தொடர வெளியேறினாள். அவள் சென்றதும் பசுபதி கேட்டார். 

“ஏன் அமிர்தா, நீ சொல்றதிலே எது நிஜம், எது தமாஷ்னே புரியலே!”

“எல்லாமே நிஜம்!”

“கல்கத்தா?”

“அதுவும் தான்”. 

“உன் கலியாணத்துக்குன்னு மாசா மாசம் முப்பதும் நாப்பதுமா சேர்த்து வைச்சிருந்தியே, அதிலேருந்து எடுத்துக்க கொடுக்கப் போறியா?”

“ஆமாம்ப்பா.. இனிமேல் எனக்கு இந்த சேவிங்ஸ் பாங்க் பணம் தேவை இல்லை. ரகு தன் சொத்தை எல்லாம் என் பேருக்கு எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார். அது பத்திச் சொல்லத்தான் கோபி கிருஷ்ணன் வந்தார்.” 

“என்ன?” பசுபதி அயர்ந்து போய் நின்றார். 

“ஏம்பா, நீங்க சின்ன வயசிலே மாயவரத்திலே ஏகப்பட்ட சொத்தை அனுபவிச்சவர். நீங்க ஏன் இந்த ஒன்றரை லட்சம் ரூபாய் சொத்தைக் கண்டு பிரமிச்சுப் போகிறீர்கள்?” 

“ஒன்றரை லட்சமா?” 

“கல்கத்தாவிலே ஒரு வீடு… இன்ஷூரன்ஸ் பணம், ஆபீஸ்லே இருக்கிற ஃபிக்ஸ்ட் டெபாஸிட், பிராவிடண்ட் ஃபண்ட்… எல்லாம் சேர்ந்து ஒன்றைரை லட்சம் இருக்கும்னு. நான் கணக்குப் போட்டேன். ஒரு வேளை ரெண்டு லட்சமாகக்கூட இருக்கலாம்!” 

“தமாஷ் பண்ணாதே அமிர்தா!”

“சத்தியமா ரகுவின் சொத்து பூரா எனக்குத் தான்!”

“அமிர்தா, என்னால் நம்ப முடியவில்லை! எனக்கு ஒரு சின்னப் பரிசு தருவியா?”

“எனக்கு வர்றது பூரா உங்களுக்குத்தாம்பா… ஆனா ஒரேகண்டிஷன். இதை வைச்சுண்டு சீட்டாடப்படாது”. 

“ஒரு புது டைப்ரைட்டிங் மிஷின் வேண்டும்.”

அமிர்தா கலகலவென்று சிரித்தாள். 

“ஒரு கடையே வைச்சுத்தரேன், போதுமா?”

பசுபதி சிலையாக நின்றார். 

“அப்பா!” 

”என்ன அமிர்தா?”

“இன்னொரு முக்கிய சேதி.” 

“என்ன?”

“இன்னிக்கு வந்தாரே மானேஜர் கோபி கிருஷ்ணன், அவர் உங்களுக்கு மாப்பிள்ளையா வந்தா எப்படி?”

“என்னம்மா சொல்ற நீ?”

“அவர்ஆசைப்படறார் அப்பா”. 

”நீ என்ன முடிவு பண்ணியிருக்கே…?”. 

“நான் இன்னும் முடிவுன்னு ஒண்ணும் எடுக்கலே. ஆனா என் மனசு அவரைப்பத்தி நினைக்க ஆரம்பிச்சு விட்டது”. 

“அவன் பெரிய கோடீசுவரன் வீட்டுப்பிள்ளையம்மா. பார்த்தா முப்பது வயது இருக்கும் போலிருக்கு… ஜாக்கிரதையா பழகும்மா.” 

“ஏம்ப்பா இப்படிச் சொல்றீங்க?…” 

“பணக்கார வீட்டுப் பையனுக்கு முப்பது வயசு வரையில் கலியாணம் ஆகலேன்னா அதுக்கு ஏதானும் முக்கிய காரணம் இருக்கணும்”. 

”என்னப்பா உளர்றீங்க. அவர் அஞ்சு வருஷம் அமெரிக்காவிலே இருந்துட்டு வந்திருக்கிறார்”. 

“அதுவே போதும்மா நான் பயப்படறதுக்கு… தவறிப் போய்க்கூட, நியே உன் கண்ணைக் குத்திக் கொள்ளக்கூடாது.” 

அமிர்தாவுக்கு ஆபீசில் அன்று நடந்தது கண் முன் நின்றது. ஏற்கனவே அவள் தன் கண்ணைக்குத்திக் கொண்டாகி விட்டதோ? 

அத்தியாயம்-20

கோபிகிருஷ்ணனுடைய அண்ணி மாலதி, தான் சுசீலாவின் மூத்த மருமகள் என்று நினைத்துக் கொண்டதேயில்லை. அவள் ஒரு ஹைகோர்ட் ஜட்ஜின் பெண். சுசீலாவின் முதல் பிள்ளை கம்பெனியின் மானேஜிங் டைரக்டர் ரமேஷின் மனைவி. அவளுடைய தகப்பனார் சட்டப் புத்தகங்களை வைத்துக் கொண்டு நீதியையும் நியாயத்தையும் கோர்ட்டில் நிலைநாட்டினார் என்றால், பெண் மாலதி புக்ககத்தில் கணவனைத் தன் அடிமையாக வைத்துக் கொண்டு தன் அதிகாரத்தை வேரூன்றிக் கொண்டிருந்தாள். 

சுசீலா என்றுமே யாருடைய மனத்தையோ நெஞ்சத்தையோ அலசிப் பார்த்ததில்லை. இந்த ஏழு ஆண்டுகளில் ஒரு தடவை கூட, மாலதி தன் மனத்துள் என்னென்ன திட்டமெல்லாம் தீட்டிவைத்திருக்கிறாள் என்று நினைத்துப் பார்த்ததில்லை. தான் எதைச் சொன்னாலும் அதை ஒரு கட்டளையாக ஏற்று, அவளுடைய சித்தத்துக்கு எதிராக எதையுமே செய்திராத மாலதி தனக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சுசீலா நினைத்து வந்தாள். 

இப்போது, கோபி கிருஷ்ணன் தானே ஒரு பெண்ணைத் தேடிக்கொண்டிருக்கிறான் என்பதை அறிந்த போது அவளால் பூர்ண திருப்தி அடைய முடியவில்லை. இதற்குக் காரணம் மாலதி தான். எப்படியாவது தன் பிள்ளை கோபிக்குத் திருமணம் ஆகவேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தவளுக்கு மகன் மூலமே அந்த நற்செய்தி வந்தபோது சுசீலா உண்மையில் நெகிழத்தான் நெகிழ்ந்தாள். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலே மாலதி அவளுடைய நிம்மதியையும் சந்தோஷத்தையும் குலைத்து விட்டாள். ‘பசு மாட்டைக்கூட போய்ப் பார்த்துத் தான் வாங்க வேண்டும். அது போல பெண்ணையும் அவளுடைய வீட்டுக்கே சென்றுதான் பார்த்து முடிவு செய்யவேண்டும்’ என்று மாலதி கூறியது சரியாகப் பட்டாலும் மனது நிலை கொள்ளாமல் தவித்தது. 

மாலதி தான் சுசீலாவுக்கு வாக்களித்தபடியே அமிர்தாவின் வீட்டு விலாசத்தை மறுநாள் காலையிலே ஆபீஸ் தஸ்தாவேஜு களிலிருந்து தெரிந்துகொண்டாள். ஒரு மானேஜிங் டைரக்டருடைய மனைவியான அவளுக்கு ஆபீசுக்கு போன் செய்து விலாசம் பெறுவது கடினமான காரியமாக இருக்கவில்லை. 

மாலதி அத்துடன் நிற்கவில்லை. அமிர்தாவைச் சந்திக்கவும் முயன்றாள். அன்று அவள் ஆபீசுக்கு வரவில்லை. என்று தெரிந்தபோது அவளுக்கு இன்னும் சவுகரியமாகப் போயிற்று. சாப்பாடு ஆனதும், காரை எடுத்துக்கொண்டு மயிலாப்பூருக்குப் புறப்பட்டாள். 

தன் வீட்டு வாசலில் ஒரு சிறிய கார் நிற்பதைக் கண்ட அமிர்தா நின்று கவனித்தாள். முப்பது வயது மதிக்கத் தகுந்த ஒரு பெண். ஹாண்ட் பேக்கை அலட்சியமாக ஒரு கையில் வைத்துக் கொண்டு, இன்னொரு கையில் கார் சாவியைச் சுழலவிட்டுக் கொண்டு அமிர்தாவை நோக்கி வந்தாள். 

கண்கொட்டாமல் அவளையே பார்த்து நின்ற அமிர்தா. மாலதி அருகே வந்ததும் புன்முறுவலித்தாள். அவளுடைய புன்முறுவலையே ஒரு வரவேற்பாக எடுத்துக்கொண்ட மாலதி, ”அமிர்தா?” என்று கேட்டாள். 

“யெஸ்… ஐ ஆம் அமிர்தா. ப்ளீஸ் கம் இன்”

“தாங்க் யூ… ஐ ஆம் மாலதி ரமேஷ்.. “

”ஓ, ப்ளீஸ் கம் இன்… ப்ளீஸ் கம் இன்” என்ற அமிர்தா, “நீங்க சொல்லி அனுப்பியிருந்தா நானே வந்திருப்பேனே!” என்றாள். 

மாலதி சிரித்தாள். சிரிப்பு அவளுக்குக் கைவந்த கலை. சிரிப்பினுள் என்ன மறைந்து பொதிந்து கிடக்கிறது என்று அவளைத் தவிர யாருக்குத் தெரியும்? 

“யாருக்குக் காரியம் ஆக வேண்டுமோ அவங்கதான் அதைப் பத்தி பூர்த்தி செய்யப்போகணும். இது என்னுடைய சித்தாந்தம், கொள்கை.” 

“எ வெரிகுட் பிரின்ஸிபிள்!”

“அப்பா இல்லியா?” என்று கேட்டாள் மாலதி.

“இல்லை”. 

“ஆபீசுக்கு போன் பண்ணினேன். நீ லீவ் என்றார்கள்.!”

“ஆமாம்… பத்துநாள் லீவ். நாளைக்குக் கல்கத்தா போகிறேன்…” 

“ரகுவின் சொத்து விஷயமாகத்தானே?”

“ஆமாம்… உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“ஏன்? ரகு உனக்குத் தன் சொத்து முழுவதையும் எழுதி வைத்துவிட்டுப்போயிருப்பது இன்னும் பேப்பரில்தான் வரவில்லை!” என்று சொல்லிச் சிரித்தாள், மாலதி. பிறகு “ஆபீஸ் பூராத் தெரியும். என் கணவர் மானேஜிங் டைரக்டர் வேறே…” என்றாள். 

“என்ன சாப்பிடுகிறீர்கள்? எங்க வீட்டில் காபியும் மோகும் தான் கிடைக்கும்.” 

“இப்ப ஒன்றும் வேண்டாம். தாங்க்ஸ்!” 

சொன்னவள் தன்னைச் சுற்றிப் பார்த்தாள். மேலே அண்ணாந்து பார்த்தாள். 

“பழைய காலத்து, ஓடு வேய்ந்த வீடு…” என்றாள் அமிர்தா. 

“சேற்றிலும் செந்தாமரை இருக்கும்”.

“புரியவில்லை.” 

“நீ ஒரு தாமரைன்னு சொன்னேன்.”

“நீங்க திடீர்னு வந்து இப்படிப் புகழ்வதன் நோக்கமும் சரி, காரணமும் சரி, புரியவில்லை” 

“நீ எங்க வீட்டு இரண்டாவது மருமகள் என்று என் மாமியார் குதித்துக் கொண்டிருக்கிறாள்.”

“அப்படியா?”

“எது அப்படியா? மருமகளாக வருவதைச் சொல்றியா… இல்லே. என் மாமியார் குதிக்கிறதைக் கேட்கறியா?”

“ரெண்டும்தான்”. 

“ஆமாம்… எங்க வீட்டுச் சின்னவர் உன்னைக் கலியாணம் பண்ணிக் கொள்ள ஆசைப்படறதாக நேற்று வந்து சொன்னான்.'”

“அவருடைய இந்த ஆசையை அவர் என்கிட்டே கூடச் சொல்ல வில்லையே!”

அமிர்தா ஒரு கணம் உள்ளூர நடுங்கினாள். 

மாலதி சிரித்துக் கொண்டே, ”அப்போ கோபி இது வரையில் உன்கிட்டே இது பத்திப் பேசினதே இல்லியா?”

“இல்லை.”

“அப்போ நீ அவனை மறுக்க மாட்டாய் என்கிற தைரியத்தில் கோபி தன் அம்மாவிடம் சொல்லியிருக்க வேண்டும்”. 

“எனக்கு கோபியை ஒரு சில மணி நேரங்கள் தான் தெரியும்.”

“ஒரு சில மணி நேரங்களில் தான் ஒருசாம்ராஜ்யத்தையே ஜெயிக்கிறார்கள், தோற்கிறார்கள்”. 

“கோபி சாம்ராஜ்யத்தை ஜெயிக்க வரவில்லை.” 

“ஒரு சில மணி நேரங்களில் கூட என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நடந்திருக்கலாம் இல்லையா…? எங்கள் கோபி கொஞ்சம் அவசரக்காரன்… கிளையில் இருக்கும் போதே மாங்காயைக்கடித்து விடுவான்”. 

“நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்குப் புரிகிறது. மிஸஸ் மாலதி”. 

“கலியாணமாகாத ஒரு பெண் என்னென்னிக்கும் கிளையிலே இருக்கிற மாங்காய்தான்… கண்ட கண்ட அணில்களும், பறவைகளும் கொத்தித் தின்ன கழுகு மாதிரிக் காத்திருக்கும்.

“மாங்காயை ஜாக்கிரதையா பார்த்துக்க வழி இருக்கு”.

“ஓகே” என்ற மாலதி, “நீ என்ன முடிவு எடுத்திருக்கே?” என்று கேட்டாள். 

”சொல்லித்தான் ஆகணும்னு நீங்க விரும்பறீங்க… இல்லாமப்போனா இவ்வளவு தூரம் இங்கே வந்திருக்க மாட்டீங்க.” 

“யூ.ஆர் கரெக்ட்” 

“நான் இன்னும் முடிவு எடுக்கலை” 

“கோபி இன்னும் ஒரு வாரத்திலே அமெரிக்கா போகிறான்.”

“அப்படியா?” 

”ஏதோ காண்ட்ராக்ட்லே கையெழுத்துப் போடனுமாம்”.  

“என்கிட்டே சொல்லலை”.

“அம்மா கிட்டே சொன்னான். நீயும் கல்கத்தா போகிறாய்… இரண்டு பேரும் இரண்டு இடங்களுக்குப் போய் அவரவர் காரியத்தை முடிச்சுட்டு வரப்போகிறீர்கள்” 

“மிஸ்டர் கோபி தன் காரியத்தை முடிக்கப் போக வில்லை. கம்பெனி விஷயமாகத் தானே போகிறார்?” 

“நான் மானேஜிங் டைரக்டரின் ஒய்ஃப்… காண்ட்ராக்ட்லே கையெழுத்துப் போடறவர் அவர்தான்… மேலும் எங்க கம்பெனிக்கு அமெரிக்காவிலே யாருடனும் வியாபார சம்பந்தம் கிடையாது.” 

திடீரென்று அமிர்தாவின் மனதில் திகில் புகுந்து விட்டது. “கோபி அமெரிக்காவில் அஞ்சு வருஷம் இருந்தவன்”. 

“தெரியும்.” 

“அங்கே ஏதானும் தீராத பிரச்சினை இருந்து. தீராத கடன் இருந்து அதைத் தீர்க்க இப்போது போகலாம் இல்லியா?”

“இருக்கலாம்.”

“அமெரிக்காவுக்கே போய்த் தீர்க்க வேண்டிய பிரச்சினை என்றால், அது தபால் மூலமாக தீர்க்கக்கூடிய பிரச்சினையாக இருக்க முடியாது. இல்லியா, அமிர்தா?” 

“ரொம்ப அழகா, கோர்வையா அலசி அலசிப் பேசுகிறீர்கள்”. 

“இதுக்குக் காரணம் என்ன தெரியுமா?” 

”சொல்லுங்க”. 

“ஒரு பெண்ணோட வாழ்க்கை சம்பந்தப்பட்டிருக்கு”.

“அதாவது….” 

“உன்னோட வாழ்க்கை.. நீ யாருடன் வாழப் போகிறாயோ, அவனுடைய சரித்திரம் முழுவதும் உனக்குத் தெரிந்திருக்க வேண்டும்”. 

“சரித்திரம் என்றால் எவ்வளவோ ரகசியங்களும் இருக்கும்!” 

“எக்ஸாக்ட்லி” 

“அதை எப்படித் தெரிந்து கொள்வது?”

“இப்போதைய பிரச்சினைக்கு மட்டும் பதில் சொல்லட்டுமா?”

“ப்ளீஸ்!” 

“நீயும் அவனுடன் அமெரிக்காவுக்குப் போ…” 

“என்ன சொல்றீங்க? நான் அவரோடு அமெரிக்கா போறதா?” 

“ஏன், போனால் என்னவாம்… இந்த மெட்ராஸ்லே நீங்க ரெண்டு பேரும் மீட் பண்ணிப் பழகலாம்னா, ஒரே பிளேன்லே சேர்ந்து பறக்கக் கூடாதா?” 

“அவர் அழைத்துக் கொண்டு போக மறுத்தால்… “

“அமெரிக்காவில் என்ன வேலை என்று தைரியமாகக் கேளு” 

“அதுக்கு சரியா பதில் வராமப் போனா?”

“கோபியைத் தூக்கி எறி, கலியாணத்துக்கு முன்னாலேயே உன் மனசில் ஒரு நம்பிக்கை ஏற்படுத்தாதவனை கலியாணத்துக்கு அப்புறம் எப்படி நம்பமுடியும்?”

“நீங்க சொல்றதைப் பார்த்தா, அமெரிக்காவிலே ஏதோ நடந்திருக்கிறதுன்னு புரிகிறது”. 

“இப்பவாவது புரிஞ்சுதே”. 

அமிர்தா மவுனமாக மாலதியையே பார்த்தாள். எதிரே உட்கார்ந்திருக்கிறவள் உதவி செய்ய வந்திருக்கிற அம்பிகையா? அல்லது அவளுடைய இன்பத்துக்குக் குறுக்கே வந்து நிற்கும் விதியா? 

மாலதி தொடர்ந்தாள். 

“உனக்கு ரொக்கமாக ஒன்றரை லட்சம் ரூபாயும், கல்கத்தாவில் ஒரு வீடும் சொத்தாக வருகிறது.”

“ஆமாம்.” 

“கோபி பணம் கேட்டால் கொடுக்காதே.” 

”அவர் ஏன் என்னிடம் கேட்கணும்? அவர்தான் கோடீசுவரனாச்சே…” 

“ஆமாம். ஆனா இப்போ கம்பெனியில் அவன் வாங்கறது மாசச் சம்பளம்தான்.. என் மாமனாரும் சரி, கணவரும் சரி, வேறு பணம் அவனுக்குக் கொடுப்பதில்லை. கொடுக்கக் கூடாது என்ற நிபந்தனையும் இருக்கிறது”. 

“உங்க குடும்ப ரகசியங்களையே என்னிடம் சொல்லுகிறீர்களே…!” 

“எல்லாம் ஒரு பெண்ணை, பணக்காரியாகப் போகிற ஒரு ஏழைப் பெண்ணைக் காப்பாற்றத்தான், அமிர்தா”. 

“நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் கோபிக்கு உங்க வீட்டிலேயே நல்ல பெயர் இல்லை போலிருக்கிறதே?”

“கோபி அம்மாவுக்குச் செல்லப் பிள்ளை… ஆனா அப்பாவுக்கு அவன் மேலே இன்னும் நம்பிக்கை வரும்படியா கோபி இன்னும் நடந்துகொள்ள ஆரம்பிக்கவில்லை” 

“இன்று சாயங்காலம், நானும் கோபியும் ஒரு சினிமாவுக்குப் போய் அப்புறம் ஓட்டலில் சாப்பிடலாம். என்றிருக்கிறோம். அதைக் கான்ஸல் பண்ணிடட்டுமா?”

“சினிமாவுக்குப் போகாதே… ஆனால் ஓட்டலில் சாப்பிடு… சாப்பிடும் போது மெல்ல அவனுடைய சரித்திர ஏடுகளைப் புரட்டச்சொல்லு”. 

“அதை ஓட்டலுக்குச் சென்று தான் செய்யணுமா? இதே வீட்டில் செய்கிறேன்… அனாவசியமா ஒட்டலுக்குச் சென்று நான் ஏன் என் பெயரைக் கெடுத்துக் கொள்ளவேண்டும்?”

“தட் இஸ் குட் கோர்ஸ்!” என்றாள் மாலதி. 

– தொடரும்…

– கோபுர தீபம் (நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1999, திருவரசு புத்தக நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *