அவர்கள் இருவரும் ஒன்றாகவே விழித்துக்கொண்டார்கள். அவன் அவளை ஒரு தரம் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். அவள் எதிரே இருந்த சுவரையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்… சுவற்றைத் துளைத்துவிடுவது போன்ற கூரிய பார்வை…
அவள் கைகளை நன்றாக நீட்டிப் படுத்திருந்தாள். முன்னங்கைகளில் அடர்த்தியாக ரோமம் வளர்ந்திருந்தது. விரல்கள் நீண்டு மெலிதாக இருந்தன. நகங்களை ஸ்பஷ்டமாக, தீர்க்கமாகச் சுவைத்திருந்தாள்… விரல்களின் நுனிகள் சற்று ’ஸயனோட்டிக்’காகத் தென்பட்டன.
வலக்கையை உயர்த்தி, அடர்ந்த ரோமத்தை ஒரு தரம் நீவி விட்டுக்கொண்டாள்.
“வர வர மஞ்சள் பூசிக்குளிக்கக்கூட நேரமில்லே.”–சூள் கொட்டிவிட்டு திரும்பி அவனைப் பார்த்தாள்.
எங்கோ ’சிட்சோர்’ படத்திலிருந்து ’து ஜொ மெரே சுர் மெய்ன்’…ஒலித்து உலா வந்தது.
’ரிகஸ… கமப…’ என்ற ஸ்வர வரிசை எழுந்தது. அவன் கால்மேல் கால் போட்டுக்கொண்டு இடது கையை உயர்த்தி… அதன் நடுவிரலை அழுத்தி…வலது கையின் ஒற்றை விரலை மீட்டி…
’ரிகஸ… கமப…’ என்ற அதே ஸ்வரத்தை கற்பனையாக மீட்டினான்…
அவள் விருட்டென்றுய் எழுந்து ஸாரியை ஒரு முறை ’டச்’ பண்ணிக்கொண்டு, கட்டிலின் கீழே இருந்த பால் கவரை எடுத்துக்கொண்டு சமையலறையினுள் நுழைந்தாள்…
அதற்கு முன்பு அவனைப் பார்த்து, தன் தோள்பட்டையில் மோவாயை ஒரு தரம் இடித்து அழகு காட்டினாள்… அதைத்தொடர்ந்து காலைக்கே உரித்தான ஸப்தங்கள் எழுந்தன… காஸ் அடுப்பு பெருமூச்சு விடுவது… ஃபில்டர் குடையைத் தட்டும் சப்தம்… பக்கத்து வீட்டு ரேடியோவில் ’ஸுப்ரபாதம்’… இவள் எல்லாவற்றுக்கும் நடுவில்,
“வரச் சொல்லடீ இ இ… அந்தி மாலைதனில் அவனை வரச்சொல்லடி”… என்று ’ஹம்’ செய்யும் பாடல்.
அவன் எழுந்து, ஜன்னல் வழியாக வெளியே ஒருதரம் பார்த்தான்… உலகம் எந்தவித மாற்றமுமின்றி ஒருவித இயந்திர கதியில் இயங்கிக்கொண்டிருந்தது.
அலமாரியைத் திறந்து தன் ’ஷேவிங் ஸெட்’டை எடுத்து வைத்துக்கொண்டான். சோப்பைக் குழைக்க ஆரம்பித்தான்.
“ஓவல் வெச்சிருக்கேன்.”
“ம்…ம்…”
நுரை நுரையாக முகத்தை வேஷப்படுத்திக்கொண்டான். ரேஸரை கன்னத்தில் வைத்தபோது, கதவு தட்டும் ஸப்தம் கேட்டுத் திரும்பினான்…
அந்த அசைவில், ரேஸர் அவன் தாடையைக் காயப்படுத்தியது… அதற்குள் அவள் வேகமாக வந்து கதவைத் திறந்தாள்—
’பேப்பர்’ என்று சொல்லிவிட்டு நாளிதழை அவனிடம் நீட்டினாள்…
அவன் இடது கையால் அதைப் பற்றி, கோபமாக அறையின் குறுக்கே விட்டெறிந்தான். பேப்பர் அலங்கோலமாக விழுந்தது…
அவள் பதிலேதும் பேசாமல், கதவை அறைந்து சாத்திவிட்டு சமையலறைக்குள் அடைக்கலம் புகுந்துகொண்டாள்…
நிசப்தம் நிலவியது…
சிறிது நேரம் கழித்து அவள் மீண்டும் ஹாலுக்கு வந்தாள்… “ஓவல் ஆறிப் போறது…”
அவன் திரும்பினான். கழுத்துப் பகுதியில், காதுக்கருகில் இன்னும் நுரைநுரையாக சோப் படிந்திருந்தது.
அவள் தன் காதுமடல்களை இதமாக, ஸ்வாரஸ்யமாகத் தடவியபடி நின்றுகொண்டிருந்தாள்.
அவளிடம் அவனுக்குப் பிடித்ததெல்லாம் இந்தப் பழக்கம்தான். காதுமடல்களை மெல்ல, இதமாகத் தடவிகொண்டிருப்பது.
இப்பொழுதெல்லாம் அவனும் அந்தப் பழக்கத்தைக் ’காப்பி’யடிக்கிறான்.
அவனும் காதுமடல்களைத் தடவியபடி அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.
அவள் ’ஓவலை’ எடுத்து அவனிடம் நீட்டிவிட்டு, புடவைத்தலைப்பால் அவன் முகத்தில் படிந்திருந்த சோப் நுரைகளைத் துடைத்தாள்.
அவன் பாதி குடித்திருந்த ஓவலைக் கீழே வைத்துவிட்டு, “இங்கே வா” என்று அவள் வலது கையைப் பிடித்துத் திருப்பி, புறங்கையில் இருந்த தீப்புண்ணைக் காட்டி, “என்னது இது?…” என்று அதை லேசாக நீவினான்.
“ஸ் ஸ் ஸ்” என்று கைகளை உதறிக்கொண்ட அவள், “பால் எறக்கறப்போ சுட்டது…” என்றாள்.
அவன் உடனே எழுந்து சென்று, அலமாரியை குடைந்து, மேஜை டிராயர்கள்த் தலைகீழாகப் புரட்டி, எங்கிருந்தோ ’பர்னாலை’ எடுத்துவந்து அவளது புறங்கையில் தடவினான்.
திரும்பவும் ஒரு “ஸ் ஸ் ஸ்”.
அவர்களுக்குள் சௌஜன்யம் மீண்டும் திரும்பியது.
அவள் எதோ ஒரு நினைவு வந்தவளாக ’சட்’டென்று பதட்டத்துடன் நகத்தைக் கடித்துக்கொண்டாள்.
“மணி ஏழரையாச்சு. நான் போய் கறிகா வாங்கிண்டு வரேன்.”
பீரோவைத்திறந்து, மடித்து வைக்கப்பட்டிருந்த புடவைகளில் ஒன்றை உருவினாள்.
பின்னர் எதோ ஞாபகம் வந்தவளாய், ’இதே போதும்’, என்று சூள் கொட்டிவிட்டு, கட்டின புடவையின் ப்ளீட்ஸ்களை அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டாள். முன் நெற்றியை வாரிக்கொண்டு, மறக்காமல் பவுடரை லேசாக, பரவலாகப் போட்டுக்கொண்டு,
“ஐயா இன்னிக்கு அந்த எடிட்டரைப் பார்க்கப்போறேன்” என்ற அவன் குரல் கேட்டு கண்கலை அகல விரித்தாள். “போறப்ப ஞாபகமா உங்க படைப்புக்களையும் எடுத்திண்டு போங்கோ.”
செருப்பைப் போட்டுக்கொண்டாள்.
“ஆமா, நா எழுதினா எவன் போடறான்! திருப்பித் திருப்பி இந்த சுஜாதா, லக்ஷ்மி, இவாதான். இல்லாட்டா சிவசங்கரி. இப்ப கூட எதோவொன்னு…ம்…இந்துமதி… ஒரு தொடர்கதை முடியறதுக்குள்ள இன்னொன்னு… இல்லாட்டா அவாளே எழுதிக்கறது… நா அந்த எடிட்டரை நல்லா நாலு வார்த்தை கேக்கத்தான் போறேன் சித்ரா…” அவன் கோபம் இப்பொழுது அந்த எடிட்டர் மீது திரும்பியது.
“வேற எதாவது வாங்கணுமா?”
“என்னைக்காவது ஒரு நாள் நா பெரிய பா…ப்புலர் ரைட்டராக வரத்தான் போறேன். அப்போ இவாளெல்லாம் எங்கிட்ட கேட்டு வாங்கி கதை போடுவா… பாக்கத்தான் போறே சித்ரா…”
“இப்பத்தான் எழுதறாளே, அந்தமாதிரி ந்யூவேவ் ஸ்டோரீஸ் ட்ரை பண்ணுங்க்ளேன்…”
“நா இவா மாதிரி என் க்ரியேட்டிவ் டேலன்ட்ச இன்ஸல்ட் பண்ணிக்கமாட்டேன்.”
“கல்கிக்கு அனுப்பிச்சேளா?”
“அதுலேந்தும் திரும்பிதான் வந்தது.”
“வேற எதாவது வாங்கணுமா?”
“ஒரு எழவும் வேண்டாங்… இந்தா, இந்த லீவ் லெட்டரை மிஸஸ் முரளிகிட்ட கொடுத்திட்டுப்போ… போற வழிதான்.”
“ஏன்? நீங்க இன்னிக்கு ஆபீஸுக்கு போலையா?”
அவ்வளவுதான்… அங்கு ஒரு ப்ரளயமே வெடித்தது…
“ஸ்டுப்..பிட். நான்தான் அப்பவே சொன்னேனே, அந்த எடிட்டரப் பார்க்கப்போறேன்னு… நான்சென்ஸ், எதுக்கெடுத்தாலும் க்ராஸ்-க்வெஸ்டின் வேற…”
அவன் வாஷ்பேஸினின் குழாயை வேகமாக, அதன் கழுத்தை ஒடித்துவிடுபவனைப்போலத் திருகி, அதில் தன் ரேஸரைக் கழுவினான்.
’பொழுது ஏன் விடியறதுன்னு இருக்கு… அப்பப்பா! ஒரு நாள் நிம்மதி, ஊஹூம். கதைனு எழுதினா திரும்பி வர்றது என்னமோ சகஜந்தான், அதுக்குன்னு இப்படியா?… பாவம்! அவரும் எவ்வளவு அழகாக எழுதறார், ஆனா…’
அவள் தனக்குத்தானே பேசிக்கொண்டபடியே, ப்ளாஸ்டிக் கூடையை பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குச் செல்லும் சிறுமி போல வீசி வீசி ஆட்டிக்கொண்டு நடந்துகொண்டிருந்தாள்.
தனக்குள்ளாக அவ்வப்பொழுது பேசிக்கொள்ளும் அவளை சிலபேர் ஒரு விநோதமாக, ஒரு விதமாகப் பார்த்தார்கள்.
’இந்த கல்யாணராமனோட கதைகள் என்னிக்காவது ஒருநாள் பப்ளிஷ் ஆகும். ஒரு சான்ஸ், ஜஸ்ட் ஒரு சான்ஸ்… அப்புறம்…’–அவள் வெடிக்கச் சிரித்தாள்.
’அப்புறம், மை ப்ளேஸ் வில் பி இன் த ஸ்கை’ என்று சொல்லிவிட்டு, ’எல்லாம் இன்ப மயம்…, புவிமேல் இயற்கையினாலே இயங்கும்…’ என்று பாடிக்கொண்டே, அப்பாடலை, ஸ்பஷ்டமாக, அனுபவித்து, கற்பனையாக மீட்டினாள்.
’க்ரீச்’சிட்டுச் சென்ற ஆட்டோ டிரைவர் அவளுக்கு அர்ச்சனை பண்ணினான். “சாவு கிராக்கி, ரோட்டப் பார்த்து நடம்மா. இந்த காலத்துலே படிச்ச பொம்பளையும் இப்படித்தான் கீது…”
அப்பொழுதுதான் அவள் உணர்ந்தாள். காய்கறிக் கடைகளையெல்லாம் விட்டுவிட்டு நீண்ட தூரம், ஒரு மைலுக்கும்மேல் வந்துவிட்டாள்…
கதவு தட்டப்பட்டது.
“ம்…ம், எல்லாம் தெறந்துதானிருக்கு.” அவள் அலட்சியம் வார்த்தைகளாக வெளிப்பட்டது.
கதவைத் திறந்துகொண்டு யாரும் வரவில்லை. அவள் எழுந்து சென்று பார்த்தாள்.
வாசலில் ஒருவரும் இல்லை. எட்டி, தெருவில் பார்த்தாள்.
நான்கு வீடுகள் தள்ளி, போஸ்ட்மேன் சைக்கிள் இருந்தது. அவனாகத்தானிருக்கும். லெட்டர் பாக்ஸில்—
அவளுக்குத்தான் வந்திருக்கிறது, ’சித்ரா கல்யாணராமன்’.
திடீரென்று அந்தப் பத்திரிகை அவளுக்குத் தபாலில் வருவானேன்?
பக்கத்தில் இன்னொரு கவர், அதே பத்திரிக்கையிலிருந்து.
“அன்புடையீர், தங்கள் படைப்பான ’கேட்காமலேயே அனுப்பிய கதை’ என்ற சிறுகதை பிரசுரத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு இவ்விதழில் வெளிவந்துள்ளது. சன்மானத்தொகை…” எக்ஸட்ரா, எக்ஸட்ரா,…
ஆசிரியர் கையெழுத்திட்ட கதிதம், நாற்பத்தெட்டாம் பக்கத்தில் கேட்காமலேயே அனுப்பிய கதை, சித்ரா கல்யாணராமன்…”
’சித்ரா, ஏய் சித்ரா…’
’ஆமா, நா எழுதினா எவன் போடறான்? திருப்பித் திருப்பி இந்த சுஜாதா…’
’ஏய் சித்ரா, இங்கே கேட்காமலேயே அனுப்பிய கதை, அப்படீன்னு ஒரு கதை எழுதி வெச்சிருந்தேனே…’
’இப்ப ரீசண்ட்டா எதுலேந்தோ திரும்பி வந்ததே…’
’ஆமா, எங்க அது?’
’நேக்கென்ன தெரியும்?’
கேட்காமலேயே அனுப்பிய கதை…
அவன் கதை, அவள் பெயரில்… இல்லை, அவன் பெயரில்… இல்லை, அவர்கள் பெயரில் பிரசுரமாகியிருந்தது…
– கணையாழி, ஏப் 1981
நன்றி: https://ugfamilywriters.blogspot.com