ஞாயிற்றுக்கிழமைப் பொழுது இப்படி அதிரிபுதிரி, தடாலடியாய் விடியுமென்று அன்பழகனும் அன்னபூரணியும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் வீட்டில் வேற்றாள்கள் விருந்தாளிகளாய் வந்து தங்கி இருக்கையில் சிறிதும் நாகரீகமில்லாமல் இப்படி நடக்குமென்று இவர்கள் நினைத்துப் பார்க்கவுமில்லை.
இதோ….இதோ….. இப்போதுதான் நடந்தது. நடந்த சூடு கொஞ்சமும் ஆறாமலோ எழுந்து வந்துவிட்டார்கள். அதனால் தம்பதிகளுக்குள் பேச்சில்லை. வாய்மூடி மௌனம். மனதில் ஓலம். நடந்தார்கள்.
ஒருவர் மீது மட்டுமா குற்றச்சாட்டு! இருவர் மீதும் குற்றச்சாட்டுகள். பெற்றப்பிள்ளை மகன் வந்து இந்த அதிர்வெடி, இடியை இருந்தாலாவது மனசு கொஞ்சமாவது ஆறி இருக்கும். சொன்னது மருமகள். மாற்றுத்தாய் வயிற்றுப் பிள்ளை. தாலிகட்டி வாழ வந்து முழுசா ஆறுமாதமாகவில்லை. அதற்குள்ளேயே இந்த தடாலடி என்றால் யாருக்குத்தான் பொறுக்கும் ?
ஆறுமாத காலமாக எவ்வளவு பதிவுசாக குடும்பம் நடந்தினாள். மாமா, மாமி என்கிற பேச்சில் மாற்றமில்லை. மரியாதையில் குறைவில்லை. அப்படிப் பட்டவள் இப்படி கொட்டுகிறாளென்றால்……??!!. வீட்டிற்கு வந்தவளை மாற்றுமகள், மருமகளாகவே நினைக்கவில்லை இவர்கள். மகளாகத்தான் நடத்தினார்கள். பெண் பிடித்து விட்ட காரணத்தால் வரதட்சணை, சீர்செனத்தி எதுவும் எதிர்பார்க்காமல் மகனுக்குத் திருமணம் முடித்ததில் தங்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் ! இப்படித்தான் இவர்கள் நெஞ்சில் ஓடியது.
அப்பப்பா…!!
இருவருமே தற்போது நடந்து முடிந்த நிகழ்வை மனத்திரையில் கொண்டு வந்தார்கள்.
காலை சரியாக 6.00 மணி. தம்பதிகள் இருவரும் வழக்கம் போல் நடைப்பயிற்சிக்காக புறப்படும் நேரம்.
அன்பழகன் சட்டையை மாட்டிக்கொண்டு, ” அன்னம்…!! ” அருகிலிருக்கும் தங்கள் படுக்கை அறையை நோக்கி அழைத்தார்.
” இதோ வந்துட்டேங்க….” என்று குரல் கொடுத்துக் கொண்டே அவள் முந்தானையை பின்பக்கம் நன்றாக இழுத்து சொருக்கிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.
அறுபத்தைந்து வயது. ஐந்தேகால் அடி உயரம். கொஞ்சம் தாட்டீகமான உடம்பு. தற்போது கொஞ்சமாய் முகத்தில் கொஞ்சம் பவுடர் பூசி நெற்றி நடுவில் வட்டமாக பொட்டு வைத்து…அன்னபூரணி எப்போதுமே மகாலெட்சுமி;தான்.
” போலாமா…? ” என்று அன்பழகன் கேட்டு கணவன் மனைவி இருவரும் ஒரு அடி எடுத்து வைத்ததுதான் தாமதம்….. அடுப்படியில் வேலையாய் இருந்த மாலினி வேகமாக வெளி வந்தாள்.
” அத்தை! மாமா ! ஒரு நிமிசம். ” நிறுத்தினாள்.
” என்னம்மா ? ” அன்பழகன் கேட்டு… நின்றார்கள்.
” உங்க ரெண்டு பேர்கிட்டேயும் கொஞ்சம் பேசனும்….” முகம், குரலில் இறுக்கம்.
” நடைப்பயிற்சி போய் வந்து பேசலாமா ? ”
” இல்லே. இப்பவே பேசனும். ”
” ரொம்ப முக்கியமான விசயமா ? ”
” ஆமாம்.” குரல் கறாராக வந்தது.
காலை நேரத்தில் இவளுக்கு என்ன பிரச்சனை. இரவு…கணவன் மனைவிக்குள் ஏதாவது பிணக்கம், தகராறு… முறையிடப்போகிறாளா ? வெளியில் போகிறவர்களை நிறுத்தி இழுத்து வைத்துப் பேசுவதென்றால்…ஏதோ வில்லங்கம்! முக்கியம்! அன்பகன், அண்ணபூரணிக்குள் ஓட…
” சொல்லும்மா….” அமர்ந்தார்கள்.
மாலினி இவர்கள் எதிரில் அமர்ந்தாள்.
ஏறிட்டார்கள்.
” அத்தே! என் வேலை என்ன ? ” மருமகள் மாமியாரைப் பார்த்து மெல்ல கேட்டாள்.
‘ இது என்ன திடுதிப் கேள்வி ! எதைச் சொல்ல என்ன சொல்ல ?…’ அன்னபூரணிக்கு ஒன்றும் புரியவில்லை. திரு திருவென்று விழித்தாள்.
” மாமா நீங்க சொல்லுங்க ? ” மாலினி; பார்வையை அன்பழகன் பக்கம் திருப்பினாள்.
அவருக்கும் விளங்கவில்லை. விழித்தார்.
” சொல்லுங்க மாமா நான் இப்போ என்ன வேலையில இருக்கேன். ”
இப்போதுதான் இவர்களுக்கு விளங்கியது.
” பள்ளிக்கூடத்து ஆசிரியை. ” சொன்னார்.
” என் வீட்டுக்காரர் வேலை ? ”
” வங்கி மேலாளர். ”
” நாங்க காலையில வேலைக்கு எத்தனை மணிக்குக் கிளம்பறோம். எத்தனை மணிக்குத் திரும்பறோம் ? ”
” காலையில ரெண்டு பேரும் ஏறக்குறைய 9.00. மணிக்குப் புறப்படுறீங்க. மாலையில் நீ திரும்பற நேரம் 4.50. அவன் இரவு 7.00 அல்லது 8.00. ”
” காலையில் வீட்டில் என் வேலை என்ன ? ”
” காலையில் 5.30 மணிக்கு எழுந்து வாசல் தெளிச்சு, கோலம்போட்டு முடிச்சதும் நமக்கு காபி. அடுத்து… உங்களுக்கு, நமக்கு சமையல், கிளம்பல்ன்னு வேலை சரியாய் இருக்கும்.”
” அப்போ அத்தைக்கு என்ன வேலை.? ”
” காலையில என்னோட நடைப்பயிற்சிக்குப் போய் வந்து உன் சமையலுக்கு உதவ காய்கறி நறுக்கிக் கொடுப்பாள்.”
”அப்போ உங்க வேலை என்ன ? ”
” நடைப்பயிற்சி முடிச்சு வந்ததும் தினசரி படிப்பேன். ”
” மத்த வேலைகள் ?
” மாத மின்சார, தொலைபேசி, தண்ணீர் கட்டணங்கள் கட்டுவேன். ஏதாவது பொருட்கள் தட்டுப்பாடென்றால் கடைகளுக்குப் போவேன். காய்கறி வாங்கி வருவேன்.”
” அத்தை….? ”
” உனக்கு உதவிய நேரம் போக…. நீ காலையில் அவசரத்துக்கு விட்டுப்போன எச்சல் பாத்திரங்களை கழுவி சுத்தம் பண்ணி விட்டு அடுத்த வேலையாய் தொலைக்காட்சிப் பெட்டியில் தொடர் பார்ப்பாள். ”
” உங்க ரெண்டு பேருக்கும் இந்த வேலை பத்தாது! ” மாலினியின் குரல் கொஞ்சம்கூட பிசிறில்லாமல் கறாராக வந்தது.
” என்னம்மா சொல்றே….?! ” இதுவரை பொறுமையாய் பதில் சொன்ன அன்பழகன் துணுக்குற்றார்.
” ஆமாம் மாமா நீங்க ரெண்டு பேரும் செய்யுற வேலை பத்தாது சொன்னேன். ! ”
” புரியலை….!? ” அன்னபூரணி அவளைக் குழப்பமாகப் பார்த்தாள்.
” இனி நாங்கள் சலவை இயந்திரத்தில் போட்டுப் போன துணிமணிகளை எடுத்துக் காய வைக்கனும். மாலையில் எடுத்து மடிச்சு வைக்கனும்.”
” இதெல்லாம் வந்த நாள் முதலாய் நீதானே மாலினி செய்தே ? ”
” ஆமாம். செய்தேன். இப்போ முடியலை. எனக்கு பள்ளியில் வேலை பளு அதிகமாய் இருக்கு. அடுத்து….மாலை வந்ததும் இந்த வேலையெல்லாம் மலையாய் இருக்கு. செய்து என்னால் இயந்திரமாய்ச் சுழல முடியலை. ”
” சரிம்மா. உனக்குக் கஷ்டம்ன்னா இனி நான் செய்யுறேன். ” அன்னபூரணி தலையாட்டினாள்.
அன்பழகனுக்கும் அது திருப்தியாக இருந்தது.
” மாமா நீங்க ? ” அடுத்து இவரைப் பார்த்தாள் மாலினி.
” சொல்லும்மா ? ”
” அத்தை மடிச்சு வைக்கும் துணிகளை நீங்க எடுத்துப் போய் சலவைக் கடையில் கொடுத்து தேய்ச்சு திருப்பி எடுத்து வரனும். ”
” இந்த வேலையை என் மகன் அருண்; தானேம்மா செய்தான். அலுவலகம் போகும்போது எடுத்துப் போய் கொடுத்து திரும்பும் போது எடுத்து வருவான்.! ”
” ஆமாம்.! செய்தார். இப்போ முடியாது. ! ”
” ஏன் ? ”
” காலையில எடுத்துப் போகும்போது சலவைக்கடை சமயத்தில் திறந்திருக்கு திறக்காமலிருக்கு. திறக்காத நேரத்தில் அலுவலகத்திற்குச் சுமந்து போய் திரும்ப வரும்போது கொடுத்து அடுத்த நாள் வாங்கி வர வேண்டி இருக்கு. சமயத்தில் அவன் ஒரு நாள் தாமதிக்கிறான். சிக்கலாய் இருக்கு. ”
” சரிம்மா இனி கொடுத்து கையோடு வாங்கி வர்றது என் பொறுப்பு. ”
” மாமா ! இனிமேல் இதெல்லாம் நீங்கதான் செய்யனும். ”
” சரி. ”
”அத்தே! வேலைக்குப் போய் வந்து இட்லி, தோசைக்கும் நான்தான் மாவு அரைக்கிறேன். இனி அந்த வேலையையும் நீங்க பார்க்கனும்.”
” பார்க்கிறேன்.” அன்னபூரணி சொன்ன அடுத்த விநாடி….
மனைவியின் கூடுதல் பாரம் பொறுக்க மாட்டாத அன்பழகனுக்குள் ஏதோ தோன்ற… ” சரிம்மா. எதுக்கு திடீர்ன்னு இந்த தடாலடி.? ” கேட்டார்.
” தடாலடியா ?!! மாமா ! புருசன் பொண்டாட்டி ரெண்டு பேரும் வங்கி, பள்ளிக்கூடம்ன்னு வேலைக்குப் போய் உழைச்சி களைச்சி ஓடாய்த் தேய்ஞ்சு வர்றோம். இதெல்லாம் உணர்ந்து நீங்களா செய்வீங்கன்னு எதிர்பார்த்தோம். செய்யலை. எத்தனை நாளைக்குத்தான் நாங்க சுமைக்களைத் தூக்கி வைச்சிக்கிட்டே திரியறது. அதான் இறக்கி வைக்கிறோம். நீங்க வீட்ல ஒன்னு ரெண்டு வேலை செய்துவிட்டு சொகுசாய் உட்கார்ந்திருக்கிறது சரியா ? ”
”நாங்களும் இந்த வேலையெல்லாம் பார்த்துட்டுதான் வந்திருக்கோம். நானும் அலுவலகத்துக்குப் போய் இவளும் பள்ளிக்கூடத்துக்குப் போய் ஓய்வு. இன்னைய சம்பாத்தியம் எங்களுக்கு ஓய்வூதியம்.”
”நீங்க உட்கார்ந்துதானே சம்பாதிக்கிறீங்க. எங்களைப் போல் ஓடி உழைச்சி இல்லையில்லே.” – எதற்கு என்ன பேச்சு என்று புரியாமலே தொடர்ந்தாள்.
”அதுக்கு..? ”
” நாங்க சொல்ற வேலையைச் செய்யனும்.”
” எங்களால முடிஞ்ச அளவுக்குச் செய்துகிட்டுத்தானே இருக்கோம் ? ”
” பத்தாது. இன்னும் எங்ககிட்டேயிருந்து புடுங்கிச் செய்யனும்.”
” நான் சமைக்கனுமா மாலினி…? ”என்றாள் அன்னபூரணி.
” ஏன்….? சமைச்சி எங்களை அனுப்பலாமே. நாங்க காலையில எல்லா வேலையும் செய்து அரக்கப் பரக்க ஓடாம ஆசுவாசமாய்க் கிளம்ப அது உதவியாய் இருக்கும் ! ” என்றாள்.
இதுவும் அண்ணபூரணிக்கு ஏற்பாய்த் தெரிந்தது.
” ரொம்ப சரி மாலினி. இனி தினம் நானே சமைக்கிறேன். விடுமுறை நாள்ன்னா நீ சமைக்கலாம்.” என்றாள்.
மனைவி முழு நேர சமையல்காரி ஆகிவிடுவாள் ! என்கிற பயம் வந்தது அன்பழகனுக்கு,
” இது சரி வராது மாலினி. அவளுக்கு உடல் ஒத்துழைக்காது. வயசாயிடுச்சு.” என்றார்.
இது மாலினிக்குள் கொஞ்சம் சூட்டைக் கிளப்பியது.
” அதென்ன அத்தை செய்யுறேன்னு சொல்றாங்க. நீங்க மறுக்குறீங்க ? ” சீறினாள்.
” இதோ பார் மாலினி. இன்னைக்கு நீயும் உன் புருசனும் செய்யும் இந்த மொத்த வேலைகளையும் நாங்களும் ஒரு காலத்தில் செய்தோம். ஏன் இதைவிடத் தாண்டி செய்தோம். நான் விவசாயக் குடும்பம். என் அம்மா அப்பா விவசாயிகள். காலை எழுந்ததும் என் அப்பா….. தோட்டம் துறவு, வயல்வெளி கழனின்னு வெளியில் கிளம்பிடுவார். என் அம்மா….. ஆடு மாடு, கோழி ன்னு பராமரிக்கக் கிளம்பிடுவாங்க. இவளுக்குக் கைவேலையைப் புடுங்கிக்கூட செய்ய ஆள் கிடையாது. ரெண்டு புள்ளைங்க. நானும் இவளும் உங்களைப் போல் வேலைக்காரங்க. யார் உதவி ஒத்தாசை இல்லாமல் எங்க நாலு பேருக்கும் சமைச்சு எடுத்துக்கிட்டு என் அம்மா அம்மாவுக்கும் சமைச்சு வைச்சிட்டு எல்லாரும் ஒரு ஸ்கூட்டர்ல கிளம்பனும். மாலை வந்து பார்த்தால் போட்ட வீடு போட்டப்படி கிடக்கும். காபி போடுறதிலேர்ந்து எல்லா வேலையும் முடிச்சு உன் அத்தை படுக்க வரும்போது தினம் மணி பதினொன்னைத் தாண்டும். அன்னைக்கு அப்படி உழைச்சவளை இன்னைக்கு இன்னும் உழைக்கச் சொல்றது எந்த விதத்தில் நியாயம். ? அன்னைக்கு இவள் உழைச்ச உழைப்புல பாதி நீ செய்யலை புரிஞ்சுக்கோ. ” அன்பழகன் படபடவென்று பொரிந்தார்.
மாலினி அசரவில்லை.
” அன்னைக்கு உழைச்சா…. இன்னைக்குக் காலை நீட்டி சாப்பிடனும்ன்னு சட்டமா ? அதெல்லாம் முடியாது. எங்க சூழ்நிலை இன்னைக்கு நீங்க எங்களுக்கு ரொம்ப உதவி ஒத்தாசையா உழைச்சுத்தாகனும். ” சொன்னாள்.
” என்ன மாலினி. பேச்சு ஒரு மாதிரியாய் இருக்கு. எங்களுக்கு நீ உத்தரவு போடுறே ? ” என்றாள் அன்னபூரணி.
” ஏன்….? நான் இந்த வீட்ல உத்தரவு போடக் கூடாதா. அந்த தகுதி எனக்கு இல்லேயா ? ”
” அமைதியாய் இருக்கோம் என்கிறதுக்காக இப்படி அதிகப்படியாய்ப் பேசக்கூடாது.” அன்பழகனுக்கும் சூடேறியது.
” இது என்ன அதிகப்படியான பேச்சா ? ”
” சத்தியமாய் அப்படித்தான்! ”
” இல்லே. ”
மாலினி இப்படி ஏட்டிக்குப் போட்டி பேசியது கிடையாது. பதிலுக்குப் பதில் சொன்னதும் இல்லை. இப்போது இப்படி நடக்கிறாளென்றால்……அன்பழகனுக்கு ஓரளவிற்கு விசயம் விளங்கியது.
” இதோ பார் மாலினி! உனக்குத் தனிக்குடித்தனம் போக விருப்பமென்றால் தாராளமாய் நீ மனோராசியில் சந்தோசமாய்ப் போகலாம். இப்படி எங்ககிட்ட சண்டைப் போட்டுப் போகனும்ன்னு அவசியமில்லே.” போட்டு உடைத்தார்.
இதுதான் ஆபத்தாயிற்று. மாலினிக்குள் அதிக கோபத்தை ஏதுவாயிற்று.
” இப்போ நான் உங்ககிட்ட தனிக்குடித்தனம் போறேன்னு சொன்னேனா? இப்போ என்ன கேட்டேன் என்கிறதுக்காக நீங்க இப்படி சொல்றீங்க. எனக்கோ என் புருசனுக்கோ இந்த நிமிசம் வரை அந்த ஆசை கிடையாது. நாங்க தனிக்குடித்தனமும் போக மாட்டோம். ”உரக்கக் கத்தினாள்.
” அப்போ நாங்க கிளம்பறோம்.” அன்பழகனும் எதிரிக்கு எதிரி இணையானார்.
” ஏன் நீங்க கிளம்பி…. புருசன் பொண்டாட்டி எங்க ரெண்டு பேருக்குள்ளே பிளவை ஏற்படுத்தவா ? அதெல்லாம் கூடாது நீங்க இங்கதான் இருக்கனும். சொல்லற வேலையைச் செய்யுங்க. முடியலைன்னா முடியாதுன்னு சொல்லுங்க. அதுக்கு நாங்க மாற்று ஏற்பாடு செய்து எங்க சுமையைக் குறைச்சிக்கிறோம். இதுதான் முடிவு. யோசிச்சு சொல்லுங்க. ” விறைப்பாய்ச் சொல்லி. எதிரி அடுத்த வார்த்தை பேச வாய்ப்பளிக்காமல் விறுக்கென்று எழுந்து அடுப்படிக்குச் சென்றாள் மாலினி.
கணவன் மனைவி திகைத்தார்கள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்து மலைத்தார்கள். பின்….மெல்ல எழுந்து வெளியில் நடந்தார்கள்.
வெகுநேர யோசனை, மௌனத்திற்குப் பின்….
” என்னங்க. மாலினி என்னைக்கும் இல்லாத திருநாளாய் இன்னைக்கு எதுக்கு இப்படி ஒரு ஆடிட்டம் ? ” என்று அன்னபூரணி கேட்டு கணவன் மௌனத்தைக் கலைத்தாள்.
” அதான் நான் சொன்னேனே. அவளுக்குத் தனிக்குடித்தனம் போக ஆசை.” சொன்னார்.
” அதான் இல்லேன்னு சொல்லிட்டாளே ! ”
” அப்படி சொல்லி நம்மை ஏமாத்தறாள். நல்லவள் போல் நடிக்கிறாள்.”
” அப்படியா சொல்றீங்க ? ! ”
” அப்படித்தான் ! ” என்றார் அழுத்தம் திருத்தமாக.
” இவ்வளவு நடக்குது. பொண்டாட்டி பேசறா. மாடியில் இருக்கிற நம்ம பையன் வந்து எட்டிப் பார்க்கலை. ஏன்னு ஒரு வார்த்தைக் கேட்கலைப் பார்த்தீங்களா? ” மனதில் இருந்த ஆதங்கத்தைக் கொட்டினாள்.
” அவனுக்கும் ஆசை அன்னம். மனைவியை ஏவி விட்டுட்டு அமைதியாய் இருக்கான்.”
” நமக்குத் தெரிஞ்சு நாம என்னங்க இவுங்களுக்குக் குறை வைச்சோம் ? ” அன்னபூரணி குரல் கமறியது.
” அதான் சொன்னாளே…! ” .
” நமக்குள் பிளவு வேண்டாங்க. அவள் சொல்றபடி செய்வோம். ” பெற்ற மனம் கரைந்தது.
” கூடாது அன்னம். எதையும் கேட்கிற முறை இருக்கு. அன்பு, அரவணைப்பு, அமைதி, அனுசரணையாய்க் கேட்கனும். அப்போதான் எதிரிக்கு முடியலைன்னாலும் ஏதோ முடிஞ்ச அளவு செய்யத் தோணும். இவள் அதிகாரமாய்ச் சொல்றாள். இவள் சொல்படி செய்தால்….நம்மை வேலைக்காரர்களாக்கி இன்னும் அதிகாரம் பண்ணுவாள். நம்ம எதிர்காலம்… சாகிறவரை இவர்களுக்குப் புழுக்கை வேலை செய்தே சாகனும். ”
கணவன் சொன்னதும் அன்னபூரணிக்குச் சரியாகப் பட்டது.
” இதுக்கு என்னதான்ங்க தீர்வு ? ” யோசனையாய் அவரைப் பார்த்தாள்.
” அதான் எனக்கும் தெரியலை…..யோசனை. ” தலை கவிழ்ந்தார்.
” என்னவோ போங்க. உங்க அண்ணன், அண்ணி பையனோட சண்டை போட்டு கோவிச்சுக்கிட்டு வந்து தங்கி இருக்கிற இந்த நேரத்துல இவ இப்படி சண்டை போட்டது…. வீட்டுக்கு வீடு வாசல்படின்னு அவர்களுக்கும் வருத்தம். ” என்று வருத்தப்பட்டாள்.
”அதுதான் அன்னம் எனக்கும் வருத்தம். குறை இருந்தால் அவுங்க இல்லாத சமயம் இல்லே… அவுங்க வீட்டை விட்டு போன பிறகு மாலினி நம்மகிட்ட பேசி இல்லே சண்டை போட்டு அதைத் தீhத்;திருக்கலாம். இவள் இப்போ திடு திப்புன்னு அவுங்க இருக்கும் போது சண்டை போட்டு நம்ம மானம் மரியாதையையும் கெடுத்துட்டாள். இனி அவுங்க முகத்தில் நான் எப்படி முழிப்பேன். தம்பி தாங்குவான்னு நம்பி வந்தவங்க. இப்போ…. இங்கே எப்படித் தங்குறதுன்னு நெனைச்சி கிளம்புவாங்க. நான் அவுங்களை எப்படி தடுப்பேன்.” அன்பழகன் விசனப்பட்டதுமில்லாமல் குரல் உடைந்தார்.
” ஆமாங்க. படிச்சும் மாலினிக்குப் புத்தி இல்லே முட்டாள்! ” என்றாள் அன்னபூரணி.
”…………………………”
” என்னமோங்க. எங்கே நேர்மை, நீதி நியாயம், அநியாயம் இருக்கு தெரியலை.” என்று சொன்ன அன்னபூரணிக்கும் மனசு கஷ்டமாக இருந்தது.
அடுத்து இருவரும் பேசாமல் நடந்தார்கள்.
அன்பழகன் சட்டைப் பையிலிருந்த கைபேசி ஒலித்தது.
எடுத்து காதில் வைத்து ” ஹலோ…! என்றார்.
” அன்பு! நான் அண்ணன் பேசுறேன்டா. ”
” சொல்லுண்ணா..! ”
” நானும் அண்ணியும் எங்க வீட்டுக்குக் கிளம்பிப் போறோம்.”
” என்ன சொல்றே ? ”
” ஆமாம்டா. நிசம்! ”
” ஏன்….என்ன விசயம் இந்த திடீர் முடிவு ?! ”
” நாங்க இருக்கும் போதே உன் மருமகள் உங்க ரெண்டு பேரையும் தாக்குத் தாக்குன்னு தாக்கி ஓட்றாள். இந்த தாக்குதல் நாளைக்கு எங்களுக்கும் வரக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கைதான் இந்த நடவடிக்கை. அன்பு! இந்த தாக்குதல் என் மகன், மருமகளிடமிருந்து வந்தாலாவது எங்கள் மனசு தாங்கும், ஆறும். உன் மகன், மருமகளிடமிருந்து வந்தால் தாங்கவும் தாங்காது, ஆறவும் ஆறாது. அதான் கிளம்பறோம். புரியுதா…? ”
” அது சரி. அதுக்காக நாங்க வராமல் இப்படி அரக்கப் பரக்கக் கிளம்பனுமா? ”
” நீங்க ரெண்டு பேரும் வந்து சொல்லிக் கிளம்பலாம். ஆனா நீயும் அன்னமும் எங்களை விடமாட்டீங்க. உங்களை மீறி எங்களால் கிளம்ப முடியாது. அதான் நீங்க ரெண்டு பேரும் வீடு திரும்பறதுக்குள்ளே நாங்க உன் வீட்டைவிட்டு வெளியேறிட்டோம். வருத்தப் படாதே.!” முடித்தார்.
கைபேசியை அணைத்த அன்பழகன் முகமும் மனமும் கனத்தது.
” என்னங்க. என்ன விசயம் ? ” அன்னபூரணி கணவனை அன்னாந்து பார்த்தாள்.
விசயத்தை அவளிடம் சொன்னார்.
” பாவம்! கஷ்டம்ன்னு வந்து ஒதுங்கியவர்களைக் கூட இப்படி நிம்மதியாய் இருக்கவிடாமல் பண்ணிட்டாளே பாவி மாலினி ! ” மனசு கொதித்தது.
” விடக்கூடாது. இதுக்காகவாவது அவள் அகம்பாவம், அதிகாரத்தை முளையிலேயே கிள்ளனும், உடைக்கனும்.!! ” சொல்லி வேகமாக எட்டி நடையைப் போட்டார்; அன்பழகன்.
இவர்கள் வீட்டு வாசலில் ஏறும் போது உள்ளே….அருணும் மாலினியும் ஒன்றாக சோபாவில் அமர்ந்திருந்தார்கள்.
நுழைந்த அடுத்த விநாடி அவர்கள் அவசரமாய் ஓடி வந்து…..
” அப்பா! அம்மா! ”
”மாமா! அத்தை! ” – என்று வழியை மறித்து திடுமென்று நெடுசாண்கடையாக இவர்கள் காலில் விழுந்தார்கள்.
” எங்களை மன்னிச்சிடுங்க. ” சொன்னார்கள்.
தம்பதிகள் இதை எதிர்பார்க்கவே இல்லை. அடுத்து ஒரு அடி எடுத்து வைக்க முடியாமல் திகைப்பு. அப்படியே நின்றார்கள். கோபம் தீரவில்லை. எப்படித் தீரும் ? இறுக்கமாய் இருந்தார்கள்.
” மன்னிச்சேன்னு சொன்னாத்தான் எழுந்திரிப்போம். ” – இருவர் குரல்களும் ஒன்றாக ஒலித்தது.
தப்பெல்லாம் செய்து… ஒண்ட வந்தவங்களை விரட்டியதுமல்லாமல் இப்படி அடம், அடாவடியாய் மன்னிப்புக் கேட்டால் எப்படி ?? – அன்பழகன் இளகவில்லை.
” அப்பா சொல்லுங்க ? ” அருண்.
” சொல்லுங்க… புள்ளைங்க ரொம்ப நேரமாய்க் கால்ல விழுந்திருக்காங்க.” பெற்றவள் மனம் இளகியது. கணவனைப் பாவமாகப் பார்த்தாள்.
” முடியாது அன்னம் ? ”
” எதுவா இருந்தாலும் நாம பேசி தீர்த்துக்கலாம்ங்க.” கெஞ்சினாள்.
” சரி. எதுக்கு மன்னிப்பு கேள் ? ” மனைவியைப் பார்த்தாள்.
” நாங்க நடத்தின அடாவடி நாடகத்துக்கு..” அருணே பதில் சொன்னான்.
” புரியலை…?! ”
”அப்பா! என்னதான் வீட்ல சண்டை, சச்சரவு கஷ்டம் நஷ்டமின்னாலும் வீட்டைவிட்டு யாரும் வெளியேறக் கூடாது. கோபம் தாபம் இருந்தாலும் ஒரு நாள் இரண்டு நாள் இடம் மாறி இருந்துவிட்டு மனசு மாறி உடனே வீட்டுக்குப் போயிடனும். அப்போதான் மகன், மருமகள், பேரன், பேத்திகள் உறவெல்லாம் ஆரோக்கியமா இருக்கும். இது புரியாமல் நமக்குத் தாங்க ஆள் இருக்கு தங்க முதியோர் இல்லம் இருக்குன்னு கிளம்பினால் எல்லாம் குலைஞ்சு குட்டிச்சுவராகும். பாசம் நேசமில்லாமல் எல்லாரும் தனித்தனித் தீவாய் மாறிப் போவாங்க. ஏற்கனவே உலகம் அப்படித்தான் ஆகிக்கிட்டிருக்கு. இது மேலும் அப்படி ஆகக் கூடாது. குறிப்பா நம்ம உறவு, குடும்பமெல்லாம் அப்படி ஆகக் கூடாதுன்னுதான் நாங்க ரெண்டு பேரும் திட்டம் போட்டு உங்க ரெண்டு பேர்கிட்டேயும் சண்டை போட்டோம். மாலினி அதை திறமையாய்ச் செய்தாள்.” அருண் எழாமலேயே சொன்னான்.
” ஆமாம் மாமா ! ” மாலினியும் அப்படியேத் தொடர்ந்தாள். ” நாங்க எதிர்பார்த்தபடி பெரிய மாமா, மாமி கிளம்பிட்டாங்க. ‘அடுத்த மருமகளிடம் பேச்சு வாங்குவதை நம்ம மகன், மருமகளிடம் நாம பேச்சு வாங்குறது நல்லதுங்க.’ – அப்படின்னு அறையில் அத்தை மாமாகிட்ட சொல்லியே கிளப்பினாங்க, கிளம்பினாங்க. கிளம்பினவங்ககிட்ட… நீங்க வந்து சொல்லிப் போகலாம்ன்னு நாங்க சொன்னதுக்கு… அது சரிவராது. போன் பண்ணி சொல்லிக்கிறோம்ன்னு சொன்னாங்க. போகும்போது….தயவு செய்து எங்க நிலைமைக்கு உங்க மாமானார் மாமியார் ஆளாகிடக் கூடாது. சண்டை போட்டு துரத்திடாதீங்கன்னு எங்களுக்கு அறிவுரை வேற.”
” மாமா! நல்லதுக்குத்தான் இந்த நாடகம். அதுவும் நாங்க நினைச்சபடி நல்லவிதமா முடிஞ்சு போச்சு. இது தப்புன்னாலும், இனிமே நாங்க தப்பு செய்தாலும் நீங்க எங்களைவிட்டு எங்கும் போகக் கூடாது. நாம சாகிறவரை கூட்டுக் குடும்பமாய் சந்தோசமாய் இருக்கனும். இதுதான் எங்கள் ஆசை. எல்லாம் மறந்து எங்களை மன்னியுங்கள் மாமா. சொல்லுங்க அத்தை. ” என்று மொத்தத்தையும் எழுந்திரிக்காமலே சொன்னாள்.
” ஆமாம்ப்பா…! ” அருணும் அவ்வாறே இருந்து ஆமோதித்தான்.
‘ எப்பேர்பட்ட பிள்ளைகள்…! ‘ அன்பழகன், அண்ணபூரணிக்கு உச்சிக் குளிர்ந்தது. அவர்களை அப்படியே வாரி எடுத்து அள்ளி, ” மன்னிச்சிட்டோம்ப்பா! ” சொல்லி தந்தை மகனை உச்சி முகர்ந்தார்.
மாமியார் மருமகளை உச்சி முகர்ந்தாள்.