குழூஉக்குறிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 4, 2023
பார்வையிட்டோர்: 621 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தேவதைகளைப் பெற்றெடுத்தவுடன் மனைவிகள் பிசாசுகள் ஆகிவிடுகின்றனர் !! தேவதைகளுக்காக பிசாசுகளைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

என் குழந்தை அஞ்சலிப்பாப்பா

‘கார்த்திபா, கார்த்திபா ” என்றபடி தனது பிஞ்சு மணிக்கட்டை காட்டி, சிணுங்கிக் கொண்டேஎன்னிடம் வந்தாள். அம்முவிற்கு கோபம் வந்தால், மணிக்கட்டில்தான் இரண்டு விரல்களை வைத்து சுள்ளென அடிப்பாள். காதலித்தக் காலங்களில் நானும் அடி வாங்கி இருக்கிறேன்.

அஞ்சலிப்பாப்பாவிற்கு ஜனவரியில் மூன்று வயது முடிகிறது. குழந்தைகளின் அற்புதமான காலக்கட்டம், இரண்டரை வயதில் இருந்து நான்கு வயது வரையிலான ஒன்றரை ஆண்டுகள். அந்தக் காலக் கட்டத்தில், பெண் குழந்தைகள் அம்மாவிடம் இருந்து விலகி, அப்பாவிடம் நெருங்கும் தருணங்கள் அலாதியானது. பாப்பாவின் மழலைத் தருணங்களைப் படங்களாக்கி சேமித்துவைத்துக் கொள்வதுதான் எனது பொழுது போக்கு.

மனைவி, தன் கணவனின் குழந்தைப் பருவத்தைக் காண ஆண் குழந்தையையும், கணவன், தன் மனைவியின் குழந்தைப் பருவத்தைக் காண பெண் குழந்தையையும் விரும்புவார்கள் என்பதை எங்கேயோப் படித்தது என்னளவில் உண்மைதான்.

“ஏன் அம்மு, பாப்பாவை அடிச்சே”

“கார்த்தி, எல்லாம் நீ கொடுக்கிற செல்லம், பிரிட்ஜை தொறந்து சாக்லேட் எடுக்குறா… கொஞ்சவா சொல்ற.”

அம்மு கோபமாய் இருக்கிறாள் என்பது, கார்த்தியுடன் வழக்கமாக வரும் பா விகுதி இல்லாதன் மூலம் தெளிவாகத் தெரிந்தது. அஞ்சலிப்பாப்பா என்னிடம் நெருக்கமாக இருந்தாலும், என்னுடைய மேனரிசங்களை இமிடேட் செய்ய மாட்டாள். அப்படியே அம்முவைப்போலத்தான், அவளின் பெரிய குளிர்க் கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொள்வது, அவளின் செருப்பை மாட்டிக்கொண்டு நடப்பது, கார்டூன் பார்க்கும்பொழுது, இரண்டு கைகளையும் தாடையில் வைத்துக்கொள்வது, இடது கையை உபயோகப்படுத்தல் என அம்முவின் மினியேச்சர் வெர்ஷன் தான் அஞ்சலிப்பாப்பா. பாப்பாவிடத்து, நான் காணும் அம்முவின் குழந்தைக் காலத்தை, அம்மு சேட்டையாகப் பார்க்கின்றாள்.

அம்முவையும் நான் குழந்தையாகவே நடத்துவதால், ஒன்றும் சொல்லவில்லை, அவளைப் பார்த்து “சல்யூட்” எனச் சொல்லியபடி என் நெற்றியில் கைவைத்து ராணுவ வணக்கம் சொன்னேன். அது முத்தத்தைக் குறிக்கும் ஒரு ரகசிய சொல். கல்லூரியில் ஒன்றாகப் படித்தபொழுது, யாருக்கும் ஐயம் வராதபடி, வணக்கம் சொல்வதையே சங்கேதமாக மாற்றிக்கொண்டோம். சில சமயங்களில் பியானோ என்ற வார்த்தையையும் பயன்படுத்துவோம், அது ஹேராம் படத்தின் அசைவ எபெக்ட். வேறுசில வார்த்தைகளும் உண்டு, அவை மறந்துப் போய்விட்டன.

பாப்பாவின் வரவிற்குப்பின், சுவாரசியம் கருதி, அம்முவிடம் சங்கேதமாகப் பேசினால் கூட, பத்துக்கு ஆறு தடவை திரும்ப சல்யூட் வராது. மீதி தடவைகளில் சல்யூட் கொடுக்காமல் நிஜமாகவே வந்து தந்துவிட்டுப் போய் விடுவாள். குறிப்பால் உணர்த்திக் குறிப்பாகக் கிடைக்கும் மகிழ்ச்சியை இழந்து கொண்டிருக்கிறேனோ என யோசித்தது உண்டு. அம்முவை தொடர்ந்து காதலித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றுதான் அவளைத் திருமணம் செய்தது, ஆனால் தனது தேவதைத் தன்மையைக் குழந்தையிடம் கொடுத்துவிட்டு தெரிவையாக இருக்கின்றாள்.

“நானும் பாப்பாவும் ரவுண்ட் போறோம், நீ வர்றீயா அம்மு”

“எங்கேயாவது போங்க, நான் வரல,”

குளிருக்கான உடைகளை ஜம்மென்று அணிந்து கொண்டு, பாப்பாவை குழந்தை வண்டியில் வைத்துக்கொண்டு வெளியே வர,

“கார்த்தி, பனியில இறக்கிவிடாதே, சாக்லேட் வாங்கித் தராதே” என்று அம்மு அறிவுறுத்தினாள். வழியில் கடைக்குப்போனோம்., பாப்பா சாக்லேட்டை கைக்காட்டினாள். அதன் அடையாளமும்

ருசியும் தெரியும், பெயர் தெரியாது.

சாக்லேட் சாப்பிட்டபடி நீண்ட நேரம் பனியில் விளையாடினோம். சாக்லேட்டிற்கு “ஒன்னுமில்ல” என்றப் புதியப் பெயரை பாப்பாவிற்கு கற்றுக்கொடுத்தேன். பனியில் விளையாடினோம் என்பது “வேடிக்கப்பார்த்துச்சு” . என ஆனது.

அம்மா ஞாபகம் வந்துவிட்டது போல, தானாகவே வந்து வண்டியில் பாப்பா ஏறிக்கொண்டாள். போகும் வழியில் பனியில் விளையாடிய சுவடேத் தெரியாமல் பனித்துகள்களை எல்லாம் உதறியாகிவிட்டது. நல்ல பிள்ளைகளாய் வீட்டிற்குள் நுழைந்ததும் அம்முவிடம் ஓடிப்போய் கட்டிக்கொண்டது. கிரிக்கெட் ஹைலைட்ஸ் பார்க்க நான் மடிக்கணினியை துவக்க, அம்முவும் பாப்பாவும் பேசிக்கொண்டு, கொஞ்சிக்கொண்டு, விளையாடிக்கொண்டு இருந்தார்கள். பேஸ்புக்கிலும் கிரிக்கெட்டிலும் இருக்கும்பொழுது, அவர்களுக்கிடையிலான உலகத்தைக் கவனிக்க மறந்துவிடுகின்றேனோ !!

அன்று மாலையும், நானும் பாப்பாவும் வெளியேப்போக கிளம்பிக் கொண்டிருக்கையில், அம்மு,

“கார்த்திபா, நானும் ஒன்னுமில்ல சாப்பிட, வேடிக்கப்பார்த்துச்சு விளையாட வர்றட்டா ” என்றபடி எனக்கு சல்யூட் வைத்தாள். பாப்பாவும் அதை இமிடேட் செய்தது.

பகிர்ந்து கொள்ளப்படும் குழூஉக்குறிகள் அருஞ்சொற்களாகின்றன. தேவதைகளின் அம்மாக்களும் தேவதைகள்தான், எப்பொழுதும் தேவதைகளுக்குள் ரகசியங்கள் இருப்பதில்லை. தேவதைகளை பனி மழையில் மனதிலும் கைபேசியிலும் படமெடுத்துக் கொண்டபடி, பாக்கியம் பெற்ற ஒரு சேவகனாகப் பின் தொடர்ந்தேன்.

– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு:http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *