கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 18, 2024
பார்வையிட்டோர்: 4,522 
 
 

கைநிறைய பத்திரிகைகளும் மனம் நிறைய நினைவுகளையும் தேக்கிக்கொண்டு பஸ் ஏறிவிட்டேன். இடைவெளிகள் மனித மனங்களுக்குள் இருந்த வேற்றுமைகளை மட்டுமல்ல சிலநேரங்களில் ஒற்றுமைகளையும் களைந்து காணாமல் போகச் செய்துவிடுகிறது. வெற்றுப்பூக்கள் பூத்திருக்கும் பெயரறியாச் செடிபோல, பாதைகளின் ஓரங்களில் மலர்ந்து முகிழ்ந்து கிடக்கிறது சில கேட்பாரற்ற அன்பு. பேருந்தின் ஜன்னல் இருக்கையும், பக்கத்து இருக்கையில் இம்சை இல்லாத ஆசாமியுமாக, அந்தநாள் இரட்டை சந்தோஷங்களை கொண்டு வந்து சேர்த்திருந்தது. என்னுள் வெயிலும் காய்ந்து, மழையும் முணுமுணுத்துக் கொண்டு இருந்தது.

“… இப்படி நடந்தா நரிக்கும் பரிக்கும் கல்யாணமாம்…”  தொளி கடலையை உரித்துக்கொண்டே சுலோச்சனா சொன்னது காதுகளுக்குள் பத்திரமாக இருக்கிறது, அந்த சின்ன பதின்மக்குரல்… ஆச்சர்யங்களையும் ஏக்கங்களையும் மொத்தமாய் குத்தகைக்கு எடுத்துக்கொண்ட பதின்மக்குரல்… காணும் அத்தனையும் ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் கண்களை விரித்து அதை குரலில் பதிவுசெய்யும் பதின்மக்குரல்…

“அதெப்படி நரியும் பரியும் கல்யாணம் பண்ணிக்கிடும்..? அது வேற இனம் இது வேற இனம்…” என்பேன் அவள் தந்த கடலைக்காக கூட அவள் கூற்றை ஒப்புக்கொள்ளும் நியாயம் தவறாமல். மழைத்துளிகள் ஜன்னல் கம்பியில் விழுந்து வடிந்தது. ஒற்றை விரலால் அதைத்தேய்த்து சமன் படித்திவிட்டேன். இலைகள் குலுங்கிய மரங்கள் பேருந்தைக் கடந்துபோனது. கண்ணுக்கு எட்டிய தூரம் மட்டுக்கும் வயல்களாய் பச்சை பூத்திருந்தன..! ஆங்காங்கே மதகுகளும், தலைசுமையோடு கடந்த ஆசாமிகளும் என்று விரைவான கடத்தலில் மனிதர்களை கண்கள் நிரப்பி நிரப்பி உமிழ்ந்து கொண்டு இருந்தது. காற்றாலை மின்சாரம் எங்கோ அடிகூரில் மூன்று விசிறிகளுடன் விரைப்பாய் நின்றது. காற்றின் வேகத்திற்கு கண்கள் தன்னால் குறுக்கிக் கொள்ள சாளரத்தின் வழி தாராளமாக காற்று வந்து முகத்தில் மொந்திக்கொண்டு இருந்தது.

“அங்கேயே போய் தங்கிடாதே… இங்கே கல்யாண வேலை தலைக்கு மேல கிடக்கு. உனக்கு ஊரையும் ஊறணியையும் பார்த்தா போதும் வேறெந்த நினைப்பும் வராது…” அம்மா கிளம்பும்போது ஒன்றுக்கு நூறுமுறை சொல்லித்தான் அனுப்பி வைத்தாள்.”என்னம்மா அங்கே வேலை இருக்கு..! இன்னும் கால்சராய் போட்டுட்டு சுத்தற பருவமா என்ன..? வந்துடுவேன். ” சொல்லிவிட்டு கிளம்பினாலும், நகரத்தின் எல்லையைத் தாண்டியதும் மனசு பழமை மணக்கத் தொடங்கி இருந்தது.

கிட்டத்தட்ட எட்டு வருடங்கள்..! ஆரம்பக்கல்வி முழுக்க அங்கேதான். அம்மாயின் அழுக்குசீலை மடியில் தலைவைத்துக் கொண்டு வாமணன் கதைகேட்ட நாள்கள்தான்..! அம்பலத்தார் கிணற்றில் முங்கு நீச்சல் கத்துக்கொண்ட காலம்தான்..!அய்யனாருக்கு கெடாவெட்ட, அம்பாசமுத்திரம் சந்தைக்கு ஆடுவாங்க, மாமனின் கைகளைப் பற்றிக்கொண்டு பயணமான காலம் தான்..! எல்லாமே முத்துமுத்தாய் மனசுக்குள் கோர்த்து வைத்ததுபோல் இருக்கிறது..! அடிமனசை அகப்பை கொண்டு கிளறி விட்டதுபோல் பயணம் நினைவுகளை ருசிக்க வைத்துக் கொண்டு இருந்தது…

அப்பாவுக்கு ரயிலில் டிரைவர் வேலை..! மாசத்தில் பாதிநாள் வண்டியிலேயே பயணம். கூட்டம் குருமாத்தாய் வாழ்ந்த அம்மாவுக்கு அவர் இல்லாத நாட்களில் தனிமையில் கழிக்க பயம். அதனால் கிராமத்திலேயே தங்கிவிட்டார். நானும், இரண்டு தங்கச்சிகளும் அம்மாவோடு அம்மாச்சி வீட்டில் இருந்து கொண்டோம். அப்பா அடிக்கடி வந்துபோவார்.

பக்கத்தில் இருந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆரம்பகால படிப்பு ஆரம்பமானது. மஞ்சள் பை, தோளில் இருந்து முழங்கால் மட்டுக்கும் நீண்டு தொங்கும் தண்ணி கேன்..! சின்ன சில்வர் டப்பா மதியச் சாப்பாட்டுக்கு. இதுதான் அந்நாளில் என்னுடைய ஆஸ்தி. மாமா பசங்களும், சின்னம்மா பசங்களும் அதே பள்ளிக்கூடம்தான். இன்னும் சொல்லப்போனால், ஊரில் பாதிப்பேர் சொந்தமாகவே இருந்தார்கள், மீதிப்பேர் கொஞ்சம் தள்ளிய உறவாக இருப்பார்கள்.

இப்போது நினைத்தால், அந்த நாட்களை இன்னும் கொஞ்சம் ருசித்து இருக்கலாம் என்று மனசு சொல்கிறது. விதைப்புக்கு முன்னே வந்துபோகும் மழை வீணாய் போவதுபோல், கண் திறப்பதற்கு முன் அந்த விடியல் காணாமல் போய் இருந்தது. அந்த மனிதர்களோடு சேறும் சகதியுமாக கலந்து செம்மண் பூவாய் பூக்கத் துவங்கிய நாளில், அம்மாவின் மனசிற்குள்ளும் கொஞ்சம் தைரியம் விதை பிடித்துக் கொண்டதுபோல, குடும்பம் அப்பாவோடு குவார்ட்டஸ்ஸுக்கு குடிபெயர்ந்து கொண்டது.

நகரத்துப் படிப்பு, கான்கிரீட் காடுகள்… போலிப் புன்னகை… ஈகோ கட்டுமரங்கள்… தடுமாறி தடுமாறி இங்கிலீஷ் நாவேறிக் கொண்டது. தேவைக்கு இன்றி தமிழ் தள்ளி நின்றுகொள்ள நாகரிகமும் ருசியாகத்தான் இருந்தது. உணவுக்கு பின்னே பரிமாறப்படும் பனிக்குழவை என்ற ஐஸ்க்ரீம் போல்..! தித்திப்பாய்… குளுமையாய்த்தான் இருந்தது. ஆனால் ஆரோக்கியமாக இருந்ததா என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை…

கல்லூரியில் இருந்த சமயம், அப்பாவின் அகால மரணம்..! அதன்பிறகு குடும்ப பொறுப்பேற்று இரண்டு தங்கைகளை மணம் முடித்துவிட்டு என்னுடைய திருமணத்தில் வந்து நின்றபோது முப்பத்தி மூன்று வயதாகி இருந்தது. ஆண் என்ற சவுகரியம் இப்போதுதான் புரிந்தது..! சேந்தமங்கலம் வந்து இறங்கியபோது, நினைவுகள் தறிகெட்டு ஓடியது. என்னைப்போலவே ஊரும் நிறைய மாறி இருந்தது. ஆனால் திருத்தமாக இருந்ததே தவிர வருத்தமாய் இல்லை..!

வேப்பண்ணெய் தடவி, தலையை வாரி பிச்சிப்பூ சூடியதுபோல் நறுவிசாய் இருந்தது ஊர். குட்டிச்சுவராய் இருந்த இடமெல்லாம், குட்டிக் குட்டி கடைகளாய் மாறி இருந்தன. சரபலகை இறக்கிய கடைகள் போய் ஷட்டர் உபயமாகி இருந்தது. அதிலும் ரீசார்ஜ் நிறுவன விளம்பரங்கள் சிகப்பும் மஞ்சளுமாக..! டி.டி.பி சென்டர்கள் ஆங்காங்கே தென்பட்டன. ‘துளசி அழகு நிலையம்’ வேறு கண்ணில் பட, என் கண்ணில் அனிச்சையாய் சிரிப்பு பூத்தது..! மாற்றம் என்பது முன்னேற்றத்தோடு இயைந்து வரும்போது அதுபார்க்க அழகாய்த்தான் இருக்கிறது.

அம்மாச்சி வீட்டுக்கு போய் நின்றேன். அம்மாச்சி தவறிப்போய் இரண்டு வருசத்துக்குமேல் ஆகிறது. அம்மாச்சி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அம்மாச்சி வீடுதானே அது..! மாமனும் அத்தையும் பழைய பாசம் துளிகூட மட்டுப்படாமல் வந்து கட்டிக் கொண்டார்கள். இடியாப்பமும், பணியாரமும், கேழ்வரகு புட்டும், கார உப்புட்டு என்று காலையிலேயே சாப்பாடு தூள் கிளப்பியது, இந்த ருசி மட்டுமல்ல இந்த வகையறாக்களேயே மறந்துபோய் பல வருசமாகிறது. அதிகபட்சம் காலையில் இட்லியோ தோசையோ இருக்கும். சிலநேரம் இடியாப்பம் வாசலில் வந்து நின்றால், வாங்கி வைப்பதோடு சரி. அதற்கு தொட்டுக்கொள்ள ஓரத்தில் தேங்காய்பூவும், அஸ்காவும் இருக்கும். ஆனால் இடியாப்பத்திற்கு சொதியும், கால் குழம்பும் வைத்திருந்தார்கள். கிண்ணத்தில் தேங்காய்ப்பால் கெட்டியாய் இருந்தது. இப்போது எதை ருசிப்பது என்ற குழப்பம் எனக்குத்தான் வந்துவிட்டது.

“ரெண்டொரு நாள் இருந்துட்டுப் போ சின்னத்தம்பி..! மாரிமுத்துட்ட சொல்லி அனுப்பறேன். ஆத்து விராலு புடுச்சாருவான். செனை மீனு தின்னா அம்புட்டு ருசியா இருக்கும். நீ இங்கே இருக்கும்போது உனக்கு மட்டும் செனையை தனியா எடுத்து வறுத்து வைப்போம்…” அத்தை கோழியை குடலுருவிக் கொண்டே சொன்னது. முயற்சி செய்வதாய்ச் சொல்லிவிட்டு பத்திரிகைகளை எடுத்துக் கொண்டு நடந்தேன். பலர் ஜாகை மாறி இருந்தார்கள். சிலர் ஜாடை மாறி இருந்தார்கள்.

சுலோச்சனா வீட்டைக் கடந்தபோது ஒரு நொடி தயங்கினேன். “அவள் இங்கே இருப்பாளா..? இந்நேரம் அவளுக்கு கல்யாணம் காட்சி ஆகி குழந்தை குடும்பம் என்று ஆகி இருக்கும். இங்கே அவளைத் தேடி நிற்பதுகூட அவசியம் இல்லாத செயல் இல்லையா..?’ வீட்டை நிமிர்ந்து பார்த்தேன். அன்றைக்கு பார்த்ததுபோல் அப்படியே இருந்தது. இரண்டொரு வெள்ளைப் பூச்சைப் பார்த்த தேகம் என்று சொன்னது. போன ஐப்பசியில் பெய்த அடைமழைக்கு குறுமாட்டி சுவரில் பிடித்த பாசி இன்னும் பச்சை ஈரமாய் ஒட்டிக்கொண்டு இருந்தது.

தருகி தருகி நின்றேன். வழிப்போக்கு முண்டாசு ஒன்று என்னை கொஞ்சம் விசித்திரமாய் உறுத்த,”குருமூர்த்தி அண்ணே வீடு….””இதுதான்..! உள்ளார போங்க. வாசல்ல கயித்துகட்டிலைப் போட்டுத்தான் பெரிசு ஓய்ஞ்சு கிடக்கும்…” சொல்லிவிட்டு நகர, கொஞ்சம் சன்னமான சஞ்சலத்துடன் பழைய ஒற்றைத் தேக்குமர கதவில் ஊசலாடிய பித்தளைக் காதை, மெல்ல கதவில் தட்டி ஓசை செய்தேன்..! ஓடிவந்து தாள் திறந்தது ஒரு சிறுபெண். அச்சு அசலாய் சுலோச்சனாவின் ஜாடை அப்பிக் கிடந்தது. அந்தக் கண்ணும், அதில் பிசைந்து கிடந்த வெள்ளந்தித்தனமுமாக… மெல்ல கைநீட்டி அதன் கன்னத்தைத் தொட, விருட்டென முகத்தை பின் இழுத்துக் கொண்டது. அந்த முன்னெச்சரிக்கை எனக்கு பிடித்தது..!

“யார் வேணும்..?” மழலையில் கண்டிப்புகாட்ட முற்பட்டு தோல்வியைத் தழுவியது.

“குருமூர்த்தி அய்யா…” கதவை ஒருகையில் பற்றிக்கொண்டு என்னையும், உள்ளுக்குமாய் ஒரே பார்வையை நேர்கோட்டில் கடத்திவிட்டு எனக்கு வழிவிட்டு நகர, நான் செருப்பை நடையில் விரித்துவிட்டு வாசலில் நகர்ந்தேன். அட்டகாசமான வாசல்..! பத்துமூட்டை நெல்லைக்கூட பதவிசாய் உலர்த்திப் போடலாம் போல் விஸ்தீனமாய் இருந்தது. தடுக்கு வேய்ந்து இருந்தார்கள் நிழலுக்காக. தடுக்கு இடைவெளியில் வெயில் கீழே விழுந்து வித்தைகாட்டிக் கொண்டு இருந்தது. ஈஸி சேரில் சாய்ந்திருந்த பெரியவர் தலைநிமிர்த்தி என்முகத்தில் அடையாளம் தேடிக்கொண்டு இருந்தார்.

வணக்கம் வைத்துவிட்டு ஒட்டுத்திண்ணையில் உட்கார்ந்து கொண்டேன். அம்மாச்சியின் பேரையும் அம்மா பேரையும் சொன்னதும் எனக்காக அறிமுகத்தில் பெரிசாய் இடர் வரவில்லை..! “ரயில்ல வேலை பார்த்த ஆலோலத்து மவனா..? எங்க சுலோச்சனா கூடத்தான படிச்சே..? பரவாயில்ல..! ஓங்குதாங்கா நிக்குற ஆபீஸராட்டம். என்ன வேலை செய்றே..?”

சொன்னேன்..! புரியவில்லை..!

“இம்புட்டுக்காலம் கல்யாணம் பண்ணாமயா இருந்தே..? அதுசரி ஆம்பளைப் புள்ளைதானே…? உனக்கு பிறகால ரெண்டு பொட்டைப் புள்ளைக இருந்துச்சு அதுகளை கரையேத்த வேண்டாமா..?” கேள்வியும் இருந்தது பதிலும் அவரிடமே இருந்தது.

பேச்சுக்குரல் கேட்டு உள்ளிருந்து தலையை நீட்டிப்பார்த்த பெண்ணைப் பார்க்க சுரீரென்றது. முப்பதுகளுக்குத் தேவையான மூப்பு இருந்தது முகத்தில்..! வெளீர் நிறத்தில் சேலையும், விபூதி நெற்றியுமாய்…  சுலோச்சனாவே தான்..! கொஞ்சம் அதிர்வாய் உள்ளே உணர்ந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் சன்னமாய் சிரித்தேன். பதிலுக்கு சிரித்தாலும் அதில் சினேகமே இல்லை..! “இதாரு தெரியுதா..?” என்றார் பெரியவர் இருவருக்கும் பொதுமையாய்..!எனக்கு முன்னே அவள் உதடு பிதுக்கி தலை அசைத்தாள் தெரியவில்லை என்று. சப்பென்று போனது.

“நம்ம பாப்பாத்தி அம்மாச்சியோட பேரன். உன்கூட படிச்சார்ல எட்டாப்பு வரைக்கும். அவுக அப்பாகூட ரயிலோட்டற வேலையில இருந்தாரே…” ஓலை விசிறியை விசிறிக்கொண்டே பக்கவாட்டில் திரும்பிச் சொல்ல, சுலோச்சனா நெற்றியில் நெளிந்த முடிச்சுக்கள் விடைக்கு பதிலாய் விரிசலான குழப்பத்தை மட்டும் தந்ததாய்ச் சொன்னது..!”நெனைப்பில்ல அப்பாரு..! செரி இப்பயென்ன அதுனால..? எல்லாம் நமக்கு வேண்டப்பட்டவக தானத்தான் இருக்கும்..! நான் போய் குடிக்க மோர் கொண்டாறேன்…” உள்ளே நகர, எனக்கு என்னை நினைப்பில் வைத்துக்கொள்ளாத அவள் தரும் மோர் குடிக்காமலே புளித்தது.

“மறந்துருப்பா கழுதை..!  என்னை செய்ய மனுசன் சுமந்த சுமைக்கே மட்டுபட்டுப் போகயில, இது பட்ட பாட்டுக்கு என்னத்த நெனைப்புல இருக்கப் போகுது..? எனக்கும் கண்ணாலம் ஆச்சு… நானும் புருசன் கூட பொழைச்சேன்கிற கணக்கா மூணுவருசம் தான் வாக்கப்பட்டவன் கூட வாழ்ந்த வாழ்க்கை..! மின்னல் விழுந்து அவன் மின்னலா மறைஞ்சு போயிட்டான்..! கைப்புள்ளையோட வீட்டுக்கு வந்து சேர்ந்தவ தான்.. எட்டு வருசம் ஓடிப்போச்சு..! உயிரோட தான் இருக்கா, ஆனா உயிர்ப்பா இருக்காளானு கேட்டா என்ன பதில் சொல்றது..?அண்ணன் தம்பி வீட்டுக்கெல்லாம் அல்லல்பட்டு வந்து நிக்கக்கூடாது..!

ஆனை அம்பாரியோட வந்து அரைவயிறு சாப்பிட்டுப் போனாத்தான் மருவாதை..! தங்கிப்போய் திங்க ஆரம்பிச்சா நடையில கிடக்கிறதுக்கு உள்ள மருவாதைதான்..! என்னத்த சொல்றது…” குரல் தேய அவர் சொல்லவும் சுலோச்சனா மோரோடு வரவும் சரியாக இருந்தது. மிடறு மிடறாய் உள்ளே இறக்கினேன். மனசு ஏனோ கரித்துக் கொண்டே இருந்தது. தருகிக்கொண்டு நின்றதுபோல் பேசாமல் போய் இருக்கலாம்… காதில் கேட்காதவரை கற்பனையே ராஜா என்று இருந்திருக்கலாம் என்று மனசு மருதலித்து பேசிக்கொண்டு இருந்தது.

பத்திரிகை தந்துவிட்டு விடைபெற்றுக் கொண்டு நகர்ந்தேன். என் முதுகு முழுக்க, அவர்கள் பார்வை ஊர்ந்து கொண்டே இருந்தது. சுலோச்சனா என் வகுப்பில் படித்தாள் என்றாலும், என்னைவிட மூன்று நான்கு வயதாவது மூத்திருப்பாள். ஓவ்வொரு வகுப்பிலும் அழுத்தமான அடித்தளம் அமைத்து வந்தவள். அதுமட்டுமல்ல கதிர் அடிக்க, நெல் தூற்ற என்று அத்தனை கழனி வேலைகளுக்கும் அவள் விடுப்பு போட்டு போட்டு படிப்பை தனக்கு தூரமாக்கி கொண்டாள். பொம்பளைப் புள்ளைக்கு எச்சுப்படிப்பு எதுக்கு..? என்ற கருத்து ஆழமாய் ஊன்றிப்போன கிராமத்து மனிதர்கள் நடுவே கல்வி அவளைக் கடந்து போய் இருந்தது…

சின்ன வருத்தமாக இருந்தது. நிஜத்தில் இன்றைய அவளுடைய நிலைகுறித்து அவள் அப்பா வருத்தப்பட்டு பேசிய நிமிசம் கொஞ்சம் படித்து நிமிர்ந்து இருந்தால், அவளுடைய வாழ்க்கை இத்தனை சீரழிந்து இருக்காது என்றுதான் எனக்குத் தோன்றியது நிஜத்தில். வகுப்பில் சற்று பெரிய பெண் என்பதால் அவள்தான் அத்தனை பேருக்கும் பாடம் சொல்லித்தருவாள். சண்டைக்கு பஞ்சாயத்து செய்வது முதல், திண்பண்டங்களை பங்காடிக் கொடுப்பதுவரை அத்தனையும் அவள்தான்..! அப்படி ஒரு நாளில்தான் எனக்கும் வகுப்பில் இருந்த மற்றவர்களுக்கும் சைக்கிள் ஓட்டக்கற்றுத் தந்தது. கம்மாய் ஓரம் இருக்கும் காலி மைதானத்தில் பார் வைத்த சைக்கிளில் லாவகமாய் ஏறி அமர்ந்து நடுவாக்கில் பாவாடையைப் போட்டுக் கொண்டு அவள் சைக்கிள் விடும் வேகத்தைப் பார்க்க  எனக்கெல்லாம் கண்ணைக் கட்டும்..!

என்னுடைய பத்து பதினொராவது வயதுவரைக்குமே, உலகத்தில் மிகச்சிறந்த சாகசம் எதுவென்று கேட்டால், கையை விட்டு ஆகாசத்தை வெறித்துக்கொண்டு வேகமாய் சைக்கிள் விடுவதுதான் என்று சொல்லுவேன்..! அந்தச்செயலை யாரும் செய்ய முடியாது… சுலோசனாவைத் தவிர என்று அரிதியிட்டுச் சொல்லுவேன்..! எனக்கும் சைக்கிள் விடவேண்டும் என்று பெரும் ஆசை. ஆனால் அம்மா கம்மாய்ப் பக்கம் நான் போனாலே கைகாலை முறித்து போட்டு விடும். அதற்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.

சுலோச்சனா எல்லோருக்கும் சைக்கிள் விடக் கத்துத்தருகிறாள் என்ற செய்தி கேட்டு வீட்டிலே டேக்கா கொடுத்துவிட்டு ஓடிவிட, கம்மாயைச் சுற்றி அத்தனையும் சிண்டு சிறுசுகள்..! சிலரை உட்கார்த்தி வைத்து அவளே தள்ளிக்கொண்டு நகர்ந்தாள். பெடலை எட்டாமல் கால்கள் தத்தளிக்க, ஒருபக்கம் சாய்ந்துகொண்டு குரங்கு பெடல் அடித்துக்கொள்ள சுலோச்சனா பின்னாக தன்னுடைய பலம் முழுக்க வைத்து தள்ளிக்கொண்டே வருவாள்… அந்த மாலை வேளையில் எங்களுடைய சைக்கிள்பவனி தொடரும்.

ஆளுக்கு ஐந்து நிமிசம் தான் ஓட்டுவதற்கு..! உயரமான பையன்கள் தட்டுத்தடுமாறி ஏறிக்கொண்டாலும், என்னை மாதிரி சிறுசுகளின் அத்தனை பாரங்களையும் சுலோச்சனா தாங்குவாள் தன்னுடைய உடலில்..! இப்போது நினைத்தாலும் அந்தக்காலம் அவ்வளவு இனிமையானதாக இருக்கும்..! சைக்கிளில் பெடல் எட்டாமல் குரங்கு பெடலடிக்க, ஹேண்டில் பாரைப் பிடித்துக்கொண்டு தள்ளிக்கொண்டே சைக்கிள் ஓட்டக் கத்துத்தருவாள் பொறுமையாக.

“நீ யார்கிட்ட சுலோச்சனா கத்துக்கிட்ட..?” அத்தனை பேரின் கண்களும் அவளின் செப்படி வித்தையில் வியந்து நிற்க, பெருமிதம் பொங்க நிற்பாள் அவள்..! என்னுடைய முதல் டிரைவிங் டீச்சர் அவள்தான். இன்று ராயல் என்பீல்டை தடதடக்க தெருவில் ஓட்டிப்போகும் போதும் அன்று குரங்கு பெடல் அடித்து, காலை சக்கரத்தில் விட்டுக் கொண்டதும், இடப்பக்கமாய் தொண்ணூறு டிகிரியில் சரிந்து முழுக்க முழுக்க சுலோச்சனா மீது சாய்ந்துகொண்டு பயம் விலகாமல் சைக்கிள் விட்டதும் நினைவில் வருகிறது இன்றுமே..!

“சின்னத்தம்பி, ரோட்டைப் பார்த்து ஓட்டுடா..! கீழெல்லாம் விழுகமாட்டே..! நான் கேரியரை பிடிச்சிட்டு பின்னாலயேதான் வர்றேன்…” காற்றோடு சேர்ந்து கத்துவாள்..! அடிகளும் விழுப்புண்களுமாய் என்னுடைய வாகன அனுபவம்… அனிச்சையாய் முழங்கையைத் திருப்பிப் பார்த்துக் கொண்டேன்… பட்டையாய் கருப்புத் தழும்பு..!குழந்தைப்பிராயமும், அதுசார்ந்த எண்ணங்களும் மீட்க மீட்க தேன் சுரக்கும் இன்பமானவை..!

பத்திரிகைகளை தந்துவிட்டு பாதையெல்லாம் சிதறிகிடந்த பழைய நினைவுகளை கோர்த்துக்கொண்டே நடந்தேன்… மாலை மங்கிக்கொண்டு இருந்தது. மைதானத்தை ஒட்டிவந்தபோது கொஞ்சமே மிச்சமிருந்த வெளிச்சத்தில், தெளிவாய் அவள் தெரிந்தாள். சேலையைத் தூக்கி சொருகிக்கொண்டு குரங்கு பெடல் அடித்த மகளை முழுசாய் தன் வலப்பக்கமாய் சாய்த்துக்கொண்டு, கேரியரை ஒரு கையில் பற்றிக்கொண்டு சிரத்தையாய், அதே சுலோச்சனா… உடையும் உருவம் மட்டும்தான் மாறி இருந்தது. ஆனால் ஒரு வித்தையைக் கற்றுத்தரும் தீவிரமும், அக்கறையும் அப்படியே அந்த முகத்தில் விலகாமல் படிந்துகிடந்தது.

“நல்லா பிடிச்சுகிடு… அம்மா பக்கத்தாலதான் இருக்கேன்…” காற்றோடு சத்தமிட்டுக்கொண்டே இருந்தாள். அன்றைய உற்சாகம் கண்களில் இன்றும் மீண்டும்வர வேடிக்கை பார்த்துக்கொண்டே நின்றேன். பார்வை உறுத்த திரும்பிப் பார்த்தவள், சைக்கிளை நிறுத்திவிட்டு வேகமாய் சொருகி இருந்த புடவையை தளர்த்தி விட்டுக் கொண்டாள். கண்களில் பரிச்சய பாவனை.  பக்கத்தில் போனேன். நிமிர்ந்து பார்த்துவிட்டு தலைகுனிந்து கொண்டாள்.

“நானும் இப்படித்தான் உங்ககிட்ட சைக்கிள்விட கத்துகிட்டேன். குரங்கு பெடல்…”  நான் சொல்லிவிட்டுச் சிரிக்க, அவள் கண்களிலும் மின்னல் வெட்டியது. “எனக்கு அவ்வளவும் நினைவில் இருக்கு சுலோச்சனா..! நீ ஏன் மறந்தேன்னு தெரியல… இல்ல மறைக்கிறேன்னும் தெரியல..! உன்னோட வீரம் குரங்கு பெடலோட நின்னுபோச்சு. உன் பொண்ணையாவது தனியா ஓட்டுற தைரியத்தோட வளர்த்து..!” தலைகுனிந்தபடி புன்னகைத்துக் கொண்டாள். மெல்ல அந்த இருளோடு நடந்தேன். அவள் இன்னும் குரங்கு பெடல் அடித்த மகளை தோளில் தாங்கிக்கொண்டு கூடவே ஓடிக்கொண்டு இருந்தாள் வெறும் காலோடு…

– குங்குமம் தோழி (2022-08-15)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *