(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இனிய காலை விடிந்தது. ஆனால் தாமரையின் மனதில் இருள் விலகாதிருந்தது.
தாமரை தன் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். இரவு முழுதும் தூக்கம் இல்லாமல் அழுது அழுது அவள் கண்கள் வீங்கியிருந்தன. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பார்களே அது போலத் தன் வாழ்க்கையிலும் கட்டிய தாலிக்கயிற்றின் ஈரம் காய்வதற்குள் எல்லாம் முடிந்து விட் டதே என்று நினைத்தாள்.
அடுத்த அறையிலிருந்து வெளிப்பட்ட அவள் கணவன் கண்ணன் “தாமரை, உனக்குத் தேனீர் போட்டிருக்கிறேன். குடி. ஏதாவது சாப்பிடு. பெட்டியில் உன் உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டு தயாராய் இரு. இன்று மாலை 7.15 மணிக்கு விமானம். நாம் ஐந்து மணிக்கெல்லாம் இங்கிருந்து புறப்பட வேண்டும். நிர்மலா இன்று இந்தியா போகிறாள். உனக்குத் துணையாக இருப்பாள். நான் நிர்மலா வீடு வரை சென்று வருகிறேன்” என்று கூறி விட்டு பதிலுக்குக் காத்திராமல் வெளியேறினான்.
தாமரைக்கு மணமாகி மூன்று மாதங்கள் கூட முடியவில்லை. அதற்குள் எல்லாம் முடிந்து விட்டன.
முந்தைய நாள் கண்ணன் அவளிடம் பேசியவற்றை நினைத்துப்பார்த்தாள். எவ்வளவு பெரிய விசயத்தை மிகச்சாதாரணமாக, நிதானத்துடன் எப்படி அவரால் பேச முடிந்தது?
“தாமரை இங்கே வா… உன்னிடம் பேச வேண்டும்” என்று அழைத்தான். அவளும் அவன் அருகே வந்து அமர்ந்தாள். “நம் திருமணத்தில் எங்கோ தவறு நேர்ந்திருக் கிறது. நான் என் பெற்றோர்களிடம் எனக்கு ஏற்றவளாக, படித்த பெண்ணாகப் பாருங்கள் என்று கூறியிருந்தேன். அவர்கள் காட்டிய உன்னை மணந்தேன். அவள் அறிவாளி யாக, தைரியமானவளாக, கலைமகளாக, திறமையானவளாக இருக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் நிஜம் வேறாகிவிட்டது.
நீ என்னதான் முதுகலைப் பட்டம் படித்திருந்தாலும் கிராமத்து சூழலில் வளர்ந்தவள். கணவனே உன் உலகம். கணவன் மது அருந்தக்கூடாது என்று நினைப்பவள் நீ. மனைவியும் கணவனுடன் சேர்ந்து மது அருந்தலாம், அது தவறில்லை என்று நினைப்பவன் நான். மனைவி கணவனுக்கு அடங்கியவள் என்று நினைப்பவள் நீ. கணவன், மனைவி இருவருமே சமம் என்று நினைப்பவன் நான்.”
“நம் எண்ணங்கள் ஒத்துப்போக வேண்டும். அப்போது தான் வாழ்வில் வெற்றி கிடைக்கும். ஆகவே உன்னைப் பிடிக்காமல் உன்னுடன் குடும்பம் நடத்த நான் விரும்பவில்லை. நாம் பிரிவதுதான் சரி. நாளை நீ ஊருக்குப் புறப்படத் தயாராக இரு. ரிடன் டிக்கெட் இன்னும் காலாவதி ஆகவில்லை. நான் ஃபிளைட் கன்ஃபர்ம் செய்கிறேன்” என்று கூறிவிட்டு அவளை உற்றுப்பார்த்தான்.
அவள் கண்களிலிருந்து நீர் ஆறாய் ஓடிக்கொண் டிருந்தது. “நான் உங்கள் விருப்பப்படி எல்லாம் மாற்றிக் கொள்கிறேன் அத்தான். நான் ஏதேனும் தவறு செய்திருந் தால் மன்னித்து விடுங்கள் அத்தான். நாம் பிரிவோம் என்று மட்டும் கூறாதீர்கள். என்னைத் தயவு செய்து இந்தியா அனுப்பாதீர்கள்” என்று விம்மிக்கொண்டே கெஞ்சினாள்.
“நீ எந்தத் தவறும் செய்யவில்லை. நீ ஒரு அழகான, அடக்கமான குடும்பப் பெண். ஆனால் எனக்குப் பொருத்த மானவளா? எனக்குத் தகுதியானவளா? அந்தத் தகுதிகள் உன்னிடம் இல்லை. உன்னைப் பிடிக்காமல் உன்னிடம் போலி வாழ்க்கை நடத்த எனக்கு உடன்பாடில்லை. ஆகவே, நீ இந்தியா செல். மேலும் உன் திறமைகளை வளர்த்துக்கொள். நான் என் பிராஜெக்ட்டை முடித்துக்கொண்டு இந்தியா வந்து உன்னை அழைத்து வருகிறேன்”. அவனின் இந்த பதில் அவளைச் சம்மதிக்க வைக்க அவன் கூறியது போலத் தோன்றினாலும், அவள் அவனை நம்பினாள், அமைதியானாள்.
கடந்த மூன்று மாதங்களில் அவள் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் அவளுக்குள் உலா வந்தன. கண்ணன் அவள் விரும்பாமல் அவளை ஒரு நாளும் தீண்டியதில்லை. முதலிரவு அன்று கூட அவள் அவனை நமஸ்காரம் செய் தாள். அப்போது அவன் “தாமரை இதெல்லாம் எனக்குப் பிடிக்காது, நீ எனக்கு அடிமையில்லை. ‘கல்லானாலும் கணவன். புல்லானாலும் புருஷன்’ என்பதெல்லாம் பொய், பரஸ்பரம் ஒருவர் மற்றவர் உணர்வுகளைப் புரிந்து கொள்வதுதான் முக்கியம். நீ திருமணச்சடங்குகளால் மிகவும் களைத்திருக்கிறாய், போய்த் தூங்கு” என்று கூறிவிட்டான்.
பின் தேனிலவுக்குக் கொடைக்கானல் போய் வந்தார்கள். அவளின் உணர்வுகளை அவன் மதிப்பது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. எல்லாம் தான் செய்த பாக்கியமே என்று கருதினாள்.
திருமணத்திற்கு வந்தவர்கள் “அவள் அதிர்ஷ்டக்காரி. வெளிநாட்டு மாப்பிள்ளையைக் கட்டியிருக்கிறாள்” என்றார்கள். ஆனால் இப்போது நல்ல வாழ்வு கிடைத்தும் அதனைத் தக்க வைத்துக் கொள்ளத் தெரியாமல் அதிர்ஷ்டக் கட்டையாகி விட்டேனே என்று வருந்தினாள்.
திருமண விடுப்பு முடிந்து இருவரும் சிங்கப்பூர் புறப்பட்ட போது வழியனுப்ப வந்த அவள் பெற்றோர் ‘கணவனின் மனம் கோணாமல் நடந்து கொள்ளம்மா’ என்று கூறிய அறிவுரைகள் அவள் ஞாபகத்திற்கு வந்தன. இப்போது இவள் மட்டும் தனியே போனால் என்ன நினைப்பார்கள்? என்னடி திரும்பி வந்துவிட்டாய்? என்று கேட்டால் என்ன சொல்லி சமாளிப்பது என்று குழம்பினாள் தாமரை.
இந்த சிங்கப்பூரில் கண்ணனைத்தவிர அவளுக்கு என்று யார் இருக்கிறார்கள்? எல்லாவற்றையும் தனக்குள் அசை போட்டுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை அவளுக்கு. கணவன் மீது அவளுக்குச் சிறிதும் கோபமில்லை. எல்லாவற்றுக்கும் தான்தான் காரணம் என்று கற்பித்துக் கொண்டாள்.
மீண்டும் மீண்டும் எண்ண அலைகள் அவளுக்குள் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தன. ‘அவர் என்னை நன்றாகத்தான் கவனித்துக் கொண்டார். நான்தான் அவருக்கு ஏற்ற மனைவி யாக நடந்து கொள்ளத் தவறி விட்டேன். அன்று அவர் அலுவலக நண்பர்கள் கலந்து கொண்ட விருந்தின் போது அவர் ஆசையாய் வாங்கித்தந்த குதி வைத்த செருப்பை அணிந்துகொண்டு, நடக்கத்தெரியாமல் நடந்து கால் இடறிக் கீழே விழுந்து, சே, அவருக்கு எவ்வளவு அவமானமாய் இருந்திருக்கும்? எல்லோரும் ‘என்ன கண்ணன் உங்க மனைவி பேச மாட்டார்களா?’ என்று கேட்ட போது அவர் எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார்? நான் படித்து என்ன புண்ணியம்? எல்லோரையும் போல ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வரவில்லையே?
ஒரு நாள் அவர் மீது மது வாடை அடித்த போது நான் சும்மா இருந்திருக்க வேண்டும். ‘ஏன் குடித்தீர்கள்’ என்று அவரிடம் சண்டை போட்டிருக்கக் கூடாது.
அவருடன் வேலை பார்க்கும் அந்த நிர்மலாவைப் போல நானும் கணினி படித்து வேலைக்குப் போக வேண்டும். தைரியமானவளாய் இருக்க வேண்டும். இதெல்லாம்தான் அவருக்கு என்னைப்பிடிக்காமல் போகக் காரணங்கள். நான் என்னை மாற்றிக்கொள்ள வேண்டும். இப்படி அவள் சமாதானப்பட்டுக் கொண்டாலும் பிரிவை நினைக்கும் போது அவள் கண்கள் குளமாயின.
கண்ணன் சிங்கப்பூர்ப் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் கணினித்துறையில் ப்ராஜெக்ட் மேனேஜர். அவன் பெற்றோர் இந்தியாவில் இருந்தார்கள். அவன் பெற்றோர் அவன் கூறியபடி அவனுக்குப் பெண் பார்த்தார்கள். தாமரையின் அடக்கமும் அமைதியும் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்கள் தங்கள் மருமகள் இவளே என்று முடிவு செய்தார்கள்.
தாமரையின் போட்டோவையும் அவள் படிப்பு பற்றிய அவனுக்கு விவரங்களையும் அனுப்பியிருந்தார்கள். கண்ணனுக்குப் பிடித்திருந்தது. கல்யாணம் நிச்சயம் ஆகியது. கண்ணன் இரண்டு வார விடுப்பில் இந்தியா வந்து தாமரையை மணந்து சிங்கப்பூர் திரும்பியிருந்தான்.
தாமரைக்குப் பெற்றோரைப் பிரிந்து வந்த துயரம் வாட்டினாலும். தன் கணவனே தனக்கு எல்லாம் என்று நினைத்துக் கொண்டாள். அவனை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் கண் ணனோ அவளோடு பட்டும் படாமலுமே இருந்து வந்தான். அவளோடு பேச நேரும் போது ‘நீ என்ன நினைக்கிறாய்? உன் கருத்து என்ன?’ என்று கேட்பான். அவளோ ‘உங்கள் கருத்துத்தான் என் கருத்தும்’ என்று கூறி விடுவாள். அவனுக்கு ஏமாற்றமாக இருக்கும். அவளின் கட்டுப்பெட்டித் தனம் வெளிப்படும் போதெல்லாம் ‘நீ எல்லாவற்றுக்கும் என்னையே சார்ந்திருக்கக்கூடாது. சுதந்திரமாக இரு உன்னைச் சுருக்கிக் கொள்ளாதே’ என்பான். அவளும் மாறி விடுகிறேன் என்பாள். ஆனால் மீண்டும் அவனே அவளுக்கு எல்லாமாகி விடுவான்.
இந்த நேரத்தில்தான் அவன் அலுவலகத்தில் நிர்மலா என்ற பெண் தற்காலிகப்பணியில் இவனுக்கு உதவியாகப் பணியாற்ற நியமிக்கப்பட்டிருந்தாள். அவள் இந்தியாவி லிருந்து வந்திருந்தாள். நிர்மலாவின் நேர்த்தியான அழகிலும், அறிவிலும் கண்ணன் நெகிழ்ந்து போனான். அவளோடு வேலை செய்வதில் நேரம் போவதை மறந்தான். வீட்டிலும் நிர்மலாவைப் பற்றிச் சொல்லுவான். “நிர்மலாவைப் பார். தனியாக சிங்கப்பூர் வந்து பணிபுரிகிறாள். உன்னையும் பார் இங்கு இருக்கிற மார்க்கெட் போய்வரக்கூட உனக்குத் துணை வேண்டியிருக்கிறது” என்று சொல்லுவான்.
கண்ணன் அலுவலகத்தில் காபி இடைவேளை நேரங் களிலும், உணவு இடைவேளையின் போதும் நிர்மலாவுடனேயே சுற்றினான். அவளுடன் பேசிக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடித்திருந்தது.
அவனின் முற்போக்குக் கருத்துக்களை அவளிடம் கூறுவான். அவளும் சில நேரங்களில் அவனை ஆமோதித்துப் பேசுவாள். சில நேரங்களில் அவனை மறுத்துப் பேசுவாள். அவள் அவன் மனைவியைப் பற்றி ஏதாவது ஆரம்பித்தால் மழுப்பலாய் நழுவி விடுவான்.
நிர்மலா இன்னும் மணமாகாதவள். அவன் மனம் நிர்மலாவையும் தாமரையையும் எடை போட்டுப் பார்த்தது. இருவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்று நினைத்தது. நிர்மலா தன் மனைவியாக இருந்திருக்கக் கூடாதா என்று அவன் மனம் ஏங்கியது. நிர்மலா ஒரு வரையறைக்குள் நட்பாகத்தான் அவனுடன் பழகினாள். ஆனாலும், அவன் மன ஓட்டங்களை அவளால் லேசுபாசாக உணர முடிந்தது. கண்ணன் தன் மனைவியை வெறுக்கிறானோ? அதற்குத் தான் ஒரு காரணமாய் இருக்கக்கூடுமோ? என்ற சந்தேகமும் அவளுக்கு வந்தது.
நிர்மலா இந்தியா புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந் தாள். அவளின் அலுவலக வேலைகள் முந்தைய நாளே முடிவடைந்திருந்தன. எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டாகி விட்டது. ஷாப்பிங் வேலைகளும் ஓரளவுக்கு முடிந்து விட்டன. இன்னும் வாங்க வேண்டிய பொருட் களின் பட்டியலைச் சரிபார்க்கத் துவங்கினாள். கதவு தட்டும் ஓசை கேட்டது.
கண்ணனாகத்தான் இருக்கும் ‘ஏதோ நேரில் பேச வேண்டும் என்று சொன்னார்’ நினைத்துக்கொண்டே கதவைத் திறந்தாள். கண்ணனேதான். ‘வாங்க கண்ணன்’ என்று வரவேற்று உபசரித்தாள். சோபாவில் உட்கார்ந்த கண்ணன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு சொன்னான். ‘நிர்மலா, தாமரையும் உன்னுடன் வருகிறாள்’ அவன் முகம் குழப்பமாய் இருப்பதை அறிந்தாள் நிர்மலா.
“எங்கே வருகிறாள்?”
“இந்தியா”
“என்ன திடீர்ப் பயணம்?”
“ஒன்றுமில்லை, சும்மாதான்” மழுப்பினான் கண்ணன் “இல்லை சொல்லுங்கள்… ஏதாவது பிரச்சினையா?” “எப்படி உனக்குத் தெரியும்? தாமரை ஏதாவது சொன்னாளா?” கண்ணன்,
“இல்லை, நானாகத்தான் கேட்கிறேன்” நிர்மலாவின் சந்தேகம் ஊர்ஜிதமாகியது.
“ஆம்” என்று மென்று விழுங்கினான் கண்ணன்.
“நான் தங்களின் குடும்ப விஷயத்தில் தலையிடுவதற்கு மன்னிக்கவும். என்னிடம் சொல்லலாம் என்றால் சொல்லுங்கள்… என்ன பிரச்சினை?” கேட்டாள் நிர்மலா.
“நாங்கள் பிரிய வேண்டும். என்னால் போலியாக வாழத் தெரியவில்லை. அவள் எனக்கு ஏற்றவளாய் இல்லை. நான் கண்ட லட்சிய மனைவி வேறு அவளுக்கு அந்தத் தகுதிகள் இல்லை. எப்படி என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்?” என்றான் கண்ணன்,
“என்ன? தவறு செய்து விட்டாள் தாமரை? அவளுக்கு என்ன தகுதிகள் இல்லை?”
“இல்லை. அவள் ஏதும் தவறு செய்யவில்லை. நான் கண்ட லட்சிய மனைவி நிர்மலா, ஆனால் தாமரையோ அடக்கமான குடும்பத்துப்பெண்.” அவளையே உற்று நோக்கினான் கண்ணன்.
நிர்மலாவிற்குக் கண்ணன் எந்த எண்ணவோட்டத்தில் இருக்கிறான் என்பது புரிந்தது.
“நிறம், படிப்பு, வேலை, சம்பளம், சரளமாக ஆங்கிலம்… இது எல்லாம்தான் உங்க தகுதிகளா?, மனிதன் மனிதனா இருக்கிறதே பெரிய தகுதியில்லையா?”” அவளது வார்த்தை கள் அவனுக்குச் சாட்டையடிகளாய் வந்து விழுந்தன.
“ஆமாம் கண்ணன். மனுஷத்தனம் மட்டுமே இருந்தாப் போதும்னு நினைக்கிறேன். வேறு எல்லாத்தையும் தெரிஞ்சு இது தெரியாமப்போனா என்ன லாபம்? உங்க மனைவி தாமரை, என்னை மாதிரி, உங்களை மாதிரி வெளியுலக சாமர்த்தியம் இல்லாம இருக்கலாம். ஆனா அவங்களுக்கு உங்க மேல அன்பு இருக்கு. வேறு என்ன வேணும் உங்களுக்கு? அந்த குறைவில்லாத அன்பையும், மனுஷ உறவுகளையும் விட மற்றதெல்லாம் பெரிசா என்ன?
நீங்க என்ன நேர்முகத் தேர்வு நடத்தி மனைவிங்கற வேலைக்கு ஆள் எடுக்கறீங்களா? எல்லாத்தையும் தெரிஞ்சுக்க நெனக்கிறது தப்பு இல்ல. தெரியாம இருக்கிறதும் தப்பு இல்ல. என்ன தகுதி? நமக்கு யார் கூடவும் சந்தோஷமா இருக்கத் தெரியணும். எப்பவும் சந்தோஷமா இருக்கத்தெரியணும். அதுதான் தகுதி. மூஞ்சியிலேயும் மனசுலேயும் சிரிப்பு வந்துட்டா சந்தோஷத்துக்குக் குறைச்சலே இல்ல கண்ணன்.
உங்க புத்திசாலித்தனத்தை நுழைத்து எல்லோரையும் துருவிப்பார்க்கக்கூடாது. ஒவ்வொருத்தரையும் அப்படியே ஏத்துக்கணும். நிறைகுறைகளோட ஏத்துக்கொண்டு நீங்களும் சந்தோஷமா இருக்கணும். அவங்களையும் சந்தோஷமா வச்சுக்கத் தெரியணும். உங்க புத்திசாலித்தனத்தை அங்கே காண்பிக்கணும்” நிர்மலா பேசிக் கொண்டே போனாள்.
“அந்தப் பெண் உங்க மேல வச்சிருக்கிற அப்பழுக்கில்லாத அன்புதான் மிகப்பெரிய தகுதி” முடித்தாள் நிர்மலா.
கண்ணன் ஒன்றும் கூறாமல் புறப்பட்டான், அவசரமாக.
அன்று மாலை சாங்கி விமான நிலையத்தில், கண்ணனும் தாமரையும் சிரித்த முகத்தோடு நிர்மலாவை வழியனுப்பினர். நிர்மலா மனநிறைவுடன் விடைபெற்றாள். கண்ணன் தாமரையிடம் தன் மனமாற்றத்திற்கான காரணத்தைக் கூறாமல் அவள் இந்தியா போகவில்லை என்பதை மட்டும் கூறியிருந்தான். அதனால் ஒன்றும் புரியாத மகிழ்ச்சியுடன் தாமரை கண்ணனுடன் வீடு திரும்பினாள். வீட்டுக்குப் போய் விளக்கமாகச் சொல்லி அவளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த வேண்டும் என்று கண்ணன் நினைத்துக் கொண்டான்.
– தமிழ் முரசு.
– புன்னகைக்கும் இயந்திரங்கள் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: 2008, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.