கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் சமூக நீதி
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 7,359 
 
 

1.
என் பெய‌ர் நிலாக்குட்டி.ஆறாம் வ‌குப்பில் ப‌டிக்கிறேன். என்னுடன் படிக்கும் செல்வராஜின் அப்பாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். தினமும் செல்வராஜை சைக்கிளில் கூட்டிக்கொண்டு வந்து பள்ளியில் விட்டுச்செல்வார். ந‌ளினியின் அப்பாவுக்கு அழ‌கே அவ‌ர‌து மீசைதான்.

க‌ருக‌ருவென்று அட‌ர்த்தியாக‌ இருக்கும் அந்த‌ மீசையை பார்த்தால் பாரதியாரின் மீசை மாதிரியே இருக்கும். பார்வதியின் அப்பா எங்க‌ள் ப‌ள்ளியில் ந‌ட‌க்கும் குண்டு எறித‌ல் போட்டியில் ப‌ரிசை த‌ட்டிச்செல்வார்.அவ‌ர‌து வ‌ல‌துகையின் இறுகிய‌ த‌சைக‌ள் பார்க்கும்போதே பயத்தை வரவழைக்கும்.என் அப்பா எப்படி இருப்பார்? செல்வராஜின் அப்பா மாதிரி என்னை சைக்கிளில் கொண்டுவிட வரமாட்டாரா? நளினியின் அப்பா மாதிரி அடர்ந்த மீசை வைத்திருப்பாரா? பார்வதி அப்பாவைப்போல சிறந்த வீரரா? அப்பாவைக்காணும் ஆசை நாளுக்குநாள் எனக்குள் வளர்ந்துகொண்டே இருந்தது.

2.
“சாமி” கரும்பச்சை நிறத்தில் தன் வலது மார்பில் ப‌ட‌ர்ந்திருக்கும் எழுத்தை ஆசையோடு தொட்டுப்பார்த்துக்கொண்டாள் ராசாத்தி.சாமியின் மீது உள்ள ப்ரியத்தால் வலிக்க வலிக்க சந்தோஷமாக அவள் குத்திக்கொண்ட

பச்சை வெயிலில் மிளிர்ந்தபடி இருந்தது.டவுணிலிருக்கும் பிளாஸ்டிக் பூக்க‌ள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் வேலைபார்க்கிறாள் ராசாத்தி. ப‌த்தாம் வ‌குப்பிற்கு மேல் ப‌டிக்க‌ வ‌ச‌தி இல்லை என்ப‌தால் வேலை

செய்ய‌வேண்டிய‌ க‌ட்டாய‌ம்.வேலைக்கு சேர்ந்த‌ முத‌ல் நாளிலேயே அவ‌ளையும் அறியாம‌ல் அவ‌ன் பின்னால் ஓடிவிட்ட‌து ம‌ன‌சு.சூப்ப‌ர்வைச‌ராக‌ ப‌ணிபுரியும் அவ‌ன‌து காந்த‌ க‌ண்க‌ளில் இந்த‌க் க‌ருப்புக்காந்த‌ம்

ஒட்டிக்கொண்டுவிட்ட‌து. ராசாத்தி துறுதுறுவென்றிருப்பாள்.எப்போதும் குறும்பும்,சிரிப்புமாக‌ வ‌ல‌ம் வ‌ருப‌வ‌ள்.அவ‌ள‌து துடுக்கான‌ பேச்சில் க‌ள்ள‌த்தன‌மில்லாத‌ குழ‌ந்தைத்தனம் நிரம்பியிருக்கும்.

3.

தாம்பரத்தில் வந்து இறங்கியபோது எல்லாமே புதியதாக இருந்தது. சென்னை மொழியும், பிறர் மீது அக்கறை இல்லாத மக்களும்,விரைந்து செல்லும் விதவிதமான கார்களும் அவனுக்குள்

பிரமிப்பையும்,வெறுப்பையும் ஒருசேர உருவாக்கி இருந்தன. நாடார் கடையில் கடைப்பையனாக சேர்ந்த நாளிலிருந்து அந்த மளிகை கடையே அவனது வாழ்க்கையாகிப்போனது. சுறுசுறுப்பான அவனது வேலையை

கடைக்குப்பின்னாலிருந்த முதலாளியின் வீட்டில் இருகண்கள் ரசிக்க ஆரம்பித்தன. கடைமீது இருந்த பார்வையை அந்த கடைக்கண்பார்வை மீது இவன் திருப்பியபோது வாழ்க்கையே சொர்க்கமாகிப்போனது.

நல்ல நேர்மையான பையன் என்பதால் தன் ஒரே மகளை அவனுக்கே கட்டிவைத்து கடையை அவன் பேரில் எழுதி வைத்தார் முதலாளி. வெறும்பயலாக சென்னை வந்தவன் கடைக்கு சொந்தக்காரனாக மாறி வாழ்க்கையை அனுபவிக்க தொடங்கி இருந்தான்.

4.

எத்தனையோ முறை அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். வெளியூரில் வேலை செய்கிறார் என்பதை தவிர எந்தவொரு பதிலும் இருக்காது. வீட்டிற்கே வராமல் அப்படி என்ன வேலை பார்க்கிறார் என்று அப்பாவை நான் திட்டும்போதெல்லாம் அம்மா சொல்கிற ஒரே வாக்கியம் “அப்பா ரொம்ப நல்லவரு,அவர திட்டாத”. நான் பிறந்தபோதாவது வெளியூரிலிருந்து என்னை பார்க்க வந்தாரா? என்னை கோவில் திருவிழாவிற்கு
கூட்டிச்சென்று கண்ணாடி வளையலும்,ஸ்டிக்கர் பொட்டும் வாங்கித்தரமாட்டாரா? விடைதெரியாத கேள்விகளுக்கு அம்மாவின் மெளனம் மட்டுமே பதிலாக இருந்தது. அம்மாமேல் கோவமாக வந்தாலும் உலகிலேயே எனக்கு பிடித்த நபர் அம்மாதான்.நான் என்ன கேட்டாலும் உடனே வாங்கித்தந்துவிடுவாள். அம்மாவைக் கட்டிபிடித்துக்கொண்டுதான் தினமும் தூங்குவேன். தினமும் இரவு கதை சொல்லிதான் என்னை தூங்க வைப்பாள்.எங்கள் வீட்டுத்திண்ணையில் தையல் மிஷின் வைத்து சம்பாதிக்கிறாள்.எனக்கு விதவிதமான ஃப்ராக் தைத்து தருவாள்.ஒரே ஒரு அறை
கொண்ட சின்ன வீடுதான் எங்கள் வீடு.அதில் தடுப்பு வைத்து சமையல் செய்வாள் அம்மா.

5.

பச்சை தாவணியும்,இரட்டை ஜடையுமாக அவள் நடந்துவருகின்ற அழகில் சொக்கி நிற்பார்கள் இளவட்டங்கள். எத்தனையோபேர் ராசாத்தியை துரத்தினாலும் அவள் மனம் “சாமி”க்கு மட்டும்தான் என்று

தீர்மானித்துவிட்டாள். சாமியும் அவளும் பார்வையால் சில நாட்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருநாள் சாமி அவளிடம் காதலை சொன்னபோது முதல்முறையாக வெட்கப்பட்டு குனிந்துகொண்டாள் ராசாத்தி..

இருவரும் நாளெல்லாம் மனம்விட்டு பேசிச்சிரித்தனர். ஊருக்கு சற்று வெளியே இருக்கும் வாழைத்தோட்டம்தான் இருவரும் சந்திக்கும் இடம். அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டு வாழை இலைகளின் கிழிசல்வழியே

தெரிகின்ற நிலாவை பார்ப்பது அவளுக்கு ரொம்ப பிடிக்கும். ஒருநாள் அவனிடம் கேட்டாள்

“உலகத்துலயே அழகானது நிலாதானய்யா?”

“இல்ல ராசாத்தி நிலாவ விட அழகான உன் முகந்தான்” என்றான் அவன்.

நாளுக்கு நாள் வளர்ந்த காதல் எல்லைமீறிய ஒரு தருணத்தில் ராசாத்தியின் உதடுகள் மட்டும் “எஞ்சாமி எஞ்சாமி” என்று முணுமுணுத்துக்கொண்டு தூரத்திலிருக்கும் நிலாவை
பார்த்துக்கொண்டே இருந்தன.

6.

பெண்குழந்தை பிறந்திருக்கிறது என்று நர்ஸ் சொன்னதும் சந்தோசத்தில் நர்சை கட்டிபிடிக்க ஓடினான்.அருகிலிருந்தவர்கள் இழுத்து பிடித்துக்கொண்டார்கள். குட்டி கண்கள்,சிறுவிரல்கள் உலகின் மிகச்சிறந்த அதிசயம் குழந்தைதான். அம்மாவின் அருகிலிருந்த தொட்டிலில் கைகால்களை ஆட்டியபடி படுத்திருந்தது அந்த பட்டுக்குழந்தை. கொஞ்ச நேரம் குழந்தையையும் மனைவியும் மாறி மாறி பார்த்துவிட்டு வெளியில் வந்து நின்றுகொண்டான்.இனி வருசமெல்லாம் வசந்தம் என்று கிளிஜோசியக்காரன் சொன்னது நினைவுக்கு வந்தது.

வாழ்க்கை செட்டிலாகியதில் லுங்கியும் சட்டையுமாக சென்னை வந்தவனின் கையில் தங்கபிரேஸ்லட்டும் கழுத்தில் எட்டு பவுன் செயினும் மினுமினுத்தன. வெறும் சாமியாக திரிந்தவன் வியாபாரிகள் சங்கத்தலைவர் சாமிக்கண்ணாக‌ இப்போது மாறியிருந்தான்.

7.

அம்மா,பாட்டி,நான்,ஜில்லு நான்குபேரும்தான் இந்த வீட்டில்இருக்கிறோம். இந்த ஊரில் எங்களுக்கு சொந்தமென்று யாருமில்லை. பாட்டிக்கு வெத்தலையை மென்றுகொண்டே இருப்பதை தவிர வேறு எதுவும் தெரியாது.காது சரியாக கேட்காது,கண்பார்வையும் கொஞ்சம் மந்தம். ஆனால் பாட்டிக்கு என்னை ரொம்ப பிடிக்கும். பக்கத்தில் போகும்போதெல்லாம் இழுத்து மடியில் அமர்த்திக்கொள்வாள். சேலை முடிச்சிலிருந்து
எட்டணாவோ,ஒரு ரூபாயோ மிட்டாய் வாங்க தருவாள். வெத்தலைபோடும் பழக்கம் மட்டும் இல்லாமல் இருந்தால் பாட்டியின் மடியிலேயே தூங்கி விடுவேன். சொல்ல மறந்துவிட்டேனே ஜில்லு நான் வளர்க்கும் பூனைக்குட்டி. எங்கள் வீட்டில் வெள்ளை நிறம் ஜில்லு மட்டும்தான். ஜில்லு சரியான தூங்குமூஞ்சி எப்பொழுதும் தூங்கி வழிந்துகொண்டே இருக்கும். பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு வந்தவுடன் எங்கிருந்தாலும் ஒடி வந்து என் கால்களை உரசிக்கொண்டு நெளிந்தபடி நிற்கும். வீட்டிற்குள் நுழைந்துவிட்டால் அம்மா,பாட்டி,ஜில்லு என்று மாற்றிமாற்றி யாரிடமாவது விளையாடிக்கொண்டு இருப்பேன்.எங்கள் வீட்டிற்கு பின் கிணற்றடிக்கு அருகில் கொஞ்சம் ஆற்றுமணல் கொட்டி வைத்திருந்தாள் அம்மா. அதில் நானும் பக்கத்துவீட்டு அன்னபுஷ்பமும் விளையாடுவோம்.

8.

எல்லை மீறிய அன்பின் சாட்சியாக ராசாத்தியின் வயிறு வ‌ள‌ர‌ ஆர‌ம்பித்தது. வ‌யிற்றைக் க‌ண்ட நாளிலிருந்து சாமியைக் காணவில்லை. ராசாத்தியின் அம்மா எத்தனையோ முறை கேட்டுப்பார்த்தபோதும் மெளனத்தை மட்டுமே பதிலாக்கிக்கொண்டிருந்தாள்.அவள் உத‌டுக‌ள் மெள‌னித்த‌போது ஊர்வாய் திற‌ந்துகொண்ட‌து. ந‌ட‌த்தை கெட்ட‌வ‌ள் என்று காறி உமிழ்ந்த‌து. எதையும் கேட்கின்ற‌ ம‌ன‌நிலையில் ராசாத்தி இல்லை.

சிரிப்பை மறந்தே போனது அவளது இதழ்கள். அதற்குமேல் அந்த ஊரில் இருக்கவேண்டாம் என்று நாற்பது கிலோமீட்டர் தள்ளியிருக்கும் வேறொரு கிராமத்திற்கு குடிபெயர்ந்தார்கள் ராசாத்தியும் அவளது அம்மாவும்.

அம்மா அவனை பற்றி கேட்கும்போதெல்லாம் “கண்டிப்பா வந்துருவாக” என்பதுமட்டுமே ராசாத்தியின் பதிலாக இருந்தது.

9.

எதிர்வீட்டு முத்துப்பாண்டி அண்ணன் என்னை கூட்டிபோக பள்ளிக்கூடம் வந்தபோதே எனக்கு பயம் தொற்றிக்கொண்டது. எதற்கு வீட்டிற்கு போகிறோம் என்று கேட்டுக்கொண்டே வந்தபோதும் எதுவும் சொல்லாமல் அமைதியாக அவர் இருந்தது மேலும் பயமூட்டியது. வீட்டிற்கு நுழைந்ததும் பக்கத்து வீட்டு கனி அக்கா ஓடி வந்து என்னை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு “ஒன்னய விட்டுப்போக எப்படி அவளுக்கு மனசு வந்துச்சோ தெரியலையே யாத்தீ” என்று கதறினார். எனக்கு பயத்தில் உடல் நடுங்க ஆரம்பித்தது. கனி அக்காவிடமிருந்து விலகி ஓடிச்சென்று பாட்டியை கட்டிபிடித்துக்கொண்டேன்.

ஓவென்று பாட்டி கதறிக்கொண்டு என்னை இறுக்க அணைத்துக்கொண்டாள். ஒன்றும் புரியாமல் கண்களில் நீர்வழிய நின்றுகொண்டிருந்தேன். கிணற்றிலிருந்து அம்மாவை வெளியே கொண்டு வந்து மர பெஞ்சில் கிடத்தினார்கள்.

தாம்பரம் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ சாமிக்கண்ணுவிற்கு அவரது மனைவி இனிப்பு ஊட்டுகின்ற புகைப்படம் பாட்டியின் அருகில் கிடந்த செய்தித்தாளில் படபடத்துக்கொண்டிருந்தது.

[உரையாடல்: சமூக கலை அமைப்பு சிறுகதை போட்டிக்காக எழுதியது]
– Sunday, June 7, 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *