காலிப் பிளவர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 13, 2018
பார்வையிட்டோர்: 5,289 
 

காலி பிளவர் என்றால் கண்ணனுக்கு உயிர்! மாலைநேரத்தில் நாலு பேர் சாப்பிட ஒரு தட்டில் காலி பிளவர் சில்லி செய்து வைத்தால், இவன் ஒருவனே எடுத்து சாப்பிட்டு காலி செய்து விடுவான்.

அவனுக்காக அவனின் தாய் ஏதாவது ஒரு வகையில் காலி பிளவர் கிரேவி, காலி பிளவர் வறுவல், காலி பிளவர் பக்கோடா, காலி பிளவர்65, காலி பிளவர் குழம்பு என்று வித விதமாக செய்து அசத்தி விடுவார்!

கண்ணனின் அண்ணன் குமாரின் மனைவி ராதிகாவின் தந்தை ஒரு பெரிய மிராசுதார். அவர்களின் சொந்த ஊர் திருப்பூருக்கு பக்கம் குமாரவலசு என்ற ஒரு கிராமம்.

அங்கு நடந்த கோவில் திருவிழாவுக்கு கட்டாயம் குடும்பத்தோடு வந்தே ஆக வேண்டும் என்று, மிராசு வந்து வற்புறுத்தி விட்டுப் போய் விட்டார்.

அண்ணன் குமாருக்கு கல்யாணம் ஆகி ஆறு மாதம் தான் ஆகிறது! கண்ணன் கோவையில் பொறியியல் கல்லூரி மாணவன். அவனுக்கு சென்னை, மும்பை, டெல்லி எல்லாம் தெரியும். அவன் இதுவரை எந்தக் கிராமத்திற்கும் போனதில்லை!

கிராமம், தேர், திருவிழா எல்லாம் அவன் தமிழ் சினிமாவில் பார்த்தது தான்! அதனால் அவனும் ஒரு ஆர்வத்தோடு கிராமத்திற்குப் போனான்.

மிராசுவின் தோட்டத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை! எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சி! வித விதமான காய்கறிகள்! பார்க்கப் பார்க்க ஆசையாக இருந்தது!

ஒரு பக்கம் காலிபிளவர் செடிகள் நிறைய இருந்தன. பெரிய பெரிய பச்சை இலைகளுக்கு மத்தியில் சின்னச் சின்ன வெள்ளைக் காலிப் பிளவர் பூக்கள் கண்ணனைப் பார்த்து கண் அடித்தன!

நீண்ட நேரம் அவன் அந்த பாத்திகளைச் சுற்றி சுற்றி வந்தான். அவர்கள் கோவையிலிருந்து காரில் தான் வந்திருந்தார்கள்! சம்பந்தியிடம் சொல்லி போகும் பொழுது இரண்டு சாக்குப் பைகளில் நல்ல நல்ல பூக்களாகப் பறித்து மூட்டை கட்டி டிக்கியில் போட்டுக் கொண்டு போய் விட வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டான்!

அம்மாவிடம் தனியாக கூப்பிட்டு தன் எண்ணத்தை சொல்லி விட்டான். அம்மாவும் சிரித்துக் கொண்டு சரி என்று சொல்லி விட்டாள்.

திருவிழா முடிந்து கண்ணன் குடும்பத்தினர் கோவைக்குப் புறப் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

அம்மா சம்பந்தியிடம் சத்தமாகப் பேசிக் கோண்டிருந்ததைப் பார்த்து, ஆச்சரியப் பட்டு அருகில் போனான் கண்ணன். ஏதோ பிரச்னை! “சம்பந்தியம்மா!…தயவு செய்து நம்ம தோட்டத்து காலி பிளவர் மட்டும் கேட்காதீங்க!…நான் கொடுக்க மாட்டேன்!..பிளீஸ் என்னை விட்டிடுங்கோ! அது மார்கெட்டில் விற்பதற்காக பயிரிடுவது!.”

“ நாங்க சும்மா கேட்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்!…அதற்கு உரிய பணத்தை இப்பவே கொடுத்திடறேன்!…உங்க பெண் எங்க வீட்டில் தான் வாழப் போகிறாள் என்பதை மறந்திடாதீங்க!..” என்று அம்மா சத்தமாக கோபத்தோடு சொன்னாள் எல்லோரும் அதற்குள் அந்த இடத்திற்கு வந்து விட்டார்கள்! நிலைமை தர்ம சங்கடமாகப் போய் விட்டது!

மிராசுதார் நிறுத்தி நிதானமாகச் சொன்னார்.

“ இந்த காலி பிளவர் மார்கெட்டில் விற்பதற்காகப் பயிரிடுகிறேன். செடி வளர்வதற்குள் பத்து முறையாவது நல்ல பவர் உள்ள பூச்சி மருந்து அடிப்போம்! பூ மலர்ந்தவுடன், கைகளால் பூவை விரித்து அதன் உள்ளேயும் மருந்து அடிப்போம்! அப்படியும் புழு உற்பத்தியாகி விடும்! பூக்களைப் பறித்த பின், மார்கெட்டிற்குப் போகும் முன், ஒரு அண்டாவில் பூச்சி மருந்து கலக்கிய தண்ணீரை நிரப்பி அதில் பறித்த பூக்களைப் போட்டு எடுத்துத் தான் விற்பனைக்கு அனுப்புவோம்! அப்பத்தான் அந்த பூக்களில் இருக்கும் ஒண்ணு ரண்டு புழுக்களும் விழுந்து விடும்!…அத்தனை முறை விஷம் தெளித்த பூக்களை எப்படி என் பெண் வாழும் வீட்டில் சமைக்க கொடுப்பது?…”

அந்த பட்டினத்து கும்பல் வாயடைத்து நின்று விட்டது!

– மக்கள் குரல் 4-7-2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *