வெள்ளை யானை வெளியேறுகிறது

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2016
பார்வையிட்டோர்: 14,223 
 

‘கடவுளே காப்பாத்து’னு ராதாரவி அலர்றாரு. உடனே பிசாசு ஜன்னல் வழியே வந்து ஹீரோவைக் காப்பாத்துது. கூப்பிட்டது கடவுளை… வந்தது பிசாசு!’ – இப்படித்தானா என சரியாக நினைவில்லை. இதுமாதிரி ஒரு கமென்ட்டைத் தட்டிவிட்டதாகவும் லைக்குகள் குவிந்ததாகவும் தாமரைக்கண்ணன் என்னிடம் சொன்னது நினைவில் இருந்தது. கூடவே, ”படிக்கிற காலத்துல புக்கும் கையுமா இருந்தாக்கூட, தலையெழுத்து வெளங்கியிருக்கும். இப்ப எப்பப் பார்த்தாலும் அதென்ன ஃபேஸ்புக்கு..?” என்ற தாமரையின் அம்மாவின் (எனக்கு பெரியம்மா முறை) புலம்பலும் இன்னும் நினைவில் இருந்தது.

”நீயாவது புத்தி சொல்லு கிட்ணா. டக்குனு வேலையை விட்டுட்டு வந்துடுறான். ஏதாவது ஒரு வேலையில நெலைச்சு நின்னாத்தான குடும்பத்துக்கு நல்லது.”

”சொல்றேன் பெரியம்மா…” என்றேன். ஆனால், இதுவரை சொல்லவில்லை. சென்னைக்குத் திரும்புவதற்குள் சொல்லிவிடுவதாக பெரியம்மாவிடம் சொல்லியிருந்தாலும், சொல்லத் தோன்றவில்லை. தாமரைக்காவது அறிவுரையாவது… அவனே ஆயிரம் பேருக்கான அறிவுரைகளை உள்ளடக்கியவன்.

திருநெல்வேலி ஜங்ஷன். ரயில் இன்னும் அரை மணி நேரத்தில் கிளம்பிவிடும். இருக்கையில் அமர்ந்தவாறு எட்டிப்பார்த்தேன். ‘வழியனுப்ப வர்றேன்’ என்ற தாமரையை ‘வரவே வேண்டாம்’ என்று சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது.

”தாமரை நீ வர வேண்டாம். நானே போயிருவேன். இப்பதான் நீ இந்த மெடிக்கல் ஷாப்ல வேலைக்குச் சேந்துருக்க. பிரச்னை வந்துரப் போகுது…”

”நான் பாக்காததா. தன்மையா சொல்லிப்பார்ப்பேன்… ‘சித்தப்பா மகனை வழியனுப்பணும். அரை மணி நேரம் பெர்மிஷன் குடுங்க’னு… குடுத்தா நல்லது, குடுக்கலைன்னா ‘இந்தாடா… உன் வேலை’னு போய்ட்டே இருப்பேன்’ ” எனச் சொல்லியிருந்தான். ஆனால், இன்னும் ஆளைக் காணவில்லை.

குலதெய்வம் பொங்கலைச் சப்புக் கொட்டிச் சாப்பிட்டது, பம்புசெட்டில் குளியல் நிகழ்ந்தது, கோழிகள் சில உயிர் இழந்தது, ஊர்க்கதைகளை ஆலமரத்தடி அறிந்தது… என ஊருக்கு வந்து ஒரு வாரம் ஓடிப்போனதே தெரியவில்லை. இந்தச் சுகத்தை இழந்து ஈ.சி.ஆர் ரோட்டில் பளபள கட்டடம் ஒன்றில், கண்ணாடி அறையில் கைதியாக இருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் ஹெச்.ஆரில் இருந்து அழைப்பு வந்து… ‘ஒரு மாசம் டைம் தர்றோம்’ என்ற ‘போடா வெளியே…’ நிகழலாம்.

”அதனால் என்ன? நிலம்தான் இருக்கே… விவசாயம் பாரு. சரியா பிளான் பண்ணிச் செஞ்சா, உன் பின்னாலதான் தொழுதுண்டு உலகம் வந்தாகணும்” என்ற தாமரை கையை பிச்சை கேட்பதுபோல வைத்துக்கொண்டு, ”லேண்டுல கால்வெச்சாத்தான் மவனே ஹேண்டுல சோறு வரும்” எனச் சொல்லிவிட்டு சின்னதாக யோசித்து, ”ஃபேஸ்புக்ல போடுறேன். லைக்ஸ் கும்மும்…” என்றான்.

”தாமரை, விவசாயம் பண்ணச் சொல்றான்…அதான் எனக்கும் சரினு படுது. இப்ப டென்ஷன்லாம் இல்ல…” என அலைபேசியில் நிகிதாவிடம் சொன்னபோது, ”நீங்களாச்சு… உங்க அண்ணனாச்சு. எப்படியோ உங்க மனசு சரியானா போதும்…” என்றாள்.

வெள்ளை யானை வெளியேறுகிறது

தாமரை எனக்கு அண்ணன் முறை. ஐந்து வருடங்கள் பெரியவன். ஆனால் ஒரு நாள்கூட நான் அவனை அண்ணன் என அழைத்ததே கிடையாது. நினைவு தெரிந்த நாள் முதல் தாமரைதான்… டேய்தான்… தாமுதான்… ஒரே ஒருமுறை பாட்டி மட்டும் திருத்திப் பார்த்தாள்.

”டேய் கிட்ணா… அவன் உனக்கு அண்ணன்லா மக்கா. பேரைச் சொல்லிக் கூப்பிடலாமா? அவன் வாழ்க்கையில கொஞ்சம் தாந்துட்டான்தான்; படிக்கலதான்… அதுக்காக அண்ணன் இல்லேனு ஆயிருவானா?”

அவனைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவதற்குப் பின்னால் இதெல்லாம் காரணங்களா என எனக்குத் தெரியவில்லை. ஆனால், யாரும் அதைப் பற்றி வருத்தப்பட்ட மாதிரி தெரியவில்லை… குறிப்பாக தாமரை. அவனது குழந்தைகளிடம்கூட பெருமையாகத்தான் சொல்வான்…

”சித்தப்பா மாதிரி நல்லாப் படிக்கணும். அப்பதான் நல்ல வேலை கிடைக்கும்.”

அடுத்த கணம் அவனிடம் இயல்பாக உள்ள குறும்புத்தனம் வெளிப்படும்.

”ம்… இவன் படிச்சு என்ன… பாவம் இவன் காரை ஒண்ணு இவனே ஓட்டணும்; இல்ல சம்பளம் குடுத்து டிரைவர் போடணும். பாவம்! எங்களுக்கெல்லாம் அரசாங்கமே டிரைவரை ஏற்பாடு செஞ்சு குடுத்துரும். என்ன… அந்த வாகனம் கொஞ்சம் பெரிசா இருக்கும். அதை பஸ்ஸுனு சொல்வாங்க.”

எதையும் எந்தச் சூழ்நிலையிலும் எளிதாக எடுத்துக்கொள்ளும் இந்த மனதை எங்கு, என்ன தவம் செய்து தாமரை பெற்றான் எனத் தெரியவில்லை. 45 வயதில் குறைந்தது 45 வேலைகளாவது மாறியிருப்பான். வேலை செய்யும் இடத்தில் முகச் சுழிப்போ, அவமானங்களோ, வசவுகளோ அவன் வேலையை விடுவதற்குக் காரணங்களாக இருந்தது இல்லை.

”வேலைன்னா நாலு பேர் திட்டுவான்; குத்தம் கண்டுபிடிப்பான். அதெல்லாம் யாரு மனசுக்குள்ள வெச்சுக்கிறாங்க..?” என்பான் தாமரை. யாருமே, ‘தாமரை சரியாக வேலைபார்க்கவில்லை’ என விமர்சனம் செய்தது இல்லை.

”பிறகு ஏன் வேலையை விட்டியாம்?” – இந்தக் கேள்விக்கு தாமரை சொன்ன பதிலைத்தான் வெவ்வேறு வார்த்தைகளில் எல்லா மனிதவள மேம்பாட்டு நிபுணர்களும் சொல்கிறார்கள்.

”வாழ்றதுக்காகத்தானே வேலை..?”

அப்படித்தான் இருந்தான் ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்த தாமரை. படிப்பு ஏறவில்லை. ஆனால் படிக்கும்போதே இப்படித்தான் இருந்தான். ‘தோற்றேன்’ எனச் சொல்ல மாட்டான். ‘நான் ஆறாம் வகுப்பில் இரண்டு வருடம் பணிபுரிந்தேன்’ என்றுதான் சொல்வான். ‘முத்துசாமி சார் என்கிட்டதான் ஆசிரியரா வேலைபார்க்கிறாரு…’ என்பான்.

இப்படிப்பட்டவன் ஒரு இடத்தில் வேலை பார்த்தால் எப்படி இருக்கும்?

கிருஷ்ணனுக்கு தாமரையின் இரண்டு வேலை அனுபவங்கள் உடனடியாக நினைவுக்கு வந்தன. அவன் சென்னை போய் எடுக்க இருந்த முடிவுக்கான தைரியம் அந்த இரண்டிலும் ஒளிந்திருந்தது. ஒன்று, தாமரை துரத்தப்பட்டது; இன்னொன்று அவனாகவே வெளியேறியது.

முருகேசப் பாண்டியனின் பலசரக்குக் கடையில் தாமரை பணியேற்று இரு தினங்களே ஆகியிருந்தன. வாடிக்கையாளர்கள் யாரும் வராததால், இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

”முதலாளி இன்னும் எவ்வளவு நேரம் பறவைகளை ஓட்டறது?”

”பறவைகளா..?” அவர் திடுக்கிட்டு காகம் முதல் கழுகு வரை பறவை இனங்களை கடையினுள் தேடினார்.

”ஈக்கள்… ஈக்களைச் சொன்னேன் முதலாளி. ஏன் அதுங்களை பறவை இனத்துல சேர்க்கலை. றெக்கை இருக்குது; பறக்கவும் செய்யுது.”

பறவை நிபுணர்கள், உயிரியல் அறிஞர்கள் மட்டும் பதில் சொல்லக்கூடிய இந்தத் தருணத்தில் முதல்நிலைப் பேரூராட்சி ஒன்றின் பலசரக்குக்கடை உரிமையாளர் என்ன செய்வார்?

”கொட்டாவி மணிக்கு நூறு கி.மீ வேகத்துல வந்து நம்ம ரெண்டு பேரையும் தாக்குது முதலாளி. நாமளே பொழுதுபோக்குனாத்தான் உண்டு. ஒண்ணு செய்வோம். யாருக்கு பொது அறிவு அதிகம்னு பாக்கலாமா? நான் கேட்கிற கேள்விக்குச் சரியா பதில் சொன்னா… ஒரு புள்ளி!”

முருகேசப் பாண்டியன் திடுக்கிட்டார். அவர் இதுவரை சந்தித்தது, முதலாளியின் பைக்கையும் செருப்பையுமே முதலாளியாகக் கருதி பயந்தோடும் இளம் ஊழியர்களை. அவர் கெட்ட வார்த்தைகளை ஸ்கேன் செய்து, எதைப் பிரயோகிக்கலாம் என முடிவெடுக்கும்முன் ”இங்கிலாந்தின் தலைநகர் எது..?” என்ற கேள்வி பறந்து வந்தது. எடைக்கல்லால் தாமரையின் மண்டையைப் பிளந்தால் என்ன என்ற யோசனை வந்து மீசையை முறுக்கியபோது முருகேசப் பாண்டியன் ‘0’ புள்ளிகளும், தாமரை 15 புள்ளிகளும் பெற்றிருந்தனர்.

”நயாகரா எங்குள்ளது..?”

‘வயாகராவா?’ என உறுதிப்படுத்தும் முன் தாமரை அவனுக்கு ஒரு புள்ளியையும், முருகேசப் பாண்டியனுக்கு ‘ரொம்ப வீக்கா இருக்கீங்களே பாஸ்…’ என்றொரு அனுதாபத்தையும் வழங்கினான். இந்தக் கட்டத்தில் சர்க்கரை வாங்க வந்த இளம்பெண்ணும் மேகி வாங்க வந்த சிறுவனும் சிரித்து, அவர்களும் இந்த அறிவு யுத்தத்தில் பங்கேற்று தலா ஒரு புள்ளி பெறவே, முருகேசப் பாண்டியன் அவமானத்தின் உயரமான சிகரங்களில் சஞ்சரித்தார்.

அடுத்த 10 நிமிடத்தில், ”யாருக்குடா ‘0’ மார்க் போடுற? உனக்கு 115 புள்ளியா..? உனக்கு இந்த இடம் சரிப்படாது. நீ உன் வீட்லயே உக்காந்து இஷ்டம்போல புள்ளி போட்டுட்டே இரு…” என்ற காட்டுக்கத்தல் மூலம் தாமரை பணிநீக்கம் செய்யப்பட்டான்.

இந்தக் கதையைச் சொன்னபோது கிருஷ்ணன் தனது ஹெச்.ஆர் பிரிவின் முக்கிய ஆளும், ‘நரி’ என்ற பட்டத்தையும்கொண்ட ஸ்லோக் அக்னிஹோத்ரி எத்தனை புள்ளிகளைப் பெறுவான் என்ற சாத்தியத்தை யோசித்தான். முருகேசப் பாண்டியனின் ‘0’-வைவிட ஸ்லோக்கின் ‘0’-வுக்கு நிச்சயமாக மதிப்பு அதிகம்தான். காரணம், அது ஏ.சி அறையில் வழங்கப்படுவது!

”ஏண்டா தாமர… சும்மாவே இருக்க மாட்டியா..?”

”வேலை பார்க்கிற இடத்துல பயம் இருக்கக் கூடாது கிட்ணா. அது உயிரோட்டமா இருந்தா என்ன தப்பு?”

வெள்ளை யானை வெளியேறுகிறது2

படித்தவர்களுக்கு மட்டும்தான் கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்கும் என்ற நியதியை உடையார் மாற்றி அமைத்தார். கோதுமை மாவு வாங்க அவர் பலசரக்குக் கடைக்குச் சென்றபோது, தாமரை அங்கிருந்து வெளியே தள்ளப்பட்டுக் கொண்டிருந்தான். பலசரக்குக்கடை கேம்பஸிலேயே தாமரைக்கு உடனடி நேர்காணல் நடத்தப்பட்டு, பழமுதிர் நிலையத்தின் கடைசி எடுபிடியாக ஆர்டரும் வழங்கப்பட்டது.

”பாக்கத்தானே போறேன்… நீயும் ‘0’ புள்ளி எடுக்கிறதை” என்றார் மு.பா.

”எனக்கு அறிவு அதிகம்ப்பா…” என்றார் உடையார். அது உண்மை என்பதை தாமரை அடுத்த நாளே அறிந்து கொண்டான்.

பழக்கடையில் முக்கனிகளோடு சீஸன் கனிகள், வட இந்தியக் கனிகள், லோக்கல் கனிகள் எனப் பல இருந்தாலும், அவற்றை நல்ல கனிகள், அழுகல் கனிகள் என இரு பிரிவினுள் அடக்கிவிடலாம். அழுகலில் ஓர் உட்பிரிவும் இருந்தது. அதிக அழுகல்கள் பழ ஜூஸாக மாற எடுத்து வைக்கப்பட்டன. சுமார் அழுகல்கள் இளித்தவாயர்களின் வருகைக்காகக் காத்திருந்தன.

ஒரு முதியவர் பழங்களை வாங்கும்போது உடையார் கச்சிதமாக இரண்டு சுமார் அழுகல் கனிகளைத் தள்ளிவிட்டார்.

”இது தப்பில்லையா…?” என்ற தாமரையிடம், ”இதுல தொழில் ரகசியம் என்னன்னா…” என ‘ஆண்பாவம்’ உசிலைமணிபோல், ”நாலு நல்ல பழங்கள், நடுவுல ஒரு அழுகல் பழத்தைத் தள்ளிவிட யாருக்குத் தெரியுதோ, அவன்தான் பழத்தொழில்ல நாலு காசு சம்பாதிக்க முடியும்…” என்றார் உடையார்.

”இப்படி ஒரு பொழப்பு பொழைக்கிறதுக்கு நாண்டுகிட்டுச் சாகலாமே…” என கையில் வைத்திருந்த தராசு, பழங்களை ஏறக்குறைய உடையாரின் மேஜையில் எறிந்து, தன் ராஜினாமாவை அறிவித்தான் தாமரை.

”மனசுக்குப் பிடிக்கலைன்னா போய்க்கிட்டே இருக்கணும்…”

தாமரை லுங்கியுடன் தன் அலுவலகத்துக்குள் நுழைந்து பென் டிரைவ், லேப் டாப், ஐ.டி கார்டுகளை ஸ்லோக் அக்னிஹோத்ரியின் டேபிளில் எறிந்து, ”உன்கிட்ட நான் வேலை பார்க்கிற தகுதியை நீ இழந்துட்ட…” என அறிவிக்கிற காட்சி என் மனதுள் ஓடியது. இதை தாமரையிடமே சொல்லவும் செய்தேன்.

”அவ்வளவு டார்ச்சர் குடுக்கிறான்டா அவன். எப்பனாலும் எனக்கு வேலை போகலாம். ஆனா, ஸ்லோக் மனசு வெச்சா, கொஞ்ச நாள் தாக்குப்பிடிக்கலாம்.”

”நல்லா படிச்ச உனக்கு, ஏன் கிட்ணா இந்தக் கதி?”

”நாங்கள் வெள்ளை யானை ஆயிட்டோம். எங்களை வெச்சு தீனி போடுறதுக்குப் பதில் நாலு குட்டி யானைகளுக்குத் தீனி போடலாம்” என்றேன்.

”சரி வுடு… உனக்கு வேலை போனா என்ன? யானை அதிகச் செலவு வைக்கிறது மட்டும் இல்ல, அது பிராணிகள்லயே அறிவானதும்தானே! திறமையானவன் நீன்னு உன்னை நம்புறல்ல… படிச்சவன்தானே நீ! உன் படிப்பும் திறமையும் அனுபவமும் எங்கே போச்சு? படிக்காத எனக்கே இவ்வளவு தன்னம்பிக்கை இருக்கும்போது, உனக்கு எல்லாம் எப்படி இருக்கணும்?” என்றான் தாமரை.

அதுதானே?

ரயில் கிளம்பச் சில நிமிடங்கள் இருக்கும்போது மூச்சு வாங்க வந்தவனைப் பார்த்து, ”ஏண்டா தாமரை… இவ்வளவு அவசரமா வரணுமா? ஒரு போன் செஞ்சா போதுமே. நான் என்ன சின்னக் குழந்தையா… நீ வழியனுப்ப வர்றதுக்கு..?” என்றேன்.

”இல்ல… அம்மா சும்மா விட மாட்டா. அதான் அல்வா வாங்கிட்டு வந்தேன்…” எனப் பொதியைப் பாதுகாப்பாக உள்ளே வைத்தான் தாமரை.

”இந்தப் பெரியம்மாவுக்கு வேற வேலை இல்லை…”

சென்னையில் இருந்து கிளம்பும்போதே திருநெல்வேலியில் சுற்றி மிஞ்சி இருக்கிற நண்பர்களிடம் நட்பை ரெனீவல் செய்து, நெல்லையப்பருக்கு ஹாய் சொல்லி, அல்வா வாங்குவதாகத்தான் திட்டம். ஆனால் சொந்தக் கிராமத்தில் இருந்து அரை மணி நேரப் பயணத்தில் இருக்கிற திருநெல்வேலிக்குப் போக நேரம் இல்லாமல், தாமரையுடனும் விவசாய நண்பர்களிடமும் பேசிப் பொழுது போயிருக்கிறது.

சென்னை. ஈ.சி.ஆர். சிறிதும், பெரிதுமான யானைகளின் சரணாலயம்.

நானே என் நடையில் வித்தியாசத்தை உணர்ந்தேன். இது நான் கல்லூரியில் படித்தபோது நடந்த நடை; கேம்பஸ் இன்டர்வியூவுக்குப் போனபோது இப்படித்தான் நடந்தேன். அதில் இருந்த தன்னம்பிக்கையை அவன் ரசித்தபோது, அதுவே சுதந்திரம் என்பதையும் உணர்ந்தான்.

ஸ்லோக் அக்னிஹோத்ரி.

இந்தி நடிகனின் அண்ணன் மாதிரி இருந்தான். அலட்சியமாக கிருஷ்ணனைப் பார்த்து, ”கிஷன்… லீவ் முடிந்ததா..?” என்றான்.

‘நீங்களே என்னை வெளியேற்றுமுன் நானே குட்பை சொல்ல விரும்புகிறேன்…’ என்றுதான் சொல்ல விரும்பினான் கிருஷ்ணன். ஆனால், திடீரென ஒரு கணத்தில்… கட்டவேண்டிய ஹவுஸிங் லோன், பள்ளிக் கட்டணம், இந்த 40 வயதில் விவசாயம் சரிப்படுமா, இன்னும் வேலை தேடும் சில நண்பர்களின் முகங்கள்… என்ற குழப்பப் பிம்பங்கள் மடமடவென உற்பத்தியாகி, ”வந்து… நான் திருநெல்வேலி போயிருந்தேன். நெல்லை அல்வா ரொம்ப ஃபேமஸ். உங்களுக்காக வாங்கிவந்தேன்…” என்றேன்.

அன்றிரவு தாமரை போன் செய்யும்போது முதன்முதலாக அவனை ‘அண்ணா…’ என்றேன். பிறகு எப்போதும்!

– பெப்ரவரி 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *