என் நெருங்கிய நண்பன் மோகனின் மூத்த பையனுக்கு பத்து வயசு. சின்னப் பெண் சிநேகாவுக்கு எட்டு வயசுதான் இருக்கும். அவள் படு சுட்டி! விடுமுறையில் எங்கள் வீட்டிற்கு அவர்கள் சேலத்திலிருந்து வந்திருந்தார்கள்.
என்னுடைய குழந்தைகளுக்கும் ஏறத் தாழ அதே வயசு தான்! நாலு பேர்களும் உட்கார்ந்து கேரம் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
நானும் நண்பர் மோகனும் அதே ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். மோகன் சமீபத்தில் சேலம் ஸ்வர்ணபுரியில் ஒரு வீடு வாங்கியிருந்தார். அதைப் பற்றிய பேச்சு வந்தது.
“ வீடு யார் பேரிலே வாங்கினே..?”
“என் மனைவி தன லட்சுமி பேரில் தான் வாங்கினேன்.”
நாங்க பேசுவதை அந்தச் சுட்டிப் பெண் சிநேகா கவனித்துக் கொண்டு தானிருந்தாள். திடீரென்று எங்கள் பேச்சில் குறுக்கிட்டு, “ அங்கிள்!…எங்கப்பாவுக்கு எப்பவுமே உஷார் பத்தாது!” என்று சொல்லி விட்டுச் சிரித்தாள்.
“ ஏம்மா!…..அப்படி சொல்லறே?…”
“ பின்னே என்ன அங்கிள்?…அப்பா லோன் போட்டு ….தன் சேமிப்பு மொத்தமும் போட்டு வீடு வாங்குகிறார்…அப்படியிருக்க தன் பெயரிலே வாங்கினாத்தானே உஷார்னு அர்த்தம்……நானே இப்பவெல்லாம் எவ்வளவு உஷாரா இருக்கிறேன் தெரியுமா?…..இந்த வருஷம் எனக்கு வாங்கிக் கொடுத்த எழுதாத எல்லா நோட்டுகளிலும் சிநேகா..சிநேகா.. என்று கொட்டை எழுத்துக்களில் எழுதி வைத்திருக்கிறேன்!…ஏன் தெரியுமா?…ஒரு வேளை அண்ணனுக்கு நோட்டு தேவை வந்தா …அது சும்மா தானே கிடக்கிறது என்று எடுத்துப் பயன் படுத்தி விடுவான்!…நாம ஏன் அந்த சந்தர்ப்பத்தைக் கொடுக்க வேண்டும்…நாம எப்பவும் உஷாராக இருந்தா ஒரு பிரச்னையும் வராது…….நீங்க அவர் பிரண்டு தானே…எதிலும் எப்பவுமே உஷாரா இருப்பது நல்லதுனு அவருக்குச் சொல்லிக் கொடுங்க!..,….”
காலம் ரொம்ப மாறிப் போச்சு!….இந்தக் காலத்து குழந்தைகள் எப்படி எல்லாம் சிந்திக்கிறாங்க.. தெரிந்து சொல்லிச்சா.. தெரியாம சொல்லிச்சா..நம்பவே முடியலே!…ரொம்பக் கஷ்டமா இருந்தது!