காலம் இனி வரும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 2, 2021
பார்வையிட்டோர்: 10,827 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பக்கத்தில், நீளமாய் ஒரு காலை மடக்கியும் ஒன்றை நீட்டியும், சற்றே வாய் பிளந்து, வெற்றிலைக் காவிநிறப் பற்கள் தெரிய, கைகளைப் பரப்பியவாறு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த பிரபுவைப் பார்த்தாள் சத்யா. ‘இரையுண்ட மலைப் பாம்பு படுத்துக் கிடப்பதுபோல’ என அவள் மனதில் சட்டென்று உருவகம் ஒன்று தோன்றி மறைந்தது.

ஒரு பசும் கன்றையோ, அல்லது ஒரு மான் குட்டியையோ விழுங்கி மலைப்பாம்பு, படுத்துச் சீரணிக்கப்படும் பாட்டைத் தான் நேரில் கண்டிக்கிறோமா? இல்லை. பின் எப்படிப் பிரபு படுத்துக் கிடப்பதைப் பார்த்ததும் அவ்வுருவகம் தனக்குத் தோன்ற வேண்டும். என யோசித்தாள் அவள். எங்கோ படித்திருக்கிறாள். படித்தது வாகாக, சரியான இடத்துக்கு வந்து பொருந்தி விட்டிருந்தது.

இவன் மலைப் பாம்புதான். சந்தேகமில்லை, இரைகள் தாமாகவே மலைப்பாம்பின் வாயில் போய் விழுமா என்ன தன்னைப் போல?

அது இருவர்க்கான கட்டில், அறையை அடைத்துப் போட்டி ருந்தது. அப்பா சீதனமாகக் கொடுத்தனுப்பியது. பழங்காலத்து ஆகி வந்து கட்டில் என்று அப்பா அதைப் பழுது பார்த்து, வண்ணம் பூசி தன் ஒற்றை மகளுக்குக் குலமோங்கக் கொடுத்தனுப்பி வைத்தார். தற்காலத்துக் கட்டில்களைக் காட்டிலும் உயரத்திலும், அகலத்திலும் அது தாட்டியாகவே இருக்கும். அப்படியே உட்கார்ந்து படுத்துக் கொள்ள முடியாது. கொஞ்சம் எகிறித்தான் உட்கார வேண்டி யிருக்கும்.

பிரபு கைகளை அகல விரித்துக்கொண்டு தூங்கிக் கொண்டி ருந்தான். கட்டிலில் இன்னொரு ஜீவனுக்கும் இடம் கொடுக்க வேண்டும் என்கிற உணர்வேயின்றித் தூங்கிக் கொண்டிருந்தான் அவன். என்ன சுருக்கமாய் இவனுக்குத் தூக்கம் வருகிறது! எப்படி வந்தது?

கட்டிலில் ஓரத்தில், முழங்கால் வரை மடித்து, அவற்றின் மேல் முகத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். ரேடியம் பூசிய சுவர்க் கடிகாரம் மணி பதினொன்று என்றது. கீழே கல்யாண வீட்டுச் சந்தடிகள் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக் கொண்டி ருந்தன. அவ்வப்போது ஏதேனும் தட்டோ, தாம்பாளமோ விழுகிற ஓசையைத் தவிர ஊர் அடங்கித்தான் போய் விட்டிருந்தது.

சத்யா, தன் அருகில் படுத்துக்கிடப்பவனைப் பார்த்தாள். அவன் தன் கணவன் என்கிற உண்மை சட்டென உறைக்க, நெருப்பை மிதித்ததைப் போன்று இருந்தது. ஊரை அழைத்து, விருந்திட்டு, அக்கினிசாட்சியாக வேத மந்திரங்கள் கோஷிக்கத் தன்னைச் சட்டபூர்வமாக வரித்துக் கொண்ட கணவன். சரியாகப் பத்து மணி நேரத்துக்கு முன்னால்தான் அது நிகழ்ந்தது. சரியாக அறுநூறு நிமிடங்களுக்கு முன்னால், அது நிகழ்ந்தது. இன்று காலை தான் அந்தத் திருமணம் நடந்து முடிந்து விட்டிருந்தது. என்ன சுருக்கு? அவளுக்கு மட்டும் ஏன் எல்லாம் இவ்வளவு சுருக்காய் நடந்து முடிந்து போக வேண்டும்?

“அதிர்ஷ்டக்காரி எங்க சத்யா” என்றாள் அம்மா.

சத்யா கூட அந்த வார்த்தைகளைக் கேட்டபோது தான் அதிர்ஷ்டக்காரி என்றே நம்பினாள்.

உயர்ந்த மதிப்பெண்களோடு கல்லூரிப் படிப்பை முடித்ததும், உடனே அவளுக்குப் மிகப் பெரிய தனியார் கம்பெனியில் வேலை கிடைத்ததும்தான் என்ன சுருக்கு. உடனே வரன்களின் ஜாதகக் கட்டுகள் வந்து குவிந்ததுதான் என்ன சுருக்கு.

“அம்மா, இப்பத்தான் படிப்பை முடிச்சி, வேலைக்குப் போயிருக்கேன், அதுக்குள்ள எதுக்கு அவசரம்… கொஞ்சநாள் போகட்டுமே…” என்றாள் சத்யா.

“குழந்தைக்கு என்ன தெரியும்? எல்லாக் குழந்தைகளும் இப்படித்தான் சொல்லும். எந்தக் குழந்தை வாயைத் திறந்து ‘அம்மா எனக்குக் கல்யாணத்தைப் பண்ணிவை. உடனே மாப்பிள்ளை பாரு’ என்று சொல்லும்” என்பது அப்பாவின் கட்சி.

பேசிக்கொண்டிருக்கும் போதே பிரபுவும் பெண் பார்க்க வந்தான். சத்யாவை அவன் பார்த்தானா? பிரபுவைத் தான் அவள் பார்த்தாளா? பனியனும், சட்டையும், அதன் மேல் கோட்டும், பேண்ட்டும் அணிந்து வந்திருந்தான். மாதம் இரண்டாயிரத்து ஐநூறு சம்பளம் வாங்குகிறாள் அவன் என்று சொன்னார்கள். மாதம் இரண்டாயிரத்து ஐநூறு பெறுமானமுள்ளவன், அப்புறம் என்ன?

அப்பா ஓடி ஓடிக் கல்யாண ஏற்பாடுகளைச் செய்தார். வயதுக்கு மீறிய ஓட்டம் அது. எல்லா அப்பாக்களும் பெண்ணுக்குக் கல்யாணம் என்றால் இப்படித்தான் ஓடுவார்கள் போலும். கல்யாண மும் நடந்து முடிந்துவிட்டது.

இரவு விளக்கு மட்டும் கமரலாக எரிந்து கொண்டிருந்தது. பிரபு புரண்டு படுத்தான், இடுப்பில் இருந்த பட்டு வேஷ்டி வழுக்கி விலகியது. வெறுப்பும், அருவருப்பும் ஒருங்கே சேர்ந்து எழ, செத்த எலியைத் தூக்குவது போல முனை விரல்களால் வேஷ்டியைச் சரி செய்து போட்டாள் சத்யா.

பத்து மணிக்கு நேரம் நன்றாக இருப்பதாகக் கணித்து, அவளை அந்த அறைக்குள் தள்ளினார்கள். பெண்கள் வயது வித்தியாசம் இன்றி வெட்கம் இல்லாமல் விரசமாகச் சிரித்தார்கள். சீ என்றி ருந்தது அவளுக்கு. என்ன வெட்கம் இல்லாத ஜனங்கள். ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான, அந்நியர் யாருக்கும் அறவே சம்பந்தம் இல்லாததான, அந்தரங்கமான, பவித்ரமான ஒன்றுக்கு, இவர்கள் ஏதோ சம்பந்தம் உள்ளவர்கள் போலவும், அதிகாரிகள் போலவும், வெளிச்சம் போட்டு மகிழ்வதும், தன்னை நிர்ப்பந்தம் செய்வதும் என்ன அநாகரிகம் என்று தோன்றியது,

சந்தோஷமோ, ஆர்வமோ, பரபரப்போ கிஞ்சித்தும் இன்றி அறைக்குள் எரிச்சலோடு நுழைந்த அவளைப் புயல் மாதிரி எதிர்கொண்டான் பிரபு.

“பிரபு, உங்களுக்கு ரோஜாக்கள் பிடிக்குமா? அழகழகான மாலைவானம் மாதிரியான, குழந்தைகளின் கன்னங்களைப் போன்ற ரோஜாக்கள். எனக்குப் பிடிக்கும், என் வீட்டுப் பூந்தொட்டிகளைத் தான் நீங்கள் பார்த்திருப்பீர்களே! ரோஜாக்களில் எத்தனை தினுசு eகடா அத்தனையும் என விட நான் வளமான காலை களையும் மாலைகளையும் நான் அவற்றுக்கே சமர்ப்பணம் செய்கிறேன். என்ன அற்புதம் அது! மண்ணில் என்ன மந்திரம் இருக்கிறது? யார் இந்த மந்திரக்காரன்? இந்தச் சிறு காம்பில் இந்த உயிர் எப்படித் தளிராய், இலையாய், மொட்டாய் பரிமாணம் பெறுகிறது? ஐயோ இந்தப் பூக்கள் எப்படி எங்கிருந்து இந்த அழகை வாரிச் சுருட்டிக் கொண்டு வருகின்றன? நம் விட்டிலும் நாம் ரோஜாப் பதியன் போடுவோம், சரிதானா?

தேங்க்ஸ் பிரபு.

அதென்ன? அன்றைக்கு என்னைப் பெண் பார்க்க வந்த போது சுத்த மட்டி நிறத்தில் கோட் போட்டுக்கொண்டு வந்தீர்கள். ஆஷ்கலரில், சிமெண்ட் கலரில் கோட் போட்டால் உங்களுக்கு எவ்வளவு ஜம்மென்று இருக்கும்? ராஜா மாதிரி இருப்பீர்கள். சரியா? இனிமேல் அந்த வண்ணங்களையே தேர்ந்தெடுப்பீர்களா? ரொம்ப சந்தோஷம். ரொம்ப தேங்க்ஸ் பிரபு. இப்படி என் உணர்வுகளை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை பிரபு. நான் அதிர்ஷ்டசாலிதான். அம்மா வாய்க்குச் சர்க்கரைதான் போட வேண்டும்.

என்ன புத்தகம் படிப்பீர்கள்? ஹெரால்ட் ராபின்னா? சே எனக்கு என்னமோ அது பிடிக்காது. ‘மில்ஸ் அன் பூன்’ படிக்கிறவள் இல்லை நான். என்னோட காலேஜ் மேட்ஸ் எல்லாம் இவற்றைத் தான் விழுந்து விழுந்து படிக்கிறார்கள். ஐயோ! சுத்த போர் பிரபு அது.

பொது இடத்தில் நாம் ரொம்ப கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் பிரபு. ரொம்ப ‘கப்புள்ஸ்’ பார்த்திருக்கேன். பொது இடத்துல உரசிக்கிட்டு, கை கோத்துகிட்டு அசிங்கமாக நடந்துக்கு வாங்க. நாம் அப்படியெல்லாம் நம் நெருக்கத்தை ஒரு காட்சிப் பொருளா ஆக்கிடக் கூடாது. நம் அன்பு நமக்கு மாத்திரமே தெரியக் கூடியது. அதையெல்லாம் பிறருக்கு நாடகம் மாதிரி காண்பிக்கக் கூடாது. என்ன நான் சொல்றது சரிதானா?

அப்பப்பா! என்னைப் புரிஞ்சுக்கக் கூடிய கணவர் எனக்குக் கிடைச்சுட்டார். ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் பிரபு.

ஆமாம், இந்த சுவத்துக்கெல்லாம் என்ன இப்படி நீலம் அடிச்சு வச்சிருக்கீங்க, இந்த நீலம் ஸ்கூல் யூனிபார்ம் நீலம் பிரபு. லைட்டா கிரீன் ஷேட் அடிப்போமோ? அப்பத்தான் பார்க்க ‘டீ சென்டா’ இருக்கும்.

‘ஓகே பிரபு. ஐ லவ் யூ பிரபு. எங்கே என்னை பாருங்க நான் உங்களை கிஸ் பண்ணட்டுமா…’

இப்படியெல்லாம் நடக்கும். நடக்க வேண்டும் என்றுதான் கற்பனை செய்திருந்தான் சத்யா. அப்படியெதுவும் நடக்கவில்லை.

அவளை அவன் புயல் மாதிரிதான் எதிர்கொண்டான். என்ன நடக்கிறது என்று அவள் நிதானிக்கு முன்பே, அவள் உடம்பில் துணி எதுவும் இன்றி இருந்தாள்.

குளிக்க அழும் குழந்தையைக் குளிப்பாட்டும் ஓர் அம்மாவின் முரட்டுத்தனமும், இரவு இரண்டாம் ஷிப்ட்டுக்குப் போகிறவன் அவசர அவசரமாகச் சாப்பிடுவது போலவும், அது நடந்து முடிந்திருந்தது.

காலம் காலமாக, இந்த மண்ணில் பிறந்த பெண் எதைக் காப்பாற்றி வைத்துக்கொள்ள வேண்டும் என்று கற்பிக்கப்பட்டு வந்ததோ, உயிரை இழந்தாலும் எதை இழக்கக் கூடாது என்று உபதேசிக்கப்பட்டு வந்ததோ அதைச் சில நிமிடங்களுக்குள் இழந்து விட்டாள், சத்யா.

ஒரு முழு டம்ளர் பாலை ஒரு சொட்டும் பாக்கி வைக்காமல், குடித்துவிட்டு நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான் பிரபு.

சத்யாவுக்குப் பசித்தது, ஆனாலும் எதுவும் சாப்பிடப் பிடிக்க வில்லை. பசியை அடக்கி, “ஐயோ, ஒரு மூர்க்கனுக்கா தான் மனைவியானோம் என்று தோன்றி வயிறு சில்லிட்டது. இவனுக்கு மனைவியாய், ஓர் ஆயுள் முழுக்க எப்படி வாழ்வது? இவன் குழந்தைகளுக்குத் தாயாகி அந்தப் பாவச் சுமைகளை எப்படித் தாங்குவது? |

தான் மோசம் போய்விட்டோம் என்று நினைத்தாள் சத்யா. இந்த எண்ணம் தோன்றிய மாத்திரத்தில் உடம்பு சிலிர்க்க, அப்பாவும் அம்மாவும் நினைவில் தோன்றினார்கள். “அம்மா கடைசியில் என்னை இவன் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டாயே” சத்யா, தன்னையும் மீறிக் குலுங்கி அழலானாள்.

விடிவது தெரிந்தது. ஜன்னலுக்கு வெளியே மஞ்சள் சுண்ணாம்பு வெளிச்சம் பரவ, சத்யா எழுந்து அறைக்குள் இருந்த குளியல் அறைக்குள் நுழைந்தாள். ஷவரைத் திறந்து உடம்பு, மனசில் வெப்பம் குறைய குளித்தாள். நினைக்காமலும் கூடக் கண்ணீர் மாத்திரம் அவ்வப்போது வழிந்துகொண்டே இருந்தது.

குளித்து முடித்ததும், உடம்பும் மனசும் லேசாகிவிட்டது போல் இருந்தது. புதிய வீட்டில் புதிய சூழ்நிலையில் முதல் நாள் வாழ்வைத் துவங்குகிறோம் என்கிற உணர்வில் கீழே இறங்கி வந்தாள்.

அடுப்பறையில் அத்தை மாத்திரம், காப்பி போட்டுக் கொண்டி ருந்தாள். சத்யாவைப் பார்த்தும், தலையைத் திருப்பிக் கொண்டு வேலையில் ஆழ்ந்தாள்.

“நான் போடறேன் அத்தை” என்றாள் சத்யா.

“கொஞ்சம் சீக்கிரமா எழுந்திடனும் சத்யா. வயசுப் பொண்ணு ஒன்று சமைஞ்சு கல்யாணத்துக்குக் காத்திருக்கிற வீடு இது. எப்போ பார்த்தாலும் மேல பெட்ரூமிலே இருக்கறது நல்லா இருக்காது. ராத்திரி எல்லாரும் படுத்தப் பிறகுதான் மேலே போகணும். காலைல எல்லாரும் எழுந்திருக்கிறதுக்கு முன்னால நீ எழுந்து வந்து காப்பி போடணும்?” என்றாள் அத்தை. நிதானமாகத்தான் சொன்னாள். – சத்யாவுக்கு யாரோ சாட்டையால் அடித்தது போல் இருந்தது. நடு வீதியில் துணி நழுவினது மாதிரி கூசிப் போய்விட்டாள். நெஞ்சு குமுறிக்கொண்டு அழுகை வந்தது. அழக்கூடாது. அழுதால் தன் பலவீனம் வெளிப்பட்டுப் போகும், பல்லைக் கடித்துக்கொண்டு விழுங்கினாள். ஒன்று மட்டும் புரிந்தது. இந்த வீட்டில் புருஷன் ஆதரவு ஒன்றுதான் அவளைக் காப்பாற்ற முடியும். ஐயோ அவன் நல்லவனாக இருக்க வேண்டும்.

காப்பியை எடுத்துப்போய், படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த பிரபுவின் தங்கைக்கு அவளை எழுப்பிக் கொடுத்தாள்.

‘குட்மார்னிங் அண்ணி’ என்றாள் அவள். சத்யாவின் மனம் குளிர்ந்தது. இவள் ஒருத்தியாவது நல்லவார்த்தை பேசுகிறாளே! மனம் பாரம் குறைந்தாற் போலவும் இருந்தது.

“பஸ்ட் கிளாஸ் காப்பி அண்ணி” என்றாள் அவள் மீண்டும்.

சத்யாவுக்கு முதல் முறையாகச் சந்தோஷத்தால் சிரிப்பு வந்தது. “அண்ணி! நீங்க சிரிச்சா ரொம்ப அழகாக இருக்கீங்க” என்றாள் அவள் தொடர்ந்து. சத்யா பிரபுவை நினைத்துக் கொண்டாள். அவன் சொல்ல வேண்டியதை அவன் தங்கை சொல்கிறாள். அவன் பல் வரிசையைக் கூடத் தான் பார்க்காதது ஞாபகம் வந்தது. முகத்தைக்கூட முழுமையாகப் பார்க்காது, ஒருவனுக்கு மனைவியாக நேர்ந்த துரதிருஷ்டம் மனசை வருத்தியது.

காப்பி எடுத்துக் கொண்டு, படுக்கை அறைக்கு வந்தாள் சத்யா, அவன் விழித்துக் கொண்டிருந்தான். படுக்கையில் இருந்தவாறே மேலே சுற்றுகிற பேனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சத்யாவைப் பார்த்ததும் அவன் சிரித்தான்.

கௌரவம் இல்லாத சிரிப்பு. வேறு எவற்றையோ ஞாபகப் படுத்துகிற சிரிப்பு. ஆடையில்லாத சிரிப்பு.

அவளுக்கு எரிச்சல் வெளிப்பட்டது மீண்டும்.

காப்பியைக் கையில் கொடுத்தாள். அவன் ஒரு வாய் பருகியதும் கேட்டாள்….

“காப்பி நல்லா இருக்கா….”

“ப்ஸு” என்கிற அலட்சியமான, அர்த்தமற்ற பதில் அவனிடமி ருந்து வந்தது. ஏமாந்து போனவளாய் நின்றாள் அவள். கையைப் பிடித்து அருகே இழுத்தான். இழுத்த கையை பலம் கொண்ட மட்டும் உதறிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள் சத்யா .

“அவன் ‘ஏய்’ என்றான்.”

அவள் நின்று திரும்பி, “என் பெயர் ஏய் இல்லை சத்யா . என் பேராவது உங்களுக்குத் தெரியுமா” என்றுவிட்டு, ஏனோ சுவரில் முகத்தைப் புதைத்துக் கொண்டு “அம்மா… அம்மா…” என்று அழுதாள் சத்யா.

வினோதமான வீடாய் இருந்தது அது. அத்தை அவள் பாட்டுக்குச் சாப்பாடு, தூக்கம் என்றிருந்தாள். அவளுக்கு ஏனோ கேஸ் அடுப்பு என்றால் பயம், ஸ்டவ் தான் உபயோகிப்பாள். குளிக்க என்று எப்போதும் ஒரு விறகு அடுப்பு எரிந்து கொண்டேயிருக்கும், எல்லோரும் சுடு நீரிலேயேக் குளித்தார்கள். பிரபுவின் தங்கையோ கல்லூரி நேரம் போகக் கதைப் புத்தகங்களில் லயித்து விடுவாள். அவளுக்கு அவன்தான் துணை, வடிகால் எல்லாம், பிரபுவுக்கு எல்லாமே சூடாக இருக்க வேண்டும். எப்போது சாப்பிட உட்கார்ந்தாலும் ஆவி பறக்க வேண்டும்.

சத்யா தரையில் இருந்த ஸ்டவ்வில் தரையில் உட்கார்ந்து தோசை வார்த்துக் கொண்டிருந்தாள். எதிரில் பிரபு உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். பக்கத்தில் சுடு தண்ணீருக்காக விறகடுப்பு எரிந்து கொண்டிருந்தது.

அவளுக்கு அவனிடம் பேச நிறைய இருந்தது. பேசத்தான் நேரம் இல்லை. இரவு படுக்கைக்குப் போகும் முன்பு பேசலாம் என்று இந்த மூன்று நாளும் நினைத்துத் தோற்றுப் போயிருந்தாள். பிரபு, படுக்கை அறைக்கு நுழையும் முன்பே, மனத்தை விகாரமாக் கிக் கொண்டே நுழைந்தான். பேசி அவன் கேட்கும் நிலையில் இல்லை. இதுவே உகந்த நேரம் என்று தோன்றியது. அத்தை தோட்டத்தில் இருந்தாள். பிரபுவின் தங்கையோ ஏதோ ஒரு கதை உலகத்தில் ஆழ்ந்து போயிருந்தாள் அவள் அறையில்,

“ஒரு விஷயம் உங்ககிட்டே சொல்லனுமே” தோசை சாப்பிட் டுக் கொண்டிருந்தவன் தலை நிமிர்ந்தான்.

“இன்னியோட லீவ் முடியுது. ஆபீசுக்கு போவனும்.”

“நீ வேலைக்குப் போக வேண்டாம். வேலையை ரிசைன் பண்ணிடு.”

திடுக்கிட்டுப் போனாள் சத்யா. இந்த வீட்டில், இந்த அத்தை யோடு ஒருநாள் முழுக்க எப்படி அவளால் இருக்க முடியும்?

“ப்ளீஸ்! நான் சொல்றதைக் கேளுங்க. நான் வேலைக்குப் போகத்தான் ஆசைப்படறேன். வீட்டிலேயே மொட்டு மொட்டுன்னு இருக்க என்னால் முடியாதுங்க… அதோட ஆபீசும் டீசன்டான ஆபீஸ். வேலை செய்யறவங்களும் நல்ல மாதிரி. சம்பளமும் ஆயிரத்து ஐநூறு வருது. எதுக்கு இழக்கனும். வந்தா, குடும்பத்துக்குச் சௌகரியம்தானே?”

‘லுக்’ என்றான் பிரபு, தோசையைப் பிட்டவன் அவளைப் பார்த்தான்.

“பொட்டாச்சி வேலை செய்து சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை…. நான் ஆம்பிளை, நான் சம்பாதிக்கிறதே போதும். பொம்பளையா, லட்சணமா வீட்டுல கிட…”

சுருக்கென்றது. ஆபீஸில் அந்த எட்டு மணி நேரத்திலாவது சுதந்திரமாக இருக்கலாம் என்று இந்த மூன்று நாளாய்த் தோன்றி இருந்த ஆசை இப்படிக் கருகிவிட்டதே… ‘சுடு தண்ணிரெடி.”

எரிந்து கொண்டிருந்த அடுப்பிலிருந்து, டம்ளரில் சுடுநீர் எடுத்து அவனுக்குக் கொடுத்த சத்யா, அடுப்பில் கட்டையைச் சொருகி தீயை மட்டுப்படுத்தினாள்.

“பிரபு. ப்ளீஸ் என்னைப் புரிஞ்சுக்குங்க…. எனக்குக் கட்டாயம் வேலைக்கு போகனும்..” என்றாள் மென்மையாகவும், கெஞ்சலாகவும்.

“எனக்குப் பிடிக்காததை நீ செய்யக்கூடாது. நான் சொல்றபடி தான் நீ கேட்கனும். பொட்டச்சியா லட்சணமா வீட்டோட இரு. நீ எதுக்கு ஆபீஸ் போறே, எனக்குத் தெரியாதா? அங்கக் கண்டவனோட ஆட்டம் போடலாம்னு தானே? உங்களையெல்லாம் எனக்குத் தெரியுண்டி…”

அவள் அவனைப் பார்த்தாள். ஓர் அம்மிக்கல் கிடப்பது போல, சாணக் குவியலைப்போல அவன் இருந்ததாக அவளுக்குப் பட்டது.

“ஷிட்… இப்படிப் பேச உங்களுக்கு வெட்கமா இல்லே … சீ…. ரௌடி மாதிரி பேசறீங்களே… நீங்க படிச்சவங்கதானே…”

‘என்னடி சொன்னே…’ என்று எழுந்தவன், நின்றவாறு, காந்திருந்த அவளை தைத்தான். பாக அவன் வந்தில் பாய்ந்தது அந்த உதை. அவள் பந்து மாதிரி சுவரில் மோதிக் கொண்டாள். தலை சுவரில் மோதியது.

“ஐயோ” தலையைப் பிடித்துக் கொண்டாள் சத்யா. பின் மண்டையிலிருந்து வழிந்த இரத்தம் பின் கழுத்தையும், முதுகையும் நனைத்தது.

“என்னை அடிக்காதீங்க பிரபு. என்னைப் புரிஞ்சுக்குங்க பிரபு, என்னால இந்தச் சூழலுக்குத் தயார் பண்ணிக்க முடியல்லைங்க. எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க…” என்றவாறு அவன் கால் களைக் கட்டிக்கொண்டு அழுதாள். கால்களை உதறியவன், அதே வேகத்தில் அவளை உதைத்தான். சாய்ந்து விழுந்தவளைப் பின்னும் அவள் தலைமயிரைப் பிடித்துத் தூக்கி, ‘தன் பலம் கொண்ட மட்டும் ஓர் அறை விட்டான்.

“எவனையோ உன் மனசுல வச்சிக்கிட்டுதானே, என் கிட்டே சரியா நடந்துக்க மாட்டேங்கரே… உம்முனு நைட்ல மூஞ்சைத் தூக்கி வச்சிக்கிட்டு இருக்கறே… சரியா என்னோட ‘கோவாப்ரேட்’ பண்ணமாட்டேங்கறே… தேவடியா சிறுக்கி…”

தரையில் கவிழ்ந்து படுத்து அழுது கொண்டிருந்தவள், சட்டென்று தலையைத் தூக்கி, “ஸ்டாப் இட்… இது வரைக்கும் நீ சொன்ன மாதிரி நான் ஒன்றும் தப்பு பண்ணிடலை. இனிமேதான் பண்ண னும். நான் தப்புப் பண்ணினா அதுக்கு நீதான் காரணம்…” என்றாள்.

எங்கோ காயம்பட்டு, எப்படி எப்படியோ எரிந்து கொண்டி ருந்த பிரபுவுக்கு இது மேலும் கோபத்தைக் கிளப்பி விடா “என்ன சொன்னே… தப்புப் பண்ணுவியோ” என்று பாய்ந்தான்.

சத்யா, தன் பலம் அனைத்தும் சேர்த்து எழுந்து நின்றாள்,

“கீப் தி லிமிட்… இனி உன் கை என் மேல் பட்டதோ நான் மோசமா நடந்துக்குவேன்” அவனை நோக்கி எச்சரித்தாள் சத்யா,

‘என்னடி செய்வே’ என்று அவள் தலைமயிரைப் பிடித்து இழுத்து, கழுத்தில் மிருகத்தனமாக அறைந்தான் பிரபு.

அம்மா என்று அலறிக்கொண்டு கீழே விழுந்தாள் சத்யா. விறகடுப்பு அவள் நேரே இருந்தது. திகுதிகு என்று நின்று எரிந்து கொண்டிருந்த அந்த ஜுவாலை என்ன உணர்த்திற்றோ?

அந்தக் கணம் அது நிகழ்ந்தது.

எரிந்து கொண்டிருந்த கொள்ளிக் கட்டையைக் கையில் எடுத்தாள் சத்யா. கட்டை தீப்பற்றி சிவப்பு நாக்குகளோட சடச்சட வென்று வெடித்துக் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது.

பிரபு அவள் கைகளைச் சுற்றி அக்கட்டையைப் பிடுங்க முயற்சித்தான். கையைத் திமிறி விலக்கிக் கொண்ட சத்யா, அக் கொள்ளிக்கட்டையால் ஓங்கி அவன் முகத்தில் அடித்தாள்.

“ஐயோ!” என்று ஒரு பெரும் அலறல் அவனிடமிருந்து எழுந்தது.

– 1985

– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *