காற்றுக்கு மூச்சு நிண்டு போச்சு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 25, 2024
பார்வையிட்டோர்: 1,058 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

எனக்கு எப்பவுமே முகமும் வாயும் ஏன் உடம்பு முழுவதுமே கடுகடு, சிடுசிடு எண்டுதான் இருக்கும்; உள்ளுக்குள்ளை ஒரு பூச்சி இருந்து அரிச்சு, அரிச்சு, நெஞ்சுச் சுவர் எல்லாம் பிளக்கிற மாதிரி வலி! அடிவானத்திலை நெருப்புப் பிடிச்ச மாதிரி சிவத்தை ஒளி படந்திருந்த ஒரு பின்னேரத்திலை தான் அவன் எனக்குத் தாலி கட்டினவன். தாலி கட்டேக்கை என்ன கண்ணை மூடிக் கொண்டே கட்டினவன்? என்னைப் பிடிக்கேல்லை எண்டா அந்த நேரமே தாலியைக் கொண்டு எழும்பிப் போயிருக்கலாம். முதுகெலும்புள்ள ஆம்பிளையாப் பிறந்தவன் ஒருத்தன் அப்பிடித்தான் செய்திருப்பான். அப்ப, என்ரை அண்ணாக்கள் குடுத்த காசைக் கண்டிட்டுப் பல்லை இழிச்சுக் கொண்டு தாலியைக் கட்டினான். நான் எவ்வளவு கனவுகளோடை காத்திருந்தன்? என்ரை உணர்வுகள் என்ன மாதிரி நார் நாராக் கிழிபட்டுப் போச்செண்டு உங்கள் ஒருத் தருக்கும் விளங்காது. 

கொஞ்சம் பொறுங்கோ… ஐஞ்சி நிமிஷம் அழுது முடிச்சிட்டு மிச் சக் கதையைச் சொல்லிறன். (விழிச் சிமிழ் நிறைஞ்சு… கன்னங்களிலை வழிஞ்சு… மௌனம் ஒரு அற்புதமான சக்திதான். இல்லை, மெளனம் ஒரு அதியற்புதமான அங்கி.. போர்த்துக் கொள்கிறேன்.) 

எதை நினைச்சாலும் மனசுக்குள்ளை கசக்குது. யாருக்கும் சொல் லித் தீர்க்கா விட்டால் இதயம் உள்ளாலை வீங்கி வெடிக்கும் போலை இருக்கு. எனக்குள்ளை முறிஞ்சு கொட்டிண்டு போய்க் கிடக்கிற மனத் துண்டுகளைப் பொறுக்கி எடுத்துத் தர உங்கள் ஒருத்தராலையும் ஏலாது. எந்தப் பெரிய கொம்பன் கவுன்சிலராலையும் ஏலாது. 

ஏன்? எனக்கென்ன வெக்கம்? மனதைத் திறந்து உள்ளதைச் சொல்லுறன். கலியாணம் செய்து மூண்டு வரியம். நான் ஒரு நாளும் ஒரு சந்தோஷத்தையும் அனுபவிக்கேல்லை. அவனுக்கு ஆண்மையே இல்லை. அதைச் சொல்லாமல் ஒழிச்சு என்னைக் கட்டி ஏமாத்தினதைக் கூட மன்னிக்கலாம். நான் அவனுக்கு ஒரு நல்ல சகோதரியாகவே காலம் முழுவதும் இருந்திருப்பன். ஆனால் அவன் என்ன சொல்றான் தெரியுமா? நான் கறுப்பாம், வடிவில்லையாம். முகமெல்லாம் பருவாம். கட்டையாம். 

அதைப் பார்க்கத் தனக்கு வாற வெறுப்பிலை தானாம் தனக்கு ஒண்டும் விருப்பமில்லாமல் இருக்காம். இல்லாட்டித் தான் திறமான ஆம்பி ளையாம். இப்பிடி அவன் சொல்றதைக் கேக்க… எனக்குச் சும்மா பத்திக் கொண்டு வருது.. கண்ணுக்குத் தெரியாத வடக்கயித்தாலை ஆரோ பளீர், பளீர் எண்டு அடிக்கிற மாதிரிக் கிடக்கு. நான் கிராமத்துப் பொம் பிளை தான். என்ரை அப்பன் தோட்டக்காரன் தான். ஆனால் நான் கொஞ் சம் படிச்சனான். எனக்கும் விசயங்கள் விளங்கும். அது தான் கேட்ட னான் இவன் எனக்குத் தாலி கட்டேக்கை ஏன் கண்ணை மூடிக் கொண்டு கட்டினவன் எண்டு. 

முத்தத்திலை நிக்கிற மரங்கள் எல்லாம் என்னை நெருங்கிக் கொண்டு வாற மாதிரிக் கிடக்கு! வீட்டுக்கு வெளிலை போனால் யுத்தம்! வீட்டுக்குள்ளை வந்தால் அதைவிடப் பெரிய யுத்தம்! என்ரை மனதுக் குள்ளை பாரத யுத்தம்!! 

அவன்ரை மீசை – மசுக்குட்டி மயிர் போலை என்ரை மேல் எல் லாம் சுணைக்குது. அவனைப் பாத்தா அவன்ரை கண் என்ரை கண் ணுக்குள்ளை எரியுது. எத்தினையோ காட்சியள் என்ரை மனதிலை ஒரே நேரத்திலை வருது. அல்லது ஒரே காட்சி பல மணித்தியாலங்களா நீடிச் சிருக்கு. ஒண்டு எனக்கு விசராய் இருக்க வேணும் அல்லது நான் ஞானி யாய் இருக்க வேணும் எண்டு நினைக்கிறன். 

(சூனியத்தை வெறிக்க வெறிக்கப் பார்த்து அந்தச் சூனியத்துள் ஆயிரம் விடங்களைத் தேடுவதில் ஒரு இன்பம் இருக்கத்தான் செய் கிறது) இப்ப கொஞ்ச நேரம் நான் ஒண்டும் கதைக்காமல் சூனியத் தையே வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டு இருந்தன் தானே! அப்ப என்னைச் சுத்தி ஒரு நிசப்தம் தானே இருந்தது! அந்த நிசப்தமே பெரிய ஒலியாகி என்ரை காதை உடைக்கிற மாதிரிக் கிடக்கு… இயற்கை யின்ரை ஒவ்வொரு கூறும் தனக்குத் தானே இரக்கம் பாக்க முடியாமல் திணறேக்கை எனக்கு யார் இரக்கம் காட்டப் போயினம்? 

மனைவி எண்ட முறையிலை எனக்கு ஒரு சந்தோஷமும் தராத அவன் என்னை ஒரு வேலைக்காரி மாதிரித்தான் வைச்சிருந்தான். அவன் வேலைக்குப் போய்வர நான் நேரத்துக்கு நேரம் சமைச்சுப் போட வேணும். அந்தச் சமையலையாவது அவன் சந்தோஷமாய்ச் சாப்பிட் டிருக்கலாம். நல்லாயிருக்கு எண்டு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். ஆளைப் பார்க்கத்தான் அருவருக்குது எண்டால், சாப்பாட்டையாவது சுவைச்சுச் சாப்பிட்டிருக்கலாம். ஒரு நாள் “உப்பில்லை” எண்டான். மற்ற நாள் உறைப்புக் கூடிப் போய்ச் செண்டான். தன்ரை குறையை மறைக்க எத்தினையோ உள விளையாட்டுக்களை விளையாடத் தொடங்கினான். தொட்டதெல்லாத்துக்கும் என்னிலை குறை பிடிக்கிறதை என்னாலை தாங்க முடியேல்லை. நானும் அவனும் வீட்டிலை சாதாரண தொனி யிலை கதைக்கிறதேயில்லை, எண்ட அளவுக்கு நிலைமை முத்திப் போச்சு. 

கனவுத் தண்ணி எல்லாம் வெளிலை வழிஞ்சு இறுகிப் போன என்ரை மனத்திலை இனிய சொல்லுகள் எப்பிடி வரும்? நான் ஒரு வீட்டுக்கு வெறும் வேலைக்காரியாப் போற தெண்டா, எனக்குச் சம்பளம் தரவேணும் அவை. அவன்ரை ஒரு சேல்ஸ்மன் உத்தியோகத்துக்கு இரண்டு லட்சம் சீதனம் குடுத்து… அதுக்கு வட்டியா நான் வேலையும் செய்ய வேணுமோ? எனக்குள்ளை சரியான கோபம். சரியான கவலை. சொல்ல முடியாத விரக்தி. 

இரவிலை சுவரோடை ஓட்டிப் படுத்துக் கொள்ளுவன். நான் சுருண்டு படுத்திருக்கும் முறை சுவருக்குள்ளை போக முயலுவது போலை இருக்குதெண்டு நானே நினைப்பன். என்ரை தொண்டைக் குள்ளை உட்சுவர் ஓட்டியிடும். நான் எவ்வளவு சோகித்துப் போயிருக் கிறன் எண்டு அம்மாவுக்கு ஒரு நாள் சொல்லி அழுதன். 

“கல்லெண்டாலும் கணவன் தான். புல்லெண்டாலும் புருஷன் தான். தொட்டுத் தாலி கட்டின மனுஷனை விட்டிட்டு ஒண்டும் செய்ய ஏலாது. நீ ஒரு மாதிரிச் சரிக்கட்டி நட” எண்டு அவ சொல்லிட்டா. என்ரை பயங்கரத் தனிமையிலை, என்ரை ஏக்கங்களும் அவமானங்களும் துக் கங்களும் தான் எனக்குத் துணையாய் இருக்கும். அம்மா ஆறு பிள் ளைப் பெத்தவ. இப்பவும் அப்பரோடை அரை அங்குல இடைவெளி யிலை கோயிலுக்குப் போறவ. அவவுக்கு எப்பிடி நான் சொல்லுறது விளங்கும்? 

(கொஞ்சம் தண்ணி தாறீங்களா? குடிப்பம்) அரணை ஒன்று என்காலில் விழுந்து, விழுந்தடித்து ஓடினால் கூட ஓர் உயிர் என்னைத் தொடுகிறது என்று மகிழ்வடையும் நிலை ஏற்பட்டிருந்தது. நான் நிக்கிற இடமெல்லாம், நடக்கிற இடமெல்லாம், படுக்கிற இடமெல்லாம் நெருஞ்சி முள் தைக்கிற மாதிரி எனக்குள்ளை ஒரு உணர்வு. என்ரை மனதின்ரை உட்சுவரிலை இருந்து கல்லுகள் எல்லாம் ஒண்டொண்டா விழத் தொடங்கின நேரம் தான், நான் அந்த நாய்க் குட்டியைப் பக்கத்து வீட்டிலை வாங்கி வளத்தன். இருள் மரணத்தைத் தழுவத் தொடங்கிற விடியப்பற நேரத்திலை தான், அந்த வெள்ளை நாய்க்குட்டி எங்கடை வீட்டை வந்திது. வந்த உடனேயே இருளைப் பிளந்து கொண்டு ஒற்றை யாய் ஒரு அழுகை ஓலம் போட்டுது. 

நான் பால் கரைச்சுக் கொணந்து வைச்சன். இரக்கம் தேடுற ஒரு பார்வையாலை என்னைப் பாத்திது. பிறகு வாலை ஆட்டிச்சுது. அது பால் குடிக்கிறதைப் பாக்க எனக்கும் இதயம் நனைஞ்சு போச்சு. அந்தக் கணத்திலை இருந்து அது என்ரை பிள்ளை போலை வந்திட்டுது. ஒரு மனிசக் குழந்தைக்குத் தாயா இருக்க முடியாட்டியும், ஒரு நாய்க் குழந் தைக்கு வளர்ப்புத் தாயா இருக்கிறது, மன எழுச்சிகளைத் தாங்க முடி யாமல் இருந்த என்ரை உள் மனப் புகைச்சலை எவ்வளவோ ஆறுதல் படுத்திச்சுது. 

ஒரு வெறியோடை வந்து முகத்திலை குளிர் காற்று அறையிற மார்கழி மாதத்து முன்னிரவு நேரங்களிலை ஷெல் வீழ்ந்து வெடிக்கும் பயங்களுக்கு நடுவிலை, நானும் ஜிம்மியும், அது தான் என்ரை பிள் ளையும், போட்டிக்கோக் கட்டிலிலை படுத்திருப்பம். அது என்ரை தலை மயிரைச் செல்லமாப் பிடிச்சு இழுக்கும். 

(என்ரை மயிர் பச்சையாய் இருக்கா? வாழ்க்கை தான் நல்ல நரைச்சுப் போச்சு) 

ஜிம்மி நல்ல வெள்ளை. பால் போலை நிறம். நான் கறுப்பு. அடுப்புக்கரி மாதிரி. ஆனாலும் அது என்னை வெறுக்கேல்லை. நான் எங்கையும் வெளிலை போயிட்டு வந்தா. என்னைச் சுத்திச் சுத்தி ஓடி, முகம் நிறைஞ்சு சிரிச்சு, காதை உயர்த்தி, காலை நக்கு நக் கெண்டு நக்கி வால் ஓடியும் வரை ஆட்டி அது போடுற அட்டகாசத்திலை நான் அப்பிடியே திகைச்சுப் போய் நிண்டிடுவன். என்ரை குரலை நானே கேட்டுக் கொண்டு இருந்த எனக்கு இப்ப சரியான ஆறுதல். 

நான் இந்த நாய்க்குட்டிக்கு ஒரு சதமும் சீதனம் குடுக்கேல்லை. நான் சாப்பிட்ட மிச்சச் சாப்பாடு தான் குடுக்கிறன். அப்படியிருந்தும் அது எவ்வளவு அன்பு காட்டிது எனக்கு மேலை? அது சுயநலமான அன்பு எண்டு நினைக்கிறியளா? இல்லை. 

நான் ஒரு நாள், ஒரு அமாவாசை அண்டு, காய்ச்சல் வந்து படுத் திட்டன். பகல் முழுதும் அந்தப் போட்டிக்கோக்கட்டில்லை படுத்துக் கிடந்தன். இருண்டது நேரமா? கண்களா? ஜிம்மியும் என்னோடையே கிடந்தது. நான் எழும்பி பாத்றூம் போக நான் விழுந்திடுவனோ எண்டு பயந்து.. ஏதோ தான் தூக்கி விட்டிடுவன் எண்டமாதிரி என்ரை காலோ டையே நடந்து என்னோடை உரசி, உரசி வந்து திரும்பி வந்திது. அண் டைக்கு நானும் சாப்பிடேல்லை. அதுகும் சாப்பிடேல்லை. இரவு பத்து மணிக்கு மேலை தான் அவன் வீட்டை வந்தவன். 

“ஏன் சமைக்கேல்லை? எண்டான். 

“எனக்குச் சுகமில்லை. காய்ச்சல்” எண்டன். 

“எளிய நாய்க்கு – உந்தச் சொறி நாயோடை படுக்கிறதுக்கு மட்டும் வருத்தம் இல்லை” எண்டு சொல்லி, ஒரு பெரிய பொல்லுக் கொணந்து நாய்க்கு மேலை ஒரு போடு போட்டான். அது எக்கச் சக் கமான இடத்திலை விழுந்திட்டுது போலை” 

ஜிம்மி குழறி அழுது, கொஞ்சம் அனுங்கி, அப்பிடியே செத்துப் போச்சு. உண்மையிலை அது எனக்கு விழுந்திருக்க வேண்டிய அடி! நான் வாயை இறுக்கி மூடிக் கொண்டன். அன்பு, சந்தோஷம், அமைதி இதெல்லாம் அடையாளம் கூடக் காண முடியாத அபூர்வப் பொருளாகிப் போன என்ரை வாழ்க்கையிலை ஒரே ஒரு சின்ன ஒளியாய் இருந்த ஜிம்மி… அந்த மறைவை என்னாலை ஏற்றுக் கொள்ள முடியேல்லை. 

“துலைஞ்சுது சனியன்” எண்டு முணுமுணுத்துக் கொண்டு அவன் உள்ளை போனான். அந்த வீட்டிலை ஏற்கனவே இருந்த அசுத்தமான காற்று, இந்தக் குரலாலை இன்னும் கேவலமான அசுத்தமாய்ப் போறதா நான் உணர்ந்தன். காற்று இலைகளின்ரை இடைவெளியளுக்குள்ளாலை கத்திக் கத்தித் தன்ரை காமத்தைத் தீர்த்துக் கொண்டது. 

பஞ்சு போலை மயிரோடை செத்துப் போய்க் கிடந்த ஜிம்மியைப் பார்க்க எனக்கு ஒரு பயம் வந்திட்டுது. காத்துக்கு மட்டும் கேட்கத்தக் கதா ஒரு சபதம் செய்தன். “துலைஞ்சது சனியன்” எண்டதுக்குத் துலை ஞ்சு போ சனியன்” எண்டது தான் அர்த்தம் எண்டு எனக்குள்ளை புரிஞ்சுது. போட்டிக்கோ முழுதும் ஒரு விபரிக்க முடியாத பயத்திலை உறைஞ்சிருக்க, நான் வெளிக்கிட்டன். எங்கை போறதெண்டு எனக்கே தெரியாது. உலகமெல்லாம் ஆத்மாவிலை கறுப்பான ஆக்கள் தான் இருக்கினம் எண்டது போலை எனக்குள்ளை ஒரு நினைவு. என்ரை எதிரிலை ஒரு ஒற்றையடிப் பாதை வெறிச்சாய் ஓடுது. கால் போன வழி வழி போகுது. ஒரு பட்சி ஏதோ வைது கொண்டு மரத்தை விட்டுக் கிளம் பிப் பறக்குது. 

என்ரை தழும்பை மனதாலை அடிக்கடி தொட்டுப் பார்த்துத் தட விக் கொண்டு நான் நடந்த போது தான், இந்த மற்றவன் முன்னாலை வந் தான். இவன் என்ரை சின்ன வயசிலை என்னைக் காதலிப்பதாய்ச் சொன் னவன். நான் வீட்டிலை போய்ச் சொல்ல, அண்ணாக்கள் அவனை வெரு ட்டி அதோடை விசயம் முடிஞ்சு போய் இருந்தது. அவன் வேறை ஆள். கலியாணம் செய்ய ஏலாதெண்டு அண்ணாக்கள் சொன்னதோடை நானும் சரியெண்டு விட்டிட்டன். இப்ப என்ரை ஜிம்மியும் இல்லாத நேரத்திலை, எனக்கு என்ரை கதையைக் கேட்க ஒராள் வேணும் போலை இருந்திது. என்னோடை கூட இருக்க ஓராள் வேணும் போலை இருந்திது. நடந்து நடந்து என்ரை கதையைச் சொல்லிக் கொண்டு வந்தன். வழியெங்கும் சோகங்கள் மண்ணிலை கொட்டினது போலை மர நிழல்கள் விழுந்து கிடந்தது. அவன் இந்த இரண்டாவது ஆள் என்ரை கதையைக் கேட்டுக் கொண்டு வந்தான். என்ரை மனதுக்கு இதமான ஒத்துணர்வுப் பதில் களைத் தந்தான். நான் என்ரை மனதையே விறாண்டி அவனுக்கு முன் னாலை கொட்டிப் போட்டன். 

“போனதெல்லாம் போகட்டும். நான் அந்த இளமையிலை காத லிச்ச மாதிரியே இன்னும் உன்னைக் காதலிக்கிறன். இல்லாட்டி ஏன் இன்னும் கலியாணம் செய்யாமல் இருக்கிறன்” எண்டு கேட்டான். 

நொந்து போய்க்கிடந்த மனம் இரண்டாம் முறையும் ஏமாந்து போச்சு. 

அம்மாவோ அண்ணாக்களோ இதை ஏற்றுக் கொள்ள மாட்டினம் எண்டதாலை நான் அவைட்டை ஒண்டும் சொல்லேல்லை. என்னத்தைத் தான் சொல்றது? மார்கழி மாதத்திலை தாலி கட்டப்பிடாது, “நீ அவன்ரை எழுத்தைத் தள்ளிப் போட்டுவா. நான் பிறகு தாலி கட்டி உன்னை ஏற்றுக் கொள்ளிறன்” எண்டான். 

கதை தான்! 

எல்லாமே வெறும் வாய்ச் சொல் தான்! 

இப்ப… ! கர்ப்பமுற்ற மேகங்களைக் கொண்ட வானம் மீண்டும் கண்ணீர் சிந்துகிறது. நான் ஜிம்மியைப் போலை இன்னொரு நாய்க்குட்டி யைத் தேடிக் கொண்டிருக்கிறன். 

கடித்த பற்களிடையே, சொல்லத் தகாத வார்த்தைகள் எனக்குத் தவிக்கின்றன. நான் பற்றி எரிகிறேனோ? எரி நீரில் முழுகுகிறேனா? 

ஒரு வண்ணத்துப் பூச்சி வழியை விட்டிட்டு, எங்கெங்கோ அலைஞ்சு கொண்டிருக்கு. அதன் அன்ரெனா அசைவில் ஏக்கம் மட்டும்! 

காற்றுக்கு மூச்சு நிண்டு போச்சு. ஏனெண்டால் இலையள் ஒண்டும் அசையேல்லை. 

பனி மூட்டம் இருக்கிற காலை வேளை எண்டால் என்ன, இளம் மஞ்சள் ஒளி விழுகிற மாலை வேளை எண்டால் என்ன, வசந்தம் எண் டாலும் சரி… இலையுதிர் ஆனாலும் சரி…. எந்த நேரமும் அழ முடியும் என்னாலை! 

– தினக்குரல் 29-11-1998

– வரிக்குயில்(சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: நவம்பர் 2016, கலை இலக்கியக்களம், தெல்லிப்பழை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *