காதலும் ஊதலும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 24, 2023
பார்வையிட்டோர்: 1,898 
 
 

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1

இதோ வீராசாமியின் ஊதல் சத்தம் கேட் கிறது. கிருஷ்ணன் குழல் ஊதினால், பசு பக்ஷிகள் எல்லாம் தம்மை மறந்து அவன் குழல் ஓசையில் ஈடுபட்டிருக்குமாம். அப்போது அந்தக் கள்ளக் கிருஷ்ணனுங்கூடத் தன் வேணுகானத்திலேயே லயித்திருப்பானோ என்னவோ நாம் அறியோம். ஆனால், நம் வீராசாமி தன் ஊதலை எடுத்து ஊதும் போது அவன் அடையும் தற்பெருமை சொல்லி முடியாது. வீராசாமிக்கு எங்கள் ஊர் ஸினிமாக் கம்பெனியில் வேலை. ஸினிமா நோட்டீஸ் கொடுக்கும் வண்டியில் உட்கார்ந்து வாத்தியம் வாசிக்கும் கோஷ்டிக்கு அவனே தலைவன்.

ஒரு பழைய இரட்டை மாட்டு வண்டிதான். மாடுகளும் தொத்தல் மாடுகள். வண்டியின் மேல், வெயில் அடிக்காமல் இருப்பதற்குக் கீற்றினால் பந்தல் மாதிரி போட்டிருக்கும். வண்டியின் இரண்டு பக்கங்களிலும் படங்கள் ஒட்டின நோட்டீஸ் போர்டுகள். இவற்றிற்கு நடுவில், வண்டிக்குமேல் உயரமாகப் பெஞ்சி போட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பான் வீராசாமி. அவனுக்குப் பக்கத்தில் வரிசையாய் இன்னோர் ஊதல்காரனும், ஒரு மேளகாரனும், ஒரு தாளக்காரனும் அமர்ந்திருப்பார்கள். ஐந்தாறு நாட்களாக ஓடிக்கொண்டிருக்கும் பழைய படமானால் வீராசாமியின் வாசிப்பில் அவ்வளவு சுவாரஸ்யம் இராது. ‘இந்தப் பழசுக்கு எத்தனை நாள் ஊதுகிறது?’ என்று அவன் நினைப்பதுபோல் தோன்றும். அன்றுதான் புதிதாக ஆரம்பிக்கும் படமானால், தலை கால் புரியாமல் ஜமாய்த்துவிடுவான்.

ஒவ்வொரு சமயம் ஸினிமா வண்டி தெருவிலே போகையில் நான் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருப்பேன். இந்த ஊதல்காரனைப் பார்த்தால் எனக்குப் பொறாமை உண்டாகும்; ‘உயர்ந்த ஆஸனத்தில், தனக்கு நிகரில்லை என்று அமர்ந்துகொண்டு ஸினிமாப் பாட்டுக்களை ஊதிக்கொண்டு போகும் இவன் ஒய்யாரந்தான் என்ன?’ என்று நினைப்பேன்.

2

ஒரு நாள் வெயில் மிகவும் கடுமையாக இருந்த தால் இளைப்பாறுவதற்காக ஸினிமா வண்டி. எங்கள் வீட்டெதிரில் இருந்த மரத்து நிழலில் சற்று நேரம் நின்றது. “கொஞ்சம் ஜலம் கொடுங்கோ, சாமி!” என்று கேட்டுக்கொண்டு வீராசாமி வண்டியை விட்டு இறங்கி வந்து திண்ணையில் உட்கார்ந்தான். சற்று நேரம் அவனுடன் பேச்சுக் கொடுத்ததில் பின் வரும் ரஸமான கதையை அவன் கூறினான்.

வீராசாமிக்கு இப்போது வயசு இருபத்தெட்டு. (“நாலு வருஷத்துக்கு முந்தி எனக்கு வயசு இருபத்தி நாலு சாமி! சரிதானே?” என்று அவன் கேட்ட போது, “நூற்றுக்கு நூறு மார்க்” என்றேன்.) அந்தக் காலத்தில் வீராசாமி ஒரு டூரிங் ஸினிமா கம்பெனியில் இருந்தான். ஊர் ஊராக அந்தக் கம்பெனி சுற்றிக் கொண்டிருக்கும். இந்த நாடோடி வாழ்க்கை வீராசாமிக்கு மிகவும் பிடித்திருந்தது. மாச மாசம் தன் சம்பளத்தில் கொஞ்சம் தாய்க்கும் தம்பிக்கும் அனுப்புவான். வருஷத்தில் எப்போதாவது நாலைந்து நாட்கள் சொந்த ஊருக்கு வந்து அவர்களைப் பார்த்துவிட்டுப் போவதும் உண்டு. அப்படி ஒரு தடவை வந்தபோது அவன் தாய் சேலத்தில் தனக்கு ஒன்று விட்ட தம்பி ஒருவன் இருப்பதாகத் தெரிவித்தாள். வீராசாமியின் லினிமாக் கம்பெனியும் அப்போது சேலத்தில் தான் இருந்தது. “முடிந்தால் அவர்களைப் போய்ப் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு வீராசாமி ஊர் போய்ச் சேர்ந்தான்.

சேர்ந்த அன்று மத்தியான்னம், ஸினிமா வண்டியில் உட்கார்ந்து அவன் வாத்தியம் வாசித்துக் கொண்டு போகையில் தாய் சொன்ன தெரு வந்ததும், அவள் சொன்ன அடையாளம் உள்ள வீடு எது என்று இரண்டு பக்கங்களிலும் பார்த்துக் கொண்டே போனான். ஒரு வீட்டருகில் வண்டி சென்றபோது அவன் நெஞ்சு திக்கென்றது. வீட்டுத் திண்ணைகளுக்கு மேலே உள்ள சுவரில் ஒரு பக்கம் ஹனுமார் உருவமும் இன்னொரு பக்கம் கிருஷ்ணன் உருவமும் – எந்தக் காலத்திலோ எழுதினவை – அழிந்தும் அழியாமலும் காணப்பட்டன. இவைகளே, அவன் தாய் சொன்ன அடையாளங்கள். ஆனால் அவன் நெஞ்சிலே அந்த உணர்ச்சி ஏற்பட்டதற்குக் காரணம் அவை அல்ல. அந்தக் காரணம் சுமார் பதினாறு பதினேழு வயசு சொல்லக்கூடியவளாய், பாவாடையும் தாவணியும் அணிந்துகொண்டு, இடுப்பை ஒய்யாரமாய் ஒரு பக்கம் சாய்த்துக் கொண்டு, ஒருபெண் திண்ணையின் துணைப் பிடித்துக் கொண்டு நின்றது தான். ஸினிமா வண்டி தினம் வாசலோடு போகும்போது தவறாமல் அவள் அங்கே வந்து நிற்பாள். ஒவ்வொரு சமயம் ஒருசின்னப் பையன் ஓடி வந்து நோட்டீஸை வாங்கிக்கொண்டு போய் அவளிடம் கொடுப்பான். சாதாரணமாக இந்த வாண்டுப் பயல்களுக்கெல்லாம் நோட்டீஸ் தர மாட்டார்கள். கொடுத்தாலும் அவர்கள் அதை வாங்கிப் பின்னால் மறைத்துக்கொண்டு, “ஐயா, ஐயா” என்று கத்திக் கொண்டே தெருக்கோடி வரையில் வண்டியைத் துரத்திக்கொண்டு ஓடுகிற வழக்கம். இந்த வீட்டுப் பையன் வந்தால் மட்டும், வீராசாமியே கீழே குனிந்து ஒன்றுக்கு இரண்டாக நோட்டீஸ்களை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு அந்தப் பெண் அதை வாங்கிக்கொண்டு உள்ளே போகும் வரையில் பார்த்துக்கொண்டிருப்பான். இன்று, அந்த வீடு தான் தன் ஒன்று விட்ட மாமன் வீடு என்று தெரிந்து கொண்டதும் அவன் நெஞ்சு அப்படி அடித்துக் கொண்டது.

அடுத்த நிமிஷம் ஊதலை வைத்துவிட்டு வண்டியிலிருந்து கீழே குதித்தான். “வரேன்; போயிண்டே இருங்க” என்று சொல்லிவிட்டு அந்த வீட்டை நோக்கிச் சென்றான். அவன் வருவதைக் கண்டதும் அந்தப் பெண் சட்டென்று உள்ளே போய்த் தன் தாயை வெளியே அனுப்பிவிட்டு, தான் ரேழியில் கதவருகில் ஒதுங்கி நின்றாள். வீராசாமி தான் யாரென்பதைத் தெரிவித்ததும் அந்த ஸ்திரீ ஆச்சரியத்துடன் மோவாய்க்கட்டையைப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் நின்றுவிட்டு, “அட! வீராசாமியா நீ? உன்னைக் குழந்தையிலே பார்த்தது! ஸினிமா வண்டியிலே தினம் ஊதல் ஊதிண்டு வாசலோடு போறயே! போயும் போயும் இந்த வேலை தானா உனக்குக் கிடைச்சுது? ஐயையே!” என்றாள்.

வீராசாமியின் மனசில் வெட்கமும் கோபமும் கலந்து போராடின. அவனோ தன் வாத்தியத் திறமையைப் பற்றி அபாரமாக நினைத்திருந்தான். வீட்டுக்கு வீடு எவ்வளவு பேர் தன் பாட்டைக் கேட்பதற்காக வெளியே வந்து நிற்கிறார்கள்? இதோ நிற்காளே – தன் மாமன் மகள் – அவள் கூடத் தினம் வந்து வெளியே நிற்பது எதற்காக? தன் ஊதலைக் கேட்கத்தானே? அந்தத் தொழிலைக் கேவலமாக யாராவது கருதக்கூடும் என்று அதுவரையில் அவன் நினைக்கவேயில்லை. ஆனால், இதோ கல்லுப் பிள்ளையார் – மாதிரி ஒருத்தி எதிரே நின்றுகொண்டு, “வேறு வேலை உனக்குக் கிடைக்க வில்லையா?” என்று கேட்கிறாளே? அட ஈசுவரா!

சிறிது நேரம் அவளுடன் பேசிக்கொண்டிருந்து விட்டு வீராசாமி எழுந்து போய்விட்டான். தன் மாமா பெரிய பணக்காரர் என்றும், ஜவுளிக் கடை வைத்து வியாபாரம் செய்கிறார் என்றும், அந்தப் பெண்ணும் பையனுமே அவருக்குக் குழந்தைகள் என்றும் சம்பாஷணையில் தெரிந்துகொண்டான்.

நான்கு நாட்களுக்குப் பிறகு ஒரு தினம் மாலை யில் அவர்கள் வீட்டுக்கு நாலு இலவச ஸினிமா டிக்கட்டுகள் எடுத்துக்கொண்டு அவன் போனபோது அவனுடைய மாமா திடுக்கிடச் செய்யும் விஷயம் ஒன்றைக் கூறினார்: “நம்ப வீட்டுக்கு வந்துடப்பா. எனக்கும் கடைக்கு நம்பிக்கையான ஆள் வேண்டியிருக்கு. தை பிறந்தால் கல்யாணியையும் உனக்குக் கட்டிக் கொடுத்துவிடறேன்” என்றார். வீராசாமி கல்யாணி பக்கம் பார்த்தான். அந்தப் பெண் விழிகளை நிமிர்த்தி ஒரு சுழற்றுச் சுழற்றிவிட்டுத் தலையைக் குனிந்து கொண்டாள். வீராசாமி மறு நாளே ஸினிமாக் கம்பெனியில் தன் சம்பளப் பாக்கியை வாங்கிக்கொண்டு மாமன் வீட்டுக்கு வந்துவிட்டான்.

ஸினிமாக் கம்பெனியும் வேறு ஊருக்குப் போய் விட்டது.

3

பத்து நாளில் வீராசாமிக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது போல் ஆகிவிட்டது. ஜம்மென்று வண்டியில் உட்கார்ந்துகொண்டு தமாஷாய் ஊதிக் கொண்டே தெருத் தெருவாய்ப் போகிறவனை ஒரு கடையிலே உட்கார்ந்துகிட என்றால் அவன் தேகம் அங்கே நிலைத்திருக்குமா? தேகம் இருந்தாலும் மனம் கேட்கிறதா? ஊதல் ஊதிக் கொண்டு வண்டியில் போவதுபோலவே அடிக்கடி அவனுக்குப் பிரமை உண்டாகும். வாயை உப்பலாக வைத்துக்கொண்டு கைகளினால் ஊதல் வாசிப்பது போல் அபிநயம் செய்வான். உடனே திடுக்கிட்டு யாராவது தன்னைக் கவனிக்கிறார்களோ என்று சுற்றிலும் பார்ப்பான். சில சமயம் அவன் பாட்டுக் களை வாயினால் சீட்டி அடித்துப் பாடும்போது மாமா பக்கத்தில் இருந்தால், அவர் முறைத்துப் பார்ப்பார். உடனே பாட்டை நிறுத்திவிடுவான். அப்படி அவர் முறைத்துப் பார்க்கும்போது கன்னத்தில் அறைய லாமா என்று ஒவ்வொரு சமயம் அவனுக்குக் கோபம் பொங்கிக்கொண்டு வரும். அப்போதெல்லாம் கல்யாணியின் உருவமும் கண்ணெதிரில் வந்து நிற்கு மாதலால் கோபத்தை அடக்கிக்கொண்டு பேசாமல் இருப்பான்; “தை பிறக்கட்டும்; கல்யாணியின் கழுத்திலே இரண்டு முடிச்சுப் போட்டு விட்டே னானால் அப்புறம் சொல்லுகிறேன்” என்று மன சுக்குள் சொல்லிக்கொள்வான்.

ஆனால் தை பிறப்பதற்குள் அந்த ஊருக்கு இன்னொரு ஸினிமாக் கம்பெனி வந்து சேர்ந்தது. ஒரு நாள் மத்தியான்னம் இப்படித்தான் வீராசாமி கடையில் உட்கார்ந்து தன் பூர்வாசிரம வாழ்க்கையைப் பற்றிய கனவில் ஆழ்ந்திருந்த போது திடீரென்று பாண்டு வாத்தியத்தின் சப்தம் அவனைக் கனவு லோகத்திலிருந்து தலை குப்புறத் தள்ளியது. மோப்பம் பிடித்துவிட்ட வேட்டை நாய் போல் வீராசாமி நிமிர்ந்து உட்கார்ந்து கவனித்தான். அவ்வளவுதான்; அவன் உடல் பதறிற்று. காதைக் கெட்டியாகப் பொத்திக்கொண்டான். இது என்ன கர்ண கடோர மான வாசிப்பு?

வீராசாமி கோபத்துடன் துள்ளிக் குதித்துக் கொண்டு வெளியே வந்து அந்த வண்டியிலிருந்த வாத்தியக்காரனைச் சுட்டு எரித்துவிடுவதுபோல் பார்த்தான்.

“ஏண்டா! ஊதத் தெரிஞ்சா ஊத வரணும்; இல்லாவிட்டால் கத்தியைத் தூக்கிக்கொண்டு க்ஷவரம் செய்யப் போகணும்.”

இவ்வளவுதான் அவன் சொன்னது. இதற்கு என்னவோ அந்த வாத்தியக்காரர்கள் பிரமாதமாகக் கோபித்துக்கொண்டு சண்டைக்கு வந்து விட்டார்கள். கடையில் இருந்தவர்கள் எல்லாரும் ஓடி வந்து சமாதானம் செய்ததன் பேரில் ஒரு வழி பாய்ச் சண்டை ஓய்ந்தது. கடைசியில் வீராசாமி எவனுடைய கச்சேரியைப்பற்றி விமரிசனம் செய்தானோ அவனுடனே ரொம்ப ஸ்நேகமாய்ப் போய் அவன் பக்கத்தில் வண்டியில் உட்கார்ந்துகொண்டு அவன் ஊதலை வாங்கித் தான் வாசிக்க ஆரம்பித்தான்.

அப்போது அவன் மாமா, சாப்பிட்டுவிட்டு வெற்றிலை மென்றுகொண்டே கடையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தவர், திடீரென்று அப்படியே திகைத்து நின்றார். அவருடைய எதிரில் தோன்றிய காட்சி அப்படி அவரை உணர்வு கலங்கச் செய்தது. ஸினிமா வண்டியில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்து தன்னை மறந்தவனாய் ஊதிக் கொண்டிருந்த வீராசாமியைப் பார்த்து “ஏ!” என்று ஏக வசனத்தில் கூப்பிட்டார். வீராசாமி ஊதலைக் கொடுத்து விட்டு இறங்கிவந்து, “என் வாசிப்பு எப்படி மாமா? அவன் ஒரு கத்துக்குட்டி; சங்கீதத்தைக் கொலை செய்கிறான், பாருங்கள்-” என்று பேசிக்கொண்டே போனான்.

மாமா அப்படியே இடத்தை விட்டு அசையாமல் நின்றவராய், “உனக்கு வெட்கமாய் இல்லையா?” என்று கேட்டார்.

வீராசாமி பதில் பேசவில்லை. நேரே வீட்டுக்குப் போய், “ஏ கல்யாணி!” என்று இரைந்து கூப்பிட்டான். எல்லாரும் திடுக்கிட்டுப் போனார்கள். இதுவரையில் அவன் இப்படிப் பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை. கல்யாணி அறைக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தாள்.

“என் ஊதல் எங்கே?”

“பீரோவில் இருக்கிறாப்போல் இருக்கிறது.”

“கொண்டா இப்படி.”

ஊதலைக் கொண்டுவந்து ஒன்றும் புரியாமல் கல்யாணி அவனிடம் நீட்டினாள்.

“இதோ பார்” என்றான்.

கல்யாணி குனிந்த தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“உனக்குத் தகுந்த புருஷன் நான் அல்ல. சாப்பிட்டுச் சாப்பிட்டுக் கடையில் போய் உட்கார்ந்து கொண்டு கொட்டாவி விடக்கூடிய மன்னனாய்ப் பார்த்து உன் அப்பா உன்னைக் கட்டிக்கொடுப்பார். நீ சந்தோஷமாய் இரு. நான் போகிறேன்” என்றான்.

மறுபடியும் அவள் தலை நிமிர்ந்து பார்த்தபோது கண்களில் நீர் ததும்புவது போலிருந்தது. துண்டை உதறிப் போட்டுக்கொண்டு கையில் ஊதலுடன் வீராசாமி வெளியே சென்றான்.


மேற்படி, கதையைச் சொல்லி முடித்துவிட்டு வீராசாமி மறுபடியும் வண்டியில் ஏறிக்கொண்டான். “ஈன ஜன்மம் எடுத்தேன் என் ஐயனே-” என்று வாசித்துக்கொண்டு போய்விட்டான்.

நான் சிந்தனையில் ஆழ்ந்தவனாய்ச் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தேன். “காதல் காதல் காதல் – காதல் போயிற் சாதல்” என்றல்லவா கவி பாடியிருக்கிறார்? இந்த வாத்தியக்காரனின் ஊதலுக்கு முன்னால் அந்தக் காதலின் சக்திகூடத் தோற்றுப் போய்விட்டதே? “இவன் ஊதலே ஊதல்!” என்று அதிசயித்தேன்.

– காளியின் கண்கள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *