காணாமல்போன கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 23, 2018
பார்வையிட்டோர்: 4,667 
 

மிக மிகச் சின்ன வயதிலேயே வீட்டிலிருந்து காணாமல் போகிற ஆர்வம் என்னுள் ஒரு யதார்த்தமான உந்துதலாகவே வளர்ந்து விட்டிருந்தது.

என்னுடைய பதினைந்து வயதுவரை ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு விதமாக எங்கள் வீட்டிலிருந்து நான் காணாமல் போய்க்கொண்டே இருந்தேன்.

கடைசியாக நான் காணாமல் போனது என் பதினைந்தாவது வயதில். காணாமல் போயிருந்த காலம் சுமார் ஆறு வருடங்கள். அதுதான் மிகவும் நீண்ட காலம் நான் காணாமல் போயிருந்தது. அதற்கு முன்பு சில நாட்கள் அல்லது சில வாரங்கள்தான் நான் காணாமல் போயிருந்தேன்.

ஆரம்பத்தில் மிகச் சில மணி நேரங்களே நான் காணாமல் போயிருந்தேன். ஆனால் எங்கள் வீட்டாருக்கு அந்தச் சில மணி நேரங்களே போதும். உடனே போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு என்னைத் தேட ஆரம்பித்து விடுவார்கள்.

என்னுடைய நான்காவது வயதில்தான் நான் முதல் தடவையாக காணாமல் போனேன். அன்று எங்கள் வீட்டு வாசலில் என் வலது கை பெருவிரலை வாயில் வைத்து சூப்பிக்கொண்டு தனியாக நின்று கொண்டிருந்தேன்.

அப்போது தெருவின் மேற்கு திசையிலிருந்து ஒருவன் மகுடி வாசித்தவாறு வந்தான். தாடி வளர்த்திருந்த அவனது இடது பக்கத் தோளில் கனத்த கம்பளி மடிந்து கிடந்தது. தலையில் வட்ட வட்டமாக மூன்று மூங்கில் கூடைகள் வைத்திருந்தான். அவன் ஒரு பாம்புப் பிடாரன். அவனை மாதிரி பாம்புப் பிடாரன்கள் மகுடி ஊதி, கூடைக்குள் இருக்கும் பாம்புகளை வேடிக்கை காட்டி சாதமோ, காசுகளோ கேட்பதை நான் சிலமுறை பார்த்திருக்கிறேன். ஆகையால் இந்தப் பாம்புப் பிடாரனைப் பார்த்ததும் நான் தயாரானேன். இவனும் பாம்புகளைக் காட்டுவானே! பப்பாளிப்பழ விதை போலிருக்கும் பாம்பின் அழகான கண்களைப் பார்க்கலாமே…

சூப்பிக் கொண்டிருந்த விரலைக்கூட சட்டென வாயிலிருந்து எடுத்துவிட்டு, பாம்பு பார்ப்பதற்கு ஆசைப்பட்டேன். ஆனால் பாம்புப் பிடாரன் எந்த வீட்டு வாசலின் முன்னும் நிற்காமல் வெறுமே மகுடியை மட்டும் ஊதிக்கொண்டே தெருவில் நடந்தான். அவன் வாசித்த மகுடியே ஒரு பாம்பின் சாயலில்தான் இருந்தது.

பாம்புப் பிடாரன் போவதையே பார்த்துக் கொண்டிருந்த நான், சட்டென்று தெருவில் இறங்கி அவன் பின்னால் நடந்தேன். பாம்புகளை எங்கள் தெருவில் காட்டாமல் போனாலும், வேறொரு தெருவில் காட்டினாலும் காட்டுவானே என்ற நினைப்பில் அவன் பின்னால் நான் போய்க்கொண்டே இருந்தேன்.

ஆனால் அவன் அடுத்தடுத்து நிறைய தெருக்கள் தாண்டி விட்டானே தவிர, ஒரு பாம்பைக் கூட எடுத்துக் காட்டவில்லை. எத்தனை தெருக்கள்தான் நானும் அவன் பின்னாலேயே போய்க் கொண்டிருப்பேன்? திடீரென அவன் மகுடி வாசிப்பதையும் நிறுத்திவிட்டு மெளனமாக நடந்து செல்ல ஆரம்பித்ததும் எனக்கு பாம்பைப் பார்க்கிற நம்பிக்கை போய்விட்டது. அதுவும் இல்லாமல் நான் போய்க்கொண்டிருந்த தெருவில் பையன்கள் கும்பல் கும்பலாக நின்று பம்பரம் ஆடிக் கொண்டிருந்தார்கள். உடனே நானும் பாம்புப் பிடாரனை மறந்து அந்தத் தெருவிலேயே நின்றுவிட்டேன். அதுவும் இல்லாமல் அந்தத் தெருவில் ஏராளமாக கோழிகளும் சேவல்களும் வேறு மேய்ந்து கொண்டிருந்தன. அதனால் தெரு பூராவும் கோழி எச்சமாகக் கிடந்தது. எனக்குக் கோழிகளை மேய்க்கவும் இஷ்டம்; சாப்பிடவும் இஷ்டம். ஆசையுடன் அத்தனைக் கோழிகளையும் பார்த்தவாறு நின்று விட்டேன்.

சில பையன்கள் அவர்களுக்குள் தாழ்ந்த குரலில் எதோ பேசிக் கொண்டார்கள். பிறகு என்னிடம் வேகமாக வந்தார்கள்.

“ஏய்.. யார்ரா நீ?”

நான் பேசாமல் அமைதியாக அவர்களைப் பார்த்தேன்.

“எந்தத் தெரு நீ?”

எங்கள் ஊரில் ஒருவன் எந்தத் தெருவில் வசிக்கிறான் என்பது மிகவும் முக்கியமான விஷயம். நான் உள் தெருக்காரன் என்றால் ஒரு பையனும் பயப்பட மாட்டான். இதுவே நான் பட்டுத் தெருக்காரனாக இருந்தால், பத்தாம் வகுப்பு படிப்பவன் கூட என்னிடம் அப்படியொரு பயம் பயப்படுவான். “ஏய், அவன்கிட்ட வச்சுக்காதே” என்பான். தெருவுக்குத் தெரு அப்படியொரு வித்தியாசம்… மகிமை…!

இந்த மகிமை எதுவும் அப்போது எனக்குத் தெரியாத விஷயம். ஆகையால் நான் அந்தப் பையன்களின் கேள்வி எதற்கும் பதில் சொல்லாமல் விரலைச் சூப்பியபடி அந்தத் தெருவில் திரிந்த கோழிகளின் பின்னால் ரயில் மாதிரி கூவியபடி ஓடிக் கொண்டிருந்தேன். கோழிகளை விரட்டுவது என்றால் அப்படியொரு இஷ்டம். அதைவிட இஷ்டம் கோழிகள் முட்டையிடுவதை ரகசியமாகப் பார்ப்பது. கோழி பாவம், முட்டையிடும் போது மூஞ்சி எல்லாம் அதற்கு ரத்தம் போல சிவந்து போகும். கோழி முகம் சிவக்க முட்டையிட்டதும், தான் இட்ட முட்டையை இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வெறித்த மாதிரி ஒரு பார்வை பார்க்குமே – ராஜ பார்வை அது! இது எங்கேடா இருந்து வந்தது என்ற ஆச்சர்யத்துடன் பார்க்குமோ என்னமோ…!

என் வீட்டாரைப் பொறுத்த வரையில் நான் காணாமல் போய்விட்டேன். வாசலில் நின்ற பிள்ளையைக் காணோம்… என் தாத்தாவிற்கு அவருடையை பேரன் காணமல் போவது என்பது கெளரவக் குறைவான விஷயம். ஜமீன்தாரின் பேரன் எப்படிக் காணாமல் போகலாம்?

தாத்தாவின் பணியாட்கள் அனைவரும், காணமல் போய்விட்ட என்னைத் தேடி அனுப்பப்பட்டார்கள். தாத்தாவின் ஆயில் மில்லில் வேலை பார்க்கும் கேசவன் கோழித் தெருவில் என்னைக் கண்டுபிடித்து அலாக்காகத் தூக்கி வீட்டிற்கு கொண்டுவந்தான்.

என்னைப் பார்த்ததும் அம்மா ஓடிவந்து என் இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி முத்தம் தந்தாள். பாட்டி விரல்களை நெறித்து நெறித்து திருஷ்டி கழித்தாள். நான் களைப்புடன் விரலைச் சூப்பியபடி அம்மாவின் தோளில் சாய்ந்து கொண்டேன். என்னைக் கண்டு பிடித்ததற்காக அந்த கேசவனுக்கு மட்டும் ஒரு பெரிய தம்ளர் நிறைய குடிப்பதற்கு மோர் கொடுத்தார்கள்…

இதுதான் நான் முதல் தடவையாக காணாமல் போன சம்பவம்.

இதில் உள்ள வேடிக்கையான விஷயமே என்னவென்றால், கேசவன் என்னை வீடு கொண்டு வந்து சேர்த்த பின்புதான் – எனக்கே தெரிந்தது அத்தனை நேரம் நான் காணாமல் போயிருந்தேன் என்று!

இந்த அனுபவத்தில் எனக்கு இன்னொரு விஷயமும் புரிந்தது. காணாமல் போய்விட்டு வீடு வந்து சேர்ந்தால், சரியான ராஜ மரியாதை கிடைக்கும் என்பதுதான் அந்தப் புரிதல்.

அது மட்டும் இல்லை; வீட்டுக்கு வருகிறவர்கள் போகிறவர்களிடமெல்லாம் நான் காணமல் போன கதையை தாத்தாவில் இருந்து ஒருவர் பாக்கியில்லாமல் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார்கள் மாய்ந்து. உண்மையில் நான்தானே அந்தப் பாம்புப் பிடாரன் பின்னால் போனேன்…? இந்த உண்மையை என் தாத்தா அப்படியே ஒரு திருகு திருகிவிட்டார். பாம்புப் பிடாரன் மகுடி வாசித்து மயக்கி என்னை அப்படியே தூக்கிக்கொண்டு போய்விட்டானாம்…! அவன் பிள்ளை பிடிக்கிற ஆளாம். இதில் என் பாட்டி வாய் கூசாமல் சொன்ன பொய் ‘கோழித் தெருவுக்கு கேசவனை கரெக்டாக அனுப்பியதே தான்தான்’ என்று மனசாட்சியே இல்லாமல் எல்லாரிடமும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தாள்.

“உனக்கு எப்படி அவ்வளவு கரெக்டா தெரியும், நம்ம பயல் அந்தக் கோழித் தெருவில் நிப்பான்னு?” தாத்தா கேட்டார்.

“ஆமா, பெரிய கம்ப சூத்திரமாக்கும், தெரியாம போறதுக்கு? அறுத்த இடத்ல அரிவாள் இருக்கும், குளிச்ச இடத்ல கோவணம் கிடக்கும். அதுமாதிரி கோழி இருக்கிற இடத்ல நம்ம பேரனும் நிப்பான்…!”

தாத்தா, “பலே பலே” என்றார்.

இதுதான் காணாமல்போன என் முதல் அனுபவம்!

இந்தச் சம்பவத்தை என்னுடைய வீட்டார்கள் வருகிறவர்கள் போகிறவர்களிடமெல்லாம் கதை போல திரும்பத் திரும்ப சொன்னதைக் கேட்கக் கேட்கத்தான் எனக்கும் நான் காணாமல் போன விஷயம் மிகவும் சுவாரஸ்யமானதாகத் தெரிந்தது. அதனால் நான் காணாமல் போன கதையை சொல்லச் சொல்லி தினமும் ஒரு தடவையாவது என் அம்மாவை நச்சரித்தேன். அம்மா கதையாகச் சொன்னதை தினமும் கேட்டு கேட்டு, எனக்கு மறுபடியும் எப்போதுடா காணாமல் போவோம் என்ற ஆசையும் ஏக்கமும் வந்து விட்டன…!

இந்த ஆசையும் ஏக்கமும் உள்ளுக்குள் பொங்கப் பொங்க, விரைவில் நான் மறுபடியும் காணமல்போக வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்து காணமல் போவதற்கு தயாராகியும் விட்டேன்.

தினமும் அந்த பாம்புப் பிடாரனுக்காக காத்திருக்கலானேன். ஆனால் அவன் வரவே இல்லை. அதனால் நான் காணாமல் போகவும் இல்லை. எனக்கு சலித்துப் போய்விட்டது. ஒரு பையனால் காணாமல் போகக்கூட முடியவில்லை…சே!

அப்புறம்தான் ஒரு உண்மை புரிந்தது! பிடாரன் வராவிட்டால் என்ன? நானாக ஓடிப்போய் ஏதாவது ஒரு தெருவில் கோழிகளோடு கோழிகளாக நின்று கொண்டால் போதுமே… நான் எங்கள் வீட்டாருக்கு காணாமல் போய்விடலாமே!?

இந்த உண்மை தெரிந்ததோ இல்லையோ, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை நான் காணாமல் போக ஆரம்பித்துவிட்டேன்.

கொஞ்சமும் மிகைப் படுத்தாமல் சொல்கிறேன் – குழந்தைப் பருவத்தில் அதிக முறை காணாமல்போன பையன் என்ற சாதனையை கின்னஸ் பதிவு செய்வதாக இருந்தால் என் சாதனையை மிஞ்சுவதற்கு இனிமேல்தான் ஒருத்தன் பிறந்து வரவேண்டும். அப்படியொரு சாதனை நான் செய்திருப்பது. சில வேளைகளில் ஒரே நாளில் இரண்டு முறைகூட காணமல் போயிருக்கிறேன். அத்தனை எளிதாக இருந்தது எனக்கு காணாமல் போவது…! விடுவிடுவென்று எழெட்டு தெருக்கள் தாண்டி ஓடிப்போய் கோழி சேவல்கள் கண்ணில் படுகிற இடமாகப் பார்த்து உட்கார்ந்து கொள்வேன். என்னைத் தேடி வருபவர்களும் கோழிகள் நிறைய இருக்கின்ற இடமாகப் பார்த்துத்தான் வருவார்கள்! கேசவன் ஒருநாள் சொன்னான், “கண்ணா, நீ போன ஜென்மத்தில் கோழியாத்தான் பிறந்திருப்பே…!”

என் எல்லா வயதிலும் காணாமல் போய்க் கொண்டிருந்தேன். விருப்பப்பட்ட போதெல்லாம் காணாமல் போய்க் கொண்டிருந்தேன். உள்ளூரிலேயே காணாமல் போய்க் கொண்டிருந்தவன், ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் வெளியூர்களுக்கும் போய் காணாமல் போய்க் கொண்டிருந்தேன். பல சமயங்களில் தாத்தாவின் ஆட்கள் என்னைக் கண்டுபிடித்து வீடு கொண்டுவந்து சேர்ப்பார்கள். சில சமயங்களில் நானாகவே வீடு திரும்புவேன்.

என்னைப் பொறுத்தவரையில் இப்படிக் காணாமல் போவதில் ஒருநாள் கூட சலிப்பு வந்ததே கிடையாது. ஆனால் எங்கள் வீட்டாருக்கு சலிப்பு மட்டுமில்லை, கோபமே வந்துவிட்டது. இனிமேல் காணாமல் போவியா போவியாவென்று கேட்டு முதுகில் நாலு மொத்து மொத்தினார்கள். பின் மாறி மாறி கன்னம் பழுத்துப் போவது மாதிரி அறைந்தார்கள். அதன் பின்னும் நான் காணாமல் போய்க் கொண்டிருந்ததைப் பார்த்ததும் கால் இரண்டிலும் கனத்த சங்கிலியால் பிணைக்கப்பட்ட பெரிய கட்டையை மாட்டி பூட்டிச் சாவியை எடுத்துக்கொண்டு விட்டார்கள்.

அதன்பிறகு நானெங்கே காணாமல் போவது? பேசாமல் காணாமல் போவதையே நிறுத்திக் கொண்டேன். ஆனால் என்னுடைய மனசுக்குள் மட்டும் தேங்காயின் உள்ளிருக்கும் நீர் போல காணாமல் போகிற ஆசை அப்படியே குலுங்கிக் கொண்டிருந்தது. ஆசையை அடக்கிக்கொண்டு நல்ல பிள்ளையாக வீட்டுக்குள்ளேயே அடங்கி இருந்தேன். அதனால் நாளடைவில் என் கால்கட்டு தளர்த்தப் பட்டது.

அப்போது எனக்கு பதினைந்து வயது. ஒருநாள் திடீரென ஒரு ஞானோதயம் வந்தது. காணாமல் போக வேண்டுமென்றால் ஒருத்தன் வீட்டைவிட்டு வெளியே ஓடித்தானா காணாமல் போக முடியும்? கிடையாதே…

எனவே ஒருநாள் நான் எங்கள் வீட்டிலேயே யாருக்கும் தெரியாமல் காணாமல் போய்விட்டேன். எங்கள் வீட்டு மாடியில் தெற்கு மேற்காக ஒரு நீளமான பரண் உண்டு. எப்போதும் இருட்டாக இருக்கும். அதை யாரும் எட்டிக்கூடப் பார்க்க மாட்டார்கள். நான் எட்டிப் பார்த்தேன். பேசாமல் அந்தப் பரணில் ஏறி ஒளிந்து கொண்டால் என்னவென்று தோன்றியது. அழகாகவும் அலைச்சல் இல்லாமலும் காணாமல் போய்விடலாமே…!

வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு, யாரும் இல்லாத நேரம் பார்த்து சப்தம் போடாமல் மெதுவாக படிகளில் ஏறி பரணில் போய் ஒளிந்து கொண்டேன். பரணின் ஒரு மூலையில் மடிக்கப்பட்டு கிடந்த பெரிய ஜமுக்காளத்தில் போய் நிம்மதியாகப் படுத்தேன். இன்னும் சிறிது நேரத்தில் வீடே அதிரும். கேசவன் கோழிகள் நிற்கிற இடமாகப் பார்த்து தேடுவான். நினைக்க நினைக்க எனக்கு குஷியாக இருந்தது. இந்தத் தடவை புதிய ஸ்டைலில் காணாமல் போயிருக்கிறேனே…

படுத்திருந்தவன், எதிர்பாராமல் அப்படியே தூங்கிப் போய்விட்டேன். தூக்கம் கலைந்தபோது அதிக நேரமாகிவிட்டாற் போலிருந்தது. ஒரு நிமிஷம் மெளனமாகப் படுத்திருந்தேன். கீழே எந்தச் சப்தமும் இல்லை. நான் அவர்களுக்கெல்லாம் காணாமல் போனேனா என்றே தெரியவில்லை! வயிறுவேறு பயங்கரமாகப் பசித்தது. மெதுவாகப் புரண்டு படுத்தேன்.

அப்போது பரணுக்கு கீழே ஏதோ பேச்சுச் சப்தம் கேட்டாற் போலிருந்தது. ஆனால் குரல்கள் தெளிவாகக் கேட்கவில்லை. பரணிலிருந்தபடியே மூச்சைப் பிடித்துக்கொண்டு கீழே உற்றுப் பார்த்தேன்.

அங்கே நான் பார்த்த காட்சி மிகவும் விநோதமாக இருந்தது. பாலுறவின் விகற்ப விகாரத் தன்மைகள் பற்றியெல்லாம் அறிந்திராத வயசு அது. அதனால் அன்று சற்றும் எதிர்பாராமல் தாத்தாவை திடீரென பொட்டுத் துணியில்லாமல் முழு நிர்வாணமாக ஒருத்தருடன் நான் பார்த்த காட்சி எனக்கு அருவருப்பாகவோ அதிர்ச்சியாகவோ இல்லாமல் விசித்திரமாகவே இருந்தது. ஆகையால் அந்தக் காட்சியை வைத்த கண்ணை எடுக்காமல் நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அப்போது சற்றே நிமிர்ந்த தாத்தாவும் என்னைப் பார்த்து விட்டார்.

அவ்வளவுதான், நான் பார்த்ததை பார்த்துவிட்ட தாத்தாவின் கண்கள் சிவந்து விட்டன.

கோபத்தில், “இறங்குடா கீழே” என்று கர்ஜித்தார்.

பயந்துகொண்டே மெதுவாகக் கீழே இறங்கி வந்தேன். எதிர்பார்க்கவே இல்லை. தாத்தா பளீரென்று என் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். அதிர்ந்து போய் அவரையே பார்த்தேன். தாத்தாவும் என்னையே முறைத்துப் பார்த்தார். பின், மிகவும் கண்டிப்பான அதேசமயம் கிசுகிசுப்பான குரலில் “இப்ப நீ பார்த்ததை யார் கிட்டேயாவது சொன்னே, உன்னை தொலைச்சிடுவேன் தொலைச்சி… தெரியுதா?” என்று என்னை மிரட்டலுடன் எச்சரிப்பது போலச் சொன்னார்.

சரியென்று தலையை ஆட்டினேன்.

“ஓடு” என்று என்னை அங்கிருந்து விரட்டினார்.

அன்று ஓடிய ஓட்டம் ஒரேயடியாக ஆறு வருடங்களுக்கு என்னை வீட்டை விட்டு ஓட வைத்து விட்டது. ஒரு ஹோட்டலில் எடுபிடியாகச் சேர்ந்து வயிற்றைக் கழுவினேன். இடையிடையே பத்திரிகைகளில் நான் எங்கிருந்தாலும் உடனே வீடு திரும்பும்படி அடிக்கடி என் பெற்றோர்கள் விளம்பரம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நான் வீடு திரும்பவில்லை. எந்தத் தைரியத்தில் திரும்புவேன்? தாத்தாவின் அச்சுறுத்தல் என் மனத்தில் அப்படியே ஆணியாக அறையப் பட்டிருந்ததே…

அப்போதுதான் செய்தித் தாள்களில் என் தாத்தா இறந்துவிட்டார் என்ற விளம்பரம் பெரிய பெரிய அளவுகளில் வெளியாகி இருந்தது. அதைப் பார்த்த எனக்கு ‘அப்பாடா’வென்று இருந்தது. ஆனந்தத்தில் கண்ணீரே வந்துவிட்டது.

இனியும் என்னை அச்சுறுத்த வீட்டில் தாத்தா இல்லை என்ற உற்சாகத்தில் மறுநாளே எங்கள் ஊரையும் வீட்டையும் நோக்கி ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டேன். அதற்கு அப்புறம், இன்றுவரை வீட்டை விட்டு ஓடிப்போக வேண்டும் என்ற நினைப்பு என் கனவில்கூட வந்தது கிடையாது.

ஏன் நான் அப்படி தொடர்ந்து ஆறு வருஷங்களுக்கு வீடு திரும்பாமல் காணாமல் போனேன்; ஏன் தாத்தா இறந்துவிட்டார் என்பது தெரிந்ததும் உடனே வீடு திரும்பி விட்டேன் என்ற கேள்விகளை மட்டும் சமயம் வாய்க்கும் போதெல்லாம் என்னுடைய பெற்றோர்கள் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். இன்றுவரை நானும் அவர்களுக்கு காரணத்தைச் சொல்லாமல் உண்மையை எனக்குள்ளேயே மறைத்தே வைத்திருக்கிறேன்.

காரணம், இன்று எனக்கு மனித மனங்களில் பதுங்கிக் கிடக்கும் பாலுறவு சம்பந்தமான சில வக்கிரங்களும் விகாரங்களும் பொருள் தெரிய நெகிழ்ந்து கிடக்கின்றன. ஆகையால், அப்படி ஆறு வருஷங்கள் வீட்டை விட்டு ஓடிப்போகக் காரணமாக இருந்த தாத்தாவின் அச்சுறுத்தலையும், அவரின் அச்சுறுத்தலுக்குக் காரணமான நான் கண்ட பாலுறவுக் காட்சியையும் எவரிடமும் நான் சொல்லவே இல்லை.

அந்தப் பாலுறவுக் காட்சியில் தாத்தாவுடன் இருந்தது பெண் இல்லை….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *