முதலிரவின் எதிர்பார்ப்பும், மகிழ்ச்சியும் புவனா-ராம் இருவரிடமும் இருந்தாலும், ராம் ஓர் உண்மையை புவனாவிடம் கூறிவிடவே நினைத்தான்.
சொன்னால் புவனா தம் பெற்றோர்களைப் பற்றி எப்படி எடைபோடுவாளே..என்றும் நினைத்துத் கொண்டான்.
ஆனால் புவனாவே முந்திக் கொண்டாள் “காலை முகூர்த்தம் ஆனவுடன் முதியோர் இல்லத்துக்கு போய் உங்கள் பாட்டியைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்க, பாட்டி நமக்கு கல்கண்டு கொடுத்துவிட்டு அப்பா-அம்மாவிடம் ஏதோ சொன்னாங்களே… என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா..?
அதை நானே சொல்றதா இருந்தேன் புவனா. அறுபது வருஷத்துக்கு முன்னால பாட்டி கல்யாணத்தப்பா தாத்தா நம்ம குடும்பத்துப் பரம்பரை நகைகள்னு நாற்பது பவுன் காசு மாலையை பாட்டி கழுத்தில போட்டராம்.
அதை பாட்டி என் எப்பா கல்யாணத்தில் என் அம்மாவுக்குப் போடச் சொல்லி கொடுத்தராம்.
இப்ப பேரன் கல்யாணத்தில் பேரன் பொண்டாட்டி அந்தக் காசு மாலையுடன் ஆசீர்வாதம் வாங்க வரவில்லையே என்று குறைப்பட்டுக் கேட்டராம்… என்று ராம் கூறினான்.
அது எப்படிங்க… பாட்டி காலத்தில் பவுன் ஐம்பது ரூபாய்..அப்பா-அம்மா கல்யாணத்தில் பவுன் நூற்றி அறுபது இருக்கும் இப்ப பவுன் இருபாதயிரத்தைத் தாண்டிருச்சு!
இதுவே குடும்பத்தில் இரண்டு மூன்று பிள்ளைகள் இருந்தால் குடும்ப நகையைப் பிரித்துதானே கொடுக்கும்படி இருக்கம்? அந்தக் காசு மாலையை விற்று பணத்தை வங்கியில் போட்டு வரும் வட்டிப் பணத்தில் பாட்டியை வீட்டுக்கு கூட்டி வந்து ஒரு ஆளை போட்டு பாட்டியைப் பார்த்துக் கொள்ளலாம் புவனா கூறவும், காசுமாலையைவிட புவனாவே உயர்ந்து போனாள்.
– ஜி.நீலா (செப்டம்பர் 2011)