ராமசாமிகள் கவனிக்கவும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 15, 2018
பார்வையிட்டோர்: 5,308 
 

ராமசாமியைத் தெரியுமா உங்களுக்கு?

தெரியும். நீங்கள் கேட்பது எந்த ராமசாமி என்று திருப்பிக் கேட்பீர்கள். சினிமாவில் நடிப்பிசைப் புலவர் எனப் புகழப்பட்டு, ‘உள்ளம் தேடாதே என்று சொல்லுதே’ பாடல் பாடி ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாரே கே.ஆர். ராமசாமி. அவரா என்றால் இல்லை.

திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்துத் தமிழர்களிடையே மூடநம்பிக்கைகள் களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடினாரே வைக்கம் வீரர், தந்தை பெரியார் ஈ.வே.ராமசாமி. அவரா என்றால் அவரும் இல்லை.

பிறகு எந்த ராமசாமி? சிவாஜி காலத்து நடிகராகத் தமிழ்ப்படங்களில் நகைச்சுவை பாத்திரங்களில் சிரிக்க வைத்தாரே வி.கே.ராமசாமி என்கிறீர்களா? ஹூகும் அவரும் இல்லை. மலேசியத் திராவிடர் கழக கே.ஆர்.ராமசாமி? தமிழ்நாட்டின் டிராபிக் ராமசாமி? பினாங்கு மாநிலத் துணைமுதல்வர் பேராசிரியர் ராமசாமி?

யாருமே இல்லை என்றால் பிறகு எந்த ராமசாமி? சொல்லித் தொலையுமய்யா எனப் பொறுமை இழந்து கேட்கிறீர்கள். இவரும் உங்களுக்குத் தெரிந்த ராமசாமிதான். ஆளைப் பார்த்தால் நீங்களே ஒப்புக்கொள்வீர்கள். உங்களுக்கு மட்டும் அல்ல. நம் எல்லாருக்குமே தெரிந்தவர்தான்.

புடுராயா பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் புறப்பட்டுத் தெற்கு நோக்கி முக்கால் மணிநேரம் பயணித்தால் காஜாங் பட்டணத்தை அடைந்துவிடலாம். அங்குக் காவல் நிலையத்திற்கு எதிரே ஜாலான் பெசாரில் உள்ள சிறிய பேருந்து நிலையத்தில் இறங்கி இடப்புறமாக உள்ள கடைவரிசையில் ஐந்து நிமிடம் நடந்தால் ஜாலான் துன் அப்துல் அஜிஸ் வந்து விடுவீர்கள்.

காஜாங்கில் எப்பொழுதும் வாகன நெரிசல். சாலையில் கவனமாக இருக்கவேண்டும். அங்குக் கேஃப்சி உணவகத்தைப் பார்ப்பீர்கள். அதற்குப் பக்கத்துக் கடைவரிசையில் தொடர்ந்து நடந்தால் வாடகை வண்டி நிலையத்தை அடுத்துள்ள கடைவரிசையில் நான்கு நம்பர் எழுதும் கடையின் ஐந்தடி ஓரமாக கீழே பழைய நாளிதழைப் பரப்பி அதில் அமர்ந்துகொண்டு கொளுத்தும் வெயிலில் வியர்வையைத் துடைத்தவாறு, நம்மை நோக்கி “தம்பி, பசிக்குது” என்று அழுக்கான கையை நீட்டுகிறாரே! இவர்தான் நான் சொன்ன ராமசாமி.

ஆளைப் பாருங்கள். குளித்து எத்தனை நாள்கள் ஆனதோ? எண்ணெய் காணாத தலைமுடியும் சவரம் காணாத முகமும் தாடியும் சகிக்கவில்லை. யார் பார்த்தாலும் அருவருக்கத் தோன்றும். அழுக்கு அப்பியிருக்கும் கைச்சட்டையும் காற்சட்டையும் காணச் சகியாத காட்சிதான். ஒப்புக்கொள்கிறேன். மதுபான வாடை வேறு காற்றில் கலக்கிறது. நீங்கள் மூக்கைப் பிடித்துக்கொண்டு என்னைப் பார்க்கிறீர்கள்.

அவருக்குப் பக்கத்தில் நீங்கள் பார்ப்பது அவரின் ஒரே உடைமையான நெகிழிப்பை. அதற்குள்தான் அவரின் சில அழுக்குத்துணிகள், பத்திரங்கள், மங்கு குவளை, சில புகைப்படங்கள் என எதையோ திணித்து வைத்திருக்கிறார். பகல் நேரத்தில் அதை முதுக்குப் பின்னால் வைத்துச் சாய்ந்துகொள்வார். இரவில் அதுவே தலையணையாகிவிடும்.

அடப்பாவி, இவரைக் காட்டவா கோலாலம்பூரிலிருந்து என்னை இழுத்து வந்தாய் என்கிறீர்களா? அவசரப்படாதீர்கள். ராமசாமியைச் சுற்றி நிறைய கதைகள் இருக்கின்றன. சுவாரசியமான கதைகள். கேட்க உங்களுக்கு ஆர்வம்தானே?

எனக்கும் உங்களைப்போல்தான். குடிகாரர்களைக் கண்டால் எனக்கு அறவே பிடிக்காது. எந்நேரமும் தண்ணீரில் நீந்திக்கொண்டு ஐந்தடியில் வாசம் புரியும் அவர்கள் சமுதாயத்தின் சாபக்கேடுகள். உயிரோடு இருப்பதைவிட தெருநாய்களை அள்ளிக்கொண்டு போகும் வண்டியில் இவர்களையும் அள்ளிப்போட்டு அப்புறப்படுத்த வேண்டும் என எண்ணம் கொண்டவன்.

ஒரு நாள் குப்புசாமி ஒட்டுக்கடையில் நாளிதழ் வாங்கித் திரும்பினால் இவர்.

பஞ்சடைந்த சிவந்த கண்கள். அருவருக்கும் தோற்றம். அழுக்கு உடைகள். “தம்பி , சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சு. ரொம்ப பசிக்குது. ஒரு மூனு வெள்ளி இருக்குமா?’ குடிப்பவர்கள் வழக்கமாய்ச் சொல்லும் பொய். எத்தனை குடிகாரப் குப்பன்களைப் பார்த்துவிட்டேன். என்னிடம் பலிக்குமா?

“பசிதானே, வாங்க சாப்பாட்டு கடைக்குப் போகலாம்” அவர் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு வேறு வழியும் இல்லை.

பக்கத்தில் ஜாலான் பெசார் சாலையில் இருக்கும் கறி ஹவுஸ் உணவகத்தில் எனக்கு முன்னே அமர்ந்துகொண்டார். ஒரு மாதிரியாய் விழித்தார்.

“தம்பி, எனக்கு சாப்பாடு வேணாம்”

“நீங்கதானே பசிக்குதுன்னு சொன்னீங்க. இப்ப வேணாம்னு சொன்னா.. உங்களுக்கு தண்ணி சாப்பிட பணம் வேணும் அதான்னே” கோபத்தோடு சொற்களை விட்டெறிந்தேன்.

“இல்ல தம்பி, தண்ணி சாப்பிட்டு சாப்பிட்டு வயித்துல கோளாறு. முன்ன மாதிரி சோறு இறங்க மாட்டுது. அதான் உங்ககிட்ட பொய் சொன்னேன்”

“அதுக்காக சாப்பிடாம வெறும் தண்ணியை குடிச்சா வயிறு இன்னும் வீணாப் போகுமே. பரவாயில்லயா? கொஞ்சம் முயற்சி பண்ணி சாப்பிடுங்க. நீங்க தண்ணி குடிக்க நான் காசு தர முடியாது”

அன்று வெள்ளிக்கிழமை. வாழையிலை சாப்பாடு. சிரமப்பட்டுச் சாப்பிட்டார். விசாரித்தேன். இப்பொழுது புத்ரா ஜெயாவாக மாறிவிட்ட பெராங் பெசார் தோட்டத்தில்தான் பிறந்து வளர்ந்திருக்கிறார். பள்ளிப் படிப்பு ஏறாமல் இராணுவத்தில் சேர்ந்து பேராக் மாநிலத்தில் உள்ள தம்பூன் இராணுவ முகாமில் பத்து ஆண்டுகள் சேவை. அப்போதுதான் மதுப்பழக்கம் ஏற்பட்டுள்ளது. மலிவாகக் கிடைக்கும் மது. அதில் வாய் வைக்கப்போய் கொஞ்சம் கொஞ்சமாக இழுத்துக்கொண்டு அதில் மூழ்கடித்தது. அதில் தீவிரம் காட்டியதால் அந்த வேலையும் போனது.

“வேற ஏதாவது செய்திருக்கலாமே?”

“இங்க கொன்வெண்ட் பள்ளியில மூனு வருசம் காட் வேல செஞ்சேன். அதுவும் நெலக்கில”

“தண்ணிய விட முடியாதா?”

“முடியாது தம்பி. எவ்வளவோ முயற்சி பண்ணிட்டேன். ஒரு முற அதுல விழுந்தா அவ்வளவுதான். எந்திருக்க முடியாது. நான் பட்டுட்டேன்” கைகளைத் துடைத்துக் கொண்டார்.

“ஆமா, உங்க குடும்பம்? எங்க இருக்காங்க?”

“ஆங் இருக்காங்க. எங்கன்னுதான் தெரியல. முன்னே பண்டார் தெக்னோலொஜி பக்கம் இருந்தாங்க. அங்கிருந்து மாறி போய்ட்டதா கேள்விப்பட்டேன். இப்ப தெரியில” கடைக்கு வெளியே பார்த்துக்கொண்டு பேசினார். பேச்சில் வெறுப்பு எட்டிப் பார்த்தது. அதைப்பற்றிப் பேச விரும்பாதவராக வேகமாகக் கிளம்பிப் போய் இந்து கேஷ் அன்ட் கேரி கடை வரிசைக்குப் பின்னால் மறைந்தார்.

ஒரு முறை, காப்புறுதி பாலிசி விசயமாக வீட்டுக்கு வந்த கோமகன்தான் மீதிக் கதையைச் சொன்னார்.

“பேங் கடை வரிசையில படுத்துக் கிடப்பானே, அந்த ராமசாமிதானே. அந்த கதை உங்களுக்குத் தெரியாதா? அவனுக்கு மனைவியும் ரெண்டு பொண்ணுங்களும் ஒரு பையனும் இருக்காங்க. பெராங் பெசார் தோட்டத்துக்காரன்தான். எப்ப பார்த்தாலும் குடி. அவன் மனைவி பேக்டரியில வேல செஞ்சு ஒத்த ஆளா குடும்பத்த காப்பாத்துச்சு. இவன் குடிச்சுட்டு எங்காயாவது விழ்ந்து கிடப்பான். அப்ப இவன் கூட்டாளி ஒருத்தன் ஒத்தாசயா வீட்டுக்கு வரப் போவ இருந்தான். தேவையான செலவு சாமான்கள ஒவ்வொரு மாசமும் வாங்கிக் கொடுப்பான். அப்படியே, அவங்க வீட்டுல தங்க ஆரம்பிச்சான். கடைசியில இவன விரட்டிவிட்டு அவன் அந்த குடும்பத்த எடுத்துக்கிட்டான். இப்ப எங்க இருக்காங்கன்னு தெரியில. இந்நேரம் பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆகியிருக்கணுமே. அப்பவே அதுங்களுக்கு இருபது, இருபத்தி மூனு வயசு”

குடிக்காக ஒருத்தன் குடும்பத்தையே களவு கொடுப்பானா? நம்ப முடிகிறதா? உங்களைபோல எனக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ‘பெருங்குடி மக்கள் எனும்பேர் கெடுத்தார். பெருங்குடிகாரர் எனும்பேர் எடுத்தார்’ நம் கவிஞர் பொன்முடி எழுதிய வரிகள்தான் நினைவில் மோதின. இந்த ராமசாமி மாதிரி இன்னும் இந்தப் பட்டணத்தில் எத்தனை ராமசாமிகள்?

இதோ, ராமசாமி கைகளில் பணத் தாள்கள் சேரத் தொடங்கிவிட்டன. நான்கு நம்பர் எழுதும் கடையின் உள்ளே போய் வருவோர்தான் இவருக்கு அருள்பாலிப்பவர்கள். வாரத்தில் மூன்று நாள்கள் கடையில் கூட்டமாக இருக்கும். தங்கள் அதிர்ஷ்டத்தைச் சோதிக்க வருபவர்கள் விரும்பியோ வேண்டா வெறுப்பாகவோ தந்துவிட்டுப் போவதை நம்பித்தான் இந்த இடத்தில் ஆறு மாதங்களாக இருக்கிறார்.

முதலில், பக்கத்தில் உள்ள ஜாலான் ஹருண் கடைவரிசையில் உள்ள வங்கி முன் சில மாதங்கள். அப்புறம் ஜாலான் புக்கிட் பக்கம். அதன் பிறகு, சுங்கை சுவா பகுதியில் சில மாதங்கள். அது சீனர் வாழும் பகுதி. இரவில் நாய்த் தொல்லை அதிகம். அதுகூட பரவாயில்லை. நாய்களைச் சமாளித்து விடலாம். இரவில் அசந்து தூங்கும்போது இவரிடமே களவாடும் மனித நாய்களைத்தான் சமாளிக்க முடியவில்லை. போதுமடா சாமி என காஜாங் மையத்தை நோக்கி வந்துவிட்டார். இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும் என்கிறீர்களா? எல்லாம் அவர் சொல்லித்தான்.

ஒரே இடத்தில் தங்கிக்கொண்டு, வருவோர் போவோரிடம் கையை நீட்டிக்கொண்டிருப்பதிலும் ஆபத்து இருக்கிறது. என்ன என்கிறீர்களா? இரண்டு வருட காலம் இவரைக் காஜாங்கில் காணவில்லை. ஆள் போய் சேர்ந்திட்டாருபோல என்று நான் நினைத்துக் கொண்டேன். ஒரு நாள் சுங்கை சுவா பக்கம் பிற்பகலில் சீனர் உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களிடம் கையை நீட்டிக் கெஞ்சிக்கொண்டிருந்தார்.

“எங்க ரொம்ப நாளா ஆளே காணோம்? எங்க போயிட்டீங்க?” விசாரித்தேன்.

“அதை ஏன் தம்பி கேட்கிறீங்க. பிச்ச எடுக்கக் கூடாதாம். இந்த வெல்ஃபேகாரங்க புடிச்சிக்கிட்டு போய்ட்டாங்க. ரொம்ப தூரம். ஜோகூர் பக்கம் கொண்டுபோய் ரெண்டு வருசம் வச்சிருந்தாங்க. நல்லாதான் கவனிச்சிட்டாங்க.”

“அங்கேயே இருக்க வேண்டியதுதானே? அப்புறம் ஏன் இங்கே திரும்ப வந்து கஸ்டப்படுறீங்க?”

“என்னாலதான் முடியுல. நமக்கு எப்பொழுதும் கொஞ்சம் ஊத்திக்கிட்டே இருக்கணும். அங்க அதுக்கு வழியில்ல. போங்கடான்னு போக்கு காட்டிட்டு இந்தப் பக்கம் வந்திட்டேன். இது நமக்குப் பழகிருச்சு, என்னா பண்றதுன்னு தெரியல” என்னிடம் பேசிக்கொண்டே அந்தப் பக்கம் கையை நீட்டினார்.

சமூகநல இலகா முடிந்தவரை ஐந்தடியே உலகம் என ஒதுங்கி வாழும் மனிதர்களைக் கைதூக்கிவிடப் பார்க்கிறது. ஆனால், அது அவ்வளவு எளிதில்லை என இவரைப் பார்த்தால் தெரிகிறது.

நான்கு நம்பர் எழுதும் கடையில் அலுவலக நேரம் முடிந்த பிறகுதான் கூட்டம் அதிகமிருக்கும். இன்று நல்ல கூட்டம். மாலை மணி ஐந்தாகிவிட்டது. ஹெல்மெட் மாட்டிய தலைகள் கடைக்குள் போவதும் வெளியே வருவதுமாக இருந்தன. சம்பாதிக்கும் பணத்தைக்கொண்டு வந்து நம்பர் எழுதி இவர்களால் எப்படிச் செலவு செய்ய முடிகிறது? என்னால் இன்னும் விடைகாண முடியாத கேள்வி. உங்களுக்கும் இந்தக் கேள்வி இருக்கிறதா?

இதோ, ராமசாமி இன்றைய வசூலை எண்ணிப் பார்க்கிறார். ஒன்பது வெள்ளி. ஆகா, இதுவே பெரிய வருமானம்தான். அடுத்து என்ன? யாத்திரைதான். நீங்கள் என்ன யாத்திரை என்று நினைத்தீர்கள்? அருள் தேடும் ஆன்மிக யாத்திரை அன்று. இது தேவபானம் தேடும் போதை யாத்திரை. கைகளை வீசிக்கொண்டு காற்றின் போக்கில் தடுமாற்றத்தோடு நடக்கிறார் ராமசாமி. எதிரே சாலையைக் கடந்து குறுக்குச் சந்தில் நுழைந்து சிறு பாலத்தில் நடந்து அந்தப் பக்கம் போனால் ஜாலான் புக்கிட். அங்குள்ள கடைவரிசையில் சீனர் மருந்துக் கடை உள்ளது. பேருக்குத்தான் ‘கெடை உபாட்’. உள்ளே மறைவாய் ஒரு பகுதியில் வகைவகையாய் பல அளவுகளில் மதுப்புட்டிகள். எல்லாம் உள்ளூர்த் தயாரிப்பு. மலிவு விலையில். அங்குப் போனாலே ராமசாமிக்கு வாய் ஊறத் தொடங்கிவிடும். ருசி கண்ட பூனையாயிற்றே!

“தவுக்கே தீகா உலார் சத்து” நான்கு வெள்ளியை நீட்டுகிறார். கடையில் இரண்டு பேர் தேவபானம் அருந்திய கிறக்கத்தில் தலை கவிழ்ந்து நின்றனர். சீனத் தவுக்கே உள்ளே போய் புட்டியைக்கொண்டு வந்து தர, ஆசையாய் வாங்கி அதன் மணத்தை முகர்ந்து ஒரே மூச்சில் வாயில் ஊற்றிக்கொள்கிறார். தொண்டையில் இறங்கும் அதன் இதத்தை உள்வாங்கி எலும்பு தட்டிய நெஞ்சைத் தடவிக்கொள்கிறார். இதைப் பார்க்கும் உங்களுக்குக் குமட்டல் வருவதுபோல இருக்கிறது இல்லையா? ராமசாமிக்குப் பழகிவிட்டது.

இதே கடை வரிசையின் கடைசியில் ஒரு சீனர் மளிகைக் கடை. அங்கும் பின் பகுதியில் மறைவாக மது வியாபாரம். இரகசியக் குடிகாரர்களுக்கு ஏற்ற மறைவான இடம். அங்கு அதிகம் வந்து போவது நம்மவர்கள்தாம். இந்த வியாபாரத்திற்கு எப்பொழுதும் முழு ஆதரவு. அங்கொன்று இங்கொன்றுமாக எங்கும் பல்கிப் பெருகி நாடெங்கும் ஆயிரக்கணக்கில் கடைகள். உங்களுக்கு எப்படி? என் மனத்தில் கசியும் ஏமாற்ற உணர்வோடு ஒன்றிவர முடிகிறதா?

ஒரு முறை பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் பொறுப்பாளரைத் தொடர்பு கொண்டு நான் பேசியது உங்களுக்குத் தெரியாது. “பாலன், மலிவுவிலை மதுபானத்தை ஒழிக்கணும்னு எவ்வளவோ முயற்சி செய்தோம். அதனால விளையிற தீமைகளை விளக்கும் கையேடுகளை தயாரிச்சு வெளியிட்டோம்”

“ஆமா, நான்கூட வாங்கி படிச்சேன். ஆழமா ஆய்வு செய்து கொண்டு வந்தீங்க. நல்ல முயற்சி”

“நாடு முழுக்க பிரச்சாரம் செய்தோம். ஊடகத்துல அதன் தீமையை விளக்கி செய்தியா வெளியிட்டோம். ஆனா, எதிர்பார்த்த பலன் அதுல எங்களுக்கு கிடைக்கில. எல்லாம் கிணத்துல போட்ட கல்லா போச்சு” குரலில் ஏமாற்றம்.

“ஏன்? என்ன காரணம்?”

“நம்ம தலைவருங்க கேபினெட்டுல பேசிப் பார்த்தாங்க. ஆகட்டும் பார்க்கலாம்னு சொன்னாங்க. நாங்களும் நல்ல செய்திக்குக் காத்திருந்தோம். மலிவுவிலை மதுபானம் விற்கும் கடைங்க எண்ணிக்கை கூடிக்கிட்டுதான் போகுது. இதோ பல வருசம் ஓடிப்போச்சு. எத்தனை எத்தனை உயிரை இதுக்குக் காவு கொடுத்துட்டோம். லூனாஸ், செமினி மாதிரி கொத்து கொத்தா சம்சுக்கு பலியான மாதிரி இதுக்கும் காவுகொடுத்தாதான் எல்லார் கண்ணுக்கும் தெரியுமோ” இப்பொழுது குரலில் விரக்தி.

“இதுல இன்னொரு கொடுமை என்னான்னா, மதுபானம் விற்கும் நிறுவனங்கள் பள்ளிப் பிள்ளைகளுக்கு புத்தகப் பை கொடுக்கிறோம், உதவி செய்றோம்னு பள்ளிக்கூடத்துல ஊடுருவறாங்க. அதையும் நம்ம ஆளுங்க அனுமதிக்கிறாங்க. இதை என்ன சொல்றீங்க?”

ராமசாமி கடைவாயைத் துடைத்துக்கொண்டு கிளம்பினார். மணி ஏழாகி விட்டது. இனி இரவு உணவு தேவையில்லை. வயிற்றை நிரப்பிய தீகா உலார் போதும். மீண்டும் காற்றில் மிதப்பதுபோல் தடுமாற்ற நடை. வழக்கமான ஐந்தடியில் சங்கமித்து விடுவார்.

அவர் கடையிலிருந்து வெளியே வருதற்கும் மூன்று இளைஞர்கள் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது. மூவரையும் எங்கோ பார்த்ததாக எனக்கு நினைவு. நீங்கள் ஏன் யோசிக்கிறீர்கள்? நீங்கள் இவர்களைப் பார்த்திருக்க முடியாது. இவர்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

ஆம், நினைவுக்கு வந்துவிட்டது. மூவரும் இங்கே பக்கத்தில் இருக்கும் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த நம் மாணவர்கள். வெளியே வந்தவர்கள் கைகளில் நெகிழிப் பையில் சுற்றப்பட்ட புட்டிகள். அப்படியானால் இவர்களும் இங்கு வாடிக்கையாளர்களா?

“பள்ளியில போதைப்பொருளுக்கு எதிரா பிரச்சாரம் நடக்குது. அது மதுவுக்கு எதிரான பிரசாரமாகவும் மாறணும். அப்பதான் ஒட்டுமொத்த மலேசியர்களுக்கான பிரச்சாரமா பலன் கொடுக்கும்” நீங்களே சொல்கிறீர்கள். சரியாகத்தான் இருக்கும்.

மீண்டும் ராமசாமி இடத்திற்கு வந்து விட்டோம். நியோன் விளக்குகள் ஒளி உமிழ்ந்து வெளிச்சத்தை கடைத்தெருவில் இறைத்திருந்தன. ராமசாமி ஐந்தடியில் நாளிதழைப் பரப்பி, நெகிழிப்யை தலையணையாக்கி கால்நீட்டிப் படுத்துக்கொண்டு ஏதோ ஒன்றைக் கையில் வைத்து உற்றுப் பார்த்தவாறு இருக்கிறார். என்ன அது என்று கேட்கிறீர்களா? வேறு என்ன? ஏதோ ஒரு பழைய புகைப்படம்தான். அவர் இழந்துவிட்ட, திரும்பப்பெற முடியாத ஒன்று அதில் இருக்கலாம். கொஞ்ச நேரத்தில் தூங்க ஆரம்பித்து விட்டார்.

சரி, அரைநாள் நாள் பொழுது கழிந்தது. நீங்கள் போய் வாருங்கள். இதைப்பற்றியெல்லாம் எண்ணிக் கொண்டிருக்க வேண்டாம். நமக்கு ஆயிரம் வேலைகள், சமூகப் பணிகள். அவற்றுக்கே நேரம் சரியாக இருக்கிறது.

ஈ.வே.ராமசாமி, வி.கே.ராமசாமி மாதிரி இவருக்கு இனிஷியல் எல்லாம் இல்லையா எனக் கேட்கிறீர்கள். இல்லாமலா? இவருக்கும் இருக்கிறது. இவர் இ.வா. ராமசாமி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *