கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 22, 2022
பார்வையிட்டோர்: 2,122 
 
 

(1987 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிவராமலிங்கம் எழுந்து உட்கார்ந்து கொண்டார். வயிறு புகைந்தது. “சோறு தின்று எத்தனை நாட்கள் ….?’ அவரால் ஞாபகம் கொள்ள முடியவில்லை. சிவகாமியைத் திரும்பிப் பார்த்தார். குழந்தை பாயுடன் சுருண்டுபோய்க் கிடந்தாள். மத்தியானம் யாரிடமோ யாசித்த காறல் புளுக்கொடியலைக் கொடுத்தார், குழந்தை நன்னிப் பார்த்துவிட்டுத் துப்பி விட்டாள்.

நெஞ்சில் குவிந்து குமையும் துயரம் அவரால் தாள முடியவில்லை .

‘ஆன்மா வசமிழந்து, இயக்கமேதுமில்லாமல், ஒடுங்கிய நிலையில், அகதி முகாங்களில் எத்தனை நாளென்று அடைந்து கிடக்கேலும் …… குப்பை கூளமாய் சிதம்பி …’

அவருக்குச் சந்தைப் பக்கம் போக வேண்டும் போலிருந்தது. போய்க் கீரை விற்க வேண்டும் போலிருந்தது.

தண்டு முற்றாத முளைக் கீரை கேட்டுவரும் வைரமுத்து வாத்தியார். பசளி மட்டும்தான் வேணும் ….’ என்று வந்து நிற்கும் விசாலாட்சி, ‘இரண்டலக்கு கருவேப்பிலை தாருங்க மாமா ….. தனது கரிய விழிகளால் பிரியமாய்த் தொட்டுப் பேசி வளைய வரும் சிவத்தின் இளம் மனைவி வடிவு. பொன்னாங்காணி இருக்கா தாத்தா….?’ பட்டுப் பாவாடையில் அழுக்குப் பட்டு விடுமோ எனும் முன் ஜாக்கிரதையுடன் அதனைச் சிறிதாகத் தூக்கியபடி வந்து நிற்கும் பரமு ஐயரின் பேத்தி ராஜி. வல்லாரைப்பிடி தாருங்க சிவம்…” என்று கீரைக்கட்டு முழுவதையும் கிளறி, ஒரு பிடி மட்டும் எடுத்துக் கொண்டு பேரம் பேசும் கொண்டலடி ஞானமுத்து.

வாழ்வோடு அழியாமலே ஐக்கியமாகிவிட்ட இந்த மனிதர்கள் எல்லாரும் எங்கே சிதறுண்டு போயிருப்பார்கள் ….. நல்லூரிலா? சிவன் கோயிலிலா? அல்லது ஊரைவிட்டு, உறவைவிட்டுப் பாதுகாப்புத்தேடி எங்கே இடம் பெயர்ந்திருப்பார்கள். மீளவும் இவர்களை எல்லாம் அகமும் முகமும் மலரச் சந்தையில் ஒரு சேரப்பார்க்க முடியுமா ….? கீரைப்பிடிகளைப் பிரித்துப் போட்டு விட்டுப் பிரியமாய் அவர்களது வரவுக்காகக் காத்திருக்க முடியுமா?.

அவருக்குத் தொண்டை அடைத்துக் கரகரத்தது. கண்களில் திரண்ட நீரைத் தோளில் கிடந்த துண்டால் அழுத்தித் துடைத்துக் கொண்டார்.

வாழ்க்கை இப்படி நொருங்கிப் போய்விட்டதே ….? என நினைத்தவர் சிவகாமியை மீண்டும் பார்த்தார். குழந்தை புரண்டு, நிமிர்ந்து படுத்தாள். அவளது கீழ் உதட்டின் வலது புறமாகச் சிறிய மச்சம்; அவரது மனைவி சிவகாமி போலவே இருந்தாள். மனைவியின் நினைவாக அவளது பெயரையே பேத்திக்கும் வைத்த பொழுது அவரது மகளால் அதைத்தட்ட முடியவில்லை.

மகள், பர்வதம் குழந்தை பிறந்து மூன்று மாதம் வரை நன்றாய்த்தான் இருந்தாள். முதுகுத் தெண்டலும் குளிர் சுவாதமும் வந்து அவள் படுத்த படுக்கையான பொழுது, அவர் பார்க்காத வைத்தியமில்லை. எல்லாமே கைமீறி அவளும் கைதவறிப் போனபோது, கதறி அழுவதைத் தவிர அவரால் வேறு எதுவுமே செய்ய முடியவில்லை . மருமகன் அருணாசலம் சூடுசொரணையற்ற பிறவி, பூநகரிப் பக்கம் உள்ள கமத்திற்குப் போனவன் திரும்பவே இல்லை.

பட்டியை விட்டுப் போன நாம்பன் திரும்பி வந்த கதை எங்காவது உண்டா?

அங்கு யாரோ ஒருத்தியுடன் குடியும் குடித்தனமுமாய் விட்டான் என்று, ஊர் பேசியதை இவரும் அறிந்து கொண்டார்.

குழந்தை சிவகாமியின் பொறுப்பு இவரது தலையில் என்று ஆகிப்போனது.

கீரை வியாபாரத்தில் கிடைக்கும் முப்பதோ நாப்பது இவருக்கும் குழந்தை சிவகாமிக்கும் போதுமானதாய் இருந்தது. நாலு எழுத்துப் படித்து வைக்கட்டுமே என்று பக்கத்துப் பாடசாலைக்குக் கூட அவளை அவர் அனுப்பி வருகிறார். அவள் ஆண்டு இரண்டில் படிக்கிறாள்.

‘கீரை விற்கும் பிழைப்பு என்னுடனாகட்டும், அவளுக்கு வேண்டாம். இன்னுமொரு பத்து வருஷம் உயிரோடு இருந்தால் அவளுக்கு ஒரு வழி காட்டி விட முடியும். கடவுள் கிருபையிருந்தால் எது நடக்காது …. எல்லாம் நடக்கும்.

அவரது மனது சதா இதையே அசை போடும். “இஞ்சை கோயிலுக்கு வந்து கனநாளே ……?”

வேலுப்பிள்ளைச் சாத்திரியார்தான் வாயெல்லாம் பல்லாக விசாரித்தார். “இரண்டு கிழமையிருக்கும்….”

தலங்காவல் பிள்ளையாரில் அவருக்கு ஒரு பிரீதி, உயிர் பிரிகிறதெண்டாலும் பிள்ளையாற்ரை காலடியிலை பிரியட்டும்…’ என்ற வைராக்கியத்துடன் கோயில் பக்கம் வந்து விட்டார்.

‘கோயில் பக்கம் போறது தான் பாதுகாப்பு …..’ என்று ஊரே கிளம்பிய பொழுது இவரால் வீட்டில் ஒண்டியாக இருக்க முடியவில்லை. வீட்டில் இருந்த அரிசி, பருப்பு என்று எல்லாவற்றையும் கொட்டிக்கொண்டு வந்தார். எல்லாம் முடிந்து விட்டது. கையில் இருந்த முதலும் கரைந்து விட்டது.

நேற்று மதியம்-எங்கோ மரவள்ளித் தோட்டத்தில் களவாடிக் கொண்டு வந்த கிழங்கை சூரன் சிவசம்பு அறா விலைக்கு விற்றுக் கொண்டிருந்தான். இவரைக் கண்டதும் மரியாதையாக : “இந்தா இதை அவிச்சுச் சாப்பிடம்மான் … என்று மாப்பாறிய கிழங்காகப் பார்த்து இவரிடம் தந்தான் . அவரால் அதைத் தட்டமுடியவில்லை, வாங்கிக் கொண்டவர்- “காசில்லை” என்றார்.

“சும்மாவா …? எல்லாம் நேர்சீரானதும் சந்தைப் பக்கம் வாறன் நாலு கீரைப்பிடி தாவன்……

களவு எடுத்தே சீவிக்கும் அவனிடமும் எங்கோ ஒரு மூலையில் ஈரமிருப்பதாகவே அவருக்குப் பட்டது. நேற்றுப் பகல் அந்தக் கிழங்கைச் சுட்டு அவரும் சிவகாமியும் வயிற்றைக் கழுவிக் கொண்டார்கள்.

இரவு பட்டினி, காலையில் ஒரு சொட்டு நீர் வாயில் ஊற்றுவதற்குக் கூட வழியில்லாமல் போய்விட்டது.

வாய் ஊறலெடுத்தது. ஒரு துண்டுப் புகையிலைக் காம்பாவது கொடுப்பினுள் அதக்கினால்தான் அவருக்குப் பத்தியப்படும் போலிருந்தது. வயிற்றுக்கே கிடையாதபோது புகையிலை ஒரு கேடா’ என நினைத்துக் கொண்டவர், தன்னை மறந்தவராய், வாய் விட்டுக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.

நேற்றக்காலை நித்திரைப் பாயால் எழுந்த பொழுது ‘பென்சனியர் கந்தசாமி பட்ட அவஸ்தைதான் அவரை அப்படிச் சிரிக்க வைத்தது.

ஒரு குறள் சுருட்டைப் பற்ற வைப்பதற்கு அவர் பட்டபாடு. கைத்தடியை ஓரமாய் வைத்தவர், நிலத்தில் உட்கார முடியாமல் தவழ்ந்து நெருப்புக் கொள்ளியைக் குனிந்து ஊதிக் கனிய வைத்தபடி, சுருட்டை எடுத்து வாயில்வைத்து, தணலை வாய்வரை கொண்டு வந்து நிமிர்ந்த பொழுது, பின்பக்கத்தால் குடை சாய்ந்து விழப்போனார். இவரது சமயோசிதம் அவரைக் காப்பாற்றியது. தாங்கிக் கொண்ட இவரை அந்தக் கிழவர், பீளை சாறிய கண்களால் நன்றி தெரிவித்துக் கொண்டது இவருக்கு இன்னமும் ஞாபகம் இருந்தது.

கிழவன் பிடரி அடிபட விழுந்திருந்தால் … அவருக்கு நினைக்கவே பயமாக இருந்தது.

உடல் ஆட்டங் கண்டுவிட்ட இந்த நிலையிலும் இந்தப் பலவீனமா? மனிதர்கள் திருந்தவே மாட்டார்களா …? சுருட்டுப் பற்றாமல் விட்டால் குடியா முழுகிவிடும்…

அவருக்கு எல்லாமே புரியும் படியாய் இல்லை .

வெற்றிலை, சுருட்டு, பீடி, கசிப்பு, கள்ளச் சாராயம் என்று எல்லா வியாபாரமும் வீதியில் நடைபெறுகிறது. ஆனால் ஒரு பருக்கை அரிசியோ, பருப்போ மட்டும் தான் எங்கும் கண்ணில் படமாட்டேன் என்கிறது..

“நல்லூர்-எம். பி.சி. எஸ். ஐ உடைச்சு, சனம் அரிசி அள்ளுதாம்…. அம்மான் நீயும் வாவன்….

சூரன்தான் சாக்கும் கையுமாக நின்றபடி இவரை அழைத்தான்.

அது அவருக்கு உவப்பாய் இல்லை, கள்ளமாய் எதுவுமே செய்து பழக்கப்படாத கட்டை அவர்.

‘சனங்களுக்குப் பசி வந்தால் முறைகேடாய் எதையும் செய்ய முடியுமா…..? அவருக்கு அப்படி எல்லாம் செய்ய முடியவில்லை. அவரைப் போல இன்னும் சிலபேராவது இருப்பார்கள் என அவர் நம்பினார்.

விறகுகாலை உடைந்து கிடப்பதாகக் கேள்விப் பட்டுச் சனம் கரை புரள்வதாகச் சொன்னார்கள்.

‘அரிசி இல்லாமல் விறகை என்ன செய்ய முடியும்…. தந்திக் கம்பிகள், மின்சார லைன் அலுமினியக் கம்பிகள், தண்டவாளச் சிலிப்பர் கட்டைகள் இவற்றை எல்லாம் வீட்டில் குவித்து வைத்துக் குபேரர்களாகி விட முடிந்ததா? இல்லிடத்தை விட்டு தறிகெட்டு ஓடி வரத்தானே முடிந்தது இந்த மடமைக்கு என்ன பெயர் …. எல்லாமே தலைகீழாய்ப் போனது ஏன்…? இது நேராகுமா… நேராக எத்தனை வருஷங்களாகும்….?

அவருக்கு மலைப்பாகவும் கவலையாகவும் இருந்தது. உடலும் உள்ளமும் சோர்ந்தவராய் கோயில் கோபுர வாசல் பக்கமாக வெளியே வந்தார்.

ஒவ்வொருவருடைய கைகளிலும் வெள்ளை லெக் கோன் கோழிகள்.

“துரையற்ரை கோழிப்பண்ணையை உடைச்சுப் போட்டாங்கள்’ கோழியள் கிடக்கு, போய் அள்ள அம்மாள்……”

சூரன் தான் கூறிவிட்டுப் போனான். அவனது கையிலும் நாலு கோழிகள்.

துரையர் பாவம் … பூநகரிப் பக்கம் பயத்திலை குடும்பத் தோடை போயிட்டார்…. அவரது பண்ணையும் துடைக்கப்பட்டு விட்டது. இதைப் போலை எத்தனை இழப்புகளும் அழிவுகளுமோ…

எல்லாமே அவருக்குத் துயரம் தருவதாயிருந்தது.

வேர் அறுபட்ட நிலையில், சொந்த பந்தங்களையும் துறந்து, சிதறுண்டுபோன இந்தச் சனங்கள் மீளவும் சொந்த இடங்களில் போய் அமர முடியுமா ….? விடுதலை… விடிவு … என்பதெல்லாம் தூரத்துக் கனவாய் ….?’

அவருக்கு எதுவுமே புரியும்படியாயில்லை,

மக்களது துன்ப துயரம் புரிந்தது. அவர்கள் வயித்துக்கும் வாய்க்குமில்லாமல் அலைந்து திரிவது புரிந்தது. களப்பலியாகும் இளைஞர்களது இழப்பும் தியாகமும் புரிந்தது.

இந்த ஆழ்ந்த துயரம் முடிவில்லாத ஒரு தொடராக ….?

மனம் கருகி வெதும்பினார்.

இப்பொழுது விட்டது. அப் பிறந்த பூமி என்

முன்பு இலங்கை… இப்பொழுது இந்தியப்படை. எந்தப்படை என்றாலும் உயிரும் உடமையும் எவ்வளவு சேதாரமாய் விட்டது. அப்பிராணிகளை அழிப்பதில் அவர்களுக்கு அப்படி என்ன ருசியும் ரசனையும். காந்தி பிறந்த பூமி என்று ஒரு பயபக்தி உண்டு அவருக்கு. அந்த இந்தியா தனது ஆன்ம வசீகரம் முழுவதையுமே இழந்து ஒரு இரத்தவெறி கொண்ட ஓநாயாய்…. எல்லாமே பொய்யாய் ….. நம்பமுடியாததாய் …..

அவர் தெரிந்து கொண்டதெல்லாம் அவ்வளவுதான். ஆழமான அரசியலெல்லாம் எங்கே அவருக்குப் புரியப்போகிறது. எளிமையும் அப்பாவித்தனமும் மிகுந்த மனிதர் அவர்.

இந்தியப் படையில் ஒரு தமிழனாவது தன்னிடம் வசமாக அகப்பட பாட்டானா என்று இருந்தது அவருக்கு,

ஒய் என்ன காணும்… உம்முடைய இரத்தத்தையும் சதையையும் குத்திக் குதறிப் பார்க்கிறீரே … இதில் என்ன நியாயம் இருக்கிறது…’ என்று நாலு வார்த்தை அவனைக் கிழியக் கிழியக் கேட்க வேண்டும் போலிருந்தது அவருக்கு.

அடுத்த கணமே தன் உணர்ச்சிகளைச் சமனப்படுத்தியவராய்;

“இது முட்டாள்த்த னம் ….. ஆமிக்காரன் எவனுமே அயோக்கியனாய்த்தானிருப்பான். துப்பாக்கிச் சனியனைப் பிடிச்சவன் தமிழனோ, தெலுங்கனோ, சீக்கியனோ எவனாயிருந்தாலும் எல்லாருமே ஒரே ரகந்தான் …..

அவரது உடல் முழுவதும் ஒரு முறை அதிர்ந்து ஓய்ந்தது.

கோயில் முன்னிருந்த கையொழுங்கையில் இறங்கியவர், கோவணத்தை நெகிழ்த்தி, ஒண்டுக்கிருந்தார். உட்கார்ந்தவரால் கையூன்றித்தான் எழுந்திருக்க முடிந்தது. |

ஒழுங்கையிலிருந்து மிதந்தவர். கோயில் மேற்கு வீதிக்கு வந்த பொழுது, அவர்கள் தென்பட்டார்கள்.

“ஏன் பிள்ளை குளிச்சாச்சோ …?’ அவர் முன்பாக, குதூகலத்துடன் வந்த அந்த இளஞ் சோடியைப் பார்த்து இவர் கேட்டார்:

“ஓ அப்பு ….” பெண்தான் பதில் சொன்னாள்.

அம்மனுக்குச் சந்தனக் காப்புச் சாத்தியது போன்ற குளிர்ச்சியான தோற்றம். மொழு மொழு என்று இருந்தாள். நாசி மட்டும் சற்றுத் தூக்கலாக. கூர்மை கொண்டு, முகத்துக்குப் பொருத்த மில்லாமல் இருந்தது. சிறிய குருவிக் கண்கள். தடித்த உதடுகள் அழகாக இருந்தது. தலைமுடி உலர வேண்டும் என்பதற்காக அள்ளி முடிக்காமல் தழைய விட்டிருந்தாள். சற்றுக் குள்ளமான உருவம். அவனது தோள் உயரம் கூட அவள் இருக்கவில்லை . மாறாக, அவன் உயரமாக ஆணுக்கே உரிய லட்சணங்கள் அத்தனையும் பொருந்தியவனாய் இருந்தான். அவன் சிரித்தபொழுது, பற்கள் மட்டும் சற்றுப் பெரிதாகவும், சிறிய மிதப்பாகவும் தெரிந்தன.

இவையள் எங்கடை பக்கத்துப் பிள்ளையள் இல்லைப் போலை….. எங்கையோ தவறி இந்தப் பக்கம் வந்திருக்கினை …. வந்த இடத்திலை போக முடியாமல் அகப்பட்டினை போல. சடங்கு முடிச்சமாதிரியும் இருக்க, முடிக்காத மாதிரியும் இருக்கு … எதுவோ … அவையள் இந்த நெருக்கு வாரத்துக்கையும் சந்தோஷமாய்த் தானிருக்கினை…’

அவர்கள் அவரைக் கடந்து போவதை மிகுந்த வாஞ்சையுடனும், பரிவுடனும் பார்த்து நின்றார்.

அவருக்கு அவரது பேத்தி சிவகாமியும், மாப்பிள்ளையும் போல ஒரு பிரமை.

எதை நினைத்தாலும் சிவகாமியின் நினைவாகவே வந்து முடிந்து அவருக்கு வியப்பாக இருந்தது. அத்துடன், மனது ஆசைகள் நிறைவேறுமா? என்று பயமாகவும் இருந்தது.

மீளவும் கோயில் பிரகாரம் வந்தவர், சுருண்டு படுத்துக் கொண்டார் பசிக்கு ஒரு கவளமாவது கிடைத்தால் போதும் என்று இருந்தது. சிவகாமியை நினைத்ததும் துயரம் முட்டிக்கொண்டு வந்தது. அதை அடக்க முடியவில்லை. விம்மி விம்மி அழுதார். அழுது ஓய்ந்தவர், மனமும் உடலும் சோர்ந்த நிலையில், பசிக்களைப்பால் அலைபட்ட நிலையில், தன்னை அறியாமல் தூங்கிப் போனார்.

அவர் விழிப்புக் கண்டபோது, இருள் மை’ யாக அடர்த்தி கொண்டிருந்தது. சுட்டிகளும் சிறு சிறு மெழுகுதிரிகளும் கார்த்திகைத் தீப நாளை ஞாபகப்படுத்துவது போல உள் வீதி முழுமையும் ஒளிர்ந்தன. அவரது படுக்கை முன்பாக இருந்த மூன்று அடுப்புகளிலும் ஏதோ கொதித்துக் கொண்டிருந்தது.

‘சோறாக இருக்குமோ ….? எங்கிருந்தோ சிலருக்கு அரிசி கிடைக்கத்தானே செய்கிறது …..!

எழுந்தவர், துண்டை உதறித் தோளில் போட்டபடி வெளியே வந்தார். திடீரென அவரது நினைவுப் பொறியில் அது தட்டியது. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பது கூட அவருக்கு மறந்து விட்டது. கொண்டலடி வயிரவருக்கு, பொங்கலுக்கு-வருஷப் பொங்கலுக்கென-அவர் பிடி அரிசி போட்டு வைப்பது வழக்கம். அந்த ஞாபகம் தான் அவரை வீடுவரை முடுக்கி விட்டது.

இராமலிங்கம் வீதியை நெருங்கியபொழுது, காக்காய், குருவி கூடக் கண்ணில் படவில்லை.

‘ஆமிக்காரங்கள் நல்லூர் பக்கம் போயிட்டாங்கள் போலை….’

வீதியில் ஏறியவர், அதனைக் குறுக்காகக் கடந்து, பரமசிவம் வீட்டுப் படலையைத் தள்ளித் திறந்தபடி நடந்தார்.

‘இனிப் பயப்படத் தேவையில்லை ….. இரண்டு வளவு தள்ளி வீடு …..’

அவரால் தடைகள் ஏதுமில்லாமல் சுலபமாகவே வளவுப்படலையைத் திறந்து உள்ளே போக முடிந்தது.

வீடு சிறிய மண் குடிசைதான். அதன் முன்பாக ஒரு பலகைக் கதவு. அது தட்டி உடைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் அவருக்குப் பகீர் என அடி வயிறு சில்லிட்டது.

உள்ளே போனவர், உடு பிடவை மற்றும் சாமான்கள் சிந்தியிருப்பதைக் கவனம் கொண்டு, அவற்றை அள்ளிக் குவியலாகப் போட்டுவிட்டு, முருகன் படத்தை ஓட்டி இருந்த அரிசிப் பானையைத்தடவிப் பார்த்தார், பானை சரிந்து கிடந்தது. அரிசி சிந்தவில்லை. அவர் ஏதோ பெரும் புதையலைக் கண்டது போன்ற மகிழ்ச்சியுடன்

அரிசியை எடுத்து மார்புடன் அணைத்துக் கொண்டார்.

கண்க ளில் நீர் சுரந்தது.

கடவுளுக்கு நன்றி கூறிக் கொண்டவர், வெளியே வந்து, வீட்டுக் கதவை நன்றாகக் கட்டினார். கிணற்றடிக்குப் போய் முகம் கைகால் அலம்பிக் கொண்டார். ஒரு வாளி தண்ணீர் அள்ளி ஆசை தீரக் குடித்தார். குளிர்ந்த நீர் அமிர்தமாயிருந்தது.

அப்பொழுது நாய்கள் குரைப்பது கேட்டது. ஒரு கணம் புலன் ஒடுங்கியவர், அடுத்த கணம் உசாரானார்.

‘உவங்கள், உந்த தொலைந்து போன ஆட்கொல்லியள் வாறாங்கள் போலை….’ என நினைத்தவர்-மரங்களின் நடுவே, வீட்டுப் பின் பக்கமாக ஒதுங்கிக் கொண்டார்.

மூச்சு விடுவதே ஆபத்து என்பது போல அவர் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து கொண்டார். எவ்வளவு நேரம் அப்படி இருந்தார் என்று அவருக்கே தெரியவில்லை. மெதுவாக எழுந்து, அரிசிப் பானையை அணைத்தபடி, ‘வளவுகளுக்குள்ளாலை போறது தான் புத்தி…’ என மனனம் பண்ணியவராய் பரமசிவம் வீட்டுப் படலையடியில் நின்று, இராமலிங்கம் வீதியை நோட்டம் விட்டார். எதுவித சிலமனுமில்லை. வீதியை ஒரு எட்டில் கடந்து விடலாம். ஆனால், அவருக்கு வரும் பொழுது இருந்த மனத்தைரியம் எங்கோ ஓடி மறைந்து விட்டதான உணர்வு.

பிள்ளையாரப்பா….. நீதான் துணை எனக்கு…’ அரற்றியவராய் வீதியைக் கடக்கக் காலடி எடுத்து வைத்தார். அடுத்த கணம், அவரது வலது முதுகுப்புறமாக ஏதோ கிழித்தது போன்ற உணர்வு, வலி எதுவுமில்லை. ஆனால் இரத்தம் பொசு பொசு எனப் பெருக்கெடுத்தது ; அவரது தோளில் கிடந்த துண்டு நனைந்து விட்டதை உணர்ந்து கொண்டார்.

வெடிச்சத்தம் மீண்டும் கேட்டது.

அவர் தன் பலம் முழுவதையும் சேர்த்து வீதியின் மறுபக்கம் பாய்ந்து ஓடினார். ஆனால், அடுத்து வந்த சன்னங்கள் அவரது நெற்றிப் பொட்டிலும் இடது மார்பிலும் துளைத்தன. அடுத்து கணங்களில் நினைவிழந்த அவர் – சிவகாமி… மகளே!’ என்று முனகியபடி சரிந்து விழுந்தார். அவரது கையில் இருந்த பானை நிலத்தில் விழுந்து உருண்டு உடைந்தது. அரிசி சிதறியது.

குழந்தை சிவகாமியின் நினைவுதான் அவரது இறுதி நினைவாக இருந்திருக்குமோ…..? –

கனத்த சப்பாத்துக்களின் தட தட ஓசை. நான்கு அந்நியப்படையினர் சிவராமலிங்கத்தாரை அண்மித்தனர். அவர்களில் ஒருவன் குற்றுயிராய்க் கிடந்த அவரை முரட்டுத்தனமாகத் தனது சப்பாத்துக் கால்களால் உதைத்துப் புரட்டினான்.

பூ… ஏ ரைகர்… அன் ஒல்ட் ரைகர்…..!

அவனது குரலில் ஏளனமும், அகம்பாவமும் குரவையிட்டன. அவனுடன் வந்த மற்ற மூவரும் அவனை ஆமோதிப்பது போல உரத்த குரலில் சிரித்தார்கள்.

– 1987, சட்டநாதன் கதைகள், சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *