கள்ளும் முள்ளும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 1, 2023
பார்வையிட்டோர்: 1,015 
 

சங்கரனுக்கு சிறுவயதில் கிராமத்தில் வாழ்ந்தபோது நடந்த சம்பவங்கள் நிழலாடின. அன்று நடந்த விசயங்கள் இன்று தவறாகப்பட்டன. ‘சிறுவயதில் இயல்பாக திட்டமிடாமல் செய்த செயல்களை தவறு என்பதா? அறியாமை என்பதா?’ என நினைத்தவர் சரியான வார்த்தை பிடிபடாமல் தவித்தார்.

இன்று அறுபது வயதில் நகரத்தில் சகல வசதிகளுடன் பூரணமாக வாழ்ந்தாலும், கிராமத்தில் உள்ள பூர்வீக குல தெய்வ கோவில் விழா பல வருடங்கள் கடந்து நடப்பதால் அங்கு வந்தவருக்கு ஊரே அடையாளம் தெரியவில்லை. கிராமம்‌,நகரம் என பிரித்துப்பார்க்க முடியவில்லை. அன்று வேலா மரங்கள் நிறைந்த காடுகள் இன்று வீடு கட்டும் இடங்களாக மாறியிருந்தன.

தார் மற்றும் கான்கிரீட் சாலையில் நடக்கவே ஷூ போட்டபடி நடக்கும் போது தாத்தாவுடன் குழந்தைப்பருவத்தில் நடந்த மறக்க முடியாத சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது.

ஐந்து வயது வரை தந்தையின் தந்தை தாத்தா தன்னை நடக்க விடாமல் தோளில் உட்கார வைத்தே சாவு நிகழ்வுகள் முதல் சந்தோச நிகழ்வுகள் வரை நடந்தே செல்வார். “நீ பொறந்ததுக்கப்பறம்தான் மாடே நல்லா பால் கறக்குது. சோளம் பத்து மூட்ட சேந்து வெளையுது. நீதான் எஞ்சாமி” என அடிக்கடி கூறுவது சங்கரனுக்கும் சந்தோசத்தை கொடுக்கும்.

ஒரு முறை வெள்ளை வேலாங்காட்டுக்குள் சென்ற போது தாத்தா தோளிலிருந்து இறங்கி நடக்க வேண்டுமென சங்கரன் பிடிவாதம் பிடிக்க, தாத்தா விடாமல் பிடித்துக்கொள்ள திமிரி கீழே விழ,இதற்க்கு மேல் சொன்னால் கேட்க மாட்டானென விட்டு விட, புழுதி மண் பஞ்சுபோல் இருந்ததும்,பாதங்களில் நடக்கும்போது கூச்சம் வந்ததையும் புதிய அனுபவமாக எண்ணி குதித்து,குதித்து முயல் போல் ஓடிய போது “ஆ” என அலறியது அங்கே சாராயம் காய்ச்சுவதற்க்கு பயன் படுத்த வெள்ளை வேலாம்பட்டை உறித்தவர்களையும் அவனிடம் ஓடி வர வைத்தது.

அப்படியே கதறி அழுத படி சுருண்டு போய் புரண்டு அழுதான். தீவிரவாதிகள் வைக்கும் கன்னி வெடி போல காட்டுக்குள் கண்ணுக்குத்தெரியாமல் நிறைய முட்கள் புழுதி மண்ணுள் புதைந்து கிடக்கும். சிலருக்கு செருப்பு போடாமல் நடந்து,நடந்து பாதமே இரும்பு போல் காப்பு காய்த்திருக்கும். ஊசி போல் உள்ள முள்ளும் அவர்களது பாதத்தில் பட்டால் படீரென முறிந்து போகும். பாவம் சங்கரனின் பஞ்சு போன்ற பாதத்தில் ஒரு இஞ்ச் ஏறி நின்றிருந்தது வேலாமுள்.

” கரு வேலா முள்ள விட வெள்ள வேலாமுள்ளு விசமாக்கும். புண்ணு சீப்புடிச்சா பத்து நாளைக்கு நடக்கமுடியாது. தண்ணி பட்டுதுனா ஒரு மாசம் வலி தீராது. டேய் மாரப்பா நீ ஓடிப்போயி ரசப்பூடு புடுங்கீட்டு ஓடியா சீக்கரம். கொழந்த வலில தெவழுது பாரு. ” என ஒருவர் கூறியவுடன் தளை பறிக்க ஒருவர் ஓடினார்.

தாத்தா தன் மடியில் கிடத்தி சங்கரனுக்கு ஆறுதல் கூறி அழுகையை நிறுத்த முயல,தளையை கொண்டு வந்தவுடன் பிழிந்து முள் ஏறிய இடத்தில் தளைச்சாறு விட்டதும்,எரிச்சலால் மேலும் கத்திய சங்கரனை கண்டு கொள்ளாமல் காலை இறுக்கப்பிடித்து,பாதத்தை முகத்துக்கு பக்கமாக தூக்கி பற்களில் நீண்டு ஏறியிருந்த முள்ளைக்கடித்து வெடுக்கென பிடுங்கிய போது உயிர் போய் வந்தது போலிருந்தது குழந்தை சங்கரனுக்கு.

முள் பிடுங்கியவர் வாயிலிருந்து சாராய வாடை கொமட்டலையும் கொடுத்தது. வலி தாங்காமல் மயக்கமடைய தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு வீட்டிற்கு சென்றார் தாத்தா. அன்று இரவு முழுவதும் தூங்காமல் தாத்தாவை பாட்டி திட்டிக்கொண்டிருந்தார்.

ஒரு முறை தாத்தா தென்னை மரங்கள் நிறைந்திருந்த ஒரு தோட்டத்து குடிசை வீட்டிற்கு சங்கரனையும் அழைத்துக்கொண்டு சென்றிருந்தார். அப்போது அந்த வீட்டில் இருந்த ஒருவர் சொம்பை தாத்தா கையில் கொடுக்க,தாத்தா வாங்கி குடித்து விட்டு பக்கத்திலிருந்த ஊறுகாயை தொட்டு நாக்கில் வைத்து விட்டு சொம்பு கொடுத்த நபருக்கு வேட்டியில் முடிந்து வைத்திருந்ததை அவிழ்த்து எடுத்து கொடுத்தார்.

தானும் அதே போல் செய்ய ஆசைப்பட்டு தாத்தா கால் பங்கு சொம்பில் மீதம் வைத்திருந்ததை மோர் என நினைத்து எடுத்து குடிக்க,புளிப்பும் கசப்புமாக இருக்க ‘இந்த வீட்டு மோர் இப்படித்தான் இருக்குமோ?’ என ஊறு காயைத்தொடும் போது பார்த்து விட்ட தாத்தா “இது உனக்கு வேண்டாஞ்சாமி. இது தப்பு” என கூற,’ தப்பானதை தாத்தா ஏன் சாப்பிட வேண்டும்?’ என தோன்றினாலும் ஏதோ மயக்கம் வருவது போல் இருக்க ,தாத்தா தோளில் தூக்கியதும்,வீட்டிற்க்கு வந்ததும் தெரியவில்லை.

காலையில் எழுந்து வாந்தியெடுத்தபோது ஓடி வந்து தலையை பிடித்த பாட்டி முகர்ந்து பார்த்து விட்டு ” அட நாசமா போனவனே. நீ கெட்டது பத்தாதுன்னு இந்தப்பிஞ்சுக்கொழந்தைக்கு நஞ்சக்குடுத்திருக்கியே?” என தலையில் அடித்துக்கொண்டு பாட்டி அழ,அதைக்கண்டு ஒன்றும் புரியாமல் சங்கரனும் ‘ஓ’ என அழுதே விட்டான்.

முள் ஏறிய போது கால் வலித்ததை விட தற்போது தான் குடித்தது மோர் இல்லை, போதை தரும் கள் எனத்தெரிந்ததும் மனசு மிகவும் வலித்தது ஐந்து வயது சங்கரனுக்கு.

Print Friendly, PDF & Email

நிழல் பேசுகிறது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

பர்ஸனல் ஸ்பேஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)