கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 11,175 
 
 

”ஆத்தோவ்! சோத்தைக் கொணாந்து வய்யி. பசில உசிர் போகுது!” – உரத்த குரலில் முழங்கியபடியே திண்ணையில் உட்கார்ந்தான் தூசிமுத்து. கத்திரி வெயிலு போடு போடுன்னு போட்டாலும் திண்ணையில அம்புட்டுச் சூடு தெரில. ஓலைக் கூரை. சாணி போட்டு மொழுகுன மண் திண்ணையில்லா! குடிசைக்கு உள்ள இருந்து கையில் சுளகோடு பிரமு வந்தா. சுளகுல வீடு தூர்த்தி அள்ளுன குப்பை. மெயின் ரோட்டைத் தாண்டி இருக்குற குப்பைக்கிடங்குல போய்க் கொட்டிட்டு வரணும். பால்மாடு இருக்கு. அதோட சாணமும் குடிசையில சேர்ற குப்பையும் பெரமாதமா ஒண்ணும் சேர்ந்திராது. ஆனா, நடுகை வர்றப்ப அய்யம்பெருமா நாய்க்கர் வந்து உரத்தை அள்ளிட்டுப் போவார். ஞாயமான வெலையையும் குடுத்துருவார்.

அதான் பிரமு குப்பைக்குழியை ரொப்பிக்கிட்டு வாரா. தெருவுல மாடுக சாணம் போட்டா, அதையும் விட மாட்டா. அள்ளிட்டு போய்க் குப்பைக்குழில சேத்துருவா. கூலி வேலைக்கிப் போவா. பாலக் கறந்து விப்பா. செட்டும் சிக்கனமுமாத்தான் ஓட்டுதா பிரமு. தூசிமுத்தைத்தான் மலை போல நம்பிக்கிட்டிருந்தா. அவனும் அப்படித்தானே இருந்துக்கிட்டு வந்தான். இப்பமில்லா திருகுதாளம் போட ஆரம்பிச்சிருக்கான்.

குப்பையைக் கொட்டிட்டு வந்து சோத்தை வைப்பாங்கிற எண்ணத்தோட இருந்தான் தூசிமுத்து. அப்பம் பாத்து, ”ஏட்டி ஏ பெரமு! அறநூறு ரூவாய்க் கடன் சொல்லி வாங்கிட்டு வந்தியே? ஏம்ப்ட்டி, ஒங்களுக்கெல்லாம் வாங்கணும்னா மட்டும்தான் கை நீளுமோ? குடுக்கணும்னா மடங்கிக்கிடுமோ? இப்ப வைக்கணும் பணத்தை. இல்லே… நடக்கதே வேறே!”ன்னு கத்திக்கிட்டே வந்தா எசக்கியம்மை.

”வாக்கா! ஏம் போட்டுத் தொண்டத் தண்ணிய வத்தவைக்கே. நான் என்ன ஊரவிட்டா ஓடிருவேன்? ஒரு பத்து நாள் போட்டும், சப்சாடாத் தந்து தீத்திருவேன். தந்த நன்னியும் வாங்கித் தின்ன நன்னியும் நெஞ்சு முட்ட இருக்கு, தந்துர்றேன்”னு நயந்த குரல்ல சொன்னா பிரமு. குப்பை அள்ளுத ஓட்டைச் சுளகை ஆட்டுக் கல்லுக்கு மேலேவெச்சா.

”ஒன்னோட நன்னியும் கின்னியும் ஆருக்கு வேணும். எனக்கு எம் பணம் வேணும். சன்னஞ்சன்னமா வாங்கிச் செலவழிச்சியே அதை வய்யி முதல்ல. என்னவோ ஒம் பேரன் தூசிமுத்து பெரிய எடத்துல வேல பாக்கான். அம்புட்டும் அள்ளிக் குமிச்சுக் கொண்டாந்துருவான். கடனைத் தீத்துர்றமுன்னு சொல்லில்ல வாங்குன. இப்ப சாக்குப்போக்குச் சொல்தியே எதுக்கு?”

”சரிக்கா, ஒரு பத்து நாள் பொறுத்துக்க. வேல மெனக்கெட்டு வந்து அலையாண்டாம். நானே கொண்டாந்துருதேன், போதுமாக்கா?”

”ஆமா, ஒம் பேரப்பய அந்தாக்ல பொட்ணம் கெட்டிக் கொண்டாந்துருவான், அத நீ அவுத்து எடுத்துத் தந்துறப் போறியாக்கும்? ஏட்டி பிரமு! எனக்கு ஆயிரஞ் செலவுட்டி. நாளைக்கிக் கரன்டு பில்லு கெட்டலேன்னா பீச புடுங்கிட்டுப் போயிருவான். ரேசன்ல சாமாங்க வேங்கணு. வேளார் கடைல பாக்கி அடைக்கணும். தந்தாப் போச்சு, தரலேன்னா நான் மனுசி போலவும் பேச மாட்டேன், மனுசியாவும் இருக்க மாட்டேன்!”னு பெரிய குரல்ல கத்துனா எசக்கியம்மை.

தலையை ஆட்டிக் கத்துனப்ப பாம்படங்க ரெண்டும் தோள்பட்டையில் உரசினதுக. வள்ளியூரு மண் பொத்தை கணக்கா இருந்த பெரிய உடம்பைத் திருப்பிக்கிட்டு அவ போனா. பிரமுவோ, குறுகி மறுகி நின்னா.

அந்தத் தவிப்போட திண்ணையில் இருந்த பேரனைக் கோவத்தோட பாத்தா. பேரனைத் தலை மேலே தூக்கி வச்சுக்கிட்டு ஆடினவதான் பிரமு. இப்ப மாறிட்டா. சூழ்நிலை மாறவைக்குது.

”வயிறு பசிக்கி ஆத்தா. சோத்தப் போடேன். அப்பமே கேக்கமில்லா!”ன்னு பசி மயக்கத்தோட சொன்னான் தூசிமுத்து. படபடன்னு பட்டாசு வெடிக்காப்ல அவனை ஏசிப் பேசணுமுன்னு இருந்துச்சு பிரமுவுக்கு

‘பெரிய முதலாளிட்ட வேலைக்கிப் போறான், உண்டனச் சம்பளம் வாங்கியாருவான்னு நெனச்சில்லா கைநீட்டி கடன் வாங்குனேன். அதுவும் இந்தப் பயலுக்காகத்தான! கோயில் கொடைக்கு ஊருசனம் பூராவும் புதுத் துணி உடுத்துமே. பேரப்பய பழசோட திரிவானேன்னு நெனச்சில்லாக் கடன் வாங்கிப் புதுசு வாங்கிக் கொடுத்தேன். பண்டம் பலாரத்தோட பொங்கிப் பொரிச்சுப் போட்டேன். இப்பம் இப்படிப் பண்ணிப்போட்டானே!’ன்னு நெனைச்சா.

”ஆத்தா பசிக்கித்தா!”ன்னு திருப்பியும் ஓலம் போட்டான். ஒரு பெரிய வெங்கலக் கும்பா நிறையப் பழைய சோத்தைப் போட்டு நீராகாரத்தை ஊத்திக் கொண்டுவந்து அவன் மின்னாடி வெச்சா. ஒரு சின்ன அலுமினியத் தட்டுல ரெண்டு பச்சை மிளகாயும் வெங்காயமும் உப்பும் வச்சு, கும்பாவுக்குப் பக்கத்துல வெச்சா. தூசி முத்துக்கு முகம் கோணிப்போச்சு.

”என்ன ஆத்தா! தொடு கறி ஒண்ணுமே இல்லாம வெறுஞ்சோத்த வெச்சுட்டுப் போற? பழைய கறி கிறி இல்லியா?”ன்னு கேட்டான்.

”தொடு கறி வேணும்னா, என் தொடையை அறுத்துத்தான் கறிவெச்சுத் தரணும்!”னு வெடுக்குனு சொல்லிட்டு குடிசைக்குள்ளாற போய்ட்டா. மொனங்கிக்கிட்டே கஞ்சியக் குடிக்கலானான். பசி ருசி அறியாதுங்கது சரிதான்.

மளமளன்னு சாப்பிட்டு முடிச்சிட்டான். தூசிமுத்து கையக் கழுவுன அடுத்த நிமிசமே பிரமு வெளில வந்தா. எதிர் வீட்டு மாமரத்தப் பாத்துக்கிட்டே, ”மொதலாளி மூணு தடவை ஆள் விட்டுட்டார். ஒடனே போணு மாம்!”னா, யாருக்கோ சொல்றது போல.

”அதான் மாட்டம்னு சொல்லிட்டு வந்திட்டனே. பொறகெதுக்கு ஆளையும் தேளையும் விட்டுக் கூப்டுதாரு?”ன்னான் எரிச்சலோடு. ”மாட்டம்னுட்டு வீட்ல கெடந்தா, இனிம இந்தப் பழைய சோறும் பச்ச மிளகாயும்கூடக் கெடைக்காது. துணிய நனைச்சு வயத்துல கட்டிக்கிட்டுதான் கெடக்கணும்”னா கோவத்தோட.

”கோவப்படாத ஆத்தா!”

”அதெப்படில கோவப்படாம இருக்க முடியும்? மீச மொளைச்ச ஆம்பளப்பய வெளில போயி நாலு பணத்தைச் சம்பாரிச்சால்ல ஒரு பொண்ணக் கிண்ணப் பாக்க முடியும். தாலி சீலயக் கட்டச் சொல்ல முடியும். இப்ப எங்கன போயிப் பொண்ணக் கேட்டாலும் மாப்ளயோட சம்பாத்தியம் எம்புட்டுன்னுல்லா மொதல்ல கேக்காக. இப்டி வெங்கமொட்டையா நின்னேன்னா எவம்ல பொண்ணு தருவான்?”

”ஒம்பாட்டுக்குப் பேசிட்டே போகாதே ஆத்தா. நானொண்ணும் சும்மா இருக்கல. தோதான வேலையத் தேடிட்டுதான் இருக்கேன்.”

”ஆமா, தேடுன… நல்லா! எவனாச்சும் இருக்கத விட்டுப்போட்டுப் பறக்கதப் பிடிக்க அலைவானால? மொதலாளி என்னன்னா, ஒன்னத் தேடி ஆள் விடுறார். நீதானே போகவே மாட்டம்னு சாதனை பண்ணிட்டு இருக்கே. கை நெறையத் தருவாரேடா!”

”பிடிக்கலே, வரலேங்கேன். எம் மனசுக்குப் பிடிச்சாப்ல ஒரு வேலை ஆப்டட்டும், கூட்டுக் கால்ல ஓடிருவேன் ஆத்தா”ன்னான் தூசிமுத்து.

”ஆமாலே, நீ டவுன்ல போயிப் பெரிய படிப்புப் படிச்சவன்லா, ஒண்ணாந்தேதி மாசச் சம்பளம் வாராப்ல ஒசந்த வேலை கெடைக்கப் போவுது. அலையிதியேல பொச கெட்ட நாயி. ஏய், பெரிசா கினாக் கண்டுக்கிட்டு இரியாதே. வெரலுக்குத் தக்கன வீங்குனா போதும்.”

”நானும் அப்படித்தான நெனைக்கேன். பெரிசா ஒண்ணும் பேராசை எல்லாம் கெடையாது.”

”அதானே வீட்டோட கெடக்கே. ஒங்கம்மைக்குச் சீக்கு வந்தப்ப, நீ ஆறு மாதப் பிள்ளை. ஒண்ணரை வருசம் கெடையிலே கெடந்துட்டுப் போயும் சேர்ந்துட்டா. ரெண்டு வயசுல ஒரு மகன் இருக்கானேன்னும் பாராம, ஒங்கப்பன் ஒருத்தியக் கூட்டிட்டு ஓடிப் போய்ட்டான். ஒத்த மனுசியா நின்னு ஒன்னய நான் ஆளாக்கப் பட்ட பாடு களத்து மேட்டுச் சொடலக்கித்தான் தெரியும். ஒனக்கொரு கலியாணத்த மூச்சுப் பார்க்கலாம்னா, நீ வேலை சோலிக்குப் போகாம திருகுதாளம் பண்ணிக்கிட்டு அலையுதே. நான் போறன்னிக்கு ஒம்புள்ளைக எனக்கு நெய்ப் பந்தம் பிடிக்கணும்னு ஆசைப்படுதேம்ல. ஹும்… எங்க நடக்கப் போகுது?”

”அதெல்லாம் நடக்கும். எம்புள்ளைக ஒனக்கு நெய்ப் பந்தம் பிடிச்சுத்தான் அனுப்புவாக.”

”அதான் சொல்தேன், ஒரு வேலை சோலிக்குப் போ, தாலி சீலயக் கட்டுவம்னு. அந்த மொதலாளிதான் ஒன்னவிட்டாக் கெட்டி இல்லேன்னுக் கூப்புட்டுக் கூப்புட்டு விடுதாரே, போயேம்ல. தங்கமான ஆளுன்னு நீதான சொல்லுவே. இப்பம் எதுக்குல போமாட்டங்கெ. கை நெறைய சம்பளம் வாங்கிட்டு வருவியே!”

தூசிமுத்து பதிலே சொல்லாம இருக்கவும், அவ சொன்னதைப்பத்தி ரோசனை பண்ணுதான்னு சந்தோசப்பட்டுக்கிட்டா பிரமு. அது நெசந்தான். பழைய முதலாளிகிட்டயே திரும்பியும் வேலைக்குப் போகணும்னு எண்ணம் வந்தாச்சு. வேலையைவிட்டு நின்னதும், அந்த மொதலாளியோட சங்காத்தமே இனி ஆகாதுன்னுதான் முடிவே பண்ணிவெச்சிட்டான். ஆனா, இப்பங் கொஞ்ச நாளா வேற மாதிரி எண்ண ஆரம்பிச்சிட்டான். பழைய மொதலாளிட்ட போலாம்னு ஒரு எண்ணம் வருது.”

”தூசிமுத்து. ஏ… என்னப் பெத்த ஐயா, உண்டனச் சம்பளம் தார ஆளுல்லா. இப்ப நீயா வலுவுல போய் போறதில்லேல்லா. அவுகதான கூப்புடுதாக. போயிரு ராசா”ன்னு, கெஞ்சிக் கொஞ்சிச் சொன்னா பிரமு. ‘ஆட்டுங்’காப்ல தலையை ஆட்டுனான் தூசிமுத்து. அப்பிடியே மனசு குளுந்துபோயிட்டா பிரமு. ”இப்பமே போயிருல ஐயா, பேண்டு சட்டைய எடுத்துப் போட்டுக்கிட்டே போயிரு. அப்பதாம்ல ஒடனே லாரில போகத் தோதா இருக்கும்”னு ஏகப்பட்ட சந்தோசத்தோட சொன்னா. என்னவோ அப்பமே பேரன் கை நெறையச் சம்பளத்த வாங்கிட்டு வந்து தந்துட்டாப்ல மனசுக்குள்ள துள்ளுனா.

கை நடுங்குது. பேச்சு சரியா வர மாட்டங்கு. எப்படியோ சொல்லி முடிச்சுட்டு போனைக் கீழே வச்சான் தூசிமுத்து. பெரும் பாரம் ஒண்ணு நெஞ்சை விட்டு நீங்குனாப்ல தெரிஞ்சுச்சு.

பாரம்தான். மனசுக்குள்ள இருந்த பாரம்தான். சாமியக் கும்புட்டுட்டு லாரியைக் கொல்லம் ரோட்ல ஓட்ட ஆரமிச்சான். பக்கத்துல கிளீனர் டேவிட். மனசுக்குள்ள வேதனையோட அனுதாபம் சுரத்துச்சு. ”பாவம்! இவனையுமில்லா?”ன்னு மனசுக்குள்ல பொலம்பிக்கிட்டான். வேற வழி தெரியலையே!

பாலகிருஷ்ணனைப் போய்க் கூட்டியாரச் சொன்னான் கம்சன். எதுக்கு? அவன் நடத்தப் போற தனுர் யாகத்துக்காகவா? இல்லே, இல்லவே இல்லே. யாகத்துக்குன்னு வரவழைச்சிட்டு, கிருஷ்ணனைக் கொல்லத்தான். மந்திரி அக்ரூரருக்கு இந்த ரகசியமெல்லாம் நல்லாத் தெரியும். ஆனாலும் அவர் கூப்புடப் போறார். கம்சனோட பாவச் செயலுக்குத் துணையாய் இல்லே. கண் குளிரக் குளிர கண்ணனோட தரிசனத்தைக் காணத்தான். இந்த நல்லதுக்காகப் பழியை ஏத்துக்கப் போறார்.

தூசிமுத்துவும் இப்ப இதத்தானே பண்றான். களப்பலி ஆகப் போறானே! செங்கோட்டை-பிரானூர் பார்டர்ல போலீஸ் ரெடியா நின்னுக்கிட்டிருக்கு. கரெக்டா இவன் வர்ற லாரியை மடக்கிரும். செக் பண்ணும். கேரளாவுக்கு எரிசாராயக் கடத்தல்னு இவனையும் கிளீனரையும் கைது பண்ணும். லாரியைப் பறிமுதல் பண்ணிரும். அப்புறம் இவனை இடிக்கிற இடியிலே அவனோட மொதலாளி பண்ணுத அம்புட்டுக் கடத்தல் சமாசாரங்களையும் விலாவாரியாச் சொல்லி மாட்டிவிட்ருவான்ல.

எரிசாராயம், ரேசன் அரிசி, அடிமாடுகள், மணல்னு எம்புட்டுக் கடத்தல்கள்! அப்புறம் கட்டப்பஞ்சாயத்து வேற. போன்ல இவன் தகவல் குடுத்திட்டில்ல லாரிய எடுத்தான்.

நாட்டுப்பற்றும் சமூக அக்கறையும் இவனுக்கு ரொம்ப ரொம்ப அதிகம். அதான் சமூக விரோதம் பண்ற மொதலாளிகிட்ட இவன் வேல பாக்க மறுத்தான். அப்புறம் யோசிச்சு, மொதலாளிய மாட்டிவிட நெனச்சுத்தான் வேலைக்கின்னு போனான்.

‘நம்பிக்கையான டிரைவர்’னு மொதலாளி புகழ்வார். இனி..?

பிரானூர் பார்டர்! போலீஸின் கைகாட்டலுக்கு, தூசிமுத்து லாரியை நிறுத்தலானான்!

– 03rd டிசம்பர் 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *