மயிலண்ணையைக் காணவில்லை!
இதிலேதான் படுத்திருந்தார்.. விறாந்தையில்! படுத்த பாய் விரித்தபடி கிடக்கிறது. ஆளைக் காணோம்! எங்கே போயிருப்பார்.. இந்த இரவு நேரத்தில்?
விறாந்தையில் எனது படுக்கையிற் கிடந்தவாறே விழிகளாற் துளாவி முற்றத்தைப் பார்த்தேன். வெளியே இருளில் மறைந்து மறைந்து ஓர் உருவம் அசைவது போலத் தெரிகிறது. அங்கே என்ன செய்துகொண்டிருக்கிறார்.. மயிலண்ணை? நல்ல உன்னிப்பாகக் கவனித்தேன். அட, அது மயிலண்ணையில்லை – மரம்! மங்கலான நிலா வெளிச்சத்தில் காற்றில் அசையும் செடிகளின் நிழல்கள்.. யாரோ அசைவதைப் போலத் தோற்றமளிக்கிறது!
வாசற்படியில் நாய் படுத்திருக்கிறதா என எட்டிப் பார்த்தேன். வீட்டிலிருந்து யாராவது இரவில் வெளியே இறங்கிப் போனால் நாயும் பிறகாலே போய்விடும். திரும்ப வந்து அவர்கள் படுத்த பிறகுதான் அதுவும் படியிலே படுத்துக்கொள்ளும். நாய் அங்கேதான் கிடக்கிறது. அப்படியானால் மயிலண்ணை வெளியேயும் போகவில்லை. உள்ளேயும் இல்லையென்றால் ஆளுக்கு என்ன நடந்தது?
அம்மாவை எழுப்பி விஷயத்தைச் சொல்லலாமா என எண்ணினேன். அம்மா எவ்வித அங்க அசைவுகளுமின்றி.. ஒரு பக்கம் சரிந்த வாக்கில் நல்ல உறக்கம் போலிருக்கிறது. எத்தனை நாட்கள் கெட்ட உறக்கமோ?
‘தம்பி உன்னை நினைச்சு நினைச்சு ராவு ராவாய் நித்திரையில்லையடா!”
‘சும்மா.. கனக்க யோசிச்சு மண்டையைப் போட்டு உடைக்காதையுங்கோ.. நான் அரசாங்க உத்தியோகக்காரன் எண்டு அத்தாட்சி காட்டினால் பிடிக்கமாட்டாங்கள்.”
அம்மாவின் ஆறுதலுக்காக இப்படிச் சொல்லுவேன். சிறிய அரச உத்தியோகத்துக்காக கிளிநொச்சி வந்தவன் நான். மிகுதி நேரத்தில் விவசாயத்தில் ஈடுபடலாம் என்ற எண்ணத்தில் கிளிநொச்சியிலே காணி வேண்டி வீடு கட்டி ஸ்திரமானவன்.
‘நல்ல கதை பேசுகிறாய்.. உன்ரை வயசில எத்தனை பெடியளை.. அவங்களும் அரசாங்க உத்தியோகக்காறர்தானே.. பிடிச்சுக்கொண்டு போனவங்கள்.. பிறகு என்ன கதி எண்டு இன்னும் தெரியாது!”
நடுச் சாமங்களிலும் இருள் அகலாத விடியப்புற நேரங்களிலும் தேடுதல்வேட்டை நடக்கிறது. இதனால் அம்மாவுக்கு உறக்கமில்லை. என்ன வயது நல்ல பதமான வயசு! அம்மா எனக்காக கண்களில் எண்ணெயை ஊற்றிக் காத்திருப்பாள். படலைப் பக்கம் போய் ஏதாவது அசுகை தென்படுகிறதா என்று பார்த்திருப்பாள். நான் உறங்கும் பொழுதெல்லாம் அவள் விழித்திருப்பாள்.
இதனால் அம்மாவின் நித்திரையைக் குழப்ப மனம் வரவில்லை. இன்னும் சற்று நேரம் பொறுத்திருந்து பார்க்கலாம்.. மயிலண்ணையின் கதி என்னவென்று.
மயிலண்ணை எனக்கு நெடுநாட் பழக்கமுடையவரல்ல.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஓர் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் நாட் சம்பள அடிப்படையில் சேர்ந்து சில நாட்கள் வேலை செய்தவர். அந்த சில நாட்களில் அவர் ஒரு சிறந்த தொழிலாளி என்பதைக் கவனித்தேன். எனது தோட்டத்தில் சில வேலைகள் இருந்தன. அதற்கு இவர்தான் ஆமான ஆள் எனத் தோன்றியது.. விசாரித்தேன்.
‘மயிலண்ணை எப்பிடிச் சுகசேமங்கள்?.. வேலைகள் எப்படிப் போகுது?”
‘நல்லமுங்க!”
‘இந்த வேலை.. இந்தக் கிழமையோடை முடிஞ்சிடுமே.. அதுக்குப் பிறகு என்ன செய்யப் போறீங்கள்?”
‘ஏதாச்சும் செய்யணுங்க.. சும்மா இருக்க முடியுங்களா?”
‘அது சரி.. நீங்கள் எவ்விடம் ஊர்?”
‘வவுனியாவுங்க!”
‘சொந்த இடமா?”
‘நாங்க.. மலைநாட்டிலிருந்து.. கலவரத்தோட வந்து வவுனியால குடியேறினவங்க!”
‘பிறகு ஏன் இந்தப் பக்கம்?.. பெண் சாதி.. பிள்ளைகள் எல்லாம் இருக்கா?”
‘ஒண்ணுங்க!”
‘என்னப்பா இது! மற்றாக்களுக்கு ரெண்டா? எல்லாருக்கும் ஒரு பொம்பிளைதானே?”
‘அட.. நீங்க ஒண்ணு! நான் புள்ளையைச் சொல்லுறேனுங்க! பய அம்மாக்காரியோட அங்கிட்டுத்தான் இருக்கான். நாட்டு நெலமைகளாலை அங்கிட்டுப் புழைப்புக் கெட்டுப்போச்சுங்க.. அதுகள பட்டினி போடேலுமா?.. ஏதாச்சும் பாக்கலாமென்னுதான் இந்தப் பக்கமா.”
‘என்ன செய்யிறது கடவுள் எங்களையெல்லாம் இப்படிப் போட்டுச் சோதிக்கிறார்..” எனப் பெருமூச்செறிந்து மௌனம் அனுஷ்டித்தேன். பிறகு எனது விஷயத்திற்கு வந்தேன்.
‘என்ரை தோட்டத்தில கொஞ்ச வேலை இருக்கு.. செய்யுங்கோவன். என்ரை வேலையும் முடிஞ்ச மாதிரி.. உங்களுக்கும் ஏதாவது கிடைச்ச மாதிரி.. அது முடிய வேறை எங்கையாவது வேலை சந்தித்தால் எடுத்துத் தாறன்!”
‘நல்லமுங்க.!”
மயிலண்ணை என்னோடு வீட்டுக்கு வந்தார். மூன்று வேளை சாப்பாடும் கொடுத்து வீட்டிலேயே தங்கியிருக்க ஒழுங்கு செய்தேன். ஐந்து நாட்களாக கொத்து வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்.
வீட்டுக்கு வந்த அன்றே நன்றாக ஒட்டி விட்டார். பிறத்தி ஆள் மாதிரி இல்லாமல் தன் வீடு போலப் பழகுவார். ஏதாவது ஒரு பிரச்சினையை நானும் அம்மாவும் அலசிக் கொண்டால் தானும் அதற்குள் நுழைந்துகொண்டு அபிப்பிராயம் தெரிவிப்பார். எனது அறைக்குள் நான் நுழைந்துவிட்டால் அவரும் வந்து இன்னொரு கதிரையில் அமர்ந்து ஏதாவது புத்தகத்தை எடுத்து அதில் மூழ்கிவிடுவார். கதிரையில் அட்டனக்காலிட்டு அமர்ந்தவாறே.. ‘அம்மா .. ரீ கொண்டு வாங்க!” என ஓடர் கொடுப்பார்.
‘இவனுக்கென்ன.. மூளைப்பிசகோடா தம்பி.. வேலைக்காரன் என்றால் வேலைக்காரன் மாதிரியெல்லோ இருக்கவேணும்?” என மெல்லிய அதிர்ச்சியுடன் அம்மா சில வேளைகளில் என்னிடம் குறைப்பட்டுக்கொள்வாள். மயிலண்ணையின் இன்னும் சில இயல்பான செய்கைகள் அவர் மேல் அம்மாவுக்குச் சற்று எரிச்சலையூட்டின என்பதையும் கவனித்தேன் –
சாப்பிட அமர்ந்துவிட்டால் மூக்கு முட்டப் பிடிப்பார். ‘அம்மா இந்தக் கறி சரியில்லை – அதுக்கு உப்புக் காணாது – இதுக்குப் புளி இல்லை – நெடுகலும் ஒரே கறியைச் சாப்பிடேலாது.. நாளைக்கு இறைச்சி சமையுங்கோ!” என இப்படி ஏதாவது சாப்பாட்டைப் பற்றி மிக உரிமையோடு விமர்சிப்பார். சாப்பிட அமர்ந்துவிட்டால் வாயைப் பொத்திக்கொண்டு அம்மா போடுவதைச் சாப்பிட்டுவிட்டு எழுகிற பழக்கம் எனது வழக்கம். என்னோடு அவரை ஒப்பிட்டுப் பார்த்ததில் அம்மாவுக்குத் தாங்காமல் இருந்திருக்கும்.
‘நீ கொடுக்கிற இடம் தான்.. அவனவனை அவனவன்ரை இடத்திலை வைக்கவேணும்.. இவன் ஆள் ஒரு பேயன்போல இருக்கு. மனிசரோடை என்னமாதிரிக் கதைக்கிறதெண்டு தெரியாதவன்.. என்னத்தைக்கொண்டு துலைவானோ தெரியாது!”
இதையெல்லாம் கேட்டு மெல்லிய சிரிப்போடு போய்விடுவேன். அம்மா சொல்வதற்கு எதிர் நியாயம் பேச எனக்கு விருப்பமில்லை. அதை ஒத்துக்கொள்ளவும் சம்மதமில்லை. மயிலண்ணை கொஞ்சம் வித்தியாசமான குணசித்திரம்தான். சொல்லப்போனால் அந்தக் குணசித்திரம்தான் நான் அவரிடத்தில் கூடிய ஈடுபாடு கொள்ளக் காரணமாயுமிருந்தது. வேலையென்று இறங்கிவிட்டால் முரட்டுத்தனமான வேகத்தில் செய்வார். நூல் பிசகாத வேலை. பொய் களவில்லாத தொழிலாளி என்பதால் அவரிடத்தில் ஒருவித மரியாதையும் இருந்தது.
இப்பொழுது இந்த மனுசன் எங்கே போய்த் தொலைந்திருக்கும் எனக் குழம்பினேன். அம்மா சொல்வது போல அவர் மூளை பிசகியவர்தானோ? அல்லது அவரது முகத்தை முறித்து அம்மா ஏதாவது சொல்ல, அதனால் அவர் என்னிடமும் சொல்லாமல் கொள்ளாமல் போயே போய்விட்டிருப்பாரோ?
எனக்கு அம்மாவின்மேற்தான் கோபம் வந்தது. மயிலண்ணையை வீட்டுக்குக் கூட்டிவந்த அன்றே அவரது முன்னிலையிலேயே.. ‘தம்பி இந்தக் காலத்தில் ஊர் பேர் தெரியாதவங்களை.. வீட்டுக்குள்ளை கொண்டுவந்து வைக்கிறது நல்லதோ?” என ஆட்சேபித்தாள். அப்பொழுது நான் அம்மாமேற் சினங்கொண்டேன்.
இப்பொழுது –
சற்றும் எதிர்பாராத விதமாக மயிலண்ணை.. எனது அறைக்குள்ளிருந்து வெளிப்பட்டார். விறாந்தைக்கு வந்து என்னையும் அம்மாவையும் திரும்பிப் பார்த்துவிட்டு தனது படுக்கையில் படுத்துக்கொண்டார்.
தேடுதல் வேட்டைக்கெனப் பட்டாளம் வரும் அசுகை தெரிந்ததால், பின்பக்கமாக ஓடி வில்லங்கங்களில் மாட்டிக்கொள்ளாமல் மறைந்துவிடலாம் என்பதற்காகத்தான் அறைகளுக்கு உள்ளே படுக்காமல் வெளியே விறாந்தையில் படுத்திருந்தோம். மயிலண்ணையும் எங்களோடு படுத்திருந்தவருக்கு அறைக்குள்ளே என்ன வேலை?
அவரது சிறிய பணப்பையும் சில உடுதுண்டுகளும் எனது அறையிலேதான் இருந்தன. அதற்காகவும் அவ்வறைக்குள் அடிக்கடி போய்வரும் பரிட்சயம் அவருக்கு உண்டு, அறையில் எப்போதும் ஒரு அரிக்கன் லாம்பு ராவிளக்காக எரிந்துகொண்டிருக்கும். மனைவிக்குக் கடிதம் எழுதுவது போன்ற காரணங்களுக்காக அறைக்குள் போயிருக்கலாம் என என் மனதை ஆறுதலடைய முயற்சித்தேன்.. ஆனால் கடிதம் எழுத ஒரு நேரமில்லாமல் இந்த நேரத்திலா?
அப்படியானால்..
இந்த மாதத்துக்குரிய எனது சம்பளத்தை இன்று எடுத்திருந்தேன். இரவு ஏழு மணியைப்போல மயிலண்ணையும் அறையில் இருந்தபொழுதுதான்.. பணத்தைக் கொண்டுவந்து எண்ணி மேசை லாச்சியில் வைத்தேன்.
‘இண்ணைக்கு சம்பளம் போட்டாங்களா?” என்று கேட்டார்.
‘ஓமோம்.. சம்பளம் எடுத்தனான்தான்.. இப்ப பிரச்சினைகள் எண்டு சம்பளக்காசையும் செக் ஆகத்தான் தாறாங்கள்.. அதை மாத்திறதுக்கும் ஒவ்வொரு கடையாய்த் திரிஞ்சு.. அதுக்கொரு கொமிசன் குடுத்து எத்தனை பிரச்சினைகள்..”
‘உங்களுக்கு சம்பளம் சுமாரா.. எவ்வளவுங்க கெடைக்கும்?”
சொன்னேன். மயிலண்ணை அதைக் கேட்டு பெருமூச்செறிந்தது போலிருந்தது. பிறகு தனது பணமுடைபற்றியெல்லாம் சொன்னார். தனக்கு இவ்வளவு பணம் கிடைக்குமென்றால் ஒரு பிரச்சினையுமே இருக்காது என்றார்.
‘திருட்டு ராஸ்கல்! உன்னை நான் நம்பியது எவ்வளவு தப்பாகப் போய்விட்டது. பணத்தை நான் எண்ணியபொழுதும்.. லாச்சியிலே வைத்தபொழுதும் ஓர் அப்பாவியைப்போலப் பார்த்துக் கொண்டிருந்தாயே?”
அதை இப்பொழுது தனது பையிலே போட்டிருப்பார். விடிந்ததும் விடியாததுமாக எழுந்துபோய் அந்தப் பையைக் கைப்பற்ற வேண்டும்.
இதற்குப் பிறகு எனக்கு நித்திரை வராமல் இருந்தது. ஒரு கள்வன் வீட்டுக்குள் இருக்கும் உணர்வு ஒருவித பயத்தையும் நெஞ்சில் ஏற்படுத்தியது. இந்த இரா நேரத்தில் எழுந்து எதையும் விசாரிக்கும் துணிவும் வர மறுத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அம்மாவுக்கு இது தெரியவந்தால் இப்பொழுது நாலு வீடுகளுக்குக் கேட்குமளவுக்குக் குழறத் தொடங்கினால்.. என்ற எண்ணமும் என்னைக் கட்டுப்படுத்தியது.
இரவோடு இரவாக ஆள் மாறிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என எண்ணிக்கொண்டு, மயிலண்ணையை நோட்டம் விட்டவாறே உறங்குவதுபோல் பாசாங்கு செய்துகொண்டிருந்தேன்.
ஆனால்.. சற்று நேரத்தில் உண்மையிலேயே கண்கள் சொருகி உறங்கிவிட்டேன் போலிருக்கிறது.
எனது இடது காலில் யாரோ பிடித்து இழுப்பதுபோல உள்ளுணர்வு தட்டியது. கால்களை அவுக்கென இழுத்தேன். ஆனால் பிடி விடாமல் மீண்டும் இழுக்கப்பட எனது உறக்கம் கலைந்தது. உடனே கால்களை உதறியவாறு துடித்துப் பதைத்துக்கொண்டு எழுந்தேன். எனது கால்மாட்டிற்கு, தனது படுக்கையிலிருந்து தவழ்ந்து வந்து.. எனது காலைப் பிடித்து இழுத்தது.. அம்மா!
‘சத்தம் போடாமல் இரு!” என அம்மா சைகையால் தெரிவித்தாள். இரவு படுக்கும்வரை அம்மா நல்லாத்தானே இருந்தாள் அதற்குள்ளே என்ன நேர்ந்தது? பதற்றம் அடங்காமலே அம்மாவின் பக்கமாக அமர்ந்தேன்.
மிக இரகசியமான குரலில் ‘தம்பி!.. இவன் மயிலு..” என அம்மா ஏதோ கூறுவதற்கு வாயெடுக்க நான் மயிலண்ணையின் படுக்கையைப் பார்த்தேன்.
மயிலண்ணையைக் காணவில்லை!
‘கள்ள ராஸ்கல்!” என உறுமிக்கொண்டு எழுந்தேன். எக்கவுண்ட் கடைப்பணம், கைமாறிய சில்லறைக் கடன்கள், அது இது என எல்லாவற்றையும் எனது சம்பளப் பணத்தில் நாளைக்குத்தான் தீர்க்க எண்ணியிருந்தேன். ‘காசையெல்லாம் இவன் கொண்டு தொலைஞ்சிருப்பானோ!’
எனது கையைப் பிடித்து அம்மா அமர்த்தினாள்.
‘உவன் மூளைப் பிசகுகாறன் எண்டு சொன்னால் நம்புறாயில்லை. இப்ப நடக்கிற கூத்தைப் பாரன்.. அப்போதை பன்ரெண்டு மணிபோலை வெளியிலை இறங்கிப் போனான்.. ஒண்டுக்கு ரெண்டுக்குப் போறானாக்கும் எண்டு நினைச்சால்.. முத்தத்திலை நிண்டு மேகத்தை.. மேகத்தைப் பார்த்துக்கொண்டு நிக்கிறான்.. விசரர் பயித்தியக்காரர் மாதிரி அங்காலையும் இஞ்சாலையும் நடக்கிறான். பிறகு இருந்தாற்போலை.. அறைக்குள்ளை நுழைஞ்சான்..!”
‘அறைக்கை இருந்து வந்ததை நானும் கண்டனான்.”
‘கேளன்!.. நித்திரை கொள்ளிறமாதிரிச் அசுகையில்லாமல் பார்த்துக்கொண்டே கிடந்தன்.. இவன் அறைக்குள்ளாலை வந்து உருண்டு பிரண்டு கொண்டு கிடந்தான்.. இருந்தாப்போலை பிறகும் முத்தத்துக்கு இறங்கிப் போனான். பழைய மாதிரி மணித்தியாலக் கணக்காய்.. வானத்தைப் பார்த்துக்கொண்டு நிண்டிட்டு.. பிறகும் விறு விறு எண்டு அந்த அறைக்குள்ளை நுழைஞ்சான்.. ஆள் இப்ப உள்ளுக்குத்தான்!”
‘இஞ்சை விடுங்கோ!” என நான் எழுந்தேன். மயிலண்ணையை இரண்டில் ஒன்று பார்த்துவிட்டுத்தான் மறுவேலை – அம்மா என் கையைப் பிடித்து இழுக்க, எழும்பிய வேகத்திலேயே விழுந்தேன்.
‘கொஞ்சம் பொறுமையாய் இரடா தம்பி!.. அவனைப் பார்த்தால் பேய் பிடிச்சவன் மாதிரியும் இருக்கு.. கையிலை ஆப்பிடுறதாலை மாட்டிப் போடுவான்.. போகாதை!”
‘அந்தாளுக்கு விசருமில்லை.. ஒண்டுமில்லை.. ஏதாவது சுருட்டிக்கொண்டு போகலாமெண்டு பாக்குது.. என்ரை சம்பளக்காசு வைச்சதும் ஆளுக்குத் தெரியும்.. என்னை விடுங்கோ.. அவரைக் கவனிக்கிறன்!”
‘கள்ளனெண்டால்.. பிறகு அதே அறைக்குள்ளை மினக்கெடமாட்டான். முத்தத்திலை வெள்ளி பார்த்துக்கொண்டு நிக்கமாட்டான்.. இண்டைக்குப் பறுவமெல்லே!.. கனத்த நாள்!.. அதுதான் ஆளுக்கு உச்சத்திலை நிண்டு ஆட்டுது!.. பேசாமல் படு!.. விடிஞ்சதும் ஆளை அனுப்பிவிடுவம்!”
இதைக் கேட்க எனக்கு உச்சத்தில் ஆட்டுவது போலிருந்தது. அம்மா சொல்லுவதுகூடச் சரியாக இருக்கலாம். மேசை லாச்சியில் உள்ள பணத்தை எடுக்கவேண்டுமானால் இவ்வளவு நேரம் மினைக்கெடத் தேவையில்லைத்தான். அப்படியானால்.. அம்மா சொல்லுவது சரியானால் மயிலண்ணை அறையுள்ளிருந்து எந்த நேரமும் வெளிப்பட்டு வரலாம்.. வந்து முன்னே இருக்கும் கதிரையைத் தூக்கி என் தலையில் விளாசலாம்..
‘அப்ப.. படுப்பம்!.. என்ன?” என அம்மாவிடம் சொன்னேன்.
படுக்கையை வியர்வை நனைத்தது. பேய் என உண்மையான ஒரு சாமான் இருக்குமோ என்று மனம் ஆட்டம் கொண்டது. நல்ல உறக்கத்திலிருந்த சில நாய்கள் எங்கோ பேய் பிசாசுகளைக் கண்டவை போலக் குரைக்கத் தொடங்கின. பின்னர் இராகமெடுத்து ஊளையிட்டன. பேய்களைக் கண்டால்த்தான் நாய்கள் ஊளையிடும் எனப் பாட்டி சிறுவயதில் சொல்லித் தந்த கதைகள் விசுவரூபம் எடுத்துக்கொண்டு வந்தன.
அந்த நேரமாகப் பார்த்து மயிலண்ணை மீண்டும் அறையிலிருந்து வெளிப்பட்டார். வந்த வீச்சிலேயே படுத்துக்கொண்டார். ஒரு நிம்மதிப் பெருமூச்சு என்னிடம் வெளிப்படு முன்னரே.. திரும்ப எழுந்து அமர்ந்து.. எனது படுக்கைiயை நோட்டம் விட்டார். நான் கண்களை இறுக்கமாக மூடினேன்.
பின்னர் சொல்லிவைத்ததுபோல திடுக்கிட்டு விழித்தேன். விழித்ததுமே மயிலண்ணையின் படுக்கையைப் பார்த்தேன்.
மயிலண்ணையைக் காணவில்லை!
அந்த வேகத்தில் அம்மாவின் படுக்கைப்பக்கம் பாய்ந்தேன். ‘அம்மா!.. அம்மா!..” நெஞ்சு படபடக்க எழுப்பினேன்.
‘மயிலண்ணையைக் காணயில்லை.. இதுக்கு ஒரு முடிவு காணாமல் விடமாட்டேன்.. ஒண்டில் அவர் அல்லது நான்!” என ஆக்ரோஷம் கொண்டு எழுந்தேன்.
‘தம்பி .. நில்லடா.. நில்லடா..!”
அம்மா பின்னால் ஓடி வர.. நான் அறைப் பக்கமாக (வீர) ஆவேசத்துடன் சென்று, வாசலில் சட்டென நின்றேன்.
‘எதுக்கும் ஒருக்கால் எட்டிப் பாப்பம்!”
ஆள் இல்லை. அறையில் நுழைந்து எனது சம்பளப் பணத்தைப் பார்த்தேன். அது அப்படியே இருக்கிறது. ரோச்லைட்டைக் கையில் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு அறைகளாக ஒருவரை ஒருவர் பிடித்தவாறு மயிலண்ணையைத் தேடினோம். ஆனால் ஆளைக் காணக் கிடைக்கவில்லை – காசும் களவு போகாதபடியால்.. அம்மா சொல்லுவதுபோல அவருக்கு ஏதாவது பிசகு இருக்கும் என நம்பினேன்.
பிறகுதான் கவனித்தேன். வாசற்படியில் நாயையும் காணோம். ‘நாயையும் காணவில்லை.. ஆள் வெளியிலைதான் போயிட்டார்..” என்றவாறு படியால் இறங்கினேன். ஆட்டக்காவடிக்குக் கயிறு பிடிப்பதுபோல அம்மா எனது கையைப்பிடித்து இழுத்தவாறு பின்னால் வந்தாள். ‘கையிலை.. ஆப்பிடுறதாலை மாட்டிப்போடுவான்.. கவனம்!”
ஒரு கொட்டன் பொல்லையும் கையிலெடுத்துக்கொண்டு ‘அவர் என் தலையில் போடுவதற்கு முன்னர் நான் அவர் தலையில் போட்டுவிடலாம்’ – தேடுதல் வேட்டையைத் தொடங்கினோம்.
எங்காவது மயிலண்ணை தென்பட்டால்.. கொட்டனையும் ரோச் லைட்டையும் போட்டுவிட்டு வந்த திசையில் திரும்ப ஓடுகிற பயம் கால்களை ஆட்டிக்கொண்டிருக்க.. தேடுதல் வேட்டை நடந்தது.
முதலில் கேற் பக்கமாகப் போய்ப் பர்ப்போம். பூட்டப்பட்ட படலை அப்படியே பூட்டுடன் இருந்தது.
பின்னர் பின் பக்கமாக வளவுக்குள்ளால் நடந்தோம்.. ஒவ்வொரு ஆட்கள் குந்திக்கொண்டிருப்பது போல.. வெட்டி எரிக்கப்பட்ட காட்டு மரங்களின் குற்றிகள் தோற்றமளித்தன. எனது கையில் இருப்பது கொட்டனாக அல்லாமல் ஒரு துவக்காக இருந்தால்.. குந்திக்கொண்டிருக்கும் அந்த மரங்களின் கதி என்னவாயிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. ரோர்ச் ஒளியை முன்னே பாச்சியபடி மெல்ல.. மெல்ல முன்னேறினோம்.
‘ஸ்றச்ச்.. ஸ்றச்ச்..”
‘தம்பி!.. தம்பி!.. நில்லடா ஏதோ சத்தம்!”
அம்மா சொல்லுமுன்னரே நான் நின்றுவிட்டேன். காதுகளைக் கூர்ந்து கேட்டேன்..
‘ஸ்றச்ச்.. ஸ்றச்ச்.. ஸ்றச்ச்..”
மேற்கொண்டு நடக்க முடியாமல் கால்கள் பின்னின. எனினும் ஒரு நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டதுபோல கால்களை முன்னோக்கி இயக்கினேன்.
அதோ!.. தோட்ட வரம்பில் நாய் படுத்திருக்கிறது.. நிலா வெளிச்சத்தில்.. கத்தரிக் கன்றுகளுக்குப் பாத்தி கட்டும் வேலையில் மயிலண்ணை ஈடுபட்டிருக்கிறார்! மண்வெட்டி மண்ணைக் கோலக்.. கோலக்.. கோல, ஸ்றச்ச்.. ஸ்றச்ச்.. ஸ்றச்ச்!
எனது குழம்பிய மூளையை ஒருநிலைப்படுத்தி ‘மயிலண்ணோய்!” என்று கூப்பிட்டேன்.
ரோர்ச் ஒளியை அவர் மீது பாய்ச்சினேன்.
குனிந்து மண்வெட்டியைப் பிடித்து நின்ற நிலையிலேயே தலையை மட்டும் நிமிர்த்தி ஒரு பார்வை பார்த்தார். அட்டகாசமான ஒரு சிரிப்பில் பற்கள் ரோர்ச் ஒளியில் பளிச்சிட்டுத் தெரிந்தன.
நான் ஓடுவதற்குத் தயார்! எனக்கு முன்னே அம்மாவும் தயாராக நிற்பது தெரிந்தது! ‘கையிலை மண்வெட்டியோடை நிக்கிறான்.. கவனம்!”
கால்களை உசார்ப்படுத்திக்கொண்டே ‘மயிலண்ணை.. உதென்ன வேலை?” என்றேன்.
‘நல்ல நிலவு தானுங்களே,”
‘என்னப்பா.. வேலை செய்யிறதுக்கு ஒரு நேர காலமில்லையா?”
‘எங்கட.. ஊரிலை.. நிலா வெளிச்சத்திலயெல்லாம்.. வேலை செஞ்சு நல்ல பழக்கமுங்க!”
எனக்கு எரிச்சலேற்பட்டது.
‘அது.. உங்கடை ஊரிலை!.. இஞ்சை என்னைச் சுட்டுப் போட்டிடுவாங்களே.. வாங்கோ.. வந்து படுங்கோ!.. விடிஞ்சாப்பிறகு செய்யலாம்!..”
மண்வெட்டியைத் தூக்கிக்கொண்டு அவர் எங்களை நோக்கி நடக்கத் தொடங்க, நாங்கள் விரைவாக வீட்டை நோக்கி நடந்தோம். மயிலண்ணை நாயுடன் விளையாடிக்கொண்டு முற்றத்துக்கு வந்தார்.
அவரைப் பார்த்து.. ‘என்ன வேலையண்ணை.. இந்த நேரத்திலை?”
அம்மா அவர் பற்றிச் சொன்ன விஷயமாக எனக்கு இன்னும் சந்தேகம் இருந்தது.
‘தூக்கம் வரவில்லீங்களே!”
‘நல்ல புதினமப்பா!.. பகல் முழுக்க வேலை செய்யிறீங்கள் உடம்பு அசதியாயிருக்கும்.. வடிவாய் நித்திரை கொள்ளலாமே?”
அவர் சுய உணர்வோடுதான் இருக்கிறாரா அல்லது ஏதாவது ஆட்டுகிறதா என அறியும் ஆர்வம் எனக்கு!
‘உடம்பு அசதிதானுங்க.. ஆனால் நம்ம சம்சாரத்துக்கு இது பெறுமாசமுங்க.. இண்ணைக்குப் பறுவம்.. கனத்தநாள் தானுங்களே?.. வயித்து நோ எடுத்திருக்குமெண்ணு ஒரு உணர்வு உள்ளுக்கை சொல்லிச்சு. தனிய இருக்கிறவள் ஒரு அவசரம் எண்ணா என்ன செய்வா?..”
‘பாவம்.. எப்படியாச்சும் போய்ப் பாக்கணும் எண்ணு தோணிச்சு.. உங்ககிட்ட வேலையையும் ஒத்துக்கிட்டன். முடிக்காம போறதும் சரியில்ல. இதயெல்லாம் நெனச்சுத்தானுங்க தூக்கம் வரல்ல.. நிண்ணு நிண்ணு யோசிச்சுப் பார்த்தன்!.. அப்புறம் உங்கட அறையில போய் பொஸ்தகங்க வாசிச்சன்.. ரெண்ணு மூணு தடவ இப்படியே செஞ்சும் தூக்கம்தான் வந்தபாடில்லை..
அதுக்கப்புறம்தான்.. தீர்மானமாத் தோட்டத்தில இறங்கினன். இப்ப பிடிச்சேண்ணா.. காலை பத்துக்கிடேலே பாத்தி கட்டி முடிச்சிடுவன்.. அப்புறம் ஊருக்குப் போகலாமெண்ணுதான்..”
மயிலண்ணைக்கு முன்னால் நான் சுருங்கிப்போக.. எனக்கு முன்னால் அம்மா சுருங்கிப்போக.. அவரை எங்களால் அளக்க முடியாதிருந்தது!
– சிரித்திரன் சஞ்சிகையிற் பிரசுரமானது – 1986.