பால்கனியில் நின்று லைட்டரை உயிர்ப்பித்தான் சரவணன். விலை உயர்ந்த பில்டர் சிகரெட் மெல்லப் புகைய ஆரம்பித்தது. புகையை நெஞ்சு நிறைய நிரப்பி மெல்ல வெளியேற்றினான். மனம் பரபரப்பு அடங்கி சற்றே லேசானது. அப்படி ஒன்றும் செயின் ஸ்மோக்கர் அல்ல அவன். பரபரப்பாக மனம் படபடக்கும்போது ஆசுவாசம் அடைய அவ்வப்போது சிகரெட். அதுதான் அவனுடைய சீக்ரெட்! கண்மூடி ஆழ்ந்து சுவாசித்தான். நெஞ்சில் பரவசம்.
எப்போது ஏழாம் தேதி வரும் என்று எதிர்பார்ப்பு. வழக்கமாக சிகரெட் புகைத்தால் படபடப்பு அடங்கும். ஆனால் இன்று கூடியது. மெல்ல சிரித்துக் கொண்டான். சிகரெட்டிற்குக் கூட என் மனஓட்டம் தெரிகிறது.
புகைவளையம் மேலே எழும்ப எழும்ப, அவன் அடிமனது ஆசைகளும் கூடவே மேலெழுந்தது. மெல்லக் கண்களை மூடிக் கொண்டான்.

நிஷா!
என்ன ஒரு ஸ்வீட் நேம்! ஆறு மாதம் ஆகிவிட்டது. அவள் அலுவலில் சேர்ந்து. ‘கேம்பஸ்’ இண்டர்வியூ மூலம் தேர்வானவள் படுசுட்டி, கெட்டிக்காரி. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவள். அலுவலகத்தில் அனைவருமே அவளிடம் தனி மரியாதையுடன் நடந்து கொண்டனர். அவள் மேல் ஒரு கண் சரவணனுக்கு. அவன் நினைத்தப் பெண்களை சுவைக்காமல் விட்டதில்லை. அவன் விரித்த வலையில் சிக்காத மான்களே இல்லை எனலாம். அப்படி ஒரு முகராசி அவனுக்கு. வயது நாற்பதை எட்டி விட்டாலும், தோற்றம் முப்பதிலேயே. ஜிம் – யோகா என்று பாடிவை நன்கு மெயின்டென்ஸ் செய்பவன். நல்ல ஊதியம். அளவான குழந்தைகள். அதிகம் கேள்வி கேட்காத மனைவி. அப்புறம் என்ன சரவணன் காட்டில் ‘அடாத மழைடா, அடைமழைடா’ தான்.
இளம் வயதிலேயே மேனேஜராக பிரமோஷன்; தன் அதிகாரம், அழகு, பணம் அத்தனையும் பயன்படுத்தித் தனக்குப் பிடித்தவளை வளைத்து ருசிக்கும் ஜெகஜாலம்! இது ஆபீசில் அரசல் புரசலாகத் தெரிந்தாலும் யாருக்கும் வெளியே சொல்லும் தைரியம் இல்லை; காரணம் மேலிடத்தில் அவனுக்கு இருந்த செல்வாக்கு, மற்றும் சொல்வாக்கு. ஆண்டுக்கு ஆண்டு அதிக டன் ஓவர் காட்டும் திறமை அனைவருடைய வாயையும் கட்டிப் போட்டு இருந்தது.
அவனுடைய மிடுக்கையும், நுனிநாக்கு ஆங்கிலத்தையும், தாராள செலவுகளையும் கண்டு தானே வலிய வந்து விழும் பெண்களைத்தான் இதுவரை சுவைத்து இருக்கிறான். இவர்களுள் விதிவிலக்கு நிஷா. அவனுடைய சாதுர்யமான காய் நகர்த்தலைத் தனது சாதுர்யத்தால் கண்டு கொள்ளாதது போலவே நடக்கும் நிஷா. இவள் மரக்கட்டையா? அல்லது மண்டைக்கனமா? தெரியாமல் துவண்டான்.
பின்னர் ரகசிய விசாரணை மூலம் அவள் பின்புலம் அறிந்ததும் லேசான நிம்மதி.
அல்பாயுஸில் போய்ச் சேர்ந்த அப்பா, நாலு வீட்டில பத்துப் பாத்திரம் தேய்த்துக் குழந்தைகளை கௌரவமாக ஆளாக்கிய அம்மா, ப்ளஸ் டூ படிக்கும் தம்பி, பத்தாவது படிக்கும் தங்கை. புறநகர் பகுதியில் ஒண்டுக் குடித்தனம். கார்ப்ப ரேஷன் ஸ்கூலில் மாநிலத்தில் இரண்டாவது ரேங்க் வாங்கிய நிஷா, ஸ்காலர்ஷிப் மூலம் கல்லூரிப் படிப்பு. அங்கும் மெடல். அப்புறம் என்ன? கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தற்போது சரவணனுக்குப் பர்சனல் செகரட்டரி.
எது நடந்தாலும் ஏன் என்று கேள்வி கேட்க நாதியில்லாத நிலைமை. எனவே தைரியமாக தனது அசுத்த காயை நகர்த்தினான்.
ஆம்!
அடுத்த வாரம் பெங்களூரில் நடக்கும் போர்டு மீட்டிங்கிற்கு நிஷாவையும் அழைத்துச் செல்வது. அதை அவள் மறுக்க முடியாது. அங்கு வைத்தே அவளை வீழ்த்துவது. மினிடம் ஒரு மோதிரம், சுடிதார். மேக்ஸிமம் பட்டுப் புடவை, ஒரு நெக்லஸ் வேலை முடிந்தது. அப்புறம் என்ன, ஊலலல்லாலாதான். அவளிடமும் சொல்லி விட்டான். ரயில் டிக்கட்டும் ரிசர்வ் செய்தாகி விட்டது. ஆனந்த வெள்ளத்தில் மிதந்தபடி அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்தான்.
ஆடிவெள்ளி. நிரம்பி வழியும் துர்க்கையம்மன் சன்னிதி. நீர் வழியும் விழிகளுடன் நிஷா. தாயே மகிசாசுரனை சம்ஹாரம் செய்த நீ, இந்த மேனேஜர் அசுரனிடம் இருந்து என்னைக் காப்பாற்று. கணகணவென்று மணியோசை. கற்பூர ஆரத்தியில் அன்னையின் மந்தகாசப் புன்னகை. குங்குமம் வாங்கி சற்றே நிம்மதியுடன் புறப்பட்டாள் நிஷா.
சாலை விளக்குகள் ஒளிர திடுக்கிட்டு எழுந்தான். ஓ மைகாட். மணி ஏழு ஆகப் போகிறது. புறப்பட்டான். தனது சிவப்பு மாருதியில் ஏறிப் பறந்தான். வீடே நிசப்தமாக இருந்தது. வாசலில் வரவேற்கும் பவானி எங்கே? ஹாரன் சத்தம் கேட்டதும் ஓடிவந்து கேட்டைத் திறக்கும் நந்தினிக் குட்டியையும் காணோம். உள்ளே விரைந்தான்.
ஹாலில் பேயறைந்த கோலத்தில் பவானி. அழுது வீங்கிய முகத்துடன் நந்தினிக் குட்டி. அரண்டு போய் நிற்கும் மகன் ராகுல். என்ன நடக்குது, திகைத்தான்.
‘என்னங்க, இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா? நம்ம புள்ளை படிக்கும் ஸ்கூல் ஹெட்மாஸ்டர் வந்து… வந்து…’
‘சொல்லித் தொலைடி.
‘நம்ம புள்ளையத் தொடக் கூடாத இடத்துல எல்லாம் தொடறாராம். நாளைக்கு ஸ்பெஷல் கிளாஸ் உனக்கு மட்டும். வராட்டிப் பெயில் போட்டுடுவேன்னு சொல்றாராம். யார் கிட்டயும் சொன்னா டி.சி. குடுத்துடுவேன், ரெட் மார்க் கோடன்னு மிரட்டுராராம். ஏங்க இப்படி வேலியே பயிரை மேயலாமா?’ தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.
பூமியே காலடியில் நழுவுவதாக உணர்ந்தான் சரவணன். சாரி நிஷா. என்று முனகியபடியே ரயில் டிக்கட்டைக் கிழித்து எறிந்தான். ‘நந்து குட்டி அப்பா இருக்கேன் பயப்படாதே, உன்னை வேறு ஸ்கூலில் சேர்த்து விடுகிறேன். உங்க கரஸ்பாண்ட் என் பிரண்ட், என்றான் ஆதரவுடன். எதுவோ அவனுக்கு விளங்கியது.
எதிர்ச் சுவற்றில் படபடக்கும் காலண்டரில் மகிஷாசுரமர்த்தினி புன்முறுவலுடன்.