நாடக உறுப்பினர்கள்
சேகர் – டாக்டர், சுசீலாவின் காதலன்.
சுசீலா – கருணாகரத் தேவரின் மகள்.
கருணாகரத் தேவர் – சுசீலாவின் தந்தை ஜெகவீரனிடம் சிக்கியிருக்கும் இரகசியத்துக்காக நடுங்குபவர்.
ஜெகவீரன் – கருணாகரத் தேவரின் மைத்துனன் . தேவரை ஆட்டிப்படைக்கும் கிராதகன்.
சொர்ணம்- கருணாகரத் தேவரால் கைவிடப்பட்ட அபலை.
ரத்னம் – சொர்ணத்தின் மகன், காலக் கொடுமையால் திருடனாக மாறியவன்.
பவானி – சுசீலாவின் தாய்.
மற்றும் மாரி, மன்னார், மருதூர் மிட்டாதாரர், தோட்டக்காரன், வைத்தியர், சீமான், வேதம், ஆறுமுகம் ஆகியோர்.
காட்சி -1
திரை விலகியதும் அந்திவானம் நிலவு உதயமானதும் தாமரை மூடிக்கொள்வது. அல்லி உதயமானதும் மலர்வது. தொலைவில் கீதம் கேட்கிறது.
காட்சி -2
இடம் :- ஒரு மாளிகை
உட்புறம். இருப்போர் :- பெண், ஆடவன்.
(ஒரு பெண் அலங்காரம் செய்து கொள்கிறாள். அவள் கணவன், மெல்ல ஓசைப்படாமல் வருகிறான். அவள் காணாத சமயமாகப் பார்த்து. தலையில் சூடிக்கொள்ள வைத்திருந்த மல்லிகையை மறைத்துவிட்டு , ஏது மறியாதவன் போலிருந்து விடுகிறான். அவள் மல்லிகையைத் தேடுகிறாள். அவனுடைய குறும்புப் பார்வையிலிருந்து விஷயத்தைத் தெரிந்து கொள்கிறாள்.)
அவள் : ஏமாற்றுவதிலே , உங்களுக்கு ஈடு. யாரும் கிடையாது.
அவன் : நான் சொன்னபடி வந்துவிட்டேனே. ஏமாற்ற வில்லையே.
அவள் : போதும் விளையாட்டு, கொடுங்கள்.
அவன் : ஆஹா! கண்ணே! நானே கொடுக்க வேண்டு மென்று தான் ஆவலாக இருந்தேன்; நீயே கேட்கும் போது என் ஆனந்தம் இரட்டிப்பு அல்லவா ஆகும். (முத்தமிடச் செல்கிறான்)
அவள் : நான், இதுவா கேட்டேன்?
அவன் : வேறு எதைக் கேட்டாய்?
அவள் : மல்லி.
அவன் : வாங்கி வரவில்லையே.
அவள் : (அவன் கன்னத்தில் வேடிக்கையாக இடித்து) கொடுங்கள், எப்போதும் விளையாட்டுதான், குழந்தை போல்.
அவன் : (வானத்தைக் காட்டி ) அதோ பார், மல்லிகைத் தோட்டம் வா! மாடிக்கு (இருவரும் செல்கின்றனர்)
காட்சி -3
இடம்:- மற்றோர் மாளிகை.
இருப்போர் – தாய், சிறுமி
(தாய், சற்று சோகமாகக் காணப்படுகிறாள். சிறுமி அவளிடம் வந்து, கைபிடித்து இழுத்து…..)
சிறுமி : அம்மா! மாடிக்குப் போகலாம் வாம்மா . சந்தமாமாவைப் பார்க்கலாம், வா!
தாய் : கோதி ! தொல்லை கொடுக்காதே. எனக்கு உடம்பு சரியில்லை .
சிறுமி : போம்மா. புளுகு. நேத்து நீயே சொன்னாயே, மாடியிலே போயி நிலாவைப் பார்த்துகிட்டே இருந்தா ரொம்பச் சந்தோஷமா இருக்கும்னு. அப்பா கூட சிரிச்சாங்களே. இன்னக்கி மட்டும் நிலா அழகா இல்லையா?
தாய் : (குழந்தையை மார்புரத் தழுவிக்கொண்டு ) கண்ணல்லவா! எனக்கு இன்று நிலவு பிடிக்கலே, நீ மட்டும் வேண்டுமானா போய் மாடியிலே விளையாடு கண்ணு.
சிறுமி : மாட்டேன் போ. நான் கூப்பிட்டா வருவாயா? அப்பா கூப்பிட்டா வருவே. வரட்டும், வரட்டும், அப்பா கிட்டச் சொல்றேன்.
தாய் : அப்பா! நல்ல அப்பா ! நிலா எவ்வளவு அழகாக இருந்தா அவருக்கு என்ன? அந்தந்தக் குடும்பத்திலே, ஆனந்தமாக இருக்கிறாங்க. அவருக்கு ஏதடி கண்ணே அதிலே நினைப்பு. அவர் இன்னேரம் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ!
சிறுமி : எங்கேம்மா போனாரு அப்பா? ஏம்மா இன்னும் வரலே?
தாய் : (பெருமூச்சுடன் ) அவரா? அவருக்குத்தான் அந்தப் பாவி ராஜு, சொக்குப் பொடி போட்டுவிட்டானே . அலைகிறார் அவன் கூடச் சேர்ந்து கொண்டு.
காட்சி -4
இடம் :- பாதை.
இருப்போர்:- ராஜு, கோபால், புதியவர்.
(கிண்டி ரேஸ் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டு, ராஜூ பேசுகிறான். கோபால் கவலையுடன் இருக்கிறான்.]
ராஜு : கோபால்! நாளைக்குக் கட்டாயம் தக்தீர், வின் அடிக்குது. எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கட்டு. இந்தத் தடவை, வின் கட்டாயம்.
கோபால் : ராஜூ! உன் பேச்சைக் கேட்டுப் போன வாரம் தக்தீர் மேலே ஆறு வின் டிக்கட் எடுத்தேன். (பெருமூச்சு)
ராஜா : (சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு) அதற்கு என்னடா செய்வது? இந்தத் தடவை கட்டாயம், தக்தீர்தான் அடிக்கும். சந்தேகமே வேண்டாம்.
(இதைக் கேட்டுக்கொண்டே அங்கு வந்து சேர்ந்த புதியவர்)
புதியவர் : யாரப்பா உங்களை ஏமாற்றிவிட்டது? தக்தீர், பிளேசுக்குக்கூட வராதே. இந்தத் தடவைவின் அடிக்கப் போவது நாட்டி மெயிட். யாரிடமும் சொல்லிவிட வேண்டாம். நாட்டி மெயிட் ஜெயிக்கும் என்று நமக்கு, ஜாக்கி ஜான்சன் சொன்னான். நமக்கு அவன் ரொம்பச் சிநேகிதம்.
கோ : ஏன் சார் ! நாட்டி மெமிட் கட்டாயம் வருமா? நம்பிக் கட்டலாமா சார். சார் எனக்கு இதுவரையிலே 500 ரூபாய்க்கு மேல் நஷ்டம் சார். ஒயிப் கழுத்துச் செயினைக் கூட மார்வாடியிடம் வைத்துவிட்டேன் சார். இந்த ரேசிலே ஜெயிக்காவிட்டா, என் பாடு ரொம்பத் திண்டாட்டமா போயிடும் சார்.
பு : நமக்குத்தான் சார் நஷ்டம். ஆனா, இப்ப நான் சொன்னது இருக்கே, இது நிச்சயம். நாட்டி மெயிட் மேலே தான் நான் பத்து வின் டிக்கட் எடுக்கப்போறேன்.
கோ : என்னமோ சார், நானும் உங்களைத்தான் மலைபோல நம்பி, நாட்டி மெயிட் மேலே கட்டிப் பார்க்கிறேன்.
பு : கட்டுங்க சார் , பயப்படாமே.
ரா : கோபால்! எதற்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேணும். தக்தீர் ஜெயிக்கும் என்று எனக்குச் சொன்னது யார் தெரியுமா? நம்ம ஜம்பு.
பு : யார் அந்த ஜம்பு?
ரா : என்ன சார் ! ஜம்புலிங்கத்தைத் தெரியாதவங்க யார் சார் ரேஸ்கோர்சிலே இருக்காங்க. பெரிய ஆள் சார் ஜம்பு. ரேஸ் கோர்சிலே, டீ ஷாப் இல்லே, அதுகூட நம்ம ஜம்பு மச்சானுடையதுதான்.
பு : ஓ அப்படின்னா அந்த ஆசாமி சொல்லறதும் சரியாத்தானே இருக்கும். நமக்குச் சொன்ன ஆசாமியும் சரியான ஆள் ஜாக்கி ஜான்சன்
ரா : அதனாலேதான். தக்தீர் நாட்டி மெயிட் இரண்டு குதிரை மேலேயும் கட்டி ஆடணும். அதுதான் சரி.
பு : ஆமாம்! ஜோசியர் குப்பு சாஸ்திரி, ஒரு சூக்ஷமம் சொன்னார். குதிரைகள் ரவுண்டுக்கு வருகிறபோது. உன்னிப்பாக கவனிக்கணும். எந்தக் குதிரை வலது பக்கமா அடிக்கடி திரும்பிப் பார்க்குதோ, அதன் மேலே கட்டணும்; கட்டாயம் ஜெயம் கிடைக்கும் என்று சொன்னார்.
ரா : அப்படியானா, மூணு குதிரை மேலேயா பணம் கட்டணும்?
கோ : மொத்தம் எத்தனை குதிரை ஓடும் சார் அந்த ரவுண்டிலே?
ரா : ஒன்பது.
பு : பேஷ் ஒன்பதுக்கு மூணு. மும்மூணு ஒன்பது, கணக்குச் சரியா இருக்கு சார். ஆமாம் சார்! மற்ற ரவுண்டுகளுக்கு?
ரா : வேறே ஏதேதோ பார்த்து வைத்திருக்கிறோம்.
ரா : ஜூலாவா? அது இது வரை பிளேஸ் கூட அடித்ததில்லையே சார்.
பு : நாட்டி மெயிட் கூடத்தான். என்னவோ, அதுதான் நம்ம செலக்ஷன். நான் வர்ரேன் சார். (போகிறார்.)
ராஜு : நாட்டி மெயிட் நல்ல குதிரைதான். அரபி தேசத்தது. ஆகாகான் கூட அதை விலைக்கு வாங்கணும்னு பிரயத்தனப்பட்டாராம். முடியலை.
கோ : என்ன நிறம்?
ரா : கருப்பு.
கோ : அப்படியானா கட்டாயம் ஜெயிக்கும் ராஜூ, நாளைக்குச் சனிக்கிழமை. சனிபகவான் கருப்பு, அவர் வாகனம் காக்கை, அதுவும் கருப்பு, குதிரையும் அதே நிறம். கட்டாயம் ஜெயிக்கும்.
ரா : நான் காலையிலே சந்திக்கிறேன். வீட்டுக்குப் போ. இன்னேரம் உன் சம்சாரம் என்னைத்தான் கண்டபடி பேசி இருப்பாங்க. ராஜு போகிறான்.)
(கோபால் குதிரைகளைப் பற்றியே எண்ணிக் கொண்டு மயங்கினவன் போலச் செல்கிறான். எதிரே ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண் வருவதைக் கவனியாமல், மோதிக் கொள்கிறான். அப்போதும் ரேஸ் கவனமாகவே இருந்ததால்…)
கோ : நாட்டி மெயிட்!
ஆங்கிலோ இந்திய மாது :- (கோபமாக) பிள் டி பூல் (Bloody Fool).
ராஜ : சாரி, எக்ஸ்குயூஸ்மீ லேடி .
[இப்படிக் கூறிவிட்டுச் செல்கிறான். வழியில் ரேஸ் புத்தகத்தைப் பார்க்க, அதிலே நாலாவது ரேசில் பிளடி பூல் என்ற குதிரை ஓடுவது குறிப்பிடப்பட்டிருக்கவே, தக்தீர், நாட்டி மெயிட், பிளடி பூல் என்று கூறிக்கொண்டே வீடு நோக்கி நடக்கிறான்.]
காட்சி -5
இடம் : மற்றோர் வீட்டுக்கூடம்.
இருப்போர்: வயோதிகன்; அவனுடைய இரண்டாந் தாரம்.
(இரண்டாந்தாரம் நாகரிகமாக உடுத்திக் கொண்டு, கர்நாடக உடையிலே இருக்கும்
கணவனைப் பார்த்துக் கூறுகிறாள்.]
ம: தா! உனக்கு வேறே எதுவும் அகப்படவையா? மேலுக்குப் போட்டுக்கொள்ள இதுதானா கிடைச்சுது?
க: ஏன்? இதுக்கு என்னாவாம்?
ம : ரொம்ப அழகாத்தான் இருக்கு. போயி, சரிகை வேஷ்டியை எடுத்துப் போட்டுகிட்டு வா. எதுக்குப் பொட்டியிலே பூட்டி வைச்சிருக்கே பூஜை போடறயா?
(கணவன் உள்ளே போகிறான், ஜரிகை வேஷடி எடுக்க மனைவி அதற்குள் ஆடையைச் சரிப்படுத்திக் கொள்கிறாள். அவன் வருகிறான்.)
க : அம்மா கண்ணு கண்ணு
(ஒரு இளம் விதவை வருகிறாள்.)
க: என்னாம்மா செய்து கொண்டிருந்தே?
பெண் : பக்த விஜயம் படிச்சிகிட்டு இருந்தேம்பா .
க: படிம்மா படி. இப்ப யாரு கதை படிக்கறே.. ?
பெண் : துளசிதாஸ் கதை.
க : படிம்மா படி. போறதிக்கு நல்லது. உங்க சின்னம்மா சினிமா பாக்கணும்னா, நான் போயிட்டு வாரேன் கூட. ஜாக்ரதையா கதவைத் தாள் போட்டுகிட்டு படுத்துக்கிட்டு இரு, வந்துவிட்றேன் .
பெ : செய்யப்பா
ம : அதுக்கு என்னாடி முகத்தை அத்தினி கோணலாக்கிக்கிட்டே?
க : வா , தா, வா! வீணா சண்டைக்கு நிற்கறேயே.
(கணவனும் மனைவியும் போகின்றனர். இளம் விதவை ஏக்கத்துடன் இருந்துவிட்டு….)
பெ : கிளம்பி விட்டாரு மைனங் மாதிரி. அவதான் அப்பாவைப் பம்பரமா ஆட்டிவைக்கறாளே. ஆவட்டும் ஆவட்டும், ரெண்டு பேருக்கும் புத்தி வருகிறாப்போல் செய்து காட்டறேன். நான் இங்கே பக்த விஜயம் படிக்க வேணுமாம். அவங்க ரெண்டுபேரும் சினிமா பார்க்கப் போகணுமாம். எப்படி இருக்குது நியாயம்?
காட்சி -6
இடம் : சாவடி.
இருப்போர்: ஊர் வம்பர்கள்.
(பலர், நிலா வெளிச்சத்திலே தமாஷாகப் பாடுகிறார்கள்; இரண்டு கட்சியாகப் பிரிந்து கொண்டு, சைவ வைணவத்தைப் பற்றிய தர்க்கப் பாட்டை )
அரி நாராயண கோவிந்தா என்று சொல்லி
நாமம் போட்டுக் கோணும்
திருநாமம் போட்டுக் கோணும்
[பாட்டு முடிந்த பிறகு]
பழனி: அப்பேன்! சைவம் பெரிசா வைஷ்ணவம் பெரிசா என்பது பற்றி, முன்னாலே ஒரு நாள் எனக்கும் எம்பெருமாள் பிள்ளைக்கும் தர்க்கம் நடந்தது தெரியுமா?
வெங்கடேசன் : தர்க்கம் நடந்துதா? என்னா முடிவுக்கு வந்திங்க?
பழனி : என்னா முடிவா? முடிவிலே, அவன் ஆஸ்பத்திரிக்குப் போனான் கட்டுக் கட்டிக்கொள்ள; நானு மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போனேன், கேஸ்கட்டைத் தூக்கிக்கிட்டு.
(அடடே! அதுபோல இப்பவேண்டாம்’ என்று பலரும் கூற, கும்பல் கலைந்து போகிறது.)
காட்சி -7
இடம் : பாதை.
இருப்போர்: கள்ளன், கான்ஸ்ட பிள்கள்.
(ஒரு கள்ளனைப் பிடித்து இழுத்துக் கொண்டு போகிறான் ஒரு கான்ஸ்டபிள். எதிரே வரும் நண்பன் கான்ஸ்ட பிளைப் பார்க்கிறான்.)
ந : ஏன் சார் ! எங்கே திருடினான்?
கா : இவனா? பலே பக்கா! கன்னம் வைச்சிக்கிட்டே இருந்தான். கண்டுபிடிச்சு இழுத்து வர்ரேன். நிலவு கூட இருக்குது. பய, யாருமில்லாத வீடா பாத்து தோட்டத்துச் சுவரைத் தாண்டி உள்ளே போயி, கன்னம் வைக்கிறான்.
ந : யாரு வீட்டிலே?
கா : அந்த வேடிக்கையை ஏன் கேக்கறே போ. கள்ள பார்ட் குள்ளப்ப ஆசாரி இல்லே. அவன் வீட்டிலே கன்னம் வச்சான் பய.
ந: பலே பேர்வழி தான். கள்ளபார்ட் குள்ளப்ப ஆச்சாரி, நூலேணி போட்டு ஏறுவது, கன்னம் வைக்கறது, சுவரைத் தாண்டறது இதெல்லாம் நாடகத்திலே செய்து காட்டினா,
இவன் கள்ளபார்ட் வீட்டிலேயே கன்னம் வைச்சானா?
கா : இந்த நிலாவிலே, அவங்கவங்க எவ்வளவோ தமாஷாப் பொழுது போக்கறாங்க. நம் தலை எழுத்தைப் பாரு. இந்த மாதிரிப் பயலைப் பிடிச்சி இழுத்துக்கிட்டுப் போறதா இருக்கு. வருகிற வழியிலே பூந்தோட்டத்திலே, என்னா அழகாத்தான் இருக்கு தெரியுமா?
ந : அதுவா! இந்த நிலாக் காலம்னாலே, பூந்தோட்டத்துப் பக்கம் ஜோடி ஜோடியாக உலாவுமே.
கா : ஆமாம்பா! (போகிறார்கள்.)
காட்சி -8
இடம் :- பூந்தோட்டம்
இருப்போர் :- டாக்டர் சேகர், சுசீலா,
நிலவு அழகாகப் பிரகாசிக்கிறது. டாக்டரும் சுசீலாவும் களிப்புடன் பாடுகின்றனர். காட்சி துவக்கம் “வானில் உறைமதியே” என்ற பாட்டுடன்.
பாடல் முடிந்ததும், சில விநாடி மெளனம். பிறகு…
சே : (சுசீலாவின் கூந்தலைக் கோதியபடி) சந்திரன் உதயமானவுடன், விரிந்த தாமரை குவிந்து விடுகிறதே. அது ஏன் சொல் பார்ப்போம்.
சு: ஏன்?
சே : கதிரவனைக் கண்டதும் கமலம் களிப்படைகிற தல்லவா?
சு : ஆமாம்.
சே : அதுபோலவே, சந்திரனைக் கண்டதும், பத்மாவதிக்கு வெட்கம் உண்டாகிறது.
சு: யாரவள் பத்மாவதி?
கே: தாமரை! பத்மம் என்றால் தாமரைதானே.
சு : அதுவா? ஆமாம், ஏன் தாமரைக்கு வெட்கம் உண்டாகிறது?
சே : என்ன கேள்விபோ! ஒரு ஆடவனும் அவன் ஆருயிர்க் காதலியும் சரசமாடுவதை வேறோர் பெண் காண நேரிட்டால். வெட்கித் தலைகுனிந்து கண்களை மூடிக்கொள்ள மாட்டாளா?
சு : ஆமாம்!
சே : அதே போலத்தான். சந்திரன் எனும் மணாளன், அல்லிப் பூவாகிய தன் மனையாளுடன் விளையாட ஆரம்பிக்கிறான். சந்திரன் உதித்ததும் அல்லி மலருகிற தல்லவா? காதல் விளையாட்டுத்தானே அது. அல்லியும் சந்திரனும் இப்படிச் சரசமாடுவதைத் கண்டதும் பத்மாவுக்கு வெட்கம் ; கண்களை மூடிக் கொள்கிறாள்.
சு : சேகர்! எவ்வளவு இன்பமயம் இன்று.
கே: சுசீலா ! நீலநிற வானத்திலே நீந்தி விளையாடும் அந்த நிலா எவ்வளவு அழகு பார் கண்ணே !
சு : சுந்தரமான சந்திரனைப் பிடித்துக் கொள்ளத் தாவி வரும் அந்தக் கருப்பியைப் பார் கண்ணாளா?
சே : மேகம், என்ன முயற்சித்தாலும், சந்திரன், அதனை விரட்டி அடித்துவிட்டு, வெற்றியுடன் பிரகாசிப்பான் சுசீலா ! நமது காதலும் எப்படிப்பட்ட இடையூறு நேரிட்டாலும், அவற்றைத் தாண்டி வெற்றி பெறும் அல்லவா?
சு : நான் பதில் சொல்லவா?
கே: மொழிக்கு முன்பே, விழி பேசிவிட்டதே கண்ணே!
சு: கண்ணாளா! இன்றிரவு நாம் கவலைதரும் பேச்சே பேசக் கூடாது. இந்த நிலவு. காதலுக்கு . கவிதைக்கு ஏற்பட்டது. (ஓடி விளையாடுகிறாள்.)
சே : (ஓடிச் சென்று அவளைப் பிடித்துத் தன்மேல் சாய்த்துக் கொண்டு) இந்தப் பால்வண்ண நிலவிலே, ஒரு ஆற்றோரத்தில் வெண்மணலிலே, நீயும் நானும்…
சு : நான் வீணை வாசிக்கவேண்டுமா?
சே : பேசினால் போதும் கண்ணே ! வீணை எதற்கு!
சு: நிலவு, உமக்கு . கவிதா சக்தியைத் தருகிறானே. ஆமாம்! அவன் எதுவும் செய்வான். மகா துஷடனல்லவா அவன்.
சே : ஏன்? நமக்கு எவ்வளவு நன்மை செய்கிறான்? எல்லோருக்கும் இன்பரசம் தருகிறானே!
சு : அப்படியும் சொல்லிவிட முடியாது. பிரிந்திருக்கும் காதலருக்கு, நிலவு நெருப்பாக அல்லவா இருக்கும். மேலும், இந்தச் சந்திரன், மகா காமுகன்.
சே : ஓஹோ! நீ அவனுடைய பால லீலையைச் சொல்கிறாயா? அவன் மீது என்ன குற்றம் சுசீலா? அவன் பாடம் படிக்கத்தான் போனான். அவள் அல்லவா அவனைக்
கொடுத்தாள்.
சு: யாரைச் சொல்கிறீர்?
சே : ஏன், குரு பத்தினி தாரையைத்தான் . ஏன்? புராணம் தானே, புளுகுதானே என்று கூறுகிறாயா?
சு : அது மட்டும் இல்லை. அந்தக் கதையை யாரோ ஆடவர் எழுதியதால், தாரைதான் சந்திரனைக் கொடுத்தாள் என்று பழிசுமத்திவிட்டான். ஒரு பெண், எழுதியிருந்தால் தெரிந்திருக்கும், உங்கள் சந்திரனின் யோக்யதை .
சே : ஏ து, சுசீலா மாதர் குலத்தின் விடுதலைக்கே தலைமை வகித்துப் போரிடுவாய் போலிருக்கிறதே.
சு : பொதுவாகவே ஒன்று கேட்கிறேன், உண்மையைக் கூறவேண்டும். ஆண்கள் பெண்களை மயக்குகிறார்களா , பெண்கள் ஆண்களை மயக்குகிறார்களா?
சே : நல்ல கேள்வி கேட்டுவிட்டாய் சுசீலா. வீராதி வீரனும், பெண்ணின் பிரேமைக்குப் பலியாகிறான். இதிலுமா சந்தேகம். மாதரின் இரு விழியும், மதுக்குடங்களல்லவா?
சு : ஓஹோ! ஆண்கள் மட்டும் மகா யோக்கியர்களா? பேதைப் பெண்ணிடம் அன்பாகப் பேசி, மாதே! உன்னை நான் உயிராகக் கருதுகிறேன். நீயே என் இன்பம். என் இருதய கீதம். உனக்காக நான் எதுவும் செய்வேன். வேறோர் மாதைக் கண்ணெடுத்தும் பாரேன். இதை நம்பு. இது சத்யம். (ஆண்கள் பேசும் பாவனையிலேயே கேலியாகப் பேசிக் காட்டிவிட்டு) என்று பேசி, பெண் தன் மனதைப் பறிகொடுத்துவிட்ட பிறகு….
சே : கயவன் அல்லவா, கண்ணே ! காதலித்தவளைக் கைவிடுவான். போதும், நமக்கு ஏன் அந்தப் பேச்சு. நாம் இப்படிப் பேசிக்கொண்டிருப்பது கண்டு, சந்திரன் கோபிக்கிறான். என்ன இது! இவ்வளவு தாராளமாக நான் ஆனந்தத்தை அள்ளி அள்ளி வீசுகிறேன், வெள்ளியை உருக்கி வார்க்கிறேன். இவ்வளவும் எதற்கு? என்று கேட்பான்.
சு : எதற்கு ?
சே : எதற்கா? இதோ இதற்குத்தான் .
(தழுவிக்கொண்டு முத்தமிடப் போகையில், சிறுவர்கள் ஓடி வருகிறார்கள் நிலாப் பாட்டு பாடிக்கொண்டு. சேகரும் சுசீலாவும் விலகி நின்றுகொண்டு குழந்தைகளை அழைத்து விளையாடுகிறார்கள்.)
சே : யார் தம்பி! நீங்களெல்லாம்?
சிறு : பசங்க. ஏன், மாமா, தெரியலையா உனக்கு.
சு : அப்படி! அப்படிக் கொடுங்கள் சாட்டை. ஏன், இவர்களைப் பார்த்தாத் தெரியவில்லையா, குழந்தைகள் என்று .
சே : குறும்பு சுசீலா உனக்கு குழந்தைகளே! நீங்கள் எங்கே இருப்பது?
சிறு : நாங்களா? அடுத்த வீதியிலே இருக்கே பெரிய பள்ளிக்கூடம், அங்கே இருப்பது. நிலாவிலே விளையாட வந்தோம். மாமா! ஒரு கதை சொல்லேன்.
சு : கேளுங்க கேளுங்க, மாமாவுக்கு நல்ல நல்ல கதை தெரியும்.
சே : தம்பி! எனக்குக் கதை தெரியாதே. ஒரே ஒரு கதை தெரியும். ஒரு பெண் ஒரு ஆணை மயக்கிய கதை, சொல்லட்டுமா? (சுசீலாவைப் பார்த்தபடி)
சிறு : போ , மாமா! ராஜா கதை சொல்லு.
சு: மாமாவுக்கு பாட்டுக் கூடத் தெரியும், ஜோராப் பாடுவார்.
சிறு : வேணாம். மாமா கதை சொல்லட்டும், அக்கா பாட்டுப் பாடட்டும்.
சே : ஆ. அது சரியான யோசனை. முதலிலே பாட்டு. பிறகு கதை.
சிறு : அக்கா! பாடு அக்கா, ஒரே ஒரு பாட்டு.
சு : சரி, நான் பாடுகிறேன், நீங்களும் கூடச் சேர்ந்து பாடணும் தெரியுதா?
(குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டே பாடுகிறாள். குழந்தைகளும் பாடுகின்றன. இடையிடையே, பாட்டின் சில பகுதிகளை மாற்றித் தன் காதலைத் தெரிவிக்கும் கருத்துடன், குழந்தைகள் அறிந்து கொள்ளாதபடி பாடுகிறாள்.)
சு : ஆமாம்! நாம் இங்கே இப்படியே விளையாடிக் கொண்டிருக்கிறோமே, அப்பா என்ன சொல்வார்?
சிறு : அக்கா, அப்பா பொல்லாதவரா?
சு : இல்லை கண்மணிகளே ! அப்பா ரொம்ப நல்லவர்.
காட்சி -9
இடம் :- கருணாகரத்தேவர் வீடு.
இருப்போர் – தேவர், ஜெமீன்தார் ஜெகவீரர், மாரி.
(தேவர் கவலையுடன் உட்கார்ந்திருக்கிறார். ஜெகவீரர் கோபமாக உலவிக்கொண்டே பேசுகிறார்.)
ஜெக : இரவு நேரம், வீட்டிலே பெண் இல்லை. இப்படி இருக்கிறது குடும்ப இலட்சணம்.
தே : நிலாவிலே , வேடிக்கையாக நண்பர்களுடன் விளையாடப் போனாள் சுசீலா, அதிலே என்ன தவறு?
ஜெ: சுத்தப் பைத்தியக்கார மனுஷர். இந்த நிலவிலே இளம் பெண்ணை வெளியே அனுப்புவதா?
தே: மாரி மாரி! (வேலைக்கார மாரி வருகிறாள்)
மாரி! போய் சுசீலாவை அழைத்துக்கொண்டுவா. பூந்தோட்டத்தில் தான் இருப்பாள். அப்பா கோபமாக இருக்கிறார் என்று சொல்.
ஜெ : ரொம்ப அவசரம் என்று சொல். போ, போ .
[மாரி போகிறாள்.]
தே: ஜெகவீரரே! நான் வாலிபப் பருவ முதலே கொஞ்சம் சீர்திருத்தக் கருத்துடையவன் என்பது உங்களுக்கே தெரியும்.
ஜெ : ஆமாம், ஆமாம், அதனாலேதானே விகவை சொர்ணத்தைக் காதலித்தீர்.
தே: (சோகத்துடன்) தயவு செய்து அவளைப்பற்றிப் பேச வேண்டாம். என் வேதனையை அதிகப்படுத்த வேண்டாம். ஜெக வீரரே! என் மகள் சுசீலாவை நான் அடுப்பூதும் பெண்ணாக்கவில்லை. படிக்க வைத்தேன். சுசீலா கர்நாடகமல்ல; புதுயுகப் பெண்ணாகி விட்டாள். அவளுக்குப் பெண்கள் முன்னேற்றத்தில் விசேஷ அக்கறை.
ஜெ : இருக்கட்டுமே. அதற்கென்ன, ஒரு லேடிஸ் கிளப் ஆரம்பித்து சுசீலாவை பிரசிடெண்ட் ஆக்கிவிடுகிறேன் . டென்னிஸ் ஆடட்டும். கிளப்பில்.
தே : அந்த ஆடம்பரமல்ல அவள் விரும்புவது . ஆடவர் பெண்களைக் கொடுமை செய்வது கண்டால் எப்படிச் சீறுகிறாள் தெரியுமா? அப்படிப்பட்டவளை நான் எப்படி வற்புறுத்துவது உம்மைக் கலியாணம் செய்து கொண்டாக வேண்டுமென்று.
ஜெ : இதைச் சொல்லத்தான் இவ்வளவு முன்னுரையா? தேவரே! வாதங்கள் பயன்படாது. சுசீலாவை நான் அடைந்தே ஆக வேண்டும்.
தே: எனக்குத் துளியும் பிரியமில்லை . எப்படியப்பா. நான் சுகமாக வாழ்க்கை நடத்த முடியும், இஷ்டமில்லாத கலியாணம் செய்து கொண்டு சிறு குழந்தைகள் கூடத் தங்களுக்குப் பிடிக்காத பண்டத்தை ஊட்டினால் துப்பிவிடுமோ என்றெல்லாம் சுசீலா கேட்பாளே! ஜெகவீரரே! உமது கண்களிலே கோபாக்னி கிளம்பி என்னை மிரட்டுகிறது. இதற்குப் பயந்து நான் சுசீலாவை . வற்புறுத்தினால், அவள் கண்களிலே நீர் வழியுமே, அது தீயைவிடச் சுடுமே. நான் என்ன செய்வேன்?
ஜெ : நடப்பது நடக்கட்டும் நமக்கென்ன என்று நீர் சும்மா இருந்துவிடும்.
(மீசையை முறுக்கிக் கொண்டு) நான் கவனித்துக் கொள்கிறேன். நான் சில பிடிவாதக்காரிகளைப் பார்த்திருக்கிறேன். சுசீலா ஒன்றும் பிரமாதமல்ல.
(தேவர் தம் காதுகளைப் பொத்திக்கொண்டு)
தே : வேண்டாம் ஜெகவீரரே! உமது வீரப்பிரதாபத்தை விவரிக்க வேண்டாம்.
ஜெ : என் கோபத்தையும் நீர் கிளற வேண்டாம். நான் இவ்வளவு பொறுமையாக எப்போதும் இருந்ததில்லை ….
காட்சி -10
இடம் :- மாரி குடிசை .
இருப்போர் – மாரி , புருஷன் மன்னார் .
(மன்னார் குடித்துவிட்டு ஆனந்தமாகத் தெம்மாங்கு பாடுகிறான். பானையைத் தட்டிக் கொண்டு . சுசீலாவை அழைத்து வரக் கிளம்பிய மாரி, புருஷன் வந்து விட்டானா என்று பார்க்க, தன் வீடு வருகிறாள். அங்கு பாடிக் கிடக்கும் புருஷனைக் கண்டு .)
மா : பாட்டும் கூத்தும் பலமாத்தான் இருக்குது.
மன் : மாரி! மானத்திலே சந்திரன் பாருடி. எவ்வளவு அழகா இருக்கிறான். நிலாக் காலம்னாலே ஒரு ஜோருதான். நீ கிடக்கறயே சுடுமூஞ்சி. இப்படி உட்கார்ந்து கேளடி பாட்டை பக்கத்திலே வந்து உட்காரேன். (கையைப் பிடித்திழுக்க)
மா : தா வாலிபம் திரும்பிப் போச்சோ … போவுது…. எனக்கு இப்ப விளையாட நேரமில்லை … நான் போயி சுசீலாம்மாவை அவசரமா அழைச்சிக்கிட்டு வரணும். அப்பாலே வந்து …
மன் : சனியன்; சந்தோஷமா இருக்கணும்னா என்னென்னமோ சாக்குச் சொல்லி வாயை அடைச்சி விடறே. இந்த நிலாக் காலத்திலே ஊர்லே உலகத்திலே அவங்க அவங்க எவ்வளவு சந்தோஷமா இருக்கறாங்க…
மா : இருக்கறவங்க இருக்கறாங்க. நம்மாட்டம் ஏழைகளெல்லாம் என்னாச் செய்யறது.
மன் : போடி பைத்தியக்காரி! பணக்காரரை எல்லாம் பார்த்துப் பரிகாசம் பண்ணிகிட்டு அல்லவா நிலா இருக்குது. எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக்கூட இருக்கட்டுமடி, நம்ம நிலா மாதிரியா விளக்குப் போடச் சொல்டி பார்க்கலாம். ஏழையின் குடிசையிலே, நிலா வெளிச்சம் தெரியுது பாருடி. அதுகிட்ட பணக்காரன் வீட்லே இருக்கே எலக்ட்ரீ விளக்கு, அது என்னாடி செய்யும். நிலாதாண்டி, ஏழை பணக்காரன் என்கிற வித்யாசம் பார்க்காமல் இருக்குது. பாரு, மாரி! எம்மா அழகா இருக்கு …
மா : அழகாத்தான் இருக்குது. நான் போயிட்டு ஓடியாந்துடறேன். சரி, என்ன பணம் வாங்கிவந்தே, எடு.
(புருஷன் பணத்தைத் தருகிறான்.)
என்னா இது? எழவாப் போச்சி, ஒத்தே ரூபாயைக் குடுத்தா எதுக்குன்னு ஆகும்.
மன்: (அதைக் கவனியாமல்) ஒத்தே ரூபாயா? ஒங்க அப்பன் நோட்டு நோட்டா நீட்டறானா? போடி! இந்தப் பணத்தை வாங்க அந்தப் பய கிட்ட நான் பல்லைக் காட்டினது உனக்கென்ன தெரியும்?
மா : அப்பாணையர்ச் சொல்லு. ஒத்தே ரூபாதானா கொடுத்தாரு?
மன் : ஆமாண்டின்னா …
மா : தெரியுதே இலட்சணம். சொல்லுவானேன். நீங்க நின்ன நிலையிலே ஆடறது சொல்லுதேன்னேன். ஐஞ்சு ரூபா வாங்கி அனியாயமாக் குடிச்சிப் போட்டு என் அடிவயத்திலே நெருப்பைப் போடறியே!
மள் : சிச்சீ! ஐஞ்சுமில்லை, பத்து மில்லே. ரெண்டரைடி ரெண்டரே.
மா : சாராயக் கணக்கையாக் கேட்டேன்?
மன் : சீ ! ரெண்டரை ரூபா கொடுத்தாருடி எசமான்.
மா : மிச்சப் பணம் எங்கே? என்னாங்க அன்யாயம். ஒண்ணரை ரூபாய்க்கா குடிச்சித் தொலைக்கணும். குடித்தனம் உருப்படுமா?
மன் : செ, கழுதே! எவண்டி ஒண்ணரைக்கும் இரண்டரைக்கும் குடிப்பான் ஒங்க அண்ணனா ஈட்டிக்காரன்?
மா : ஈட்டிக்காரன் கடனைக் கொடுத்துவிட்டிங்களா?
மன் : விடுவானா? எட்டணா தட்டிக்கிட்டுப் போயிட்டான்.
மா : போவுது, அப்பிடின்னாலும் இன்னும் ஒரு ரூபா?
மன் : ஒரு ரூபாயா? முழுங்கிட்டேன். போயேன். பசியானா பசி, உயிர் துடிச்சுது. கொஞ்சம் நாஸ்தா பண்ணேன்.
மா : ஒரு ரூபாய்க்கா ?
மன் : ஏண்டி, எனக்கென்ன வயறு சாலா? ரெண்டணாவுக்குத் தின்னேன்.
மா : மிச்சம்?
மன் : மிச்சம் இருக்குது.
மா : எங்கே ? மன்: இருக்குதுன்னா விடுவயா, சும்மா மனுஷனைப் பிடுங்கித் தொலைக்கறயே.
மா : எங்கேன்னு சொல்லேன்.
மன் : முடியாது போடி. சொல்ல முடியாது. காட்டவும் முடியாது.
மா : இருந்தாத்தானே காட்ட. அந்த எழவெடுத்த சாராயத்தை ஊத்திக்கிட்டு வந்தாச்சி. அடிவயத்தையே கலக்குதே. அடிக்கிற நாத்தம்.
மன் : நாத்தமா அடிக்குது? இவ உடம்பு சென்டு! நாத்தமாடி அடிக்குது நாயே! ஏண்டி நான் என்ன – ஜெமீன்தாரன் வீட்டு மருமவனா நாத்தமில்லாத ஒசத்தி சரக்கு சாப்பிட
[மாரி சிரித்துவிட்டு வெளியே போகிறாள்.]
காட்சி -11
இடம் :- பூந்தோட்டம்.
இருப்போர் – டாக்டர், சுசீலா, சிறுவர்கள்.
[டாக்டர், குழந்தைகளை, தோளிலும் கால் மீதுமாக ஏற்றிக்கொண்டு சர்க்கஸ் வேடிக்கை செய்கிறார். மாரி வருகிறாள்.]
சு : ஓஹோ! நேரம் போவதே தெரியவில்லை. இதோ அப்பா ஆள் அனுப்பிவிட்டார். நான் போகணும்.
மாரி : வாங்கம்மா, அவரு கோவமா இருக்காரு. அந்தக் கொரங்கு வேறே வந்திருக்கு, குத்திவிட
சு: யாரு?
மா : ஜெமீன்தாருதான்.
சு: சரி, சேகர், வருகிறேன்.
சே : போகிறாயா? நானும்…
சு: நீங்கள் கொஞ்ச நேரம் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருங்கள்.
சே ; சரி, போய் வா. ஒரு இரவு முழுவதும் விளையாடினால் கூட இந்தப் பிள்ளைகளுக்குச் சலிப்பு ஏது?
மா: நான் வந்து கூப்பிடுகிறவரை ஐயாவுக்குத்தான் சலிப்பு இல்லை .
[மாரியும் சுசீலாவும் போகின்றனர்]
காட்சி -12
இடம் :- தேவர் மாளிகை.
இருப்போர் :- தேவர், ஜெகவீரர்,
(சுசீலா உள்ளே நுழைந்ததும் ஜெகவீரர் பேசுகிறார்.)
ஜெ : (கேலியாக) சுசீலா தேவியாரா?
சு: (மரியாதையுடன்) நமஸ்காரம்.
ஜெ : (கேலியாக) ஆசீர்வாதம் ! உட்காரேன் இப்படி.
(ஒரு நாற்காலியைக் காட்டுகிறார்.)
சு: தலைவலி, மாடிக்குப் போகிறேன்,
ஜெ: விளையாடியது டாக்டரிடம் வருவது தலைவலியா, வேடிக்கைதான்.
தே: அம்மா சுசீலா ! இதோபார் . நான் உனக்கு இனியும் விவரமாகக் கூறிக் கொண்டிருக்கப் போவதில்லை. தெரிகிறதா. ஏதோ நானும் தாயில்லாதவளாயிற்றே என்று பொறுத்துக் கொண்டு வருகிறேன். இனி என்னால் முடியாது. நாளைக்கு உனக்கு நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்து விட்டேன்.
ஜெ : திருமணம் அடுத்த மாதமே முடித்துவிடலாம். பிறகு நான் மைசூர் போக வேண்டும், மகாராஜாவைப் பார்க்க.
சு : ராஜ குடும்பத்திலே பெண் கொள்ள வேண்டிய வரல்லவா தாங்கள். நான் உங்களுக்கு ஏற்றவளல்ல.
ஜெ : ஏன் தேவரே! நமது சுசீலாவுக்குத் தன் அழகு தனக்கே தெரியவில்லையே. இங்கே பெரிய நிலக்கண்ணாடி. இல்லையோ?
(சுசீலா மாடிக்குப் போக யத்தனிக்கிறாள்.)
தே : நில்லம்மா . போகாதே. சம்மதம் என்று சொல்லிவிட்டுப் போ. அதற்காகவே வந்திருக்கிறார்.
சு: மாமா, பெரிய ரோஷக்காரர் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
ஜெ : ஆமாம் சந்தேகமென்ன அதற்கு …..
சு:: ரோஷக்காரர் என்று சொல்கிறார்களே தவிர துளி கூட ரோஷமே இல்லையே அவருக்கு ….
ஜெ : துடுக்குத்தனம்.
சு : ஒரு பெண் ஓராயிரம் தடவை நான் உன்னைக் கலியாணம் செய்து கொள்ளமுடியாது, முடியாது. முடியாது என்று சொன்ன பிறகும்….
ஜெ : பிடிவாதம் ஒரு நோய். வாலிபப் பருவத்திலே ஏற்படுவது வழக்கம்.
சு : வேறொருவனை மனப்பூர்வமாகக் காதலிக்கிறேன் என்று வெளிப்படையாகச் சொன்ன பிறகும், வீராதி வீரர், மகா ரோஷக்காரர், என்று புகழப்படும் ஜெமீன்தாரருக்குத் துளியாவது ரோஷம் காணோம்.
தே: துஷ்டப் பெண்ணே !
ஜெ : முட்டாள் . உன் வாய்க்கொழுப்பை அடக்கமுடியும்
என்னால் மணம் முடியட்டும், பிறகு…
சு: : பிணத்துக்குத் தாலிகட்ட இஷ்டமிருந்தால் உமது பிரதாபத்தைப் பேசிக்கொண்டிரும்.
ஜெ : தேவரே! இதுவரையில் நான் பொறுமையாக இருந்தேன்.
தே : போக்கிரிப் பெண்ணே ! என் உயிருக்கு உலை வைக்கிறாயே. நான் என்ன செய்வேன்.
ஜெ : பிடித்தால் பொடிப் பொடியாவாள். இந்த அகம்பாவக்காரியை. இவள் அழகுக்காக அல்ல, என் அக்காவிடம் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அல்லவா நான் கலியாணம் செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. அழகாம் அழகு. ஆயிரம் அழகிகள் என் அடிவருடக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தே: கோபிக்காதீர். சிறு பெண். மேலும் சொந்த மாமன் தானே என்று பேசிவிட்டாள். திருமணம் நடப்பது உறுதி.
ஜெ : (குரூரமான பார்வையுடன்) விவாக வகைகளிலே, காந்தர்வமும் ஒன்று.
சு:: (கோபத்துடன்) ஆனால், அது இங்கே கிடையாது.
ஜெ : (ஆத்திரத்துடன்) அதைப் பார்த்துவிட்டுப் போகத் தான் வந்தேன்.
தே: (பொறுமை இழந்து) ஏ! சுசீலா! அளவுக்கு மீறிப் போகாதே. நீ என்ன பிடிவாதம் செய்தாலும் சரி. உன்னை ஜெமீன்தாரர் ஜெகவீரருக்குத்தான் கலியாணம் செய்து தீருவேன். இதை யாரும் மாற்ற முடியாது.
(கோபம் தணிந்து சோகக் குரலில்) நாளைக் காலையிலே நீ சம்மதம் தெரிவிக்காவிட்டால், மறுபடியும் என்னை உயிருடன் காணமாட்டாய்.
சு: (திடுக்கிட்டு) அப்பா!
தே : (சோகம் கப்பிய குரலில்) நீ என் மகளா? அல்லது என்னை மாய்க்க வந்த மாபாவியா என்பதை உன் செயலால் காட்டு.
சு : ஏனப்பா , எல்லாம் தெரிந்திருந்தும் இப்படிப் பேசுகிறீர்.
(தலை குனிந்தபடி) நான் டாக்டர்…
தே : சேகரனைக் காதலிக்கிறாய் : தெரியும் , சேகர் நல்லவன், தெரியும். (ஈனக்குரலில்) ஆனால் உன் தகப்பனாரின் தற்கொலைக்குப் பிறகுதான் அவனை நீ கலியாணம் செய்து கொள்ள வேண்டி வரும்.
(அருகே சென்று அபயம் அளிக்கும்படி வேண்டும் பாவனையில் நின்று கொண்டு)
கண்ணே ! சுசீலா ! உன் இஷ்டப்படி எல்லாம் நான் நடந்து வந்தேன். உன் மனம் நோகும்படி இதுவரை நடந்து கொண்டதுண்டா ? சுசீலா! தங்கமே! எனக்கு நீ தவிர வேறு யார்?
சு : (திகைப்பும் பரிதாபமும் மேலிட்டு) அப்பா! அவருடைய மிரட்டலுக்கு ஏன் பயப்படுகிறீர்? மாமாவைச் சமாதானப்படுத்துவது முடியாத காரியமா? ஏன் அவரிடம் அவ்வளவு பயப்படுகிறீர்? அவர் என்ன செய்துவிடுவாரப்பா? அவர் ஜெமீன்தாரராக இருந்தால் நமக்கென்ன? நாமென்ன அவர் வீட்டுக் காவலாளியா?
ஜெ : கடனாளி ! ஆணவம் பிடித்தவளே . இந்த ஜெகவீரரின் பேனா முனை அசைந்தால், இந்த மாளிகை, தோட்டம், வண்டி, வாகனம், உன் ஒய்யார வாழ்வு, யாவும் பஞ்சு பஞ்சாகப் பறந்துவிடும். நிலைமை தெரியாமல் தடுமாறுகிறாய்.
க: அப்பா, அப்பா! அதற்காகவா அப்பா! பயப்படுகிறீர்? கடனுக்காக நமது சொத்து பூராவையும் இந்தக் கிராதகனிடம் கொடுத்து விடப்பா . உலகம் மிகமிகப் பெரிது அல்லவா? இதிலே எல்லோருமா ஜெமின், மிட்டா . மிராசுடன் வாழ்கிறார்கள். அப்பா, செல்வத்தை இழக்க நேரிடுகிறதே என்று கலங்கி என்னைப் படுகுழியில் தள்ளாதீர். (வருத்தத்துடன்) எனக்கு ஆறுதல் மொழி கூற என் தாயும் இல்லை. அப்பா ! நீரே தானே எனக்குத் தாயும் தகப்பனும்.
தே: ஐய்யோ! நெஞ்சு வெடித்துவிடும் போலிருக்கிறதே. நான் என்ன செய்வேன்? உன் தாய் இருந்திருந்தால் இந்த ஆபத்து வராதே.
சு : (பயந்து) என்ன ஆபத்து? சொத்து போய்விடுவதா ஆபத்து? சிறு குழந்தை போல அழாதீர் அப்பா!
தே: சுசீலா! பேசுவது உன் தகப்பனல்ல. தள்ளாத வயதிலே புலியால் துரத்தப்பட்டு உயிருக்குப் பயந்து ஓடி வரும் ஒரு துர்ப்பாக்கியன் உன்னைக் கெஞ்சுகிறான். உன் காவில்.
[மண்டியிட முயற்சிக்கிறார். அவள் துடித்து அவரைத் தூக்கி நிறுத்துகிறாள்.)
சு : ஐயோ! அம்மா! அப்பா! நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன்?
தே: (பரிதாபப் பார்வையுடன்) அம்மா! எனக்கு உயிர்ப் பிச்சை தா .
சு: அப்பா! பயங்கரமாக இருக்கிறதே.
தே: சுசீலா கண்ணே! உன்னை நான் உண்மையாகவே சொத்து ஜெமீன்தாரனுக்குப் போய்விடுமே என்ற பயத்தினாலே அல்ல அம்மா வற்புறுத்துகிறேன். மகளே ! நான் அப்படிப்பட்ட பணப்பித்துப் பிடித்தவனல்ல. உன்னைவிட எனக்குச் செல்வம் பெரிதல்ல.
சு : வேறே என்ன காரணம் அப்பா?
ஜெ : சத்தியம் செய்து கொடுத்துவிட்டார்.
சு : திருமணம் எனக்கு. அதற்கான சாத்தியம் அவர் ; செய்தால் அதிலே அர்த்தமில்லை.
தே : சுசீலா! உனக்கு விளங்கும்படி கூறுவதற்கில்லை . தூக்குமேடைக்கு நான் போகட்டுமா, அல்லது திருமணப் பந்தலுக்கு ஜெமீன்தாரருடன் நீ போகிறாயா? இரண்டில் ஒன்று சொல்லு.
க : (திகிலுடன்) என்னப்பா அது! தூக்கு மேடையா? ஏன்?
தே: அம்மா! சுசீலா! என்னைப் பார்த்தால் தெரிய வில்லையா? நான் சித்திரவதை செய்யப்படுகிறேன். என்னால் சகிக்க முடியாது.
(தலையிலே மோதிக் கொள்கிறார் – அலறி அழுகிறார் – மயங்கி நாற்காலியில் சாய்கிறார்.)
சு : அப்பா , அப்பா !
(ஓடிச் சென்று கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்து, மயக்கத்தைத் தெளியவைத்து)
ஜெமீன்தாரைப் பார்த்து கொட்டிவிட்ட பிறகு, தேளாவது ஓடி ஒளியும். அவரைத் துடிக்கச் செய்துவிட்டுத் தைரியமாக எதிரே உட்கார்ந்து கொண்டிருக்கிறாயே,
(மயக்கம் தெளிந்த தேவர்)
பவானி: பவானி! போதும் என்னை நீ பழி தீர்த்துக் கொண்டது. பாவி நான் இந்த க்ஷணம் இறந்தாலும் பரவாயில்லை. இந்த நிலைமையைவிட அது எவ்வளவோ நிம்மதியாக இருக்கும்.
ஜெ : தூக்கு மேடையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் தேவரே! ஆனால் உலகம் உமது பிணத்தின் மீது
தே: (கலங்கி) காரித்துப்பும் – கல்லை வீசும்.
ஜெ : குடும்ப சாபம் உண்டாகும். பரம்பரைக்கே பழிச்சொல். தேவரே! நானொன்றும் குஷ்டம் பிடித்த வனல்ல, என்னைக் கலியாணம் செய்து கொண்டால், இந்த ரூபவதிக்கு ஒன்றும் பங்கம் வந்துவிடாது. இதற்கு இணங்காவிட்டால் இழிவும் பழியும் உமது பிணத்துக்கு ஆலவட்டமாக இருக்கும்.
சு : அப்பா! மாமா! ஆண்டவனே! என்ன இது? தூக்கு மேடை! பிணம்! சாபம்! ஒன்றும் புரியவில்லையே.
தே: (தடுமாற்றத்துடன் என்னை – என்னை மட்டுமல்ல – நமது குடும்பத்தை – பின் சந்ததியைக்கூட, ஒரு கொடிய சாபம் தீண்டுவதற்குத் தயாராகச் சுற்றிக் கொண்டிருக்கிறது.
சு: சாபமா? கட்டுக்கதை பேச இதுவா அப்பா சமயம் ?
ஜெ : கட்டுக்கதையுமல்ல, மனப்பிராந்தியுமல்ல, வேண்டுமானால் நான் புரிகிறபடி கூறுகிறேன் கேள்……
தே : (ஜெமீன்தாரரைப் பார்த்து வேண்டாம், வேண்டாம். என் தாய் என்னைக் காப்பாற்றுவாள் – கைவிட மாட்டாள்.
(சுசீலாவைப் பார்த்து)
மகளே! அந்தச் சாபத்தைப் போக்கிக்கொள்ள ஒரு பலி தந்தாக வேண்டும்.
சு; (ஆழ்ந்த சோகத்துடன், அந்தப் பலி நானா?
தே: ஆமாம்.
சு: சரி.
ஜெ : சபாஷ்! தேவரே! சபாஷ்!
காட்சி -13
இடம் :- சுசீலா அறை.
இருப்போர் :- சுசீலா.
(சுசீலா தனிமையாகத் தேம்பித் தேம்பி அழுகிறாள்.)
சு : அந்தப் பாதகனிடம் என் தகப்பனாரின் உயிரையும் மானத்தையும் அழிக்கக்கூடிய ஏதோ ஓர் இரகசியம் சிக்கிக் கொண்டது. அப்பா, அதனால்தான் அவனைக் கண்டு நடுங்குகிறார்.
(பதை பதைத்து)
என்ன மர்மம்? அது என்ன பயங்கர இரகசியம்? தெரியவில்லையே!
(தாயார் பவானியின் படத்தைப் பார்த்து)
அம்மா! அம்மா! என்னைப் பலி கேட்கும் அந்தப் பயங்கர இரகசியம் என்ன?
(கண்ணாடியில் தன் உருவம் தெரியக் கண்டு )
என்னை அழிக்கும் அழகே! இம்சைக்கு என்னை ஆளாக்கும் இளமையே நாசமாகட்டும்! நாசமாகட்டும் இந்த அழகு.
(புஷ்பத்தை வீசி எறிகிறாள்)
(மறு விநாடி)
ஐயோ! அழகு என்ன செய்யும்? குணசீலரான சேகரை என்னிடம் அந்த அழகல்லவா அழைத்துக்கொண்டு வந்தது? அவருக்கு நான் அர்ப்பணித்துவிட்ட பொருள் அல்லவா இந்த அழகு மலர் முகம் என்று கூறுவார்: மந்தியிடம் தரச் சொல்கிறார் தந்தை : தராவிட்டால் தனக்கு மரண தண்டனை தருவார்களாம். அது சாபமாம் ஐயோ! அது என்ன சாபம்!
அந்தச் சண்டாளன் ஏன் அப்பாவின் உயிரைத் தன் கரத்தில் வைத்துக்கொண்டு வதைக்கிறான்? அவன் ஒழிந்தால்!
(முகத்திலே முதலில் பயம். பிறகு தெளிவு உண்டாகிறது.) அவன் ஒழிந்தால் அப்பாவுக்கும் ஆபத்து இல்லை. என் வாழ்க்கையும் பாழாகாது.
கொலைதான்! செய்தால் என்ன? அவன் சாகாவிட்டால் மூன்று உயிரல்லவா வதைபடும்.
ஆமாம்! என்னை மண அறைக்கு அழைக்க வந்தவனை பிணமாக்குகிறேன்.
[மேஜை அறையைத் திறந்து, ஒரு பொட்டலம் எடுத்து, விஷ மருந்தைப் பாலிலே கலந்து விடுகிறாள்.]
மையல் கொண்டுள்ள அந்த மடையனிடம் இதைத் தந்தால் போதும்… ஆனால்….. அந்தப் பயங்கர இரகசியம்?
[யோசிக்கிறாள்)
ஒருவேளை, அவன் இறந்து விட்டாலும் சாபம் இருக்குமோ? தன் ஆசை நிறைவேறாத முன்பு சாக நேரிட்டால், அப்பாவைத் தூக்குமேடைக்கு அனுப்பக்கூடிய அந்த இரகசியத்தை வேறு யாராவது உபயோகித்துக் கொள்ள ஏற்பாடு இருக்குமோ? அவன் கன்னெஞ்சக்காரன் மட்டுமல்லவே – நயவஞ்சகனாயிற்றே.
(கைகளைப் பிசைந்து கொண்டு)
என்ன ஏற்பாடு செய்து வைத்திருக்கிறானோ?
(கொஞ்ச நேரம் யோசனை செய்துவிட்டுக் கீழே செல்கிறாள்)
காட்சி -14
இடம் :- தேவர் மாளிகைக் கூடம்.
இருப்போர் :- ஜெகவீரர், தேவர்.
[தேவர், மேஜை மீது தலையைக் கவிழ்த்துக் கொண்டிருக்கிறார். ஜெகவீரன் நாற்காலியில் சாய்ந்து கொண்டு கால்களை மேஜை மீது போட்டுக்கொண்டு அட்டகாசமாக இருக்கிறான். சுசீலா வருகிறாள்.)
ஜெ : சுசீலா !
[தேவர் திடுக்கிட்டுத் தலையை நிமிர்த்தி சுசீலாவைப் பார்க்கிறார்.)
சு : நான் பலியான பிறகு, தாங்கள் சொன்ன அந்தச் சாபம் கட்டாயம் நீங்கிவிடுமா அப்பா?
தே: (ஒன்றும் புரியாமல்) தங்கமே! என்ன கேட்கிறாய்?
ஜெ : நான் சொல்கிறேன் சுசீலா !
[ எழுந்து கெம்பீரமாக உலவிக்கொண்டு பேசுகிறான்.]
உன் தகப்பனாரைத் தூக்குமேடைக்கு அனுப்பக்கூடிய இரகசியம் என்னிடம் இருக்கிறது.
(சுசீலா திகைப்பது கண்டு)
ஏன் திகைக்கிறாய்?
ஆபத்தானது வெடிமருந்து. ஆனால் கொஞ்சம் தண்ணீரை அதிலே ஊற்றிவிடும், ஆபத்து வராது.
சு : விஷயத்தைச் சொல்லுங்கள் …..
ஜெ : மாமா, என்று சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். பரவாயில்லை வெட்கம் இருக்கும் என்று எண்ணிக் கொள்கிறேன்.
சு : அந்த இரகசியம்…..
ஜெ : என்னிடம் எப்படிக் கிடைத்தது என்று கேட்கிறாயா?
[தேவர் ஜெகவீரன் கையைப் பிடித்து இழுக்கிறார்.)
ஜெ : (தேவர் பக்கம் திரும்பி) சொல்லி விட மாட்டேன் பயப்படாதீர்! சுசீலா! என்னிடம் விலையுயர்ந்த வைரம், பார்த்தால் பிரமிக்கச் செய்யும் பச்சை, வையகமே புகழும் வைடூரியம் …
சு : கோமேதகம், முத்து, நவரத்னங்களும் இருக்கின்றன. நான் கேட்பது என்ன, நீர் பதில் சொல்வது என்ன?
ஜெ : பொருத்தமில்லாமல் நான் பேசமாட்டேன் சுசீலா ! அந்த நவரத்தினங்கள் எனக்குக் கிடைத்தது போல இந்த இரகசியமும் கிடைத்தது. வைர மாலையை நான் உனக்குத் தந்து நீ உன் வசீகரமான கழுத்திலே அதை அணிந்து கொண்டால், ஊரார் அந்த வைரம் எப்படி ஜெமீன்தாரருக்குக் கிடைத்தது என்றா கேட்பர்? எவனாவது மடையன் கேட்டாலும், நானா பதில் சொல்வேன்?
சு: இரகசியம் எப்படி உமக்குக் கிடைத்தது என்பதைக் கூறமுடியாது. அதற்குத்தானே இவ்வளவு பேச்சும்.
ஜெ : ஆமாம்! அதையேதான் நாசுக்காகச் சொன்னேன். எப்படியோ கிடைத்தது அந்த இரகசியம். கலியாண மானவுடன் அந்த இரகசியம் உன்னிடம் தரப்படும். நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கலியாணம் இல்லை – உலகுக்கு அது தரப்படும். நீ பிடிவாதம் செய்துகொண்டே காலம் கடத்திவந்தால், சாகசம் செய்தால், ஜெகவீரனை ஏமாற்ற நினைத்தால், சுசீலா! (குரலை மேலும் மேலும் உயர்த்திக் கொண்டே, அவள் அருகே போய் நின்று. குரூரமான பார்வையுடன்) அந்த இரகசியம் அரசாங்கத்திடம் போய்ச் சேரும். அதற்கான முன்னேற்பாடு என் வக்கீலிடம் இருக்கிறது.
(உரத்த குரலில் சிரித்துவிட்டு)
சுசீலா! நான் முட்டாளல்ல!
(தீப்பொறி பறக்கும் கண்களுடன் பார்க்கிறான். திகைத்த மங்கை தள்ளாடிக் கொண்டு மாடிக்குச் செல்கிறாள்.)
காட்சி -15
இடம் : சுசீலா அறை.
இருப்போர் :- சுசீலா.
(தள்ளாடி நடந்து வந்து சுசீலா, படுக்கை மீது விழுகிறாள்.)
சு: சேகர்! சேகர்! என் நிலையைப் பார்! பலி! பலி ! உலகிலே கேட்டிராத பலி! பெண்ணின் விருப்பத்துக்கு மாறாகக் கலியாணத்தை நடத்துபவர்கள், அறிவிலிகள், ஆணவக்காரர்கள், பித்தர்கள் , என்று ஆயிரம் தடவை கூறியிருக்கிறேன்.
என் தகப்பனார் படித்தவர், அறிவாளி , பெயருக்கு ஏற்றபடி கருணை உள்ளவர், அவர் என்னை பலிபீடத்திற்குப் போ என்று கூறுகிறார்.
ஐயோ! அவர் கோபத்தோடு அந்த வார்த்தையைச் சொன்னால், கோல் கொண்டு தாக்கினால், நான் பல காலமாகப் பெண்களைக் கொடுமை செய்து பழக்கப்பட்ட ஆண்களிலே இவரும் ஒருவர் என்று வெறுத்துத் தள்ளி விடுவேன்.
அவர் அழுகிறார்! எனக்குக் கட்டளை பிறப்பிக்கவில்லை, என் எதிரே கண்ணீர் விடுகிறார்.
மகளைத் தாயே என்று அழைக்கிறார். அவருடைய முழங்காலின் மீது கால் வைத்து ஏறி, அவர் மடியில் உட்காருவேன் சிறுமியாக இருந்தபோது அப்படிப்பட்ட என் முன், என் தகப்பனார், ஐயோ! மண்டியிடுகிறாரே!
தகப்பனாரின் உயிருக்கும் என் வாழ்வுக்கும் ஒரு பயங்கரமான முடி போட்டிருக்கிறானே அந்தப் பாதகன்.
சேகர்! சேகர் எங்கே இருக்கிறாய்? பாவம் உனக்கென்ன தெரியும், உன் வாழ்வு அழிக்கப்படுவது.
[ படுக்கையில் புரண்டு அழுகிறாள்]
[மீண்டும் எழுந்திருக்கிறாள். மேஜை மீது விஷக் கோப்பை இருப்பது தெரிகிறது.]
விஷம் இனி ஏன்?
(அதையே உற்றுப் பார்த்துவிட்டுப் புன்சிரிப்புக்கொள்கிறாள்.)
விஷம் ஏனா? ஏன் உபயோகமாகாது? நான் பலியாகத் தானே வேண்டும். காதலற்ற அந்தக் கலியாணம். என்னை மெள்ள மெள்ளக் கொல்லும் விஷம் – இது – இப்போதே கொன்றுவிடுமே.
(கோப்பையை எடுத்துப் பார்த்துவிட்டு)
ஆனால் சேகர்! ஐய்யோ ! சேகர்! நமது காதல் ராஜ்யம் அழிந்துவிடுகிறதே. உன் இருதயத்துக்கு ஜோதி என்று சொல்வாயே, இதோ உன் ஜோதி. அணைந்துவிடப் போகிறது,
[சேகரின் படத்தைப் பார்த்து]
அன்பா என்னை மன்னித்து விடும். என் மீது குற்றமில்லை. நான் மாசற்றவள் – என்னை நான் தியாகம் செய்கிறேன் என்னைப் பெற்றவருக்காக .
(கோப்பையை மேஜை மீது வைத்துவிட்டுப் படத்தை எடுத்து அணைத்துக் கொண்டு )
அந்தோ ! இதுதானா எனக்குக் கதி இன்று நிலவில் அவரும் நானும்….ஐயோ! நினைத்தாலே
(படத்தை மாட்டிவிட்டுக் கண்களைக் கைகளால் மூடிக் கொள்கிறாள் ஒரு கணம். திடுக்கிட்டுக் கையை எடுக்கிறாள்.)
சேகர்! சேகர்! கண்ணை மூடிப் பயன் இல்லை . என் கருத்திலே கலந்த கண்ணாளா! உன்னை நான் இழக்கத்தான் வேண்டுமா?
(‘வானிலுறை மதியே, மதியே வாழ்வின் நிதியே” என்ற பாட்டை, சோகமாக மெல்லிய குரலில் இரண்டடி பாடுகிறாள், நிலவில் நடைபெற்ற காதல் விளையாட்டை எண்ணிக்கொண்டு)
வாழ்வின் நிதி ! வாழ்வின் நிதி ! அந்த வஞ்சகனின் சதிக்கு இரையாகிறேன். இதற்கோ இன்று அவரும் நானும்
(சில விநாடி மெளனம்: பிறகு ஓர்வித உறுதி பெற்று)
செ! சேகர் என் தியாகத்தைக் கேள்விப்படாமலிருக்க முடியாது. தந்தை ஒரு நாள் சொல்லியே தீருவார். சேகர் என்னை நிந்திக்கமாட்டார், நிச்சயமாக. தியாகத்தின் மேன்மையை அவர் எப்போதும் சொல்வாரே எனக்கு.
(கோப்பையை எடுத்துக் குடிக்கப் போகும் போது. ஜன்னல் வழியாக ஒரு கள்ளன் நுழைவது காண்கிறாள். திடுக்கிட்டுப் போன சுசீலா, உடனே சமாளித்துக் கொள்கிறாள். கள்ளன் அவளைக் கண்டதும், துப்பாக்கியைக் காட்டுகிறான். அவள் அலறவில்லை. புன்னகை புரிகிறாள். கள்ளனுக்கு இலேசாகக் கிலி பிடிக்கிறது. அவனையே உற்று நோக்கியபடி என்னமோ யோசிக்கிறாள் சுசீலா. அவன் அவளைப் பார்த்தபடியே பின்
வாங்குகிறான்.)
சு : நில் ! போகாதே!
சு: அசையாதே (துப்பாக்கியைக் காட்டுகிறான்.)
சு : சுத்தப் பயங்கொள்ளி, களவாட வந்தவன் ஒரு பெண்ணைக் கண்டு ஓடுகிறாயே! இவ்வளவு கோழை ஏன் இந்த வேலைக்கு வந்தாய்?
சு: உம்! சுட்டுவிடுவேன்.
(கள்ளனின் கை நடுங்குகிறது)
சு : ஏன் நடுக்கமெடுக்கிறது? பயமா?
சு: (அசடு சொட்ட) எனக்கா பயம்? உனக்கல்லவா பயம் இருக்கிறது! பயப்படாதே! கூச்சலிடாமல் இரு. நான் உன்னை ஒன்றும் செய்யாமல் போய்விடுகிறேன்.
சு : (நிதானமாக) எனக்கென்ன பயம்? இங்கே கள்ளன், கீழே காமுகன். உனக்கு என் உடைமை வேண்டும். அவனோ என்னையே அபகரிக்க வந்திருக்கிறான். நீ கருந்தேள், கீழே கருநாகம்.
(கள்ளன் திகைத்துப் போகிறான்.)
சு : பயமாக இருக்கிறதா? உனக்கு உயிர்மீது இன்னம் ஆசை இருக்கிறது. எனக்கு அந்த ஆசை இல்லை. ஆகவே அச்சமும் இல்லை. நீ சுட்டாலும் சாவேன், சுடாவிட்டால் கூடச் சாவேன்.
(கோப்பையைக் காட்டி)
இதோ பார்! இதுவும் ஒரு ஆயுதந்தான்.
சு : என்ன இது?
சு: விஷம்!
க : அய்யோ !
சு : அடே, என்ன அச்சம் ! இன்னம் இரண்டு நிமிஷம் கழித்து வந்திருந்தால் இந்தக் கோப்பை கீழே உருண்டு கிடக்கும் என் பிணம் இங்கே கிடக்கும். உன் வேலையும் சுலபமாகி இருக்கும்.
சு : உனக்குப் பைத்தியமா?
சு: (தலையை அசைத்து) துளிகூடக் கிடையாது. ஆனால், ஜெமீன்தாரர் ஜெகவீரர் தாசானு தாசனாகிறேன் என்று சொல்கிறார். அவரைக் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேனென்று பிடிவாதம் செய்கிறாயே, சுசீலா ! நீ ஒரு பைத்யம் – என்று அப்பா கூறுகிறார். அவர் மட்டுமா? என் ஆருயிர்க் காதலர் அடிக்கடி சொல்வார், “என்ன கண்ணே ! பைதயம் உனக்கு! உலகமே எதிர்த்தாலும் நான் உன்னை விடமாட்டேன்” என்று. அவர் ஒரு பிரபல டாக்டர். ஆனால் வேடிக்கை என்ன தெரியுமோ? எனக்குப் பைத்யம் துளிகூடக் கிடையாது.
க: என்ன தொல்லை இது! இது ஒரு மாதிரி பைத்யமோ?
சு : உனக்குக் காதல் தெரியுமா?
க : தெரியாதே.
சு : கன்னம் வைப்பது. கதவை உடைப்பது, காதை அறுப்பது இதுமட்டும்தான் தெரியுமோ? என்னப்பா இது. களவாடினால் உனக்குப் பொருள் கிடைக்கும். வாழ்க் கைக்குப் பொருள் மட்டும் போதுமா? காதல் தெரியா விட்டால் நீ என்ன செய்யப்போகிறாய் களவாடிய பொருளை எல்லாம் வைத்துக்கொண்டு ?
க : எனக்கு மயக்கம் வருகிறது.
சு : இவ்வளவு அழகான நிலவில், உனக்குக் களவாடப் போகலாம் என்று புத்தி பிறந்ததே தவிர, வேடிக்கையாக உலாவலாம், ஆனந்தமாகப் பாடலாம் என்று தோன்ற வில்லை. ஏன்? காதல் என்றால் தான் தெரியாது என்கிறாயே!
க: நான் போகிறேன். நீ ஏதேதோ பேசுகிறாய். உன்னைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது, பயமாகவும் இருக்கிறது.
சு : நேற்று நீ வந்திருந்தால் நானும் கூடத்தான் பயந்து போயிருப்பேன். இன்று உண்மையிலேயே பரிதாபப் படுகிறேன். ஏன் தெரியுமோ? நீ உன் முழுத் திறமையைக் காட்டினாலும் என்னை என்ன செய்ய முடியும்? சாகடிக்க முடியும். நான்தான் சாகத் துணிந்து விட்டேனே! இனிப் பயம் என்ன? சுடு இஷ்டமிருந்தால்.
க : இல்லை நான் போகிறேன். ஏதோ சதி நாடக மாடுகிறாய். என்னை ஏய்க்கப் பார்க்கிறாய். நான் கீழே இறங்கிப் போகும்போது கூச்சலிட்டு என்னைச் சிக்க வைக்கலாம் என்று பார்க்கிறாய். நான் ஏமாறமாட்டேன். அப்படியே அந்த நாற்காலியில் உட்கார்.
சு : பிறகு?
க : உன் வாயில் துணி அடைத்து …..
க : வழக்கமாக நடப்பதுதான். வாயில் துணி அடைத்து என்னை நாற்காலியோடு சேர்த்துக் கட்டிவிடப் போகிறாய். அதுதானே!
க: ஆமாம்… கூச்சலிட்டால்….
சு: பயப்படாதே! இது பெரிய மாளிகை. ஒருதரம் இரண்டு தரம் கூச்சலிட்டால் கீழே கேட்காது. சரி நான் கூச்சலிட்டால் கொன்றுவிடுவாய் பைத்யக்காரா கொலை! தற்கொலை! இரண்டிலே எதுவாக இருந்தால் என்ன? இப்போது நான் சாகவேண்டும். அவ்வளவுதான்.
(சுசீலாவின் கண்களிலே கொஞ்சம் நீர் பெருகுவது கண்டு)
க கண்களிலே நீர் ….
சு : அப்பா! உனக்கு அக்கா, தங்கை, யாராவது இருக்கிறார்களா?
க : (இல்லை) என்று தெரிவிக்கத் தலையை அசைக்கிறான்.)
சு : அம்மா ?
க : ( இருக்கிறார்கள் என்று தெரிவிக்கத் தலையை அசைக்கிறான்.)
சு : எனக்கொரு உபகாரம் செய்கிறாயா? களவாட வந்தவனை ஒரு கன்னி உபகாரம் செய் என்று கேட்பது. படமெடுத்தாடும் நரகத்தைப் பார்த்து மாணிக்கம் கொடு என்று கேட்பது போலிருக்கிறதா? என் நிலைமை அப்படிப் பட்டது. அதனால்தான், யாரைக் கண்டால் பயத்தால் கூக் குரலிட வேண்டுமோ, அவனைக் கண்டு உதவி கேட்கிறேன்.
க : நம்ப முடியாத வேடிக்கையாக இருக்கிறதே. நான் என்ன உதவி செய்ய முடியும்? கள்ளனிடம்……. உதவி கேட்டால்… எனக்குப் புரியவில்லையே.
சு : எனக்கு உதவி செய்வார் யாரும் இல்லை . இந்த விஷத்தைத்தான் உதவிக்கு அழைத்தேன். நீ விஷத்தைவிடக் கொடியவனா! நீ கட்டாயம் உதவி செய்யமுடியும்.
க: என்ன உதவி?
சு: கள்ளனாக இருந்தது போதும். நாளைக்கு வேண்டு மானால் கூடக் கள்ளன் வேலைக்குப் போக வேண்டாம். உன் ஆயுட்பரியந்தம் திருட வேண்டிய அவசியமின்றி உனக்குப் பொருள் தருகிறேன். வேலை தருகிறேன். எனக்கு மட்டும் இப்போது ஒரு உதவி செய்.
க: (புரியாமல் ) நானா? உதவியா? என்ன உதவி?
க: கொஞ்ச நேரம் என் காதலனாக இரு.
க : பயந்து போய்) தாயே! கும்பிடுகிறேன். நீ வனதேவதையோ, மோகினியோ, என்னை ஒன்றும் செய்து விடாதே. நான் தாய்க்கு ஒரே மகன்… இனி நான் சத்யமாகத் திருடுவதில்லை .
ஐயோ! ஐயோ! முட்டாளே! நான் தேவதையுமல்ல, பிசாசுமல்ல. உன்னிடம் உதவி கேட்கும் ஒரு அபாக்யவதி, கொஞ்ச நேரம் ஒரு மணி நேரம் என்னைத் தாயே, பேயே என்று கூப்பிடாமல், கண்ணே ! மணியே ! என்று கூப்பிடு. அஞ்சாதே, கொஞ்சிப் பேசு.
க : (திகைப்படைந்து) நானா? உன்னையா?
சு : உண்மையாக அல்ல, பாவனையாக.
க: ஏன்?
சு: உட்கார். நான் இந்த வீட்டுக்காரரின் ஒரே மகள் – தாய் இல்லை – நான் அழகாக இருக்கிறேனல்லவா?
க : ஆமாம்…
சு : அதனாலேதான் எனக்கு ஆபத்து. பெண்களுக்கு அழகு, ஆபத்தையும் உண்டாக்கும். அந்த அழகால் மற்றவர்களுக்கும் ஆபத்து உண்டாகும். என்னைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்று என் மாமன், காமுகன், கயவன், பிடிவாதம் செய்கிறான். எப்படியோ என் அப்பாவைச் சரிப்படுத்திக் கொண்டான்.
க : அவனைக் கொன்றுவிடுகிறேன். அது முடியும் என்னால் ….
சு : கொலை தெரியும், களவு தெரியும், காதலிக்க மட்டும் தெரியாதா? இது தெரிந்து கொள்ளாமல் இவ்வளவு பெரிய ஆளாகி விட்டாயே.
க : காதல் என்பது சூது – சுகபோகிகளின் சதி – கவிகளின் கற்பனை மாளிகையிலே தரப்படும் மது – என்று என் தாயார் எனக்குக் கூறி இருக்கிறார்கள்.
சு: பாவம், உன் அம்மாவை எவனாவது பாதகன் ஏமாற்றி பிட்டிருப்பான். மனம் நொந்து சொன்ன வார்த்தை அது. ஆனால் காதல் சதி அல்ல, வலை ; சிக்கினவர் தப்புவதில்லை ; பானவில்; ஆனால் இருக்கும் வரையில் அழகு அற்புதமாக இருக்கும். கைகூடினால் விருந்து, இல்லையோ அதுவே விஷம். காதல் சந்திரன் போல ஜோதியாகவும் இருக்கும்; சில சமயம் நெருப்பாகவும் எரிக்கும்.
(சுசீலா இப்படிக் கூறும்போது, கள்ளன் மெள்ள நழுவப் பார்க்கிறான். அதைக் கண்டுவிட்ட சுசீலா அவனை நோக்கி)
க : போகாதே… உட்கார். நீ போக முயற்சித்தால், நான் கூச்சலிடுவேன் – நீ அகப்பட்டுக் கொள்வாய். நான் இதைப்பற்றி உனக்குச் சாவகாசமாகப் பிறகு கூறுகிறேன். ஒரு பித்தனின் பிடியிலே என் தகப்பனார் சிக்கிக்கொண்டார். ஒரே ஒரு வழிதான் இருக்கிறது நான் தப்பித்துக்கொள்ள. ஜெமீன்தாரனாகப் பார்த்து, என்னை வேண்டாம் என்று சொல்லிவிட வேண்டும். அதற்குத்தான் இந்த ஏற்பாடு. என்னைப் பார்க்க, பேச, அவன் வரப்போகிறான்.
(சந்தடி ஏதாவது கேட்கிறதா என்று உற்றுக் கேட்கிறாள்.)
இரு ! இல்லை! சந்தடி காணோம். இன்னம் வரவில்லை. கொஞ்சம் நேரம் ஆகட்டும் என்று இருக்கிறான். அந்தக் கயவன் நான் தூங்கிய பிறகு வரலாம் என்று கூட இருப்பான். அவன் வருகிற சமயமாகப் பார்த்து, நீ என்னிடம் காதலிப்பது போலப் பேசு , நானும் சரசமாடுபவள் போல் நடிப்பேன். அவன் உள்ளே வந்து அந்தக் காட்சியைக் கண்டால், உடனே என்னை வெறுத்துவிட்டுப் போய் விடுவான். நான் கேவலம் நள்ளிரவில் சோரநாயகனிடம் பேசிக் கிடப்பவள் என்று எண்ணி என்னைக் கலியாணம் செய்து கொள்வது என்று கொண்டுள்ள ஆசையை விட்டு விடுவான். உன் பெயர் என்ன?
க : ரத்தினம்.
க : ரத்தினம்! இந்த உதவி செய், அல்லது என் உயிரைப் போக்கு.
(சுசீலாவின் சோகநிலையை உணர்ந்து பரிதாபம் – கொண்ட கள்ளன் நல்வழிப்பட்டு)
க : என் தங்கை அம்மா இனி நீ . இவ்வளவு இளவயதில் விஷம் சாப்பிட்டு மடியவும், என் கைத் துப்பாக்கியால் சாகவும் துணியும் அளவுக்கு உனக்கு மனவேதனை ஏற்பட்டிருக்கிறது.
இப்போதுதான் உணர்ந்தேன் உன் நிலைமையை.
க : நீ மிக நல்லவனப்பா .
க: இதுதானம்மா முதல் தடவை என்னை நல்லவன் என்று பிறர் கூறக் கேட்டது. ஆனால் என் தாயின் மேல் ஆணை. இனி நான் களவாட மாட்டேன்.
சு : என்னைக் காப்பாற்ற?
க: தயங்கமாட்டேன்….
சு : என் பெயர் சுசீலா?
க: தயங்கமாட்டேன் சுசீலா !
சு : அந்தக் காமக்குரங்கு ஏதாவது என்னிடம் சேஷ்டை செய்தால் வாலை நறுக்கு.
க : பேஷ்! அது நமக்குப் பழக்கமான வேலை. இந்தக் காதல் விஷயம் தான் புதிது.
சு; நான் அவனைக் கண்டதும் திடுக்கிடுவது போலிருப்பேன்.
க : சரி.
சு: அவன் உன்னை அடிப்பான். கொஞ்சம் முன்கோபி. மேலும் இப்படிப்பட்ட சமயத்திலே கோழைகூடத் தைரியசாலியாவானல்லவா?
க : அடிப்பானா? என் சுபாவம் ஒரு மாதிரி சுசீலா அடி விழுந்தால் நான் மனுஷனல்ல, மிருகமாகிவிடுவேன் : கண்மண் தெரியாமல் தாக்குவேன்.
சு : நடக்கட்டும். ஆனால் ஒன்று. நான் இடையிடையே வேண்டாம். அடிக்காதே, என்று கெஞ்சுவேன்; சட்டை செய்யாதது போல நடந்து கொள்ள வேண்டும்.
க : சரி, சுசீலா ! ஆத்திரத்தில் நான் எதையும் மறந்து விடுவேன். அந்தச் சமயம் இந்தத் துப்பாக்கி என்னிடம். இருப்பது ஆபத்து. இதை நீ வைத்துக்கொள்.
சு: ரத்தினம் நீகள்ளனாகக் காலந்தள்ளுகிறாயே தவிர, உண்மையிலேயே என்னைப்போல ஒரு தங்கை இருந்திருந்தால் உத்தமனாகி இருக்கலாம். எவ்வளவு நம்பிக்கையுடன் துப்பாக்கியை என்னிடம் கொடுக்கிறாய்,
க : நான் மறுபிறவி அல்லவா எடுத்திருக்கிறேன் சுசீலா ! சாகசமாகப் பேசி என்னைச் சாகடிக்கவே நீ தந்திரம் செய்து துப்பாக்கியை வாங்கிக் கொண்டதாகவே இருக்கட்டும். சகல சுகமும் இருக்கும்போது, காதலுக்காக உயிரைவிடத் துணியும் ஒரு உத்தமியின் கரத்தால் மாள்வது. ஊராரிடமோ, ஊர் ஆள்வோரிடமோ உதைபட்டுச் சாவதைவிட மேலான தல்லவா?
சு : ஒரு கள்ளன் காட்டும் இரக்கம் கூடக் காமுகனிடம் கிடைப்பதில்லை.
க : ஆமாம், உன்னை வதைக்கும் அந்த வஞ்சகன் இப்போது அல்லது இன்னம் கொஞ்ச நேரத்தில் இங்கு வருவான் என்று எப்படித் தெரியும் உனக்கு? – சு : (கேலியாக அதுவா? தோட்டத்துச் சுவரைத் தாண்டி, கயிறு போட்டு ஜன்னலில் மாட்டி, உள்ளே வரத் தெரிந்ததல்லவா உனக்கு?
க. ஆமாம். அது என் தொழில், பழக்கம். க: கள்ளன் எந்த வீடும் நுழைவான். காமுகன் கதியற்ற கன்னிமாடமாகப் பார்த்து நுழைவான் பெண்களால் அவ்விதமான ஆண்களின் சுபாவத்தைத் தெரிந்து கொள்ள முடியும்.
க: அப்படியா! சு : மேலும் நான் சம்மதித்துவிட்டேனல்லவா. அந்தச் சண்டாளன் அதே நினைப்பிலே இருப்பான். தூக்கமும் வராது. மோக மயக்கம் இருக்கும். தனியாகத்தானே இருப்பாள். தகப்பனோ நம்மிடம் பயந்து கிடக்கிறான், போய்த்தான் பேசுவோமே என்று தோன்றும். வருவான். மேலும், காந்தர்வ விவாகம் என்று வேறே சொல்லி இருக்கிறான்.
க : மடையன்! வரட்டும்.
(உட்காருகிறான்.)
காட்சி -16
இடம் : சேகர் வீடு
இருப்போர் : சேகர்.
(சேகர் படுத்துப் புரள்கிறான். தூக்கமில்லை. படிக்கிறான், முடியவில்லை. பாடுகிறான், திருப்தி இல்லை. உலாவுகிறான் – யோசிக்கிறான்.)
சே : (தனிமொழி) சுசீலாவை ஏன் அவ்வளவு அவசரமாக அழைத்துக்கொண்டு போனார்கள். ஒருவேளை, தேவருக்கு உடம்பு ஏதாவது… செச்சே! உடம்புக்குச் சரியில்லை என்றால் என்னை அல்லவா அழைத்திருப்பார்கள். மாரி அவசரப் படுத்தி அல்லவா அழைத்துக்கொண்டு போனாள். எதற்கும் டெலிபோன் செய்து கேட்போமே.
(டெலிபோன் செய்கிறான்.)
“ஹலோ ! ஹலோ !”
‘ஆமாம்! நான் தான், டாக்டர் சேகர்தான் பேசுகிறேன்…’
காட்சி -17
இடம் :- தேவர் வீடு
இருப்போர் – தேவர் , ஜெகவீரர்.
[தேவர் மேஜை மீது தலையைக் கவிழ்த்த வண்ணம் கவலையுடன் ஏதேதோ நினைத்துக் கொண்டிருக்கிறார்.)
(ஜெகவீரர், போதையுடன் அவரை விறைத்துப் பார்ப்பதும், உலவுவதுமாக இருக்கிறார்.
டெலிபோன் மணி அடித்ததும் தேவர் பேசுகிறார் !
தே: என்ன சேகர்? இந்த நேரத்தில்….
…
தே: ஓஹோ சுசீலாவை அவசரமாக அழைத்துக் கொண்டு வரவே, பயந்துவிட்டாயா?
…
தே: அதெல்லாம் ஒன்றுமில்லை …
(ஜெகவீரர் குறுக்கிட்டு)
ஜெ : யார் பேசுவது?
தே: சேகரன்.
ஜெ : சேகரனா? சரி! இங்கே வரச் சொல்லுங்கள்,
தே : யாரை?
ஜெ : அவனைத்தான். பயல், நாளைக்கு நிச்சயதார்த் தத்தின் போது ஏதாவது தொல்லை தரக்கூடும். வரவழைத்து …
தே: அவன் காலில் வீழ்ந்து
ஜெ : காலில் விழுவதோ, கண்ணீர் பொழிவதோ, எனக்குத் தெரியாது. நான் வெளியே போய் வருகிறேன். அதற்குள்
தே: (டெலிபோனில்) டாக்டர்! ஆமாம்! கொஞ்சம் வந்து போகிறீரா… இல்லை… சுசீலா தூங்கிவிட்டாள். எனக்குக் கொஞ்சம் மார்வலி… அப்பப்பா பப்பப்பா …
”ஆமாம், சுசீலாவுக்குக்கூடத் தெரியக்கூடாது… பயந்து விடும். உடனே தான் …… வரு கிறீரா?… சந்தடி கூடாது. குழந்தை பயப்படும் …..
காட்சி -18
இடம் : — சேகர் வீடு.
இருப்போர் – சேகர்.
(அவசரமாகக் கோட்டுப் போட்டுக்கொண்டு சில மருந்துகளையும் பெட்டியில் வைத்துக் கொண்டு புறப்படுகிறார்.)
காட்சி -19
இடம் :- தேவர் வீடு.
இருப்போர் :- தேவர்.
[தேவர் சேகர் வரவுக்காகக் காத்திருக்கிறார். சேகர் அவசரமாக வருகிறார்.)
தே: சந்தடி செய்யாதீர், டாக்டர்! உட்காரும்.
(டாக்டர் சேகர், ஸ்டெதாஸ்கோப் எடுக்கிறார் – பரிசோதிக்கிறார்.)
தே: பார் சேகர்! எப்படி அடித்துக் கொள்கிறது பார்த்தாயா?
சே : ஆமாம்! கொஞ்சம் படுத்துக்கொள்கிறீரா? சரியாகப் பார்க்க வேண்டும்.
தே : பைத்யம்? சேகர், அதையெல்லாம் சுருட்டி வை பெட்டியில் உட்கார் இப்படி..
சே : இதயக் கோளாறு என்றீரே… தே: ஆமாம். நெடுநாளைய வியாதி. ஆனால் சுசீலா அதை சொஸ்தப்படுத்திவிட்டாள். உட்கார் சேகர்.
சே : மார்புகூட, படபட என்று அடித்ததே.
தே: நோயால் அல்ல. சேகர்! பேய் அறைந்து விட்டது என்னை ஏன் அப்படி விறைத்துப் பார்க்கிறாய்? பேயாவது. பிசாசாவது. இதை எல்லாம் யார் நம்புவது என்கிறாயா? பேய், வேறோர் தனியான ஜாதி அல்ல அப்பா! மனிதர்களிலேயே சிலர் பேய்க்குணம் படைத்தவர்கள்தான்.
சே : தாங்கள் என்ன சொல்கிறீர்கள்?
தே: சொல்லவேண்டியது இனிமேல் தான் சேகர் . நீ திடுக்கிடாமல் கேட்கவேண்டும். குறுக்கே எதுவும் பேசக் கூடாது. சுசீலா உன்னைக் கலியாணம் செய்துகொள்ள மாட்டாள்.
சே : வேடிக்கை பேச …
தே : வயதுமல்ல, நேரமுமல்ல. நாளைக்கு சுசீலாவை ஜெமீன்தாரர் ஜெகவீரருக்கு மணமுடிக்க நிச்சயம் செய்யப் போகிறோம்,
சே : சுசீலா …?
தே: சம்மதித்து விட்டாள்.
சே: நான் நம்பமுடியாது ….
தே: உலகமே நம்பாது. ஆனால் அது உண்மை . சுசீலா சம்மதித்தது, உன்னை மறந்ததால் அல்ல, என் உயிரைக் காப்பாற்ற.
சே : தங்கள் உயிருக்கும் சுசீலா திருமணத்துக்கும் என்ன சம்பந்தம்?
தே: தம்பி! என்னைப் பார். நான் கொலைகாரன் என்று சொன்னால் நம்புவாயா?
சே : ஒருக்காலும் நம்ப மாட்டேன்.
தே: கள்ளமில்லாத வெள்ளை உள்ளம்; ஆனால் உண்மை என்ன தெரியுமா? நான் கொலை செய்தவன்.
(சேகர் திடுக்கிடுகிறான்.)
சேகர் பரிதாபத்துக்குரிய என் கதையைக் கேள். நான் வாலிபனாக இருந்தபோது. ஒரு அழகிய இளம் விதவையைக் காதலித்தேன். அவள் என்னைப் பரிபூரணமாக நம்பினாள். காதலில் மூழ்கினோம். கடைசியில் சமூகக் கட்டுப்பாட்டுக்கும் குடும்பக் கெளரவத்துக்கும் பயந்து. நான் அவளைக் கைவிட்டேன் … கர்ப்ப வதியாக…. .
இந்தக் கொடியவனால் கைவிடப்பட்ட அப்பெண் என்னென்ன கஷ்டத்துக்கு ஆளானாளோ தெரியாது. அடிக்கடி என் மனம் மட்டும் சுடும். ஆனால் கற்பழித்த காதகனான நான், ஜெமீன்தாரர் ஜெகவீரரின் தங்கை பவானியைக் கலியாணம் செய்துகொண்டு, கெளரவம் பெற்றேன். அந்த விதவையின் பெயர் சொர்ணம், ஸ்வர்ணா என்றும் பெயர்.
சே : யார்? மருதூர் மிட்டாதாரரின் வைப்பாட்டியாகச் சில காலம் இருந்தவளா?
தே: ஆமாம். அவளை விபசாரியாக்கியவன், நான் தான்! அவள் விதி அது என்று உலகம் கூறும். இந்தச் சண்டாளன் செய்த சதி, சொர்ணத்தை அந்தக் கதிக்கு ஆளாக்கிற்று.
சே : நான் என் செல்வத்திலும் சுகத்திலும் மூழ்கிச் சொர்ணத்தை மறந்தே போனேன். அவளோ பலவிதக் கஷ்டம் அனுபவித்துப் பிறகு, மருதூர் மிட்டாதாரரின் வைப் பாட்டியானாள். எனக்கு அது தெரியாது. நான் ஒரு வேலை யாக மிட்டாதாரரைப் பார்க்கச் சென்றேன் மருதூருக்கு. அருமையான விருந்து, உபசாரம் – மிட்டாதாரர் எனக்கு அளித்தார். அன்றிரவு. அவர் ஒரு அவசர காரியமாக வெளியே சென்றார். நான் மிட்டாதாரரின் மாளிகைத் தோட்டத்திலே உலவச் சென்றேன். இன்று போல் அன்றும் நல்ல நிலவு.
காட்சி -20
இடம் :- மருதூர் மிட்டா தோட்டம்.
இருப்போர் :- சொர்ணம், தேவர், மிட்டாதாரர்.
[தோட்டம் – நிலவு – தேவரின் வாலிபப் பருவம் – பாட்டு – சாளரம் திறக்கப்பட்டு ஒரு பெண் பார்க்கிறாள். இருவரும் பார்க்கின்றனர் ஆச்சரியத்துடன்.)
தே: (ஆவலுடன் – ஆச்சரியத்துடன்) சொர்ணம்!
சொ : தாங்களா?
(தேவர் கரங்களை நீட்டுகிறார். அவளை அழைக்கும் பாவனையில். ஒருகணம், தேவர் தனிமை. சாளரத்திலே சொர்ணம் இல்லை.)
தே: பிரமை ! ஆமாம்! (தனிமொழி) ஆனால் குரல், அதே குரல்…. சொர்ணமா? இருக்க முடியுமா?
[எதிர்ப்புறமிருந்து சொர்ணம் ஓடிவருகிறாள். இருவரும் ஓடித் தழுவிக்கொள்கின்றனர். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கின்றனர்.]
தே : (அடி மூச்சுக் குரலில்) சொர்ணம்? நான் ….
சொ : இன்பக் கனவல்ல ! உண்மைதான்! நீங்கள் இங்கே எப்படி?
தே: மிட்டாதாரரிடம் ஒரு வேலையாக … நீ?
சொ : நானும் அவருடைய வேலையாள் தான் ….
(தேவர் சொர்ணத்துடைய ஆடை அலங்காரங்களைப் பார்க்க)
வேலை செய்பவளுக்கு. இப்படி அலங்காரம் இராதே என்று பார்க்கிறீரா? நான் மிட்டாதாரரின் அபிமான ஸ்திரி!
தே: அபிமான ஸ்திரி!
சொ : (தலையை ஆட்டி ) ஆமாம் ! மானம் இழந்த பிறகு அந்தப் பட்டம் தரப்படுகிறது. மாளிகையிலே குடி ஏறினால். பழைய மண் குடிசையாகவே இருந்தால், அபிமான ஸ்திரி என்ற பெயர் இராது. வேறு பலவிதமான பெயர். (பெருமூச்சு .)
தே: (சொர்ணத்தை மறுபடி ஒரு கணம் ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு, ஆவேசம் கொண்டவர் போல) சொர்ணம்!
சொ: இல்லை! சொர்ணம் செத்துவிட்டாள். உம்முடன் சோலையிலே விளையாடிய சொர்ணம் செத்துவிட்டாள். விதவை மாண்டு போனாள். நான் ஸ்வர்ணா மிட்டாதாரரின் வைப்பாட்டி . கருணாகரத் தேவரின் மனைவியாக இருக்க வேண்டியவள் இன்று இந்த நிலையில்
(தேவர் முகத்திலறைந்து கொண்டு)
தே: சொர்ணம் இந்தப் பாவியை மன்னித்து விடு. மாசற்ற உனக்கு நான் துரோகம் செய்தேன். மகா பாதகன் நான்.
சொ : அதற்குப் பரிசாகப் பகவான் உம்மை ஜெமீன் வீட்டு மருமகனாக்கினார். எனக்கும்தான். (மாளிகையைக் காட்டி ) இந்த அந்தஸ்தை (தன் அலங்காரத்தைக் காட்டி) இந்த அலங்காரத்தைத் தந்தார்.
தே : சொர்ணம்! என்னை நீ எவ்வளவு கண்டித்தாலும் குற்றமில்லை . நான் செய்தது துரோகம் …….
சொ : மாளிகையிலே, இத்தகைய துரோகங்கள் வெறும் நிலாச்சோறு.
தே : இந்தக் காதகனின் துரோகத்தால் இந்தக் கதிக்கு ஆளானாய். மாதரசி ! உன் மலர் முகத்தை மறைத்துக் கொள். உன் அழகும் அலங்காரமும் என்னைக் கொல்கிறது. மறைந்து போ! என்னை மயக்க வந்த மின்னலே மறைந்து விடு.
சொ : (கேலியாக) என் காதலர் கவியாகிவிட்டார்!
தே: கவியானேன்! பலன்! வாழ்க்கையிலே நான் அடைய வேண்டிய விருந்தை இழந்தேன். சொர்ணம்!
சொ: உயிரும் உடலும், மலரும் மணமும், நரம்பும் நாதமும் என்று, அன்று சொன்னீர். நம்பினேன். மோசம் போனேன். கைவிட்டீர், கவலையில் மூழ்கினேன்; கண்ணீர் பொழிந் தேன்; யார் இரக்கம் காட்டினார்கள். இந்தக் கைம் பெண் ணிடம்? சுற்றாத கோயில் இல்லை ! பூஜை, விரதம் என்று தவறவில்லை. என் மணாளர் என்னை ஏற்றுக்கொள்வார், மறுபடியும் வருவார், என்னைப் படுகுழியில் தள்ளமாட்டார் என்று நம்பினேன்… நெடுநாள் வரையிலே ஒரே ஒரு நாள், உலகின் முன்பு, பகிரங்கமாக. ”ஆமாம்! சொர்ணம் என் மனைவிதான்” என்று சொல்லிவிடட்டும். அது போதும். பிறகு விஷம் கொடுத்துச் சாப்பிடு என்று கூறினாலும் துளிகூடச் சஞ்சலமின்றிச் சாப்பிடலாம், என்றுகூட நினைத்தேன்.
கோயில் சுற்றிச் சுற்றி நான் கண்ட பலன் என்ன?
உம்மைப் பெறவில்லை. உமது மனம் மாறவில்லை. கோயிலுக்கு வந்த வேறு பலரின் மனதிலே ஆசையைக் கிளறவே பயன்பட்டது.
உலகமென்ன தர்ம சத்திரமா என்னைக் காப்பாற்ற. நான் வாழ வழியில்லை. என் குடும்பம் தத்தளித்தது, காப்பாற்ற மார்க்கம் இல்லை… நான் விபசாரியானேன் – விபசாரியாக்கப்பட்டேன்.
தே: ஐயோ ! பாவி நான்…..
சொ : பதற வேண்டாம்! குல மாதாக, குடும்ப விளக்காக, தங்கள் தர்ம பத்தினியாக இருக்க வேண்டுமென்று தவம் கிடந்தேன். இன்று ! உமது கண்களை மயக்கும் காமவல்லியாக நிற்கிறேன். மிட்டாதாரரின் போகப் பொருள்.
காதலிக்கத் தெரிந்த உமக்குக் கடமையின் இலட்சணமும் தெரிந்தால் நான் இந்தக் கதிக்கு ஆளாகி இருக்கமாட்டேன். உம் நெஞ்சிலே வஞ்சகம் இருந்தது. கொஞ்சினீர். பிறகு, விதவை நமது அந்தஸ்தை, குலப்பெருமையைக் கொல்லும் நஞ்சு என்று எண்ணிக் கைவிட்டீர்.
தே: சமூகம் என்னை வற்புறுத்திற்று. மிரட்டிற்று.
சொ : சமூகம், சாலை ஓரத்தில் உலாவும் அபலைகளை நம்பிக்கை கொள்ளும்படி செய்து, பிறகு நட்டாற்றில் விடும்படியும் சொல்கிறதா? சமூகத்தின் கோபத்துக்குப் பயந்தீர்; உமது மனம். உமக்கு ஒன்றும் கட்டளை பிறப்பிக்கவில்லையா? ‘அவள் அபலை! உன்னை நம்பினாள்! உலகமே நீதான் என்று எண்ணினாள். அவளுக்கு நீ ஆயிரம் தடவை சத்தியம் செய்திருப்பாய்; அவளுடைய நெஞ்சு நடுங்கிய போது, நீ அவளை பயப்படாதே என்று கூறினாய். அவள் அதற்கு முன் கேட்டறியாததெல்லாம் பேசினாய்; கண்ணீரைத் துடைத்தாய். கூந்தலைக் கோதினாய், கோமளமே என்று கொஞ்சினாய். அவளைக் கைவிடாதே. நீ கைவிட்டால், அவள் சமூகத்தின் சாபம் என்று அழைக்கப்படும், விபசாரப் படுகுழியில் தள்ளப்படுவாள்!” என்று உம்முடைய மனம் சொல்லவில்லையா? மாளிகை வாசம் இருந்தால் என்ன . மனம் அங்கே மட்டும் இரும்பா?
தே : நான் செய்ததற்காக நான் மனமார வருந்துகிறேன், சொர்ணம் என்னை மன்னித்துவிடு.
சொ : இப்போதும், உமது சுகத்தைத்தான் தேடிக் கொள்கிறீர். மன்னிப்புக் கேட்கிறீர், உம்முடைய மனச் சாந்திக்காக. நான் அதனை உமக்கு அளிக்க முடியும். ஆனால் உலகம் என்னை மன்னிக்குமா? ‘பாவம் அவள் மீது குற்ற மில்லை! சமூகக் கட்டுப்பாட்டுக்குப் பயந்த ஒரு ஆடவனால் அவள் கைவிடப்பட்டாள்’ என்று கூறுமா? என்னைப் பார்த்ததும் உலகம் என்ன சொல்லும்?
‘போகிறாள் பார் விபசாரி!’ ‘குலுக்கி நடக்கிறாள்.’ ‘மினுக்கிக் கொண்டு திரிகிறாள்!
‘மிட்டாதாரனை மயக்கினாள்!’ என்று கேலியும் கண்டனமும் கலந்த குரலில் பேசும். சீமான்களோ, கண்ட உடனே, என்ன விலை தரலாம் என்று மதிப்புப் போடுவார்கள். அவசரக்காரர்கள் விலாசம் விசாரிப்பார்கள் : அழுத்தக்காரர்கள் பெருமூச்சுடன் நின்று விடுவார்கள்.
நான் இன்று நடமாடும் நாசம்! சரசமாடும் சனியன் ! வலைவீசும் வனிதை !
திருப்புகழ் பாடட்டுமா?
(இரண்டோர் அடி பாடுகிறாள்) இப்படி எல்லாம், எச்சரிக்கை செய்கிறார்கள், என் போன்றவர்களைப்பற்றி கண்ணாடி, என்னை ஓர் அழகி என்று கூறுகிறது. உலகமோ , அபாய அறிவிப்பு என்று சொல்கிறது. இவ்வளவும் ….
தே: என் மனம் உறுதி கொள்ளாததால் தான்….
சொ : இங்கே நான், மாளிகையிலே பார்க்கிறேன், கூடைகூடையாகப் பழம் வரும். தின்பாரின்றி அழுகும். அழுகிய பிறகு குப்பையிலே வீசுவார்கள். பிறகு அதிலே புழு நெளியும். நான் அழுகிய பழம்! அழுகியது என் குற்றமல்ல.
தே: குற்றவாளி நான்தான்.
சொ: உலகம் விசித்திரமான நீதிமன்றம்: நீரே. கூண்டேறி உமது குற்றத்தை ஒப்புக்கொண்டால் கூட, தண்டனை எனக்குத்தான் தரும்!
தே: சொர்ணம் ! என் மனம் படும் பாடு சொல்லி முடியாது.
சொ: என் இளமை, அழகு, அன்பு, ஆவி எல்லாவற்றையும் அர்ப்பணம் செய்ய முன் வந்தேன் ; உமது காலடியில் வைத்தேன். உதைத்துத் தள்ளினீர் – உதறித் தள்ளினீர் – இன்று… துரத்திக் கொண்டு வருகிறீர். ஆனால் உமது பிடிக்கு அகப்பட முடியாத உயரத்தில் நான் இருக்கிறேன்.
தே : என் இருதயத்திலே நீ இடம் பெற்றுவிட்டாய்.
சொ : ஒரு வகையான திருப்தி! எனக்கும் ஒரு விதமான திருப்தி. ஏழ்மையிலேயே புரண்டு கிடந்தேன். இப்போது மிட்டாதாரர் பணத்தால் அபிஷேகிக்கிறார் என்னை .
தே : பணமா பெரியது?
சொ: சந்தேகம் என்ன? வாழ்க்கையிலே பணம் பிரதானமாக இருக்கும் விதமாகத்தானே உலகம் இருக்கிறது. ஏழை என்றும் பணக்காரரென்றும் இரண்டு ஜாதி இல்லாமல், ஒரே ஜாதியாக இருந்தால், எனக்கும் இந்த எண்ணம் உண்டாகாது. பணமின்றி என் குடும்பம் பதைத்தபோது பணமா பெரிது என்று வேதாந்தம் பேசிக் கொண்டு, எங்களைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லையே! பணம் எந்த விதத்திலோ என்னிடம் வந்த பிறகுதான் நான் பரிமளத்துடன் வாழ முடிந்தது. எனக்குத் துரோகம் செய்த சீமானே கண்டு மலைக்கும்படியான மாளிகையிலே உலாவ முடிந்தது.
[தேவர் தலையில் கைகளால் மோதிக்கொண்டு கதறுகிறார். சொர்ணத்தின் மனம் இளகி விடுகிறது. அருகே சென்று அவர் கைகளைப் பிடித்திழுத்து ]
சொ : அழாதே! கண்ணே ! உன்னை நான் அதிகமாகத் தான் வாட்டிவிட்டேன். பழுக்கக் காய்ச்சிய சொற்களை வீசினேன்! ஆனால் அவை. என் வேதனையின் விளைவு வாடை இதோ பார்! இல்லை!
(முகவாய்க் கட்டையைப் பிடித்துக் கொண்டு)
கொஞ்சம் சிரி! அந்தப் பழைய புன்னகை! அந்தக் காலத்துப் பிரேமையில் கொஞ்ச நஞ்சம், மிச்ச மீதி , விட்ட குறை தொட்ட குறை !
[தேவரின் சோகத்தை நீக்க விளையாடுகிறாள் கொஞ்சிப் பேசியபடி தேவர் ஆனந்தமடைகிறார்]
சொ: ஆ! முகத்திலே இப்போதுதானே சந்தோஷம் பிறந்தது.
இப்படிக் கொஞ்சிக் குலவ நான் சித்தமாக இருந்தேன். என் தேவன் தான் வரம் தரவில்லை. கண்களைத் துடைத்துக் கொள். இதோ முந்தானையால்
[முந்தானையால் துடைக்கிறாள் மிட்டாதாரர்,] இந்தச் சேலையை நான் கட்டிக் கொண்டதும் வெட்டிவேர் அத்தர் தெளிப்பார் இதிலே ! இந்தக் கண்ணீருக்குள்ள மதிப்பு அந்த அத்தருக்கு ஏது? இனி உனக்கு நான், எனக்கு நீ சரிதானா? மிட்டாதாரருக்கு மட்டும் தெரியக்கூடாது. அவர் கண்களிலே மட்டும் படக்கூடாது.
ஆனால் நீதான் ஆசை நாயகன் , என் இன்பக் களஞ்சியம்.
(இந்தச் சாகசம் நடைபெறும் நேரத்தில் மிட்டா தாரர் தற்செயலாக அங்கே வந்துவிடுகிறார். கோபம் தலைக்கேறுகிறது. கைத்தடியால் ஓங்கி அடிக்கிறார் சொர்ணத்தின் முதுகில்)
மி : நான் குருடனல்ல! குடிகெடுத்தவளே! உன் ஆசை நாயகனா இந்த நாய்? அடே! கருணாகரா, எவ்வளவு திமிர் !
அடி காதகி!
(அவள் தலைமயிரைப் பிடித்துக் குலுக்கி அடிக்கிறார். தேவர் மயங்கிச் சாய்கிறார். சொர்ணத்தின் நகைகளை அறுக்கிறார். ஒடிக்கிறார்.)
மி : மாலை! செயின்! வளையல்கள்! தொங்கட்டம்! துரோகி!
(நகைகளைக் கழற்றிக்கொண்டு, ஆடையைக் கிழிக்கிறார். அலங்கோலமாக்கப் படுகிறாள் சொர்ணம். இடையே எழுந்திருக்க முயலும் தேவரை , உதைக்கிறார் மிட்டாதாரர்)
மி : கள்ளி! சாக்கடையிலே புரண்டு கொண்டிருந்தவளை . மாளிகையிலே குடிவைத்தேன்! என் வீட்டிலே விருந்துக்கு வந்தவனுடன் …. ஆஹா! எவ்வளவு துணிச்சலடி உனக்கு.
(ஏதோ பேச முயற்சிக்கிறாள் சொர்ணம்.)
பேசாதே வாயைத் திறக்காதே!
[மீண்டும் அடிக்கிறார். சொர்ணம் அலறி அழுகிறாள்.)
மி : அழு புரண்டு புரண்டு அழு ஓலமிடு! துரோகி உனக்கு மாளிகை வாசம் ஒரு கேடா? மிட்டாதாரணியைக் கிராமத்திலே குடியிருக்கச் செய்துவிட்டு, உன் மினுக்கிலே மயங்கி நான் உன்னை மாளிகையிலே கொலு வைத்தேன். குச்சுக்காரியே! எச்சிலைப் பொறுக்கும் நாயே! என்னை வஞ்சித்த போயே ! இது போல் என்னென்ன நடந்ததோ?
(தலைமயிரைப் பிடித்துத் தூக்கி நிறுத்தி) அடி, சோற்றுக்கு அலைந்த சொர்ணம்! என்னைப் பார்த்துப் பேசு! உனக்கு நான் என்ன கேடு செய்தேன் ! ஏன் எனக்கு இந்தத் துரோகம் செய்தாய்? சொல்லு.
[காலில் விழுகிறாள்]
காலைத் தொட்டுப் பயனில்லை! என் மனதைக் கொட்டி விட்டாயே துரோகி! நான் உனக்கு என்ன தரமாட்டேனென்றேன்? உனக்கு இங்கே என்ன இல்லை என்று இவனைத் தேடினாய்?
(சொர்ணம் மறுபடியும் பேச முயற்சிக்கிறாள்.)
வாயைத் திறக்காதே! என் ஆத்திரத்தைக் கிளப்பாதே. என் முன் நில்லாதே! போ! ஓடு!
சொ : (அழுதபடி) இந்த நடுநிசியிலா?
மி : நடுநிசி! நடுநிசியாக இருந்தால் என்னடி உனக்கு. இந்த நடுநிசியிலும் வழியிலே எவனாவது கிடைப்பான், போ.
(சொர்ணத்தைத் துரத்துகிறார். அவள் தள்ளாடித் தோட்டத்தை விட்டுச் செல்கிறாள். தேவர் தெளி வடைகிறார். அவரை மிட்டாதாரர் மறுபடியும் தாக்க, தேவர், மிட்டாதாரர் காலில் வீழ்ந்து)
தே : துரோகம் செய்துவிட்டேன், நான் துரோகி, துரோகி, மன்னிக்க வேண்டும்…..
மி : மன்னிக்க வேண்டும்! உன்னை! விருந்துக்கு வந்த இடத்தில் விபசாரியை விபசாரத்துக்கு இழுத்த உன்னை ? அடே! கருணாகரா! என்னிடம் பேசாதே! நில்லாதே; எழுந்து நட
[தேவரும் தள்ளாடி நடந்து போகிறார்)
காட்சி -21
இடம் :- பாதை.
இருப்போர் – தேவர், சொர்ணம்.
(தள்ளாடிச் செல்லும் சொர்ணம் பாதையில் ஓர் ஓரத்தில் நின்றுகொண்டிருக்கிறாள். தேவரும் வந்து சேருகிறார்.)
சொ: துரையே ! அந்தச் சிறையிலிருந்து வெளிவந்து விட்டேன். நான் பட்ட இம்சையைக் கூட மறந்து விடுகிறேன்; என்னால் தங்களுக்கு இந்தக் கஷ்டம் வந்ததே.
தே: வாழ்க்கையிலே மறக்கமுடியாத அவமானத்தை அடைந்தேன். தீராத பகை மூண்டுவிட்டது எனக்கும் மிட்டாதாரருக்கும்.
சொ : எல்லாம் என்னால் … இந்தப் பாதகியால்.
தே: ஆமாம். (வெறுப்புடன் கூறுகிறார்)
சொ : (திகைக்கிறாள், தேவர் பேச்சுக் கேட்டு) என்ன? என்னாலா? உங்கள் வாயால் அப்படிச் சொல்லாதீர். நான் எவ்வளவோ தடுத்தேன், பொறிபறக்கப் பேசினேன், நீங்கள் தானே அழுது நின்றீர்.
தே: எனக்குச் சபலம் பிறந்தது. மயங்கினேன். அவ்வளவு சம்பத்துடன் அவன் உன்னை வைத்திருக்கும் போது, உனக்கு எப்படியடி துரோக சிந்தனை ஏற்பட்டது?
சொ : (பதைபதைத்து) ஈஸ்வரா! என்னை நீங்களுமா நிந்திக்கவேண்டும்? உங்களால் நான் இந்தக் கதியானேன்! நடுநிசியில் மாளிகையிலிருந்து விரட்டப்படுகிறேன். நான் அதைப்பற்றிக் கொஞ்சம்கூடப் பொருட்படுத்தவில்லை …..
தே: ஏன் பொருட்படுத்தப் போகிறாய்? அவன் போனால் இவன் என்று தீர்மானித்து விட்டாய். அவ்வளவு தானே உனக்கு.
(சொர்ணம் தலையில் அடித்துக்கொண்டு)
சொ : தெய்வமே ! தெய்வமே !
(தேவர் வேகமாகப் போகிறார்…
சொர்ணம் பின் தொடர்கிறாள்.)
சொ: என் கதி என்ன? ஐயோ என்னைக் கைவிடாதீர். போகாதீர்.
தே : சொர்ணம் என் கோபத்தை அதிகப்படுத்தாதே. அழகான நிலவு! நீயோ எனக்குப் பால்ய சிநேகம் ! மேலும் ஒருவனுடைய வைப்பாக இருப்பவள். அந்த நிலையில் ஏதோ உன்னிடம் சரசமாடும் சபலம் பிறந்தது. போராத வேளை, அவன் பார்த்துவிட்டான். அதற்கு நான் என்ன செய்வது? நானும்தான் அடி பட்டேன். நடக்கக்கூட முடியவில்லை.
சொ : என்னைக் காப்பாற்ற முடியாது! அவ்வளவு தானே.
தே: என் மனைவி யார் தெரியுமா?
சொ : தெரியும். அழகி. பார்த்திருக்கிறேன் பவானியை.
தே : அந்த ஜெமீன் வீட்டுப் பெண்ணை மணந்து கொண்ட நான் உன்னோடு குடித்தனம் செய்தால், உலகம் என்ன சொல்லும்? மேலும் உன்னோடு நான் குடித்தனம் செய்தால் மிட்டாதாரன் என்னைச் சும்மா விடமாட்டான்.
சொ : பயம், போலி கெளரவம் ! பழைய வியாதிதான்!
தே: சொர்ணம்! நீ பெரிய வாயாடியாகிவிட்டாய் இப்போது.
சொ : உங்களைப்போன்ற வஞ்சகர்கள் வதைத்ததால்! அன்பரே! என்னைக் கைவிடாதீர்! மயக்கமொழி பேசி என் மனதைக் கெடுத்து விட்டு, என்னை மண்ணில் புரளும்படி விட்டுவிட்டுப் போகாதீர். உமது மாளிகையிலே வேண்டாம். ஒரு மாட்டுக் கொட்டகையில் இடம் கொடும், என்னை மட்டும் ஏற்றுக்கொள்ளும். மேலும் மேலும் பழி தேடிக்கொள்ளாதீர். நான் நம்பி மோசம் போனேன். என்னை மேலும் நாசம் செய்யாதீர்.
[காலில் விழ , தேவர் அவளை உதறித் தள்ளி விட்டுப் போக . இந்தக் காட்சியைக் கொஞ்ச நேரமாக மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு தோட்ட வேலைக்காரன். பாய்ந்து சென்று தேவரின் கரத்தைப் பலமாகப் பிடித்து இழுத்து]
தோட் : மகா யோக்யண்டா நீ! ஒரு பெண்ணைக் கெடுத்துக் கீரை வழியாக்கிவிட்டு, குடும்பக் கெளரவம் குலப் பெருமை பேசிவிட்டு, நம்பி வந்தவனை நடுராத்திரியிலே நடுத் தெருவிலே விட்டுவிட்டுப் போகிறாயே? இதுதான் ஒரு ஆண் பிள்ளைக்கு அழகா?
தே : (எதிர்பாராத சம்பவத்தால் கொஞ்சம் அஞ்சி) அப்பா, நான் கலியாணமானவன். மேலும் ஜெமீன் குடும்பம்.
தோட் : கலியாணம் ஆன உனக்கு கண்ட கண்ட பெண்கள் மேல் ஏன் கண் விழுகிறது? பெரிய ஜெமீன் குடும்பமோ ! இருந்தால் என்ன? ஜெமீன்தாரன்கூட மனுஷ ஜாதிதானே…..
தே: நீ யார் இவள் பொருட்டு என்னிடம் வம்பு செய்ய?
சொ : யாரோ பாவம், நெஞ்சிலே கொஞ்சம் ஈரமுள்ளவன்.
தோட்: (தேவரைப் பார்த்து) நான் ஒரு அன்னக்காவடி. நீ இலட்சாதிபதியாக இரு. அதனாலே, என்ன வேண்டும் மானாலும் செய்து விடலாமா? சொல்லு நீயே.
தே: அப்பா! என் நிலைமை அப்படிப்பட்டது. என்னால் இவள் கஷ்டப்பட்டதால். நான் வேண்டுமானால், ஆயிரம் இரண்டாயிரம் பணம் கொடுத்துவிடுகிறேன்… –
தோட் : (கேலியாக சொர்ணத்தை நோக்கி) இன்னம் என்னம்மா குறை! பணம் கொடுக்கிறாராம் பணம்! பணம் ஒன்று தவிர வேறே என்ன இருக்கிறது இவனிடம், கொடுப்பதற்கு?
[தேவரைப் பார்த்து] ஏ! நீ யாராகவேனும் இரு. என் கண்ணாலே இந்தப் பெண்ணின் கஷ்டத்தைப் பார்த்தான பிறகு, இதுக்கு ஒரு நல்ல கதி காட்டாத முன்பு, உன்னை நான் விடப் போவதில்லை.
சொ: (தோட்டக்காரனைப் பார்த்து) அப்பா! உனக்குக் கோடி புண்யம். இந்தப் பாவியால் நான் விபசாரியானேன் – கொஞ்ச நேரத்துக்கு முன்பு பஞ்சணையில் இருந்தேன் – அங்கு வந்து கெடுத்ததும் இந்தப் பாதகன் தான். நீ யாரோ பாவம், நீ காட்டும் இரக்கத்திலே ஆயிரத்திலே ஒரு பங்கு கூட இவனிடம் இல்லை.
தோ: (கேலியும் சோகமும் நிறைந்த குரலில்) எப்படியம்மா இருக்கும்! அதான் நிறையப் பணம் இருக்கு என்கிறானே ! இரும்புப் பெட்டிக்கும் இருதயத்துக்கும் ஈஸ்வரன் சம்பந்தம் வைக்கிறது இல்லை அம்மா.
சொ : அப்பா ! நீ குல தெய்வம் போலக் குறுக்கிட்டாய். நான் இனிக் கூலி வேலை செய்தாவது பிழைக்கிறேன். எனக்காகப் பரிந்து பேச உலகிலே ஒருவராவது முன் வந்தார்களே, அதுவே போதும், இவன் ஒழியட்டும், விட்டுவிடு.
தோட் : அடடே! அது நடக்கிற காரியமா? பெரிய ஜெமீன் வீடு என்றாரே, அந்த இடத்து யோக்யதை. இலட்சணம். ஊராருக்குக் கொஞ்சம் தெரியணுமில்லே! நம்ம வீட்டுக்கு வாங்க. ஐயாவும் வருவாரு. இருந்து யோசனை செய்து பார்க்கட்டும்.
தே: நான் வர முடியாது.
தோ : ஏன் ! நடக்க முடியலையோ? ஐயாவைத் தூக்கிகிட்டுப் போகணும் போலிருக்கு. வாங்கய்யா, வாங்க. ஏழைக முதுகிலே ஏறிச் சவாரி செய்து செய்து, பரம்பரைப் பரம்பரையாப் பழக்கப்பட்டுப் போ ‘சி! ஆனா இப்போ குதிரைகளெல்லாம் கொஞ்சம் இடக்கு செய்யுது. ஜாக்கிரதையா இருக்கணும். நட, நட, வகையாத்தான் வந்து மாட்டிக்கிட்டயே, ஏங்கிட்ட; விடுவேனா சும்மா ! அதுவும் ஏழை. நானும் ஏழை ஜாதி, எப்படி அதை நடு ரோடிலே தேம்பத் தேம்ப விட்டுவிட்டுப் போகமுடியும்?
(தேவரைப் பிடித்திழுக்க அவர் போகாமல் நின்று திமிருகிறார். சொர்ணம் தோட்டக்காரன் கையைத் தொட்டு)
சொ : வேண்டாம், விட்டுவிடப்பா! போகட்டும்.
தோ: திருடன் பிடிபட்டா, யாரு வீட்டிலே களவாடி னானோ அவனே வந்து விட்டுவிடச் சொன்னாக்கூட போலீசார் விடமாட்டாங்க திருடனை. இந்த மாதிரி ஆசாமி களைக் கண்டா நான் விடற வழக்கமே கிடையாதும்மா. நீ சும்மா இரு, வருவாரு
[தேவரைப் பார்த்து] வாங்கய்யா! வாங்க! சும்மா வாங்க!
[இழுக்க இழுக்கத் தேவர் திமிரிக் கொண்டு இருக்கவே கோபம் கொண்டு]
அடே வாடா, மகா பெரிய யோக்யன்! நாலு நாழியாக் கூப்படறேன். என்னமோராங்கி காட்டறே நம் பகிட்ட.
[தேவரைப் பற பற வென்று இழுத்துச் செல்லுகிறான்)
காட்சி -22
இடம் :- தோட்டக்காரன் வீடு.
இருப்போர் : – தோட்டக்காரன், தேவர், சொர்ணம்.
(மூவரும் வீட்டுக்குள் வந்தபிறகு, ஒரு கை ஒடிந்த நாற்காலியைத் தூக்கிப் போட்டு, தேவரை உட்காரும்படி ஜாடை காட்டிவிட்டு, ஒரு பழைய பாயை விரித்து. சொர்ணத்தை உட்காரச் சொல்லிவிட்டு, தோட்டக்காரன் ஒரு செம்பிலே தண்ணீர் கொண்டுவந்து)
தோ: (சொர்ணத்தைப் பார்த்து) ஏம்மா! தண்ணி வேணுமா? வேணுமா?
(தேவரைப் பார்த்து) ஐயாவுக்குப் பாலுகீலு வேணும். ஏழை வீடு. இங்கே ஏது?
(சொர்ணத்தைப் பார்த்து இந்த ஐயாமாருக்க குணமெல்லாம் நமக்கு ரொம்பப் பழக்கம்.
[தேவர் வலியால் கூச்சலிடுகிறார்]
தே : ஐயோ! அம்மா!
தோ : ஏன்? என்னா ? ஏன் ஐயாவையும் அம்மாவையும் கூப்பிடறே?
தே: (கஷ்டத்துடன்) மாரெல்லாம் வலிக்குது. மயக்கமா இருக்குது! மூச்சு என்னமோ திணறுது.
(துடிக்கிறார்)
தோ : நெஜமா? பாசாங்கா?
[தேவர் துடிக்கக் கண்டு, தோட்டக்காரன் உள்ளே போய் ஒரு கயிற்றுக் கட்டிலைத் தூக்கி வந்து போட்டு அதன் மேல் ஒரு விரிப்பும் போட்டு]
இது மேலே படுத்துக்கொள். என்னடா இது தர்மசங்கடமா போக்சு!
(சொர்ணத்தைப் பார்த்து) ஏம்மா! உள்ளே போயிக் கொஞ்சம் வெந்நீர் போட்டு ஒத்தடம் கொடு. நான் போயி பக்கத்திலே ஒரு வைத்யரு இருக்காரு, அவரை அழைச்சிக்கிட்டு வாரேன்.
உள்ளே போயி அடுப்பு மூட்டும்மா, யாருமில்லை, நானு ஒண்டி கட்டே போயி வைத்யரை அழைச்சிக்கிட்டு வர்ரேன். அந்தப் பாவி எங்கே குடிச்சிப் போட்டு ஆடிகிட்டு இருக்கிறானோ?
[போகிறான்]
காட்சி -23
இடம் :- வைத்தியர் வீடு.
இருப்போர் :- வைத்தியர், அவர் மனைவி.
(வைத்தியர் இருமல் நோயால் கஷ்டப்படுகிறார். அவர் மனைவி பக்கத்தில் இருந்து கொண்டு பேசுகிறாள்.)
ம : இருமி இருமி, அண்டை பக்கத்தைக் கூடத் தூங்க விடாதிங்க. பாழாப்போன சாராயத்தைக் குடிச்சிப் போட்டுத்தான் குடலே வெந்து கிடக்குதே.
வை : சீ ! கழுதேமுண்டே . .
ம : அட உன் மண்டையிலே ஏதாச்சும் மூளை கீளை இருக்குதா? கல்லாட்டமா பக்கத்திலே புருஷன்னு உட்கார்ந்துகிட்டு, என்னைப் போயி முண்டேன்னு சொல்லறயே? உன் புத்தியிருக்கிற லட்சணத்தைப் பாரு.
(உள்ளே வரும் தோட்டக்காரனைப் பார்த்து)
வை : யாரு?
தோ : நான்தான், வேலன்.
வை : ஏம்பா ! என்னா சமாசாரம்? (இருமுகிறார்.)
தோ : ரொம்ப இருமநீங்களே காய்ச்சலோ?
வை: அதெல்லாம் இல்லை போ! காச்சல் கீச்சல் வந்தா நம்மகிட்ட என்ன, மருந்துக்கா பஞ்சம்! தண்ணி சாப்பிட்டேன் , புறை ஏறிப்போச்சி. (இருமுகிறார்) தண்ணி சாப்பிடுகிற போது இவ என்னமோ பேசிச் சிரிப்புக் காட்டிவிட்டா (இருமுகிறார். அது கடக்குது கழுதே ஒரே பொட்டலத்திலே ஓடிப்போகும். நீ என்னா வேலையா வந்தே ?
தோ: நம்ம மச்சான், வீட்டிலே வந்திருக்கிறாரு, மார்வலின்னு துடிக்கிறாரு.
வை : (எழுந்து தலையிலே பாகையை வைத்துக்கொண்டு, புறப்படுகிறார்)
அது கடக்குது கழுதே! ஒரு வேளை கஷாயத்திலேயே ஓடிப்போகும் வா !
(இருவரும் கிளம்புகின்றனர்)
காட்சி -24
இடம் : தோட்டக்காரன் வீடு.
இருப்போர் : தேவர். சொர்ணம், வைத்தியர். தோட்டக்காரன்.
[வைத்தியர் வருகிறபோது தேவருக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருக்கிறாள் சொர்ணம்.
வைத்தியர் கை பார்த்துவிட்டு, உடம்பிலே பல இடங்களிலே அடிபட்டிருப்பதையும் பார்த்து விட்டு, தோட்டக்காரனைப் பார்த்துக் கூறுகிறார்]
வை : ஏம்பா ! சமாசாரம் வேறேயா இல்ல இருக்கு. மார்வலி நோவாலே ஏற்பட்டதில்லை. ஆசாமியை எங்கேயோ சரியாக்குமிப்பூட்டாங்கப்போல இருக்கே.
தோ : அப்படின்னா ?
வை: அட, எங்கேயோ அடி அடின்னு அடிச்சிருக்காங்க. மேல் காயத்தைவிட உள் காயம் அதிகம். கவனிக்காமே விட்டுவிட்டா உள்காயம் ரொம்ப ஆபத்தாச்சே.
தோ : சரி அதுக்கு என்னா செய்யணுமோ செய்யுங்க.
வை: கைகால் பிசகி இருக்குமோ?
[தேவரின் கைகாலை நீட்டியும் மடக்கியும் பார்க்கிறார். தேவர் வலி தாளாது கூச்சலிடுகிறார்]
நினைச்சாப்போலத்தான் இருக்கு. கால் பூட்டு கொஞ்சம் விலகி இருக்கு.
தோ: ஆமாம் நடக்கக்கூட முடியாதுன்னு சொன்னான்.
சொ : நொண்டி நொண்டித்தான் நடந்தாரு.
வை : அது கடக்குது கழுதே ! மூணு நாள் பச்சிலைக் கட்டிலே… பறந்து போவுது போ .
சொ : மூணு நாளாவுமா?
வை: அட, இன்னக்கி ஜுரம் வந்துடுச்சேல்லோ ?
(சொர்ணம் தேவரைத் தொட்டுப் பார்த்து)
சொ : ஆமாம், நெருப்பாட்டம் இருக்கே!
(வைத்தியரும் தொட்டுப் பார்த்து)
வை: ஜுரந்தான்! அலட்டு மேலே வந்த ஜூரம். அது கடக்குது கழுதே! அதுக்கு ஒரு மாத்திரை தரேன், சொல்லாமே ஓடிப் போவும். அப்பாலே மூணு நாலு நாள் பச்சிலை கட்டினா, ஆளு பழையபடி நடக்கலாம். வாப்பேன் மாத்திரையும், கொஞ்சம் தைலமும் தர்ரேன்.
[போக எழுந்திருக்கிறார்]
சொ : மேல் காயத்துக்குக்கூட
வை : அனுப்பறேன். உம் ! நம்மகிட்ட இருக்கற பஸ் பத்துக்கும் மாத்திரைக்கும் தைலத்துக்கும், நாம் பளும் கொஞ்சம் வெள்ளைக்காரன் பாஷையைப் படிச்சிக்கிட்டு கோட்டுகிட்டு மாட்டிகிட்டா, பெரிய டாக்டருதான் ! இப்ப யாருக்குத் தெரியுது தமிழ் வைத்யருடைய பெருமை? தமிம் வைத்யம்னா கிள்ளுக்கீரையா நினைக்கிறாங்க. (இருவரும் போகின்றனர்.)
(அவர்கள் போனபிறகு சொர்ணம், தேவரைக் குலுக்கி எழுப்பி)
சொ : இதோ பாருங்கோ ! ஏன் இப்படி வேஷம் போடறிங்க .
தே: (களைப்புடன்) ஐயோ! வேஷமில்லையே! அப்பா அம்மா !
சொ : நிஜமோ, பாசாங்கோ தெரியலை; வேணுமானா எழுந்து போய்விடுங்க அவன் வருவதற்குள்ளே நான் எக்கேடோ கெட்டுப் போகிறேன்.
தே: ஐயோ! என்னாலே முடியாதே… அம்மா!
(மயக்கமடைகிறார்)
சொ: பாவம்! நிஜமாகவேதான் ஜூரம். பொழுது விடியட்டும் பார்ப்போம்.
[தேவரை எழுப்பி உட்காரச் சொல்லி கொஞ்சம் வெந்நீர் காப்பிடச் சொல்கிறாள்.] கொஞ்சம் வெந்நீர் குடியுங்க, நெஞ்சு உலர்ந்து போகுமே.
[தேவரால் உட்கார்ந்திருக்க முடியவில்லை. வெந்நீர் குடிக்கப் பாத்திரத்தை எடுக்கும் போது கை உதறுகிறது. சொர்ணம், தேவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, வெந்நீரைக் குடிப்பாட்டு கிறாள். பாதியிலே பாத்திரம் அவள் மீது வீழ்ந்து, சேலை நனைந்து விடுகிறது. தேவர் அதற்குள் மயக்கமடைகிறார். அப்படியே சொர்ணத்தின் மேல் சாய்கிறார். மெள்ள அவரைப் படுக்க வைத்துவிட்டு உடம்பின் மேலே ஒரு போர்வையை மூடுகிறாள். தலைவலி என்று ஜாடை காட்டுகிறார் தேவர். சொர்ணம் தலைமாட்டுப்பக்கம் அமர்ந்து தலையை அமுக்குகிறாள். தோட்டக்காரன் வருகிறான். மருந்தைக் கொடுக்கிறான்]
தோ: ஏம்மா இதோ பாரு . மருந்து கொடு . கதவைத் தாள் போட்டுகிட்டு படுத்துக்கோ. காலையிலே எழுந்ததும், கஞ்சி போட்டுக்கோ. நீயும் சமைச்சிச் சாப்பிடு. சாமானெல்லாம் இருக்கு .
சொ: ஏண்ணா! எங்கே போறிங்க இந்நேரத்திலே?
தோ: நேரம்னு ஒண்ணு இருக்கா நமக்கெல்லாம் நான் இங்கே ஒரு பெரிய வியாபாரி வீட்டிலே வேலைக்கு இருக்கறேன். வீடா அது, அரமனைதான். அங்கே எப்பவும் வேலை இருக்கும். என் சம்சாரம் போன வருஷம் அம்மை வந்து போயிடுச்சி. நான் ஒண்டிக்கட்டே. அதாலே, இங்கே ஒரு வேளை, அரமனையிலே ஒரு வேளை , இப்படிச் சமயம் போலச் சாப்பாடு நடந்துவிடும்.
சொ: பெரிய பணக்காரர் வீட்டிலே வேலையா உனக்கு?
தோ : இல்லாவிட்டா இவங்க கொணாதிசயமெல்லாம் எப்படித் தெரியும் நமக்கு.
சொ : காலையிலே வந்துவிடுவயா?
தோ: வாரேன். ஆனா நாளைக்கு என்னமோ விசேஷமாம் அரமனையிலே. அதாலே அங்கேயே இருந்துட்டாலும் இருந்துவிடுவேன். உனக்கென்ன பயமா?
சொ: அதெல்லாம் இல்லே, நீ அங்கேயே இருக்க வேணும்னா நான் வேணும்னா சாப்பாடு எடுத்துக்கிட்டு வாரேன் , இடத்தைச் சொன்னார்,
தோ : பைத்யக்காரப் புள்ளெமா நீ! அரமனையிலே தான் நாளைக்கு விருந்தாச்சே. விசேஷம்னா என்னா , விருந்து தானே! சாப்பாடு அங்கேயே கிடைக்கும். நீ படுத்துக்கோம்மா. நான் போயி வாரேன்.
[போகிறான். ]
காட்சி -25
இடம் : பாதை.
பாத்திரம் :- தோட்டக்காரன்.
(தோட்டக்காரன் போகிறான் , மெள்ள ஒரு கிராமியப்பாட்டுப் பாடிக்கொண்டு.)
காட்சி -26
இடம் : -மாளிகைத் தோட்டம்.
பாத்திரம் :- தோட்டக்காரன்.
[பாடிக்கொண்டே உள்ளே நுழைந்து, ஒரு மரத்தடியில் படுக்கிறான் …… தூக்கம்.]
காட்சி -27
இடம் :- மாளிகை உட்புறம்.
பாத்திரம் :- சீமான் செட்டியார், வேலையாள், நண்பர்கள்,
(பிறகு) குத்தகைக்கார கோவிந்தன்.
(சீமான் சிங்காரித்துக் கொண்டிருக்கிறார். நண்பரும் வேலையாளும் ஓடி ஆடி வேலை
செய்கிறார்கள்)
சீ : (நண்பனைப் பார்த்து) ஆமாம் ! கச்சேரி, நன்றாக இருக்குமா?
நண் : அருமையாக இருக்கும். விலாசனி பாட்டிலே இருக்கும் விசேஷம் என்ன தெரியுமோ? மற்றவர்கள் பாடுவார்கள். அவ்வளவோடு சரி. இவ பாடும் போது, அந்த
முகபாவம் இருக்கு பாருங்கோ ,
”முருக னென்றதுமே – எனக்கோர்
மோகம் பிறக்குதம்மா!”
என்று பாடுவா. அப்போ, மோகம்னு சொல்லுகிற போது. மோகமேதான். அம்மா என்கிற போது, அம்மா எதிரே வந்து நிற்பது போலத்தான் இருக்கும்.
(நண்பன் அபிநயத்துடன் பாடிக் காட்டுகிறான்)
அதை நான் சொன்னால் புரியாது. நீங்க பார்க்க வேணும், பிறகு ……
சீ : அப்படியா?
ந : பாட்டுக்கு இடையிடையே ஒரு மோகனமான புன்சிரிப்பு…
சீ : புன்சிரிப்பா
ந : ஆளை அந்தப் புன்சிரிப்பு என்ன செய்து விடுது என்கிறீங்க. அவ , கல்யாணியில் ஆரம்பித்துக் காம்போதியில் போய்த்தான் முடிக்கட்டுமே, பெரிய வித்வான்கூட, அதைக் குற்றம்னு சொல்லமாட்டான். அவளே கூட, இராகம் தவறிவிட்டதுன்னு சொல்லட்டும், அந்த மகா வித்வான் , அடடா! இராகமாவது தவறுவதாவது! நீங்க பாடினது அபூர்வமான முறை அல்லவா! மற்ற துகள் . ஏற்கெனவே பாடாந்திரமான இராகங்களைப் பாடுகிற துகள். ஒரு புது இராகமே அல்லவா நீங்க உற்பத்தி செய்துவிட்டீர்கள் – என்று புகழ்வான் எல்லாம் அந்த மோகனப் புன்னகைக்குத் தான்.
சீ : அதனாலேதான் அந்தப் பயல், அவளுக்கு ஆயிரம் ஆயிரமாகக் கொட்டித் தருகிறான்.
ந : தந்து என்ன கண்டான்? குட்டி இங்கே வரப்போகிறாள். பிறகு….. ஒரு தடவை தங்களைக் கண்டா போதாதோ? பிறகு அவளை அவன் ஆயிரம் நமஸ்காரம் செய்து அழைத்தாலும் போவாளோ?
[வேலையாள் அடக்கமாக நின்று கொண்டு]
வே: கோனாரு வந்திருக்காரு.
சீ : யாரு? கோவிந்தனா?
வே: ஆமாங்க.
சீ : அதைத்தான் கோநாரு. வந்தாருன்னு ‘ரு’ போடறயா ரூ’ போய் வரச்சொல்லு.
[வேலையாள் போய்க் கோவிந்தனை வரச் சொல்கிறான்.]
[கோவிந்தன் ஒருபுறமாக வந்து நிற்கிறான் – இடுப்பின் மேல் வேட்டியைக் கட்டிக் கொண்டு சீமான், அவனைக் கவனிக்காமல் தன் அலங்கார வேலையிலேயே இருக்கிறார்.]
சீ : (நண்பனைப் பார்த்து) எப்படி இருக்கு?
(கோவிந்தன், தன்னிடம் தான் சீமான் பேசுகிறார் என்று எண்ணிக் கொண்டு(
கோ : பயிருங்களா?
சீ : (கோபத்துடன் குத்தகைக்காரனைப் பார்த்து) உன்னையாடா இப்போ பேசச் சொன்னது? பயிரு கதை பேச வந்து விட்டாயோ, மகா யோக்யன்போல்.
(நண்பனைப் பார்த்து, தன் கரத்தைக் காட்டி)
எப்படி இருக்கு இந்த ரிஸ்ட் வாட்ச்?
ந : பேஷா இருக்கு. ஆனா ஆலந்தூர் நாயுடு …..
சீ : அவனிடம் இருக்கற ரிஸ்ட் வாச், ரொம்ப அம்பக்கய்யா. இரண்டும் ஒரே மேக்தான். ஆனா கம்பெனியிலே, கொஞ்சம் கெட்டுப்போனதை அவனிடம் தள்ளிவிட்டு, முதல் தரமானதை நம்மிடம் கொடுத்தார்கள். விலை என்ன சாமான்யமா? 500 ரூபாய்.
(காதிலே வைத்துப் பார்க்கிறார். ஆட்டிவிட்டு மறுபடியும் பார்க்கிறார்.)
ந : ஏன் ஓடலியா?
சீ : ஓடுதே ! (மறுபடி பார்த்து) சாவி கொடுக்கலையா? ஓடுதே! டேய்! ஓடிப்போய் அம்மாவைக் கேள், சாவி கொடுத்தாங்களா இல்லையான்னு.
வே: சின்ன அம்மாவையா, பெரிய அம்மாவையா?
சீ : பெரிய அம்மாதானே சாவி கொடுக்கற வழக்கம். கொடுத்தாங்களான்னு சின்ன அம்மாவைப் போய்க் கேள்.
[கோவிந்தனைப் பார்த்து]
சரி! கோவிந்தா என்ன சேதி சொல்லி அழு.
கோ : அதாங்க, வயல் வறண்டு போச்சிங்க. இந்த வருஷம் ஏதாச்சும் தள்ளிக் கொடுத்தாத்தான் நான் தலை தூக்க முடியும்…..
சீ: நீ பெரிய அயோக்யன்னு எனக்குத் தெரியுமே ! பஞ்சப் பாட்டு பாட வந்துட்டயோ , வயல் காஞ்சா எனக்கென்ன? விளைஞ்சா எனக்கென்ன.
(நண்பனைப் பார்த்து கேளய்யா, அவன் சொல்ற கதையே. வயறு எரியுது! பய எப்பவும் இதே சேதி தான். ஒரு நாளாவது நிம்மதியான பேச்சுக் கிடையாது.
ந : (கோவிந்தனைப் பார்த்து) ஏம்பா, அவரைக் கஷ்டப் படுத்தறே?
கோ : (நண்பனைப் பார்த்து) என்னாங்க, நீங்கதான் சொல்லுங்களேன். மழை அடியோடு ஏறக்கட்டிடுத்தே. நான் என்னாச் செய்யறதுங்க.
ந : ஆமாம்! மழை தான் இல்லாம போச்சு.
சீ : மழை இல்லாவிட்டா என்னா? கிணறு எங்கே போச்சு? காலா காலத்திலே வயலுக்குச் செய்யவேண்டிய வேலையைச் செய்யவேணாம்னு யாரப்பா இவன் கையைப் பிடிச்சிக்கிட்டாங்க.
கோவிந்தா! இதோ பாரு! ஒரு ரூபா கூடத் தள்ளிக் கொடுக்க முடியாது. நமக்கு இந்த வருஷம் செலவு மேலே செலவு. இருக்கறதைக் கொடுத்துவிட்டு, மிச்சத்துக்கு ஒரு அண்டிமாண்டு எழுதிக் கொடுத்துவிட்டுப் போ.
(கோவிந்தன் நிற்கிறான், சீமான், போகும்படி கைகாட்டுகிறார் அலட்சியமாக. அவன் போய்விடுகிறான்)
ந : நிலம் வைச்சிக்கிட்டு இருக்கிறதுன்னாலே இப்படித் தானுங்க தொல்லை.
சீ : ஆமாம்! அதெல்லாம், அவனுங்க, கையைப் பிசைவான்க, கண்ணைக் கசக்குவானுக , கொஞ்சம் சரின்னோம், போச்சு, நம்ம அந்தஸ்தே போயிடும். இப்ப பணத்தைச் சேத்து நான் என்ன சாப்பிட்டுவிடவா போகிறேன் எவ்வளவு தான தருமம்! கோயில் காரியம்.
ந : ஆமாம் ஆமாம்!
சீ : போன மாதம் தெரியுமா? புவனேஸ்வரி கோயில் இருக்கு பார். அதுக்கு இது வரை தாசியே கிடையாது. அவளுக்கு ஏதாவது கோயில் மானியம் விட்டாத்தானே வருவா. இல்லை? என்னிடம் குருக்கள் நடையா நடந்தாரு, அந்தப் பெண்ணும் வந்திருந்தா. சரின்னு . கோயில் மானியமாக ஒரு வேலி கொடுத்தேன். அவளுக்குப் பொட்டு கட்டியாச்சி. இப்படி எவ்வளவோ செலவு.
இந்த விலாசனி பாட்டு ……..? அந்த ஜெகவீரன் , இவளை யாரும் பார்க்காதபடி, ஒரு மாளிகையிலே வைத்திருக்கிறான். இப்போ , அவனே அவளை அழைத்து வரப் போகிறான். ஏன்? சும்மாவா? அவன் தரவேண்டிய கடனைத் தள்ளி விடுவதாக ஒப்புக்கொண்டு விட்டேன்.
டே! மோட்டார் சத்தம் கேட்கிறது. ஓடு ஓடு! சீக்கிரம் ! அவர்கள் தான்!
[வேலையாள் ஓடுகிறான். சீமான் ஆடையைச் சரிப் படுத்திக் கொள்கிறார். நண்பன். ஆசனங்களை அவசரமாகச் சரிப்படுத்துகிறான். ஜெகவீரனும் விலாசனியும் வருகிறார்கள். விலாசனி நமஸ்கரிக்கிறாள். சீமான் சொக்கி விடுகிறார். வேலையாள் காப்பி கொண்டுவந்து வைக்கிறான். சீமான் காரணமில்லாமல் சிரிக் கிறார். ஜெகவீரனை அமோகமாக உபசரிக்கிறார். வேலையாளை அதிகாரம் செய்கிறார். சந்தோஷத்தால் சீமான் தலைகால் தெரியாமல் ஆடுகிறார். தோட்டக்காரன் அங்கே வருகிறான். விலாசனி, பாட ஆரம்பிக்கிறாள். தோட்டக்காரன் வெளியே புறப்படுகிறான்.]
காட்சி -28
இடம் :- தோட்டக்காரன் வீடு.
இருப்போர் : – தேவர், சொர்ணம், தோட்டக்காரன்.
[தேவர் கொஞ்சம் தெளிவுடன் இருக்கிறார். சொர்ணம் வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறாள். தோட்டக்காரன் ஒரு பொட்டலத்துடன் வந்து சேருகிறான்.
சொர்ணத்திடம் பொட்டலத்தைக் கொடுத்து]
தோ : சாப்பிடம்மா! சாப்பிடு! அரமனை பலகாரம் ‘அருமையா இருக்கும்.
(சொர்ணம் பொட்டலத்தைப் பிரித்து, பலகாரத்தைத் தோட்டக்காரனுக்குத் தர, அவன்
வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே)
நான் அங்கேயே சாப்பிட்டுவிட்டுத்தான் வந்தேன். நீ சாப்பிடு. இதெல்லாம் நமக்கு எப்போதுமா கிடைக்கும்? சாப்பிடு.
சொ: அரமனையிலே, விருந்து பலமா?
தோ: பலத்துக்கு என்ன குறைவு? எங்க எஜமானரு இந்த வருஷம் கலர் வியாபாரத்திலே மட்டும் ஆறு லட்சம் அடிச்சாரு லாபம்.
சொ : அம்மாடி! ஆறு லட்சமா?
தோ : ஆமாம்! ஆனை வாகன உற்சவம், இந்த வருஷம் அவருதானே நடத்தினாரு. ஐஞ்சி ரூவா வர்ணப்பெட்டி எழுவது ரூபாய்க்கு . வித்தாரில்லே, ரொம்ப சாமர்த்தியக்காரரு.
சொ : அப்படியா? தோ : இவரு சொல்றாரே!
[தேவரைக் காட்டி] யாராரோ ஜெமீன்தாருங்கன்னு அவங்க எல்லாம், நம்ம எஜமானரு கிட்ட ஒண்ணும் செய்திக்க முடியாது. ஆமா! ரொம்பப் பேரு அவருகிட்ட கடன் வாங்கினவங்கதான் இப்ப, அரமனையிலே ஒரு ஜெமீன்தாரன் தான் கடக்கறான். பாட்டுக் கச்சேரிக்குக்கூட ஒருத்தியைக் கூடவே கூட்டிக்கிட்டு வந்திருக்கிறான்.
சொ : யாரு அவ?
தோ : ரொம்ப ஒழுங்காகத்தான் இருக்கறா, ஆனா, எங்க எஜமானரு இருக்காரே, அவர் பக்கா, இந்தமாதிரி விஷயத்திலே வந்திருக்கிறவளும், ரொம்ப வெட்கப்படுகிற மாதிரியும் காட்டிக்கறா. ஆனா அவதான் எங்க எஜமானருக்குக் காப்பி ஊத்திக் கொடுக்கறா!
சொ: அம்மா! ரொம்பக் கெட்டிக்காரிதான் போலிருக்கு.
தோ : அவரு , அதைக் காப்பின்னு நினைச்சா குடிச்சாரு! என்னமோ கதையிலே சொல்வாங்களே தேவாம்ருதம்னு. அதுன்னு நினைச்சிக்கிட்டுக் குடிச்சாரு.
அது கிடக்குது.
(தேவரைக்காட்டி ) ஐயா என்னா சொன்னாரு?
சொ : ஜூரம் இல்லை இப்போ.
தோ: அட அதெ இல்லைம்மா! உன் விஷயமாக என்ன சொன்னாரு?
சொ : நான் அந்த எண்ணத்தையே விட்டுவிட்டேனே! அவரு உடம்பு சொஸ்தமானதும், மகராஜனாகப் போகட்டும் வீட்டுக்கு நான், இங்கேயே இருந்து உனக்கு சமைச்சிப் போட்டுகிட்டு இருக்கிறேன் .
தோ : என்னம்மா இது! உனக்குக் குழந்தை குட்டி…
சொ: (கண்களைத் துடைத்துக் கொண்டு) ஒரே ஒரு மகன். எல்லாம் இவராட்டமே தான் இருப்பான்.
தோ: எங்கே இருக்கிறான்?
சொ : ரெபர்மடரி ஸ்கூலிலே.
[தேவர் திடுக்கிடுகிறார்]
தோ: அப்படின்னா என்னா?
சொ : சிறு பிள்ளைக திருடினா, அதுகளைப் பிடிச்சி. மூணு வருஷம் ஐஞ்சு வருஷம்னு தண்டிச்சு, ஒரு பள்ளிக்கூடத்திலே மடக்கிப் போட்டு வைப்பாங்க. ரத்னம், அந்தப் பள்ளிக்கூடத்திலேதான் இருக்கிறான்.
[தேவர் முகத்தைக் கைகளால் மூடிக்கொள்கிறார்.]
தோ: அவங்க அப்பன் ஜெமீன் வீடு, அவன் ஜெயிலிலே. ஒழுங்காத்தான் இருக்குது. சரிம்மா நான் போயிட்டு வாரேன். அங்கே பாட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருக்கும்.
சொ: ஏண்ணா ! சமயல் செய்தாச்சி! இவருக்கும் கஞ்சி கொடுத்தாச்சி. எனக்கு பாட்டு கேட்கறதுன்னா ரொம்பப் பிரியம். நானும் வரட்டுமா?
தோ : வாயேன்! தோட்டத்துப் பக்கமா இருந்து பார்க்கலாம். வா.
(இருவரும் போகின்றனர்)
காட்சி -29
இடம் :- சீமான் மாளிகை.
இருப்போர் : – ஜெகவீரன், விலாசனி, சீமான். நண்பர் இருவர்.
(விலாசனி பாடுகிறாள். நண்பர்கள் தாம்பூலம் போட்டுக் கொள்ளுகின்றனர். ஜெகவீரன், சிகரெட் பிடிக்கிறான். சீமான், ஆனந்த பரவசமாகி இருக்கிறார். பாட்டு முடிகிறது. விலாசனி முகத்தில் ஒழுகும் வியர்வையைத் துடைத்துக் கொள்கிறாள்.)
காட்சி -30
இடம் :- சீமான் மாளிகைத் தோட்டம்.
இருப்போர் :- தோட்டக்காரன், சொர்ணம்.
(சொர்ணம், ஒரு ஜன்னல் வழியாகப் பார்க்கிறாள், கச்சேரி செய்பவளை திகைத்துப் போய், தோட்டக்காரனை அழைத்து.)
சொ : பாடுகிறவ பேர் என்ன சொன்னார்கள்?
தோ : என்னமோ விலாசனியாம். சொ : கூட இருக்கிறவரு?
தோ : அவர்தான் ஜெமீன்தாரர் ஜெகவீரர்.
சொ : அவருக்கு இவ என்ன வேணும்?
தோ: அவளை அவரு வைச்சிகிட்டு இருக்காராம்.
சொ : அட பாதகா! அப்படியா சொன்னான்? அவள் எப்படிச் சகித்துக் கொண்டாள். அந்த இழிவுக்கு. செ. இதோ வருகிறேன் இரு.
(வீடு நோக்கி ஓடுகிறாள்.)
காட்சி -31
இடம் : தோட்டக்காரன் வீடு.
இருப்போர் : தேவர், சொர்ணம்.
[தூங்கிக்கொண்டிருக்கும் தேவரைத் தட்டி எழுப்புகிறாள் சொர்ணம், அவர் கண் விழித்ததும், ஆத்திரத்துடன்]
சொ: பெரிய குடும்பம் ! கெளரவம்! அந்தஸ்து ! ஜெமீன் வீடு! ஜெமீன்தாரர் வீட்டு மருமகப்பிள்ளை அல்லவா!
தே: சொர்ணம் என்ன இப்படிப் படுக்கையிலிருந்து எழுப்பி ஏசுகிறாயே. நான் பட்டதெல்லாம் போதாதா?
சொ : சொர்ணத்தோடு வாழ்வது என்றால் தலை இறக்கம், அவமானமாக இருக்கும், அந்தஸ்து கெட்டுவிடும். உள்ளே புகுந்து பார்த்தால் தானே தெரியும் யோக்யதை .
தே : என்ன சொர்ணம் வெறிபிடித்தவள் போலக் கூச்சலிடுகிறாயே!
சொ : (பதைபதைத்து) உன்னாலே, தள்ளாடி நடந்து வர முடிந்தால்கூடப் போதும் உன் கண்ணாலேயே பார்க்கலாம் பெரிய இடத்து இலட்சணத்தை.
தே: (உட்கார்ந்து கொண்டு கவலையுடன்) என்ன அது? எதைப் பார்க்க வேண்டு-மென்கிறாய் சொர்ணம்?
சொ: உங்கள் குடும்பத்திலே உள்ள ஊழலை .
தே: சொர்ணம்! அளவுமீறிப் போகிறாயே.
சொ : நானல்ல! அளவுமீறிப் போய்விட்டது, உங்கள் குடும்ப ஊழல்.
தே : இது என்ன உளறல், ஊழலா?
சொ: உன் மனைவியின் யோக்யதையை.
[கூறிவிட்டு, மிரள மிரள விழிக்கிறாள், ஆத்திரத் துடன். கண்களிலே நீர் கொப்பளிக்கிறது. தேவருக்கும் அந்தச் சொல்லைக் கேட்டதும் ஆத்திரம் பொங்குகிறது]
தே : பவானிமீதா பழி சுமத்துகிறாய்?
சொ: பவானி! பவானியும் ஒரு சொர்ணம்தான்!
[அதிகக் கோபமடைந்த தேவர், அருகே நின்றிருந்த சொர்ணத்தை எட்டி உதைக்கிறார்]
தே: கழுதே கொன்றுவிடுவேன். பவானியை! நாயே!
சொ: (தைரியமாக) வேதனைப்படு! ஆனால் பொய்யல்ல நான் பேசுவது.
(துள்ளி எழுந்திருக்கிறார் தேவர். சொர்ணத்தின் தலை மயிரைப் பிடித்திழுத்துக் குலுக்கி.)
தே : புறப்படு ருஜு காட்டு நாயே! உத்தமி பவானியையா கேவலமாகப் பேசுகிறாய்?
சொ : வா !
[இருவரும் ஆவேசம் பிடித்தவர்கள் போலக் கிளம்புகின்றனர். தேவரால் சரியாக நடக்க முடியவில்லை . காலைத் தேய்த்துத் தேய்த்து நடக்கவேண்டி இருக்கிறது. ஆத்திரம் அவருக்குப் புது சக்தி அளித்திருக்கிறது. சொர்ணம், தேவரின் கரத்தைப் பிடித்திருக்கிறாள். இருவரும் செல்கின்றனர்.]
காட்சி -32
இடம் :- சீமான் மாளிகை.
இருப்போர் :- சீமான், ஜெகவீரன், விலாசனி. நண்பர்கள்.
(விலாசனி, பாடி முடித்ததும், நண்பர்களும். சீமானும் “சபாஷ்” என்று புகழ்கிறார்கள்)
ஒரு நண் : அருமை அருமையான சங்கீதம். சாரீர சம்பத் அபாரம்!
மற்ற நண் : கலைவாணியேதான்! நண்பர்கள் விடை பெற்றுக்கொண்டு போகிறார்கள். ஜெகவீரரைப் பார்த்து, சீமான்
தீ : ஜெகவீரரே! உள்ளே போய், உம்முடைய கடன் பத்திரத்தில் பைசல் எழுதி எடுத்துக்கொண்டு வருகிறேன்.
(உள்ளே போகிறார்.)
ஜெ : விலாசனி !
விலா : போதும் உயிரை வாங்காதே. மானம் போகிறது!
ஜெ : நான் இருக்கிறேன் கவனித்துக்கொள்ள முட்டாள் மயங்கியே விட்டான். தேனில் விழுந்த ஈ போல. உண்மையை அவன் கண்டுபிடிக்கிறான் என்றே வைத்துக்கொள். வெளியே சொல்ல முடியுமா? சொன்னால் யார் நம்புவார்கள்?
வி : ஈனத்தனமான காரியம் செய்யத் துணிந்து. அதற்கு என்னையும் உடந்தையாக்கிக் கொண்டாய்.
ஜெ: காட்டி மறைக்கிறேன், வேறென்ன பத்திரம் கைக்கு வந்ததும், பயல் இளித்துக்கொண்டிருக்க வேண்டியது தான். விலாசனி மாயமாய் மறைவாள்! இந்தத் தந்திரம் – செய்யாவிட்டால், பயல், நமது சொத்தை ஏலத்துக்குக் கொண்டு வந்திருப்பான். இவன், இப்போது, நேற்று பணக்காரனானவன். பரம்பரை ஜெமீன் நம்முடையது. பகற்கொள்ளைக்காரன் போன்ற இவனிடம் அதை இழப்பதா? நமது கெளரவம் என்ன ஆவது?
வி : உன் வாயால் பேசாதே கெளரவத்தைப் பற்றி. சுயநலமே உனக்கு முக்கியம்.
ஜெ : தியாகவல்லி நீ ! அதற்காகத் தலைவணங்குகிறேன்.
[சீமான் வருகிறார். பத்திரத்தைக் கொடுத்து]
சீ: திருப்திதானே!
ஜெ : ஆஹா! விலாசனி. தோட்டத்தைச் சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறாள்,
[சீமானைப் பார்த்து கண் ஜாடை காட்டுகிறான் ஜெகவீரன்.]
சீ : ஆஹா ! அழைத்துக்கொண்டு போய்க் காட்டு, நமது தோட்டம் நாலு ஏக்கர் விஸ்தீரணம்.
[ஜெகவீரன் காமிராவைக் காட்டி]
நமக்கு இயற்கைக் காட்சிகளைப் படம் பிடிப்பது என்றால் ரொம்பப் பிரியம்.
(விலாசனியும் ஜெகவீரனும் போகின்றனர்!)
காட்சி -33
இடம் :- சீமான் மாளிகைத் தோட்டம்.
இருப்போர் :- ஜெகவீரன், விலாசனி.
[தோட்டத்தில் ஒரு மரத்தடியில் விலாசனி சோகமாக நிற்கிறாள்.]
ஜெ : விலாசனி
வி : இன்னமுமா விலாசனி என்னை விலாசனி என்று கூப்பிடும்போது எனக்கு எவ்வளவு வேதனை உண்டாகிறது தெரியுமா?
ஜெ : இன்னம் இரண்டு மணி நேரம் : பிறகு விலாசனி மறைவாள். இரு! நான் சில காட்சிகளைப் படம் பிடித்துக் கொண்டு வருகிறேன்.
[ஜெகவீரன் போகிறான்.
வேறோர் பக்கமிருந்து சொர்ணம். தேவரை இழுத்துக் கொண்டு வருகிறாள். தொலைவிலே விலாசனியைக் கண்டதும் பதைபதைத்து]
தே: ஆ! பவானி! நீயா – என்ன இது மூக்குக் கண்ணாடி. மாறு வேஷம்?
[எதிர்பாராதவிதமாகத் தேவரைக் கண்ட பவானி அலறி]
ப: ஐயோ மோசம் போனேன்.
[பவானி, ஓட முயற்சிக்கிறாள். கால் நடுங்குகிறது. தேவர் ஓடிச்சென்று பவானியின் தோளைப் பிடித்துக் குலுக்குகிறார்.
பயத்தால் பவானியின் உடல் நடுங்குகிறது. முகம் வெளுத்து விடுகிறது.]
தே: எங்கே வந்தாய்? ஏன் வந்தாய்?
[ஆவேசம் வந்தவர் போலக் கூச்சலிடுகிறார்]
சொ : (கேலியும், கோபமும் கலந்த குரலில்) பவானி, இங்கே விலாசனியாக வந்திருக்கிறாள்; இலட்சாதிகாரிக்கு இன்பமூட்ட
[தேவர், சொர்ணத்தை அடிக்கக் கை ஓங்குகிறார். சொர்ணம் பயப்படாமல்]
நான், சொர்ணம், கேவலம் விபசாரி . விலாசனியாக வந்தவள் தங்கள் தர்ம பத்தினி பவானிதேவி! அவளுடன் வந்திருப்பவர், ஜெகவீரர் – அண்ணன் ஜெமீன்தாரன் – ஆனால் இங்கே வெட்கம் மானமின்றி, சொந்தத் தங்கையைத் தன் வைப்பு என்று கூச்சமின்றிக் கூறினான். இங்கே உள்ள பணமூட்டைக்கு
தே : பவானி! பவானி! இது என்ன விபரீதம்? ஏன் வந்தாய் இங்கே? ஏன்? ஏன்?
[பவானி திகைக்கிறாள். அவளுடைய கழுத்தை நெறிக்கிறார் தேவர். அவள் கூவுகிறாள். ஜெக வீரன் ஓடி வருகிறான். காட்சியைக் காண்கிறான். காமிரா ஒரு நிமிஷம் வேலை செய்கிறது. பவானி பிணமாகிறாள். சொர்ணம் ஓடிவிடுகிறாள். ஜெகவீரன் பவானியைத் தொட்டுப் பார்த்து]
ஜெ : விலாசனி மறைவாள் என்று நினைத்தேன். பவானியே இறந்துவிட்டாள்.
தே: இறந்துவிட்டாள்! பவானி இறந்துவிட்டாள்!
ஜெ : (கோபமாக) பவானியைக் கொன்று விட்டாய் கொலை செய்திருக்கிறாய்.
[பவானி திகைக்கிறாள். அவளுடைய கழுத்தை நெறிக்கிறார் தேவர். அவள் கூவுகிறாள். ஜெக வீரன் ஓடி வருகிறான். காட்சியைக் காண்கிறான். காமிரா ஒரு நிமிஷம் வேலை செய்கிறது. பவானி பிணமாகிறாள். சொர்ணம் ஓடிவிடுகிறாள். ஜெகவீரன் பவானியைத் தொட்டுப் பார்த்து]
ஜெ : விலாசனி மறைவாள் என்று நினைத்தேன், பவானியே இறந்துவிட்டாள்.
தே: இறந்துவிட்டாள்! பவானி இறந்துவிட்டாள்!
ஜெ : (கோபமாக) பவானியைக் கொன்றுவிட்டாய். கொலை செய்திருக்கிறாய்.
தே; ஆ! ஐய்யோ! கொலை! இதென்ன கோலம் பவானி! பவானி பிணம் என் மனைவி! நான் கொன்றேன்.
ஜெகவீரர் ! ஏன் பவானியை இங்கே அழைத்து வந்தாய்? சொந்தத் தங்கையை, வேறோர் சீமானிடம் சரசமாட… ஆஹா! சகிக்க முடியவில்லையே!
ஜெ: முட்டாள்! என் கடனைத் தீர்த்துக்கொள்ள சிறு கபட நாடகமாடினேன். பவானியை, விலாசனி என்ற மாறு பெயருடன் இங்கே அழைத்து வந்தேன், பாட்டுக் கச்சேரிக்காக. நீ, படுகொலை செய்துவிட்டாய். இதோ (காமிராவைக் காட்டி ) படம் பிடித்திருக்கிறேன் பார் உன்னை என்ன பாடு படுத்துகிறேன்.
தே: படுபாவி! மோசக்காரா! ஜெ: வாயை மூட்டா கொலைகாரா!
[தேவர் மயக்கமடைகிறார்]
காட்சி -34
இடம் : தேவர் வீடு .
இருப்போர் :- தேவர், சேகர்.
(தேவர், பழையநாள் படுகொலை பற்றிய தகவலைக் கூறிமுடிக்கிறார்.]
தே: சேகர்! அத்தகைய கொலைகாரன் நான். பவானியைக் கொன்ற பாதகன். என் மகள் சுசீலாவுக்கு அப்போது பத்து வயது பள்ளிக்கூடத்தில் இருந்தாள். தாயார் மாரடைப்பால் இறந்துவிட்டதாக அவளுக்குக் கூறப்பட்டது. இன்று வரையில் என் மகள், பவானி மாரடைப்பால் இறந்ததாகவே நம்புகிறாள் உலகமும் அப்படியே நம்புகிறது.
[தேவர் கண்களில் நீர் தளும்புகிறது.]
அண்ணன் பட்ட கடனைப் போக்க, அவன் கூறிய ஈனத்தனமான யோசனையைக் கேட்டு, வியாபாரியை ஏமாற்ற விலாசனி என்ற வேஷம் போட்டுக்கொண்டு போய், அக்ரமக்கார அண்ணனை பேராசை பிடித்த வியாபாரியின் பிடியிலிருந்து தப்பவைத்து, தன் உயிரையே தத்தம் செய்த உத்தமி, தியாகி, பவானியைக் கொலை செய்த பாவி நான். ஆத்திரத்தில், உத்தமி ஏன் வந்தாள், இதில் ஏதோ சூது இருக்க வேண்டும் என்று யோசிக்கவில்லை. வெறி ஆவேசம் பித்தம் தலைகால் தெரியாத கோபம் ! சொர்ணத்தின் கேலியால் ஏற்பட்ட வேதனை! நான் மிருகமானேன், பவானியின் உயிரைப் போக்கினேன்.
சொர்ணத்தை வஞ்சித்தேன். அவள் என்னைக் கொலை காரனாக்கினாள்.
ஜெகவீரன், தன் தங்கை செத்ததற்குக் காரணம் தன் புரட்டு நான் கொலைகாரனா-னதற்குக் காரணம் தன் வஞ்சகம் என்று எண்ணவில்லை. என்னை மேலும் கொடுமைக்கு ஆளாக்கினான்.
சேகர்! அந்தப் படம், நான் படுகொலை செய்தவன் என்பதை, சொந்த மனைவியைக் கொன்றவன் என்பதை, சுசீலாவின் தாயைக் கொன்றவன் என்பதை, உலகுக்குக் காட்டக்கூடிய படம், என்னைத் தூக்கு மேடைக்கு அனுப்பக்கூடிய படம், எங்கெங்கு நான் மதிக்கப்படுகிறேனோ அங்கெல்லாம் என்னைப்பற்றிக் கேவலப்படுத்தக்கூடிய படம். சுசீலாவையே என்னை வெறுக்கும்படி செய்யக் கூடிய படம், என் மானத்தைப் போக்கக்கூடிய படம், குடும்ப கௌரவத்தைக் குலைக்கக்கூடிய படம், அவனிடம், அக்ரமத்தின் உருவமான அவனிடம் சிக்கிக்கொண்டதால், அவன் என்னைத் தன் இஷ்டப்படி ஆட்டிவைக்கிறான். நான் என்ன செய்வேன்? சுசீலாவிடம், மகளே! என்னை மன்னித்துவிடு! நான் உன் தாயைக் . கொன்றுவிட்ட கொடியவன், என்று எப்படிக் கூறுவேன்.
“வீடு வாசலை எழுதிவை என். பேருக்கு – ” ஜெகவீரன் கட்டளையிடுவான், ‘ஏன்?’ என்று கேட்டால், ”படம்” என்பான். பணிவதன்றி வேறு வழி இல்லை. கடைசியில், சுசீலாவைப் பலி கேட்கிறான். அத்துடன் அவனுடைய பயங்கரப் பசி அடங்கித் தீரும்
சுசீலா, பவானியின் மகள் – அவளும் தியாகம் செய்ய வேண்டியவளே ! ஒப்புக்கொண்டாள் என்னைக் காப்பாற்ற ஜெகவீரனைக் கலியாணம் செய்து கொள்ளச் சம்மதித்து விட்டாள். சுசீலாவுக்குப் பூரா விஷயமும் தெரியாது. நான் ஏதோ பயங்கரமான ஆபத்திலே சிக்கிக் கொண்டிருக்கிறேன், என்பது மட்டுமே தெரியும்.
சேகர்!
[அவன் முன் மண்டியிட முயற்சிக்க, சேகர் தடுத்து விடுகிறான்]
சேகர்! என்னை மன்னித்துவிடு ! சுசீலா, தியாகியின் திருக்குமாரி, தன்னையும் தியாகம் செய்கிறாள், என் பொருட்டு.
சேகர் : (உருக்கமாக) தியாக சுபாவம் எனக்கும் உண்டு. பரிதாபம். சித்திரவதைக்கு ஆளானீர். என் சுகம் போனால் கவலை இல்லை. சுசீலா , என் இருதயத்தில் எப்போதும் இருப்பாள். அழாதீர் தேவரே நான் சுசீலாவைத் தியாகம் செய்யத் தீர்மானித்து விட்டேன். சுசீலா எங்கே? அவளை நான் பார்த்துவிட்டுப் போக வேண்டும். நான் பொழுது விடிவதற்குள், ஊரைவிட்டுச் சென்றுவிடுகிறேன்.
[சேகரின் கைகளை எடுத்துத் தேவர் தம் கண்களில் ஒத்திக்கொண்டு, மாடியைக் காட்ட . சேகர் மாடிக்குச் செல்கிறான்]
காட்சி -35
இடம் :- தேவர் வீட்டு மாடி.
இருப்போர் :- சுசீலா, ரத்னம். (பிறகு) சேகர், தேவர்.
[கட்டிலின் மீது சுசீலா உட்கார்ந்து கொண்டிருக்கிறாள் கவலையுடன். ரத்னம், அரைத் தூக்கத்துடன் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.]
சு: தூங்கிவிட்டானா ஒரு சமயம் ?
ர: இருக்காதம்மா! நீ கவலையில் கவனிக்கவில்லை . எனக்குப் பேச்சுக்குரல் கேட்டதே.
சு : பாதகன் பேசிப் பேசி என் அப்பாவின் உயிரை வாங்கிக் கொண்டிருக்கிறான்.
(காலடிச் சத்தம் கேட்கிறது.)
சு: (கட்டிலைவிட்டு எழுந்து நின்று கொண்டு) ரத்னம்! வா, வா! அதோ வருகிறான்: சொன்னது ஞாபகமிருக்கட்டும் – ஆரம்பி
ர: (கூச்சமடைந்து) சங்கடமாக இருக்கிறதம்மா .
சு : ஐய்யோ ! கடைசியில் காரியத்தைக் கெடுத்துவிடுவாய் போலிருக்கிறதே.
[அவன் கையைப் பிடித்து இழுத்துத் தன் தோள்மீது வைத்து, அணைத்துக் கொண்டிருப்பது போல பாவனை செய்கிறாள். காலடிச் சத்தம் மேலும் பலமாகிறது. ஏதாவது பேசும்படி ரத்னத்துக்க ஜாடை காட்டுகிறாள்.]
ர: சுசீலா ! கண்மணி!
(காலடிச் சத்தம் நிற்கிறது)
சு: (கொஞ்சும் குரலில்) நாதா ! நாம் இருவரும்….
(காலடிச் சத்தம் மீண்டும்)
சு : அந்தக் காமுகன் ஜெமீன்தாரன் நமது காதலைத் தடுக்க முடியுமா? அவனுக்கு நான் யாரைக் காதலிக்கிறேன் என்பதே தெரியாது. நான் யாரோ ஒரு டாக்டரைக் காதலிப்பதாக நம்புகிறான். ஒவ்வோர் இரவும் என் நாதன் இங்கே வந்து போவது தெரியாது.
(சுசீலா தன் கைகளுக்கு முத்தமிட்டுக் கொள்கிறாள். அறைக் கதவு தடால் என்று உதைக்கப்பட்டு, சேகர் பாய்ந்து வருகிறான் உள்ளே . காட்சியைக் காண்கிறான், தலை சுழலுகிறது.)
சே : மோசக்காரி! வஞ்சகி!
சு: [தன்னெதிரே சேகர் வந்திருப்பது கண்டு மிரண்டு ஐயோ ! தாங்களா…
(ரத்னம், சுசீலாவைப் பிடித்து இழுத்து அணைத்துக் கொள்கிறான். முரட்டுத்தனமாக, அவளை இழுத்துக்கொள்கிறான்.)
ர: பயப்படாதே சுசீலா பார்த்துவிட்டால் என்ன? தலையா போய்விடும்?
சு: (குளறியபடி ரத்னம் இதைக் கேள்!
(ரத்னம் தன் பிடியைத் தளர்த்தவில்லை .. விலகிக்கொள்ள சுசீலாவால் முடியவில்லை.!
சே : (ஆத்திரத்துடன்) கள்ளி! உத்தமி பவானியின் மகளா நீ?
சு: ஐயோ, நான் சொல்வதை… (ரத்னம் இழுக்க விடு. ரத்னம்.
ர: சுசீலா! என்றைக்கேனும் ஓர் நாள் நமது ரகசியம் வெளியாகித்தானே தீரும். இன்று வெளிவந்துவிட்டது. அதனால் என்ன?
[சேகர் திகைப்பும் ஆத்திரமும் அடைந்து ]
சே : அடி, நயவஞ்சகி! (ரத்னத்தைப் பார்த்து யாரடா நீ?
ர: ஏன் தெரியவில்லையா? மடையா!
சு: (பரிதாபத்துடன்) ஐயோ! ரத்னம்! விபரீதம் நடந்து விட்டது. இதைக் கேள். அவரைத் திட்டாதே… ஆண்டவனே !
ர: நள்ளிரவிலே ஒரு பெண்ணைத் தழுவிக்கொண்டு இருக்கிறேன். மடையன், அதைப் பார்த்த பிறகும் கேட்கிறான் யாரடா நீ? என்று முட்டாள்! சுசீலா! வா இப்படி
[சேகர் சுசீலாவைப் பிடித்து இழுத்துத் தள்ளிவிட்டு, ரத்னத்தை ஓங்கிக் குத்துகிறான். இருவருக்கும் சண்டை மூண்டுவிடுகிறது. இடையே சுசீலா கூச்சலிடுகிறாள், அழுகிறாள், சண்டையை நிறுத்திவைக்க ]
சு : கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டதே. சேகர் – ரத்னம் – சண்டை வேண்டாம் – நிறுத்துங்கள். விபரீதம் நேரிட்டுவிட்டது. நான் சொல்வதைக் கேளுங்கள்.
[சேகர், அடிபட்டு மயக்கமுற்றுக் கீழே சாயும் சம்யமாகப் பார்த்து, ரத்னம் ஒரு நாற்காலியைத் தூக்கி அவன் மீது வீசக் குறி பார்க்கிறான். இதைக் கண்ட சுசீலா துடிதுடித்து, சேகரைக் காப்பாற்றரத்னத்தின் காலைப் பிடித்து இழுத்துவிட ரத்னம் கீழே விழுகிறான். ஒரு தடியைத் தூக்கி அவனைத் தாக்கி ]
சு: ஓடிவிடு, போ! ர: மோசக்காரி! வஞ்சகி உனக்கு உதவி செய்ய வந்த என்னையுமா வஞ்சிக்கிறாய்?
(சண்டை கூச்சல் கேட்டு ஓடிவந்த தேவர்)
தே: அடி பாதகி! சேகருக்கா துரோகம் செய்தாய், மோசக்காரி! வஞ்சகி!
[சுசீலாவுக்கு வேதனை, மயக்கமூட்டுகிறது, ஐயோ என்று அலறுகிறாள். ரத்னம் ஜன்னல் வழியாகக் கீழே இறங்குகிறான். மயக்கமுற்றுக் கிடந்த சேகருக்குத் தெளிவு பிறக்கிறது,
உடனே ஆத்திரத்துடன்]
சே : கள்ளி! எங்கே உன் கள்ளக் காதலன்?
சு: என்ன அநியாயம் சேகர் நான் சொல்வதை .
[சேகர், சுசீலாவைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டு, ஜன்னல் பக்கம் பார்க்க ரத்னம் தோட்டத்திலே ஓடக்கண்டு ஜன்னல் வழியாகவே கீழே இறங்குகிறான். ரத்னத்தைப் பிடிக்க]
காட்சி – 36
இடம் : ரத்னம் வீடு.
இருப்போர் :- ரத்னம், அவன் தாய் சொர்ணம் :
[சொர்ணம் நோயால் வாடி வதைக்கிறாள், படுக்கையில் புரண்டபடி உதவிக்கு யாரும் இல்லை. ஏழ்மையின் கோலம் நன்றாகத் தெரிகிறது. தாகமேலிட்டுப் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முயல்கிறாள். முடியவில்லை . தள்ளாடி எழுந்தி ருக்கிறாள். நிற்க முடியவில்லை , கீழே விழுகிறாள். வேதனை அடைகிறாள். மெல்ல நகர்ந்து சென்று, ஒரு சட்டியை எடுத்து, அதிலே இருந்த வெந்நீரைக் குடிக்கிறாள். கை உதறுகிறது. சட்டி கீழே விழுந்து உடைகிறது. மெள்ள நகர்ந்து படுக்கையில் வந்து, கயிற்றுக் கட்டிலைப் பிடித்துக்கொண்டு எழுந்திருக்க முயல்கிறாள். படுக்கை மேலே வீழ்கிறது. சொர்ணம் கீழேயும், கட்டில் மேலேயுமாக இருக்கிறது. ஈனக்குரலில் கூவுகிறாள். ரத்னம் உள்ளே வருகிறான் ]
ர: அட்டா அம்மா விழுந்துவிட்டாயா?
(கட்டிலைத் தூக்கி நிமிர்த்துகிறான். தாயைத் தூக்கி மெள்ளப் படுக்கவைத்துவிட்டு) கண்றாவி! ஏம்மா எழுந்தே நீ? உன்னாலே முடியுமா இந்த நிலையிலே !
சொ : அடே ரத்னம்! எங்கேடாப்பா போனே? இந்தக் கடைசி காலத்திலே, என்னோடு இரு. இப்ப நான் விழுந்து எழுந்து ஒரு முழுங்கு தண்ணி குடிக்கலையானா, உயிர் இழுத்துக்கிட்டே போயிருக்கும்.
ர: என்னாம்மா செய்வது? உனக்காகத்தான் வெளியே போனேன். பணம் தேட
சொ. பணமா? ஏண்டாப்பா பணம்?
ர : டாக்டருக்கு
சொ: பையண்டா உனக்கு இன்னைக்கோ நாளைக்கோன்னு இருக்கிறேன், இனி மருந்து வேலை செய்யாது. மனவியாதி அல்லவாடா என்னைக் கொல்லுது. அதுக்கு யாரிடமும் மருந்து கிடையாதுடாப்பா .
(ரத்னத்தைப் பின்தொடர்ந்த சேகர், அங்கே நுழைந்து மறைந்து கொண்டு நிலைமையைக் கவனிக்கிறான்.)
ர: பயப்படாதேம்மா! பணம் நிறையக் கொடுத்தா இந்தக் காலத்திலே பிணத்தைக்கூட எழுப்பிவிடுகிற டாக்டருங்க இருக்காங்க. உனக்கு என்னம்மா? பிழைச்சிக்கொள்வே. பணம் தேடிப் போனேன். பலிக்கலை.
சொ : பணத்துக்கு எங்கே போனாயப்பா இந்நேரத்திலே?
ர: எங்கேயம்மா போவேன்? வாடகை ப்பாக்கிப் பணம் கேட்கப் போவேனா . வட்டிப் பணம் கேட்கப் போவேனா? திருடத்தான் போனேன்.
சொ: வேண்டாம்பா இன்னம் அந்தத் தொழில்.
ர: இன்னக்கித்தான் கடைசி அம்மா போன இடத்திலே ஒரு வேடிக்கை !
சொ : என்னாடாப்பா வேடிக்கை?
எழுந்து உட்காருகிறாள், கட்டிலின் மீது
ர: படுத்துக்கிட்டே கேளம்மா, உன்னாலே உட்கார முடியாதே.
சொ : பரவாயில்லைடா ரத்னம், சொல்லு. தண்ணி குடிச்சதும் கொஞ்சம் உசிரு வந்துது.
ர : ஒரு பெண் இருந்த அறைக்குள்ளே நுழைந்து விட்டேன். அவளுக்கு என்னமோ பெரிய வேதனையாம். யாரோ அவ மாமனாம், ஒரு ஜெமீன்தாரன், அவளைக் கலியாணம் செய்து கொள்ளணும்னு வற்புறுத்தினாங்களாம்.
(இடையே) ஏம்மா! படுத்துக்கொள்ளேன் ! காலை அமுக்கறேன்.
சொ: வேண்டாம்பா நீ சொல்லு, அப்புறம்?
ர: அந்தப் பெண்ணுக்குத் துளிகூட இஷ்டமில்லை, அவனைக் கலியாணம் செய்து கொள்ள நல்ல அழகும்மா பொண்ணு பாவம்! உயிர்மேலேயே வெறுப்பாப் போச்சு அந்தப் பெண்ணுக்கு விஷத்தைக் குடிச்சுச் செத்துப் போறதுன்னு தயாராகிவிட்டா .
சொ : அட பாவமே!
சொ : நான் ஒரு இரண்டு நிமிஷம் கழிச்சி போயிருந்தேன். பெண்ணுமண்ணுதான்,
சொ : பாவம்! இப்படி இஷ்டப்படாதவனைத் தலைமேலே கட்டுவதாலே, வேண் பெண்ணுகமாண்டு போறாங்க.
ர: இந்தப் பெண்ணும் புத்திசாலி, தப்பித்துக் கொண்டார்.
சொ : ஏண்டா ரத்னம்! விஷம் சாப்பிடாதேன்னு நீ புத்தி சொன்னாயா?
ர : வேடிக்கையா இருக்கும்மா, நீ கேக்கற கேள்வி. நான் போனது திருட்! உபதேசம் செய்யவா போனேன்? நான் என்ன குருவா? அவளே ஒரு யோசனை சொன்னா!
சொ: உன்னைக் கண்டு அவ பயப்படவில்லையா?
ர: சாவுக்கே பயப்படலேன்னா! நிஜத்தைச் சொல்லணு மானா, எனக்கு இலேசா பயமா இருந்தது. அவளைப் பார்த்து. அவள் தன் நிலைமையைச் சொல்லி, ஒரு உதவி செய்யச் சொன்னா.
சொ: உன்னையா?
ர: ஆமாம்மா! என்னைத்தான்! சொ: நீ என்னா உதவி செய்யறதாம்?
ர: கேளு, அந்தக் கூத்தையும் கொஞ்ச நேரம் காதல் நாடகம் ஆடச் சொன்னா அந்தப் பெண்ணு.
சொ : என்னாது? காதல் நாடகமா?
ர: (சிரித்துக்கொண்டு) ஆமாம்மா! அவளை நான் காதலிப்பது போல நடிக்கச் சொன்னா .
சொ : இது என்னடா பைத்யக்கார வேலை.
ர: பைத்தியமில்லை. அவ மாமன் அங்கே வருவான். அதைப் பார்ப்பான். உடனே, சே! இவ இப்படிப்பட்ட நடத்தைக் காரியான்னு நினைச்சுக் காரி முழிஞ்சுட்டுப் போவான், கலியாணத்துலே இருந்து தப்பித்துக் கொள்ளலாம்னு, அந்தத் தந்திரம். அதுக்காகத்தான் என்னைக் கொஞ்ச நேரம் காதலனாக இருக்கச் சொன்னா.
சொ : பலே சாமர்த்தியக்காரிதான்.
ர: களவாடப்போன இடத்திலே இந்த உத்தியோகம் கிடைச்சுதா, சரின்னு ஒத்துக்கொண்டேன். அவ சொன்ன படியே, அந்தப் பய வந்தான்.
சொ : யாரு?
ர: அவ மாமன், யாரோ ஜெமீன்தாரன்.
சொ: வந்து?
ர: வந்து, ஆசாமி அப்படியே ஆவேசம் வந்தவன் மாதிரி ஆடினான். பாவம், யாருக்குத்தான் ஆத்திரமா இருக்காது. தான் கலியாணம் செய்து கொள்ளணும்னு இருக்கற பெண், பாதி ராத்திரியிலே ஒரு கள்ளப் புருஷனோடே விளையாடறதைப் பார்த்தா மனசு பதறாதா? அவன் கண்டானா, இதுதந்திரம்னு. புலி மாதிரி சீறினான், நானும் சும்மா இல்லை , நல்ல சண்டை , நல்ல அடி, நல்ல உதை இரண்டு பேருக்கும்.
சொ : அட பாவமே! அவ என்னா ஆனா?
ர: அம்மா ! இந்த அன்யாயத்தைப் பாரு அவளே தான் எனக்கு இப்படி இப்படி நடக்க வேணும்னு சொன்னா. ஜமீன்தாரன் வருவான், நான் பயப்படுகிற மாதிரி பாசாங்கு செய்வேன், கெஞ்சிக் கூத்தாடுவேன். நீ எதையும் கவனிக்காதே, அவனுக்குச் சரியான உதை கொடுன்னு சொல்லிக் கொடுத்தா. கடைசியிலே, அவ, அவனுடன் சேர்ந்து கொண்டு என்னையே அடிச்சி விரட்டினர்.
சொ : ஏன்?
ர: ஏனோ? ஆத்திரம் எனக்கு. இவளுக்காக . நான் காதல் வேஷம் போட்டுகிட்டது வீண் வேலை. அவனிடம் அனாவசியமான சண்டை : கடைசியிலே, அவ நம்மையே திருப்பிக்கிட்டா நல்லா திட்டிப்போட்டேன்.
[மறைந்திருந்த சேகர், இந்தச் சம்பாஷணையைக் கேட்டுத் தன்னையும் மறந்து]
சே : ஆஹா சுசீலா ! நீ மாசற்றவள் ! உன்மீது வீணாகச் சந்தேகித்தேன்.
(குரல் கேட்டு ரத்னம் அலற, சேகர் அவனருகே வந்து)
சே : அப்பா ரத்னம் என் வயற்றிலே பால் வார்த்தாயே. சுசீலா, என்னைக் காதலிக்கிறாள். அவளை வற்புறுத்துபவன், அவள் மாமன் ஜெமீன்தாரன். அந்தக் காமுகனிடமிருந்து தப்பித்துக் கொள்ளவே, அவள் அந்த ஏற்பாடு செய்தாள். அவன் வரவேண்டிய சமயத்தில் எதிர்பாராதவிதமாக நான் வர நேரிட்டது. அதனாலே விபரீதமாகி விட்டது.
ர: (ஆச்சரியத்துடன்) அப்படியானா. நீ அல்லவா அவளுடைய மாமன், ஜெமீன்தாரன்.
சே : இல்லை ! நான் டாக்டர் சேகர்! *
ர : அட இழவே! விஷயம் எப்படியோ போய் எப்படியோ முடிந்துவிட்டது.
சொ: அப்பா! இங்கே வாடாப்பா! பெண்ணுக மேலே , திடீல் திடீல்னு ஆண்பிள்ளைக சந்தேகப்படுவது பெரிய நோயாப் போச்சி. அந்தச் சாபக் கேட்டாலே. பெண்கள் படுகிற கஷ்டம் இருக்கே, சொல்லி முடியாதப்பா வீணாகச் சந்தேகப்பட்டு ஒரு பெரிய மனுஷர், தன் சொந்தப் பெண்ஜாதியைக் கொலை செய்ததை நான் கண்ணாலே பார்த்திருக்கிறே-ண்டாப்பா .
சே : (திடுக்கிட்டு) அம்மா, உன் பெயர் சொர்ணமா?
சொ : ஆமாம், உனக்கு எப்படித் தெரியும்?
சே : இப்ப நீங்க சொன்னது. கருணாகரத் தேவர் விஷயமாகத்தானே .
சொ : ஆமாம்பா
சே : அம்மா! இந்தப் பெண், என்னால் வீணாகச் சந்தேகிக்கப்பட்ட பெண் வேறு யாருமில்லையம்மா , பவானியின் மகள். தேவரின் குமாரிதான்.
சொ : தேவர் மகளா? தெய்வமே , இவளையாவது காப்பாற்றினாயே. அப்பா என சேதி உனக்கு எப்படித் தெரியும்?
சோ: தேவரே சொன்னார்.
சொ : ரத்னம்! அந்தப் பெண், உனக்குத் தங்கச்சி முறை தெரியுமா?
ர : எப்படிம்மா ?
சொ : விவரம் கேட்காதே. நீ தேவர் மகன். இந்தத் துர்ப்பாக்கியவதி கழுத்திலே அவர் கையாலே ஒரு தாலிக் கயறு கட்டாததாலே, சொந்த அப்பன் வீட்டிலேயே திருடப் போற் நிலை வந்தது.
சே : கஷ்டப்படாதீர்களம்மா, என்ன செய்வது? எல்லாம் இனி சுகமாக முடியும்,
ர: அதிசயமா இருக்கு. எனக்கு சுசீலாவிடம் ஒருவித அன்பு உண்டாயிற்று. இனி நீ என் தங்கை என்று கூட நான் சொன்னேன்.
சே: உன் தங்கையேதான்! சந்தேகமென்ன?
ர: (பயந்து அடே ஒரு விஷயத்தை மறந்து விட்டேனே. அந்தப் பெண், விஷம் குடிக்க இருந்து தே. இந்த விபரீதம் நேரிட்டதாலே ஒருவேளை
(சேகர் உடனே பதைத்து)
சே : நான் ஒரு முட்டாள் . இதோ வருகிறேன்.
(சுசீலா !சுசீலா என்று கூவிக்கொண்டே ஒடுகிறான்.)
காட்சி – 37
இடம் :- பாதை.
இருப்போர் – சேகர்.
(ஓடுகிறான், சுசீலா! சுசீலா! என்று அலறிக் கொண்டு.)
காட்சி -38
இடம் :- தேவர் வீட்டுக் கூடம்,
இருப்போர் :- தேவர்.
[தேவர் கண்ணீர் பொழிந்த வண்ணம் உட்கார்ந்திருக்கிறார். ஓடி வருகிறான் சேகர்.]
சே: சுசீலா எங்கே?
தே : (சுசீலாவைக் கொன்றுவிடுவான் என்று பயந்து, சேகர் காலைப் பிடித்துக்கொண்டு)
சேகர் சேகர் வேண்டாமப்பா ஆத்திரத்திலே நீ வேறு கொலை செய்து விடாதே. நான் படுகிற பாட்டைப்பார்.
[தேவரைத் தூக்கி நிறுத்திவிட்டு]
சே : கொலையா? என் கண்மணியையா? சுசீலாவையா? எங்கே சுசீலா மாசில்லாத மணி அவள் சுசீலா சுசீலா !
(என்று கூவிக்கொண்டே மாடிக்குச் செல்கிறான்)
காட்சி -39
இடம் :- சுசீலாவின் மாடி அறை.
இருப்போர் :- சுசீலா.
(சுசீலா, கட்டிலின் மீது கவிழ்ந்தவண்ணம் கதறிக் கொண்டிருக்கிறாள். மேஜை மீது, விஷக் கோப்பை இருக்கிறது. சேகர் உள்ளே பாய்ந்து, கோப்பையைக் கண்டு, அதை எடுத்துக் கொள்கிறான்.)
சே : (மூச்சுத் திணற) அப்பா! நல்லவேளை!
(சுசீலா, சேகர் வந்தது கண்டு, அவன் கையிலே கோப்பை இருக்கக் கண்டு)
சு: சேகர்! எனக்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறாய் இந்தக் கடைசி உதவியைச் செய்துவிடும். அந்தக் கோப்பையைக் கொடு.
[சேகர், அவள் பேச்சைக் கவனிக்காமல், அறையில் அங்குமிங்கும் தேடி ஒரு சீசாவைத் தேடி எடுத்து, அதிலே அந்த விஷத்தைக் கொட்டி, சீசாவைப் பத்திரப்படுத்திக் கொண்டு]
சே : சுசீலா கண்ணே ! எனக்கு நேரம் இல்லை , விவரம் சொல்ல . நமது வாழ்வுக்காகப் போரிடப் புறப்படுகிறேன். வெற்றி பெற்றால் விஷத்துக்கு வேலை இல்லை. தோல்வி அடைந்தால், நீ மட்டுமல்ல, இரண்டு கோப்பைகளிலே விஷம், கடைசி முத்தம், இருவரும் இறந்துவிடுவோம்.
[புறப்படுகிறான் ]
சு: (திகைப்புடன்) தாங்கள், என்ன சொல்கிறீர்கள்?
சே : காத்துக்கொண்டிரு. மண ஓலை, அல்லது மரண ஓலை, இரண்டிலே ஒன்று விடிவதற்குள் இதோ வருகிறேன்.
(ஓடுகிறான்.)
காட்சி – 40
இடம் :- பாதை.
இருப்போர் :- ரத்னம், சேகர்.
(இருவரும், எதிர் எதிர்ப்புறமிருந்து ஓடி வருகிறார்கள்)
ர: ஆபத்து இல்லையே!
சே : இல்லை ! விஷம் என்னிடம் இருக்கிறது.
ர: தப்பினாள் என் தங்கை, சரி, சேகர், இனி என்ன செய்யவேண்டும். சொல்லு. சுசீலாவின் வாழ்க்கையைக் கெடுக்கத் துணியும் அந்த ஜெகவீரனின் தலையைக் கொண்டு வந்து உன் காலடியில் வைக்கட்டுமா? கொலைக் குற்றத்துக்கு மரண தண்டனை தருவார்களே என்று பயம் கொள்ளாதே. பாம்பு கொல்லப்பட்டது என்று திருப்தி கொள்.
ஒரு குடும்பத்தை இவ்வளவு கொடுமைக்கு ஆளாக்கும் கொடியவனை விட்டுவைக்கக் கூடாது.
என்னைப் பற்றிக் கவலைப்படாதே. நான் எதற்கும் தயார்!
சே : (ரத்னத்தைத் தழுவிக்கொண்டு)
இவ்வளவு வீர புருஷனாக இருக்கிறாய். சமூகக் கொடுமையால் நீ இந்தக் கதிக்கு ஆளாக்கப்பட்டாய்.
ர: அது கிடக்கட்டும் சேகர், நீ என்ன சமூகம் சமூகம் என்று பேசிக்கொண்டிருக்கிறாய். சமூகத்தின் பிரமுகர்கள், ஜெகவீரர்களாகவே இருக்கிறார்கள். நாங்கள் சாக்கடைப் புழுக்கள். ஆனால் அந்தச் சாக்கடை ஏற்பட்டதற்குக் காரணம், கனதனவான்கள் உற்பத்தி செய்யும் காமச்சேறு. அது ஒழிய வீரர்கள் தோன்ற வேண்டும். விடிவதற்குள் முடிகிற காரியமா அது. இப்போது நடக்கவேண்டியதைச் சொல்லு.
சே : ஜெகவீரனைக் கண்டு பிடித்து, அவனிடம் ஒரு படம் இருக்கிறது. தேவர் கொலை செய்தவர் என்று ருஜு காட்ட அதனைக் கைப்பற்றி விட வேண்டும்.
ர: புறப்படு.
சே : எங்கே கண்டு தேடுவது அவனை?
ர: பெரிய குடிகாரனாயிற்றே …
சே: எங்காவது ஆடிக்கொண்டு கிடப்பான்.
ர : அப்படியானால் வா சேகர்! இங்கே ஒரு சூதாடுமிடம் இருக்கிறது. குடி, கூத்தி சகலமும் போய்ப் பார்ப்போம்.
(போகின்றனர்)
காட்சி – 41
இடம் – சூதாடும் இடம். .
இருப்போர் – பலர்.
[சூதாடும் இடத்தில் குடி வெறியுடன் பலர். சிலர் சீட்டாடுகின்றனர், சில பெண்களும் இருக்கின்றனர். கலகமும் கூச்சலும் இடையிடையே பெண்கள் சிரிப்பு.]
ஒரு குடியன் : (ஒரு பெண்ணைப் பார்த்து) ஷோக்கா ஒரு பாட்டுப் பாடும் கேட்டுக்கிட்டே ஆடலாம்.
மற்றோர் குடி : செ ! வேண்டாண்டா ! அவ பாடினா, சீட்டாட்டத்து மேலே புத்தி போவாது.
முதல் குடி : பாடுடி , பாடுடின்னா பாடணும். [பாட ஆரம்பிக்கிறாள்]
மற்ற குடி : ஏ நிறுத்துடி . பாடக்கூடாது.
முதல் குடி : பாடு.
மற்ற குடி : பாடாதே!
முதல் குடி : நீ யாருடா தடுக்க?
[என்று கேட்டுக்கொண்டே திரும்பிப் பார்க்க, சேகரும் ரத்னமும் வரக்கண்டு]
டே! யாருடா நீ?
ர: நாங்களா? ஏன் சொல்ல வேணுமா?
மற்றக்குடியன்: யாரோ புதிசு வாங்க பிரதர்! வாங்க என்னா பிரதர் கோவிக்கறே.
[ரத்தினத்தின் முகவாய்க்கட்டையைத் தொட அவன், அவனுடைய கையைப் பிடித்துத் தள்ளுகிறான்.]
ர – சும்மா இப்படித் தமாஷா ! பொழுது போக்க
இன்னோர் குடி : உட்காரு பிரதர், ஒரு கை.
சே: இல்லை! நாங்க இங்கே ஒரு சினேகிதரைத் தேடிக் கொண்டு வந்தோம்.
முதல் குடி : அப்ப, நாங்களெல்லாம் சிநேகிதரு இல்லையா, பிரதர்! உட்காரு பிரதர், கிளாசைக் காட்டி.ஜின் பிரதர்! ஜின்!
வேறு குடி : விஸ்கி வேணுமா பிரதர்?
சே: வேண்டாம்.
(ரத்னம் வாங்கி மளமளவென்று குடித்து விட்டு)
ர: இங்கே காணோம், வாங்க. அவன், இப்படி ரோந்து போயிருப்பான்.
சே : ரோந்து என்றால்?
ர : அது உங்களுக்குப் புரியாத பாஷை. அவன் பெரிய பொம்பளைப் பைத்யம் பிடிச்சவனல்லவா? அந்தத் தெருவா போயிருப்பான்.
(இருவரும் போகின்றனர்.)
முதல் குடி : வெறும் கையை முழம் போடற பயலுக.
வேறு குடி : டே! ஒரு சமயம் போலீசா இருக்குமோ?
முதல் குடி : அடச் சே! ஏண்டா பயப்படறே! ஆடுடா!
(இன்னொருவனைப் பார்த்து கிளாசைக்காட்டி) போடுடா.
காட்சி – 42
இடம் :- வேதம் வீடு.
இருப்போர் – வேதம், ஆறுமுகம்.
(பிறகு) ஒரு வாலிபன்
[வாசற்படியில் நின்றுகொண்டிருக்கிறாள் வேதம் விசாரத்துடன், கலைந்த பொட்டு, வாடிப்போன பூ, சரிந்த ஆடை. சுழலும் கண்ணுடன் பக்கத்திலே உட்கார்ந்து கொண்டு சிகரெட் பிடிக்கிறான், அவளுடைய ஆசை நாயகன்’ ஆறுமுகம். ]
ஆ : ஏ வேதம்! உன் மூஞ்சி இருக்கிற அழகுக்கு முக்கா ரூபா கொடுப்பானாடி எவனாச்சும் முகரக்கட்டையைப் பாரு போய்ப் படுடி. இன்னக்கி எவனும் சிக்கமாட்டான்
வே: அட என் மன்மதக்குரங்கே! நீ கெட்ட கேட்டுக்கு கேலி . வேறேயா? நீ போய்ப்படும். பக்கத்திலே நீ தடியனாட்டம் இருந்தா. எவன் நுழைவான் : உன்னை ஒரு பெரிய பிர்புன்னு நினைச்சிக்கிட்டுப் போயிடுவான்க. உனக்கென்ன வந்தது கவலை. வீட்டுக்காரிக்கு வாடகைப் பணம் 9 ரூபா தரணும், வாயிலே வந்தபடி பேசறா!, மானம் போவுது.
ஆ : (கேலிச் சிரிப்புடன்) மானம் போகுதா? உனக்கா? ஏ அப்பா! மானம்னா, மணங்கு என்னா விலைன்னு கேட்கறவ நீ. மானம் போவுதா உனக்கு. என்னாடி வேதம். அதெல்லாம் என் கிட்டவே காட்டறே.
வே: காட்டறேன், நீ நோட்டு நோட்டா நீட்டுவேன்னு .
(வீதியிலே யாரோ வருவதைப் பார்த்து) வாயை மூடு ! அதோ எவனோ வருகிறான். பார்த்துக் கொள்ளு.
[பாதை ஓரம் செல்கிறான் ஆறுமுகம். எதிரே வரும் வாலிபனைப் பார்த்து]
ஆ : ஏன் சார், டயம் என்னாங்க?
வா : தெரியாதுங்களே, கடியாரம் இல்லை .
ஆ : எங்கேயோ உங்களைப் பார்த்த மாதிரியா இருக்கே?
வா : என்னையா? ஊஹும் இருக்காதே.
ஆ : (யோசிப்பது போல் பாசாங்கு செய்து) என்னா பிரதர்! ஒரே அடியா, என்னை முட்டாளாக்குறீங்க. நீங்க நம்ம பக்கத்து வீட்டு பாக்கியம்…
வா : எந்தப் பாக்கியம்?
ஆ : அவதான், தனபாக்யம். அவ வீட்டுக்கு வந்திருக்கறிங்களே, நீங்கத்தான். ஒரேயடியா மறைக்கறிங்களே. நான் பார்த்திருக்கறேன்.
வா : இல்லைங்க. நான் வந்ததில்லைங்களே.
ஆ : சும்மா , வாங்க கூச்சப்படாமே. யாருபார்க்கறாங்க இங்கே . வாங்க.
(வேதம் விட்டு வாசற்படி வருகின்றனர் இருவரும்.
உள்ளே அழைத்துச் செல்கிறாள். ஒரு பழைய நாற்காலியிலே உட்கார வைக்கிறார்கள் வாலிபனை)
வா : இந்த மாதிரி வழக்கமே எனக்குக் கிடையாது. என்னமோ இன்னக்கி மனசு ஒருமாதிரியா இருந்தது. அதனாலே….
வே : (வாலிபன் பக்கத்தில் நின்று கொண்டு) இது சகஜந்தானுங்களோ என்னமோ கதைகூடச் சொல்வாங்க இல்லே, அப்பேர்க் கொத்த விசுவாமித்ரர் கூட ஒரு மேனகையைப்பார்த்து மயங்கினாருன்னு. ஊரிலே நடக்காத விஷயமா? இங்கே நம்ம வீட்டிலே, கண்டவங்க நுழையறது கிடையாதுங்க.
ஆ : தப்பித்தவறி எவனாவது வந்தா. இவ எறிஞ்சி விழுவா. இப்ப, உங்ககிட்ட சிரிச்சிப் பேசினா பாருங்கோ. இந்தமாதிரி இருக்கவே மாட்டா. அது என்னமோ உங்களைக் கண்டதும்
வா: அதெல்லாம் நம்ம பேஸ்கட், பர்சனால்லடி
வே: (ஆறுமுகத்தைப் பார்த்து) போங்க! உங்களுக்கு எப்பவும் கேலிதான். வாலிபனைப் பார்த்து எனக்கு மனசு பிடிச்சாத்தான். முகங்கொடுத்துப் பேசற வழக்கம்ங்க, அவன் மகாராஜனாக்கூட இருக்கட்டுங்க, நமக்கு என்னாங்க. பணமா பெரிசு! மனசு தானுங்களே.
வா : ஆமாம்! எனக்கு … நானு இப்படிப்பட்ட இடத்திலே வந்து பழக்கமில்லாதவன்…
[ எழுந்திருக்கிறான். வேதம் அவனைத் தொட்டு உட்காரவைத்து]
வே: உட்காருங்க !
(ஆறுமுகத்தைப் பார்த்து) இவரைப் பார்க்கப்போதே பெரிய மனுஷருன்னு தெரியுது இல்லை.
ஆ : அதுக்கென்ன சந்தேகம்! நான் போயி, சாயா சாப்பிட்டுவிட்டு வர்ரேன்.
வே: (வாலிபன் மீது உராய்ந்தபடி) அண்ணன் வெளியே போகணுமாம், போய்த் தொலைக்கட்டும். அது இங்கே இருந்தா, வளவளன்னு பேசிகிட்டே இருக்கும். போகட்டும் வெளியே. நாம்ப நிம்மதியாப் பேசலாம்…
வா : (புரியாமல் ) ஏன் அவர் இருந்தா என்னா ? வேணுமானா போயிட்டு வரட்டுமே! கடை இருக்குமா இந்த நேரத்திலே?
ஆ : (கொஞ்சம் உரத்த குரலிலேயே) என்னா வேதம் ! சாயா குடிக்கப் போகணும், காது கேட்கலே? ஏது! சொக்கி விட்டாயோ?
வே: (உரத்த குரலிலேயே) அட கொஞ்சம் இரு அண்ணே . அவரு காசு எடுக்கறதுக்குள்ளே கூச்சப்போடறே.
(வாலிபனை நோக்கிக் கொஞ்சுவது போல) ஏதாச்சும் சில்லறை இருந்தாக் கொடுங்கோ. இந்தச் சனியனைத் தொலைச்சிவிடுவோம்.
வா : சில்லறை இல்லையே.
(வாலிபன் மடிமீது உட்கார்ந்து கொண்டு)
வே: ரூபாயா இருக்கா?
வா : இல்லையே.
வே: (ஜேபியைத் தடவிக்கொண்டு) நோட்டா இருக்கா?
வா : (பரிதாபத்துடன்) இல்லையே.
[மாடியிலிருந்து எழுந்து கொஞ்சம் கோபமாக.]
வே: என்னய்யா இது? விளையாட்டா? எடுங்க. அண்ண னுக்குக் கொடுக்கணும். நமக்கும் ஏதாச்சும் வாங்கணும். பாலைக் காச்சி வைச்சேன், பூனை உருட்டி விட்டுது. பால் வாங்கணும்.
வா : (மடியிலிருந்து ஒரு செயின் எடுத்துக் காட்டி) இதோ பார்! இதுதான் இருக்கு.
(வேதம் அதைக் கையில் வாங்கிப் பார்த்து ஆச்சரியத்துடன்)
வே: செயினா ஏது இது?
வா : (போலி தைரியத்துடன் ஏன் என்னுடையதுதான்!
வே: (கொஞ்சம் அலட்சியமாக) உன்னுடையதா? ஏன், இதை எடுத்துக் கொண்டுவந்தே. பணம் இல்லையா?
வா : (அசடு வழிய) இல்லை ! பணத்துக்குப் பதில் இதை வைத்துக்கொள். பத்து நாளைக்கு நான் இங்கேயே தங்கி இருக்கப் போகிறேன். இது 5 சவரன் செலவுக்கு இது போதாதா?
வே: (மிரட்டும் குரலில்) நிஜத்தைச் சொல்லு, இதை எங்கிருந்து திருடினே?
வா : (பயமும் வெட்கமும் அடைந்து) திருடுவதா? என் நகையை நான் ஏன் திருடப் போகிறேன் !
வே. (மிரட்டி) நிஜத்தைச் சொல்லு.
வா : சத்தியமா, இது எங்க வீட்டுது தான்.
வே: உங்க அம்மாவுதா?
வா : இல்லை .
வே: உன் சம்சாரத்துதா?
வா : ஆமாம். இருந்தா என்ன?
வே: இரு, இதோ வர்ரேன். வெத்திலைப் போட்டுக்கோ..
(வேதம் வாசற்படி சென்று ஆறுமுகத்தைக் கண்டு)
வே: பார்த்தாயா இந்த வேடிக்கையை . அந்தப் பயல் இதை , வீட்டிலே இருந்து அடித்துக்கொண்டு வந்திருக்கான்.
ஆ : அட, செயின்! வேறே எங்கேயாவது களவாடி இருப்பானோ?
வே : இல்லை , சுத்த அசட்டுப் பயலா இருக்கறான் . முழி முழின்னு முழிக்கிறான். ஆமா இப்ப என்ன செய்யறது? பாவம், அவன் சம்சாரத்து தாம் செயின். அவ சபிச்சுக் கொட்டுவா .
ஆ : சரிதான் போடி.. சாபம் வந்து உன்னைச் சர்ப்பமாகக் கடிக்கப் போவுதா? பத்து நாளைக்குச் சனீஸ்வரன் கோவிலுக்கு விளக்கு ஏத்தினாப் போவுது, சாபமெல்லாம்.
வே: செச்சே! எவ்வளவோ பாபம் செய்து இந்த ஜென்மம் எடுத்தாச்சி இன்னம் கொஞ்சம் மூட்டை சேர வேணுமா?
ஆ : பெரிய தொல்லையாப் போச்சி. வேதம் எனக்குப் பாவம் பிடிச்சுக்கொள்ளும்னு ஒண்ணும் பயமில்லை. ஆனால், இந்தப் பயலுடைய வீட்டிலே போலீசுலே தகவல் கொடுத்தா நம்ம பாடு ஆபத்தாயிடுமோன்னு பயமாத்தான் இருக்கு. சப் இன்ஸ்பெக்டர் இந்த மாதிரி விஷயத்திலே ரொம்பக் கண்டிப்பானவராம்.
வே: (பயந்து) நமக்கு வேணவே வேணாம் இந்தச் சங்கடம். எழுந்து போகச் சொல்லு
ஆ : இதுக்கு நான் என்ன தூது? நீயேதான் போகச் சொல்லேன்.
வே: நான் போயிச் சொன்னா அவன் குழந்தை மாதிரி அழுதுவிடுவான் போலிருக்கு. அவ்வளவு பயித்யக்காரப் பிள்ளேயாயிருக்கு.
(ஆறுமுகம் செயினை எடுத்துக்கொண்டு உள்ளே போகிறான்)
ஆ : ஏ , அப்பேன்! இப்படி வா வெளியே .
வா : யாரை என்னையா?
ஆ : ஆமாம் சார். செயின் மாஸ்டர் உங்களைத்தான்.
வா : (எழுந்து வருகிறான்) ஏன்?
ஆ : (செயினை அவனிடம் கொடுத்து) இந்தா ! மரியாதையா வீட்டுக்குப் போயி சங்கிலியைக் கொடுத்துவிடு. இப்படித் தலைகால் தெரியாமெ ஆடறது, வீட்டுச் சொத்தைத் திருடறது, வயத்துக் கொடுமையாலே, யாராவது வாங்கிக்கிட்டா பிறகு போலீசிலே கம்பெனியிண்டு கொடுக்கறது.
தடியனாட்டமா இருக்கறயே உனக்குப் புத்தி இல்லே வீட்டிலே இருந்து நகைநட்டு திருடிக்கொண்டா வர்ரது. ஆளைப் பார்த்தா ஒழுங்காத்தான் இருக்கறே. ஏதாவது அரை காலு இருக்கா பாரு மடியிலே.
வா : (வெட்கமும் பயமும் மேலிட்டு) இல்லிங்க.
ஆ : சுத்த வறட்டுப் பய. போடா, போ, பெரிய பிரபு மாதிரி வந்துவிட்டான். இந்த நேரத்திலே
(வாலிபன் பயந்துகொண்டு செல்கிறான் வீதியில் அந்தச் சமயம் டாக்டரும், ரத்னமும் வருகிறார்கள். டாக்டர் வாலிபனை அடையாளம் கண்டுபிடித்து)
சே : தம்பீ! இங்கே என்னடா இந்த நேரத்தில்,
வா : (குளறுகிறான்) இல்லை … சும்மா …. இப்படி
ர: யாரு இந்தத் தம்பீ?
சே : நம்ம பக்கத்து வீடு. ராமாயணக்காலட்சேபம் செய்யறாரே ரங்காச்சாரி, அவர் மகன்.
[வாலிபன் நழுவுகிறான். ரத்னம் சிரித்துவிட்டு.]
அப்பா ராமாயண காலட்சேபம் செய்கிறாரு. மகன் இப்படி, பாரத காலட்சேபத்துக்குக் கிளம்பி இருக்கான்! டாக்டர்! – இதுக்குத்தான் ரோந்து வர்ரதுன்னு பேரு, போவட்டும் வாங்க. இந்தமாதிரி இடத்திலே எல்லாம் தெரிஞ்சவங்களா இருந்தாக் கூட கண்டுகொள்ளக்கூடாது. கண்டும் காணாத மாதிரியாகத்தான் போயிடுவாங்க. நீங்க ரெண்டு பேரும் புதிசு.
(வேதம் வீட்டருகே போய்ச் சேருகிறார்கள்.)
காட்சி – 43
இடம் :- வேதம் வீடு
இருப்போர்: ஆறுமுகம்,
வேதம், (பிறகு) சேகர், ரத்னம்.
(வாயிற்படி அருகே போய் உரத்த குரலில்.)
ர: டே! ஆறுமுகம்! ஆறுமுகம்!
[வேகமாக ஆறுமுகம் ஓடிவந்து ரத்னத்தின் முன்பு அடக்கமாக நின்று கொண்டு]
ஆ : ஏண்ணேன்! இந்த நேரத்திலே இவ்வளவு தூரம்! சொல்லி அனுப்பினா நான் வரமாட்டனா?
ர: டே! ஆறுமுகம்! கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே எவனாவது ஜெமீன்தாரன் வந்தானா, இந்தப் பக்கத்திலே , யாரு வீட்டுக்காவது.
ஆ : (யோசித்து) ஜெமீன்தாரனா? ஆள் எப்படி இருப்பான்? இந்த நேரத்திலே எப்படி அண்ணேன் கண்டுபிடிக்கறது. இங்கே வருகிறவன் அத்தனை பேருந்தான் ஜெமீன்தாரன் மிட்டாதாரன்னு சொல்லிக்கறான். நாம் கண்டமா , அவனெல்லாம் நிஜமாகவே ஜெமீன்தாரன் தானான்னு.
சே : இந்த ஜெமீன்தாரன் கொஞ்சம் வயசானவன். மீசைக்குச் சாயம் பூசியிருப்பான். கையிலே தங்கப் பூண் போட்ட தடி இருக்கும் குடிச்சிட்டு இருப்பான்.
ஆ : (உள் பக்கம் பார்த்து) வேதம் ! தா, வேதம்!
(வேதம் வருகிறாள். ரத்னத்தைக் கண்டதும் மரியாதையாக.]
வே : ஏண்ணேன், தெருவிலேயே நிற்கறே? உள்ளே வாண்ணேன்.
ஆ : வேதம்! மூணாவது வீட்டிலே ஒரு ஆசாமி வந்தானே இன்னக்கி கொஞ்சம் வயசானவனா, தங்கப் பூண் போட்ட தடி . கூட வைச்சிருந்தானே.
வே: ஆமாம்!
ஆ : அவன் ஜெமீன்தாரனா?
வே: அப்பிடின்னுதான் சொல்லிக்கிறா அவ.
ஆ : சரி, போயி .. வே இருக்கானான்னு பார்க்கச் சொல்றயா? அவன் போயி எவ்வளவு நேரமாச்சு. வெறுங்கையோடு வந்தானாம், அவ இலேசுப்பட்டவளா? வெள்ளிக்கிழமை விரதம்னு சொல்லி வெளியே அனுப்பிவிட்டா .
(ஆறுமுகம் யோசிக்கிறான்.)
ர: டே! ஆறுமுகம்! நானும் இவரும் போய்த் தேடிப் பிடிக்கறோம். நீ. நம்ம வீட்டுக்குப் போ, அம்மாவுக்குக் காச்சல்.
ஆ : போறேன். இதோ.
(டாக்டர் சேகரும் ரத்னமும் அந்த இடத்தை விட்டுப் போகின்றனர்.)
காட்சி – 44
இடம் : பாதை.
இருப்போர் : சேகர், ரத்னம்.
சே : இரவு நேரத்திலே, என்னென்ன கண்றாவிக் காட்சிகள் ரத்னம்!
ர: நீங்களென்ன கண்டீர்கள். இராத்திரி வேளைன்னா, சங்கீதம், ரசம், குடும்பத்தில் சந்தோஷம் இவைகள் தான் இருக்கு மென்று நினைக்கிறீர்கள். இவைகளைத்தான் பார்த்திருப்பீர்கள்.
இரண்டு உலகமல்லவா இருக்கிறது. உங்க உலகிலே இரவு பத்து மணி அடித்தா, தீர்ந்தது: சந்தடி கிடையாது.
எங்க உலகமிருக்கே, அதுக்கு, இரவு மணி பத்தானாத்தான் பொழுது விடியுதுன்னு அர்த்தம் தெருக்கோடிச் சண்டை, வீட்டு மேலே கல்வீசுவது, கலகம், கத்திக்குத்து, எல்லாம் அப்போதான் ஆரம்பமாகும். நீங்களெல்லாம் காலையிலே காப்பி சாப்பிட்டு விட்டதும் சுறுசுறுப்பா வேலை செய்விங்க. எங்க உலகத்திலே சுறுசுறுப்பு ராத்திரி பத்து அடிச்சதும், கள்ளோ , சாராயமோ போட்டுகிட்டா, தீர்ந்தது, கோட்டை எல்லாம் தூளாகும்.
(தொலைவிலே கலகக் கூச்சல் கேட்கிறது.)
கேட்குதா. அதுதான் சங்கீதம்.
(ஒருவன் குடிவெறியிலே ஆடிக்கொண்டு வருகிறான்.)
பார்த்திங்களா! இதுதான் எங்க உலகத்து டான்சு பாருங்க வேடிக்கையை.
(வந்தவனை வழிமறித்து)
ர: யாருடா அவன்?
வந் : (முறைத்துவிட்டுக் கூச்சலிடுகிறான்)
டே! யாருடா நீ! நான் யாரு தெரியுமாடா.
(மடியிலிருந்து ஒரு பேனாக்கத்தியை எடுக்கிறான்.)
ர; (சேகரைப் பார்த்து கத்தி மடக்கி இருப்பது கூடத் தெரியலை பயலுக்கு, அவ்வளவு போதை.
(வந்தவனை ஓர் அறை கொடுக்கிறான். வந்தவன் கூச்சல் அழுகுரலாகிறது. )
ர: (சேகரைப் பார்த்து இவ்வளவுதான் இந்த உலகத்து வீரம் ! ஆரம்பத்திலே, வீராவேசமாக இருக்கும். முதல் அடி நம்மதாயிட்டா, பய காலிலேவிழுவான்.
வ: அண்ணேன் நான் யாரோன்னு பார்த்தேன். உங்க தம்பி அண்ணே நானு. உங்க கையாலே அடி பட்டா எனக்குக் கெளரவந்தாண்ணேன். நாம்ம ரெண்டு பேரும் மாமன் மச்சான் மாதிரி பழகனவங்கதானேண்ணேன். நீங்க பெத்த புள்ளெமாதிரி அண்ணேன். நம்ம குரு நீங்கதானேண்ணேன்.
ர: டாக்டர் பார்த்திங்களா? நானு அவனுக்கு அண்ணன், மாமன், அப்பன், குரு, இவ்வளவு பந்துவுமாயிட்டேன். ஒரே அறை கொடுத்ததிலே.
(வந்தவனைப் பார்த்து) போடா! டே! போடா!
[அவன் தள்ளாடி நடந்து கொண்டே ]
வ : டே! நம்ம குருகிட்ட எவனாச்சும் வாலாட்டினா. தீத்துப்பூடுவேண்டா , தீத்துப்பூடுவேன். அண்ணேன். நான் போயிட்டு வர்றேன். தெரியாம அடிச்சி விட்டேன். கோபிச்சிக்காதேண்ணேன்.
[போகிறான்]
ர : ஒருதடவை டாக்டர், ஒரு டிராமாவிலே, புத்தர் கதை காட்டினாங்க. புத்தரு பெரிய ராஜா பிள்ளெ அல்லவா. சுக போகத்திலேயே இருந்தவரு. ஒருநாள், ஊரைச் சுத்திப் பார்த் தாராம், நோய் பிடிச்சவன், ஏழை, நொண்டி, குருடன், பிணம் இப்படிக் கண்றாவிக் காட்சியாகப் பார்த்தாரு. உடனே அவரு மனமே குழம்பிப் போச்சி. செ! என்னா உலகம் பா இது! இதிலே இவ்வளவு ஆபத்தும் ஆபாசமும் இருக்கான்னு ஆயாசப் பட்டாராம்.
ஒரு இரவிலே எங்க உலகிலே நடக்கற் கோரத்தைக் கண்டா, உங்களாட்டம் இருக்கறவங்களெல்லாம், புத்தர் மனசு பாடுபட்டு துன்னுடிராமா காட்டினாங்களே அது போலே, ஆய்விடுவிங்க.. அவ்வளவு கோரம், கொடுமை, ஆபாசம் தாண்டவமாடும்.
சே : ஆமாமரத்னம்! பார்த்தாலே …
ர: வாந்தி வரும். ஆனா, எல்லாம் எதனாலே வருதுன்னு நினைக்கிறிங்க ஏழ்மை, படிப்பில்லாமெ இருக்கிறது; நல்லவங்க நமக்கென்னானு போயிடுவது : இதுதான் காரணம். இரண்டு உலகம் இருக்கு டாக்டர். இரண்டு இருக்கு; ஒண்ணை ஒண்ணு கேலிசெய்துகிட்டு , விரோதிச்சிக்கிட்டு. காமம், குடி, களவு, கொலை, கலகம் யாவும் இரண்டு உலகிலேயும் உண்டு. உங்க உலகத்துச் சமாசாரம், வெளியே சுலபத்திலே வராது. எங்க விஷயம் ஊர் பூராவும் பரவிவிடும்.
நாங்க மொந்தையிலே இருக்கற கள்ளுமாதிரி, பொங்கி வழியறது. உங்க உலகத்துக் கெட்ட நடவடிக்கை , கார்க் போட்ட சீசாவிலே ஊத்தி அனுப்பற ஒசத்தி சரக்கு மாதிரி . (இருவரும் போகின்றனர்.)
காட்சி – 45
இடம் – இடிந்த சுவரோரம்.
இருப்போர் – ஒரு நோய் பிடித்த பெண்,
(பிறகு) ஜெகவீரன்,
(பிறகு) டாக்டர், ரத்னம். (சுவரோரத்தில், விளக்குக் கம்பத்தருகே, முக்காடிட்டுக் கொண்டு, ஓர் உருவம் படுத்துக்கிடக்கிறது. ஜெகவீரன், குடிவெறியிலே, அங்கு வருகிறான். உருவத்தைக் கண்டு, தடியாலே போர்வையைத் தள்ளிப் பார்க்கிறான். அவள் எழுந்து, வெறியாக இருக்கும் ஜெகவீரனைப் பார்த்து.)
அவள் : யாருய்யா நீ? அன்யாயம் செய்யறே. படுத்துக்கிட்டு இருக்கறவளே தட்டி எழுப்பறே.
ஜெ : (போதையில்) வா! வாடி இங்கே, பணம் தர்ரேன் பணம்.
அவள் : பணம் கொடுக்கறயா பணம் (அலட்சியமாக) எம்மாங் காசு கொடுப்பே?
ஜெ : எம்மாங் காசு வேணும்?
அவள் : ஒரு ரூவா கொடுக்கணும்.
ஜெ : சி பிச்சைக்காரக்கிழுதே! ஒரு ரூபாதானா பிரமாதம்.
[பணம் தருகிறான். முந்தானையில் அதை முடி போடுகிறாள். அதற்குள் ஜெகவீரன் பதைத்து அவள் தோள் மீது கை போட]
அவள் : அட இரய்யா .
ஜெ : (குளறலும் கொஞ்சலுமாக) ஒன் பேரு என்ன?
அவள் : (வெறுப்பாக) ஆமாம்! அதை நீ கட்டாயமாகத் தெரிஞ்சிக்க வேணுமா?
ஜெ : (அதே குரலில்) சொல்லும்மா, கண்ணில்லே, சந்தோஷமாப் பேசேன். சளசள்ளுனு விழறயே,
[ஜெகவீரன் அவள் கையைப் பிடித்து இழுக்க, அவள் கூச்சலிட்டு]
ஐய்யய்யோ! யாருய்யா நீ அக்ரமம் செய்யறே மரியாதையா போய்விடு இல்லைன்னா மானத்தை வாங்கிவிடுவேன்.
[சேகரும், ரத்னமும் வருகிறார்கள்.
அவள் ஓடிவிடுகிறாள். ஜெமீன்தார் திகைத்து நிற்கிறார். சேகர், ஜெமீன்தாரை அடையாளம் கண்டுபிடித்து விட்டு]
சே : ஜெமீன்தாரரேதான் !
ர: (கேலியாக) ஐயா தெருவிலே படுத்துக் கிடக்கறவளைக்கூட விடமாட்டார் போலிருக்கு.
ஜெ : (தடியை ஓங்கி) யாருடா நீ?
(ரத்னம் தடியைப் பிடுங்கிக்கொண்டு)
ர : டாக்டர்! நமக்கு ரொம்ப நாளா ஆசை, இதைப் போல், தங்கப் பூண் போட்ட தடி மேலே.
ஜெ : யாரது? சேகரா? டாக்டரா?
சே : ஆமாம்! உங்களை எங்கெங்கே கண்டு தேடறது. வீட்டிலே, சுசீலா வீட்டிலே, கிளப்பிலே, எங்கே எல்லாம் தேடினோம்.
ஜெ : நான் இப்படிப் பொழுது போக்காக….
சே : சரி, வீட்டுக்குப் போவோம் வாங்க. ஒரு முக்கியமான வேலை. அவசரம்.
ஜெ : வீட்டிலே யாரும் இல்லை. இன்னக்கி வேலைக் காரனுங்களுக்கெல்லாம் லீவ் கொடுத்து அனுப்பிவிட்டேன்.
ர: ரொம்ப நல்லதாப் போச்சி, விஷயமும் இரகசியமாகப் பேச வேண்டியதுதான்.
[மூவரும் போகின்றனர்.]
காட்சி – 46
இடம் :- ஜெமீன்தாரர் வீடு.
இருப்போர் – ஜெமீன்தாரர், சேகர், ரத்னம்,
[மூவரும் உட்காருகின்றனர்.]
ஜெ : சேகர்! தேவர் சொன்னாரா?
சே : சகலமும் எனக்கு சுசீலா சௌக்கியமாக, சந்தோஷமாக இருக்க வேணும். அவ்வளவுதான்.
ஜெ : நீ நல்ல புத்திசாலி, டாக்டர். உன்னிடம் நிஜத்தைச் சொல்றேன். எனக்கு சுசீலா மேலே கொள்ளை ஆசை. உயிரு தான்.
ர: இருக்கும் இருக்கும் பாதை ஓரத்திலே கிடந்தவ மேலேயே ஐயாவுக்கு அவ்வளவு ஆசை இருந்தப்போ …
ஜெ : யாரு இந்தப் பயல்? குறும்பு பேசிக்கிட்டே இருக்கறான்.
ர : டாக்டர்! என்ன இது? இந்தப் பயக்கிட்ட என்னென்னமோ பேசிகிட்டு வந்த வேலை சுருக்கா முடிய வேணுமே.
ஜெ : யாரு இவன் முரட்டுப் பயல்.
ர : நம்ம முரட்டுத்தனத்தைப் பேச்சினாலே தெரிந்து கொள்ளமுடியாது.
(ஜெகவீரன் உட்கார்ந்திருக்கும் நாற்காலியை உதைத்து, ஜெகவீரனைக் கீழே உருள் வைத்து இப்பப் புரியும், நம்ம முரட்டுத்தனம். ஜெகவீரர் எழுந்து தள்ளாடி நிற்கிறார்.)
ர: எங்கே அந்தப் படம்?
ஜெ : (திகிலடைந்து எந்தப் படம்?
ர: உங்க அப்பன் படம் ! ராஸ்கல்! ஏதாவது தெரியுமா?
சே : தேவர், பவானியைக் கொலை செய்தார் என்பதைக் காட்டும் படம்
ஜெ : என்னிடம் இல்லையே
ஜெ: தேனாம்
(ஜெமீன்தாரன் மேல்ரத்னம் பாய்ந்து தாக்கியபடி)
ர – படம் இல்லையா? இல்லையா ? இல்லே!
ஜெ : (திணறி) இருக்கு, தரமுடியாது.
[மேலும் தாக்கி]
ர: தர – தர முடியாது – முடியாதா – என்னிடமா சொல்கிறே. நான் யார் தெரியுமா? டாக்டரில்லே தெரியுதா?
அடிபட்ட ஜெகவீரன் அழுகுரலில் இருக்கு! இருக்குது ! கொடுக்கறேன் !
(ரத்னம் அடிப்பதை நிறுத்தியதும் சேகரைப் பார்த்து.)
ஜெ : டே சேகர்! ஒரு கொலைகாரப் பயலோடு வந்து கொள்ளையா அடிக்கறே.
(ரத்னம் ஜெமீன்தாரனைத் தாக்கி)
ர: டாக்டரிடம், என்னடா பேச்சு உதைக்கிறது நானு, அங்கே பாத்து உறுமறயே என்ன? எடுபடத்தை.
[பீரோ அருகே போகிறார். ரத்னம் பீரோவைத் திறக்கிறான். ஜெமீன்தாரன் நோட்டுக் கட்டு எடுத்து ரத்னத்திடம் கொடுத்து ]
ஜெ: இதோபார், இரண்டாயிரம் இருக்கு, என்னை விட்டுவிடு. இந்த டாக்டரு உனக்கு என்ன கொடுக்க முடியும். இவனைத் துரத்து.
ஈ: நிஜமா இரண்டாயிரம் இருக்கா?
ஜெ : சத்தியமா இன்னம் வேணுமானா, நாளைக்கு பாங்க்கியிலே வாங்கித் தருகிறேன். இந்த டாக்டர் உனக்கு இதற்கு மேலேயா பணம் கொடுப்பான்?
(ரத்னம் நோட்டுக் கட்டைப் பத்திரப்படுத்திக் கொள்கிறான்)
ஜெ : (வெற்றிச் சிரிப்புடன்) டே! சேகர்! பணம் கொடுத்தா, ஆள் அழைச்சிக்கிட்டு வந்தேன். என்னைக் கொள்ளை அடிக்க. உன்னாலே எவ்வளவுன்னு செலவு செய்ய முடியும். பார்த்தாயா இப்போ ?
(ரத்னம் பணத்தைப் பத்திரப்படுத்தியானதும்.)
ர: (ஜெமீன்தாரனைப் பார்த்து) எடுடா படத்தை எடு!
ஜெ : திகிலடைந்து பணம் கொடுத்தேனே!
ர: அதைத்தான் வாங்கிக்கொண்டேனே! பணம் நீயாக் கொடுத்தது. படம். நான் கேட்கறது இல்ல, எடு , படம்.
(தாக்குகிறான்.)
ஜெ : மோசக்காரா! கொள்ளைக்காரா!
ஜெகவீரனை, ரத்னம் பிடித்துக்கொள்ள சேகர், பீரோவை ஆராய்கிறான். படம் இல்லை,
திகைக்கிறான்.)
ர: (மேலும் தாக்கி) எங்கே படம்?
ஜெ : உயிர் போனாலும் சரி, படத்தைக் காட்ட முடியாது.
ர: அவ்வளவு பெரிய தைரியசாலியா நீ.
[வாயில் துணி அடைத்துக் கட்டிவிட்டு, கை விரல்களில் துணி சுற்றி, எண்ணெய் தோய்த்து நெருப்புக்குச்சி கிழித்து]
எத்தனை குடும்பங்களை நாசம் செய்திருப்பே, இந்தக் கைகளாலே கொளுத்தறேன். அப்ப உண்டாகுது பார் வேதனை. அதைவிட அதிகமான வேதனையை அந்தக் குடும்பமெல்லாம் அனுபவித்ததுன்னு தெரிந்துகொள்.
(ஜெகவீரன் கண்கள் மிரட்சி அடைகின்றன. தீக்குச்சிஅணைகிறது. வேறோர் குச்சி கொளுத்திக் கொண்டு)
ர: ஏழைகள் வயது எரியச் செய்தாயே, இப்ப பார், நெருப்புப் பிடிச்சதும், எவ்வளவு எரிச்சலா இருக்குன்னு தெரியும்.
(வேண்டாம்! வேண்டாம்! என்று ஜாடை காட்டுகிறான் ஜெகவீரன்.)
ர: தேவரை, சித்திரவதை செய்தவனல்லவா நீ!
[இதற்குள் சேகர் படத்தையும் காமிராவையும் கண்டுபி டித்துவிடுகிறான். ரத்னம், சேகரிடம் சென்று படத்தைப் பார்க்கிறான். ஜெகவீரன் பாய்ந்து சென்று ரத்னத்தின் கைத்துப்பாக்க்கி மேஜைமேல் இருந்ததை எடுத்து, ரத்னத்தை நோக்கிச் சுடுகிறான். ரத்னம், ஐயோ! என்று கூவிக்கொண்டு கீழே விழுகிறான். அந்த அலறலைக் கேட்டுப் பயந்த ஜெகவீரன், துப்பாக்கினைக் கீழே நழுவ விடுகிறான். சேகர். அதைப் பாய்ந்து எடுத்துக்கொள்கிறான். ரத்னத்தைப் பார்த்துவிட்டு, பிறகு துப்பாக்கியைக் காட்டி ஜெமீன்தாரனை மிரட்டுகிறான்.]
சே : கொலை! படுகொலை செய்துவிட்டாய் பார் உன்னைப் போலீசிலே! போலீஸ்! போலீஸ்!
(ஜெகவீரன் பேசமுடியவில்லை. வாய்க்கட்டை அவிழ்த்துக்கொண்டு)
ஜெ : அப்பா சேகர்! படம் உன் கைக்கு வந்துவிட்டது. சுசீலா உனக்கேதான். என் உயிரைக் காப்பாற்று. இவனை மறைத்து விடலாம். என் தோட்டத்துக்குப் பக்கத்திலே ஒரு அகழி இருக்கிறது. அதிலே போட்டுவிடலாம்.
சே : என் உத்தம நண்பனைக் கொலை செய்த உன்னையா விடுவேன். முடியாது.
ஜெ : (காலில் வீழ்ந்து) நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன் சேகர் என்னைக் காப்பாற்று.
சே : சொல்கிறபடி கேட்கிறாயா? ஜெ : கேட்கிறேன். சே : சரி! காகிதம் எடு, நான் சொல்கிறபடி எழுது.
(ஜெகவீரன் காகிதம் எடுத்து எழுத முயற்சிக்கிறான். கை நடுக்கம். எழுத முடியவில்லை ,
சேகர் எழுதுகிறான்.)
சே : இதிலே கையெழுத்துப் போடு. ஜெ : என்னப்பா எழுதியிருக்கிறார்?
சே : படிக்கிறேன் கேள்.
”நான் இன்றிரவு, வியாபார சம்பந்தமாக என்னிடம் பேசவந்த ரத்தினம் என்பவனைக் குடி வெறியால், துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டேன்.”
போடு கையெழுத்து. நீ . என்ன விஷயமாகவோ, சுசீலா விஷயமாகவோ, தேவர் விஷயமாகவோ ஏதாவது கேடு செய்ய நினைத்தால், இது சர்க்காரிடம் போய்ச் சேரும். நல்லபடி நடந்து கொண்டால். தப்பித்துக் கொள்ளலாம்.
சே : சேகர்! கையெழுத்தான பிறகு என்னைக் சே : காட்டிக்கொடுக்க மாட்டேன். போடு.
ஜெ : (போடுகிறான் கையெழுத்து.)
சே : உட்கார் நாற்காலியில்
[கண்களைக் கட்டி வாயில் துணி அடைத்து, ஜெமீன் தாரரை நாற்காலியோடு சேர்த்துக் கட்டிவிட்டு, ஒரு விநாடி கழித்து ரத்னத்தைத் தொட அவன் சந்தடியின்றி எழுந்திருக்கிறான் . இருவரும் வெளியே செல்கின்றனர்.]
காட்சி – 47
இடம் : பாதை.
இருப்போர் சேகர், ரத்னம்
சே: ரத்னம் பிணம் போலவே இருந்தாயே இவ்வளவு நேரம்.
ர: நமக்கு இது பழக்கம் டாக்டர். போலீசிலே எப்பவாவது சிக்கிக்கிட்டா, கொன்னு போடுவாங்கோ ஒரு அடி இரண்டு அடி விழுந்ததும், கீழே பிணம் போல் விழுந்துவிட்டா அடியிலே இருந்து தப்பிக்கலாம். மூச்சி பேச்சே இல்லாமே கிடப்பேன் கால் மணி நேரம் கூட அதெல்லாம் சாதகத்தாலே வர்றது.
சே: நான் பயந்தே போய்விட்டேன். துப்பாக்கி வெடிச்சுது. நீ கீழே விழுந்தே, என்பாடு அடிவயத்தையே கலக்கிவிட்டது. துப்பாக்கயைக் கைப்பற்றிக் கொண்ட பிறகு, உன்னைப் பார்க்கிறேன், நீ , கண் அடிக்கறே. அப்புறம் தான், எனக்குத் தைரியம் வந்தது. யோசனையும் பிறந்தது.
ர: சரியான வேலை செய்தே போ! இனி அந்தப் பயவாலாட்ட மாட்டான். ஆனா என்னைத்தான் கொன்று போட்டே
சே : ஆமாம் ரோந்து வருகிற ரத்னம் செத்துவிட்டான். இனிமே, சுசீலாவின் அண்ணன் வாழப்போகிறான். ஆமாம்! ரத்னம் துப்பாக்கி வெடிக்காதே, எப்படியோ?
ர : வெடிக்கும், சாகடிக்காது. சும்மா விளையாட்டுத் துப்பாக்கிதானே. ஆளை மிரட்டத்தானே அது. கொல்ல வேணும்னா , துப்பாக்கி வேணுமா? இரட்டைத் துப்பாக்கி இல்லை இதோ (இரு கரங்களையும் காட்டுகிறான் சேகர், அவன் முதுகில் தட்டிக் கொடுக்கிறான். இருவரும் போகின்றனர்)
காட்சி -48
இடம் : தேவர் வீடு.
இருப்போர் : தேவர்.
[தேவர் சோகமாக உட்கார்ந்திருக்கிறார். சேகர் உள்ளே நுழைந்து]
சே : ஒழிந்தது , உம்மை வாட்டி வதைத்த சனியன். சாபம் இல்லை இதோ படம் !
[போட்டோவைப் பெற்றுக்கொண்டு]
தே: ஆஹா! கிடைத்துவிட்டதா? என்னைக் கெடுக்க இருந்த படம் கிடைத்துவிட்டது. என் வாழ்விலே இருந்த பயம் ஒழிந்தது. சேகர் எப்படிக் கிடைத்தது?
சே : இதோ, ரத்னம் எல்லாம் சொல்வான்…
தே: (கோபத்துடன்) இந்தப் பயல்தானே சுசீலாவுடன்
சே : சுசீலா, பவானியின் மகள்! மாசற்றவள். முழு விவரம் இவன் சொல்வான். ரத்னம் யார் தெரியுமா? சொர்ணத்தின் மகன்! உங்கள் குமாரன்.
[தேவர் ரத்னம் ஆலிங்கனம்.]
காட்சி – 49
இடம் :- சுசீலா வீட்டு மாடி அறை.
இருப்போர் – சுசீலா. (பிறகு) சேகர்.
[சுசீலா விம்மிக்கொண்டிருக்கிறாள். சேகர் உள்ளே – நுழைந்து.]
சே : கண்ணே ! சுசீலா? அழாதே. நமது கஷ்டம் தீர்ந்து விட்டது. நமது காதலை இனி யாரும் தடுக்கமுடியாது. (அவளை அணைத்துக்கொண்டு) இனி நாம் சாக வேண்டியதில்லை.
(விஷ சீசாவை எடுத்துக் கீழே போட்டு உடைத்து.)
ஜெகவீரன் கட்டிய சூதுக்கோட்டை தூளாயிற்று சுசீலா ! உன் தந்தையை மிரட்ட அவன் வைத்திருந்த பயங்கர இரகசியம் – ஒழிந்தது. இனி ஜெமீன்தாரன் நாம் சொல்கிறபடி ஆடுவான்.
சு: என்ன? என்ன? ஆபத்து இல்லையா? வாழ்வு இருக்கிறதா? எனக்கா ?
சே : நாளைக்கு நமக்கு நிச்சயமாகிறது திருமணம். சு: அன்பே ! ஆருயிரே! என் மீது கொண்ட சந்தேகம் ?
சே : சந்தேகம், சஞ்சலம், சங்கடம், சதி, சோகம் யாவும் பஞ்சு பஞ்சாகப் பறந்தே போய்விட்டது. உத்தம நண்பன் ரத்தினம், உன் தந்தையுடன் பேசிக்கொண்டிருக்கிறான். அவன் உபகாரம் செய்ததாலேதான், ஜெமீன்தாரனை அடக்கமுடிந்தது.
சு: கண்ணாளா! நான் கனவு காணவில்லையே?
சே : (அவள் கன்னத்தைக் கிள்ளி ) இது கனவா?
(அவள் கரங்களை) முத்தமிட்டு இதுவும் கனவா?
சு : (ஆனந்தத்தால் கண்களை மூடிக்கொண்டு) இல்லை! வாழ்வு இன்ப வாழ்வு இது!
சே : ஒரு இரவு – ஒப்பற்ற இரவு சுசீலா ! இந்த இரவு இன்பத்தோடு தொடங்கிற்று, இடையிலே நமது வாழ்வையே வதைக்கும் பயங்கரம் நம்மைச் சூழ்ந்தது. அப்பப்பா! நினைத்தாலும் நெஞ்சு நடுங்குகிறது. ‘
சு : ஓர் இரவு என்றாலும் உள்ளத்தை ஓராயிரம் ஈட்டி கொண்டு குத்திவிட்டதே, அன்பா !
சே : ஆனால் துயரம் தொலைந்தது. விடியப்போகிறது, வாழ்விலும் மறுமலர்ச்சி உண்டாகப் போகிறது. சுசீலா! உன் அப்பாவின் வாழ்வை அவதிக்குள்ளாக்கிய இரகசியம் கண்டு பிடிக்கப்பட்டு, அவனுடைய கொட்டம் அடங்கிவிட்டது. ஒரு இரவிலே , எவ்வளவு மர்மங்கள், குடும்ப ரகசியங்கள் வெளிவந்தன. சுசீலா ரத்னம் யார் தெரியுமா? காதலனாக நடிக்கச் சொன்னாயே அந்தக் கள்ளனை…
சு: சொன்னானா உண்மையை சே : பூராவும்.ரத்னம் யார் தெரியுமா? உன் அண்ணன். உன் தகப்பனாரின் பாவலீலையின் விளைவு. சொர்ணம் என்ற மாதை தேவர் காதலித்தார், உன் அம்மாவைக் கலியாணம் செய்து கொள் வதற்கு முன்பு பிறகு கைவிட்டார். சொர்ணத்தின் மகள். ரத்னம்.
சு. என்ன ஆச்சரியம்!
சே : இன்னும் எவ்வளவோ இருக்கிறது. ஆயுட்கால் முழுதும் நாம் இந்த ஓர் இரவை மறக்கமுடியாது.
ஜன்னலருகே போய் நின்று கொண்டு வானத்தைப் பார்த்துவிட்டு சுசீலா! சந்திரன் எப்படி, மேகங்கள் சூழ்ந்தாலும், விரட்டி விட்டு, வெற்றியுடன் பிரகாசிக்கிறானோ, அதுபோல நமது காதலும் ஆபத்தை எல்லாம் வீழ்த்திவிட்டு வெற்றியுடன் ஜோதி யாக விளங்குகிறது. சந்திரன் கூடப் பொறாமைப்படுவான் சுசீலா !
(காதல் களிப்புடன் ”வானில் உறைமதியே” என்று பாடுகின்றனர்.)
– 1944
– ஓர் இரவு (நாடகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1995, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
நன்றி: https://www.projectmadurai.org/