ஒரு ராஜாவின் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 23, 2022
பார்வையிட்டோர்: 5,129 
 
 

வாழ்க்கை விசித்திரமானது. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி. எல்லாரும் ஒரே மாதிரி இருந்தால் வாழ்க்கேல ருசியிராது. உப்புச் சப்பில்லாமல் போயிரும். அஞ்சு விரலும் ஒரே மாதிரியே?

எங்கிட குடும்பத்திலையும் அஞ்சு பேர்தான். நான்தான் நடுவிலாள். எனக்குப் பின்னாலை ஒரு தம்பியும் ஒரு தங்கச்சியும். மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி எண்ட மாதிரித்தான் என்ர பாடு. சரி என்ர கதைய விடுவம்

நான் சொல்ல வெளிக்கிட்டது தம்பி தர்மராஜிட கதையை. எங்கள் எல்லாருக்கும் அவன் ராஜா. பேரிலதான் ராஜா. வாழ்க்கையில அவன் ஒரு கூஜா. எல்லாருக்கும் எடுபிடி அவன்தான்.

தம்பி ராசனை இப்ப நினைச்சாலும் அழுகைதான் வருகுது. உத்தியோகமும் பிழையில்லை; செல்வாக்கிலையும் குறை யில்லை. ஆனால் உள்ள குறை என்னெண்டால் ஓட்டைக் கையன். காசைச் சேமிக்கத் தெரியாத ஒரு செலவாளி. மச்சாள் எண்டு வந்து சேந்தவ அவனுக்கும் மேல. ஊதாரித் தனத்துக்கு உருப்படியான உதாரணமா அவவத்தான் சொல்லவேணும். வரவு எட்டணா எண்டால், செலவு பத்தணா.

அதனாலதான் கடைசிக் காலத்தில உத்தரிக்க வேண்டியதாப் போச்சுது. பாயும் படுக்கையுமா இழுபறிப்பட்டுக் கொண்டு கிடக்கிற அவன்ர கோலத்தை நினைக்க வயிறு பத்தி எரியுது.

குடி, கூத்தி சூது வாதெண்டு இருந்தவங்களுக்குக் கூட, கடைசிக் காலத்தில நல்ல நேரம் வந்திடூது. அப்பிடியான கெட்ட பழக்கங்கள் ஒண்டுமில்லாத பெடிக்கு ஏன் இந்தக் கதி வந்துதெண்டு கேட்டால் அவன் வாங்கி வந்த வரம் அந்த மாதிரி எண்டுதான் சொல்ல வேணும்..

குடும்பம் எண்டது கோவிலா இருக்க வேணும். அது குப்பைக் கூடையா இருந்தால்? அவனுக்கு வந்த முடிவுதான் எல்லாருக்கும். வெற்றி பெற்ற ஒவ்வொரு மனிசனுக்குப் பின்னாலையும் ஒரு பொம்பிளை இருப்பா எண்டு சொல்லுவினம். ஆனால் எங்கிட தம்பிக்குப் பின்னால ஒரு குட்டிச் சாத்தான் எல்லோ இருந்திருக்கு.

அந்தக் குட்டிச் சாத்தானைத் தேடிப் பிடிச்சதும் அவர்தான். அதில வேற யாரையும் பிழை சொல்ல ஏலாது. ஆனால் தம்பி அவவுக்குப் பின்னால போனதுக்கு எங்கிட அய்யாவும் ஒரு காரணம்.

எங்கிட வீட்டில எப்பவும் ‘ஆமி கவுண்மென்ற்’ தான். அய்யா வச்சது தான் சட்டம். ‘அடி உதவுமாய் போல அண்ணன் தம்பி உதவாயினம்’ எண்ட பழங்கால நம்பிக்கையில வீட்டிலையும் பிரம்பும் கையுமா குடும்பம் நடத்தினவர் தான் எங்கிட அய்யா. போதாக் குறைக்கு அவர் ஒரு பள்ளிக்கூட வாத்தியார் வேற. சொல்ல வேணுமே? பிள்ளயளப் பெத்தவேன்ர சாபம் எல்லாம் எங்களிலதான்.

ஏழு வயசில தேப்பனைத் திண்டிட்டு, சுவாமிமாரின்ர கருணையால கஷ்டப் பட்டுப் படிச்சு முன்னேறித் தமிழ்ச் சட்டம்பியாகி, அங்க இங்க எண்டிருக்கிற வேதப் பள்ளிக்கூடங்களில படிப்பிச்சு, கடைசியாக் கொழும்போட மாற்றலாகி வந்து பெரிய கொலிச்சில தமிழ்ப் பகுதிக்குப் பொறுப்பா இருந்த ஆளவர்.

பெரிய படிப்புப் படிச்சிருந்தாலும் உலக ஞானம் எண்டது மருந்துக்குக் கூட இல்லாத மனிசன். வீட்டிலையும் பிள்ளையளப் ‘படி படி’ எண்டு இருத்தி எழுப்பினதால ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு போக்கில வளர்ந்தது தான் கண்ட பலன்.

அம்மா பாவம். சாப்பாட்டில மயிர் கிடந்திட்டுதெண்டு சாப்பாட்டுப் பீங்கானைத் தூக்கிக் கடாசின மனுசனுக்கு முன்னால வாயைத் திறக்கேலுமே? ஏதோ நடக்கிறது நடக்கட்டும். தன்ர தலையெழுத்து அப்பிடியாக்குமெண்டு விதியில பாரத்தைப் போட்டிட்டு, ‘ஏசுவே இரட்சியும் ‘ எண்டு கடவுளிட்ட மண்டாடிக் கொண்டு, வாயிருந்தும் வாய் பேசாத உம்மாண்டி போல இருக்கப் பழகீற்ரா.

பெடியள் எண்டால் துடியாட்டம் இருக்கும்தானே? வீட்டில குழப்படிக்குக் குறைவில்லை. அதுவும் ரெட்டைச் சுழியங்கள் எண்டாலே வீடு ரெண்டு பட்டிடும். தம்பிக்கு மூண்டு சுழி. அதால மற்றவைக்கு ஒரு அடி விழுந்தால் அவனுக்கு Trible லா நடக்கும்.

ஐயாவின்ர கட்டுப்பாடும் கெடுபிடியும் ஆளை ஒரு சாடையான சண்டியனா மாத்தீற்றுது. சண்டியன் எண்டால் கையால காலாலை தான் காட்ட வேணுமெண்டில்லையே. எச்சில்தான் அவன்ர ஆயுதம். துப்பலுக்குப் பயந்தே சண்டை போட வாறவை எல்லாம் தூர விலகி ஓடீருவினம்.

படிப்பிக்கிற ‘மாஸ்டர்’மார் ஒவ்வொருத்தரும் நாளுக்கொரு முறைப்பாட்டோட வருவினம். தாய் தேப்பன்மார் படிப்பிக்கிற பள்ளிக்கூடங்களில படிக்கிற பிள்ளையளுக்கு இதுதான் பெரிய வில்லங்கம். தோலை உரிக்கச் சொல்லி அவையளுக்கு அய்யாவும் ‘பேர்மிஷன்’ குடுத்திடுவேர். பிறகென்ன? வீட்டிலையும் பூசை நடக்கும்; பள்ளிக்கூடத்திலையும் அதுக்குப் பஞ்சமிராது.

நோஞ்சான் உடம்பு. தாங்காதுதான். ஆனாலும் தாங்கியிருக்குது. பத்து வயசுப் பெடியனுக்கு மனசளவில அது எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கு மெண்டு ஒருத்தரும் யோசிச்சதாத் தெரியேல்லை.

அய்யாவுக்குப் பயந்து, அம்மாவும் ஆறுதல் சொல்லி அரவணைக்கக் கொள்ள வரமாட்டா. வாழ்க்கையில போதுமான வசதி இருந்துது. படிக்கக் கொள்ளத் தேவையானது எல்லாம் இருந்துது. ஆனாலும் அன்பு செய்ய ஒரு ஆளில்லாத வாழ்க்கையில என்ன இருந்தென்ன?

பள்ளிக்கூடத்திலையும் மாஸ்டர் முதற் கொண்டு எல்லாருமே Torture தந்தபடிதான். தீண்டத் தகாத வியாதிக்காரனைத் தள்ளி வைக்குமாப் போல பிறிம்பு காட்டி அவனுக்குத் தனி மேசை கதிரை போட்டு இருத்தி வச்சாப் பிறகென்ன? அவனைப் பாத்து நக்கலாச் சிரிக்கிறதும் பட்டம் தெளிச்சுப் பகிடி பண்றதும், ஏத்தி விட்டுக் கூத்துப் பாக்கிறதும், பதிலுக்கு அவன் சொண்டைக் கடிச்சு பல்லை நெறுமி முழிசிப் பாக்கிறதைப் பாத்துக் கெக்கெட்டமிட்டுச் சிரிச்சுக் கூக்காட்டிறதும் மற்றப் பெடியளுக்கு ஒரு முசுப்பாத்தி.

அவன்ர ஆற்றாமையின்ர வெளிப்பாடு கையில இருக்கிற பென்சில்ல தான் வந்து விடியும். மேசையில பென்சிலால குத்து குத்தெண்டு குத்தி, அதின்ர கூரை மொட்டையாக்கி, கிறுக்கு கிறுக்கெண்டு எதையாவது கிறுக்கித் தன்ர கோபத் துக்கு வடிகால் தேடப் பார்க்கும் அந்த சின்னப் பெடியின்ர ஆதங்கத்தை ஆருமே விளங்கிக் கொள்ளேல்லை.

சிலநேரங்களில உம்மிட தம்பி இப்பிடிச் செய்தான் அப்பிடிச் செய்தான் எண்டு முறைப்பாடுகள் எண்னிட்டையும் வரும். எனக்கும் வெக்கமாத் தான் இருக்கும். ஆனாலும் நான் அதுகளைக் கணக்கெடுக்கிறதில்லை. அம்மாட்ட வந்து சொல்றதோட சரி.

ஒருக்கா இப்பிடித்தான் அஞ்சாம் ஆறாம் வகுப்பில அவன் படிக்கேக்க ஆரோ ஒரு மாஸ்டர் தடியோட அடிக்கத் துரத்த, அவரை உச்சிப் போட்டுப் போய் . பள்ளிக்கூடத்தின்ர நடுவில ஆதரவுக் கரம் நீட்டுமாப் போல விழுதுவிட்டு சடை விரிச்சுக் கொண்டு நிண்ட ஆலமரத்தின்ர உச்சாணிக் கொப்புக்கேறி வீராதி வீரனைப் போல குந்தியிருக்க, பள்ளிக்கூட ‘இன்ரவெல் ‘ மணியடிக்க, முழுப் பள்ளிக்கூடமுமே அந்த ‘குரங்குச் சேட்டை’ யைப் பாத்துக் கெக்கலித்துச் சிரிச்சதும் அதுக்காக வீட்டில ஐயாட்ட பிரப்பம் தடியால வாங்கிக் கட்டினதும் அவன்ர பாலப் பருவக் கூத்துகளில மறக்க முடியாத ஒண்டுதான்.

அய்யா வீட்டில இல்லாத நேரம் அவரைத் தேடிக் கொண்டு வீட்டை வந்த மற்றொரு ‘அடி’ மாஸ்டருக்குப் பாடம் படிப்பிக்கவெண்டு உள்ள குசினிக்க ஓடிப் போய் விறகுக் கட்டையோட வந்து நிண்ட பெடியப் பாத்து, தனக்கு இப்பிடியொரு தடாலடி வரவேற்புக் கிடைக்கக் கூடுமெண்டு கனவிலயும் எதிர்பார்த்திராத அந்த மனிசன் குதிகால் பிடரீல அடிபட ஓடித் தப்பினதும் சுவாரஸ்யமான மற்றொரு கதை. அதுக்காக அய்யா அவனை நாள் முழுக்க பட்டினி போட வச்சதெல்லாம் அவனைப் பொறுத்த மட்டில பச்சைத் தண்ணிதான்.

வீட்டில தம்பிக்கு அடி விழுந்தால் நாங்கள் தப்பினம். Once at a time எண்டதுதான் அய்யாட ‘பொலிசி’. அதால தம்பியிட குழப்படிக்கு முன்னால எங்கிட குழப்படியள் அடிபட்டுப் போயிடும். பெரும்பாலும் எங்களுக்கு விழ வேண்டிய அடியளை எல்லாம் விரும்பியோ விரும்பாமலோ தானே வாங்கி எங்களைக் காப்பாத்தினது தம்பிதான். இப்ப இரக்கப் படுற நாங்கள் கூட அப்ப சுயநலமாத்தான் இருந்திட்டம்.

இப்பிடியெல்லாமிருந்த தர்மராசா ஏ ‘லெவலைத் தொட்டது பெரிய விஷ யம்தான். மேல் வகுப்புக்குப் போகப் போக தானும் வெண்டு காட்ட வேணு மெண்ட வைராக்கியமும் வெறியும் அவனுக்குள்ள வளர்ந்திருக்கு.

அன்புக்கும் ஆதரவுக்கும் அங்கீகாரத்துக்கும் ஏங்கிக் கொண்டிருந்த அவன் காதலில விழுந்ததும் அதாலதான். அய்யா ஒரு பக்கம் எண்டால் எங்கிட வீட்டுச் சூழலும் இன்னொரு முக்கிய காரணம். எங்கிட வீட்டை அம்மாவைத் தேடி அவ தரவளி பெண்டுகள் ஆரும் வந்தால் சரி. மற்றப்படி வேற பெண்டுகள் ஆரும் எட்டியும் பாராயினம். எங்களுக்கு மச்சாள் மாரெண்டு உறவு முறையில அஞ்சாறு பெட்டையள் இருந்தாலும் தொடுசல் குறைவு. அதுகள் எல்லாம் ஊரோட. அத்தி பூத்தாப் போல எப்பயெண்டாலும் காணுறதுதான்.

நாங்கள் எல்லாரும் படிச்சதும் Boys School லில. பெண்வாசனை தெரியாத ‘ரிஷ்ய ஸ்ருங்கர்’களைப் போல தான் எங்கிட வளர்ப்பும். யாழ்ப்பாணத்தார் பொம்பிளப் பிள்ளையளை வேலி அடைச்சுக் காபந்து பண்ணி வளர்க்குமாப் போல கொழும்பு மாநகரில நாலு சுவருக்க பெடியளக் ‘கொன்றோல்’ பண்ணி அய்யா வளர்த்துப் பாத்தார்.

ஆனா வயசு வந்தால் எல்லாம் தானா வரும்தானே? அய்யா தமிழ் தமிழ் எண்டு அதுக்குப் பின்னால திரிஞ்சதால, தொத்து வியாதி போல எங்கள் எல்லாருக்கும் ‘தமிழ்ப்பனி ‘ கொஞ்சம் கூட. மேடைப்பேச்சு, .கதை கட்டுரை எழுதிறதெண்டு தம்பிக்கும் அதில பயங்கர ஈடுபாடு.

அந்தக் காலத்தில இருந்தது ஒரு றேடியோதான். றேடியோ சிலோன். அதில ஆற்றயும் பேர் வாறதே பெரிய விஷயம். குரல் வாறதெண்டால்?சொல்லத் தேவையில்லை. அந்த ரேடியோவில Relief Announcer ராத் தம்பி எப்பிடியோ எடுபட்டிட்டான். சினிமாப் பாட்டெண்டால் அவனுக்கு ஒரே பைத்தியம். தியாகராஜ பாகவதரில துவங்கி சிவாஜி எம்ஜியார் எண்டு உள்ள நடிகன்கள் எல்லாரின்ரையும் பாட்டுப் புத்தகங்களா வாங்கியடுக்கி வீடெல்லாம் குப்பையாக்கி வச்சிருப்பான். நான்தான் எப்பெண்டாலும் அதுகளை எடுத்து அடுக்கி வைப்பன். அதுகளை எல்லாம் தூக்கி எரிக்கப் போறன் எண்டு அய்யா ஒருநாள் பயங்கரமாச் சத்தம் போட்டேர். எண்டாலும் நல்லவேளை எரிக் கேல்லை. எப்பிடியோ மனம் மாறி, அவர் தன்ர சொந்த அரசியலில மூழ்கீற்றேர்

பழைய பாட்டுகளைத் தொகுத்து நிகழ்ச்சியைச் சுவாரஸ்யமாச் செய்யிறதில தம்பி விண்ணன். அந்தத் திறமை அவனுக்குள்ளை எங்க மறைஞ்சிருந்து தெண்டு எங்களுக்கே ஆச்சரியம்தான். வீட்டில உம்மாண்டியா இருக்கிற அவன் ரேடியோவில் வந்தால் காணும். விளாசித் தள்ளிப் போடுவான். அய்யாவுக்கும் அதில உள்ளூரச் சந்தோசம்தான். ஆனால் வெளீல காட்டிக் கொள்ள மாட்டேர்.

அங்கதான் – அந்த ரேடியோவிலதான், அவற்ர காதலும் கனியத் துவங்கிச்சுது. தனக்கேற்ற ஒரு ராணிய ராஜா கண்டு பிடிச்சது – Sorry – காணாமல் பிடிச்சது அங்கதான். காணாமலே காதல் கொள்ளிற கதையளெல்லாம் சினிமால வந்தது இப்ப கிட்டடீல தான். அவற்ர வாழ்க்கையில அது அப்பவே நடந்திட்டுது.

அந்த நிகழ்ச்சிக்கு ஆக்கங்களை எழுதிக் கொண்டிருந்த ஒரு குமரி அவன்ர குரலில மயங்க இவன் அவவின்ர எழுத்தில கிறங்க காதல் நெருப்புப் பத்தீற்றுது. ஆளுக்காள் பேனா நண்பர்களா மாறிக் காதலில விழுந்திட்டினம்

அவன் போட்ட பாட்டைப் பற்றி, அதை அவன் சொன்ன விதத்தைப் பற்றித் தாளிச்சுத் தாளிச்சு அவ எழுதுவா. இதுக்கெண்டு விசேஷமான பேப்பர் வாங்கி. அதிலை ‘சென்ற்’ரத் தெளிச்சு, கண்ணில ஒத்திக் கொள்ளுமாய் போல முத்து முத்தான கையெழுத்தில எழுதுவா. தம்பி பொக்கிஷமா கொண்டாந்து ஒளிச்சு வைக்கிறதை நாங்கள் கள்ளமா எடுத்து வாசிச்சுப் போடுவம்.

‘அன்பே நீ அங்கே நான் இங்கே..வாழ்ந்தால் இன்பம் காண்பதும் எங்கே?…. எண்டும்
உன்னை நினைக்கையிலே கண்ணே..எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி..எண்டும்
அன்பே வா அழைக்கின்ற தெந்தன் மூச்சே..’எண்டும்

உடுமலையாரும் பட்டுக்கோட்டையாரும் கம்பதாசனும் எடுத்துக் குடுக்க , பிரிவுத் துயரைப் பகிரும் பாடல்களால தூது நடக்க, இப்பிடியே ஐந்தாறு ஆண்டுகள் அவர்களின் காதல் நாடகம் தடையின்றித் தொடர்ந்தது.

இதுக்கிடேல தம்பியும் படிச்சுக் கிடிச்சு ஒரு மாதிரிச் சோதினையள் பாஸ் பண்ணிப் பட்டதாரி ஆசிரியரா எடுபட்டு வேலையிலயும் கொழுவினாப் போல நல்ல நல்ல இடங்களில இருந்தெல்லாம் சம்பந்தங்கள் பேசிவரத் துவங்கிச்சுது.

அப்பத்தான் அம்மட்டு நாளும் ரகசியமா இருந்து வந்த அவற்ற காதல் விஷயமும் மெல்லமா வெளீல வெளிக்கிட்டு வந்துது. அய்யா துள்ளியடிக்கப் போறேராக்கும் எண்டு பாத்தால் அதிசயமா அவர் பம்மீற்றேர். போதாக் குறைக்கு பச்சைக் கொடிய வேற பறத்திக் காட்டீற்ரேர்.

அய்யா இப்பிடித்தான். அவரைச் சரியா விளங்கிக் கொள்ள ஏலாது. சில விஷயங்களில பழசைத் தூக்கிப் பிடிக்காமல் முற்போக்காயும் முடிவெடுப்பேர். பெரியண்ணன் மச்சாளைக் காதலிச்ச நேரம் அதை முழு மூச்சா எதிர்த்துக் கெம்பினவர் தம்பியின்ர விஷயத்தில விட்டுக் குடுத்திட்டேர். இதுலயும் அவர் எதிர்த்து நிண்டிருந்தால் நல்லதாய் போயிருக்குமெண்டு இப்ப நினைக்க வேண்டிக் கிடக்கு. கலியாணத்துக்கு முன்னால கொஞ்சக் காலம் பாட்டுக் கூத்து எண்டு வீடு ‘பம்பலா’ இருந்துது. தம்பியோட பகிடிவிட்டு முசுப்பாத்தி பண்ணுவம். ம்….அதெல்லாம் ஒரு காலம். அய்யாட கெடுபிடியள் குறைஞ்சு தம்பியும் கை நிறையச் சம்பாதிச்சு சந்தோஷமாயிருந்த இனிமையான காலம்.

கொஞ்சக் காலத்துக்குப் பிறகு மச்சாள் வீட்டாருக்கு இந்தக் கலியாணத்தில விருப்பமில்லையாம் எண்டும் ஒரு கதை அடிபட்டுது. நாங்கள் வேதக்காறர்; அவையள் சைவம். அதோட செவ்வாய் தோஷம் அதிதெண்டு சில நொண்டிச் சாட்டுகள். ஆனால் உண்மையில விஷயம் வேற மாதிரி. அவையளின்ர குடும்பத்தில அஞ்சும் பொம்பிளைப் பிள்ளையள். மச்சாள் நாலாவது. மச்சாளுக்கு முன்னால ரெண்டு அக்காமார் முடியாமல் இருந்திச்சினம். அவையள் முடிச்சாப் பிறகுதான் இவவுக்கு ‘லைன் கிளியர்’ஆகும் எண்டது தான் ‘சிற்றுவேஷன் ‘.

அதால, தன்னைக் கட்டிறதெண்டால் அஞ்சாறு வரிசம் காத்திருக்க வேணு மெண்டு மச்சாள் ‘கொண்டிஷன்’ போட்டுக் கடிதமெழுதினா. காத்திருந்தேர் ; காத்திருந்தேர் ; காலமெல்லாம் காத்திருந்தேர். சீதன பாதனமெண்டு அஞ்சேம் செலவில்லாமல் ஒரு கவுண்மென்ற் மாப்பிளை கிடைக்கிறதெண்டால் அந்தக் காலத்தில சும்மாவே? ‘பம்பர் சுவீப்பெல்லோ?’ என்ன நடந்தாலும் தம்பி விட்டுக் குடுக்க மாட்டான் எண்ட அவன்ர ‘வீக் பொயின்ர’ப் பிடிச்சுக்க கொண்டு, தாங்களும் ஒண்டும் குறைஞ்சுவை இல்லை எண்ட மாதிரிப் பவுசு காட்டி உதார் விட்டவை பிறகொரு மாதிரி இறங்கி வருமாப் போல பாவலாக் காட்டி மடக்கீற்றினம்.

கடைசீல ஒருமாதிரிக் கலியாணமும் முற்றாச்சுது. சொந்தக்காறர் அண்ணன் தம்பி எண்டொருத்தருக்கும் சொல்லாமல், கலியாணததைக் ‘கமுக்கமா’ நடத்த வேணுமெண்டு மச்சாள் ‘ஓடர்’ போட்டா. மறுப்பேதும் சொல்லாமல் தம்பி அதுக்கும் மண்டைய மண்டைய ஆட்டினான்.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஒண்டு எங்கிட வீட்டில இருந்தது. சின்னன்ல தங்கச்சி விளையாடின விளையாட்டுச் சாமான்களில அதுவு மொண்டு. அதைப் போலத்தான் ஆகப் போறான் எண்டு அப்ப எனக்குத் தெரியாது. ஆனால் கலியாணத்துக்கு முன்னாலையே தலையாட்டத் துவங்கின அவன் பிறகு காலம் முழுக்க மச்சாளின்ர சொல்லுக்குத் தலையாட்டிற பொம்மையா மாறிப் போனதுதான் பெரிய சோகம்.

கலியாணத்தைத் தான் சிறப்பாச் செய்யேல்லை. ‘ரிசெப்ஷனை எண்டாலும் நாலு பேருக்குச் சொல்லி எழுப்பமாச் செய்வமெண்டு எங்கிட வீட்டுக்காரர் துவங்கி ‘காட்’டடிச்சு கொழும்பில ஹோல் பிடிச்சு ‘வெடிங் கேக்’கிலயிருந்து பலகாரம் பணியாரம் எல்லாத்துக்கும் ஓடர் குடுத்து ‘கிறாண்டா ‘ செய்ய வெளிக்கிடடினம்.

அண்டைக்கெண்டு பாத்து அந்த மனிசன் – மச்சாள்ன்ர பெரியப்பர் மண்டையப் போட்டிட்டேர். பிறகென்ன, தம்பியும் மச்சாளும் குழறியடிச்சுக் கொண்டு செத்தவீடு நடத்தப் போயிட்டினம் கடைசி நேரத்தில் இப்பிடி நடந்தால் என்ன செய்யிறது? ஓடர் குடுத்த சாமான்களைக் குப்பேல கொட்டிப் போட்டு வாற ஆக்களை [Very sorry – எண்டு ‘ரற்ரா’ காட்டிப்] போகச் சொல்லிக் கலைச்சு விடுறதே? மனிசன்ர முகத்தைக்கூட நாங்கள் ஒழுங்காப் பாத்ததில்லை. ஆனாலும் இப்பிடி ஒரு பொறுத்த நேரத்தில மனிசன் போய்ச் சேந்த துக்கத்ததைவிட எங்களுக்கெல்லாம் உள்ளுக்க ஒரு சொல்ல முடியாத ஆத்திரம்தான் அவரில. என்ன செய்யிறது?

நடக்கத் துவங்கின ரிஸப்ஷனை குறையில்லாமல் நடத்தி முடிச்சம். எல்லாம் நல்லபடியா நடந்து முடிஞ்சாப் பிறகுதான் மெல்லமா விஷயத்தை வெளீலவிட்டம். மாப்பிளை பொம்பிளை இல்லாமல் ரிசப்ஷன் கொண்டாடின முதல் ஆக்கள் நாங்களாத்தான் இருக்கும்.

இந்தச் சகுனம் – சாத்திரம் எல்லாம் பாக்காத உத்தம வேதக்காறரா அய்யா இருந்தது – மச்சாளின்ர பகுதியாருக்கு வாசியாப் போட்டுது. அவயளப் போல சைவக்காறரா நாங்கள் இருந்திருந்தால் உதுதான் சாட்டெண்டு நடந்த கலியாணத்தையே [குழப்பி] வெட்டி விட்டிருப்பம்.

தமிழ்ப் புலமையும் மேடேலை ஏறிப் பேசிற கெட்டித்தனமும் இருக்கிற பொம்பிளைதான் தனக்கு மனிசியா வர வேணுமெண்டது ஐயாவின்ர அந்தக்கால எதிர்பார்ப்பு. ஆனால் அம்மா விஷயத்தில அது பிழைச்சுப் போச்சுது. இலக்கிய இலக்கணம் எல்லாம் படிச்சு, ஆசிரிய கலாசாலையை மிதிச்சு வெளீல வந்தவ தான் அவவும். ஆனால் மேடேல எல்லாம் ஏறி வெளுத்து வாங்கிற மாதிரியான ஆளா அவ இருக்கேல்லை. சமய பக்தியும் சமையல் பத்தியும்தான் அவவுக்குத் தெரிஞ்ச சங்கதியள். பர்த்தாவுக்கேற்ற பதிவிரதையான பழங்காலப் பொம்பிளை அவ. தமிழ்ப் பண்பாட்டில ஊறின அமைதியும் அடக்கமுமான அவவின்ர அருமையான குணம் அய்யாவுக்கு விளங்கேல்லை. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை எண்ட மாதிரி, கற்பனை உலகில வாழ்ந்த அவருக்குப் புது மருமகளின்ர மேடைப் பேச்சுத் திறமையும் பட்டதாரி எண்ட பெருமையும் கண்ணை மறைச்சுப் போட்டது விதியின்ர விளையாட்டுத்தான்.

ஐயாவின்ர அடக்குமுறையில இருந்து வெளியில வரக் கலியாணம் தான் ஒரே வழி எண்டு நம்பின தம்பியின்ர நிலைமை அடுப்புச் சட்டீக்கை இருந்து எரியிற நெருப்புக்க விழுந்த மோட்டாமையின்ர கதி போலத்தான் ஆகீற்றுது.

பொம்பிளையள் ரெண்டு வகை. ஒண்டிலை புருசனுக்கு அடங்கிப் போய் அடிமையா ஆயிருவினம். அல்லது மனிசனை அடக்கி இருத்தி ‘பெட்டிக் கோட் கவண்மென்ற் ‘ நடத்துவினம். ஆனால் ரெண்டு வகை ஆக்களும் அதை ஒத்துக் கொள்ளாயினம். தாங்கள் அந்த மாதிரி இல்லை எண்டுதான் வெளீல காட்டிக் கொள்ளுவினம்.

தம்பியும் தன்னை அறியாமலே கொஞ்சம் கொஞ்சமா மச்சாள்ன்ர பிடீக்குள்ள மாட்டுப் பட்டிட்டான். சொந்த முயற்சியால படிச்சுப் பட்டதாரியாகிப் பிறகு அரசாங்கப் பாடசாலை அதிபராயும் வாற அளவுக்குத் திறமைசாலியா இருந்த அவனை, அந்த மாதிரி அவன் எழும்பிறதுக்குத் தன்னை முடிச்சது தான் காரணம் எண்ட மாதிரி மச்சாள் நினைக்கப் பண்ணீற்றா. அது அவவின்ர கெட்டித்தனம்தான்.

மூளைச்சலவை செய்யிறது எப்பிடி எண்டு ஆரும் அவவிட்டத்தான் கேட்டுப் படிக்க வேணும். பாடம் படிப்பிக்கிறதிலயம், மற்றவேக்கு ‘அட்வைஸ்’ பண்றதிலயும் அவவுக்கு வலு விருப்பம். தான் பீ ஏ படிச்சவ, அதால மற்ற எல்லாரையும் விடத் தான் மேல எண்டொரு ‘கெப்பர்’ குணமும் அவவுக்கு. [என்னமோ தெரியேல்லை. கலைப் பட்டதாரியள் கன பேருக்கு உந்த வருத்தம் இருக்குது.] அறப்படிச்ச பல்லியப் போல அறவுரையும் அறிவுரையும் சொல்லிச் சொல்லியே ஆக்களின்ர தலயச் சுத்துறதில ‘நம்பர் வண்’. ‘தன் முதுகு ஒரு போதும் தனக்கேதான் தெரியாதாம். பிறகென்றால் நையாண்டி பேசுகிற ஆக்கள்’ எண்டு இவையளப் போல ஆக்களைத்தான் சொல்லுறவை.

ஆனால் கலியாணம் முடிச்ச புதுசுல மச்சாள் எங்களோட பழகின மாதிரீல நாங்களும் தான் விழுந்து போனம். கதையில தேனும் பாலும் வழிஞ்சு ஒழுகும்; நடையுடை பாவனையள் கண்ணகியும் சானகியும் கூடப் பிறந்தவையோ எண்டு கேக்க வைக்கும்

ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது எண்டுவினம். அதுபோலத்தான் அவவும். படிப்பைத் தவிர ஒரு சாம்பலும் தெரியாது. வீட்டை ஒதுக்கி வடிவா வச்சி ருக்கத் தெரியாது. போட்டது போட்ட இடத்தில. வீட்டுக்க வாற ஒரு கடதாசி குண்டூசி தன்னும் வெளீல போகாது. பிச்சைக்காரன் கோணிப்பையுக்க பொதிஞ்சு வச்சிருக்குமாப் போல எல்லாத்தையும் அங்க அங்க பொதிஞ்சு வச்சிருப்பா. எல்லாம் தேவை எண்டு கட்டிப் பிடிச்சுக் கொண்டு ஊர் ஊரா வீடு வீடாக் காவிக் கொண்டு திரியிறதுதான் அவவின்ர பொழுது போக்கு.

எல்லாருக்கும் வாற மாதிரியான வருத்தம் துன்பங்கள் தான் அவயளுக்கும் வந்துது. குடும்பத்தில மொத்தம் மூண்டு பேர்தான். ஒரே மகள். அவளும் பெரிசா ஒண்டும் வெட்டி விழுத்தேல்லை. முக்கித்தக்கித். தான் ஏ எல்லைப் பாஸ் பண்ணினாள்.

அவையோட ஒத்தவை எல்லாம் கொழும்பில வீடு வளவு கார் எண்டு எங்கயோ போய் நிக்க, முடிச்சு முப்பது வருஷம் கடந்தாப் பிறகும், ரெண்டு பேரும் உழைச்சும் ஒரு சதம் தன்னும் மிச்சம் பிடிக்க ஏலாத ஏமலாந்தியளா முழிசிக் கொண்டு நிண்டதுதான் அவயளிட சாதனை.

தம்பி ஒரு காலத்தில .சொந்தக்காறருக்கு உதவி ஒத்தாசை எண்டு செய்த வன்தான். ஆனால் அவையள் கொஞ்சம் வசதியா இருந்த காலத்தில, அண்ணன் தங்கச்சி எண்டு நாங்கள் போனால், எங்க எதையாவது தண்டிக் கொண்டு போயிருவமோ எண்ட பயத்தில நசுக்கிடாமல் காரியங்கள் பாத்து எங்களை அண்ட விடாமல் காய் வெட்டி விடுறதில வலு விண்ணி எங்கிட மச்சாள்,

‘குடை நிழலிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடை மெலிந்தோரூர் நண்ணினும் நண்ணுவர்’ எண்டு, இலக்கியத்தில மெத்தப் படிச்ச மேதாவி – மச்சாள், அப்படியான ஒரு நிலைமை தங்களுக்கும் வரக் கூடுமெண்டு கனவு கூடக் கண்டிருக்க மாட்டா. ஆனால் அவையளின்ர வாழ்க்கை எண்ட புத்தகத்தில அப்பிடியும் ஒரு அத்தியாயம் வரத்தான் செய்துது.

படிக்காத பட்டிக்காட்டுப் பொம்பிளையள் கூட கோழி வளத்து முட்டையை வித்து, தையலைத் தச்சு தொட்டாட்டு வேலையள் செய்து தங்கிட திறமையால பிள்ளையள டொக்டரா என்ஜீனியறா படிப்பிச்சு எடுத்துப் போடுதுகள். மெத்தப் படிச்சுக் கிழிச்சு மச்சாளுக்கு அப்பிடி ஏலேல்லை.

வேலை ஒண்டும் கிடைக்கேல்லை. வெளிநாடு போக விருப்பம். அதுக்கு ஒரே வழி கல்யாணம்தான் எண்டு பெட்டை நினைச்சுது. அதால வெளி நாட்டு மாப்பிள்ளையைத்தான் கட்டுவன் எண்டு பெட்டை ஒற்றக் காலில நிண்டாள். ஆரையோ எவரையோ பிடிச்சு குடிகிடி இல்லாத திறம் பெடியா ஒண்டைத் தேடித் பிடிச்சினம். வெளிநாட்டு மாப்பிள்ளை எண்டால் சும்மாவே? வெறும் கை முழம் போடுமே? சீதனமா பத்து லட்சம் கேட்டினமாம். அந்த இந்தக் கலியாணச் செலவெண்டு மொத்தமா பதினைஞ்சு லட்சம் தேவைப்பட்டுது

ஆனால். வைப்புச் செப்பெண்டு ஒண்டும் இல்லாதவை வெளிநாட்டுக்கனுப்ப ஆசைப்பட்டாலும் காசுக்கு எங்க போறது? கடனக் கிடன வாங்கிறதெண்டாலும் லட்சக்கணக்கில தர ஆர் இருக்கினம்?

வெளிநாடு போனவையளைப் பற்றி இளப்பமா வாய் வளைச்ச மச்சாளுக்கு இப்பதான் வெளிநாட்டுக் காசின்ர அருமை விளங்கிச்சுது போல. வெளிநாட் டவையளிட்டக் காசு சும்மா கொட்டிக் கிடக்குதாக்குமெண்டு எங்கிட ஊர்ல இருக்கிறவை நினக்குமாப் போலத்தான் அவவும் நினைச்சிருக்கிறா.

ஒரே தங்கச்சி எண்டிருந்தவ எங்கிட கையளை எதிர்பாராமல் மஞ்சூரியா நைஜீரியா எண்டு அலைஞ்சுலைஞ்சு ஒரு மாதிரியா யூகேயில போய்ச் செட்டில் ஆகியிருந்தா. அவவிட்டப் போய் வாய் கூசாமல் கடனாத்தா எண்டு தம்பியைக் கேக்க வச்சுப் போட்டா. குமர் காரியம். மறுக்கிறது வடிவில்லை எண்டு போட்டு உள்ளதெல்லாத்தையும் வழிச்சுத் துடைச்சு தங்கச்சியும் எப்பிடியோ காசைப் பிரட்டி அனுப்பி வச்சிட்டுது. கலியாண வீட்டைப் பெரிய எடுப்பாச் செய்தவை காசு வந்த ரிஷிமூலத்தைப் பற்றி மூச்சும் விடேல்லை. . ‘இரவல் சீலையில இது நல்ல கொய்யகமாம்’ எண்டு விஷயம் தெரிஞ்சவை தங்களுக்க குசுகுசுத்தினமாம்.

அம்பது அறுபது பேரைத் தனக்கு கீழ வச்சு வேலை வாங்கின பிரிஞ்சிப்பல், வீட்டு வேலைக்கொரு ஆளை வச்சிருக்க வக்கில்லாமல், சாமான் வாங்கச் சந்தைக்கு அலையிறதும் மனிசீட ‘பெற்றிக்கோட்ட’. அயர்ண் பண்ணி வைக்க அந்தரப் படுறதும் எண்டு சம்பளமில்லாத வேலைக்காரனா மாறிப் போனேர்.

கலியாணம் முடிச்சு அவுஸ்திரேலியாவுக்குப் போய்ப் பறிஞ்ச பெட்டை போன சுறுக்கிலேயே திரும்பி வந்திட்டாள். புருசனோட ஒத்துக் கொள்ளேல்லையாம். எப்பிடி ஒத்துக் கொள்ளும்? தாயைப் போல பிள்ளை இருக்கலாம். தேப்பனைப் போல புருஷன் கிடைப்பானோ? கிடைச்சிருந்தால் ஒத்துக் கொண்டிருக்கும். . இனித் தாயும் மேளுமாச் சேந்து பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுக்கப் போயினமாம்.

உரிமையில்லாமல் மூலையில கிடக்கிற தம்பி தர்மராசா தான் பாவம். இப்ப பாத்தியள் எண்டால் ஆளை அடையாளம் காண மாட்டியள். ஒட்டி உலர்ந்து துரும்பா இளைச்சுப் போனான். ‘பட்ட காலில படும்…’ என்னுமாப் போல நீரிழிவு எண்ட பணக்கார வியாதி வந்து ஆளைப் படுக்கையில தள்ளிப் போட்டுது. அவனைக் கவனிக்க மச்சாளுக்கு நேரமில்லையாம்.

அம்மணிக்கு. ஊர்த் துளாபாரம் பாக்கவும் கோயில் குளமெண்டு சுத்தி வரவும்தான் நேரம் சரி. இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாதாம். அது போலத் தான் அவ செய்த திரிசமன் வேலையள் ஒண்டும் தம்பிக்குத் தெரிஞ்சிருக்கேல்லை. அவனைப் பொறுத்த மட்டில அவ ஒரு ‘தேடக் கிடைக்காத திரவியம்’

அவ இப்பவும் நல்லாத்தான் இருக்கிறா. அவவக் குழப்பாதீங்கோ. தமிழ்ச் சங்கத்துல ஏதோ கூட்டமாம். அவதான் தலைமையாம். நேரத்துக்குப் போகாட்டில் மரியாதை இல்லை எல்லே. அதுதான் அவசரமா வெளிக்கிடுறா. அவவப் பொறுத்த மட்டில எல்லாம் நல்லபடியாத்தான் நடக்குது. எனக்குத்தான் என்னவோ பிழைபோலக் கிடக்குது.

‘தர்மம் வெல்லும்’ என்ற தார்மீக உண்மை செல்லாக் காசாகிப் போக, வலியது வெல்லும் என்ற விஞ்ஞான உண்மை நிதர்சனமாகி கெக்கலித்துச் சிரிக்கிறது நம்மைப் பார்த்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *