கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 24, 2013
பார்வையிட்டோர்: 9,268 
 
 

Une Vendetta : ஒரு சூளுரை
மூலம் : கய் தே மாப்பசான்
தமிழில் : மா. புகழேந்தி

போனிபாசியோ நகரத்தின் ஒதுக்குப் புரத்தில் ஓர் ஏழ்மையான வீட்டில் பவலோ சவேரினி-யின் விதவை மனைவி தனது ஒரே மகனுடன் வாழ்ந்து வந்தாள். அந் நகரம் மலைச் சரிவின் வெளிப்புறத்தில் அமைந்திருந்தது, சில இடங்களில் அது கடலுக்கும் மேலே தொங்கிக் கொண்டிருப்பதைப் போல இருந்தது, நீர் இணைப்பின் மேலாக பார்க்கும் போது, மணல் திட்டுக்கள் சார்தினியாவின் தென் கோடி வரை பரவி இருந்தது. அதன் கீழே ஏறக்குறைய அடுத்த பக்கம், கடலை நோக்கி சுற்றிக் கொண்டிருந்த பாறை முகத்தின் பிளவு, ஒரு பெரும் திட்டாக இருந்தது, அது துறைமுகம் போல செயல் பட்டது, செங்குத்துப் பாறைகளின் நடுவே இத்தாலிய மற்றும் சார்தினிய மீன் பிடிப் படகுகள் சுற்று வழியாக வந்து, அத் துறைமுகத்தில் நின்று செல்லும். இரு வாரங்களுக்கு ஒரு முறை அஜாச்சியோ செல்லும் ஒரு பழைய நீராவிக் கப்பலும் வரும்.

அந்த வெள்ளை மலையின் மேலே வீடுகள் நெருக்கிக் கட்டப்பட்டிருந்தன, அவை இன்னும் வெண்மையான திட்டுகளாகத் தெரிந்தன. அவை மலைப் பறவைகளின் கூடுகளைப் போலத் தெரிந்தன. மலையில் ஒட்டிக்கொண்டு, கடல்வளியை நோக்கி, எப்போதாவது வரும் படகுகளைப் பார்த்துக் கொண்டு இருந்தன. காற்று தடை இல்லாமல் வீசிக்கொண்டு கைவிடப்பட்ட கடற்கரையைத் துடைத்து விட்டிருந்தது. குறுகிய நீர் இணைப்பின் வழியே காற்று இரு கரைகளிலும் வீணாக அடித்துக் கொண்டிருந்தது. பொங்கிய வெண் நுரைகள் கரும் பாறைகளின் மேல் விழுந்து வழிந்து கொண்டிருந்தது, கடலின் மேல்பரப்பில் சிறு சிறு பாறை முகடுகள் கடலலையின் வீச்சில் எழுந்து மறைந்து கொண்டிருந்தது, அது பெரிய விரிப்பு மேலும் கீழும் அசைக்கப்படுவது போலத் தெரிந்தது.

திருமதி சவேரினியின் வீடு ஓர் ஓரத்தில் அமைந்திருந்தது, அதன் மூன்று ஜன்னல்கள் வழியே பார்த்தால் வாழ்வதற்கு தகுதியற்ற இந்த நிலத்தின் அமைப்பு முழுதாகத் தெரிய வரும்.

அங்கு அவள் தன் மகன் அந்தோனியோ மற்றும் நாய் செமில்லாந்தி ஆகியோருடன் வசித்து வந்தாள், செமில்லாந்தி பெரிய ஒல்லியான கலப்பின நாய். அதை அந்தோனியோ கூடக் கூட்டிச் செல்வான், வேட்டைக்குப் பயன்படுத்துவான்.

ஓர் இரவு வாய்த் தகராறில் அந்தோனியோ சவரேனியை நிகோலஸ் ரவோலதி என்பவன் நயவஞ்சகமாகக் கொன்று விட்டு இரவோடிரவாக சார்திநியாவிற்கும் ஓடி விட்டான்.

தனது மகனின் உடலை அக்கம்பக்கத்திலுள்ளோர் கொண்டு வந்த போது அந்தத் தாய் அதைப் பார்த்து அழவில்லை, அங்கேயே அசைவற்று நீண்ட நேரம் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். தனது சுருக்கம் விழுந்த கைகளால் அவனைத் தழுவி பழிக்குப் பழி வாங்குவதாகச் சூளுரைத்தாள். யாரையும் தன் அருகே வர அவள் அனுமதிக்க வில்லை. நாயுடன் தனது மகனின் உடலை வீட்டுக்குள் வைத்துப் பூட்டிக் கொண்டாள். நாய் படுக்கையின் கால்மாட்டில் நின்று கொண்டு தொடர்ந்து ஊளையிட்டது, தனது தலையை எஜமானின் பக்கம் நீட்டிக் கொண்டு வாலைக் கால்களுக்கிடையில் வைத்துக் கொண்டு நின்றது. தாயைப் போலவே அதுவும் அசைவற்று நின்றது, அவளோ மகனின் உடலை வெற்றுப் பார்வை பார்த்தபடி அமைதியாக அழுது கொண்டிருந்தாள்.

அந்த இளைஞன் மல்லாந்து கிடந்தான், உடுத்தியிருந்த முரட்டுத் துணி நெஞ்சில் கிழிந்திருந்தது, பார்ப்பதற்கு தூங்குபவன் போல இருந்தான். ஆனால் அவன் உடல் முழுக்க ரத்தம் பரவி இருந்தது, முதல் உதவிக்காகக் கிழிக்கப்பட்ட மேலாடை முழுக்க ரத்தத்தால் நனைந்திருந்தது, உள்ளாடையின் மேல், கால் சட்டையின் மேல், முகத்தின் மேல் கைகளின் மேல் ரத்தம் படிந்திருந்தது. அவனது தலைமுடியிலும் தாடியிலும் கூட ரத்தம் உறைந்திருந்தது.

கிழட்டுத் தாய் மகனிடம் பேசினாள். அந்த சத்தத்தைக் கேட்டு நாய் அமைதியானது.

“அச்சம் கொள்ளாதே மகனே, என் செல்ல மகனே, உனக்காக நான் வஞ்சம் தீர்ப்பேன். தூங்கு நிம்மதியாய்த் தூங்கு, உனக்காக நான் பழிவாங்குவேன், கேட்கிறாயா? இது உனது தாயின் சத்தியம். அவள் தன் வார்த்தையைக் காப்பாற்றுவாள். உன் தாய் தன் வார்த்தையைக் காப்பாற்றுவாள், உனக்குத் தெரியும் அவள் சொன்னால் செய்வாள் என்று.”

மெதுவாக அவன் மேல் சாய்ந்து தனது குளிர்ந்து போன உதடுகளால் அவனை முத்தமிட்டாள்.

பிறகு செமில்லாந்தி நீளமாக, பரிதாபமாக, காதுகளைத் துளைக்கும் வண்ணம் ஊளையிடத்தொடங்கியது.

இருவரும், கிழவியும் நாயும், காலை வரை அப்படியே இருந்தார்கள்.

அந்தோனியோ சவேரினி அடுத்த நாள் காலையில் அடக்கம் செய்யப் பட்டான், பிறகு, மெல்ல மெல்ல அவனது பெயர் போனிபாசியோ நகரத்தின் புழக்கத்தில் இருந்து மறைய ஆரம்பித்தது.

அவனுக்கு உடன்பிறப்புகள் கிடையாது. ஒன்று விட்ட சகோதரர்களும் கிடையாது. அவனுக்காக சொல்லப்பட்ட சூளுரைகளை செயல்படுத்த எந்த ஆணும் கிடையாது. அவனது தாயைத் தவிர அதைப் பற்றிக் கவலை கொள்ள யாரும் இல்லை.

நீர் இணைப்பின் அக்கரையில் கரையின் மேலாக ஒரு சிறு வெள்ளைப் புள்ளி போல ஓர் இடம் தெரிவதை காலையிலிருந்து இரவு வரை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். அது லாங்கோசார்தோ, சின்னஞ்சிறு சார்தினிய கிராமம், அங்குதான் தேடப்படும் கோர்சி குற்றவாளிகள் ஒளிந்து கொள்ளும் இடம். அந்தக் குக்கிராமத்தில் ஏறக்குறைய அவர்கள் மட்டுமே வசித்து வந்தனர். அவர்களது சொந்தத் தீவுக்கு எதிரே, திரும்பும் காலத்துக்காக காத்துக் கொண்டிருப்பர். அவளுக்குத் தெரிந்திருந்தது, நிகோலஸ் ரவோலதி அங்கு தான் அடைக்கலம் ஆகியிருப்பான் என்று.

நாள் முழுக்கத் தனியாக ஜன்னலருகே அமர்ந்து பழி வாங்குவதைப் பற்றி சிந்தித்தவாறே அதைப் பார்த்துக் கொண்டிருப்பாள். அவளால் எப்படிச் செய்ய முடியும் பிறர் உதவி இல்லாமல் ? அவளோ முடியாத நிலையில் உள்ளாள், சாவை நெருங்கிக் கொண்டிருக்கிறாள். ஆனால் அவள் சத்தியம் செய்து விட்டாளே, தனது மகனின் உடல் மீது. அவளால் மறக்க முடியவில்லை, காத்திருக்கவும் மனமில்லை. அவளால் என்ன செய்ய முடியும்? அதற்கு மேல் அவளால் இரவில் தூங்க முடியவில்லை. மனதில் நிம்மதி இல்லாமல் போனாள். இடை விடாது சிந்தித்தாள். அவளது காலடியில் நாய் தூங்கி வழிந்து கொண்டு அவ்வப்போது ஊளை இட்டுக் கொண்டிருந்தது. அதன் எஜமானன் இறந்ததிலிருந்து அடிக்கடி அப்படித்தான் செய்கிறது. அவனைக் கூப்பிடுவது போல, ஐந்தறிவோடிருந்தாலும் அதனாலும் மனதைத் தேற்றிக் கொள்ள முடியவில்லை. அழிக்கவே முடியாத நினைவுகளை அது கொண்டிருந்தது.

ஓர் இரவு செமில்லாந்தி ஊளையிடத் தொடங்கிய போது தாயிற்கு திடீரென ஓர் எண்ணம் தோன்றியது, கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான, மிகப் பயங்கரமான எண்ணம். காலை வரை அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள். விடிந்ததும் சர்ச்சிற்குப் போனாள். விழுந்து வணங்கினால், கடவுளைத் தனக்கு உதவும் படி வேண்டினாள், தனது தள்ளாத உடம்புக்கு தன் மகன் சாவுக்கு பழிக்குப் பழி வாங்க வலிமைதர வேண்டினாள்.

தனது வீட்டுக்குத் திரும்பினாள். வீட்டின் புழக்கடையில் நீர் பிடித்து வைப்பதற்கான பழைய பீப்பாய் ஒன்றிருந்தது. அதைக் கவிழ்த்துக் காலியாக்கினாள் , குச்சிகளையும் கற்களையும் கொண்டு உருட்டி வந்து அதை நாயின் குடிலாக்கினாள். பிறகு வீட்டினுள் நுழைந்தாள்.

ஓய்வில்லாமல் நடந்தாள், தூரத்தில் தெரியும் சார்தினியக் கரையிலேயே அவள் பார்வை நிலைத்திருந்தது. அந்தக் கொலையாளி அங்குதான் இருக்கிறான்.

இரவும் பகலும் நாய் ஊளையிட்டுக் கொண்டே இருந்தது. காலையில் நாய்க்கு கொஞ்சம் தண்ணீரை மட்டும் தட்டில் வைத்தாள், வேறு எதுவும் கிடையாது.

இன்னொரு நாளும் சென்றது. செமில்லாந்தி சோர்ந்து தூங்கிப்போனது. அடுத்த நாள் அதன் கண்கள் ஒளிர ஆரம்பித்தன சிலிர்த்துக் கொண்டது கட்டிய சங்கிலியை வெறி கொண்டு இழுக்கத் தொடங்கியது.

இத்தனை நாளும் அவள் அதற்கு சாப்பிட ஒன்றும் கொடுக்க வில்லை. அந்த விலங்கு கொடூரமாக குறைக்கத் தொடங்கியது. இன்னொரு இரவும் கழிந்தது.

விடிந்ததும் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சிறிது வைக்கோல் கேட்டாள். இறந்துபோன தனது கணவனின் கம்பளிகளைக் கொண்டு வைக்கோலை அடைத்து மனிதனைப் போன்ற உருவம் கொண்ட கொடும்பாவியைச் செய்தாள்.

ஒரு கழியை நட்டு அதில் கொடும்பாவியைக் கட்டி நாயின் குடிலுக்கு முன் நிற்க வைத்தாள். பிறகு மேலும் சில கம்பளிகளைத் தேடிச் சென்றாள்.

நாய் இந்த சோளக்கொல்லை பொம்மையைப் பார்த்து ஆச்சரியப் பட்டது கூடவே உறுபசியும் கொண்டது. பிறகு கிழவி கடைக்குச் சென்று சிறிது கறி வாங்கினாள். வீடு திரும்பியதும் புழக்கடையில் நாயக் குடிலுக்கு அருகே அடுப்பு வைத்து தீமூட்டி கறி சமைக்க ஆரம்பித்தாள். இதனால் தூண்டப்பட்ட பசியுடன் செமில்லாந்தி, வாயில் நீரொழுக குதித்தது, சமைக்கப் படும் உணவை வெறியுடன் பார்த்தது, உணவின் மணம் நேரே அதன் வயிற்றினுள் சென்றது.

பிறகு கிழவி சமைக்கப் பட்ட கறித்துண்டங்களை பொம்மை மனிதனின் கழுத்தில் இறுக்கிக் கட்டினாள், நாயை அவிழ்த்து விட்டாள்.

ஒரே பாய்ச்சலில் அந்த விலங்கு பொம்மை மனிதனின் கழுத்தை நோக்கித் தாவியது, முன் கால்களை பொம்மை மனிதனின் தோள் மீது கால்களை ஊன்றி கழுத்தைக் கடித்துக் குதறியது. வாயில் சிறிது கறியுடன் கீழே விழுந்தது. மீண்டும் பாய்ந்து கழுத்தைக் கவ்வியது, இப்போதும் சிறிது கறித்துண்டு கிடைத்தது, ஒவ்வொரு முறை பாய்ந்து கடிக்கும் போதும் சிறிது கறி கிடைத்தது. நாயானது பொம்மையின் முகத் தைக் கிழித்து விட்டிருந்தது. கழுத்தை முற்றாகச் சிதைத்து விட்டது.

கிழவி அசையாமல் அமைதியாக ஆவலுடன் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு அவ விலங்கை மீண்டும் கட்டிப் போட்டாள். இரண்டு நாட்களுக்கு அதைப் பட்டினி போட்டாள். மீண்டும் இந்தச் சோதனையைச் செய்தாள்.

மூன்று மாதங்களுக்கு இந்தப் போர்ப் பயிற்சியினை நாயிற்கு அளித்தாள், அது போராடி கழுத்திலிருந்து உணவை மீட்கும் வித்தையைக் கற்றுக் கொண்டது. பிறகு நாயினைக் கட்டிப் போடுவதை விட்டு விட்டாள், பொம்மையை நோக்கிக் கை நீட்டினாலே நாய் கழுத்தை நோக்கிப் பாய ஆரம்பித்தது.

கழுத்தில் ஒரு துளி கூட மிச்சம் வைக்காமல் பேராசையுடன் தின்னுமாறு அவள் அதற்குப் பயிற்சி அளித்தாள்.

பயிற்சி முடிந்ததும் நாயிற்கு பரிசாக உணவும் கொடுத்தாள்.

பொம்மை மனிதனைப் பார்க்கும் போதெல்லாம் நாய்க்குப் பரபரப்பு தொற்றிக் கொள்ளும், தனது எஜமானியைப் பார்க்கும், அவள் கைகளை உயர்த்தி “போ”, என்று உரத்த குரலில் கத்துவாள்.

காலம் கனிந்ததாக அவள் நினைத்த போது, சர்ச்சிற்குச் சென்று பாவ மன்னிப்புக் கேட்டாள், ஞாயிறு காலையில் உற்சாகமாக தொழுகை நடத்தினாள். ஆண்களைப் போல் உடுத்திக் கொண்டாள், ஒரு சார்தினிய மீனவனுடன் பேரம் பேசி உடன்படிக்கை செய்து கொண்டாள், அவன் அவளையும் நாயையும் நீர் இணைப்பின் அக்கரையில் கொண்டு விட்டான்.

ஒரு பை நிறைய கறித் துண்டங்களைக் கொண்டு வந்தாள். செமில்லாந்தி இரண்டு நாட்களாக பட்டினி போடப்பட்டு இருந்தது. நாய் மோப்பம் பிடிக்கட்டும் என்றே அவள் அதைச் செய்தாள், அதன் பசியை அது தூண்டிக் கொண்டே இருந்தது.

அவர்கள் லோங்கோசார்தோ வந்து சேர்ந்தார்கள். அந்தக் கோர்சிப் பெண் விந்திவிந்தி நடந்தாள். ஒரு கடைக்குச் சென்று நிகோலஸ் ரவலோதியைக் கேட்டாள். அவன் தனது பழைய வேலையை அதாவது தச்சு வேலையைக் கடையின் பின்னால் உள்ள வீட்டில் செய்து கொண்டிருந்தான்.

கிழவி வீட்டின் முன் நின்று கதவைத் திறந்தாள், பிறகு அவனைக் கூப்பிட்டாள்:

“ஹலோ, நிகோலஸ்!”

அவன் திரும்பினான். அவள் நாயை விடுவித்துக் கத்தினாள், “போ, போ, சாப்பிடு, அவனைச் சாப்பிடு!”

வெறியூட்டப்பட்ட நாய் அவனது கழுத்தை நோக்கிப் பாய்ந்தது. அவன் கைகளால் நாயைப் பற்றி விடுபட முயன்றான், தரையில் உருண்டான். சில நொடிகள் அதிர்ச்சியில் கிடந்தான், தரையைக் கால்களால் உதைத்தான், பிறகு அசைவற்றுப் போனான். செமில்லாந்தி தனது கோரைப் பற்களால் கழுத்தைக் குதறி நாராகக் கிழித்திருந்தது.

தங்கள் வீட்டின் முன் அமர்ந்திருந்த இரண்டு பக்கத்து வீட்டினர், தாங்கள் கண்டதை நன்றாக நினைவில் நிறுத்தி இருந்தனர், ஒரு கிழட்டுப் பிச்சைக்காரன் மெலிந்த கருப்பு நாயுடன் வந்ததாகவும், அந்த நாய் தனது எஜமானன் வழங்கிய உணவினை உண்டதாகவும்.

இரவில் கிழவி வீடு திரும்பி இருந்தாள். அன்றிரவு அவள் நன்றாக உறங்கினாள்.

– ஜனவரி 22, 2011

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *